அத்தியாயம் 8

 

உனையே புலன்களென உணர்கிறது – என்

ஒவ்வொரு தலைகோதுதலும்…

 

முதல் நாளன்று மொழிக்காக, கடையில் காலை 9.00 மணி வரை காத்திருந்த ரமேஷ்… எதிர்கடையின் பணியாரங்களையும் காலி செய்து அதன் பிறகே கோர்ட்டிற்கு கிளம்பினான்.

மொழிதான் காலை ஆறு மணிக்கு முன்னமே வீட்டிற்குள் நுழைந்துவிட்டாளே. எப்போதும் போல பின்வாசலைத் திறந்து, நுழைந்தே பாத்ரூம் சென்று குளித்து வந்தாள். முன்வாசல் வழியாய் வந்தால் இவள் வரும் அரவம் கேட்டு ஆது எழுந்துவந்து கட்டிக்கொள்வாள். அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து வந்தமொழியால் குளிக்கவும் முடியாது. எனவே பின் வாசல் வழிசெல்வதையே மொழி வழக்கப்படுத்திக் கொண்டாள்.

 

குளித்து வந்து பார்த்தால்…. நேற்று இரவு இவள் கிளம்பியபோது ஹாலில் போடப்பட்டிருந்த பெட்டிலேயே ராகவனும், ஆதுவும் உறங்கிக் கொண்டு இருந்தனர். மொழிக்கு பார்த்தவுடனேயே புரிந்துவிட்டது, கனி சொல்ல சொல்ல கேட்காமல் இருவரும் விளையாடி அங்கேயே தூங்கி இருக்கிறார்கள் என்று.   

ஹாலில் அவர்களைச் சுற்றிலும் பொருட்கள் இறைந்து கிடந்தன. எதுவும் ஒதுங்க வைக்கப்படவில்லை. அதுவே சொன்னது கனி இவர்கள் மேல் உள்ள கோபத்தில் அவைகளை எடுத்துவைக்காமல் சென்றிருக்கிறாள் என்று. காலையில் எழுந்தவுடன் ஆதுவுக்கு கனியிடமிருந்து கிடைக்கும் திட்டுகளை விட, ராகவனுக்கே அதிகமாக கிடைக்கும்.

“ஆது குட் கேர்ள். நீங்கதான் அவளை வீணாக்குறீங்க. முதல்ல உங்களுக்குதான் பனிஷ்மெண்ட் கொடுக்கணும்“ என்று கனி அவரை நிற்கவைத்து கேள்வி கேட்பாள். அதுவும் அவள் கையில் கரண்டி, பூரிகட்டை என ஏதோ ஒன்று இருக்கும். சமையலறைக்குள் சென்றுவிட்டு வந்து மீண்டும், மீண்டும் திட்டுவிட்டுச் செல்வாள். ஆது ராகவனின் அருகில் வாய்பொத்தி சிரித்து நிற்க, ராகவன்தான் திருதிருவென முழித்துக் கொண்டு நிற்பார்.

 

மொழி, தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் வந்து சோபாவில் உட்கார்ந்தால் அவ்வளவுதான் “நீயும் வந்து இவங்களை என்ன? ஏதுன்னு, ஏதாவது கேட்குறீயா?“ என இவளுக்கும் இரண்டு திட்டுகள் கனியிடமிருந்து கிடைக்கும். கனி எவ்வளவு கோபப்படுகிறாளோ அவ்வளவு அக்கறையையும் குடும்பத்தின் மீது காட்டுவாள். ஏனெனில் திட்டினாலும் மறக்காமல் மொழியின் கையில் பால் டம்ளரை திணித்துவிட்டுச் செல்வாள்.

அந்தக் காட்சியை இப்போது மொழி மனக்கண்ணில் நினைக்கையிலேயே சிரிப்பு பீறிட்டு வந்தது. ’ஒரு அரைமணி நேரம் கழித்து அந்தக் காட்சியை கண்குளிர காணலாம்’ என்று நினைத்துக் கொண்டே வந்து தன் ரூமில் ஒதுங்கிக் கொண்டாள்

.

மொழி மகப்பேறு மருத்துவராக உருவாக பெரும்பங்கு ராகவனுடையது. மொழி குழந்தை பெற்ற கையோடு ’மருத்துவராக விரும்புகிறேன்’ என்று முன்பு சொன்னபோது… எந்த மறுப்பும் கூறாமல் “சரி!” என்றிருந்தார் ராகவன். லதீபாம்மா உட்பட அனைவரும் மொழியின் முடிவு குறித்து…. ’இனி என்ன செய்ய?’ என யோசித்து கொண்டிருக்க…. ராகவன் மறுவாரமே வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருந்தார்.

“ஏன்ப்பா?“ என மொழி கேட்டதற்கும்,

“இன்னும் கொஞ்ச மாசத்துல நீ காலேஜ் சேரணும். அதுக்கும் முன்னாடி எண்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கும் நிறைய படிக்கணும். நீ இப்பவே படிக்க ஆரம்பிச்சிடு. குழந்தையை நானே முழுசா பாத்துக்கிறேன். எதைப்பத்தியும் யோசிக்காதம்மா!“ என்றார் தாயுமானவராக,

 

அன்று ஆரம்பமானது தான் அவரின் ஆதுவை வளர்க்கும் வேலை. ஆது அழுதால் பசியாற்றுவது மட்டும்தான் மொழியின் வேலை என்றாகிப் போனது. ஆதுவின் மற்ற அனைத்தும் ராகவன் என்றாகிப் போனார். வீட்டு வேலை அனைத்தையும் கனி பார்த்துக் கொண்டாள்.

பணப்பிரச்சனைதான் ராகவனுக்கு இல்லையே. ஆதுவை வளர்த்த பிறகே தனது வேலைப்பற்றி சிந்திக்கும் மனநிலையில் இருந்தார்.

 

“வேலை விட்டுட்டா பாப்பாவை பார்க்கணும். நாங்க பார்த்துகிறோமே“ என லதீபாவும், இந்துவின் அம்மாவும் ராகவனிடம் கேட்க,

“இதைவிட பெரிசா சம்பாதிக்கப்போற பெரிய சொத்து எதுவுமில்லைமா“ என முடித்துக் கொண்டார் ராகவன்.

மொழிக்கே அவரைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது. ’இவரா இதற்கு முன் வேலையை மட்டுமே பெரிதாய் நினைத்துக் கொண்டு ஊருக்கு வந்துபோன அப்பா?’ என்று வியந்துதான் போயிருந்தாள்.

 

காலம் ஒரு மனிதனை மாற்றிக் காட்டும் மிகச்சிறந்த மந்திரக் கண்ணாடி. ’நம் முகம் இதுதான்’ என நாம் நினைத்திருக்கும் பொழுதுகளில்…. திடீரென நம்மின் வேறொரு பிம்பத்தையும் காட்டி மிரள வைக்கும். அது காட்டும் நம் கொடூர முகங்களை மனதால் நாம் உணர்ந்து… நம்மை மாற்றிக் கொண்டாலே, உலகத்தில் அனேக குற்றங்கள் நிகழாமலே போய்விடும்.

 

“ஏனெனில் கண்ணாடிகள் பொய் பிம்பங்களைக் காட்டுவதில்லை…. நேர்மையாளர்களின் மனதைப் போல“. என்ன! நாம்தான் அதுகாட்டும் பிம்பங்களை நின்று படிப்பதும் இல்லை, உணர்வதுவும் இல்லை, மாற்ற முனைவதும் இல்லை.

ராகவன் தன்னைத்தானே நல்லமுறையில் மாற்றிக்கொண்டார். பிறந்த குழந்தையை எப்படி தூக்குவது?, குளிக்க வைப்பது?, எப்படி கையாள்வது? என்பது போன்ற அனைத்தும் அவருக்கு அத்துப்படியானது. ஆதுவுடனான அவரின் ஆரம்ப நாட்களில்… இந்துவே பகலில் அவர்களுடன் அதிக நேரம்  செலவிட்டாள். சில நாட்களில் காலையிலேயே இந்துவின் அம்மா ”ஆதுவை பார்க்கணும்னு அழுகுறா“ எனக் கூறி விட்டுச் செல்வார்.

 

ஒரு காலத்தில் கல்யாணி ஏதாவது பேசினாலே…. தோரணையாய் எரிந்து விழுந்தவர் ராகவன். இன்றோ “பாப்பா எப்போ பெரிசாகும்?…. எப்போ என்னை அக்கா கூப்புடும்?… எப்போ என்னோட விளையாட வரும்?…. பாப்பா எதுக்கு அழுகுது?…. இட்லி சாப்டாதா?” என்பது போன்று மழலைமொழியில் இந்து கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் கர்ம சிரத்தையாய் பதிலளித்தார்.

 

ஆண்களுக்கு தாய்மை மனது இல்லை என்றும், குழந்தையை வளர்க்கத் தெரியாது என்றும் யார் சொன்னது?. ராகவன் தன் நெஞ்சில் தூளிகட்டி ஆதுவை வளர்த்தார் என்பதே சாலச்சிறந்த கூற்றாகும். அவ்வளவு அருமையாக வளர்த்தார்.

ஆது மொழியைவிட ராகவனையே அதிகம் தேடினாள். கல்யாணிக்கு குழந்தை பிறந்திருக்கும் போது எதையெல்லாம் செய்யத்தவறியதாய் நினைத்திருந்தாரோ….. அவற்றையெல்லாம் ஆதுவிற்கு வழங்கினார் ராகவன்.

 

மொழியும், கனியும் படிக்கவென கல்லூரி சென்ற பிறகு, ஆதுவை வைத்துக்கொண்டு கல்யாணியிடமே அதிகம் மனதால் பேசினார். காலம் கடந்த வயதிலும் உயிரோடு இல்லாத மனைவியை நினைவாலே காதல் கொள்ளும் காதலன் ஆனார். ஏறக்குறைய காதலி இறந்த பின்னும் அவளையே நினைத்து உருகிடும் பித்தனுமாயினார்.

”சதைகளில் மட்டுமே பூக்கும் காதல் அதிக காலங்களை கடப்பதும் இல்லை, கடந்து நின்று நிலைப்பதும் இல்லை“ அது புரிந்ததாலோ என்னவோ?…. ராகவன் தன் மனதில் காதலை பூத்துக்கொண்டார். ஒருவேளை கல்யாணி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால்… அவரை அண்ட வரும் பிணிகூட தெறித்து ஓடியிருக்குமோ?…. இவரின் காதல்கண்டு.

 

உறவுகள் இல்லை…. சொந்தபந்தங்களின் தொடர்பு இல்லை என்ற கவலையே இல்லை ராகவனுக்கு. தன் பெண்களை படிக்க வைப்பதும், ஆதுவை வளர்ப்பதுமே அவரின் கடமை என்றானது.

’ஆண்களை நம்பினால் நடுத்தெருவில் தான் நிற்போம்’ என்ற மனநிலைக்கு தள்ளப்பட்ட கனி… எதிலும் பெண்கள் இருந்த இடத்தையே அதிகம் தேடினாள். பெண்கள் படிக்கும் பள்ளிக்கு மாறினாள். பெண்கள் கல்லூரி, பெண்கள் பள்ளியின் ஆசிரியை என அனைத்தையும் பெண்கள் மயமாய் தேடிக் கொண்டாள். மொழியாவது விஜய்யின் மண்டையைத்தான் உடைத்தாள். இவள் எந்த ஆணின் மண்டையும் யோசிக்காமல் உடைப்பாளென்ற நிலையானாள். பல நேரங்களில் ஆதுவையும், ராகவனையும் மேய்த்து அடக்கி, வீட்டை பராமரிப்பவளும் ஆயினாள்.

ராகவனுக்கு கனியின் மாறுதல் புரிந்தாலும்…. அவரின் கருத்துக்களை திணிக்க முயலவில்லை. காலம் தன்னை மாற்றியது போல அவளையும் மாற்றும் என நம்பினார்.

 

ஆதுவின் மூன்று வயதில் கனி பணிபுரிந்து கொண்டிருந்த பள்ளியில்தான் அவளை சேர்த்தனர். அவள் பள்ளி சென்ற முதல்நாள் அவளைவிட அதிகம் அழுதது ராகவனே. ”நமக்கும் மூன்றே வயது ஆகி தொலைத்திருந்தால் என்ன?“ என்று புலம்பித் தவித்தார். ராகவனுக்கு  அதன் பிறகே வீட்டில் இருப்பது கடினமானது. மிகவும் அதிகமாக மூளையை கசக்கி யோசித்து அவர் கண்டுபிடித்த சிறந்த வழி… ஆதுவின் பள்ளி அருகிலேயே ஜெராக்ஸ் மெஷினுடன் கூடிய ஸ்டேஷ்னரி கடை ஒன்றை நடத்துவது என்பது. ’வேலைக்கும் போக வேண்டும், அதேசமயம் ஆதுவின் அருகிலும் இருக்க வேண்டும்’ என நினைத்தே அவரின் இந்த வழி.

அதன் பிறகு அவள் பள்ளி சென்றால் இவர் கடையைத் திறந்தார். அவள் பள்ளி முடித்து வாசலுக்கு வந்தால்…. இவர் கடையை அடைத்துவிட்டு ஆதுவை அள்ளிக்கொண்டு வீடு திரும்பினார். மொத்தத்தில் அவரின் மன உலகம் கல்யாணியாகவும், நிஜ உலகம் ஆதுவாகவும் இருந்தனர். இவர் அவ்வளவு பார்த்ததால் மட்டுமே மொழியால் மருத்துவத்தை கவலையின்றி படிக்க முடிந்தது.

 

இதையெல்லாம் இன்று மொழி படுத்துக்கொண்டே நினைத்திருக்க… ஹாலில் கனியின் சத்தம் அதிகமாகக் கேட்டது. ’ஆரம்பிச்சாச்சா!’ என நினைத்தவாறே மொழி அக்காட்சியை காண குதூகலமாய் வந்தால், கனி ஆதுவை விட்டுவிட்டு…. ராகவனை காச்பூச் சென்று கத்திக் கொண்டிருந்தாள்.

“என்ன கனி?“ என மொழி கேட்க,

“ம்! எல்லாம் நீ கொடுக்குற இடம்க்கா. நைட் நீ கிளம்பி போனதுக்கு அப்புறம் “இருட்டுல விளையாடதீங்கன்னு“ நான் சொன்னதையும் கேட்காம, வீட்டு வாசல்ல கிரிக்கெட் விளையாடி… பந்தால எதிர்வீட்டு ஜன்னலை உடைச்சிட்டாங்க. அந்த வீட்டம்மா என்கிட்ட வந்து இல்லாத பேச்செல்லாம் பேசி கத்திட்டு, காசவாங்கிட்டு போகுது. இது இவங்களுக்கு தேவையா? நீயும் கண்டிக்க மாட்டேங்கிற“ என மொழியிடமும் சண்டை போட,

ஆதுவும், ராகவனும் ”அந்த வீட்டுக்குள்ள விழுந்த பந்தை எடுக்க முடியலையே… எப்படி எடுக்க?” என்ற அதிமுக்கிய டிஷ்கஷனில் இருந்தனர்.

மொழி அவர்களிடம் திரும்பி “ஷ்! பேசாம அமைதியா இருங்க“ என இருவரிடமும் என முனங்கிவிட்டு, “ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க கனி. விட்ரு, அடுத்தமுறை இப்படி ஏதாவதுன்னா கண்டிப்பா பனிஷ்மெண்டு தான்“ எனத் திட்டுவது போல் பரிந்து பேச,

“அதான! நீ என்னைக்கு கண்டிச்ச?. இப்படியே அவங்களுக்கு முன்னாடி பரிஞ்சுபேச வந்திரு“ என கனி முறைத்துவிட்டு,

இவர்களிடம் திரும்பி “இன்னைக்கு லீவுன்னு சொல்லிதான நேத்தையிலிருந்து அந்த ஆட்டம் போட்டிங்க. அதனால இங்க இருக்கிற திங்ஸை எல்லாம் நீங்க ரெண்டு பேரும்தான் எடுத்து வைக்கணும். அப்படியே கூட்டியும் விடணும்“ என்றுவிட்டு,

மொழியிடம் திரும்பி “நீ ஏதாவது இவங்களுக்கு ஹெல்ப் பண்ணுனன்னு தெரிஞ்சுது….. அவ்வளவுதான்“ என கண்ணை உருட்டி முழித்து திட்டி, வழக்கம் போல் அவளின் கையில் பால் டம்ளரை திணித்துவிட்டு போனாள்.

 

அதில் மொழி சிரித்திருக்க, ’எப்படியும் பூரிகட்டையோடு கனி திரும்பி வருவாள்…. தவிர காலை உணவு நமக்கு வேண்டுமே’ என்ற யோசனையில் ஆதுவும், ராகவனும் நல்லபிள்ளைகளாய் வேலை செய்தனர்.

இதுபோல் நாட்கள் நகர, மொழி மட்டும் அவளின் காரை வெளியே எடுக்காமல்…. டூவீலரிலேயே மருத்துவமனை போய் வந்தாள்.

 

விஜய்க்கு தான் பெரும்சோதனை காலமாக அமைந்தது. தன் வேலைகளை மறந்து, ஒரு நாளில் குறைந்தது பத்து பள்ளிகளையாவது ஏறி இறங்கினான். ராகவனைப் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவர் கடைசியாக வேலை செய்த இடமும் ஞாபகமில்லை. ஊரிலும் விசாரிக்க முடியாது. யோசித்து, யோசித்து சில நேரங்களில் தலைவலி அதிகமானது. நாட்கள் பல கடந்த நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை . ஒரே ஒரு முன்னேறமாக அவன் நெற்றிக் காயம் ஆறி தளும்பாகி இருந்தது.

அவர்தான் இங்கு வந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே வேலையை விட்டுவிட்டாரே. அது தெரியாமல் இவன் பள்ளி, பள்ளியாய் ஏறி இறங்கினான்.

 

தினமும் இரவு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லாமல் சோர்ந்து வந்தாலும்…. முகம் கழுவி கண்ணாடியில் முகம் பார்க்கும் போது…. விஜய்யின் கை தானாக நெற்றித் தழும்பை மறக்காமல் வருடும்.

அந்தத் தழும்பின் வருடல்களெல்லாம் மொழியை அதிகம் ஞாபகப்படுத்தின. கூடவே திருமணமான புதிதில் மொழியின் இடது நெற்றித் தழும்பையும், மச்சத்தையும் இவன் வருடி, கிறங்கிய நாட்களில்… அவள் கொண்ட நாணங்கள், இன்றுகூட இவனை நினைவுகளாய் பித்தாக்கின. எல்லாமும் மொத்தமாக சேர்ந்து ராகவனைத் மீண்டும் தேடத் தூண்டியது.

 

நெற்றித் தழும்பின் வருடலில் சோர்வு போய் மொழியின் நினைவால் விஜய்யின் உதட்டில் புன்னகை வந்து அமர்ந்து கொண்டது. கை தானாக தலையை கோதிக்கொள்ள… அவனின் உதடுகளும் பிடித்த பாடலை முணுமுணுத்தது. இது விஜய்க்கு இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது.

தழும்பிற்காகவே அடிக்கடி கண்ணாடி பார்க்க ஆரம்பித்தான்.

 

“டேய் யப்பா! போட்டு மண்டையை உடைச்சிருக்கா உன் வீட்டம்மா. நீ என்னடான்னா அப்படியே ரசிச்சு, ரசிச்சு வருடிக் கொடுக்குற. போதாததுக்கு தலைய வேற கோதிவுட்டுக்குற. அம்புட்டு அழகாவாடா இருக்க நீ?. இதுல பாட்டு வேற. இந்தக் கண்ணாடி இத்தனை வருஷமா இங்கதான் இருக்கு…. எப்பயாவது இப்படி நின்னு பாத்துருக்கியா?…. இது நியாயமா?…. எங்கையாவது நடக்குமா?….. இந்த கொடுமைய என்னால பார்க்கமுடியலையே“ என அவனின் மனசாட்சி கதறியதையெல்லாம்… அவன் காதிலேயே வாங்கவில்லை. அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்த்தான்.

 

ரமேஷ் காலையில் கடையில் தினமும் மொழிக்காக காத்திருக்க, அவன் பயந்தது போலவே அவனின் அம்மா “என்னடா ரமேஷு, எப்பையிலிருந்து இந்தகடையில வாட்ச்மேன் வேலைக்கு சேர்ந்த?“ என்று கேட்டேவிட்டார்.

”ம்! ஏன் கேட்கமாட்ட…. கோர்ட்டுக்கு போக நேரமாகியும் உன் மூத்த பையன் கடையை பொறுப்பா பார்த்துகிட்டு இருக்கேனே. அதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியாது” என முறைப்பாய் சொல்லவதாய், தினமும் ஏதாவதொரு பதிலைச் சொல்லி, நாட்களை சமாளித்துக் கொண்டிருந்தான் ரமேஷ்.

 

தேடுதல் ஆரம்பித்த கடந்த இருபது நாட்களாக… ஆனந்தையும், ரமேஷையும் விஜய் நேரில் பார்க்கவில்லை. போனில் மட்டுமே தகவல் கேட்பான். அதனால் இரவு வீட்டிற்கு அழைத்திருந்தான்.

வந்திருந்த இருவரிடமும் “ஊருக்கு போய் ஒரு மாசம் ஆகுது. அதனால நான் இன்னைக்கு மிட்நைட்ல கிளம்பப் போறேன்“ என்று விஜய் கூற,

“மாப்ள! நீ எதுக்கும் ஊர்ல யார்கிட்டையாவது விசாரிச்சு பார்க்கிறியா?“ என்றான் ஆனந்த்.

 

“ப்ச்! யார்கிட்ட விசாரிக்க? ராகவன் மாமா பிரண்டுகிட்ட வேணும்னா விசாரிக்கலாம். ஆனா அவர் கண்டிப்பா சொல்லமாட்டார். மாமாக்குத்தான் ரொம்ப க்ளோஸ். சோ என்கிட்ட முகம் கொடுத்துகூட பேசமாட்டார். ஆனா நான் கண்டிப்பா எப்படியாவது கண்டுபிடுச்சிடுவேன்“ என்று நம்பிக்கையாய் விஜய் கூற,

“நண்பா! இவ்வளவு பட்டும் உன் நம்பிக்கையான பிரகாச முகத்தை பார்க்கும் போது… கல்யாணம் அவ்வளவு துயரமில்லையோனு தோணுது. சீக்கிரமா நானும் ஒரு பொண்ணை மேரேஜ் பண்ணிக்கிறேன்“ என்று வராத கண்ணீரை துடைத்தான் ரமேஷ்.

 

” செஞ்சுக்கடா! ஆனா நீ கல்யாணம் முடிச்சிட்டு… சேர்ந்து சமைக்கப் போறதா தான சொன்ன. அதுக்கு எதுக்குடா கல்யாணம்? பேசாம பார்ட் டைம்மா சமையல் வேலை ட்ரை பண்ணலாம்ல?“ என விஜய் சிரித்தபடியே கூற, ஆனந்த் விழுந்து, விழுந்து சிரிக்க,

ரமேஷ் இருவரையுமே முறைத்துவிட்டு ”சமைக்க போறேன்னு சொன்ன, சாப்பாடை மட்டும் தான் சமைப்பாங்களா? யாருக்குத் தெரியும் ஒருவேளை நாங்களே மாறி, மாறி உணவானாலும் ஆகிக்குவோம். அதைத்தான் நான் கவிதையா ’சேர்ந்து சமைப்போம்’னு சொன்னேன். அதெல்லாம் எங்க உங்க மரமண்டைக்கு  புரியப்போகுது?. கல்யாணமான அங்கிள்ஸ்” என்று சிரித்தான்.

 

”டேய்! நாங்க அங்கிள்ஸா?” என்று ஆனந்த் வர,

“ஆமா! கல்யாணம் ஆனாலே அங்கிள்ஸ்தான்டா. நம்ம குரூப்ல நான் மட்டும்தான் ஸ்டில் பேச்சுலர். எனக்கான தேவதை இப்போ எங்க இருக்காளோ? தெரியலையே. இந்நேரம் சீரியல் பாக்குறாளோ… இல்ல சின்சியரா படிக்கிறாளோ… இல்ல பழைய சோத்தை திண்ணுட்டு குப்புறபடுத்து தூங்குறாளோ தெரியலையே” என ரமேஷ் வானத்தைப் பார்த்து ரசித்துக் கூற,

”சொல்லமுடியாது நண்பா! இந்நேரம் யாரோடையாவது போன்ல கடலை போட்டுட்டு இருந்தாலும் இருக்கலாம்” என்று சிரித்தான் விஜய்.

 

அவனை முறைத்துவிட்டு “போடட்டும், போடட்டும்! கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நானும், என் பொண்டாட்டியும் வறுக்கப் போற கடலையில…. உங்க வயித்துல இருந்தான் புகை வரப்போகுது” என்று ரமேஷ் பதிலளிக்க,

அதில் வாய்விட்டு சிரித்துவிட்டு, ”நான் வர எப்படியும் ஒரு வாரம் ஆகும். நீங்களே எல்லா வொர்க்கையும் பாத்துக்கோங்கடா“ என்றான் விஜய்.

“இது உனக்கே நியாயமா இருக்க? நீ எப்படா கோர்ட்டுக்கு வந்த?. உன்னைத்தான் ஒரு மாசமா தண்ணிதெளிச்சு விட்டாச்சே. கவலைப்படாம போயிட்டு வா“ என இருவரும் அவனை வழியனுப்பி வைத்தனர்.

 

விஜய் ஊருக்கு வந்த போது நன்றாகவே விடிந்திருந்தது.

இவன் காரை நிறுத்துவிட்டு வீட்டிற்குள் நுழைய…. கவின் அவளின் வீட்டிலிருந்து ஓடி வந்து மூச்சுவாங்கி நின்றாள்.

“ஏன் இப்படி ஓடி வர்ற? மெதுவா வர வேண்டியதான“ என்று விஜய் நிறுத்திக் கேட்க,

“மாமா! உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா?. நாலு நாளைக்கு முன்னாடி நம்ம தூரத்து சொந்தமுன்னு ஒருத்தர் அவரு பையனுக்கு கல்யாணமுன்னு பத்திரிக்கை கொண்டு வந்தாரு. அப்போயிருந்து தாத்தா சரியா சாப்பிடுறதே இல்லை“ என்றாள் மூச்சுவாங்கி.

 

”அப்பா சரியா சாப்பிடலியா… எதுக்கு கவினு?“

”அவங்க கல்யாணம் செய்ய போற பொண்ணு… மொழி அத்தையோட சொந்தமாம். நமக்கு சண்டைன்னு தெரியாம கொண்டுவந்து கொடுத்துட்டாங்க. பொண்ணு மொழி அத்தைக்கு சொந்தமுன்னு இப்பதான் அப்பாவும், அம்மாவும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அதான் உங்ககிட்ட சொல்ல ஓடி வந்தேன்“ என்று கவின் கூற,

விஜய்க்கு ’அங்கு போய் ராகவனைப் பற்றி விசாரிப்போமா?’ என்று தோன்ற,

”என்னைக்கு கல்யாணம்?” என்றான்.

“இன்னைக்குதான் மாமா. நீங்க வர்ற நாளேச்சே… எப்படா வருவீங்க…. இதை சொல்லலாம்னு நினைச்சிருந்தேன்“ என்று சொல்ல,

”எந்த ஊர்?” என விசாரித்து விட்டு, கவினிடம் தான் அங்கு போவதை யாரிடமும் கூற வேண்டாம் என்றும், வீட்டில் யாராவது கேட்டால், அவசர வேலையாக வெளியூர் போய்விட்டதாகக் கூறுமாறும் சொல்லி விட்டு காரை கிளப்பினான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவன் கார் நின்றது அந்த கல்யாண மண்டபத்தின் முன்புதான். எவ்வளவு கஷ்டப்பட்டு தேடி அலைந்தது…. ஒருவேளை இங்குள்ள யாருக்கேனும் ராகவனைப் பற்றித் தெரிந்திருந்தால்?. இந்த வாய்ப்பை தவறவிட இவன் விரும்பவில்லை.

விஜய் காரைப் பார்க் செய்துவிட்டு திரும்பி நடக்க… ஆது ஓடிவந்து இவனின் காலைக் கட்டிக் கொண்டாள். காலத்தின் கொடுமை அவளை யாரென்று விஜய்க்கு தெரியவில்லை.

 

”தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்”

                       _ திருக்குறள்(மக்கட்பேறு)

பொருள்:

        தம் மக்களே நம்முடைய பொருள்கள் என்பர். மக்களாகிய அவர் தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.