அத்தியாயம் 18(1) 
ஒட்டியாணங்கள் ஏங்கும் பெருவயிறு கொண்டேன்,
உன்னில் தொலைந்து
மெல்லிடைகள் நாணும் பேறுகாலம் கண்டேன்,
என்னுள் இருக்கிறான்
ரட்சகனாய் ஒரு ராட்சசன் – என்செங்கதிரோன்!…
எதிர்பார்த்திராத சந்தோஷத்தில் ரதியே வாசலுக்கு சென்று அவர்களை வரவேற்க, கர்ப்பிணியான தங்கையை கண்டு பிரபாவுக்கு கண்கள் கலங்கிதான் போயிற்று.
ரதியை திருமணம் செய்து கதிர் அழைத்து வந்ததில் இருந்து… பிரபாவின் வாழ்க்கையும் மாறியிருந்தது. அதிலும் ரதி கடைசியாக அவனிடம் ”அண்ணியையாவது நல்லா பார்த்துக்கோங்க!“ என்று சொல்லி வந்தது… அவனை நிறைய யோசிக்க வைத்திருந்தது.
ரம்யா அவனின் சொல்பேச்சு கேட்டு ஒன்றொன்றிலும் அவனின் முகம் பார்த்து நடக்க ‘தன் அன்புக்காக ஏங்கும் இவளையும் இனி தொலைத்துவிடக் கூடாது’ என்று நினைத்தான். ’அளவில்லாத சொத்துக்களை வைத்துக்கொண்டு இனி மேலும், மேலும் யாருக்காக உழைக்கப் போகிறோம்?’ என்று வேலைசெய்யும் நேரத்தை வெகுவாக குறைத்திருந்தான்.
ரம்யாவோடு மனம்விட்டு பேச அப்போதுதான் தனக்கு குழந்தையில்லை என அவள் மறுகுவது தெரிந்தது. மருத்துவரிடம் காட்ட, “எந்த பிரச்சனையும் இல்லை… அவங்க மனசை சந்தோஷமா வைங்க. தானா எல்லாம் சரியாகும்“ என்று சொல்லிவிட… அவளோடு அதிக நேரம் செலவழித்து நன்றாக பார்த்துக் கொண்டான். 
“உன் அம்மா வீட்டுக்கு போகணும்னா… போய் பார்த்துட்டு வா!“ என்று அவளிடம் இவன் கூற, 
“வேண்டாம்! அவங்க ரதியை… கல்யாணதப்ப என்ன பேச்சு பேசிட்டாங்க. நான் சொந்தம், சொத்து வெளியில் போகக்கூடாதுனுதான் நினைச்சேன். ஆனா மோகன் எவ்வளவு கீழ்தரமா நடந்திருக்கான்?. போறப்பகூட ரதி எதுவும் எடுத்துட்டு போகலை. என்னைதான் நல்லா பார்த்துக்கச் சொல்லி உங்ககிட்ட சொல்லிட்டுப் போனாள். நான்தான் அவளை ஒரு அண்ணியா நல்லா பார்த்துக்காம விட்டுட்டேன். நீங்க அன்னைக்கு என் அம்மா, மோகன்கிட்ட சொன்னது அப்படியே இருக்கட்டும். இனி நான் எங்கம்மா வீட்டுக்கு போக விருப்பப்படல. ரதியை மட்டும் பார்த்தா போதும்னு தோணுது“ என்று தன் மன உளைச்சல்களைக் கூறினாள். பானுமதி கூட இடையில் பிரபா இல்லாத நேரம் பார்த்து இவளுக்கு செல்லில் அழைக்க “கூப்பிடாதம்மா! அவருக்கு தெரிஞ்சா நானும் வாழாம அங்கதான் வரணும். நீ முதல்ல வாயை குறைச்சிட்டு உன் பையனை மட்டுமாவது நல்லா பாரு. கொஞ்சமாவது அவனுக்கு நல்ல புத்தி சொல்லு“ என்று ஏகத்துக்கும் பேசி வைத்திருந்தாள். 
’ரதியை பார்க்க ஏதேனும் காரணம் கிடைக்காதா?’ என்றுதான் பிரபாவும், ரம்யாவும் காத்திருந்தனர். தானாக போகவும் தயக்கம். கால் வலியை பொறுத்துக் கொண்டு, தாலி கட்டும் நேரம்கூட சுவற்றை பிடித்துக் கொண்டிருந்த ரதியும்… கட்டிமுடித்த கையோடு அவளை தூக்கிக் கொண்டு போன கதிரும் இவர்களுக்கு அடிக்கடி ஞாபகத்தில் வந்து போயினர். அதுவும் அன்று உரிமையாய் சண்டை போட்ட கதிரின் உருவத்தை நினைத்தாலே பயமும், குற்ற உணர்ச்சியும் தானாக வந்தது. 
இந்நிலையில் வேலவன் சந்திராவோடு வீட்டிற்கே வந்து ரதியின் வளைகாப்பை குறித்து இவர்களிடம் சொல்ல, பிரபா அவரிடம் விழுந்து மன்னிப்பை வேண்டினான்.
“விடு! நான் உன்னை என் பையனாதான் நினைக்கிறேன்… எதுவும் தப்பா நினைக்கலை. அப்புறம் நீ இப்போ நிஜமாவே எனக்கு மகன் முறைதான். அதனால ரதி மாதிரி நீயும் வேலப்பானே கூப்பிடு“ என்றார் பாசமாய்.
வேலவனும் சும்மா இருந்துவிடவில்லை. கதிரின் திருமணத்தின் போதுதான் பிரபாவின் வித்தியாசத்தைக் கண்டார். எப்போதும் படிப்பு, வேலை என்று இருப்பவன்தான். இருந்தாலும் ’தன் நண்பனைப்போல் அவனின் மகன் இல்லையே!’ என்ற வருத்தம் வேலவனுக்கு இருந்தது. அதனாலேயே அன்றிலிருந்து இன்றுவரை பிரபா வீட்டில் நடப்பவைகளை தனக்கு தெரிந்த நட்புகள் மூலம் அறிந்து கொண்டே இருந்தார்.
’ரம்யாவின் வீட்டு உறவுகளும் பிரபா வீட்டிற்கு வருவதில்லை, மேலும் குழந்தை பெறாததால் ரம்யா விஷேசங்களுக்கு செல்லாமல் இருப்பது… அதன் பொருட்டு இவனும் யாருடனும் பழகாமல் இப்போது ரம்யாவை பார்த்துக்கொள்வது’ என அனைத்தையும் அறிந்து கொண்டவர்… இனி இவர்களைத் தனியே விடக்கூடாது என்று நினைத்துதான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சந்திராவோடு அழைக்க வந்தார்.
”இல்ல. நாங்க அங்க வந்தா ரதி வீட்டுக்காரர் என்ன சொல்வாரோ?“ என்று பிரபா தயங்க,
“அதென்ன ரதி வீட்டுக்காரர்? மச்சான்னு உரிமையா கூப்பிடு. உங்களை கூப்பிட்டு வரச் சொன்னதே அவன்தான். விட்டா அவனே நேரில் வருவான்… ரதியை இந்த நிலைமையில் விட்டுட்டு அவனுக்கு வர மனசில்லை. அதான் எங்களை அனுப்பினான்“ என்று சந்திரா கூற,
இருவர் முகமும் தெளிந்து உடனேயே அவர்களோடு கிளம்பியும் விட்டனர். வேலவன் தன் வீட்டிற்கு அழைத்து கொண்டு போய், கையோடு கதிரின் ஊருக்கும் அழைத்து வந்து மீண்டுமொருமுறை தன் பெரிய மனிதத்தன்மையை நிரூபித்தார்.
ரதியோடு பிரபாவும், ரம்யாவும் உள்வராண்டாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள்… வெளியிலிருந்து வந்த கதிரைப் பார்த்து எழுந்து நின்றனர். இவர்களைப் பார்த்ததும் “வாங்க மச்சான்!, வா தங்கச்சி!“ என்று புன்னைகையாய் கதிர்அழைக்க, அதன்பின்தான் இவர்கள் தயக்கம் என்பது முற்றிலுமாய் நீங்கியது. 
“நீங்க பேசுங்க… இதோ வர்றேன்!“ என்றுவிட்டு இவர்களின் அறைக்குச் செல்ல, ரதியும் இவன் பின்னாடியே வந்தாள். இவன் முகம் மிக அமைதியாக இருக்க, அவள் கையை கட்டிக் கொண்டு இவனின் முகமே பார்க்க,
“என்னடி?“ என்றான். 
“ஏன் சொல்லலை?“
“எதை?“ 
”வேலப்பாவையும், சந்திராமாவையும் அவங்க வீட்டுக்கு நீங்கதான் அனுப்பியிருப்பீங்க. எனக்கு தெரியும். ஏன் என்கிட்ட சொல்லலை?” என்று இவள் முறைப்பாய் கேட்க,
”நல்ல மூளை உனக்கு! எப்படிடி இப்படி கண்டுபிடிக்கிற?“ என்று இவன் சமாளிக்க,
”சமாளிக்காதீங்க… பதில் சொல்லுங்க!“ என்றாள் .
“ அது… மாசமான பொண்ணுங்களுக்கு அம்மா வீட்டு சொந்தம் வேணும்னு ஆசைப்படுவாங்களாமே. அதான் மாமாவை அனுப்பி தகவல் சொன்னேன். வருவாங்களோ? இல்லையோ? தெரியாது. சொல்லி நீ ஏமாறக்கூடாது. அதான் முன்னாடியே உன்கிட்ட சொல்லலை“ என்றான் தயங்கித் தயங்கி.
“நான் கேட்டேனா உங்ககிட்ட? சரி அப்படியே இருந்தாலும் வரவெச்சிட்டு ஏன் முகத்தை தொங்க போடுறீங்க?“
“இல்லையே! எல்லார்கிட்டையும் நல்லாதான பேசுனேன்?” 
“எனக்கு தெரியாதா உங்க முகம்?“
“அவங்க வளைகாப்பு முடிஞ்சதும் உன்னை வீட்டுக்கு கூப்பிட்டு போயிருவாங்களோனு யோசனை“ என்றான் மிக சங்கடமாய்.
”இப்போதான் என்கிட்ட கேட்டாங்க. நான்தான் இப்போ வரலை. என் வீட்டுக்காரரை விட்டுட்டு தனியா வரமுடியாது. குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பா வர்றேன்னு சொல்லிட்டேன்“ என்று புன்சிரிப்பாய் உதடு கடித்து இவள் பதில் கூற,
“ஐ! நிஜமாவா? என் தங்கம்டி நீ!“ என்று சிறுபிள்ளை போல் இவளை கட்டிக்கொண்டான். இவளின் வயிறு தட்ட சேலையை விலக்கி “நீங்க இந்த ஊர்லதான் பிறக்கபோறீங்க” என்று வயிற்றில் இருக்கும் குழந்தைகளிடம் பேச,
“என்ன இது சின்ன குழந்தை மாதிரி?“ என்று இவள் கேட்க,
“உனக்குத் தெரியாது மூணு நாளா எனக்கு இதே சிந்தனைதான்“ என்று இவளை இன்னும் கட்டிக்கொள்ள,
“அவ்வளவு சீக்கிரமா உங்களை தனியா விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன் ஆலமரம்!”  என்று இவனைக் கொஞ்சினாள் ரதி.
விடிந்ததும் வளைகாப்பு விழாவில் வீடே நிறைந்திருக்க, ரதிக்கு புடவை கட்ட உதவிக்கொண்டிருந்தான் கதிர். என்னதான் எல்லோரிடமும் நன்றாக பழகினாலும் ரதிக்கு கதிரே அனைத்திலும் தேவை. யாரையும் தொட்டுப்பேசவோ?, புடவை மாற்றவோ? தன் சம்பந்தப்பட்ட எதற்கும் அனுமதிக்கமாட்டாள். கதிரும் உணவு முதல் அனைத்திற்கும் இவளையே தேடுவான். இவர்களைப் பற்றி வீடே அறியும் என்பதால் யாரும் தொந்தரவு செய்யவில்லை.
வெளியில் வந்ததும் விசேஷத்திற்கென வந்திருந்த யாழினி ரதியின் கையை பிடித்துக் கொண்டாள். எப்போதும் ”அண்ணி… அண்ணி!“ என்று இவள் அருகில்தான் நின்றாள். ரம்யாவிற்கே ’தான் ஏன் இது போல் நல்ல அண்ணியாக ரதியை பார்த்துக் கொள்ளவில்லை?’ என்று தோன்ற ஆரம்பித்தது.
பிரபாகூட கதிரைப்பார்த்து வியந்துதான் போயிருந்தான். அவனும் வந்ததில் இருந்து பார்க்கிறானே. எப்போதும் பேச்சோ, வேலையோ கதிரின் பார்வை, கவனம் எல்லாம் ரதியின் மேல்தான். ‘தானும் இது போல் ரம்யாவை கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்று அவனிற்கு தோன்ற அவனின் கண்கள் ரம்யாவை காதலாய் பார்த்து வைத்தது.
முதல் வளையலை சுமங்கலி போடவேண்டும் என்று சபையில் கூற,  ரதி கதிரிடம் “எனக்கு பாட்டிதான் முதல் வளையல் போடணும்… அப்புறம் ரெண்டாவது அண்ணிதான் போடணும்”  என்றாள் சத்தமாக.  
கதிர் மற்றவர்களைப் பார்க்க, அவனை எதிர்த்து சபையில் பேசுவது யார்?. அனைவரும் கப்சிப்பென்று அமர்ந்திருந்தனர். 
வள்ளியம்மையே இவள் இப்படி சபையில் கூறுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. “நான் எப்படிம்மா? சம்பிரதாயம்முன்னு ஒன்னு இருக்கே?“ என்று அவர் தயங்க,
“பாட்டி நான் இந்த வீட்டுக்குள்ள வந்தப்போ… வலியோட நுழையக்கூடாதுன்னு சம்பிரதாயம் பார்க்காம இவரை தூக்கச் சொன்னவங்க நீங்க. அப்போ அதெல்லாம் எங்க போச்சாம்? நான் உங்களை பார்த்துக்கிட்டேதான் வீட்டுக்குள்ள வந்தேன். இப்பவும் நீங்கதான் வளையல் போடணும். கண்டிப்பா நான் நல்லா இருப்பேன்“ என்று இவள் புன்னகையாய் கூறி கையை நீட்ட,
அவருக்கு தானாகவே கண்கள் கலங்கியது. ஏன்? அங்கிருந்த பெண்களுக்கும் கூட கலங்கியது. அவர் கதிரின் முகம் பார்க்க, “போடு பாட்டி!“ என்று அவனும் கூற, முதல் வளையலை வள்ளியம்மையே போட்டார்.
அதன் பிறகு ரதி ரம்யாவைப் பார்க்க, அவளும் அமைதியாய் வந்து வளையல்களை போட்டாள். ஆனால் ரதியின் கையை தொடும் சமயம் நெஞ்சமெல்லாம் நடுங்கியது. ’திருமணம், வளைகாப்பு போன்ற எத்தனை விழாக்களில் தன்னை மற்றவர்கள் இழிவாக பேசியிருப்பார்கள்?. ஏன் ரதியின் முதல் திருமணம் நிலைக்காமல் போனபோதுகூட இவளுக்கு நாம் துணையாக இல்லையே!. இன்று இவள் காட்டும் அன்பிற்கு தான் என்ன செய்தேன்?’ என்று நினைத்து ரம்யாவிற்கு கண்ணீர் பெருகியது. பழைய ரதி என்றால் விளையாட்டு பிள்ளையாக இருந்திருப்பாள். ஆனால் வாழ்க்கை அவளுக்குத்தான் நிறைய அனுபவங்களை தந்துவிட்டதே!. அதனால் ஒவ்வொருவரின் மனதையும் பார்த்துப் பார்த்து அன்பு செலுத்தினாள். 
நாட்கள் கடந்து ஒரு அதிகாலையில் ரதி பிரசவவலி கண்டிட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். ஒரு வாரத்திற்கு முன்னமே, வேலவன் குடும்பம், பிரபா குடும்பம் என அனைவருமே இவர்கள் வீட்டில்தான். அதனால் எல்லோருமே இன்று மருத்துவமனை வாசலில். வேலவன் கதிருடன் இருந்தார். மற்றவர்களும் அங்கங்கு நின்றிருந்தனர். ரதி உள்ளே ஒவ்வொரு முறை பெருங்குரலாய் கதறும் போதும்… இங்கு கதிரின் உடலில் ஒரு அதிர்வு. 
“தைரியமா இரு! எல்லாம் நல்லபடியா நடக்கும்“ என்று அவனை சமாதானம் செய்து கொண்டே இருந்தார் வேலவன்.
இங்கே இப்படியென்றால் மருத்துவமனையில் இருந்து ஒரு தெரு தள்ளி… ஆதிமூலம், மிதுன், பொன்னி, முத்து கூடவே கதிரிடம் வேலை செய்யும் சில ஆண்கள் என அனேகம்பேர் கையில் வெடியோடு வெயிட்டிங். ”மருத்துவமனைக்கு அருகில் வெடிக்கூடாது” எனச் சொல்லியிருந்ததால் அங்கு சென்றிருந்தனர். 
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் என இரு குழந்தைகளை பெற்று ரதி சுகப்பட… கதிருக்கு போன உயிர் திரும்பி வந்தது. பிறந்த செய்தி போனில் சொல்லப்பட வானில் மின்னின பட்டாசின் வெளிச்சமும் சத்தமும். அன்று சேவல் கூவி அவ்வூர் விடியவில்லை. இவர்கள் போட்ட பட்டாசு சத்தத்தில்தான் விடிந்தது.
குழந்தைகளை தூக்கி வந்து “யாரிடம் கொடுக்க?“ எனக் கேட்க, 
அனைவரும் கதிரின் முகத்தைப் பார்க்க, அவன் கையைக் கட்டிக்கொண்டு, ”அவங்க பாட்டிமார்கிட்ட கொடுங்க!“ என்றான்.
கனகமும், விஜயாவும் விழிக்க, 
“வாங்குங்க சித்தி!, வாங்குங்க அத்தை!“ என முதல் முறையாய் உறவு  சொல்லி அழைக்க, விஜயா கண்கலங்கினார் என்றால்… கனகம் அழுதேவிட்டார்.
அவர்கள் தயங்க, “வாங்கிருங்க! இல்லை உள்ள ஒருத்தி இருக்காளே… அவ வீட்டில் வந்து என்னை கடிச்சி கொதறிருவா!“ என்று இவன் சிரிக்க, அதன்பின் வாங்கிக் கொண்டனர். 
அனைவருக்கும் புரிந்தது “வாங்கச் சொன்ன வாய்தான் இவனுடையது. வார்த்தையெல்லாம் ரதியுடையது“ என்று.
ரதி முன்னமே ஒரு இரவில் கதிரிடம் சொல்லியிருந்தாள் “குழந்தை பிறந்ததும் அத்தையையும், சித்தியையும் தான் வாங்கச் சொல்லவேண்டும்“ என்று.
“ஏனாம்?”
“ம்! நீங்க பிறந்ததில் இருந்து அவங்க உங்களை தூக்கி கொஞ்ச மாட்டாங்களாமே!. இனி நம்ம குழந்தையை அவங்கதான் பார்த்துக்கணும். பொறந்ததும் கையில் கொடுத்தாதான் அந்த பொறுப்பு வரும். இதுதான் அவங்களுக்கு நான் குடுக்குற பனிஷ்மெண்ட்!“ என்று முறைப்பாய் அவள் கூற,
“அம்மாடியோவ்! பலமா இருக்கே தண்டனை“ என சிரித்து, சுழித்த அவளின் இதழை மென்மையாய் சுவைத்திருந்தான்.
இன்று அதை நிறைவேற்றியும் விட்டான்.
அனைவரும் குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருக்க, இவன் உள்சென்று ரதியை பார்த்தான்.
அவளை தலை முதல் கால் வரை நன்றாக பார்த்துவிட்டு “ஒன்னும் பிரச்சனை இல்லைல“ என்று கேட்டவாறே மறுபடியும் அவளின் கால்விரல்களைப் இவன் பார்க்க, அதில் ஒருவிரலில் துளி ரத்தம் ஒட்டியிருக்க, இவன் கண்ணும் ரத்தநிறம் கொண்டது. “ரொம்ப கஷ்டமா?“ என அதை துடைத்துக் கொண்டே இவன் கேட்க,
படுத்தபடியே, அவனின் கையை அழுந்த பிடித்துக் கொண்டு ”இல்லையே! நான் நல்லா இருக்கேன்” என்று புன்னைகைத்தாள் காதலாய். சிறிது நேரம் பேசிவிட்டு அதன்பிறகே இவன் வெளியில் வந்து பிள்ளைகளை தூக்கி கொஞ்சினான். 
வள்ளியம்மை சேரில் அமர்ந்தவாறே அவன் கொஞ்சும் அழகை ரசித்திருந்தார் அமைதியாக.
“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
 மக்கட்பேறு அல்ல பிற“
                 _ திருக்குறள்(மக்கட்பேறு)
பொருள்:
           இல்லத்தான் ஒருவன் அடைய வேண்டிய பேறுகளில் தலைசிறந்தது நல்லறிவுடைய மக்களைப் பெறுவதாகும்.