Advertisement

“என்ன ஆச்சு ப்ரேம்..?” என்று  சண்முகமும் அடுத்த சில நிமிடங்களில் ஓடி வந்திருந்தார். 
“கடையை திறப்பீங்களாம்ப்பா..” என்று மகன் சொல்லவும், 
“இல்லை ப்ரேம்.. அது சரிவராது..” என்று சண்முகம் மறுக்க, மது மறுபடியும் காரில் இருந்து கீழிறங்கிவிட்டவள், 
“ஏன் மாமா சரிவராது..? இது உங்க கடைதானே.. திறங்க..” என்றாள். 
“இல்லை மது வேண்டாம்..” என்று சண்முகம் மறுப்படியும் மறுக்க, மது திரும்பி கணவனை தீர்க்கமாக பார்த்தவள், வீட்டுக்கு செல்லும் வழியை பார்த்தாள். 
“இவளை.. என்னையே மிரட்டுறா..?” என்று மனைவியை பொசுக்கும் பார்வை பார்த்தவன், 
“திறங்கப்பா.. பார்த்துக்கலாம்..” என்றுவிட்டான் வேறு வழி இல்லாமல். 
“சரிப்பா..” என்று மகனை சொல்லை ஏற்று கொண்ட சண்முகம், 
“நீ கார்ல உட்காருமா.. ரொம்ப நேரம் நிக்காத.. உடம்பை பார்த்துக்கோம்மா..” என்று மருமகளிடம் சொன்னவர், சம்மந்தி குடும்பத்தை பார்த்து பொதுவாக தலையை ஆட்டிவிட்டு கடையை திறக்க சென்றார். 
அவர் கடை திறக்கும் வரை அங்கேயே இருந்த மது, அதற்கு பிறகே ஹாஸ்பிடல்  கிளம்பினாள். 
“என்ன மது இவ்வளவு பிடிவாதம் பிடிச்சுட்ட..?” என்று  வசந்தா அங்கலாய்ப்புடன் மகளிடம் கேட்டார். 
“ம்மா.. மது செஞ்சது சரிதான், நீங்க அமைதியா வாங்க..” என்று ரவி அம்மாவிடம் சொல்ல, 
“என்ன சரி..? எல்லாம் சேர்ந்து மாப்பிள்ளை கோவத்தை இன்னும் தூண்டி விடுறீங்க பார்த்துக்கோங்க..” என்று வசந்தா மனத்தாங்கலாக முடித்துகொண்டார்.
“வா மது.. இப்போ எப்படி இருக்க..?” என்று உள்ளே நுழைந்த மதுவிடம் கேட்ட சுபாவின் பார்வை பின்னே வந்த ப்ரேம் மேலும்,வடிவேலுவின் மேலும் கடுப்புடன் பதிந்தது. 
“என்ன..?” என்று சுபா அவர்களை பார்த்து அதட்டலாக கேட்க, 
“என்னன்னு எங்களை கேட்டா நீ தான் என் மகளை பார்த்து சொல்லணும்..?” என்று வடிவேலு மனைவியின் அக்காவிடம் எகிற, ப்ரேம் நிதானமாக மனைவியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். 
“அடங்கவே மாட்டிங்களா..?” என்ற பெண்களின் பார்வையை இரு ஆண்களும் கண்டு கொண்டால் தானே..?
“சரி நீ உள்ள வா..” என்று சுபா மதுவை தடுப்புக்கு அந்த பக்கம் அழைத்து சென்று  சில கேள்விகள் கேட்டு  பரிசோதனைகளை செய்து வந்தவர்,  
“மது.. உனக்கு இப்போ தான் பத்து நாள் தள்ளி போயிருக்கு, இன்னும் ஒரு பத்திருபது நாள் போகட்டும், அப்புறம் பேபி பீட், டெஸ்ட் ரிசல்ட் எல்லாம்  பார்த்துட்டு தேவைப்பட்டா  ஸ்கேன் செஞ்சுக்கலாம், இப்போ வேண்டாம்.. அதுவரைக்கும் நீ கொஞ்சம் கவனமா இரு..”
“முடிஞ்சவரை பெட் ரெஸ்ட்ல இரு, வெய்ட் தொடவே செய்யாத, ஸ்டெப்ஸ் எல்லாம் ஏறி இறங்காத..” என்று சிலபல வழிமுறைகள சொன்னவர், 
“செக் பண்ண வரை ஒன்னும் பெரிய பிரச்சனை இருக்காதுன்னு நம்புறோம், பார்த்துக்கலாம்..” என்று இவர்களிடமும் பாசிட்டிவ்வாகவே சொல்ல, நிம்மதியான மனதுடன்  அவரிடம் சொல்லி கொண்டு வெளியே வந்தனர்.
 
“அத்தை.. இந்தாங்க..” என்று ஹாஸ்பிடல்  கார் பார்க்கிங்கில் வைத்து ப்ரேம் ஒரு பர்ஸை வசந்தாவிடம் கொடுக்க, மற்றவர்களின் பார்வை அவர்களின் மேல் நிலைத்தது. 
“என்ன..? என்ன இது மாப்பிள்ளை..?” என்று ப்ரேம் கொடுத்த பர்ஸை வாங்காமல் வசந்தா  தடுமாற்றத்துடன் கேட்க, 
“அத்தை.. ப்ளீஸ் இதை பிடிங்க முதல்ல..” என்று வற்புறுத்தி அவரின் கையில் கொடுத்தவன், அதற்கு மேல் ஒரு கார்டையும் வைத்தான். 
“மாப்பிள்ளை.. என்ன பண்றீங்க..? இது எதோ பணம் மாதிரி இருக்கு..” என்று வசந்தா பதட்டத்துடன் தன் குடும்பத்தை பார்த்து விட்டு ப்ரேமிடம் கேட்டார். 
“ஆமாத்தை.. பணம்தான், மித்ரா உங்க வீட்ல இருக்கிற வரை அவளுக்கும், எங்க பேபிக்கும் ஆகுற செலவு முழுசும் இதில் இருந்து தான் நீங்க செய்யணும்..” என்று உறுதியுடன் சொல்ல, மது கணவனை கூர்மையாக பார்க்க, வடிவேலு கோபத்துடன் பார்த்தார். 
“என்ன மதுமா இதெல்லாம்..? என் பொண்ணுக்கும், என் பேரபசங்களுக்கும் செய்ய இவர் காசு கொடுப்பாரா..? சரியில்லை.. சொல்லிட்டேன்..” என்று மகளிடம் கொதித்தவர், 
“ஏய்.. அந்த பணத்தை திருப்பி கொடு..” என்று மனைவியிடம் பயந்தார். 
“அத்தை.. இது என் பொண்டாட்டிக்கும், என் பேபிக்கும் கொடுக்கிற பணம், இதை பத்தி கேள்வி கேட்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை..” என்று ப்ரேம் அழுத்தத்துடன் சொன்னான். 
“அதெப்படி இல்லாமல் போகும்..? முதல் பேரபிள்ளைக்கு நாமதான் செய்யணும், இது என்னோட உரிமை மட்டுமில்லை, முறையும் கூட, என்னோட முறையை நான் விட்டு கொடுக்க மாட்டேன்..” என்று வடிவேலு பிடிவாதத்துடன் எகிற, வசந்தாவும், ரவியும் மறுபடியுமா..?  என்று நொந்து போனார்கள். 
“போதும்.. நீங்க முறை செஞ்சது எல்லாம் போதும், அப்பறம் ஒருநாள் நான்தான் எல்லாம் செஞ்சேன், எங்க உழைப்புல தான் நீங்கன்னு அதையும் சொல்லி காட்டுவீங்க, நான் வாங்கின அந்த பேச்சு என் பேபியும் வாங்க வேண்டாம்..”
“யாரோட முறையும் எங்களுக்கு வேண்டாம், பணமும் எங்களுக்கு வேண்டாம்.. என் குடும்பத்தை பார்த்துக்க எனக்கு தெரியும், என் உழைப்பிலே என் பேபி  வளரட்டும்..” என்று ப்ரேம் கொதிக்க, வடிவேலுவின் முகம் சற்று சுருங்கிதான் போனது. 
“எதுக்கு எதை இணை கூட்டி பேசறாங்க..? என் பொண்ணை, என் பேரபிள்ளையை பார்த்துக்க அவர் என்ன எனக்கு பணம் தர்றது..?அதை அவர்கிட்டே கொடுத்துடு வசந்தா..” என்று வடிவேலு மனைவியிடம் சொல்ல, 
“அத்தை.. நீங்க இதுலதான் அவங்க செலவை செய்யணும்..” என்று ப்ரேமும் உறுதியாக நிற்க, 
“வேண்டாம்.. எங்களுக்கு யாரோட பணமும் வேண்டாம்..” என்றாள் மதுமித்ரா கணீரென்று.. 
“மதுமா..” என்று வடிவேலு திகைத்து மகளை சமாதானம் செய்ய வர, ப்ரேம் மனைவியை இறுகி போய் பார்த்தான். 
“ம்மா.. யாரோட பணமும் எனக்கு வேண்டாம், என் பேபியை பார்த்துக்க எனக்கு தெரியும்.. இவங்களை என்னை விட்டு தள்ளி நிக்க சொல்லுங்க.. போதும்.. எல்லாம் போதும், என்னால இதுக்கு மேலயும் முடியாது..” என்ற மதுமித்ரா வசந்தாவின் கையில் இருந்த பணத்தை வாங்கி சென்று ப்ரேமின் காரில் வைக்க, அவளின் கையை பிடித்த ப்ரேம்,   
 
“பணத்தை வைக்காத மித்ரா, என் குழந்தைக்கும், உனக்கும் நான்தான் எல்லாம் செய்வேன்..” என்று அழுத்தத்துடன் சொன்னவன், காரின்  கதவை மூட, அவனை பக்கத்தில்  பார்த்த மதுவிற்கு  கோவத்தோடு அழுகையும் வந்தது. 
நேற்று போட்டிருந்த அதே கசங்கிய உடையில், கண் சிவந்து சோர்ந்து போயிருந்த கணவனை பார்க்க பார்க்க மதுவின் மனம் துடித்தது. நேற்றிலிருந்து சாப்பிட்டது போலவும் தெரியவில்லை, இரவு தூங்கவும் காணோம், வீட்டுக்கும் போகவில்லை போல, அப்போ  ஒரு நாள் புல்லா எங்க இருந்திருப்பார்..?  என்று கணவனை பார்த்து துடித்த மனதை கட்டுப்படுத்தி கொண்டு நின்றவளுக்கு மனம் சொல்ல முடியா கனத்தில் வெடித்தது. 
“எங்களை வேண்டாம்ன்னு விட்டுட்டு போற யாரோட பணமும் எங்களுக்கு வேண்டாம், என் பேபியையும் என்னால பார்த்துக்க முடியும்.. போங்க.. உங்களுக்குதான் நாங்க வேண்டாம் இல்லை.. போங்க..” என்று  ரோஷத்துடன் சொல்ல, அவளை கூர்மையாக பார்த்த ப்ரேம், 
“இன்னும் என்னை என்ன செய்ய காத்திருக்க மித்ரா நீ..?” என்று ஒருவித வெறுமையுடன் கேட்க, மது பதில் சொல்ல முடியாமல் நின்றுவிட்டாள். 
“சொல்லு மித்ரா.. இன்னும் என்னை என்ன தான் செய்ய காத்திருக்க நீ..?  நான் என்ன செஞ்சேன்..? இதுவரைக்கும் நடந்ததுல என்னோட தப்பு எங்க இருக்கு..? எனக்கு தெரியாம பணம் கொடுத்தது நீ..? அதை என்கிட்ட மறைச்சது நீ..? இதுல நான் எங்கிருந்து வரேன்..?”
“ஒரு மனுஷன் அவனோட சுயமரியாதையோட, தன்மானத்தோடு வாழ நினைக்கிறது அவ்வளவு பெரிய தப்பா..? சொல்லு.. அவர் என்னை பார்த்து என் பொண்ணு உழைப்புல தான் நீங்கன்னு சொன்னா நான் கேட்டுட்டு பேசாம இருக்கனும் சொல்றியா..?”
“ முடியாது.. என்னால அப்படி இருக்க முடியாது, நான் என்ன செய்யட்டும்..? இதுதான் நான்..? என்னால இப்படித்தான் இருக்க முடியும்..? இத்தனை வருஷம் அப்படித்தான் வாழ்ந்திருக்கேன்.. என்னை பெத்த அப்பா அம்மாகிட்ட கூட நான்  என் நிலையை விட்டு இறங்கி இறங்கி போனதில்லை..”, 
“உனக்காக.. உங்க அப்பாக்காகன்னு பார்த்து என்னை நானே தொலைக்க சொல்றியா..? என்னோட அடையாளத்தை இழக்க சொல்றியா..? இதைதான் நீ என்கிட்ட எதிர்பார்க்கிறியா..?” 
“நீ என்னை புரிஞ்சப்பன்னு நான் நினைச்சேன், இல்லை யாருமே என்னை புரிஞ்சிக்க போறதில்லை. நான் கடைசி வரை தனிதான் போல.. போ.. இப்படியே இருந்துகிறேன்.. போ.. எனக்காக யாரும் வேண்டாம்.. போ..” என்று காரை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டவனின் கண்ணில் ஓர் துளி கண்ணீர் கண்ணோரம் உருண்டோடியது. 

Advertisement