Advertisement

அத்தியாயம் 4

அறிவழகியின் முகத்தில் தெரிந்த பாவத்தைப்  பார்த்தவனுக்கு, தான் அவளை, தனது வீட்டிற்கு கூப்பிட்டது பிடிக்கவில்லை என்று புரிந்தது. எனவே, பேச்சை மாற்றும் விதமாக, “சரி நீ என்ன பண்ற? பேங்க் எக்ஸாம் பாஸ் பண்ணி, ஹைதராபாத் போஸ்டிங் ஆன வரைக்கும் தெரியும். ரெண்டு மூணு வாட்டி, உன் ஆபிஸ்க்கு நான் போன் பண்ணினேன், ஞாபகம் இருக்கா?”

‘ஹூம் .. அதனாலதானே நான் அந்த வேலைய விட்டே ஓடவேண்டியதா போச்சு’ என்று மனதுக்குள் நினைத்தவள், “ம்ம்..” என்று தலையசைத்தாள்.

அன்பரசனது இலகுவான முகம் தொலைந்திருந்தது, அமர்ந்தவாக்கில் சற்றே பின்னால் சரிந்து அங்கிருந்த மரத்தில்  சாய்ந்து கால் நீட்டிக் கொண்டான். ஒரு வித கனமான குரலுடன், “எனக்கு ஸ்விஸ் போறதுக்கு சான்ஸ் வந்தது, அங்க ஒரு வருஷம் ட்ரைனிங், அப்பறம் இங்க இந்தியால.. ஸ்விஸ் கம்பெனியோட ஜெ.வி. கம்பெனில வேலைன்னு முடிவாச்சு. அத உன்கிட்ட சொல்லலாம்னு, பாங்க்-க்கு  போன் பண்ணினா, நீ இல்ல.”

வானத்தை நோக்கி இலக்கில்லாத பார்வையுடன் தொடர்ந்தான், “சரி லீவ் போல-ன்னு விட்டுட்டேன். அப்பறம் ஸ்விஸ் போயி ஒரு வாரத்துல கால் பண்ணினேன், அப்பயும் இல்லன்னு சொன்னாங்க, உங்க மேனேஜர்க்கு போன் செஞ்சு, வேற பிரான்ச் ட்ரான்ஸ்பர் ஆயிடுச்சான்னு கேட்டா… நீ வேலைய ரிஸைன் பண்ணிட்டதா சொன்னாங்க.”, இறுக்கமான குரலில் கூறினான். “ஹும்…  நான் ஸ்விஸ்-ல இருந்துகிட்டு என்ன பண்ண முடியும்?”.

“இல்ல. திடீர்னு நல்ல ஜாப் ஆஃபர் வந்தது, அதான்…”, அறிவழகி கம்மிய குரலில் பதிலுரைத்தாள். பொய்தான்… ஆனால், முழு பொய் இல்லை.

“அதுக்கு…? யாருக்கும் எந்த தகவலும் தராம….?”, ராக்கெட் வேகத்தில் வார்த்தைகள் வந்தது, அன்பரசனிடமிருந்து.

அறிவழகியை உணர்வற்ற பார்வை பார்த்தவன், இன்னமும் அவனது அன்றைய நினைவுகளில் இருந்து வெளி வராமல்…

“எல்லாரையும் விடு..  எங்கப்பா-க்கு கூட சொல்லாத….?”, கேள்வியை பாதியில் நிறுத்தியவன்…. முகம் கசங்கி…, “அன்னிக்கு ஹாஸ்பிடல் இன்சிடென்ட்க்கு அப்பறம்.. கோபாமாவாவது எங்கிட்ட ரெண்டு மூணு வார்த்தை பேசின மனுஷன், நீ போயிட்டேன்னு தெரிஞ்சப்பறம்…  பேசறது என்ன… என்பக்கம் பாக்கறது கூட இல்ல”, விரக்தியுடன்  வந்த அவனது வார்த்தைகள், அறிவழகியை குத்தீட்டியாக தைத்தது. அன்று மருத்துவமனையில் அவர் ஒருவர்தான் இவளுக்கு துணையாக நின்றார், என்பது நினைவுக்கு வர, மனம் வருந்தினாள். ஆனால், போகச் சொல்லி விரட்டிய அவள் சூழ்நிலை…?

கண்களில் கண்ணீர் வரவா என்று கேட்க.., இமை சிமிட்டி அடக்கிய அறிவழகி, மெளனமாக தலை குனிந்து அக்ஷியை பார்த்துக் கொண்டிருந்தாலே ஒழிய நிமிர்ந்தாள் இல்லை. அவள் வருத்தப்படுவதைப் பார்த்தவன், “ஸாரி.. உன்னைக் காயப்படுத்தனும்-னு நான் இதை சொல்லல.”

“இப்போ இங்க உன்னைப் பாத்ததும்..”, ஆழ மூச்செடுத்து விட்டவன்…., “அப்பாடா-ன்னு.. ஒரு பெரிய ரிலீஃப். அதுவும் அக்ஷியோட.. “, அறிவழகியின் இடையோடு கையிட்டு கட்டிக்கொண்டு தூங்கும் அக்ஷியைப் பார்த்து மெல்லிய கீற்றாய் சிரித்து, “வீட்டுக்கு போனதும் அப்பாட்ட, நீ நல்லா செட்டில் ஆயிட்டே-ன்னு சொல்லுவேன். சொன்னா ஒருவேளை நல்லா பேசுவாரா என்னவோ?”, என்று முறுவலித்தான், இல்லை உள்ளே வலித்ததால், முறுவலிப்பதுபோல் பாவித்தான்,

அன்பரசன் பேசிக் கொண்டிருக்கும்போது அறிவழகியின் அலைபேசி அழைக்க… அதில்.. அக்ஷியின் தாத்தா..,”ஹலோ, சொல்லுங்க மாமா”, என்றாள்.

“இங்க பூஜைல்லாம் ஆயிடுத்து, பூர்ணாஹுதி பண்ணப்போறாங்க. ஒரு பத்து இருபது நிமிஷத்துல வர முடியுமா?”

“தோ.. இப்போ வர்றோம்”, என்று கிளம்ப ஆயத்தமானவளை வெறுமையாய்  பார்த்திருந்தான், அன்பரசன். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த பத்து இலக்க எண்… இருந்தால் போதுமே? தொடர்பில் இருக்க முடியுமே? ஆனால்… இவள்?? வங்கி வேலையை விட்டவுடன் எல்லாவற்றையும் மாற்றிவிட்டாள். அலைபேசி எண், மின்னஞ்சல், தங்கும் விடுதி என்று.. தெரிந்த அனைத்து தொடர்பையும் இல்லாமல் செய்து…. காணாமல் போனாள். பெயரிலேயே அறிவைக் கொண்டுள்ளதாலோ என்னவோ… தடயமே இல்லாமல்.. தயக்கமே காட்டாமல்… காற்றாய் போனாள்.

அன்று அம்மா, ஸ்விஸ்-ல் இருந்தவனை அலைபேசியில் அழைத்து இந்த தகவலை சொல்லும்போது…., அப்பா, ‘அந்த பொண்ணு, தற்கொலை அது இதுன்னு பண்ணிக்கிச்சுன்னு தெரிஞ்சது… உன் பையங்கொடல உருவி மாலையா போட்டுடுவேன்’, இவன் காதில் விழும்படி உறுமியது மனதில் நிழலாடியது.

அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த அறிவழகி, “அக்ஷிமா.. தாத்தா கூப்பிடறாங்க.. எந்திரிடா”, உறங்கும் குழந்தையை எழுப்பி.. அன்பரசனையும் நிகழ்காலத்துக்கு இழுத்தாள்.

அக்ஷி விழித்துவிட…, “போகலாமா?”, என்றாள் அன்பரசனைப் பார்த்து.

“ம்ம்.. “, என்றபடி எழுந்து, விரிப்பை மடித்துவைத்தான். ட்ரைவரை கூப்பிட்டு காரை எடுக்கச் சொன்னான்.

இதோ என்பதுக்குள், அவர்கள் மடம் வந்துவிட, அறிவழகி அக்ஷியுடன் இறங்கி பைகளை எடுக்க, ஒன்றை அவளிடம் கொடுத்து, மற்றொன்றை அன்பரசன் எடுத்துக் கொண்டான். அவள் உள்ளே செல்ல.., டிரைவருக்கு நன்றி சொல்லி டிப்ஸ் கொடுத்து…, “பேக்கேஜ்-தானே?”, என்றான்.

எதிர்பாராத பண வரவால்.. முகம் மலர்ந்த ஓட்டுனர்,”ஆமா சார் நாலு நாள்”..

“சரி. நிதானமா பாத்து கூட்டிட்டு போங்க”

“கண்டிப்பா ஸார்….  நீங்க வரமாட்டிங்களா ஸார்?”, என்று கேட்டார்.

“இல்ல.. நான் வரல… மேல விஷ்ணு பாதம் பாக்க போற பிளான் இருக்கா?”, [ஸ்ரீவாரி பாதம் அல்லது விஷ்ணு பாதம் நாராயணகிரி மலை முகட்டில் உள்ளது, அங்குதான் விஷ்ணு தனது பாதத்தை முதலில் வைத்தார் என்பது ஐதீகம். மிக ரம்யமான இயற்கைக்கு காட்சிகள் அமைந்த இடம்]

“ஆமாங்க, நாளைக்கு பாபவிநாசம், சிலா தோரணம்,சக்ர தீர்த்தம், விஷ்ணு பாதம்… அங்கல்லாம் போனும்னு, பெரியவர் சொன்னாருங்க.”, என்று ட்ரைவர் சொல்ல..

அன்பரசன், “ம்ம்..”, என்று தலையசைத்து மடத்திற்கு செல்ல படியேறினான். அதற்குள் அக்ஷியும், அறிவழகியும்.. அவர்களுக்காக கொடுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று விட்டிருந்தனர்.

இவன் மடத்தின் வாயிலை அடையும்போது.., “…..இங்க கூட்டிட்டு வரீங்க? என்ன குலமோ? என்ன ஜாதியோ?, உங்க பேத்தியா போயிடுத்து.. அதனால குழந்தை வரலாம்.. கூடவே அது என்னத்துக்கு?”, என ஒருவர் கேட்பதும்…

“அது அப்படி எப்படி முகத்துக்கு நேரா சொல்றது ?.. நல்லா இருக்காது பாருங்க..”, என்று மற்றோருவர், கேள்வி கேட்டவரிடம் வெகுவாக தழைந்து பதில் அளித்தார். இருவரும் உரையாடியது கன்னடத்தில்.

அன்பரசனுக்கு, தென்னிந்தியா முழுவதும் அவனது தொழில் வியாபித்து இருந்ததால், பன்மொழிப் பரிச்சயம் உண்டு. அவர்கள் பேச்சிலிருந்து அறிவழகியை சாடுகிறார்கள் என்று புரிந்ததால்.. மெல்லிய கோபம் வந்தது. ‘அதென்ன முதுகுக்குப் பின்னால் பேசுவது?… ‘, என்று கூடவே ஒரு எண்ணமும் தலை தூக்கியது.

சப்தமாய் இருமி அவனது இருப்பை அறிவித்துக் கொண்டே, மடத்திற்குள் நுழைந்தான். அவர்களும் அரவம் கேட்டு சுதாரித்து விட்டிருந்தனர்.

உள்ளே நுழைந்தவன்… அந்த பெரிய மடத்தின் கூடத்தை கண்களால் துழாவி, பாதி கதவு திறந்திருந்த அறையிலிருந்து அக்ஷியின் குரல் வர.., அது இவர்களுடைத்தாகத்தான் இருக்கும் என்று அனுமானித்து, அங்கு சென்று அறை வாசலில் நின்று கதவைத் தட்டினான்.

நிமிர்ந்து எட்டிப் பார்த்த அறிவழகி,  அன்பரசன் வருவதை கண்டதும், சிறு முறுவலுடன் தலையசைத்து வாவென்று விளித்தாள். முகம் துலக்கி பொட்டு வைத்திருந்தாள், சின்னவளை உடைமாற்றி பூஜைக்கு தயார் செய்து கொண்டிருந்தாள். அன்பரசன் முகம் கடுகடுவென இருக்க, கேள்வியாய்ப் பார்த்தவள்..”என்னாச்சு?”, என்றாள்.

“அங்க ரொம்ப அலட்டலா பேசறானே யாரது? “, காட்டமாக கேட்க…

“ஷ்ஷூ..”, உதட்டில் விரலை வைத்து, “யாரு? கொஞ்சம் சிகப்பா குண்டா இருக்காரே? அவரா ?”, என கேட்டாள்.

“ம்ம் “,

“அது மாமாவோட சகலை.. கொஞ்சம் தடா புடா ன்னு பேசுவாரு”, என்றாள் கிசுகிசுப்பாக.

“அதுக்காக.. அந்தாள் ஏன் உன்ன பத்தி பேசணும்? குலம் ஜாதின்னு…?”, சிடுசிடுத்தான்.

“அது …. அவர் கொஞ்சம் அப்படித்தான்”, சங்கடமாக சொன்னாள்.

“அவர் மட்டும்தானா? இல்ல அந்த குடும்பமே…”

“சே.. சே.., மாமில்லாம் அப்படி இல்ல. ஆனா அக்ஷி தாத்தா-க்கு நான் கூட வர்றதுல இஷ்டமில்லை. அக்ஷி நான் இல்லாம இருக்க மாட்டா-ங்கிறதால சகிச்சுக்கறார்.”., என்றுவிட்டு தொடர்ந்தாள்.

“அக்ஷி அப்பா., ‘எனக்கு இந்த ஜாதி மதத்திலல்லாம் நம்பிக்கை கிடையாது, நாம இருக்கப் போற நாட்ல அது தேவையும் கிடையாது-ன்னு போல்டா சொல்லி… இவங்களை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.”, என்றாள்.

“ம்ப்ச். இவங்க பத்தி தெரிஞ்சும், இங்கே உன்ன தனியா அனுப்பி இருக்காரு?”,

“முத காரணம் லீவு கிடைக்கல. ரெண்டாவது.. தரு….”

“இன்னும் என்னம்மா பண்றீங்க? மணி ஆச்சு வரலையா?”, இவர்கள் இருந்த அறையை நோக்கி அக்ஷியின் பாட்டி குரல் கொடுக்க…

“தோ.வந்துட்டோம் மாமி..”, என்று பதில் அளித்து.., அன்பரசனிடம், “இதெல்லாம் ஒன்னுமில்லை சுதா-க்காக  எது வேணா செய்யலாம்..”,  அவசரமாக சொல்லிவிட்டு, அக்ஷியை கூட்டிக்கொண்டு ஹோமம் நடக்கும் கூடத்துக்கு சென்றாள். அன்பரசன் சுதாவா யார் அது ? என்று யோசித்து குழப்பமாய் நின்று, பின் அவள் செல்வதைப் பார்த்து அவனும் அவளைத் தொடர்ந்தான். நாகரிகம் கருதி, பெரியவர்களிடம்  விடை பெற்றுச் செல்ல நினைத்தான்.

காலையில் ஹோமம் ஆரம்பிக்கும் போது புகை மண்டலமாக காட்சி அளித்த ஹோமகுண்டம்.. இப்போது ஒரு முழ  உயரத்திற்கு ஜுவாலையுடன் எரிந்து கொண்டிருந்தது.

பார்த்த அறிவழகிக்கு வியர்க்க ஆரம்பிக்க…, ‘ஒண்ணுமில்ல பயப்படாத சும்மா இரு..’, என அவளுக்கு அவளாகவே சமாதானம் சொல்லியபோதும், தீ ஜ்வாலையைக் கண்ட அவளது மனம் படபடக்க ஆரம்பித்தது.

பூர்ணாஹுதி திரவியங்கள் அடங்கிய சிறு பட்டு துணி மூட்டையை, உப சாஸ்திரிகள் கையில் கொடுத்து.. அனைவரும் கண்ணில் ஒற்றிக் கொள்ளுமாறு தந்துவிட்டு…, பின் அதை வாங்கி,  சாஸ்திரிகள் ஹோம குண்டத்தில் இட்டு.. “ஓம் பூர்ணமத:…”, என்று மந்திரம் கூறியவாறே, அதன் மேல் நெய் ஊற்றினார்.

அதன் விளைவாக.., சட்டென நெருப்பு அரை ஆள் உயரத்திற்கு வளர.., அறிவழகி கண்களை மூடிக் கொண்டாள். ‘அய்யோ அன்பரசனும் இங்கேதான் இருக்கிறான்’ என்பது உடனே நினைவில் வர, அவசரமாக அவனை திரும்பி பார்த்தாள். அவனோ வளரும் அந்த எரிதழலைப் பார்த்து, முகம் நிறமிழக்க… கண்கள் நிலைகுத்தி, மூச்சுவிடவும் மறந்தவனாய், கல்லாய் சமைந்து நின்றான்.

அறிவழகி, விடுவிடுவென அக்ஷியுடன் அவனருகில் சென்று, “பெரியவங்க கிட்ட சொல்லிட்டு புறப்படறேன்-னு இப்படி நின்னா என்ன அர்த்தம்?”, அவனக்கு மட்டும் கேட்கும் அடிக்குரலில் பேசி… குழந்தையை தூக்கி அவனிடம் கொடுத்தாள்.

மலங்க விழித்த, அன்பரசன், அவனது கையில் இருந்த அக்ஷியை, அறிவுவழகியை.. அன்னியப்பார்வை பார்த்தான். சில நொடிகளில், தெளிவு பெற்று…, அவள் சொன்னதை  உள்வாங்கியவன்…அறிவழகியைப் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி.., “நான் வர்றேன் அக்ஷி, தாத்தா பாட்டிட்ட சொல்லிடு”, என்று குழந்தையைக் கீழே விட்டு வேகமாக வெளியேறினான்.

காரில் ஏறியதும்.. அன்பரசன் அந்நாளைய நினைவு.. நிழல் படமாக ஓட ஆரம்பித்தது.

அன்று… அன்பரசனது வீட்டில்.. அவனது கட்டிலில், ஒருக்களித்துப் படுத்துறங்கிக் கொண்டிருந்தவனின் முதுகில் சுடீரென அடி விழ.. துடித்து மெத்தையிலிருந்து எழுந்தான் அன்பரசன். கண்களை திறக்க முடியவில்லை,  எரிந்தது. கஷ்டப்பட்டு திறக்க.. அது…மதிய நேரமென்று…  அறைக்குள் அடித்த வெயில் உணர்த்தியது.

அரை மயக்கத்துடன் எதிரில் நின்றிருந்த அப்பாவை பார்த்தான் அவர் கையில் ஹேங்கர் இருந்தது.

“ன்னாப்பா?”… வலி தாங்காமல் கத்தினான். ஆனாலும் அவனால் நிற்க முடியவில்லை, தடுமாறியபடி அவனது கட்டிலிலேயே அமர்ந்தான்.

“ஒரு குடும்பத்தையே நாசம் பண்ணிட்டு கேள்வியாடா கேக்குற?”, என்று கத்திக்கொண்டே விநாயகம் விடாமல் அன்பரசனை அடித்தார். அவன் உடலில் வரி வரியாக ஹேங்கரின் தடம் பட.. அலறினான். இவன் சத்தம் கேட்டு அறைக்கு வந்த அவனது அம்மா கமலா,  “ஐயோ… எதுக்கு இப்படி அடிச்சு  கொல்றீங்க அவன?”, என்று அவர் கை பிடித்து கேட்டார்.

“உம்மவன எவன் இங்க கொண்டாந்து போட்டது?, காலைல அவனுங்க  எதுவும் சொல்லலையா?”, கையை மனைவியிடம் இருந்து விடுவித்து, “உன்ன சொல்லணும்டீ, காசு கொடுத்து கெடுக்காத-ன்னு எத்தனை தடவ கத்தியிருப்பேன்.. கேட்டியா? காலேஜ் போறதுக்கு பெட்ரோல்-க்கு வேணும்.. ட்ரெஸ்-க்கு வேணும்-ன்னு காச கொட்டி சீராட்டினல்ல?”, மகனிடம் இருந்த கோபத்தை மனைவி மேலும் காட்டி.. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினார்.

மீண்டும், எட்டி அன்பரசன் தலை முடியை பிடித்து, பளார் என்று கன்னத்தில் அறைந்தார். “எடுபட்ட பயலே, நேத்து தண்ணீ அடிச்சிட்டு எங்கடா போன?”, என இரைந்தார்.

தலையிலிருந்த அவரது கையை தட்டி விட்டு, “ப்பா.., என்ன விஷயம்னு சொல்லிட்டு அடி, சொம்மா.. கை நீட்டிகிட்டு?”, அடித் தொண்டையில் கத்தினான்.

பேசி முடிக்கும்முன் மீண்டும் விநாயகத்திடம் அரை வாங்கினான், “எதுத்தாப் பேசற? நேத்து குடிச்சல்ல? வீட்டுக்கு வந்து தொலைய வேண்டிதுதானடா?,  பொறுக்கி… ரோட்ல கிடக்க வேண்டியது தான? எதுக்கு ஸ்டோர்-க்கு போன?”

“ப்பா.. சுந்தருக்கு பொறந்த நாளு, அதான் பார்ட்டி வச்சோம்.  குடிச்சுட்டு வீட்டுக்கு வர முடியுமா? ப்ரவீனா இருக்குல்ல, அதான் ஸ்டோர்-ல காலியா இருந்த வீட்டுக்கு போனோம்”, உடல் வலியோடு போதை மயக்கம் தீராமல் முனகினான்.

இந்த அவனது வார்த்தையில் ரௌத்திரமானார், விநாயகம். “ஏன்டா.. குடிக்கறதே தப்பு, விளக்கமாத்துக்கு கொள்கை வேறயா?”, என்று கத்தி… அன்பரசனை மீண்டும் அடிக்க பாய, கமலா குறுக்கே நுழைந்து இருவருக்கும் அரண் அமைத்தார். “டே.. வெளில போடா, உங்கப்பனுக்கு கிறுக்குதான் புடிச்சுப்போச்சு”, என்று அவனை அறையிலிருந்து வெளியேறுமாறு கூறி…

“ஒத்த ஆம்பள புள்ளய இப்படி சாவடி அடிக்கறீங்களே?”, என்று கணவனைப் பார்த்து அழுதபடியே கேட்டார்.

“போட்டுன்டீ.. சாவட்டும்., இப்படி ஒன்னு தத்தேறியா இருக்கறதுக்கு இல்லாம இருக்கலாம்”, என அவர் சொல்லிய நேரமோ என்னவோ.., அவரின் கோபத்தில் இருந்து தப்பிக்கவென.., அன்பரசன் வெளியே செல்ல…, வாசல் படியில் கால் இடறி தடேலென கீழே விழுந்தான். அதில் அவன் முன் நெற்றி உடைந்து, ரத்தம் கொட்டியது, அவனும் மயங்கினான். அது இன்னமும் மீதமிருந்த மதுவின் தாக்கத்தாலா? அப்பாவிடம் வாங்கிய அடியாலா? கீழே விழுந்ததாலா? தெய்வம் அன்றே கொல்லும்.. கொள்கை கொண்டதா? தெரியவில்லை.

அடுத்த அரைமணியில்…, அன்பரசன் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தான். தான் ஆடாவிட்டாலும் தசை ஆடியது, விநாயகத்திற்கு. மகனாயிற்றே? விடவா முடியும்? பிள்ளை… பஞ்சமா பாதகம் செய்தாலும், நண்பர்கள் சேர்க்கை சரியில்லை, அதனால்தான் கெட்டுப் போயிட்டான், என்று கதறும் பெற்றார் இருக்கும் நாடாயிற்றே?

டாக்டர் வந்து அன்பரசனை பரிசோதனை செய்து, “ஆல்கஹால் எடுத்திருக்காரு, வேற டிரக்ஸ்ம் எடுத்திருக்காருன்னு நினைக்கிறேன். ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் வரட்டும். காயம் ஆழமா இருக்கு, தையல் போட வேண்டி இருக்கும். நர்ஸ் கிளீன் பண்ணுவாங்க நீங்க வெயிட் பண்ணுங்க”, என்று சொல்லி,  உள் நோயாளிகள் பிரிவில் அவனை அனுமதித்து சென்று விட்டார்.

மருத்துவமனை வராண்டாவில் காத்திருந்த அந்த நேரத்தில், ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதிலிருந்து ஒரு பெண்அழுதுகொண்டே இறங்கினாள். அவள் ஆடையில் ஆங்காங்கே கருமை படர்ந்திருக்க… பின்னால் ஸ்ட்ரெச்சரில், அவளது அம்மா பாதி கருகிய நிலையில்…

“இது நம்ம ஸ்டோர்ல குடியிருக்கிற அறிவு இல்ல? என்ன ஆச்சு?”, என்று கமலம்மா கேட்க.. விநாயகத்திற்கு தலைசுற்றியது.

Advertisement