அத்தியாயம் 10
சுவைநரம்புகளைத் தூண்டும் பேரழகின்
உருவாய் – ஒரு ராட்சசி!…
காரில் செல்லும் போது வேலவன் தன்னை பஸ் ஏற்றிவிடுமாறும்… விடிந்ததும் ஊருக்கு சந்திராவோடு வருவதாகவும் கதிரிடம் சொல்ல,
“அப்போ அத்தைக்கு இன்னும் சொல்லையா?“ என்றான் கதிர்.
கதிர் கார் ஓட்ட… வேலவன் அருகில் உள்ள சீட்டில் இருந்தார். ரதியை காரில் அமர வைக்கும்போதே  பின்சீட்டில்தான் அமர வைத்திருந்தான்.
“நமக்கு கிடைச்சதே இருபது நிமிஷம்தான். அதில் என் அத்தையோட போன்ல பேசவே நேரம் முடிஞ்சிருச்சி. இதில் உன் அத்தையோட நான் எங்க பேசுறது?“ என்று விட்டு… இவனிடம் திரும்பி “நீ நிஜமாவே சாவி கொடுக்கத்தான் என்னை வரச் சொன்னியா?“ என்றும் புன்னகையாய் கேட்க,
இவன் முகத்திலும் விரிந்த புன்னகை. ஒரு கை காரை ஓட்டினாலும்… மறு கை காற்றில் கலையும் கேசத்தை கோத ”நானே நினைக்கலை மாமா இப்படி ஆகும்னு“ என்றான்.
அவர் நம்பாத பார்வை பார்க்க,
”நிஜமாவே மாமா!. உங்களையும், அத்தையையும் இவங்க வீட்டுக்கு அனுப்பி அப்புறமா பொண்ணு கேட்கலாம்னு நினைச்சேன். அப்பவும் தருவாங்களோ? மாட்டாங்களோன்னு? ஒரு சிந்தனை. இதெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கல மாமா. ஏதோ! கனவு மாதிரி இருக்கு“ என்று புன்னகையாய் சொல்ல,
அவனின் புன்னைகை முகம், இவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.
இருவருக்கும் இப்போதுதான் திருமணம் நடந்துள்ளது. கதிருக்கு ரதி மேல் அளவில்லா பிரியம் உள்ளது என்பது அவன் முகத்தில் இன்று கண்ட தவிப்பை வைத்தே புரிந்து கொண்டார் வேலவன். ஆனால் ரதி மனம்விட்டு பேசியிருக்க மாட்டாள்… இனிதானே கணவனாய் இவனை அவளுக்கு பிடிக்க வேண்டும். நாம் ஏன் இவர்களுக்கு நடுவில்?. நாம் இருக்கும் வரை இவர்கள் மனம்விட்டு பேசவும் மாட்டார்கள் என்று நினைத்து “கதிர்! என்னை ஏதாவது பஸ்ஸில் ஏற்றிவிடு“ என்று கூற,
“சரி மாமா! ஆனா குந்தவையை ஹாஸ்பிட்டல் கூப்ட்டு போகணுமே. ஏதாவது நல்ல ஹாஸ்பிட்டலா சொல்லுங்க. காட்டிட்டு அப்புறமா போகலாம்“ என்றான்.
அவர் ஒரு மருத்துவமனையின் பெயரைச் சொல்ல, நேராய் அங்கு போய் நிறுத்தினான்.
வேலவன் முன்னே சென்றுவிட, காரில் இருந்து ரதி இறங்கி நின்றாள். அவள் முகத்தில் கால்வலியின் வேதனை நன்றாக தெரிய,
“உன்னை யாரு இறங்கச் சொன்னா?“ என்று கேட்டபடி அவளை கைகளிலும் தூக்கியிருந்தான் கதிர். அவள் மெலிந்த உடலாக இப்போது இருந்ததால்… ஏதோ! மூங்கில் குச்சியை தூக்குவது போல் இலகுவாக தூக்கியிருந்தான்.
’இவர் என்ன நம்மை எல்லா இடத்திலும் தூக்குறார் கூச்சமே இல்லாம?’ என்று எண்ணியவாறே பிடிமானம் இல்லாமல் ரதி விழிக்க,
இவன் குனியாமல், தான் பேசுவதை கேட்பதற்கு வசதியாக   அவளை இன்னும் மேலே உயர்த்தி “கழுத்தை பிடிக்காட்டியும் பரவாயில்லை, சட்டையவாவது பிடின்னு ஒவ்வொரு தடவையும் சொல்லுவாங்களா?” என்று அவள் காதருகில் வாயை வைத்து மற்றவர்களுக்கு கேட்காமல் மெதுவாக கூற,
இவள் “ஙே!” என்று முழித்தாள்.
“ப்ச்! முழிக்காத!. சட்டையவாச்சும் பிடிடி!” என்றான் இன்னும் மெதுவாய். அவனின் உரிமை பேச்சில் கால்வரை கூச்சம் பரவ, சட்டையை பிடித்துக்கொண்டாள்.
இவன் நடக்க, அதற்குள் வேலவன் உள்ளே சென்றுவிட்டு… திரும்பி வந்து கொண்டிருந்தார்.
“உள்ள லேடி டாக்டர் இருக்காங்க… கூப்ட்டு போ!“ என்று ஒரு அறையைக் காட்ட,
இவன் உள்ளே சென்று இருக்கையில் ரதியை அமர வைத்துவிட்டு நின்றான்.
இவளை இன்னொரு அறைக்கு பரிசோதிக்கவென டாக்டர் போகச்சொல்ல, இவனும் எழுந்து பின்னே செல்ல,
“நீங்க எங்க சார் வர்றீங்க? இங்கேயே இருங்க!” என்றார்.
“கால்லதான அடிபட்டிருக்கு. நான் வந்தா என்ன? அதெல்லாம் தனியா விடமுடியாது“ என அடமாய் இவன் நெஞ்சை நிமிர்த்தி நிற்க,
இவனின் உருவம் பார்த்து ”கொஞ்சம் சொல்லுமா!“ என்று ரதியை பரிதாபப் பார்வை பார்த்தார் டாக்டர்.
அவள் இவனை பார்க்க,
’வெளிய போக சொல்லுவியா? நான் மாட்டேன்’ என்பது போல் ஒரு பார்வையை வீசினான் இவன்.
டாக்டருக்கு வேண்டுமானால் இவனின் செய்கைகள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். ஆனால் தாய், தந்தை இல்லாதவன், சிறுவயதிலேயே நிறைய உறவுகள் இருந்தும் ஒதுக்கப்பட்டவன், வளர்ந்த பிறகும் உறவுகளை இவன் எதிர்பார்க்காமல் இருந்துவிட்டவன். அப்படிபட்டவனுக்கு தனக்கே தனக்கென்று ஒரு உறவு இப்போது கிடைக்கும் போது ’அவளை தனியாக அனுப்புவதா?’  என்ற எண்ணம்தான் வந்தது.
’பரிசோதனைதானே செய்யப்போகிறார்கள்’ என்பது அவன் மூளைக்கு புரிந்தது. ஆனால் அவளை உயிராய் நினைக்கும் இவனின் காதல் கொண்ட மனதுக்கு புரியவில்லை.  அப்படியே புரிந்தாலும் “நான் மாட்டேன்!“ என்ற ரீதியில் தான் நிற்பான் போலும்.
ஏற்கனவே வாசலில் வைத்து இவன் பேசியதில் ரதிக்கு கொஞ்சம் பயம் தெளிந்திருந்தது. அதோடு கணவனாக உரிமையாய்தானே பேசிகிறான் என்ற நினைப்பில், அவனின் முறைப்புகூட இவளுக்கு துளியாய் மனதிற்குள் பிடித்திருந்தது. முன்னெல்லாம் மனதிற்குள்கூட பேசமாட்டாள். எப்போதும் வெட்டவெளியை வெறிப்பது போல் எதையும் சிந்தனை செய்யாமல் பற்றற்ற நிலையில்தான் இருந்திருந்தாள். ஆனால் இப்போது கதிர் உரிமையாய் பேசப் பேச… மனதிற்குள்ளும் பேசத் தொடங்கியிருந்தாள்.
இந்த நிமிடம் கண்களில் கூட பேசத் தொடங்கியிருந்தாள். ஆம்! ’உள்ள வர வேண்டாம்’ என்ற செய்தியை கண்களால் இவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
இவன் அடமாய் நிற்க,
“கால்ல மட்டும் இல்ல. கொஞ்சம் மேலேயும் அடிபட்டு இருக்கு“ என்று தயக்கமாய் அவள் சொல்ல,
“ஓ! சரி போ!“ என்று சேரில் அமர்ந்து கொண்டான்.
அவளை பரிசோதித்துவிட்டு ஊசியையும் போட்டுவிட்டு வந்து “கால்ல மட்டும் இல்ல, தொடை மேலேயும் நல்லா அடிபட்டு இரத்தக்கட்டா சிவந்து இருக்கு. தவிர குப்புற போய் வாசல்ல விழுந்ததில் உடம்பே வலிக்குதுன்னு சொல்றாங்க. தனியாகூட விட மாட்டேங்கிறீங்க. இப்படித்தான் அடிபடுற அளவு பார்த்துக்குவீங்களா?“ என்று திட்டி கேள்வியாய் முடிக்க,
இவன் அவரின் கேள்வி புரியாமல் விழித்தான்.
“உங்க வொய்ப்புக்கு நேத்து அடிபட்டிருக்கு. இன்னைக்கு வந்திருக்கீங்க. அதைக் கேட்டேன்“ என்று நிறுத்த,
ரூமில் இருந்து இதை கேட்டு கொண்டு வந்தவள், இவனை திட்டுவது பொறுக்காமல் “அது இவருக்கு….“ என்று பேச ஆரம்பிக்க,
அவளை ”பேசாத!“ என்ற பார்வை பார்த்துவிட்டு “சாரி டாக்டர்!. இனி நல்லா பார்த்துக்குறேன்!“ என்றான்.
கிளம்பும்போதும் அதே போல் தூக்கிக் கொள்ள…. இந்தமுறை இவன் சொல்லமலே ரதி… அவனின் சட்டையைப் பிடித்திருந்தாள். பார்த்த கதிரின் உதட்டில் புன்னகை என்பது தானாக வந்து உட்கார்ந்தது.
காரின் அருகில் வேலவன் காத்திருக்க, அவரோடு கிளம்பி வந்து பேருந்து நிலையம் வந்து, அவரை ஊருக்கு வழியனுப்பி வைத்தான் கதிர். ரதிமட்டும் காரின் பின் சீட்டில் காத்திருக்க, அவளின் கண்ணும் இவன் வருவதை தேடிப் பார்த்திருக்க, ’ தனக்காகவும் ஒருத்தி காத்திருக்கிறாள்!’ என்ற நிஜம் இவனுக்குள் அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது. உடம்புகூட ஜில்லென்று இருப்பதாய் தோன்றியது.
அருகில் வந்து அவள் நேராக அமர்ந்திருப்பதைப் பார்த்து “காலை சீட் மேல நீட்டிக்கோ!” என்று கார்கதவில் சாய்ந்து அவளை நேராய் பார்த்து பேச,
இவனின் பார்வை வீச்சை தாங்காமல் ”பரவாயில்லை. உட்கார்ந்துப்பேன்“ என்றாள் குனிந்தவாறே.
தவிர இப்போது இருப்பது இவர்கள் இருவர் மட்டுமே என்பது அவளுக்குள் ஏதோ போல் உணர முடியாத உணர்வைத் தந்தது.  
“நான் பேசினா நிமிர்ந்து பார்த்து பேசு. ஏன் என்னை பார்த்தா பயமா இருக்கா?“ என்று இவன் கேட்க,
இவனின் இறங்கிய குரலில் “இல்லை“ என்று நிமிர்ந்து தலையாட்டினாள்.
அப்போதும் அவனின் முகம் தெளியாமல் இருக்க, பேச்சை மாற்றவென “ஏன் டாக்டர் திட்டுனதுக்கு சாரி சொன்னீங்க?. உண்மையை சொல்லியிருக்கலாம்“ என்று சொல்ல,
”எல்லாத்தையும் அவங்ககிட்ட சொல்லணுமா என்ன?.  எனக்கு சொல்லப் பிடிக்கல. அப்புறம் அவங்க உங்க வீட்டம்மாவை நல்லா பார்த்துக்கோங்கனு தான திட்டுனாங்க. அது பிடிச்சுது. அதான் கோபம் கூட வரலை“ என்று புன்னகைக்க, இவளுக்கும் புன்னகை வந்தது.
அதை மறைக்க ரதி வேறு பக்கம் பார்க்க,
”ரொம்ப பசிக்குது. ஏதாவது ஹோட்டல்ல போய் சாப்டுட்டு கிளம்புவோமா?“ என்றான். அவள் சரியென்றதும் கிளம்பி ஹோட்டலுக்கு அழைத்து வந்தான்.
அது ஒரு அசைவ உணவகம். ஏறக்குறைய அங்குள்ள எல்லா வெரைட்டியையும் ஆர்டர் செய்திருந்தான்.
ரதிக்கு என்னவென்று கேட்க, ஒரு தோசை மட்டும் போதும் என்றாள். அதன் பின்னர் கதிர் ஆர்டர் செய்த உணவுகளை கேட்டே இவளுக்கு மூச்சு வாங்கியது. அதுவும் அவையெல்லாம் அவனின் இலையில் பரப்பப்பட… இவளுக்கு மயக்கமே வரும் போல் இருந்தது.  இவளுக்கெங்கே தெரியும் அவன் இன்றுதான் பல நாட்கள் கழித்து இரவு உணவே உண்கிறான் என்று. அதுவும் அசைவம்.
ரதியோடான திருமணம் அவனுக்கு பழைய பசியையெல்லாம் சேர்த்து தூண்ட, உணவை வெட்டு வெட்டென்று வெட்டிக்கொண்டிருந்தான். அவனை பார்த்தபடியே இவள் தோசையை சின்ன, சின்ன துண்டாக பிய்த்து உண்டாள்.
’இவர் என்ன இப்படி சாப்பிடுறார்?. அதுவும் காரசாரமா. நமக்கு சமைக்கவேத் தெரியாதே!’ என்ற எண்ணம் கூட தானாக வந்தது. அவன் வீட்டில் சமைக்க ஆள் உண்டு என்று தெரியும். இருந்தும் இவ்வாறு நினைத்தல் என்பது தானாகவே வந்தது. ஆம்! கதிரின் உரிமையான செயல்பாடுகள் இவள் மனதில், அவன் தன் கணவன் என்ற உரிமையைத் துளியாய் விதைத்திருந்தது.
அவன் நிமிர்ந்து பார்க்க, இவள் உணவை மெதுவாய் உண்ணுவது தெரிய “என்ன சாப்பிடுற? நல்லா கை நிறைய எடுத்து சாப்டு. இன்னும் வேற எதாவது ஆர்டர் பண்ணி சாப்டணும். அப்பதான் ஊருக்கு“ என்று அவன் சட்டமாய் பேச,
இவள் உணவை அள்ளி, அள்ளி வேகமாக உண்டாள்.  காதல் அழகிலும், தேனொழுகும் பேச்சிலும் பிறக்குமென்று யார் சொன்னது?. கரடுமுரடான பேச்சிலும், உரிமையான அதட்டலிலும்கூட கன்னபின்னாவென்று தாறுமாறாய் பிறக்கும்.
 ” கூற்றமோ கண்ணோ பிணையோ மட்வரல்
நோக்கம்இம் மூன்றும்ட உடைத்து “
                       _ திருக்குறள்(தகையணங்குறுத்தல்)
பொருள்:
    இப்பெண்ணின் கண்கள் என்னை வருத்துவதால் எமனோ? என்மேல் கண்ணோட்டம் செலுத்துதலால் கண்ணோ? இயல்பாக மருளுவதால் மானோ? இம்மூன்றின் தன்மைகளையும் உடையவாய் இருக்கின்றன.