Advertisement

அவளே என் பிரபாவம் 2 1
“என்ன சொல்ற சோமு..? இன்னும் ஒரு மாசத்துக்குள்ள எப்படிப்பா முடியும்..?” என்று வடிவேலு  சோமுவிடம் கேட்டார். 
“செய்யணும்ன்னு சொல்ராங்க வடிவேலு, அவங்க மகன் இன்னும் ஒரு மாசத்துல வேலைக்கு வெளிநாடு போக போறாராம், அதுக்குள்ள தங்கச்சி  கல்யாணத்தை முடிக்கணும் சொல்றாரு..”  என்று சோமு சொல்லவும், யோசித்த வடிவேலு, 
“சரி.. விடு அப்படித்தான் செஞ்சுடலாம், என்ன நாம முடிவெடுத்ததை விட ஒரு  இருபது நாள்  முன்னாடி வருது, பரவாயில்லை.. ஆரம்பிச்சிரலாம்ன்னு சொல்லிடுங்க..”
“அப்பறம் தாலி உருக்க, பத்திரிக்கை அடிக்க, முகூர்த்த புடவை எடுக்க எல்லாம் நல்ல நாள் பார்த்துட்டு சொல்றேன், அவங்களுக்கு ஓகேவான்னு கேட்டு சொல்லு..” என்று ஆரம்பித்த ரவி, திவ்யாவின் கல்யாண வேலைகள் அதற்கு பிறகு முழு வீச்சில் சென்றது. 
முதலில் இரு வீட்டு பெரியவர்களும் சென்று பத்திரிக்கை அடிக்க கொடுத்தனர், அடுத்து முகூர்த்த புடவை எடுக்க   இரு குடும்பத்தாரும் வேலுவின் கடைக்கே வந்தனர். 
வேலு முதலிலே சொல்லிவிட்டார், அவர்கள் எங்கு சொல்கிறார்களோ அங்கே முகூர்த்த பட்டு புடவை எடுக்கலாம் என்று.. அதற்கு ப்ரேம் தான் வேலுவின் கடையிலே எடுத்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டதாக சோமு சொல்லவும், வடிவேலுவும் ஏற்று கொண்டு இன்று இரு குடும்பத்தாரும் அவரின் கடையில் கூடியிருந்தனர். 
முதலில் தாலி உருக்க கொடுத்த பிறகே ஜவுளி எடுக்க வந்திருந்தனர். சண்முகத்திடமும், வைஜெயந்தியிடமும் மதுமித்ரா தானே சென்று பேசினாள். அவர்களும் முகம் திருப்பாமல் பேசினாலும் ஒதுக்கம் தெரியாமல் இல்லை. இதுவும் கடந்து போகும்.. என்று தனக்குள் சொல்லி கொண்டவளின் முக வாட்டத்தை நொடியில் கண்டு கொண்ட வடிவேலு,  
“மதுமா.. இங்க  வாயேன், இந்த டிசைன் எப்படி இருக்கு..? நியூ கலெக்ஷன்.. நல்லா இருக்கு இல்லை..”  என்று அவளுக்கு மிகவும் பிடித்ததை பேச ஆரம்பித்துவிட, அவரின் மனைவி வசந்தா கணவனை ஆதங்கமாக பார்த்து கொண்டிருந்தார். 
 அவர்கள் முன்னமே முடிவெடுத்தது போல் இருந்திருந்தால் இன்று மகளுக்கும் சேர்த்து இல்லை முகூர்த்த புடவை எடுத்திருப்போம்.. என்று தன் வருத்தத்தை உள்ளுக்குள்  மறைத்து பெருமூச்சு விட்டு கொண்டார். இல்லை வடிவேலு  குதறிவிடுவார். மகளின் முன் யாரும் எதுவும் பேசக்கூடாது.. என்ற பலமான கண்டிப்பு. 
“ஆனால் என்ன பயன்..? பேசினாலும் பேசாவிட்டாலும் சில வேதனைகள், ஏமாற்றங்கள் குறைய போகிறதா..? இல்லை மறைந்து தான் போய் விடுமா..? இதை யார் இவருக்கு புரிய வைப்பது..?” என்று ஆற்றாமையுடன் நினைத்தவர், வருங்கால மருமகளுக்கு புடவை எடுப்பதில் கவனம் செலுத்தினார். 
“ப்பா.. ஏன் இன்னும்  அடுத்த கலெக்ஷன் வரல, இந்நேரத்துக்கு வந்திருக்கணுமே..?” என்று வந்து நின்ற ரவியை கண்டிப்புடன் பார்த்த வடிவேலு, 
“ரவி.. அதை அப்பறம் பார்த்துக்கலாம், நீ முதல்ல போய் மருமக புள்ளைகிட்டேயும், உன் மாமனார், மாமியார் கிட்டேயும் பேசு..” என்று அவனை விரட்ட, பெரு மூச்சு விட்டு கொண்டே அவர்களை நோக்கி சென்றான். 
ரவி என்னதான்  என்ஜினீயர் படுத்துவிட்டு MNC ல் வேலை பார்த்தாலும், இங்கு வரும் சமயங்களில் கடைக்கும் வந்து பொறுப்பாக பார்த்து கொள்வான். அதன் பழக்கத்திலே கடையின் நிலவரங்களை கேட்டவனை வடிவேலு விரட்டிவிட்டார்.  
“வாங்க மாமா, வாங்க அத்தை..” என்று சண்முகத்திடமும், வைஜெயந்தியிடமும் மரியாதையாக பேசியவன், திவ்யாவின் பக்கம் தன் பார்வையை திருப்பினான். அதுவரை அவனையே   பார்த்து கொண்டிருந்த திவ்யா, இவன் பார்க்கவும் முகம் திருப்பி கொண்டாள்.
எல்லோரையும் போல் இவர்களும் தங்களின் திருமண பந்தத்தை நினைத்து  மிகுந்த சந்தோஷத்துடனும், எதிர்பார்ப்போடும் இருந்தவர்கள் தான், ஆனால் மது, ப்ரேமின் உறவு முறிந்ததில் ரவிக்கு தன் திருமணத்தை நினைத்து சந்தோஷபட முடியவில்லை. 
மதுவின் வருத்தம்  ரவிக்கு  புரிய ஒரு அண்ணனாக தங்கையை நினைத்து கவலை கொண்டவனால் திவ்யாவிடம் முன் போல் இருக்க முடியவில்லை. அந்த கோவம் அவளுக்கு, அதோடு அவளின் அண்ணனை தாங்கள் ஏமாற்றி விட்டது போல் இந்நாள் வரை குதித்து கொண்டிருக்கிறாள். அதனாலே இந்த முகத்திருப்பல்.. 
“ரவி.. இந்த புடவை எப்படி இருக்கு..? இதுதான் திவ்யாவுக்கு பார்த்திருக்கோம்..”  என்று வசந்தா மகனிடம் தாங்கள் எடுத்த புடவையை காட்ட, பார்த்தவனுக்கு இன்னும் கொஞ்சம் கூட நன்றாக எடுக்கலாம் என்றே தோன்றியது. 
“ம்மா.. இது ஓகேதான், அப்பா திவ்யாவுக்காக ஆர்டர் கொடுத்த புடவை எங்க..?” என்று கேட்டான். 
“அது.. திவ்யாவுக்கும், சம்மந்தி அம்மாவுக்கும் பிடிக்கலையாம்ப்பா, நீ வேற பாரு..” என்று மெதுவாக சொல்ல, ரவிக்கு புரிந்து போனது, அவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று, ஏனெனில் அவன்தான் அவளுக்காக பார்த்து பார்த்து செலக்ட் செய்திருந்தான். இப்பொது அதை சொல்ல மனம் வராமல், அமைதியாக நின்றான். 
“ரவி.. வா, இதுல பாரு..”  என்று மகனை மருமகளின் பக்கத்தில் அமர்த்தியவர், தள்ளி அமர்ந்துகொண்டார். அவனும் சில நிமிடங்கள் அலசியவன் திருப்தி இல்லாமல் போக திவ்யாவை பார்த்தான்.  அவளோ யாருக்கு  வந்த விருந்தோ என்று அமர்ந்திருக்க, அதிர்ப்தியாக தலையை ஆட்டி கொண்டான். 
“மது.. மது..”  என்று தந்தையோடு இருந்த தங்கையை கூப்பிட்டவன், “திவ்யாவுக்கு பாரு..” என்றான். 
“சரிண்ணா..” என்றவள் அடுத்த சில நிமிடங்களிலே ரோஜா பிங்க் வண்ணத்தில் தங்க ஜரிகைகள் கொண்டு டிசைன் செய்யபட்டு இருந்த  புடவையை எடுத்து காட்டினாள். பார்த்தவுடனே எல்லோருக்கும் அந்த புடவை பிடித்துவிட, அதுவே திவ்யாவிற்கான முகூர்த்த புடவை ஆனது. 
அடுத்து எல்லோருக்கும் அங்கேயே துணிகள் எடுக்க ஆரம்பிக்க, “ஜெயா.. ஏன் இன்னும் ப்ரேம் வரல, இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்னு தானே சொன்னான், ஒருவேளை வரமாட்டானோ..?” என்று சண்முகம் மனைவியிடம் மெதுவாக கேட்டுக்கொண்டிருக்க, அவர்களுக்கு சற்று  தள்ளி வசந்தாவிற்கு புடவை பார்த்து கொண்டிருந்த மதுவின் காதில் அவர்கள் பேசுவது விழுந்தது. 
“வந்துருவாங்க.. கிளம்பிட்டேன்னு தான் சொன்னான்..” என்ற ஜெயாவின் பதிலும் காதில் விழ, முகம் தானாகவே மலர்ந்தது. 
“வருவார்.. கண்டிப்பா வருவார்.. அதெப்படி வராம போவார்..?” என்று  உள்ளுக்குள் குதூகலித்தவளின் சந்தோஷம் தாயின் கண்ணில் பட, “ஐயோ மகளே..” என்று துடித்து போனார். அந்த நேரம் கணவனை நினைத்து சொல்லிலடங்கா கோவம் தோன்றாமல் இல்லை. 
“ம்மா.. இந்த புடவை உனக்கு ரொம்ப நல்லா இருக்கும்..” என்று மகள் காண்பித்த புடவையை கூட பார்க்காமல் எடுத்து வைத்து கொண்டவரை சிரிப்புடன் பார்த்தாள். 
“ம்மா.. அது என்ன கலருன்னாவது பாருமா..” என்று மது சிரிப்புடன் சொல்ல,  
“அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும் மது, நீ முதல்ல உனக்கு பாரு.. போதும் எங்களுக்கு எடுத்தது..” என, 
“சரிம்மா..” என்றவள் எதோ தோன்ற வேகமாக  திரும்பி வாசலை பார்த்தாள். அங்கு தலையை கையால் கோதியபடி ப்ரேம் வந்து கொண்டிருக்க, மது அவனையே இமைக்காமல் பார்த்தாள். அவளின் பார்வையை உணர்ந்தது போல் அவனும் இவள் இருக்கும் திசையை பார்த்தான். 
“தம்பி.. வாங்க.. வாங்க..” என்று  ப்ரேமை வடிவேலு மரியாதையுடன் கூப்பிட, மதுவிடம் இருந்து தன் பார்வையை திருப்பி அவரை கண் சுருக்கி பார்த்தவன், தலையை மட்டும் ஆட்டி உள்ளே வந்தான். 
அவரின் மாப்பிள்ளை அழைப்பு காணாமல் போய் தம்பி அழைப்பு வந்திருக்க, ப்ரேமின் முகம் தானாகவே கோவத்தை தாங்கி கொண்டது.  அவனின் கோவத்தை உணர்ந்து கொண்ட மதுவிற்கு லேசான படபடபடப்பு. 
“அப்பாவிடம் ஏதாவது ஏடாகூடமாக  பேசிவிடுவாரோ..?” என்று தோன்ற வேகமாக அவர்கள் இருக்கும் பக்கம் வந்தவள், சற்று தள்ளி துணிகளை பார்ப்பது போல் நின்று கொண்டாள். 
“அப்பறம்.. தம்பி எப்படி இருக்கீங்க..?” என்று வடிவேலு சம்பிரதாயமாக நலம் விசாரிக்க, 
“இருக்கேங்க..” என்றான் மொட்டையாக, எந்த உறவு முறையும் இல்லாமல், அதை புரிந்த வடிவேலுவிற்கு வருத்தம் தோன்றாமல் இல்லை, அவருக்கு ப்ரேமை மிகவும் பிடித்துத்தானே தன் செல்ல மகளுக்கு பார்த்தார். 
“அப்பறம் தம்பி சென்னைக்கே வந்துட்டீங்க போல..” என்று கேட்க, அவரையே வெறித்து பார்த்தான். “அவன் ஏன் சென்னை வர நினைத்தான் என்று இவருக்கு தெரியாமல் இருக்குமா..?” என்று மனதுள் கசப்பாக நினைத்தவன், 
“ஆமாங்க..  தங்கச்சி கல்யாண வேலைக்கு நாம பக்கத்துல இருந்தா சரியா இருக்கும்ன்னு வந்துட்டேன்..” என்றான். 
“ஓஹ்..” என்றவருக்கு அவனின் ஒதுக்கமான பேச்சும், உடல் மொழியில் வெளிப்பட்ட கோவமும் புரியாமல் இல்லை, 
“அப்பறம் தம்பி.. எதோ வெளிநாட்டுக்கு போக போறீங்கன்னு கேள்விப்பட்டேன், ஏற்பாடு எல்லாம் எந்த  அளவுக்கு இருக்கு..?” என்று கேட்க, அதற்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல், 
“என்ன பெரிய ஏற்பாடுங்க..? நான் மட்டும் தானே போறேன், கூட யாராவது வந்திருந்தாதான் பார்மாலிட்டிஸ் அதிகம், ஆனா நான் அந்த கஷ்டப்பட தான் நீங்க விடலையே..? ரொம்ப நன்றிங்க..” என்று குரலில் வெளிப்படையாக கோவத்தை காட்டி நேரடியாகவே சொல்லிவிட, வடிவேலுவுக்கு “என்னடா இது..?” என்றானது. 
“அச்சோ.. இவர் என்ன இப்படி பேசுறார்..?” என்று நொந்து போன மது, ப்ரேமை கெஞ்சுதலாக பார்க்க, அவன் தான் மிக தீவிரமாக வடிவேலுவை பார்த்து கொண்டிருந்தானே… 
“தம்பி..”  என்ற வடிவேலுவிற்கு மேற்கொண்டு என்ன பேச என்று முழிக்கும் நிலைதான். ப்ரேம் இப்படி வெளிப்படையாக கோவத்தை காட்டுவான் என்று எதிர்பார்காதவர்,  சங்கடத்துடன் நின்றார்.
அந்நேரம்   “ப்ரேம்..”  என்று   சண்முகம் கூப்பிட்டுவிட, வடிவேலுவிற்கு அப்பாடா என்றானது. “தம்பி.. சம்மந்தி கூப்பிடறாரு பாருங்க.. போங்க.. போங்க..” என்று அவசரமாக அவனை அனுப்பிவிட்டார். 
“ஏன் ப்ரேம் இவ்வளவு லேட்..?” என்று ஜெயா கேட்க, 
“கொஞ்சம் டிராபிக்ல மாட்டிகிட்டேன்மா, நீங்க துணி எடுத்துடீங்களா..?” என்று கேட்டான். 
“ம்ம்.. ஆச்சுப்பா, உனக்கு எடுக்கணும்..” என்றார். 
“எனக்கு வேணாம்.. நான் சென்னையிலே பார்த்துகிறேன்..” என்றுவிட்டான். இவர் கடையிலா எனக்கு துணி எடுப்பேன்..? என்ற கடுப்பு. 
“வாங்க ப்ரேம்..” என்று ரவி வர, இருவரும் மரியாதைக்காக  இரண்டொரு வார்த்தைகள்  பேசினர். இருவருக்குள்ளும் எப்போதும் ஒரு மரியாதைக்கான இடைவெளி இருக்கும், அது இப்போது இன்னும் அதிகமானது. 
“மது.. உனக்கு பாரு வா..” என்று வசந்தா மகளை கூப்பிட, 
“இதோம்மா..” என்ற மதுவை நிறுத்திய  வடிவேலு, 
“மதுமா.. இந்த புடவை உனக்காக..” என்று வேலை செய்பவரை பார்க்க, அவர் வேகமாக புடவையை விரித்து காட்டினார். மரகத பச்சையில் தங்க சரிகை வைத்த புடவையை விட்டு  கண்ணே திருப்ப முடியவில்லை. மிக மிக அழகாக இருந்தது. 
“என்னமா பிடிச்சிருக்கா..? அப்பா உனக்காக ஸ்பெஷலா ஆர்டர் கொடுத்து செய்ய சொன்னது..” என்றார்.
“ரொம்ப நல்லா இருக்குப்பா..” என்ற மகளிடம் வடிவேலு புடவையில்  உள்ள டிசைனை காட்டி பேசி கொண்டிருக்க, ப்ரேமிற்கு  உடல் இறுகி போனது. மது மீதான  பாசப்பிணைப்பு  அவரின் ஒவ்வொரு செயலிலும் நன்றாக தெரிந்தது. 
“மதுமா.. இது ரிஸப்ஷனுக்கு, இது மாப்பிள்ளை அழைப்புக்கு..” என்று வரிசையாக அவர் காட்டி கொண்டிருந்த புடவைகளை பார்த்தாலே தெரிந்தது எல்லாம் சில லட்சங்களில் இருக்கும் என்று.. அதையே திவ்யாவும், வைஜெயந்தியும் வெறித்து பார்த்து கொண்டிருந்தனர்.  
எதேச்சையாக அவர்களின் பக்கம் பார்வையை திருப்பிய வசந்தாவிற்கு அவர்களின் பார்வை வித்தியாசம் புரிய உள்ளுக்குள் திக்கென்றானது. “ஏன் இப்படி..?” என்று அவர்களின் எண்ணங்களை எடை போட்டு கொண்டிருந்தார். 
“ம்மா.. என்ன ஆச்சு..?” என்று அம்மாவின் முகம் திடீரென கவலையை காட்டவும் ரவி கேட்டான். 
“ஒண்ணுமில்லப்பா.. கொஞ்சம் அசதி தான்..” என, அவருக்கு காபியை வரவைத்தவன், மற்றவர்களுக்கும் வரவைத்தான். 
“ப்ரேம்.. காபி.. எடுத்துக்கோங்க..” என்று அவன் எடுத்து கொள்ளாமல் இருக்கவும், தானே சென்று ரவி எடுத்து கொடுக்க, மறுக்க முடியாமல் குடித்தவனுக்கு மனம் முழுவதும் வெறுமை. 
“தம்பி.. நீங்க துணி எடுக்கலையா..?” என்று வடிவேலு மனம் தாங்காமல் கேட்டுவிட்டார். அவருக்கு மிகவும் பிடித்தவன் தானே, 
“இல்லைங்க.. வேண்டாம்..” என்றவனிடம் தெரிந்த வித்தியாசத்தில் அவருக்குமே  வருத்தம் தான். 
“ஆனால் மகள்.. அவளின் சந்தோஷம் மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமல்லவா..? கொஞ்ச நாளுக்கு ரெண்டுபேருக்குமே கஷ்டமாதான்  இருக்கும், போக போக சரியாகிடுவாங்க..”  என்றே நினைத்தார். 
“திவ்யா.. உனக்கு இங்கே பிளவுஸ் ஸ்ட்ரெச் செய்ய கொடுக்கலாம், சாந்தி அக்கா நல்லா செஞ்சு தருவாங்க..” என்று அங்கு தையல் செய்யும் பெண்மணியை அழைத்து மது சொல்லவும், 
“தேவையில்லை.. நாங்க பார்த்துகிறோம்..” என்ற திவ்யாவின் அலட்சியத்தில் மதுவின் முகம் ஓர் நொடி சுருங்கிவிட  சட்டென தன் முக பாவத்தை மாற்றியவள், “சரி..” என்று சிரிப்புடன் விலகி சென்றுவிட, அவர்களையே  பார்த்திருந்த வசந்தாவிற்கு மேலும் கவலையானது.
“ஏங்க.. நாம எடுத்த துணிக்கு காசு கொடுத்துடுங்க..” என்று ஜெயந்தி சொல்ல, சண்முகம் செல்லவும், தடுத்த ப்ரேம் அவனே பில் கவுண்டர் சென்றான். 
“தம்பி.. ஏன் இப்படி..?” என்று வடிவேலு மனத்தாங்கலாக கேட்க, 
“இல்லைங்க.. பரவாயில்லை..” என்று மொத்த காசையும் தானே கட்டியவன்,  
“நான் மித்ரா.. ம்ஹூம்.. உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசணும்.. பேசலாமா..? நீங்க கூட இருக்கலாம்..” என்ற ப்ரேமை பார்த்த வடிவேலு, 
“தம்பி.. நான் என் பொண்ணை நான் கும்பிடற சாமியை விட மேலா நம்புறேன்.. நீங்க பேசுங்க..” என்று மகளை கூப்பிட்டுவிட்டு சென்றுவிட, ப்ரேமிற்கு உள்ளுக்குள் முள்ளென குத்தியது.
“உங்க அப்பாக்கு நீ  கொடுத்த நம்பிக்கையை ஏன்  எனக்கு  கொடுக்கல..?’ என்று அவள் வந்து நின்றதுமே கேட்டுவிட்டான். 
“ஏன் இப்படி கேட்கிறாங்க..?” என்று ஓர் நொடி புரியாமல் விழித்த மது, 
“ஏன் உங்களுக்கு அந்த நம்பிக்கை என்மேல இல்லையா..?” என்று கேட்டாள். 
“ம்ப்ச்..” என்றவனை நிதானமாகவே பார்த்தவள், 
“உங்களுக்கும் நான் அந்த நம்பிக்கையை கொடுத்திருக்கேங்க, இல்லை என்னை விட்டு இப்படி வெளிநாடு போவீங்களா..?” என்று கேட்டாள். 
அவள் சொல்வது புரிந்து தான் இருந்தாலும், ஏற்று கொள்ள முடியாமல் நின்றவன், 
“உன்னோட பொட்டிக் பேர்ல ஒரு  ஆன்லைன் ஷாப்பிங் ஆப்  உருவாக்கியிருக்கேன், அதோட டீடெயில்ஸ் எல்லாம் அனுப்புறேன்.. யூஸ் செஞ்சுக்கோ..” என்றான். 
அவர்கள் வெளிநாடு செல்லும் பட்சத்தில் அவளின்  கனவு முடங்காமல் இருக்க  அதை உருவாக்கியிருப்பான் என்று புரிய, மதுவிற்கு வலியும், காதலும் ஒரு சேர உண்டானது.

Advertisement