Advertisement

அவளே என் பிரபாவம் 20
“என் கையை விடு மித்ரா..” என்று மனைவி தன் கையை  பிடித்து அவளின் வயிற்றில் மேல் வைத்திருக்க, வார்த்தைகள் கரகரப்பாக வந்தது. 
“நம்ம பேபி வரபோற விஷயம் உங்களுக்கு தெரியும்தானே..? பெரியம்மா சொன்னப்போ நீங்களும் அங்கதானே இருந்தீங்க..?” என்ற மதுவின் கேள்வியில்  ப்ரேம் கசங்கிய முகத்துடன் வேறு புறம் பார்த்தான். 
“சொல்லுங்க.. அவங்க சொன்னப்போ நீங்க அங்க தானே இருந்தீங்க..?” என்று மது விடாமல் ஒருவித கோபத்துடன் கேட்டு கொண்டிருக்க ப்ரேம் மனைவியின் பக்கம் தன் பார்வையை திருப்பாமல், அவளின் வயிற்றில் இருந்த தன் கையை இழுக்க, மது மேலும் வலுவாக இருத்திகொண்டாள். 
“ம்ப்ச்.. விடுடி..” என்ற ப்ரேமின் மனம் முழுவதும் ஒருவித தவிப்பு, கோவம், ஆதங்கம், ஆத்திரம் நிறைந்திருக்க  மனைவியை ஏதாவது பேசிவிடுவோம் என்ற பயமே அவளை நெருங்க விடாமல் தள்ளிவர செய்தது.
“உங்களை தானே கேட்கிறேன்..? உங்களுக்கு நம்ம பேபி வர்றது தெரியும் தானே..?” என்று மது கணவனின் அமைதியில் கோபத்துடன் கேட்க, ப்ரேமிற்குள் இருந்த நடுக்கம் அவனின் கைகளிலும் தெரிந்தது. 
“தெரியும்.. என்று கொண்டாடும் நிலையிலா நாம் இருக்கின்றோம்..” என்று மனதுள் வெறுமையாய் புன்னகைத்தவன், ஒரு விரலால் மனைவியின் வயிற்றை வருடிவிட்டு, மது திகைத்து நிற்கும் போதே கையை உருவி கொண்டு கிளம்பிவிட, மது கணவனின் முதுகை வெறித்தபடி தோட்டத்திலே நின்றுவிட்டாள். 
“மதுமா.. என்னடா இங்கேயே நின்னுட்ட..? எங்க அவர்..? உண்மையாவே விட்டுட்டு கிளம்பிட்டாரா..?” என்று கேட்ட வடிவேலுவுக்கு சோர்வாக தலையை ஆட்டினாள் மகள். 
“என்ன..? அப்படியென்ன கோவம்..? நான் என்ன இல்லாததையா பேசிட்டேன், போகட்டும் போ..” என்று ப்ரேம் மகளை விட்டு சென்ற கோவத்தில் பொரிய, மது கண்களை மூடி திறந்தவள், 
“போதும்ப்பா..” என்றாள் எல்லையில்லா வேதனையுடன். 
“மதுமா.. நான்..”  என்று மகளின் வேதனையில் வடிவேலு பேசவர, 
“போதும்ப்பா.. ப்ளீஸ்.. இதோட நிறுத்திக்கோங்க, இன்னிக்கு நீங்க அவரை ரொம்ப பேசிட்டிங்க, போதும்.. விட்டுடுங்க..” என்ற மகளின் பேச்சில் வடிவேலுவுக்கும் கோவம் வந்தது. 
“நான் என்ன தப்பா பேசிட்டேன் மதுமா, அவங்க என் பொண்ணை பத்தி எவ்வளவு கேவலமா பேசுறாங்க, பார்த்துட்டு பேசாம இருக்க சொல்றியா..? என்று வடிவேலுவுக்கு இன்னமும் வைஜெயந்தி பேசிவிட்ட பேச்சுக்களை  ஜீரணிக்க முடியவில்லை. 
“ஏன்ப்பா.. அவங்க இப்போ தான் பர்ஸ்ட் டைம் என்னை அப்படி பேசுறாங்களா..?” என்ற மகளின் நிதானமான கேள்வியில் தந்தை மௌனம் காத்தார். 
“சொல்லுங்கப்பா.. அவங்க என்னை இப்படி பேசுறது இதுதான் முதல் முறையா..?”
“அதுதான் என் தப்பு மதுமா, அவங்க முதல் முறை உன்னை பேசினப்போவே நான் பேசியிருக்கனும், விட்டுட்டேன், அந்த தைரியத்துல தான் அவங்க  இன்னிக்கு உன்னை எல்லார் முன்னாடியும் இந்தளவு பேசிட்டாங்க..” என்று கொதித்த தந்தையை கசங்கிய முகத்துடன் பார்த்த மகள், 
“அவங்களை விட  நீங்க  இன்னிக்கு அதிகமா பேசிட்டிங்கப்பா..” என்ற மகளை வடிவேலு அதிருப்தியுடன் பார்த்தார். 
“நான் உண்மையை தான் பேசினேன் மதுமா, அதுல எந்த தப்பும் இல்லை..”
“எதுப்பா உண்மை..?  என்னோட உழைப்புல தான் அவங்க வாழுறாங்கங்கிற உண்மையா..? அது சரியாப்பா..? நீங்க சொன்னதுல உண்மை இருக்கா..? என்னோட முன்பணமும்,  டிசைனும் மட்டுமே போதுமாப்பா அவங்க  வாழ, அதுக்கு முன்னாடி அவங்க வாழவே இல்லையா..?” என்று மகள் அடுக்கடுக்காய் கேட்க வடிவேலு புரிந்தும் புரியாமலும் நின்றார். 
“நீங்களும் ஒரு கடை வச்சு நடத்துறீங்க, நிர்வாகங்கிற ஒன்னு எவ்வளவு முக்கியம்ன்னு உங்களுக்கு தெரியாதா..? நான் என்னதான் டிசைன் வரைஞ்சு, முன்பணம் கட்டி மெட்டிரியல் கொடுத்தாலும், சரியான நிர்வாகம், தொழில் பக்தி, அதை நடத்துற பாங்கு இல்லாம ஜெயிக்க முடியுமாப்பா..?” என்று ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக கேட்ட மகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வடிவேலு திகைக்கவே செய்தார். 
“மாமாக்கு அட்டேக் வந்த உடம்பு, அதிலும் ஒரு நாள் கூட லீவ் எடுக்காம நைட்டும், பகலும் கடை  பத்தியே யோசிச்சு, உழைச்சு,  அதை தூக்கி நிறுத்த போராடியிருக்கார்ப்பா, ஒரு முறை கீழே விழுந்துட்டோம், மறுப்படியும் விழக்கூடாதுன்னு நிறைய பாடுபட்டிருக்கார்ப்பா.. அவரோட  உழைப்பு  ஒன்னுமே இல்லைங்கிற மாதிரி பேசிட்டிங்களே..”
“பாவம்ப்பா அவர், நீங்க யாரையோ சொன்ன  வார்த்தை ஒரு நியாயமான மனுஷனை தாக்கிருச்சுப்பா.. அது தப்பு இல்லையாப்பா..?” என்று மகள் கேட்க, வடிவேலுவுக்கும் அந்த குற்ற உணர்ச்சி சண்முகம் பேசும் போதே உண்டாகியிருக்க, தன் தவறை உணந்தவர், அதை மகளிடமும் சொல்ல செய்தார். 
“அது தப்புதான் மதுமா, அவரை பத்தி நான் யோசிச்சிருக்கணும், ஒத்துகிறேன்..” என்று மனதார உணர்ந்து சொல்ல, மது தந்தையின் கையை பற்றி கொண்டவள். 
“நீங்க உங்க மருமகனை பத்தியும் கண்டிப்பா யோசிச்சிருக்கணும்ப்பா..” என்ற நொடி,  வடிவேலு மகளின் கையை விலக்கி கொண்டார். 
“ப்பா..” என்று மது மறுபடியும் அவரின் கையை பற்றி கொண்டவள், 
“உங்களுக்கே தெரியும், அவர் அவரோட தன்மானத்தை, சுயமரியாதையை ரொம்ப பார்ப்பார்ன்னு, அவரை போய் அவரை போய் நடுச்சபையில்  வச்சு எல்லோரும் பார்க்க அப்படி பேசினது சரியாப்பா..?”
“என்னோட உழைப்புல அவர் எங்கப்பா வாழுறார்..?  அவரோட உழைப்புல தானே அவர் வாழுறார், அவரோட பணம் இல்லைன்னா  இன்னிக்கு அந்த கடையே இல்லைப்பா..”
“அன்னிக்கு அவர் இருந்த சூழ்நிலையில அந்த காசை ரெடி செய்றது ரொம்ப கஷ்டம்ன்னு தான்  நான் கொடுத்தேன், அவர்கிட்ட சொல்லியிருந்தா அவர் கண்டிப்பா எப்படியாவது ரெடி செஞ்சு கொடுத்திருப்பார்..”
“ஆனா  வேண்டாம், ஏற்கனவே அவரோட சம்பளத்துல எய்ட்டி பர்சன்ட் லோன் போயிட்டார், மேற்கொண்டு இதையும் செஞ்சா ரொம்ப சிரமப்படுவார்ன்னு  தான்  கொடுத்தேன், அதுவும் அவர்க்கு தெரியாமதான், அது ஏன்னு உங்களுக்கே தெரியும்..” என்றவள் தந்தையை பார்க்க, அவர் விறைத்தபடி தான் நின்றிருந்தார். 
“அவரைபோய்  எல்லாத்தையும் அம்போன்னு விட்டுட்டு வெளிநாடு போயிட்டார்ன்னு வேற சொல்றீங்க..  உங்களுக்கு தெரியுமாப்பா, இங்க எல்லாம் நாம பார்த்துக்கலாம்ன்னு நான்தான் குமார் அண்ணா மூலமா மாமாகிட்ட பேசி அவரை வற்புறுத்தி  வெளிநாடு அனுப்பி வைச்சேன்..” என்ற மகளை ஏற்றுகொள்ளாமல் பார்த்த பார்த்த தந்தை, 
“அதுக்காக அவர் உன்னை அடிக்கலாமா..? நீ அவருக்காக தானே இதை எல்லாம் செஞ்ச..?” என்று கேட்க, விரக்தியாக சிரித்த மது, 
“ப்பா.. உங்களுக்கு புரியல, நான் அவர் நம்பிக்கையை உடைச்சிருக்கேன், அவர் அவரைவிட என்னை தான் ரொம்ப நம்புறார், அவர்கிட்ட இருந்து நான் எல்லாத்தையும் மறைச்சிருக்கேன், அந்த கோவம் அவருக்கு இருக்காதா..?”
“கை நீட்டுற அளவு அப்படியென்ன  பெரிய கோவம்..?” என்று வடிவேலு சிடுசிடுக்க அவரை கூர்மையாக பார்த்த மகள்,
“ஏன்ப்பா நீங்க என்மேல கோவப்படல..?” என்று  கேட்க,  வடிவேலுவிடம் ஒரு தடுமாற்றம். 
“சொல்லுங்கப்பா.. உங்களுக்கு தெரியாம, உங்ககிட்ட சொல்லாம அவருக்கு பணம் கொடுத்திட்டேன்னு என்மேல உங்களுக்கு கோவம் வரல, வருத்தம் வரல, என்கிட்ட பேசாம, என்னை மதுமா கூப்பிடாம தள்ளி வைக்கல.. அதே கோவம், வருத்தம், எல்லாம் அவருக்கும் இருக்கும்ப்பா..”
“வலி, வேதனை, ஏமாற்றம் எல்லா உறவுக்கும் பொதுதான்.. புரிஞ்சுக்கோங்கப்பா..” என்று மது வேண்டுகோளாக தந்தைக்கு புரியவைக்க முயல வடிவேலுவிடம் மாற்றம் என்ற ஒன்று தெரியவே இல்லை,  
“அப்போ அவர் உன்னை இங்க விட்டு போனதும் சரின்னு சொல்றியா..?”என்று விடாமல் கேட்க, மதுவிடம் ஓர் விறைப்பு, 
“அது அவரோட பக்க நியாயம்ப்பா, நீங்க வார்த்தைக்கு வார்த்தை உங்க பொண்ணுன்னு சொல்லி அவரோட தன்மானத்தை சீண்டி விட்டுட்டிங்க, அதை திருப்திபடுத்தாம அவர் ஓயமாட்டார்..” என்ற கணவனுக்கு ஆதரவாக பேசினாலும் உள்ளுக்குள் கணவனை நினைத்து கொதிப்பு. 
“அப்போ  நான்தான் தப்புன்னு சொல்றியா மது..?” என்று வடிவேலு கோபத்துடன் கேட்க, மதுவுக்கு ஆயாசமாக இருந்தது. 
“ஏன்ப்பா.. அப்போ நீங்க அவர் சட்டையை பிடிச்சது கூட தப்பில்லைன்னு சொல்றீங்களா..?” என்று அவளும் கோபத்துடன் கேட்டவள், 
“அவர் என் புருஷன், உங்க மருமகன், இந்த வீட்டு மாப்பிள்ளை, நம்ம வீட்டு பங்கஷனுக்கு கூப்பிட்டு அவர் சட்டையை பிடிச்சி, ஏன்பா இப்படி செஞ்சிங்க..? என்னால அதை ஏத்துக்கவே முடியல..”
“அவர் முதலில் இருந்தே கடை விஷயத்துல என்னை தள்ளி தான் வச்சார், நான்தான் அவருக்கு தெரியாம எல்லாம் செஞ்சேன், இது உங்களுக்கும் தெரியும், எல்லாம்  தெரிஞ்சும் ஏன்ப்பா இன்னிக்கு இப்படி நடந்துக்கிட்டிங்க..?”
“மாமனார் மருமகன் சட்டையை பிடிக்கலாமா..? இதுதான் நீங்க அவருக்கு  கொடுக்கிற மரியாதையா..? இது மறையுமா..? காலத்துக்கும் ஒரு கருப்பு புள்ளி இல்லையா இது..?” என்று மது கணவனுக்காக நியாயம் கேட்டவள், 
“எனக்கு எப்போவுமே நீங்களும் வேணும் அவரும் வேணும்.. நான் எப்போவும் யாரையும்  விட்டு கொடுக்க நினைச்சதே இல்லை, எவ்வளவு இக்கட்டான சமயத்திலும் யாரையும் தூக்கியோ, இறக்கியோ நடந்துகிட்டதில்லை, எப்போவும் உங்க பக்க நியாயத்தை யோசிச்சு நடந்துருக்கேன்..” 
“ஆனா நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட அப்படி இல்லை, என்னை நீங்க யோசிக்கல, எனக்காக நீங்க பார்க்கல.. உங்களுக்குள்ள எப்போ பிரச்சனை வந்தாலும் என்னை தள்ளி வச்சு வேதனை படுத்துறீங்க.. போங்க.. இப்போலிருந்து நான் உங்க ரெண்டு பேரையும் தள்ளி வைக்கிறேன்..”
“உங்களுக்காக யோசிக்க போறதில்லை, பார்க்க போறதில்லை.. என்னை விட்டுடுங்க.. நீங்க ரெண்டு பேருமே எனக்கு வேண்டாம்.. தள்ளி போங்க..” என்று அழுத்தத்தில், ஆற்றாமையில் கத்த, வடிவேலு பயந்தே போனார். 

Advertisement