அத்தியாயம் 10(2)
செருக்காய் நிற்கிறேன், புதிதாய் பிறக்கிறேன்
நிஜமா? வியக்கிறேன் – என்னவளை
தலைவியாய் ஏந்துகையில்!….
கதிரின் “வேறு ஆடர் செஞ்சு சாப்பிட்டாதான் ஊருக்கு“ என்ற பேச்சில், ரதி வேறு சிலதையும் வரவழைத்து உண்ண… அவளால் பாதிதான் முடிந்தது. அதற்கு மேல் உண்ண முடியாமல் முழிக்க,
“என்ன போதுமா?“ என்றான்.
“ம்! இதுக்கு மேல் முடியல“ என்றாள் பாவமாய்.
“சரி விடு! கஷ்டப்பட்டு சாப்பிடாத“ என்றவாறே அதை எடுத்து இவன் ரெண்டே வாயில் முழுங்கிவிட்டு… கைகழுவச் செல்ல, அவள் இவன் போவதையே பார்த்திருந்தாள்.
“நாம் பத்து வாய் சாப்பிடுவதை இவர் என்ன இரண்டு வாயில் காலி செய்கிறார்? அதுவும் என் எச்சில் உணவு!. சங்கடமே இல்லாமல் சாப்பிடுகிறார்“ என்றுதான் நினைக்கத் தோன்றியது. அவளைப் பொறுத்தவரை இவன் இன்று தன்னை திருமணம் செய்து கொண்டவன். தன் கணவன் என்ற நிலைதான். மேலும் தன்னை அவனுக்கு பிடித்திருக்கிறது என்றும் புரிந்தது. ஆனால் எந்த அளவு  பிடிக்கும் என்பதை அவனின் ஒவ்வொரு சாதாரண செய்கைகளிலும் வெளிப்பட ’நடப்பதெல்லாம் நிஜமா? இவன் காட்டும் அன்புக்கு தான் தகுதிதானா? என் குறைகள் எல்லாம் அவருக்கு குறைகளாகவே தெரியவில்லையா?’ என்று கேள்விகளாக தோன்றியது.
கதிரைக் கேட்டால் ”அதெல்லாம் ஒரு குறையா?” என்பான். அவனைப் பொறுத்தவரை இவள் அவனின் குந்தவை மட்டுமே. அவனின் காதலுக்கு குந்தவை என்ற ஒரு உயிருள்ள பெண் மட்டுமே போதும். இவளின் படிப்பு, ஆஸ்தி, அந்தஸ்து எதுவும் தேவையில்லை.
”நிறைகளைப் பார்த்து வரும் காதலை விட, குறைகள் தெரிந்தும், அதையும் மீறி அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல, நீ மட்டுமே என் துணை“ என்ற அளவில் வரும்  காதல் மதிப்பும், ஆழமும் கொண்டது. ஒரு பெண்ணை அவளை, அவளுக்காக மட்டுமே விரும்பும் ஆண்மகனாய் கதிர்.
”நான் உன்னை விரும்புகிறேன்… ஐ லவ் யூ!“ என்ற வாய்மொழி வார்த்தைகள் எல்லாம் அவனிடம் இல்லை. கதிரைப் பொறுத்தவரை காதல் என்பது வார்த்தை அல்ல செயல். அதற்கு மொழி கூட தேவையில்லை.
முன் நாட்களில் ’தன் இலையின் உணவினை அடித்து, பிடித்து தின்ன ஆளில்லையே?’ என்று ஏங்கியவன்… இன்று ரதி வந்ததும் ’நாமும் உரிமையாய் எடுத்து சாப்பிட ஒருத்தி வந்துவிட்டாள்’ என்ற அளவில் மனதால் மாறியிருந்தான். இன்னும் கொஞ்சம் தன்னை பொறுப்பாய், சந்தோஷமாய்கூட உணர்ந்தான்.
கைகழுவும் இடத்தில் உள்ள கண்ணாடியில் முகம் கழுவி, மீசையை முறுக்கி தன் முகம் பார்க்க… அவனுக்கே அவனை பிடித்தது. கூடவே “எல்லாத்தையும் விட்டுட்டு உன் பொண்டாட்டி உன்னை மட்டுமே நம்பி வந்திருக்கா கதிரு!. நல்லா பாத்துக்கணும். எல்லாம் பார்த்து, பார்த்து செய்யணும். விட்டுராத!“ என்றும் தனக்குள் சொல்லிக் கொண்டான்.  
ஹோட்டலைவிட்டு கிளம்பி காருக்கு அருகே வர “என் பக்கத்தில் இருக்கிற சீட்டில் உட்காருறியா?“ என்றான்.
”ஏன்?“ என்று அவள் பார்க்க,
“இங்கேயிருந்து இன்னும் ஒன்பது மணி நேரமாவது கார் ஓட்டணும். பக்கத்தில் ஆள் இருந்தா தூங்காம இருப்பேன். சீட்டை நல்லா சாய்ச்சு தர்றேன் . நீ தூங்கிக்கோ!“ என்றான். பெரிய மனதாய்.
அவன் மனமோ “ஐயா இருக்குற சந்தோஷத்துக்கு தூக்கம் வேற வரும். நீங்க தூங்கிருவீங்க. இதை நாங்க நம்பணும்?”  என்று கேலிகளை வாரி வழங்க,
“நம்பித்தான் ஆகணும். அவளை பின்னாடி உட்கார வெச்சா தனியா பீல் பண்ணுவாதான. இருந்தாலும் நான் கொஞ்சம் ஓவராத்தான் போறேனோ?“ என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.
அவள் “சரி!“ என்று முன்சீட்டில் ஏறிக்கொள்ள… லக்கேஜ் பேக்கை அவள் காலுக்கு கீழ் வைத்து, காலை அதன் மேல் தூக்கி வைத்தான். சீட்டையும் சாய்த்து விட்டு, அவள் தூங்கிக் கொள்ள வசதி செய்தான்.
காரினை கிளப்பும் சமயம் வள்ளியம்மையிடம் இருந்து அழைப்பு வந்தது. “பாட்டி!“ என்று அழைக்க, இவன் குரலே குதூகலமாய் இருந்தது.
“கதிரு! பத்திரமா வாங்கப்பா. இப்பதான் உன் மாமாவும் பேசுனாங்க. என் பேத்திக்கு அடிபட்டிருக்காம்ல. எப்படிய்யா இருக்கு?. போனை குடு! ஒரு தடவை பேசிக்கிறேன்“ என்று கேட்க,
”பாட்டி!“ என இவளிடம் வாயசைத்து, “பேசு!“ என்று கொடுத்தான்.
இவள் ”ஹலோ!“ என்று சொன்னதுதான் தாமதம் “அம்மா ரதி! எப்படிமா இருக்க? காலை ரொம்ப அசைக்காதமா“ என்று ஆரம்பித்து “வர்ற வழியில் எதும் சண்டை சச்சரவுக்கு போகவிடாம, அவனை பத்திரமா பார்த்து கூட்டிட்டு வாம்மா!“ என்று முடித்தார்.
’என்னது… நான் இவரை பத்திரமாவா?’ என்று நினைத்தாலும் “ம்! ம்!“ என்று தான் பதிலளித்தாள். பாட்டியின் குரலில் அளவில்லாத மகிழ்ச்சியை இவளால் உணர முடிந்தது.
”ரொம்ப சந்தோஷம் பாட்டிக்கு. அதான் மூச்சுவிடாத பேச்சு“ என்று இவளிடம் சொல்லி, கதிர் காரை கிளப்ப கொஞ்ச நேரத்திலேயே மருந்தின் வீரியத்தில் அசந்து தூங்கியிருந்தாள்.
இரண்டு மணிநேரம் கடந்த நிலையில் இவள் தூக்கத்தில் அசைவது தெரிய… காரை ஓரமாக நிறுத்தினான். இரவுக் காற்றில் காரின் கண்ணாடிகளை முக்கால் பகுதி ஏற்றியும் குளிர் உணர்ந்ததுபோல்… புடவை முந்தானையை தூக்கத்தில் இழுத்து, இழுத்து மூடினாள். மூடிக்கொள்ள ஏதாவது எடுத்து தரலாமென்றால் அவள் காலுக்கு உயரம் வைத்த பேக்கில்தான் அனைத்தும் இருந்தது.
‘என்ன செய்ய?’ என்று யோசிக்கவெல்லாம் இல்லை அவன். தன் சட்டையை கழட்டி அவளின் மேல் போர்த்த… தூக்கத்திலேயே அதை கெட்டியாக இறுக்கி மூடிக்கொண்டாள். தலை கலைந்து, தூங்கும் அவளின் முகத்தை… எதிர்ப்படும் கார்களின் வெளிச்சத்தில் ரசித்து பார்த்திருந்தான்.
பொன்னி பிறந்த புதிதில் ”தூங்கும் பிள்ளையை ரசிச்சு பார்க்கக்கூடாது. கண்ணுபட்டுடும்“ என்று பாட்டி சொன்னது இன்று ஞாபகத்திற்கு வர, “சாரி! கண்ணுபடக்கூடாது குந்தவைக்கு!“ என்று வேண்டி கன்னத்தில் போட்டுக்கொண்டான்… ஏதோ அவளை பிறந்த குழந்தையைப் போல் எண்ணி.
காலை ஏழு மணியளவில் ஊருக்குள் நுழையும் முன்பே கதிர் ரதியை எழுப்ப ’எந்த இடம்?’ என்று தெரியாமல் பயந்த பார்வை பார்த்தாள்.
”ஊருக்குள்ள  போகப்போறோம்?” என்றான் இவள் முழிப்பதைப் பார்த்து.
“ம்!“ என்றுவிட்டு இவள் அவன் முகமே பார்க்க,
“என் சட்டை வேணும்“ என்றான். அதன் பிறகே இவள் அவன் பனியனோடு இருப்பதை கவனித்து… தலை குனிந்தவாறே தன் மேல் இருந்த சட்டையை எடுத்து கொடுத்து, தன் உடையையும் சரி செய்து கொண்டாள். சில மாதங்களில் அவள் உறங்காத உறக்கத்தை இந்த பயணத்தில் உறங்கியிருந்தாள். உடல் மட்டுமல்ல, மனம்கூட மிகுந்த அமைதியை உணர்ந்தது. பழைய ஞாபகங்களில் அலைபாயும் மனதெல்லாம் இப்போது அவளுக்கு இல்லை. இவர்கள் வீட்டை நெருங்க… இவன் வீடே திருமண விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆட்களும் நிரம்பி வழிந்தனர்.
இவர்களின் காரைப் பார்த்து கூட்டம் வாசலில்கூட… அனைவரையும் விலக்கி வள்ளியம்மை முன்னால் வந்து நின்றார்.
இறங்கி நின்ற ரதியிடம் வள்ளியம்மையை காட்டி, காலில் விழுந்து இருவரும் ஆசிர்வாதம் வாங்க,
“நல்லா இருங்க! வலியோட புள்ளையை காலில் விழ வைக்கணுமா? தூக்கிக்கோ கதிரு!“ என்று கூற, இவன் அவளை தூக்கிக் கொண்டான்.
’கதிரின் மனைவி யாரென்று?’ ரதியை அனைவரும் ஆர்வமாய் பார்க்க, இவளுக்கு ’என்ன நம்மை இப்படி பார்க்கிறார்கள்?’ என்று சங்கடமாய் போக, அவனின் சட்டையை இறுக்கிப் பிடித்தாள். அது ஏற்கனவே இவர்கள் நன்கு பழகியவர்கள் போன்ற தோற்றமாய்தான் அனைவருக்கும் தெரிந்தது.
”கதிரய்யா பொண்டாட்டி ரதி மாதிரி இருக்காங்கள்ல!“
“அவங்க பேரே ரதி தானாம்!“
“ஐயாவோட அம்மா மாதிரியே, பொண்ணும் அழகா இருக்காங்க!“
“இத்தனை வருஷம் போனாலும் கதிரய்யா நிஜமாவே ரதியைத்தான் கல்யாணம் பண்ணியிருக்கார்“
”இந்த பொண்ணை கல்யாணம் செய்யத்தான்… ஐயா அவசரமா அன்னைக்கு கிளம்பி போனாங்களாம்”
“பொண்ணு வீட்டில் இவங்க விரும்புறது தெரிஞ்சி, பொண்ணை அடிச்சிட்டாங்கலாம். நம்ம ஐயா யாரு? உடனே வேலவன் ஐயாவோட போய் ரதியம்மாவை வீடு புகுந்து கல்யாணம் செஞ்சிட்டாராம்“
இப்படியான பல பேச்சுகள் புரளியாய் நிமிடத்திற்குள் அங்குள்ள மக்கள் மத்தியில் பரவியதில்… ஏதோ! இவர்கள் உயிருக்குயிராய் காதலித்து திருமணம் செய்து வந்தது போல் ஆகிவிட்டது.
கதிரால் ஒருவன் ஹாஸ்பிட்டலில் இருந்ததெல்லாம் மக்களுக்கு மறந்தே போனது. ரதிக்காகவே கதிர் சென்னை சென்றதாய் ஆகிவிட்டது.
ரதியை பெண்கள் ”பொண்ணு நிஜமாவே ரதிதான்!“ என்று ஆர்வமாய் பார்த்தனர். அந்த கிராமத்தில் வள்ளியம்மை குடும்பத்தில் அனைவருமே மாநிறம்தான். கதிர் அவனின் அம்மாவைக் கொண்டு பிறந்ததால் நிறம். அதையும் அவன் வேலையென்று வெயிலில் அலைந்து கருப்பாக்கி வைத்திருந்தான். இப்போது ஊரில் இருந்து கலராய்வர… ரதியும் பளிச்சென்று இருக்க… அனைவரின் கண்ணும் ஆசையாய் இவர்கள் மேல்.
“பாட்டி! ஆரத்தி எடுக்கணும். பொண்ணு வலது காலை உள்ள வைச்சு போகவேண்டாமா?“ என்று சிலர் கேட்க,
“கால்வலியோட அப்படி போகணுமா என்ன? அதெல்லாம் வேண்டாம். என் பேத்தியே இப்பதான் வீட்டுக்கு வந்திருக்கு.  நீங்க இப்படியே ஆரத்தி எடுங்க!” என்றுவிட்டு, கதிரிடம் திரும்பி, “கதிர் நீ என்பேத்தியை கீழவிட வேண்டாம். அப்படியே நில்லு!“ என்றுவிட , இவனும் அதன்படியே செய்து கூட்டத்தை கடந்து  உள்ளே சென்றான்.
ரதி என்னவோ வள்ளியம்மையின் முகத்தினையே பார்த்திருந்தாள். சம்பிரதாயங்களை விட… வீட்டினுள் நுழையும் பெண் உடம்பில்கூட வலி சுமக்கக்கூடாது என நினைக்கும் அவரை இவளுக்கு பார்த்ததுமே பிடித்துவிட்டது.
இவன் உள்ளே செல்ல, அங்கு பொன்னி இவர்களை பார்க்க முடியாமல்… கூட்டத்தை எம்பி, எம்பி குதித்துக் கொண்டிருந்தாள்.
“பொன்னி!“ என்ற இவனின் குரலில் ஓடிவந்து “ஐயா! நான் பார்க்கல. எனக்கு காட்டுங்க!“ என்று நிமிர்ந்து பார்த்து கூற,
கதிர் பொன்னியின் உயரத்திற்கு குனிந்து… ரதியை அவளுக்கு காட்டி “ஊர்லயிருந்து வரும் போது ரதி மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டதான?. பாரு! நான் ரதியவே கொண்டு வந்திருக்கேன்“ என்று சிரித்து கூறினான்.
வெளித்தோற்றத்தில் அக்காட்சி தேவதைக் கதைகளில்  வரும் ராட்சசன் ஒருவன்… தேவதையைக் கையில் ஏந்தியதைப் போல் இருந்தது. ஆனால் நிஜத்தில் கதிரே தேவன்!. ரதியே அவனின் ராட்சசி!.
”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு“
                _ திருக்குறள்(காதற் சிறப்புரைத்தல்)
பொருள்:
          உடம்பொடு உயிருக்கு உள்ள தொடர்பானது எப்படிப்பட்டதோ? அது போன்றதே இவருக்கும் எனக்கும் உள்ள உறவாகும்.