அத்தியாயம் 24
 
விரிந்த புன்னகை முகத்துடனே ரமேஷ் மானஸாவை பார்த்திருக்க, அவள் கண்களில் திரண்ட நீர் விழுவேனா என்றிருந்தது.
‘என்ன எதுவுமே பேசாம நிற்கிறா?’ என்று யோசித்தவன் அருகில் வந்து பார்த்து “என்ன கண்ணீரு?” என்று வினவ,
“உங்களுக்கு இந்த மேரேஜ் நடக்காதுன்னு முன்னமே தெரியும்தான?” என்றாள் கண்களை துடைத்தபடி.
“ஆமா!” என்று சொல்ல,
எதுவுமே பேசாமல் வீட்டிற்கு வேகமாக வந்துவிட்டாள்.
’என்னடா இது இவளா வந்தா, ஒரு கேள்விதான் கேட்டா, பேசாம போறா!. ஆனா ஏன் கண்ணீர் வந்துச்சாம்?. நம்மாள் அழுகுற டைப் இல்லையே!’ என்று யோசித்தவன், பின் யோசிக்காமல் மானஸாவின் வீட்டிற்கு வந்தான்.
கண்மூடி சேரில் அமர்ந்திருந்தவள் இவன் உள்ளே வந்த வேகத்தில் எழுந்து நிற்க,
“எதுவுமே பேசாம வந்திட்ட!” என்றான்.
“என்ன பேச?” என்று மானஸா நேர்பார்வை பார்க்க,
”நான் உன்னை ஏமாத்திட்டதா நினைக்கிறீயா?” என்றான்.
அவள் அமைதியாக நிற்க,
“ரேணுகா அந்த பையனோட மீனாவுக்கு தெரியாம சுத்துறது தெரியும். சீரியஸா லவ் பண்றாங்க போல. ஆனா எனக்கு தெரியும்னு யாருக்கும் தெரியாது. இந்த ராமலிங்கம் மாமா என்னடான்னா எங்கம்மாகிட்ட என் கல்யாணத்தை பேசுறதில் அவ்வளவு ஆர்வம். சரி எல்லாரும் நெருக்கடி குடுக்குறாங்கன்னு உன்கிட்ட லவ் சொன்னா, உனக்கு என்னை பிடிக்கலை” என்று இவன் பேச,
மானஸா ஒரு பார்வை பார்த்தாள்.
”உனக்கு என்னை பிடிக்காதுதான? அதாவது லவ் பண்றா அளவுக்கு………” என்று இன்னும் இவன் சந்தேகமாக கேட்க,
அதற்கும் அமைதியாய் ஒரு பார்வை பார்த்தாள்.
“இனி என்னை மறந்து உன்னையும் டிஸ்டப் பண்ணிடக்கூடாது, ஆளாளாக்குவேற டார்ச்சர் பண்ணுறாங்களேன்னு நினைச்சி கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன். விஷயம் தெரிஞ்சி ரேணுகா… வீட்டில் இல்லன்னா மீனாகிட்ட பேசுவானு பார்த்தா அவபாட்டுக்கு நல்லபிள்ளை மாதிரி மேரேஜூக்கு ஓகே சொல்லுறா. வந்த கோபத்துக்கு ராமலிங்கம் மாமாகிட்ட உண்மையை சொல்லிடலாம்னு நினைச்சேன். தெரிஞ்சா அவர் தாங்கமாட்டார். பாவம் மனுஷன். அவருக்கு பொண்ணை எங்க வீட்டுக்கு குடுக்கணும்னு அவ்வளவு ஆசை. அவங்க குடும்பத்துக்கு புரியுற மாதிரி ரேணுகாவா சொல்லிடுவானு அமைதியா இருந்தா, இவ இந்த கல்யாணத்துக்கு மாட்டேன்னு சொல்லியிருக்கணும், இல்லன்னா அந்த பையனை பத்தி வீட்லயாவது பேசியிருக்கணும். மொத்தமா ஏமாத்திட்டா. இதை முன்னமே எங்கம்மாகிட்ட சொன்னா, என்னமோ நான் பொய் சொல்றதா நினைப்பாங்க. தவிர நானா இந்த விஷயத்தில் எப்படி தலையிட்டாலும் தப்பாதான் தெரியும்” என்று சொல்ல,
”இப்போ அவங்க அப்பா எங்க?” என்றாள் மானஸா.
”யாரு ராமலிங்கம் மாமாவா? அவருக்கு விசயம் தெரிஞ்சதில் இருந்து நொந்து போய் உட்கார்ந்திருக்கார். இங்க மேல மாடியில் அப்பாவோடதான் இருக்கார். அந்த பொண்ணு மாசமா இருந்தாகூட ஆச்சர்யப்படுறதுக்கு ஒன்னுமில்ல. அந்த லட்சணத்தில் ஒருநாள் ஆட்டோக்குள்ள உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க. இதையெல்லாம் அவர்கிட்ட நான் எப்படி சொல்றது?” என்றான் சங்கடமாய்.
”ஓ! மீனாக்கா, அவங்க அம்மா எல்லாரும் எங்க இருக்காங்க?”
“அவங்களையும் வீட்ல தனியா விட்டா சரியா வராது, ஆளாளுக்கு ஏதாவது பேசுவாங்கன்னு செல்வன் வீட்டுக்கு அனுப்பியாச்சி” என்று சொல்ல,
”ம்!” என்று இவள் அமைதியாகிவிட,
“இந்த கல்யாணம் நடக்காதுன்னு தெரியும். அதுக்காக உன்னை டிஸ்டப் பண்ணனும்னு நினைக்கலை. சோ நீ எதுவும் தப்பா நினைச்சிக்காத! ஆனா உனக்கு ஏன் கண்ணீர் வந்தது?” என்று புருவம் உயர்த்த,
“தெரியாது.” என்றுவிட்டு வாசலைப் பார்த்தாள்.
“எல்லாரும் அம்மாவோட பேசிட்டு இருக்காங்க. இப்ப யாரும் இங்க வர வாய்ப்பில்லை. நான் இங்க யார் வீட்டுக்குள்ளேயும் போனதில்லை. அதனால வந்தாலும் தப்பா ஒன்னும் நினைக்கமாட்டாங்க” என்றான் புன்னகையாய்.
மானஸா எதுவுமே பேசாமல் அமைதியாக நிற்க,
”நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்ல” என்றான்.
“நான் என்ன கதறியா அழுதேன்?. சும்மா ஒரு ட்ராப் கண்ணீர்” என்று இவள் சமாளிக்க,
”அந்த சும்மாகூட உனக்கு அவ்வளவு சீக்கிரமா வராதே. அதான் ஏன் வந்தது?” என்றான் விடாமல்.
”தெரியலை! ஆனா மேரேஜ் நின்னு போச்சுன்னு தெரிஞ்சதும் ஷாக்கா இருந்தது. ஓடிவந்து உங்களை பார்த்தா ஹாஸ்பிட்டல்ல நைட் பேசினோமே அது ஞாபகம் வந்திடுச்சி” என்றாள் மறையாமல்.
”வேற?”
”வேற எதுவுமில்ல” என்றாள். ஆனால் ஏனென்று தெரியாத மனத்தின் படபடப்பொன்றை இவளின் கண்கள் காட்ட,
”உனக்கு என்னை பிடிக்குமா?” என்று கேட்டேவிட்டான்.
”என்ன?” என்று இவள் விழிக்க,
”எனக்கு லவ் சொல்லதான் தெரியல. அட்லீஸ்ட் யாருக்காவது நம்மளை பிடிச்சிருக்கானாவது தெரிஞ்சிக்கணும்தான? லவ் பண்ற அளவுக்கு பிடிக்குமா?” என்று கேட்க, அன்று விரும்புவதாக சொன்ன இரவில் இருந்த படபடப்பு இன்று இல்லை. நின்று, நிதானமாக பேசினான்.
”நிஜமா எனக்கு தெரியல. ஆனா டெய்லி நைட் கண்மூடி உட்கார்ந்தா உங்க முகம் ஞாபகம் வரும். அதை நினைக்காம இருக்க படிக்க, கோர்ட்ல வேடிக்கை பார்க்கன்னு நிறைய என்னலாமோ பண்றேன்” என்றாள் உண்மையாய்.
”அப்போ என்னை நினைக்காம இருக்க ட்ரை பண்ணியிருக்க?” என்று அவனின் குரல் உள்ளே போக,
இவள் எப்போதும் அவனை நேர்கொண்ட பார்வைதானே பார்க்கிறாள். அவனின் முகமாற்றத்தில் “எஸ்! ஆனா முன்னாடிலாம் படிக்கப் பிடிக்காது. இப்போ உலகம் அவ்வளவு மோசம் இல்லையோனு தோணுது. பிடிக்காத சப்ஜெக்ட்டைக் கூட க்ளாஸ்ல உத்து, உத்து கவனிக்கிறேன்” என்றாள் உண்மையாக.
இவளின் முகத்தையே இமைக்காமல் பார்த்திருந்தவன் “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் ஆழ்ந்த குரலில்.
“நான் லவ் பண்றேன்னே சொல்லலையே!” என்ற மானஸாவின் குரலில் ஒரு கலக்கம்.
”அதான் பிடிச்சிருக்கே. அப்புறம் என்ன? லவ் மெதுவா பண்ணலாம். ரொம்ப நாள் கழிச்சி மேரேஜ் பண்ற அளவுக்கெல்லாம் எனக்கிட்ட டைம் இல்ல. இப்போ மேரேஜ் நின்னதுக்கும் சேர்த்து வேற பொண்ணை பார்த்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமா கல்யாணம் முடிச்சி வைக்கணும்னுதான் வீட்ல நினைப்பாங்க.” என்று அவன் சொல்ல,
“மேரேஜ் லைப்புக்கு நான் தயாரானுகூட எனக்கு தெரியல. எப்படி நடந்துப்பேன்? இது சரியா வருமா?னு எதுவும் எனக்கு புரியவும் இல்ல. எப்படி நான் முடிவெடுக்க? இதுக்கெல்லாம் மேல என்னோட கடந்தகாலம்! அது மத்தவங்களுக்கு தெரியும்போது எப்படி எடுத்துப்பாங்க?. எப்பவும் நான் மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிக்கிறது இல்லை. ஆனா மேரேஜ்னா அதில் உங்க சொந்தங்களும் வரும்போது இதெல்லாம் ஒரு பேச்சாகி உங்களுக்கு மன உளைச்சல் ஆகிட்டா?” என்றாள் நியாயமாக.
அவள் இவனுக்காக யோசிக்கிறாள் என்றதில் மனது குதுகலமாக ”அடுத்த காம்பௌண்ட்ல தினேஷ் இருக்கான் தானே… அவன், அவன் அம்மாக்கு முதல் மேரேஜ் மூலமா பிறந்த பையன். இதுவரைக்கும் அவனுக்கு தெரியாது. நம்ம தெரு திரும்பினதும் ஒரு வெல்டிங் கடை இருக்கே… அந்த வெல்டிங் கடைக்காரர் ஒரு கொலை பண்ணி ஜெயிலுக்கு போயிட்டு வந்தவர். அப்பாவோட டெய்லி காலைல நின்னு பேசுவாரே அந்த ஜெயராமன் அவர் வீட்டுக்கே தெரியாம ஒரு வீடு மெயின்டேன் பண்ணி இப்போ விட்டுட்டார். இது மாதிரி நிறைய சொல்லுவேன்” என்று ரமேஷ் பேச,
”நான் என்ன பேசுறேன்… நீங்க என்ன சொல்றீங்க?” என்றாள்.
“மனுஷனா பொறந்தா எல்லாருக்கும் ஒரு பாஸ்ட், ப்ரெசன்ட் இருக்கத்தான் செய்யும். அது எல்லாருக்கும் சரியா அமைஞ்சிடாது. நாளைக்கி உன்னை பத்தி பேசுறவங்களுக்கும் இப்படி ஏதாவது ஒரு கடந்த காலம் இருக்கும். உன்னை பத்தி பேசுறவங்ககிட்ட நான் அவங்களை பத்தி டீட்டெய்லா பேசிக்கிறேன். சோ அதைப் பத்தி நீ யோசிக்காத!” என்று கூற,
”அது மட்டுமில்லை. நமக்குள்ள, நம்ம ரெண்டு வீட்டுக்குள்ளேயும் என்ன ஒத்துப்போகும்?” என்று இவள் கேட்க,
”நீ எனக்கு மேட்ச் இல்லைன்னு நினைக்கிறீயா? என்றான்.
”எனக்கு எப்பவும் நான் குறைனு தோணினதில்லை. ஆனா உங்க பக்கத்தில் பெஸ்ட்டா ஒரு பொண்ணு நிற்கணும்னு நினைச்சிருக்கேன்” என்றாள்.
”எனக்கு உன்னைவிட பெஸ்ட்டா யாரையும் பார்க்க மட்டுமில்ல, நினைக்கவும் தோணலை. இப்போ என்ன பண்ண?” என்றான் சிறுபுன்னகையுடன்.
அதில் இவளின் மன இறுக்கம் தளர, “வக்கீல்ன்னா கொஸ்ட்டீனா கேட்கணுமா?” என்றாள் புன்னகையுடன்.
“எத்தனை கொஸ்டின் கேட்டாலும் பதில் நமக்கு சாதகமா வரலையே!” என்று இன்னும் ரமேஷ் புன்னகைக்க,
”உங்க வீட்ல மேரேஜ் நின்னு போச்சுன்னு வருத்தமா இருப்பாங்க. நாம இங்க இப்படி பேசுறோம்” என்றாள்.
”அடுத்து பொண்ணு கிடைச்சிடுச்சின்னா… கவலையை மறந்துட்டு கல்யாண வேலையைப் பார்ப்பாங்க. ராமலிங்கம் மாமாவுக்கும் கொஞ்சம் கவலை குறையும். ஆனா அந்த பொண்ணு நீயா இருந்தா ரமேஷ்சார் கூட ஹேப்பி!” என்று அவன் புருவம் உயர்த்த,
”நீங்க எப்பவும் ஈசியா எதையும் சமாளிச்சிடுவீங்க. ஆனா மேரேஜ் லைப் நான் எப்படி எடுத்துப்பேன்னு எனக்கே தெரியலையே” என்றாள் கலக்கமாக கையைக் கட்டிக்கொண்டு.
அவனும் அதேபோல் கையைக் கட்டிக்கொண்டு, “நீ சின்ன பொண்ணு இல்லை. ஏற்கனவே காலேஜ் முடிச்சிருக்க. இங்க உள்ள சூழ்நிலை உன்னால புரிஞ்சிக்க முடியும்தானே. நீ மேரேஜ்க்கு ஓகேனு மட்டும் சொல்லு. ரெண்டு வீட்லயும் பேசுறதை நான் பார்த்துக்குறேன். அண்ட் உனக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் உள்ள லைப் கண்டிப்பா பிடிக்கும்” என்றான் ஆழமாய் பார்த்தபடி.
”ஆனா நீங்க லவ் இன்னும் சொல்லல” என்றாள் கண்களை புன்னகையாய் உருட்டி.
இவன் கேள்வியாய் பார்க்க,
”அன்னைக்கும் கல்யாணம் பண்ணிக்க சம்மதமானுதான் கேட்டீங்க” என்றாள்.
”சரி! இப்போ சொல்றேன். இதுவரை எந்த பொண்ணும் என்னை கை நீட்டி அடிச்சதில்லை. அன்னைக்கி என்னை கன்னத்தில் அடிச்சதானே. அதுக்கு பதிலடியா அடிச்சி, கடிச்சி உன்னோட ரெண்டு கன்னங்களையும் சிவக்க வைச்சு, உன்னை பாடாப்படுத்த ரெண்டு பிள்ளைங்களாவது பெத்துக்கணும். லவ் யூ!” என்றான் இன்னும் நெருங்கி வந்து.
இவள் ஒரு பார்வை பார்க்க,
”கல்யாணம் பண்ணினாதான் குழந்தை பிறக்குமா என்ன?னு பங்கமா கேள்வி எதுவும் கேட்டுடாத! எனக்கு இப்படித்தான் லவ் சொல்ல வருது!” என்றான் சிரித்து.
”நல்லவேளை முன்னாடியே சொல்லிட்டீங்க!” என்று இவளின் முறைப்பு புன்னகையோடு இருக்க,
“நீ அப்பவே இருந்து ஒரு பார்வை பார்க்குற. ஆனா அதுக்கு என்ன மீனிங்குனுதான் எனக்கு புரியல” என்றான் தலை கோதி.
“எனக்கு எப்படி உங்களை பிடிக்க ஆரம்பிச்சிதுனு பார்த்தேன்” என்று உண்மையைச் சொல்ல,
”இதெல்லாம் கொஞ்சம் வெட்கப்பட்டு சொல்லணும்!” என்றான் வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கி.
”வரலனா என்ன பண்ண?” என்று இவள் கேள்வியாய் முழிக்க,
”விடு! மேரேஜ்க்கு அப்புறம் வர வைச்சிடலாம். ஆனா நீ இன்னும் பதில் சொல்லவே இல்ல” என்றான்.
”நான் உங்களை உருகி, உருகி லவ் பண்றேன், நீங்க இல்லைன்னா எனக்கு லைப்பே இல்லை இப்படி எல்லாம் எனக்கு  பேச தோணல. ஆனா கண்டிப்பா இந்த நைட்ல இதுமாதிரி எந்த பையன் வந்திருந்தாலும் வாசலுக்கு வெளிய நிற்க வைச்சுதான் பதில் சொல்லியிருப்பேன். உங்களை அப்படி முடியாது” என்று சொல்லிவிட,
“இங்கிருந்து நான் போனபிறகு செல்லம்மா பாட்டிகிட்ட நான் வந்திட்டு போனதை சொல்லுவியா? என்றான்.
”நானா யார்கிட்டையும் எப்பவும் எல்லாத்தையும் ஒப்பிக்கிறது இல்லையே!” என்று இவள் தயங்காமல் சொல்ல,
”யாராவது வந்துட்டு போனாங்களானு பாட்டியே கேட்டாலும் நான் வந்ததை சொல்லுவியா? என்றான்.
இவளிடம் பதிலே இல்லை.
”லவ் பண்ணா பொய் சொல்றோமோ இல்லையோ, நிறைய மறைச்சிடுவோம். அப்படி வெளிய சொல்ல முடியாததை என்கிட்ட மட்டும் ஷேர் பண்ணனும்னு தோணுச்சின்னா… கண்டிப்பா சொல்லிடு!” என்று அவன் இன்னும் நெருங்கி நின்றான்.
இதுவரையிலும் இவள் அனுபவித்திராத சூழ்நிலை. இதிலிருந்து விடுபடவென ”ஒவ்வொரு கொஸ்டின் கேட்கும்போதும் கொஞ்சம், கொஞ்சமா கிட்ட வரணும்னு ஏதாவது வேண்டுதலா?” என்று மானஸா கேட்டுவிட,
“சில கேள்வியெல்லாம் பட்டுபட்டுனு கேட்கக்கூடாது அனுபவிக்கணும்” என்றான் புன்னகையுடன். கூடவே ”நான் கேள்வியா கேட்குறேன்னு சொல்லிட்டு நீ இப்போ கேள்வியா கேட்குற!” என்றான்.
அடுத்த என்ன பேசவென ஒரு நீண்ட அமைதி.
“நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு. எப்பவாவது வீட்ல கூப்பிட்டு பெரியவங்க பேசினா… இல்ல உங்க வீட்டில் நம்ம கல்யாணதுக்கு பேசினா நீ ஓகே சொல்லுவியா?” என்று கேட்க,
”சரி!” என்று இவள் தலையாட்ட,
”ஓகேவா?” என்றான் இன்னும் இதெல்லாம் நிஜமா என்று நம்ப முடியாமல்.
”ஆமாம்” என்று இவள் மீண்டும் தலையாட்ட
”நம்பவே முடியல நீ ஓகே சொன்னதை!” என்று இன்னும் கொஞ்சம் நெருங்கிவர, விஜய்யின் கார் சத்தம் வெளியே கேட்டது.
”போச்சு! விஜய் கார் சத்தம். யார், யாரெல்லாம் வந்திருக்காங்கன்னு தெரியலை. இன்னும் வீட்டில்வேற எல்லாரையும் சம்மதிக்க வைக்கணும். பை!” என்று படபடப்பாய் பேசிவிட்டு வாசல் வரை சென்றவன்… திரும்பி வந்து ”தேங்க்ஸ்!” என்றான் மனம் நிறைந்த புன்னகையுடன்.
”ஏன்?” என்று இவள் கேள்வியாய் பார்க்க,
”அவ்வளவு ஈசி இல்ல நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றது. அதைவிட ரொம்ப நேரம் என் கண்ணைப் பார்த்து பேசுன முதல் பொண்ணு நீதான்” என்றும் சொல்ல… அவனின் புன்னகை இவளின் முகத்தில் பரவியது.
செல்லும் அவனின் கண்களில் ஏனோ காதல் நிறைந்த ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
புதிய உணர்வுகளின் இதயமாய் இவள்,
காதல் சுமக்கும் காவியமாய் அவன்!
”மனசுல பூங்காத்து நீ
பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குனு ஒரு தேசம்!
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்!”(பாடல் வரிகள்)