Advertisement

அவளே என் பிரபாவம் 2 2
“அவ்வளவுதான்.. நான் கிளம்புறேன்..” என்று அவளுக்காக அவன் உருவாக்கியிருந்த ஆப் பற்றி சொன்ன ப்ரேம், கிளம்புகிறேன் என்றுவிட, 
“அவ்வளவுதானா.. வேறெதுவும்  இல்லையா என்கிட்ட  பேச..?” என்ற ஏக்க பார்வையை பார்த்தாள் மதுமித்ரா. 
“ம்ப்ச்..” என்று அவளின் ஏக்கப்பார்வையில் தலை கோதியவன், “வேறென்ன இருக்கு..? அதான் எல்லாம்  முடிச்சிட்டீங்களே..”  என்று சிறு குரலில் தன் கோவத்தை காட்டினான். 
“எல்லாம் முடிஞ்சிடுச்சா..?”  என்ற கேள்வியை தாங்கி அவனை பார்த்தவள், மனத்தாங்கலுடன் விலகி நடந்தாள். அவளின் மனத்தாங்கலை புரிந்து கொண்டவன், செல்லும் அவளை சமாதானப்படுத்த வழியில்லாமல் தவித்து நின்றான். 
“ப்ரேம்.. கிளம்பலாமா..?”  என்று வைஜயந்தி வர, சரியென்று தலையசைத்தவன்,  வடிவேலுவின் குடும்பத்திடம் சொல்லி கொள்ள வந்தனர். 
“சம்மந்தி நாங்க கிளம்புறோம்..” என்று சண்முகம் சொல்ல, 
“ஏன்.. அதுக்குள்ள ஏன் சம்மந்தி..? இருங்க சாப்பிட்டு போலாம்..” என்று வடிவேலு சொல்லவும், 
“இல்லைங்க.. வேண்டாம், நாங்க கிளம்பறோம்..” என்று சண்முகம் சொல்லிவிட, வைஜெயந்தியும், பிள்ளைகளுமே “நாங்க வரோம்..” என்று கை குவித்து விடை பெற்றுவிட்டனர். 
அவர்களின் வெளிப்படையான ஒதுக்கத்தில் அதிர்ப்தி அடைந்த வடிவேலு மகளை பார்த்தார். அவள் சொன்னாள் என்ற காரணத்துக்காக மட்டுமே அவர் ரவி, திவ்யா சம்மந்தத்தை தொடர நினைத்தார். ஆனால் அதுவே இப்போது தவறாக போய்விடுவோமோ..? என்ற எண்ணம் தோன்ற மகளை பார்த்தவர், 
“என்ன மதுமா இது..? சரியா வருமா..?” என்று  தன் அதிருப்தியை காட்டி  கேட்டுவிட்டார். 
“ஏன்ப்பா.. ஏன் இப்படி கேட்கிறீங்க..?”  என்றவளின் பார்வை தன் அண்ணன் முகத்தில் பதிய அவனின் முகமும் அவ்வளவு சந்தோஷத்தில் இல்லை என்று புரிய, கவலை கொண்டவள், 
“ப்பா.. நீங்க இப்படி யோசிக்கிறது தான் சரியில்லை, தப்பு நம்ம பக்கம் இருக்கும் போது நாம பொறுத்து தான் போகணும், என்னண்ணா..?”  என்று ரவியிடம் கேட்டாள். 
“ம்ம்..” என்று பெருமூச்சுடன்  தலையை மட்டும் ஆட்டிய ரவியிடம்  வந்த ஸ்டாப், 
“சார்.. அவங்க இந்த பார்சலை  இங்கேயே விட்டுட்டு போயிட்டாங்க..” என்றான். 
“இங்க கொடுங்க..” என்று வாங்கி பிரித்து பார்த்த வசந்தா, “தம்பி.. இது முகூர்த்த புடவை பிளவுஸ்ப்பா, தைக்கணுமே..” என்றவர், 
“இந்தா.. கொண்டு போய் மருமக கையில கொடுத்துட்டு வந்துரு..” என்றார். 
“நானா..?” என்று தயங்கிய அண்ணணின் தயக்கத்தில், 
“இங்க கொடுங்கம்மா, வாண்ணா போலாம்..” என்று அண்ணனின் கையை பிடித்து இழுத்து கொண்டு கார் பார்க்கிங் வந்தாள் மதுமித்ரா. அங்கு யாரோ இருவர் ப்ரேமிடமும், சண்முகத்திடமும் பேசிக்கொண்டிருக்க, திவ்யாவும், வைஜெயந்தியும் காரில் அமர்ந்திருந்தனர். 
“சரி..” என்று ஆண்களை  கடந்து காருக்கு செல்லலாம் என்று  மதுவும், ரவியும் முன்னுக்கு வந்தனர். அப்போது, 
“சார்.. உங்களுக்கு தெரியாதது இல்லை, இனியும்  அந்த கடையை நீங்க தொடர்ந்து நடத்துறது ரொம்ப கஷ்டம், வர ஒன்னு ரெண்டு கஸ்டமரை வச்சுக்கிட்டு என்ன பெருசா சம்பாதிச்சிற முடியும், நீங்க மாசாமாசம் கட்டுற வட்டிக்கு  கூட கட்டுபடியாகாது..”
“ அப்படியும் ஏன் அதை விடாம பிடிச்சிட்டு தொங்கணும், பேசாம வித்துட்டு போயிடுங்க சார், ஏற்கனவே நீங்க அடமானம் போட்டிருக்கிற சொத்து எல்லாம் கண்டிப்பா உங்களால மீட்க முடியாது..”
“மிச்சமிருக்கிற சொத்தையாவது  காப்பாத்திக்கோங்க.. இல்லை கடைசியில ஒன்னுமில்லாமதான் நிக்கணும்..” என்று மாற்றி மாற்றி இருவரும் சற்று அதிகாரத்துடனே சண்முகத்திடம் சொல்லி கொண்டிருக்க, மதுவும், ரவியும் மேற்கொண்டு முன்னேறாமல் அதிர்ந்து நின்றுவிட்டனர். 
மது வேகமாக ப்ரேமை பார்க்க, கோவத்தில் செந்தணலாக கொதித்து கொண்டிருந்தவனின் கையை  கையை சண்முகம் இறுக்கி பிடித்திருப்பது தெரிந்தது. 
“பார்த்து செய்ங்க சார்.. சீக்கிரம் நல்லா முடிவா சொல்லுங்க..” என்று இருவரும் கிளம்பிவிட, ப்ரேம்.. தந்தையின் கையிலிருந்த தன் கையை வலுவாக உதறினான். 
“ப்பா.. என்ன இது எல்லாம்..? யார்  அவங்க..?” என்று ஆத்திரத்தோடு கேட்டான். 
“அது.. ப்ரேம்.. அது.. அவங்ககிட்ட தான் நாம வட்டிக்கு காசு வாங்கியிருக்கோம்..” 
“என்ன..? சரி இருக்கட்டும் அதுக்காக அவங்க என்ன இப்படி பேசுறாங்க..?  நம்ம கடையை விக்க சொல்ல அவங்க யாரு..? என்ன தைரியம்..?”என்று கொதித்தான். 
“இல்லைப்பா.. நாம கொஞ்ச மாசமா வட்டி கொடுக்கல, அதுதான்..” என்று திணறியபடி மகனை பார்த்தவரின் பார்வை அவர்களுக்கு பின்னால் நின்றிருந்த மது,  ரவி மேல்பட, முகம் கறுத்து போனது. 
அவரின் பார்வையை தொடர்ந்து தானும் திரும்பி பார்த்தவனுக்கு, மதுவும்,  ரவியும் சங்கடத்துடன் நிற்பதிலே அவர்கள் முன்னமே வந்துவிட்டார்கள் என்று புரிய, “வாங்க..” என்று அவர்களை தங்களின் அருகில் அழைத்தான். 
அண்ணனும், தங்கையும் தடுமாற்றத்துடன் அவர்களின் அருகில் வந்தவர்கள், “பிளவுஸ்.. திவ்யா.. முகூர்த்த பிளவுஸ்.. கொடுக்க வந்தோம்..” என்றாள் மதுமித்ரா. 
“ஓஹ்..” என்றவன், அவளின் கையில் இருந்த பார்சலை தானே வாங்கி கொண்டான். 
“சரி.. நாங்க கிளம்புறோம்..” என்று சண்முகத்தின் நிலையை உணர்ந்த  ரவி சொல்ல, மதுவும் தலையசைப்புடன் கிளம்பிவிட்டாள். 
“ப்பா.. சரிவிடுங்க, பார்த்துக்கலாம்..” என்று அப்பாவை சமாதானம் செய்து அழைத்து சென்றவனுக்கு தொடர்ந்த நாட்கள் எல்லாம் கல்யாணவேலை இழுத்து கொண்டது. சண்முகம் இருக்கும் நிலையில் அவரால் பார்க்க முடியாது என்று புரிந்து எல்லாமே தானே பார்த்து கொண்டான்.
திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில்  இரு குடும்பத்தாரும் கடைசி கட்ட திருமண வேலைகளில் முழு மூச்சாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். ப்ரேம்.. இரு வாரம் விடுமுறை எடுத்து கொண்டு தங்கையின் திருமண ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருந்தான். 
“திவ்யா.. உனக்கு இன்னும் எதாவது வாங்கணுமா..?” என்று தங்கையிடம் கேட்டு கொண்டிருந்தான். 
“இல்லைண்ணா… எல்லாம் வாங்கிட்டேன்..” என்றவளிடம், 
“இன்னொரு முறை நல்லா பார்த்துக்கோ திவ்யா, அப்பறம் கடைசி நேரத்துல  பின் வாங்கல, லிப்ஸ்டிக்  வாங்கலன்னு நிக்க கூடாது..” என்று கண்டிப்புடன் சொன்னான். 
“இல்லைண்ணா.. அதெல்லாம் பியூட்டி பார்லர் அக்காவே கொண்டு வந்துடுவாங்க..” என, 
“என்ன..? எதுக்கு அவங்க எல்லாம், நீயும், அம்மாவுமே பண்ணுங்களேன், நேச்சுரலா இல்லாம, ஆர்டிபிஷியல் இருக்கணுமா என்ன..?” என்று கேட்ட அண்ணனை கிண்டலாக பார்த்த தங்கை, 
“ண்ணா.. நீ எல்லாம் தேறமாட்ட, இதெல்லாம் உன் வருங்கால பொண்டாட்டிகிட்ட வச்சிக்கோ, என்னை விடு..”என, ப்ரேமின் முகத்தில் தானாகவே ஒரு சிரிப்பு. 
“அவ எல்லாம் மேக்கப் போட்டுட்டாலும்..” என்று மதுவை சிரிப்பாக எண்ணினான். அவளுக்கும் இவனை போல் மேக்கப் என்றாலே அலர்ஜி, 
“ண்ணா.. அப்பறம் இந்த மெகந்தி போடறவங்க எப்போ வருவாங்க..?” என்று அண்ணனின் முகத்தை வைத்தே அவனின் எண்ணத்தின் நாயகியை கண்டு கொண்டவள் கடுப்புடன் பேச்சை மாற்றினாள். 
“ஆஹ்ன்.. அவங்களா..? ஈவினிங் வந்துடுவாங்க..”  என்று சொல்லி கொண்டிருந்தவனை “ப்ரேம்.. ப்ரேம்..” என்ற தாயின் கத்தலில் அவர்களின் அறையை நோக்கி ஓடினான். 
அங்கு சண்முகம் நெஞ்சை பிடித்து சரிந்து கொண்டிருக்க, வைஜெயந்தி அவரை தாங்கி பிடித்தபடி கத்தி கொண்டிருந்தார். 
“ப்பா.. ப்பா.. என்ன ஆச்சு..? திவ்யா.. திவ்யா கார்.. கார் சாவியை எடு.. ம்மா.. அப்பாவை பிடி, கேட்டை திற..” என்று அடுத்த பத்து நிமிடத்தில் சண்முகத்தை ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தனர். அடுத்த ஒருமணி நேரம் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் கழிய, வெளியே வந்த மருத்துவரை பதட்டத்துடன் அணுகினர். 
“பர்ஸ்ட் அட்டேக்..” என்று ஒரே வார்த்தையில் பதில் அளிக்க, குடும்பத்தார் கலங்கி தான் போனர். 
“தம்பி..” என்று வந்த வடிவேலுவிடமும், அவரின் குடும்பத்தாரிடமும் அவரின் உடல் நிலை பற்றி சொல்லப்பட்டது. அடுத்த ஒரு பொழுது முழுவதும் சண்முகம் கண்விழிப்பதற்காக  இரு குடும்பத்தாரும் மருத்துவமனையிலே காத்திருந்தனர். 
மது  இறுகி போய் அமர்ந்திருந்த ப்ரேமின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். முதல் சில நொடிகள் அவனின் அருகில் செல்ல தயங்கியவள், பின் தன்னை கட்டுப்படுத்த முடியாதவளாக வடிவேலு இருப்பதையும் பொருட்படுத்தாது அவனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் எதுவும் பேசாமல் தான். 
அவனும் அவளை திரும்பி பார்த்ததோடு சரி வேறெதுவும் பேசவில்லை. அதில் வடிவேலுவிற்கு லேசாக திக்கென்று இருந்தாலும், மகளின் மேல் கொண்ட அளவிடமுடியா நம்பிக்கையில் அமைதியாகி விட்டார். 
எல்லோரையும் பயப்படுத்திவிட்டு கண்விழித்த சண்முகத்தை ஒவ்வொருவராக சென்று நலம் விசாரித்து பார்த்துவிட்டு வந்தனர். இறுதியாக சென்ற வடிவேலு, 
“சம்மந்தி.. இப்போ பரவாயில்லையா..?” என்று பொதுவாக நலம் விசாரித்தவர், பின் தயங்கியபடி, “நீங்க இப்படி இருக்கிற சூழ்நிலையில  கல்யாணம் எப்படி சம்மந்தி..?” என்று யோசிக்க, சண்முகம் மனைவியின் மூலம் பிரேமை வரவைத்தார். வந்தவனோ, நொடியும் யோசிக்காமல், 
“கல்யாணம் முடிவெடுத்தது போல நடக்கட்டும்.. நான் பார்த்துகிறேன்..” என்றுவிட்டான். 
“சரி தம்பி.. ஆனா கிராண்டா இல்லாம எதாவது கோயில்ல வச்சுக்கலாமா..?” என்று சண்முகத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அக்கறையுடன் தான் கேட்டார். அதை சரியாக புரிந்து கொண்ட ப்ரேம்.. 
“இருக்கட்டும், அப்பா சரியாகிவிடுவார், பார்த்துக்கலாம்..” என்று எப்போதும் போல் சுருக்கமாகவே முடித்துவிட்டான். அதுபோலே  திருமணம் முடியும் வரை காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றினான். 
எந்த ஒரு குறையும் இருந்துவிட கூடாது என்பதில் மிக தீவிரமாக இருந்தவன், சிறு வேலை முதல் பெரு வேலைகள் வரை கவனித்து பொறுப்பாக செய்தான். அதே சமயத்தில் துவண்டு போய் கிடந்த தன் குடும்பத்தையும் சமாளித்து தேற்றி மண்டபத்துக்கும் அழைத்து வந்துவிட்டான். 
அவர்களின் இக்கட்டான நிலை ஒரு சதவீதம் கூட தெரியாத அளவு நகையும், சீரும் செய்து எல்லோரையும் அசத்திவிட்டான். அவர்களின் பக்கம் நிச்சயதார்த்த செலவு தான் மணமகன் வீட்டார் செய்ய வேண்டும் என்பதால் வடிவேலு அதை செய்து முடித்திருக்க, கல்யாண செலவு மணப்பெண் வீட்டார்   பக்கமானது. 
வடிவேலு கூட ப்ரேமின் நிலையை புரிந்து பாதி செலவை தான் ஏற்று கொள்வதாக சொல்ல, அவரை ஒரு பார்வை பார்த்தவன், “நாங்களே பார்த்துகிறோம்..” என்று முடித்துவிட்டான். 
“எங்க பொண்ணு கல்யாண செலவு கூட  செய்ய முடியாத அளவுக்கா நாங்க இருக்கோம்..?” என்று வைஜெயந்தி  கோபத்துடன் வடிவேலுவை திட்டி கொண்டிருக்க, 
“ம்மா.. தேவை  இல்லாமல் எதுவும் பேசக்கூடாது, அவர் அக்கரையில் தான் கேட்டாரு..” என்று அவரின் வாயை அடைத்துவிட்டான். இப்படியாக  எல்லாம் அவன் கட்டுபாட்டில் இருந்தாலும், இருவர் மட்டும் அவனின் கட்டுபாட்டில் இல்லாமல் போனார்கள்.  
அது மதுமித்ராவும், ரவியும்  தான். இருவருமே அவன் மறுத்தும் அவனின் உதவிக்கு  வந்து நின்றனர்.  மது   மண்டப அலங்காரத்தை தன் கையில் எடுத்திக்கொள்ள,  ரவி கேட்டரிங்கை தன் கையில் எடுத்து கொண்டான். 
“நீங்க போங்க.. என்னால செய்ய முடியும்..” என்று விறைப்பாக சொன்னவனிடம், 
“ஏன் நான் என் கல்யாண வேலையை செய்ய கூடாதா..?” என்று ரவி சொல்லி சென்றுவிட, ப்ரேம் மதுவை பார்த்தான்.  அவளோ கெத்தாக முகத்தை தூக்கி வைத்தவள், 
“எங்க அண்ணன் கல்யாண வேலையை அவரோட ஒரே தங்கச்சி நான் செய்யலைன்னா எப்படி..?” என்று கேட்டாள். 
“இதுதான் காரணமா..?”  என்று  ப்ரேம் நிதானமாக கேட்டான். 
“இல்லை தான், நான் என்னோட உண்மையான காரணத்தை சொன்னா, போடின்னு.. நீங்க என்னை கையை பிடிச்சு வெளியே இல்லை கொண்டு போய் விட்டுடுவீங்க..” என்று சொல்ல, 
“செய்வேன் தான்..” என்று ப்ரேமும் அடுத்த நொடியே ஒத்துக்கொண்டான். அவனுக்கு தெரியும் அவள் அவனுக்காக மட்டும் தான் இதையெல்லாம் செய்கிறாள் என்று.. ஆனால் அதையே அவள் வாய் வழியாக சொன்னால் தன்னால் ஏற்று கொள்ள முடியாது என்று புரிய, அதை ஒத்துக்கொண்டும் விட்டான்.  
மறுநாள் திருமணம் எனும் நிலையில்  முதல் நாள் காலையே டாக்டரிடம் கேட்டுக்கொண்டு சண்முகத்தை வீட்டிற்கு கூட்டி கொண்டு வந்துவிட்டனர். அன்று மாலை ரவிக்கு  மாப்பிள்ளை அழைப்பு முடிந்து, திவ்யாவிற்கும் பெண் அழைப்பு முடிந்து இருவரும்  ரிசப்ஷனுக்காக அலங்காரம் செய்யபட்டு மணமேடையில் நிற்க வைக்க பட்டனர். 
இருபக்க உறவுகளும், நண்பர்களும் என முதல் சில மணிநேரங்கள் நெருக்கடியாக சென்றது. சண்முகத்திற்கு திருமண அலைச்சல் என்று எல்லோரிடமும் சொல்லபட்டு அவர் ஒரே இடத்தில் ஓய்வாக அமரவைக்கபட்டார். 
திருமணத்திற்கு வந்திருந்த எல்லோருக்கும் அவலானது “மதுமித்ரா.. ப்ரேமின் கல்யாண முறிவு தான்..!!!”  எல்லோரும் பார்வையும் இருவரின்  மேலே நிலைத்து நிற்க, அதை கவனித்து கொள்ளும் நிலையில் இருவருமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 
ப்ரேம்.. தன் உறவுக்கார இளைஞர், நண்பர்கள்  உதவியுடன் நிற்க நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருக்க, மது மணமக்களுடன்  மணமேடையில் நிற்கவைக்கபட்டாள்.
அவன் பக்க உறவினர், நண்பர்களுடன் போட்டோ எடுக்க, அறிமுகம் செய்துவைக்க ப்ரேம் மேடையேறி, இறங்கும் போதெல்லாம் இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவரை தொட்டு மீளாமல் இல்லை. ஆனால் காதலாக இல்லாமல் கோவத்தோடும், மன்னிப்போடும் தான். 
இன்று இவர்கள் இருவருக்குமே இப்படியான வைபோகம் நிகழும் நாள் தான், அதை மாற்றிய அப்பாவையும், மகளையும் பார்வையாலே எரித்து  கொண்டிருந்த ப்ரேமை  மது மன்னிப்பாக பார்த்து கொண்டிருந்தாள். 
வடிவேலுவுக்கும் அவனின் முறைப்பு புரியாமல் இல்லை, அதனாலே அவன் இருக்கும் பக்கம் கூட செல்லாமல் சுற்றி கொண்டிருந்தார் மனிதர். 
“தான் பேசப்போய் ஏதாவது ஏடாகூடமாக பேசிவைத்து விட்டாள் என்ன செய்ய..? ஏற்கனவே எல்லோரும் இவங்களை தான் பார்க்கிறாங்க, தேவை இல்லாத வம்பு எதுக்கு..?  முடிஞ்சது.. முடிஞ்சதாகவே இருக்கட்டும்..” என்று மனிதர் விவரமாக ஒதுங்கி கொண்டார். 
இப்படியாக ரிசப்ஷனும் நல்லபடியாக முடியும் நேரம் குடும்பத்தார் மட்டும் மணமக்களுடன் போட்டோ எடுத்து கொண்டிருக்க, ப்ரேம்.. மிகவும் சாதாரணமாக மதுவின் பக்கத்தில் நின்று இரண்டு மூன்று போட்டோ எடுத்து கொண்டான். 
வடிவேலு மட்டுமில்லாமல் மற்றவர்களும் இதை கவனித்தாலும் ப்ரேம் யாரையும் பொருட்படுத்தாமல் அவளுடனே நின்று போட்டோ எடுத்து கொள்ள,  வடிவேலுவுக்கு தான் தலையிடியாக இருந்தது. 
“நானே தேவை இல்லாத பேச்சு வேணாம்ன்னு தானே ஒதுங்கி இருந்தேன், ஆனா இந்த தம்பி இப்படி எல்லாத்தையும் ஒன்னுமில்லாம செஞ்சுட்டாரே..” என்று அவனை முதல் முறையாக கோபத்துடன் பார்த்தார். தந்தையின் கோபப்பார்வையை கண்டு கொண்ட மதுமித்ரா, 
“போதும்.. ப்ளீஸ்..” என்று  பக்கத்தில் நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த ப்ரேமிடம் சிறிது கெஞ்சலாகவே கேட்டாள். 
“ஏன் போதும்..?” என்று அவளை திரும்பி பார்த்து உரிமையாக முறைத்து கேட்க, மதுவிற்கு மிகவும் சங்கடமாகி போனது. 
எல்லோரின் ஆராய்ச்சி பார்வை, வடிவேலுவின் முறைப்பு, ப்ரேமின் நியாயமான கோவம் என என்ன செய்வதென்று தெரியாமல் திணறி  தடுமாறியவளின் நிலையை புரிந்து மூச்சை இழுத்து  விட்டான். 
“நீ ஒவ்வொரு முறையும் என்னை  இப்படி கட்டுப்படுத்திட்டே இருக்க முடியாது, பார்த்துக்கோ..!!?” என்று சீறியவன், அங்கிருந்து சென்றுவிட, அதுவும் மதுவிற்கு வருத்தத்தை தான் கொடுத்தது.
எல்லாம் முடிந்து மணமக்களுடன் உணவுண்ண சென்ற மதுவின் பார்வை ப்ரேமை தேட, “அவரை சாப்பிட கூப்பிட ஆள் அனுப்பியிருக்கேன்  மதுமா..” என்ற வசந்தாவின் வார்த்தையில் லேசான பயத்துடன் அம்மாவை பார்த்தாள். 
“அப்படி பார்க்காத மது, உங்க மேல எந்த தப்பும் இல்லை, எல்லாம் நாங்க தான்..” என்று வேதனையோடு சொன்னவர், மகளின் கையை ஆறுதலாக பற்றி கொண்டார். 
“மதுமா.. அந்த மனுஷன் மட்டும் குறுக்கால வரலைன்னா இன்னிக்கு உனக்கும், அந்த தம்பிக்கும் கூட இப்படி எல்லாம் நடந்திருக்கும், எல்லாம் பாழாபோச்சு, உன்னை இப்படி உள்ளுக்குள்ள அழவச்சுட்டு அந்த மனுஷன் மாப்பிள்ளை தம்பியை முறைச்சா எல்லாம் சரியா போயிருமா..?”
“இவர் செஞ்ச வேலைக்கு அந்த தம்பியா இருக்க போய் எந்த பிரச்சனையும் செய்யாம அமைதியா இருக்கு, அதை கூட புரிஞ்ச்சுக்காம முறைப்பு என்ன வேண்டிக்கிடக்கு..?” என்று கணவரை திட்டி கொண்டிருந்த அம்மாவின் புரிதலில் அவரை கலங்கிய கண்களுடன் பார்த்தாள். 
“ச்சு.. என்ன இது..?” என்று மகளின் கண்ணீரை கண்டு அதட்டியவரை எக்கி அணைத்து கொண்டவளிடம்,  
“நீ கவலைப்படாத மதுமா,  அம்மா எப்போவும் உங்க பக்கம் தான்டா..” என்று சொல்லவும், மது மகிழ்ச்சியுடன்  அவரின் கன்னத்தில் முத்தமிட்டாள். அதை பார்த்து கொண்டே உள்ளே சென்ற ப்ரேமை கவனித்துவிட்ட வசந்தா, 
“மது.. தம்பி உள்ளதான் சாப்பிட போகுது பாரு..” என்று தானும் மகளுடன் உள்ளே சென்று மணமக்களின் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். ப்ரேம்.. திவ்யாவின் பக்கத்தில் அமர்ந்திருக்க, அவனின் பக்கத்தில் இடம் கலியாக இருக்கவும் மது  டக்கென அவனின் பக்கத்திலே அமர்ந்துகொண்டாள்.
இலை போட்டு கேட்டரிங் ஆட்கள் பரிமாறி கொண்டே வர, ப்ரேம்.. எதையும் வாங்காமல் மூன்று இட்லியை மட்டும் வைத்து கொண்டு சாப்பிட ஆரம்பித்துவிட, மதுவிற்கு உணவு தொண்டையிலே நின்றது. 
“ஏன்.. ஏன் இப்படி..? ஸ்வீட் கூட எடுத்துக்கல..” என்று கேட்க, அவளை அவன் பார்த்த பார்வை சொன்னது கண்டிப்பாக நன்றாக வலிக்கும் படி கொடுக்கபோகிறான் என்று..!!

Advertisement