Advertisement

“என் பொண்ணு என்ன இவங்க வீட்டு வேலைக்காரியா..?” என்று ப்ரேமை எரித்து பார்க்க, அவனோ முகம் சிவக்க அமர்ந்திருந்தான். அவனுக்கும் வைஜெயந்தி இப்படி செய்வது மிகுந்த ஆத்திரத்தை கொடுத்ததோடு வடிவேலுவின் பார்வை வேறு அவனை மேலும் சீண்டியது. 
“ப்பா..” என்று ரவி ஏதோ கேட்டதற்கு கூட பதில் சொல்லாமல் மதுவையும், ப்ரேமையும் வைஜெயந்தியையுமே விடாமல் பார்த்து கொண்டிருக்க, அவரின் பார்வையில் ரவிக்கே குளிர் பிறந்தது. 
“என்னடா நடக்குது இங்க..?” என்ற ரவியின் பார்வை ப்ரேமிடம் செல்ல, அவனும் இறுகி போய் தான் அமர்ந்திருப்பது புரிய மேலும் கவலை கொண்ட ரவி, தந்தையுடனே இருந்து கொண்டான். 
“நீ என்ன இங்கேயே நின்னிட்டிருக்க, போ.. மதுவுக்கு எதாவது உதவி பண்ணு போ..” என்று மகனையும் கத்த,  ரவிக்கு என்ன செய்ய என்று முழிக்கும் நிலை. பெண்கள் செய்து கொண்டிருக்கும் சடங்கில் சென்று அவன் என்ன செய்ய..? என்று திகைத்தவன், எதுக்கு வம்பு என்று சற்று தள்ளியே நின்றுகொண்டான். 
“வாங்க.. மருமகளுக்கு சந்தனம் வைக்கணும்..”  என்று வசந்தா அழைக்க, மருமகளுக்கு வைர  வளையலை அணிவித்து முழுமனதாக ஆசீர்வதித்தார். 
அடுத்து சண்முகம் தம்பதி சென்று சந்தனம் வைத்து வர, ப்ரேம் மனைவியுடன் சென்றான். மது அவர்களின் சார்பாக தங்க வளையலை போட்டு சந்தனம்  வைக்க, 
“வைர வளையல் வாங்காம தங்கம் வாங்கியிருக்கிறா பாரு, என்ன அவ வீட்டு பணமா..? என் புருஷன், என் மகன் சம்பாத்தியம் தானே..?” என்று வைஜெயந்தி சுத்தமாகவே முணுமுணுக்க, பக்கத்திலே நின்றிருந்த வடிவேலுவுக்கும், ரவிக்கும், வசந்தாவிற்கும் கேட்டுவிட, வடிவேலுவின் முகம் கோவத்தில் ஜொலித்தது. 
“ப்பா.. ப்ளீஸ்ப்பா..  எதுவும்  பேசிடாதீங்க..” என்று ரவியும், 
“ஏங்க.. வேண்டாம்.. மருமக குழந்தை பெத்துக்க போறா, இந்த நேரத்துல பிரச்சனை எதுவும் வேண்டாம்..” என்று வசந்தாவும் கணவனின் கோவத்தில் பயந்து கெஞ்ச, வடிவேலு தன்னை கட்டுப்படுத்தி கொண்டு நின்றார்.
“என்ன ஆச்சு..? ஏன் இப்படி இருக்கீங்க..? என்று குமாருடன் நின்றிருந்த கணவனை சாப்பிட அழைத்து செல்ல வந்த மது, கணவனின் இறுக்கத்தில்  மெல்ல கேட்க, “எதுவும் இல்லை..” என்பது போல தலையாட்டியவன், அவளின் கையை அழுத்தமாக பற்றி கொண்டான். 
“சாப்பிட போகணுங்க..” என்ற மனைவியை பார்வையாலே அதட்டியவன், 
“கொஞ்ச நேரம் அமைதியா நில்லுடி..” என்று அவளின் கையை விடாமலே குமாரிடம் பேச, மது கணவனை புரியாமல் பார்த்தாள். 
“ப்ரேம்.. மது, குமார்  சாப்பிட வாங்க..” என்று ரவி வரவும், மூவரும் அவனோடு சாப்பிட செல்ல, இங்கு வீட்டின் உள்ளே எரிமலை வெடித்தது. 
“என்ன ஜெயா பொண்ணு வளைகாப்பு எல்லாம் சிறப்பா முடிஞ்சுடுச்சு..” என்று அவரின் உறவு பெண்மணி கனகா கேட்க, 
“ம்ம்..” என்று வைஜெயந்தி முகம் சுளித்து வெறுப்பாக முணுமுணுத்தார். 
“என்ன ஜெயா..? ஏன் இன்னும் சாப்பிடாமலே  உட்கார்ந்திருக்க..? எதுவும் பிரச்சனையா..?”  என்று வைஜெயந்தியின் கோவம் பார்த்து அந்த வம்பு கனகா தூண்டி துருவ, 
“என்ன செய்ய நான் வாங்கி வந்த வரம் அப்படி..?” என்று வைஜெயந்தி சொல்லவும், திவ்யா அம்மாவை புரியாமல் பார்த்தாள். 
“என்ன ஆச்சும்மா..? ஏன் இவ்வளவு கோவமா பேசுற..?” என்று அவளும் கேட்டாள். 
“பின்ன கோவப்படாம..? வைர வளையல் வாங்காம தங்க வளையல்  வாங்கியிருக்கா, என்ன அவ சம்பாத்தியமா..? என் வீட்டு சம்பாத்தியத்தில் வாங்க மனசு வருதா பாரு.. இங்கேயும் எல்லாம் அவளுக்கே வேணும். அங்க என் வீட்லயும் எல்லாம் அவளுக்கே வேணும்..” என்று ஆத்திரத்தில் பொரிய, திவ்யாவிற்கு அச்சம் உண்டானது.
“ம்மா.. இப்போ எதுவும் பேசாத, அமைதியா இரு.. ப்ளீஸ்..”  என்று கணவனுக்கும், மாமனாருக்கும் அஞ்சி சொல்ல, ஆத்திரத்தில் மதியிழந்த வைஜெயந்தி, 
“ஏன் பேச கூடாது அவங்க பொண்ணோட லட்சணம் அவங்களுக்கும் தெரியணும் இல்லை..” என்று வடிவேலு, வசந்தா இருப்பதை பார்த்து சத்தமாகவே பேசிகொண்டிருக்க  வடிவேலுவின் கட்டுப்படுத்தப்பட்ட கோவம் வெடிக்கும் நிலையில் சென்று நின்றது. 
“என்ன ஜெயா இப்படி சொல்ற..? உன் மருமக எல்லாம் நல்லாதானே செஞ்சா..?” என்று கனகா எதுவும் தெரியாமல் புறணி பேசுவது போல பேச, வைஜெயந்தி  தெரிந்தே பேசினார். 
“அப்படி செஞ்சா..? என் மகளுக்கு வைர வளையல் வாங்காம, தங்கத்துல இல்லை வாங்கியிருந்தா, என்ன அவ காசுலயா வாங்குறா..? எங்க சம்பாத்தியத்துல தானே வாங்குறா..? அதுக்கு கூட அவளுக்கு மனசு வராது..”
“என்ன செய்ய..? அவங்க வீட்ல எல்லாம் பணத்தை தானே பார்க்கிறாங்க.. எங்க பிஸ்னஸ் லாஸ்ல போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டு ஜாதகத்து மேல பழியை போட்டு கல்யாணத்தை நிறுத்திட்டாங்க, இப்போ எங்க பிஸ்னஸ் நல்லா போகவும், திரும்பவும் வந்து ஒட்டிக்கிட்டாங்க..” என்று சொல்லிவிட, வடிவேலு வெடித்தே விட்டார். 
“போதும். நிறுத்துங்கம்மா.. இதுக்கு மேல ஒரு வார்த்தை வெளியே வந்துச்சு நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..” என்று கத்த, வைஜெயந்தி அசராமல் மேலும் சிலிர்த்து நின்றார். 
“ஏன் நான் உண்மையைதானே சொன்னேன்..? நீங்க அப்படித்தானே..?” என்று  நக்கலாக சொல்ல, உள்ளே வந்த சண்முகத்திற்கு ஏதோ சரியில்லாததாக தோன்ற, 
“ஜெயா.. சம்பந்திகிட்ட ஏன் இப்படி பேசிட்டிருக்க..?” என்று அதட்டினார். 
“நான் பேசுறது மட்டும் தான் உங்களுக்கு தெரியுதா..? அவர் என்னை மிரட்டுறது உங்களுக்கு தெரியலையா..?” என்று கண்வனிடமும் பாய்ந்தார். 
“இங்க பாருங்க சம்மந்தி.. தயவு செஞ்சு உங்க வீட்டம்மாவை அமைதியா இருக்க சொல்லுங்க..” என்று வடிவேலு முயன்று தன் கோவத்தை அடக்கி சண்முகத்திடம் சொன்னார். 
“நான் ஏன் அமைதியா இருக்கணும், உங்க சுயரூபம் என்னன்னு மத்தவங்களுக்கும் தெரியணும் இல்லை..” என்று வைஜெயந்தி விடாமல் பேச, திவ்யாவிற்கு தலையே சுழன்றது. 
“இவங்க நம்மளை நிரந்தரமா கூட்டிட்டு போக முடிவு பண்ணிட்டாங்க..” என்று அம்மாவை பயத்துடன் பார்த்தாள். 
வைஜெயந்திக்கு அந்த நொடி எதுவும் தெரியவில்லை, மகளின் வாழ்க்கை, மகனின் வாழ்க்கை, எதுவும் தெரியவில்லை, அவரின் கண் முன் நின்றது எல்லாம் மது மேல் அவர் கொண்ட வெறுப்பு மட்டுமே. அதனாலே கணவனின் பேச்சையும் மீறி பேசி கொண்டிருந்தார். 
“ஏங்க பசிக்கலயா..?” என்று பந்தியில் அமர்ந்து சும்மாவே  கொரித்து கொண்டிருந்த கணவனிடம் மது கேட்க, 
“இல்லை..” என்ற ப்ரேமின் மனநிலை புரியாமல் கவலை கொண்ட மது, டேபிளுக்கு அடியில் சென்று அவனின் கால் மேல் கை வைக்க, ப்ரேமும் அவளின் கையை எடுத்து தன் கையோடு கோர்த்து கொண்டான். 
“நான் வேணும்ன்னா ஊட்டிவிடவா..?” என்று மது லேசான சிரிப்புடன் கேட்க, 
“ஊட்டேன்..” என்று கணவன் வாயை திறந்துவிட்டான். 
“என்ன..? போங்க.. நான் சும்மா கேட்டேன்..” என்று மது அலறி கொண்டு ஜகா வாங்க, ப்ரேம் திறந்த வாயை மூடாமல் அவளையே தான் பார்த்தான். 
“அச்சோ.. எல்லோரும் இருக்காங்க.. வேண்டாம்..”  என்ற மதுவிடம் 
“எது இந்த அஞ்சு பேரா..? பரவாயில்லை பார்த்தா பார்த்துட்டு போறாங்க.. நீ ஊட்டு..” என்று ப்ரேம் வம்பிழுக்க, 
“என்னடா நடக்குது இங்க..?” என்று ரவியும், குமாரும் அவர்களின் பக்கத்தில் அமர முடியாமல் நெளிய ஆரம்பித்தனர். 
“ப்ளீஸ்..” என்று மது அவனின் கையை அழுத்தி கண்ணை சுருக்கி பார்க்க, 
“பொழைச்சு போ.. ஆனா வீட்டுக்கு போய் கண்டிப்பா ஊட்டணும் சொல்லிட்டேன்..” என்று ப்ரேம் கண்ணடிப்புடன் சொல்ல, மது அவனை செல்லமாக முறைத்தாள். 
“ரவி.. ரவி.. மது..” என்று வடிவேலுவின் கோவத்தில் பயந்து போய் பிள்ளைகளை அழைத்து செல்ல வந்த வசந்தா ப்ரேமை பார்க்கவும் மேலும் அச்சம் கொண்டார். 
“ஐயோ.. இவர் ஏதாவது பேசிட்டா..?” என்று ப்ரேமையே பார்த்தார், 
“என்ன ஆச்சும்மா..?” என்று ரவியும், மதுவும் அம்மாவின் பதட்டத்தில் எழுந்து வந்துவிட, 
“ப்பா.. சம்மந்தி..  ஏதேதோ பேசுறாங்க..” என்று ப்ரேமிற்கு கேட்க கூடாதென்று மெதுவாக சொல்ல, புரியாத ரவி, 
“சம்மந்தியா..? அத்தையா..? அவங்க என்ன பேசுறாங்க..?” என்று சத்தமாகவே கேட்டுவிட,  நொடியில் புரிந்து கொண்ட ப்ரேம் வேக எட்டுகளுடன் உள்ளே செல்ல ஆரம்பிக்க, மூவரும் அவனை பின் தொடர்ந்து ஓடினர்
“சம்மந்தி.. அவங்க வம்புக்குன்னே தேவை இல்லாம பேசிட்டிருக்காங்க வாயை மூட சொல்லுங்க..” என்ற வடிவேலுவுக்கு மகளின் வாழ்க்கை கண் முன் தெரிய, நூலளவு தொங்கி கொண்டிருந்த பொறுமையை வலுவாக இழுத்து பிடித்து பேசினார். 
“நான் பேசுவீங்க..? உண்மையை சொன்னா குத்துதா..? நீங்களும், உங்க மகளும் அப்படித்தானே..? பிசினஸ் லாஸ் ஆனது தெரிஞ்சு ஓடிட்டு நல்லா போகவும் மறுப்படியும் வந்து ஒட்டிக்கிறது..” என்று அவர் எகத்தாளமாக சொன்ன நொடி உள்ளே நுழைந்த ப்ரேமும், மதுவும், ரவியும், வசந்தாவும் அதிர்ந்து சிலையாக நின்று விட்டனர். 
“போதும்.. நிறுத்தும்மா..” என்ற வடிவேலுவின் உச்சகட்ட கர்ஜனை அதிர்ந்தவர்களுக்கு உயிர் கொடுக்க, பார்வை அவரின் மேல் பதிந்தது. நடப்பதை புரிந்து கொண்ட மது அவசரமாக ஓடி சென்று தந்தையின் கை பிடிக்க, உதறி தள்ளியவர், 
“என்னமோ  பிஸ்னஸ் ஓடுது ஓடுதுன்னு பெருசா பேசுற, யாரால.. என் பொண்ணால.. அன்னிக்கு டீலருக்கு  கட்ட முன்பணம் கூட இல்லாம நின்ன உங்களுக்கு அவ தான் காசு கொடுத்தா, அதுவும் அவ சொந்த சம்பாத்தியத்தை கொடுத்தா..”
“அது மட்டுமா நைட்டும் பகலும் முழிச்சு டிசைன் வரைஞ்சு கொடுத்து உங்க கடையை தூக்கி நிறுத்தியிருக்கா, அவ உழைப்புல தான் உங்க கடை ஓடோ ஓடுன்னு ஓடுது, உங்க புருஷன், உங்க மகன் உழைப்புல இல்லை.. அவ உழைப்புலே உட்கார்ந்துகிட்டு அவளையே பேசுவீங்களா..?”
“அன்னிக்கு  உங்க மகன்  எல்லாத்தையும் அம்போன்னு  விட்டுட்டு வெளிநாடு போனப்போ என்  மகத்தான எல்லாம் செஞ்சா.. அவ உழைப்பில தான் நீங்க இன்னிக்கு இவ்வளவு கௌரமா திமிரா பேசிட்டிருக்கீங்க.. உங்க மகன், உங்க புருஷன் சம்பாத்தியதுல இல்லை, தெரிஞ்சுக்கோங்க..”  என்று வடிவேலு மொத்தத்தையும் இறக்கி வைத்துவிட, மதுவின் உறைந்த பார்வை கணவனை விட்டு இம்மியும் அகலவில்லை. 
அவனின் விரைத்த உடல், துடித்த தோள்கள், தன்னையே பார்வையாலே எரித்து கொண்டிருந்த கண்கள் என தன்னை நெருங்கி கொண்டிருந்த  ப்ரேமை மது எல்லையில்லா பயத்தில் உடல் நடுங்க பார்த்தாள். 
“இவங்க சொன்னதெல்லாம் உண்மையா..?” என்று அவளை மிக நெருங்கி நின்று கூர்மையாக கேட்ட கணவனுக்கு பதில் சொல்ல முடியாமல் வேர்த்து, தொண்டை அடைக்க, கைகளை உள்ளங்கையில் இறுக்கி நின்ற மதுவிடம்
“சொல்லு..” என்று பெரிதாக கர்ஜிக்க, மதுவின் உடல் பயத்தில் தூக்கி போட்டது. 
“என்ன..? மதுவை ஏன் அதட்டுறீங்க..?” என்று வடிவேலு மகளை நெருங்க, 
“தள்ளி போங்க.. இது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் உள்ளது..” என்று அவரையும் பார்த்து கத்தியவன், 
“சொல்லுடி.. உண்மையா..?” என்று கத்த, மதுவின் தலை ஆமாம் என்று ஆட்டிய நொடி ப்ரேமின் கை இடியென அவளின் கன்னத்தில் இறங்கியது. 
“ஏய்.. என் பொண்ணு மேலயா கை வச்ச..?” என்று வடிவேலு ஆத்திரத்தில் ப்ரேமின் சட்டையை பிடித்துவிட, மதுவின் உடல் அவள் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்தது.

Advertisement