Advertisement

அவளே என் பிரபாவம் 21
“என்ன மது இப்படி செஞ்சுட்ட..?”  என்று ரவியின் காரில்  மதுவுடன்  வந்த வசந்தா  மகளிடம் மெலிதான கோபத்துடன் கேட்டார். 
“ஏன்ம்மா..? அவ என்ன செஞ்சா..?” என்று காரை ஓட்டி கொண்டிருந்த ரவி முன் கண்ணடி வழியே அம்மாவை பார்த்து கேட்டான். 
“என்ன ரவி இப்படி கேட்கிற..? மாப்பிள்ளை இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக கார் எடுத்துட்டு வந்தா, இவ அவரை மதிக்காம இப்படி உன் கார்ல வர்றது தப்பில்லையா..?”  என்று அதிருப்தியுடன்  சொன்னார், 
“ம்மா.. நீங்கதான் பார்த்தீங்க இல்லை, ரெண்டு பேரும் ஆளுக்கொரு காரை எடுத்துட்டு வந்தா அவ என்ன செய்வா..? விடுங்க..” என்று ரவி தங்கைக்கு ஆதரவாக பேசினான். 
“எல்லாம் இந்த மனுஷனாலதான், இதுவரைக்கும் செஞ்ச பிரச்சனை பத்தாதுன்னு புதுசு புதுசா ஆராம்பிக்குறாரு..?” என்று கணவனை கடிந்தவர், 
“இங்க பாரு மது.. நீ அப்பாக்காக எல்லாம் பார்த்துட்டு மாப்பிள்ளைகிட்ட ஏன் இப்படி நடந்துகிற..? பாவம் அவர், முகமே சுருங்கி போச்சு..” என்று வருத்தத்துடன் சொல்ல, மது வேதனையுடன்  கண் மூடி திறந்தாள். 
நேற்று போட்டிருந்த அதே உடையில், கண் சிவந்து, ஓய்ந்து போன தோற்றத்துடன்  தனக்காக கார் கதவை திறந்த கணவனை பார்த்த  மதுவின் இதய துடிப்பு  ஓர் நொடி நின்று தான் துடித்தது. 
“ஏன் இப்படி..?” என்று கணவனை நினைத்து  மனம் துடித்தவளுக்கு, அவனின் அருகில் செல்லவும் முடியாமல் கோவம் தடுத்தது.  
“என்னை வேண்டாம்ன்னு இங்கேயே விட்டுட்டு போனார் இல்லை, போகட்டும்..” என்ற கோவத்தோடு, இந்த வேதனையும் சேர்ந்து கொள்ள மருகியபடியே எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தாள். 
“மது..? உன்னைதானே கேட்கிறேன்..? பதில் சொல்லு..? ஏன் இப்படி பண்ண..?” என்று கண்ணாடி வழியே வெளியே வெறித்து கொண்டிருந்த மகளை வசந்தா அதட்ட, 
“ம்மா..”  என்று மகன் அம்மாவை அதட்டினான். 
“என்னடா..?” என்று வசந்தா மகனின் அதட்டலில் அவனை கோபத்துடன் பார்த்தார். 
“இப்போ எதுவும் பேசாதம்மா, அவளை கொஞ்சம் ப்ரீயா விடு..” என்று தங்கையின் வெறித்த பார்வையை கண் காட்டி சொல்ல, வசந்தாவும் மகளின் முகத்தில்  தெரிந்த வித்தியாசத்தில் அமைதியாகிவிட்டார். 
அவருக்கு எங்கு ப்ரேம் இன்னும் முறுக்கி கொள்வானோ என்ற பயம், ஏற்கனவே வடிவேலு வேறு மாப்பிள்ளை என்று பாராமல் அதிகமாக பேசி, அவரின்  சட்டையை பிடித்துவிட்டார். 
இதில் மதுவும் அவரிடம் கோவத்தை காட்டி, இன்னும் பிரச்சனை அதிகமானால் என்ன செய்ய..? என்று ஒரு அம்மாவாக மகளின் வாழ்க்கையை நினைத்து கவலை கொண்டார். 
ரவிக்குமே தங்கையின் வாழ்க்கையை நினைத்து கவலைதான், ஆனால் பயம் இல்லை, இருவரின் காதலின் மீதும் அவனுக்கு பரிபூரண நம்பிக்கை இருந்தது. அதே சமயம் தங்கையின் மனநிலையையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. 
ஒரு அப்பாவாக வடிவேலு பேசியதில் ரவிக்கு உடன்பாடு உண்டு என்றாலும், அவ்வீட்டின் மாப்பிள்ளையை, தங்கையின் கணவனை வடிவேலு பேசியதும், சட்டையை பிடித்ததும் அதிகப்படி தான் என்பதில் ரவிக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. 
நானும் ஒரு வீட்டின் மாப்பிள்ளைதான், என்னை அவங்க இதுபோல ட்ரீட் செஞ்சிருந்தா நானும் ப்ரேமை போலத்தான் ரியாக்ட் செஞ்சிருப்பேன், அவருடைய கோவம் சரிதான், ஆனால்  அதுக்காக ப்ரேம் மதுவை விட்டுட்டு போனதும் தப்புதான், 
அப்பா பேசினதுல அவரோட  சுயமரியாதை காயப்பட்டிருக்குன்னாலும், மதுவை  இங்கேயே விட்டுட்டு போனதில்  ஒரு அண்ணனாக ரவிக்கு உடன்பாடு இல்லை  என்றுதான் சொல்ல வேண்டும். 
“அவங்களுக்கு அவங்கவங்க நியாயம்.. என்ன செய்ய..?” என்று மனதுள் யோசித்தபடி பயணித்த ரவியின் மொபைல் ஒலிக்க எடுத்து பார்த்தால் ப்ரேம், 
“சொல்லுங்க ப்ரேம்..” என்று எடுத்து பேசியவன், 
“ஓகே..  ஓகே ப்ரேம், பார்த்துகிறேன்..” என்று வைத்த நொடி, அடுத்த கால் வடிவேலுவிடம் இருந்து வந்தது. 
“சொல்லுங்கப்பா..” என்றவனிடம், அவரும் எதோ சொல்ல, 
“சரிப்பா.. நான் பார்த்துகிறேன், அதான் சொல்றேன் இல்லைப்பா, நான்  பார்த்துப்பேன்.. நீங்க வைங்க..” என்று முன் கண்ணாடி வழியே தங்களின் காரை தொடரும் ப்ரேமின் காரையும், வடிவேலுவின் காரையும் பார்த்தபடியே பேசிவைத்தான். 
“என்ன ரவி..? எதுக்கு ரெண்டு பேரும் போன் பண்ணாங்க..” என்று வசந்தாவும் பின் திரும்பி இரண்டு காரையும் பார்த்து கேட்டார். 
“ம்ம்.. அவங்க ரெண்டு பேரோட உயிரை நான் பத்திரமா  பார்த்து பதமா   கூட்டிட்டு போகணுமாம், ஸ்பீட் பிரேக்ல பார்த்து வண்டி ஓட்டணுமாம், ஏற்கனவே நான் மாட்டு வண்டி  மாதிரி தான் வண்டியை உருட்டிட்டு இருக்கேன், இதுல இன்னும் மெதுவா  போன்னு என்னை உயிரை வாங்குறாங்க..” என்று கடுப்பாக பொரிந்தான். 
பின்னே அவனின் வண்டியின் வேகம் சிறிது அதிகரித்தாலே பின் இருந்து ஹார்ன் அடிக்கும் இருவரின் லூட்டியில்  வசந்தா சிரித்தபடி மகளை பார்க்க, அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்று  வெறித்து கொண்டிருந்தவள், திடீரென “ண்ணா.. வண்டியை நிறுத்து..”  என்றாள் அவசரமாக. 
“என்ன ஆச்சு மது..? என்ன செய்யுது..?” என்று ரவி உடனே காரை நிறுத்தி, மதுவிடம் பதட்டத்துடன் கேட்டனர். சுபா சொல்லியிருந்த விஷயம் அவர்களை பயப்படுத்தியிருந்ததால் இந்த பதட்டம். 
“ண்ணா.. மாமா ஏன் இன்னும் கடையை திறக்கல..” என்று  ஹாஸ்பிடல் செல்லும் வழியில் இருந்த ப்ரேமின் கடை இன்னும்  திறக்காமல் இருந்ததையும், கடை முன்னால் கூடியிருந்த கூட்டத்தையும் பார்த்து மது கேட்க, 
“ஊப்ப்ப்.. இது தானா..?” என்றவாறே  ரவியும், வசந்தாவும் திரும்பி அவர்களின் கடையை பார்த்தவர்கள், 
“தெரியல மது..” என்று  சொல்லி கொண்டிருக்கும் போதே, ப்ரேமும், வடிவேலுவும் தங்களின் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இவர்களின் காரிடம் வந்திருந்தனர். 
“என்ன ஆச்சு..? ஏன் வண்டியை நிறுத்திட்டிங்க..?” என்று மதுவை ஆராய்ந்தபடி கேட்ட இருவரையும்  பார்க்காத மது, 
“ண்ணா..  ஏன் கடையை இன்னும் திறக்கலன்னு கேளுங்க..?” எனவும் தான் ப்ரேமும், வடிவேலுவும் அவர்களின் கடை பக்கம் தங்களின் பார்வையை திருப்பினர். 
“ச்சு..” என்று ஆசுவாசப்பட்ட ப்ரேம், “இது இப்போ ரொம்ப முக்கியம் பாரு..” என்று மனைவியிடம் சிடுசிடுத்தான். பின்னே மனைவியின் உடல் நிலையை நினைத்து பயந்து போய் ஓடி வந்திருந்தான். 
“எனக்கு முக்கியம்தான்..”  என்று மது கண்ணை சுருக்கி கோபத்துடன்  சொல்லவும், 
“உன்னை.. முதல்ல ஹாஸ்பிடல் கிளம்பு, ரவி நீங்க வண்டியை எடுங்க..” என்று   ரவியிடம் சொல்லி கொண்டிருந்த ப்ரேமிடம், 
“சார்.. என்ன ஆச்சு…? ஏன் இன்னும் அய்யா கடையை திறக்க வரல..” என்று இவனை பார்த்ததும்  அவர்கள்  கடையின் செக்குரிட்டியும், ஸ்டாப்களும்  இவனிடம் வந்து நின்றனர்.  
“இல்லைங்க.. கடை திறக்கறதி..” என்று ப்ரேம்  சொல்லி கொண்டிருக்கும் போதே, 
“இப்போ  திறந்துடுவாங்க.. நீங்க வெய்ட் பண்ணுங்க.. மாமா வந்துடுவார்..” என்று காரில்  இருந்து இறங்கி வந்த மது வேகமாக பதில் சொல்லி அவர்களை அனுப்பி வைக்க, மனைவியை முறைத்தான். 
“என்னடி செஞ்சிட்டிருக்க நீ..? கடையை நாங்க திறக்க போறதில்லை, எதுக்கு அவங்களை வெய்ட் பண்ண சொன்ன..?” என்று மனைவியிடம் காய்ந்தான். 
“ண்ணா.. மாமாக்கு போன் செஞ்சு கடையை திறக்க சொல்லி சொல்ல சொல்லுங்க..” என்று ரவியிடமே மது சொல்ல, 
ப்ரேம் “முடியாது..” என்றான் உறுதியாக. 
“உனக்கு தேவைன்னா நீ திறந்துக்கோ, நாங்கதான் உங்ககிட்ட கடையோட பொறுப்பை கொடுத்திட்டோம்  இல்லை.. பணம் கொடுக்கிற  வரைக்கும்  எங்களுக்கும் இந்த கடைக்கும்  எந்த  சம்மந்தமும் இல்லை..”  என்று ப்ரேம் அழுத்தத்துடன் முடித்துவிட்டான். 
“ண்ணா.. அவங்க இப்போ கடையை திறக்கலைன்னா நான் ஹாஸ்பிடல் வரவே மாட்டேன், இப்படியே ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போயிடுவேன்னு அவங்ககிட்ட சொல்லு..” என்று மதுவும் விட்டு கொடுக்காமல் உறுதியாக பேச, ப்ரேம் கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன் மனைவியை நெருங்கி நின்றவன், 
“என்னடி மிரட்டிறியா..?” என்று  சீற, அவளோ அவனின் பக்கமே தன் பார்வையை திருப்பாமல் தான் நின்றாள்.  
“ஏய்.. முதல்ல  என்னை பாருடி..”  என்று  அவளின் கன்னத்தை பிடிக்க கை கொண்டு சென்றவன்,  நடு ரோடு என்பதால் பேண்ட் பாக்கெட்டிற்குள் தன் கையை நுழைத்து கொண்டான். 
“மது.. நீ முதல்ல கார்ல உட்காரு.. என்னன்னு பார்க்கலாம்..” என்று வடிவேலு மகளிடம் சமாதானமாக சொல்ல, மதுவோ இன்னும் வலுவாக காலை தரையில் ஊன்றி நின்றாள். 
“ரவி.. நீங்க காரை எடுங்க, மித்ரா நீ முதல்ல கார்ல ஏறு..” என்று ப்ரேம் மனைவியின் கையை பிடிக்கவர,  எட்டி நின்றவள்,  வேகமாக நடக்க ஆரம்பித்துவிட, மொத்த குடும்பமும் பதறி போனது. 
“ஏய்.. என்னடி செய்ற..?” என்று ப்ரேம் ஓடி சென்று மனைவியின் கையை பிடித்து நிறுத்த, அவளோ,
“கடையை திறக்க சொல்லுங்க..” என்றாள் மிக தீவிரமாக.
“மித்ரா.. என்னை படுத்தாத, ஒழுங்கு மரியாதையா கார்ல ஏறு, நடு ரோட்ல வச்சு என்ன செஞ்சிட்டிருக்க நீ..?” என்று மனைவியின் புதிதான பிடிவாதத்தில் ஆற்றாமையுடன் கேட்டான். 
“என்னை இப்படி மாத்தினதும் நீங்க எல்லோரும்தான், முதல்ல மாமாவை கூப்பிட்டு கடையை திறக்க சொல்லுங்க, இல்லை நான் கண்டிப்பாவே ஹாஸ்பிடல் வரமாட்டேன்..” என்று மது  கையை கட்டி கொண்டு அசைய மாட்டேன்.. என்று உறுதியாக நின்றுவிட்டாள்.
“ஏன் என்னை இப்படி சாகடிக்குற..?”  என்று மனைவியின் அடத்தில் இயலாமையுடன் தலையை கோதி கொண்ட ப்ரேம், தந்தைக்கு அழைத்து சொன்னவன், 
“சொல்லிட்டேன், கிளம்பு ஹாஸ்பிடல் போலாம்..” என்றான். 
“இல்லை.. மாமா வந்து கடை திறக்கட்டும்..” என்ற மது அப்படியே நிற்க, ப்ரேமுக்கு கொதித்து கொண்டு வந்தது. அவளின் உடல் நிலையை நினைத்து தன்னை கட்டுபடுத்தியவன்,
“சரி.. வா.. அவர் வர்றவரை வந்து  கார்லயாவது  உட்காரு  வா..” என்று நகராமல் நின்ற மனைவியின் கையை பிடித்து இழுத்து சென்று ரவியின் காரிலே உட்காரவைத்தான். 

Advertisement