Advertisement

“மதுமா.. மதுமா.. என்னடா..” என்று மகளை நெருங்க, அவரை தள்ளி விட்டவள், 
“நான் உண்மையாதான் சொல்றேன், என்னை விட்டு தள்ளி போங்க..” என்று வெடித்தவள், உள்ளே சென்றுவிட, வடிவேலு அசையாமல் நின்றுவிட்டார்.
“ப்பா.. எனக்கு உங்க எல்லோரோட  பேசணும்..” என்று வீட்டுக்கு வந்த ப்ரேம் மிக நிதானமாக சொல்ல, சண்முகத்திற்கும், வைஜெயந்திக்கும், திவ்யாவிற்கும் பயமே சூழ்ந்தது. அவன் கோவப்பட்டு கத்துவான், சண்டையிடுவான்.. என்றே பயந்திருந்தவர்களுக்கு அவனின் நிதானம் பயத்தை கொடுக்காமல் இல்லை. 
“ப்ரேம்..” என்ற சண்முகத்தை கை காட்டி நிறுத்தியவனின் பார்வை அவர்களின் ஹாலில் மாட்டப்பட்டிருந்த குடும்ப புகைபடத்தின் மேல்  மட்டுமே நிலைத்திருந்தது. யாரையும் பார்க்கும் எண்ணமும் அவனுக்கு இல்லை. 
“ப்பா.. ப்ளீஸ் எதுவும் பேசாதீங்க, நான்.. எனக்கு இன்னிக்கு உங்களோட பேசியே ஆகணும்..” என்ற ப்ரேமின் குரலில் தெரிந்த இறுக்கத்தில் சண்முகம் அமைதியாகிவிட்டார். 
“நான் எய்த் படிக்கும் போது யாரோ சொல்ராங்கன்னு, என்னை வலுக்கட்டாயமா  அந்த பேமஸ் போர்டிங் ஸ்கூல்ல  கொண்டு போய் சேர்த்தீங்க.. என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல..” என்று சொல்ல சண்முகம் மனைவியை வெறித்தார். 
அவருடைய அக்கா பிள்ளைகள் அங்கு  படிக்க, தன் மகனும் படிக்க வேண்டும் என்ற போட்டியில் செய்ததை மகன் சொல்ல, அவரால் தலையை நிமிர்த்த முடியவில்லை.
“எனக்கு அவ்வளவு பெரிய ஸ்கூல் எல்லாம் வேண்டாம், நான் உங்களோடே இருக்கேன், என்னால இங்க இருக்க முடியலன்னு அந்த வருஷம் முழுசும் உங்ககிட்ட கெஞ்சியிருக்கேன், ஏன் ஒவ்வொரு லீவ்க்கு வரும் போதும் மறுபடியும் போக மாட்டேன்னு அழுது கூட இருக்கேன்..”
“ஆனா நீங்க ஏத்துக்கவே இல்லை, கடைசிவரை அதே ஸ்கூல் போர்டிங்தான், அதுக்கு அப்புறமும் காலேஜ், வொர்க்ன்னு நான் தனியாவே போயிட்டேன், அந்த முதல் வருஷம் நான் அழுததோடு சரி, அதுக்கு அப்பறம் எனக்கு அழகூட பிடிக்கல..”
“ஏதோ நான் மட்டும் தனிங்கிற மாதிரி ஒரு எண்ணம்,  உங்களோட இருக்கனுங்கிற என்னோட பாசத்தை, ஏக்கத்தை புரிஞ்சுக்காத உங்க மேல ஒரு கோவம், வெறுமை, தனிமை..”
“பசிக்குதுன்னு அம்மாகிட்ட போனதில்லை,  என்ன படிக்கட்டும்ப்பா..? இது சரியா..? இந்த வேலை ஓகேவான்னு அப்பாகிட்ட கேட்டதில்லை, தங்கச்சி கிட்ட செல்ல சண்டை போட்டதில்லை..”
“எனக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி, நீங்களும் என்னை நெருங்க நினைக்கல, எனக்கும் முடியல, நாம எல்லாம் நாம குடும்பமா உட்கார்ந்து பேசி சிரிச்சதா கூட எனக்கு ஞாபகமே இல்லை..”
“முதல்ல நான் உங்க அன்புக்கு ஏங்கினேன், உங்களோட இருக்கனும்ன்னு நினைச்சேன், முடியல, அப்பறம் நீங்க என்னை நெருங்க நினைச்சீங்க, எனக்கு ஏத்துக்க முடியல, இப்படியே  நமக்குள்ள  ஒரு ஒதுக்கம். நானும் அதுக்கு பழகிட்டேன்..”
“என்னோட தனிமையை விரட்ட எனக்கு பிடிச்ச படிப்பை இல்லை.. எனக்கு பிடிச்சதா நினைச்சுகிட்டு படிச்சேன், அதுல ஒரு ஆர்வம் வந்தது. நல்ல வேலையையும் கிடைச்சது, எனக்கு அந்த வேலை ரொம்ப பிடிச்சு போக என்னை முழுசா அதிலே தொலைச்சிகிட்டேன்..”
“இப்படி என் வாழ்க்கையை  கொஞ்சம் கூட அனுபவிக்காம,  எனக்கு பிடிச்சதா மாத்திக்கிட்டு,  எனக்கு நானே ஒரு பிடிப்பை உருவாக்கிட்டு போய்ட்டு இருந்தப்போ தான் மித்ரா வந்தா..”
“நான் வலுக்கட்டாயமாக உருவாக்கின பிடித்ததை  எல்லாம் உடைச்சிட்டு எனக்குள்ள முழுசா நிறைஞ்சா, இதுவரை எனக்குள்ள இருந்த தனிமையை, வெறுமையை மொத்தமா உடைச்சிட்டா..”
“எனக்கு அவ இருக்கா..  எந்த நிலையிலும் எனக்காக அவ இருக்காங்கிற நம்பிக்கையை எனக்கு முழுசா கொடுத்தா.. என்னோட எல்லா நிறை குறைகளையும் அப்படியே ஏத்துக்கிட்டு என்னை எனக்காக நேசிச்சா..”,  
“என்னோட பலம் அவதான்..!! என்னோட கீர்த்தி அவதான்..!! என் வாழ்க்கையோட வெளிச்சம் அவதான்..!! எனக்கான கௌரவம் அவதான்..!! என்னோட எல்லாமே அவதான்..!!  இன்னும் சொல்ல போனால் அவ இல்லைன்னா நான் இல்லைங்கிற நிலைக்கு நான் வந்துட்டேன்..”
“அது உங்களுக்கும் தெரியும்.. என்னோட விருப்பத்தை நான் உங்கிட்ட எப்போவும் மறைச்சதே இல்லை, வெளிப்படையா நிறைய முறை  சொல்லியும் இருக்கேன், அப்படி இருந்தும் இன்னிக்கு நீங்க என் வாழ்க்கையை சிதைச்சிட்டு வந்து நிக்கிறீங்க..”
“என்னை அசிங்கபடுத்திட்டு வந்திருக்கீங்க, என்னை பத்தி கொஞ்சம் கூட கவலைபடாம உங்க விருப்பு வெறுப்புக்கு என்னை பலியாக்கிட்டீங்க..”
“அம்மான்னா அப்படி இப்படின்னு நிறைய பேர் நிறைய சொல்லி நான் கேட்டிருக்கேன், ஆனா அனுபவிச்சதில்லை, இன்னிக்கு அனுபவிச்சிட்டேன், ஒரு அம்மா எப்படி இருக்க கூடாதுன்னு கண்ணாலே பார்த்துட்டேன்..”
“அவங்க ஈகோ, ஆங்காரத்துக்கு என்னோட வாழ்க்கையை முடிச்சிட்டாங்க, இன்னிக்கு அங்க நான் கேட்டுகிட்டு பேச்சுக்கு  எல்லாம்  இவங்கதான் காரணம், மித்ரா மேல தேவை இல்லாம இவங்களுக்கு இருந்த அந்த வெறுப்புதான் காரணம்..”
“மித்ராமேல ஏதோ கோவம்  வருத்தத்துல இருக்காங்க, போக போக அவளை புரிஞ்சு சரியாகிடுவாங்கன்னு தான் இவ்வளவு நாளா பொறுமையா இருந்தேன், ஆனா இப்படி அவமேல இவ்வளவு  கன்னிங்கா இருப்பாங்கன்னு  நான் நினைச்சு கூட பார்க்கல..? 
“என்னால அவங்களை புரிஞ்சுக்க  முடியாம போச்சு, மே பி இவங்களோடே இருந்திருந்தா இவங்களை  பத்தி புரிஞ்சிருப்பேனோ என்னவோ..?  என்று மிகவும் விரக்தியுடன் பேசி கொண்டிருந்த மகனை சண்முகம் தவித்து போய் பார்க்க, பெண்கள் அழுதப்படி பார்த்தனர்.
“இவ்வளவு பிரச்சனைக்கு காரணமா இருந்த அந்த வளையலை கூட நான்தான் வாங்கினேன், மித்ராக்கு எதுவும் தெரியாது, அவகிட்ட நான் பார்த்துகிறேன்னு தான் சொல்லியிருந்தேன்..”
“ஆனா இவங்க அதையே ஒரு பிரச்சனை ஆகிட்டாங்க, இவங்க மகளுக்கு இவங்க என்ன செய்ய நினைக்கிறாங்கன்னும் நம்மகிட்ட எதுவும் சொல்லலை,  என்ன செய்ய போறோம்ன்னு  எதுவும்  கேட்கல, ஆனா இதையே ஒரு காரணமா வச்சு அங்க பங்க்ஷன் நடக்கிற இடத்துல அவ்வளவு பேசவேண்டிய அவசியம் என்ன இருக்கு..?”
“அவங்களுக்கு அவங்களை தவிர மகளோட வாழ்க்கையும், மகனோட வாழ்க்கையையும் முக்கியமா தெரியல போல, என்ன செய்ய..? இதெல்லாம் பட்டாதான் புரியுது..” 
“போதும்ப்பா.. எல்லாம் போதும், முடிஞ்சதை மாத்த முடியாது, நான் முதல்லே சொன்னது போல என்னோட கடமையை நான் கண்டிப்பா செய்வேன், அது சேர்ந்திருந்து ஒரு குடும்பமா செய்றதும், தனியா இருந்து செய்றதும் உங்க கையிலதான் இருக்குன்னு சொல்லியிருந்தேன்..”
“அதுக்கான பதில் இப்போ தெரிஞ்சிருச்சு, நான் எப்போவும் போல தனியாவே  இருந்துகிறேன், எதையும் வலுக்கட்டாயமா ஒட்டவைக்க முடியாது.. உங்க மகனா நான் எப்போவும் இருப்பேன், பார்த்துக்கோங்க.. நான் போறேன்..” என்று  பேச வேண்டிய விஷயத்தை பேசிவிட்டு சட்டென வெளியேறிவிட்ட ப்ரேம், காரை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டான்தான், 
ஆனால் எங்கு செல்ல என்றுதான் தெரியவில்லை. வழியிலே காரை போட்டு கண் மூடி சாய்ந்துவிட்டான். மதிய நேர வெயில் காருக்குள் ஏஸியையும் மீறி சுட்டெரித்த போதும், கண்டு கொள்ளாமல் கண் மூடியே கிடந்தவனுக்கு  மனம் முழுவதும் போராட்டம், 
அடுத்து என்ன செய்ய என்று தெரியவில்லை..?, எங்கு போக என்று தெரியவில்லை..?, இதுவரை செய்தது எல்லாம் சரியா என்று தெரியவில்லை, இனி செய்ய போவதும் சரியா என்று தெரியவில்லை.. 
மனம் முழுவதும் பல கேள்விகள்.. போராட்டம்.. ஒரே நாளில் முழுவதுமாக சோர்ந்து போனான். நாளை ஹாஸ்பிடல் சென்று பேபியின் நிலை  என்னவென்று தெரியாமல் சென்னையும் கிளம்ப முடியாது..   
“ஏன் இப்படி..? எனக்கே தெரியாம நடந்த ஒரு விஷயத்துக்காக நான் என்ன என்ன கேட்க வேண்டியிருந்தது, அதுவும்  அவர் என் சட்டையை பிடிச்சு.. ச்சே..  என் பொண்டாட்டி மேல  எனக்கு எந்த உரிமையும் இல்லையா..? அவர் எப்படி என் சட்டையை பிடிக்கலாம்..?”  
“என்னை விட அதிகமா அவளை தானே நம்புனேன், அவ இப்படி செய்யலாமா..? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் இல்லை, என் தலையை அடமானம்  வச்சாவது அந்த பணத்தை ஏற்பாடு செஞ்சு கொடுத்திருப்பேனே..?”
“அதைவிட்டு எனக்கே தெரியாம இவளே கொடுத்து..? என்ன செஞ்சு வச்சிருக்கா..?”  என்று கொதித்து  கொண்டிருந்தவன் மேல் பனிமழை தூவி  குளிர்வித்தது அவர்களின் உயிர் ஜனித்த செய்தி. ஆனால் அடுத்த நொடியே அந்த பனிமழையும் வறண்டு போனது சுபா சொல்லிய செய்தியால், 
 
“ஏன் பேபிக்கு பீட் லோவா இருக்கு..? எதாவது இஸ்ஸுவா இருக்குமா..?” என்ற பயம் வேறு அவனை வதைத்து கொண்டிருக்க, மனைவியையும் குழந்தையையும் உடன் இருந்து தாங்க  முடியாத தவிப்பு இப்போதே அவனை வாட்ட ஆரம்பித்துவிட்டது. 
அப்படியே காருக்குள்ளே இருந்து விட்டவனுக்கு இரவு நெருங்கிய பிறகும் பசி என்ற ஒன்று தெரியவே இல்லை,  வயிறு மருத்து போயிருந்தது. மனம்  மனைவியை  அதிகம் தேடியது. 
“போடி..” என்று வெளிப்படையாக சிலிர்த்து கொண்டவன், விடியும் வரையும் காரிலே தான் இருந்துவிட்டு, ஹோட்டல் சென்று ரெப்ரெஷ் செய்து கொண்டு வடிவேலு வீடு நோக்கி சென்றான். 
அவர்களின் கேட் வாசலிலே காரை நிறுத்திவிட்டவன், உள்ளே கூப்பிடும் வாட்ச்மேனை மறுத்து விட்டு மனைவியை எதிர்நோக்கி காரிலே காத்திருந்தான். 
அடுத்த சில நிமிடங்களில் வசந்தாவுடன் வெளியே வந்த மனைவியின் முன் காரை கொண்டு சென்று  நிறுத்தியவன், முன் கதவை திறக்க, வடிவேலு அவரின் காரில் அமர்ந்து ஹார்ன் அடித்தார். 
மது இருவரையும் வெறித்து பார்த்தவள், தன் அண்ணனின் காரை நோக்கி செல்ல, ரவி தங்கையின் எண்ணம் புரிந்து அவனின் காரிலே தங்கையை ஹாஸ்பிடல் அழைத்து சென்றுவிட, தந்தையும், கணவனும் மதுமித்ராவின் செயலை நம்ப முடியாமல்  திகைத்துவிட்டனர்.
 

Advertisement