Advertisement

அத்தியாயம் – 1
“என்னப்பா சொல்லறீங்க… போயும் போயும்… இவன், எனக்கு மாப்பிள்ளையா… ஆளைப் பார்த்தாலே பல்லியைக் காய வச்சு கருவாடாக்கின போல இருக்கான்… இவனைப் போயி மாப்பிள்ளைன்னு சொல்லறீங்க…” சிவந்த முகம் கோபத்தில் மேலும் சிவந்திருக்க முகத்தை அஷ்டகோணலாய் சுளித்துக் கொண்டு கையிலிருந்த போட்டோவை மேசையின் மீது விட்டெறிந்தாள் ஐஸ்வர்யா.
“அச்சோ, அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுமா… இந்த பந்தம் இப்ப முடிவானது இல்ல, நீங்க ரெண்டு பேரும் சின்ன வயசா இருக்கும்போதே நாங்க முடிவு பண்ணது…”
“என்னப்பா சொல்லறீங்க… சின்னக் குழந்தைல எனக்குப் பிடிச்ச பொம்மையை வாங்கிக் கொடுக்கலாம்… டிரஸ் வாங்கிக் கொடுக்கலாம்… ஸ்வீட், சாக்கி, டாய்ஸ்னு இன்னும் என்னென்னமோ வாங்கி கொடுக்கலாம்… அதெல்லாம் விட்டு நீங்க ஒரு நோஞ்சான் மாப்பிள்ளையை எனக்கு பார்த்து வச்சிருக்கீங்க… எனக்கு இவன் வேண்டாம்…” உறுதியான குரலில் கூறினாள் மகள்.
“அப்படிலாம் சொல்லாத மா… புருஷூ எவ்ளோ நல்லவன் தெரியுமா… நம்ம குடும்பத்துக்காக அவன் எவ்ளோ நல்லது பண்ணிருக்கான்… நாம அவனுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிட்டிருக்கோம்… உன்னை அவன் பையனுக்கு தான் கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்னு நான் வாக்கு கொடுத்திருக்கேன்… அப்பா வாக்கு பொய்க்கலாமா…” ஏறக் குறைய கெஞ்சுவது போலக் கேட்ட தந்தையை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தாள் மகள்.
“வேண்டாம்பா, அப்பான்னு கூடப் பார்க்க மாட்டேன்… எதாச்சும் சொல்லிடப் போறேன்… ஒருத்தன் நல்லவனா இருந்தா அவார்டு கொடுங்க… நல்லது பண்ணினா திருப்பி நீங்களும் நல்லது பண்ணுங்க… அதைவிட்டு பொண்ணைக் கொடுக்கறேன்… பன்னைக் கொடுக்கறேன்னு எதுக்கு வாக்கு கொடுக்கறீங்க… உங்க நன்றிக் கடனைத் தீர்க்க நான் தான் கிடைச்சேனா…” கோபமாய் கேட்டுவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்ட மகளுக்கு எப்படி புரிய வைப்பது என்று திகைத்தார் கோபிநாத்.
அமைதியாய் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மனைவி உஷாவிடம், “உஷு… நீயாச்சும் கொஞ்சம் இவளுக்கு சொல்லிப் புரிய வையேன்…” என்றார்.
“நீங்க சொன்னாலே கேக்க மாட்டா… நான் சொல்லியா கேக்கப்போறா… இதுக்கு ஒரே வழி உங்கம்மாவ இவகிட்ட பேசச் சொல்லிடுங்க… அவங்கதான் இவளை சரியா சமாளிப்பாங்க…” என்றார்.
“ம்ம்… அதும் நல்ல ஐடியாதான்…” என்றவர் அன்னையின் அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல அங்கே கட்டிலில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டு இயர் போனில் வழிந்த மேற்கத்திய இசைக்குத் தகுந்தாற்போல தலையாட்டிக் கொண்டிருந்தார் அவரது அன்னை கோமளவல்லி. காதில் அணிந்திருந்த வளையங்கள் அவரது தலையாட்டலுக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தது.
அணிந்திருந்த சுரிதாரும், கிராப் முடியும் அவரது 70 வயதை குறைத்துக் காட்டிக் கொண்டிருந்தன. மகன் கதவு திறந்தது கூடத் தெரியாமல் பாட்டில் லயித்திருந்தார் கோமளவல்லி.
“அம்மா…” அவர் அருகில் சென்று அழைத்தும் அன்னை கண் திறக்காததால் கையில் தொட்டு அழைத்தார்.
“அம்மா எவ்ளோ நேரமா கூப்பிடறேன்…” என்று தொடங்கியவரை கை காட்டித் தடுத்தவர், “ஐ சே லாட் ஆப் டைம்ஸ் மை சன்… கால் மீ மம்மி, ஓக்கே…” என்றவரைக் கண்டு இஞ்சி தின்ற குரங்கைப் போல் முகம் மாறிய கணவனைப் பரிதாபமாய் பார்த்தார் உஷா.
“அச்சோ சாமி, எப்ப தான் இவங்க ஆங்கில மோகம் தீருமோ எங்களை இப்படிப் படாத பாடு படுத்தறியே கடவுளே…” என மனதுக்குள் கடவுளுக்கு அர்ச்சனை நடத்திக் கொண்டிருந்தார் உஷா. அமைதியாய் நின்ற கணவனிடம், “என்னங்க, என்ன விஷயம்னு சொல்லுங்க…” என்றார் உஷா.
“அம்மா… சாரி, மம்மி… எனக்கு இம்மீடியட்டா உங்க ஹெல்ப் வேணும்… நம்ம புருஷு பையன் போட்டோவை ஐஷுகிட்டே காட்டினோம்… அவ பையனைப் பிடிக்கலைன்னு ஈஸியா சொல்லிட்டுப் போயிட்டா…”
“ஓ ஐ சீ… ஓக்கே, வாட் கான் ஐ டூ பார் யூ…” அன்னையின் ஆங்கிலத்தைக் கேட்டு மனைவியைப் பரிதாபமாய் பார்த்தார் கோபிநாத்.
“அத்தை, உங்களுக்கே தெரியும்… நாம புருஷோத்தம அண்ணன் மகன் ரகுவரனுக்கு ஐஷுவைக் கொடுப்போம்னு அவங்க சின்ன வயசுலயே வாக்கு கொடுத்தது… படாதபாடுபட்டு அவங்க இப்ப இருக்கிற அட்ரஸ் கண்டுபிடிச்சு இவர் போயி பார்த்துப் பேசிட்டு வந்திருக்கார்… அவங்களும் நம்ம வாக்கை இன்னும் மறக்கலை… இப்ப இவ முடியாதுன்னு சொன்னா எப்படி அத்தை… நீங்கதான் அவகிட்ட கொஞ்சம் பேசணும்…” உஷா ஒருவழியாய் விஷயத்தை சொல்லி முடிக்க, “எஸ் மம்மி… உங்களை தான் நம்பிருக்கேன்…” என்றார் கோபிநாத்.
“ம்ம்… ஐ அண்டர்ஸ்டான்ட் யுவர் சிச்சுவேஷன்… ஓகே, ஐ வில் டிரை… வேர் ஈஸ் மை கிரான்ட் டாட்டர்…” கேட்ட அத்தையிடம், “அத்தை ஒரு ரிக்வஸ்ட்… அவகிட்ட இங்கிலீஷ்ல பேசாம கொஞ்சம் தமிழ்ல பேசினீங்கன்னா நல்லாருக்கும்…” என்றார் கெஞ்சலாக.
“வ்வாட்… டாமில்… நோ வே… ஐ கான் வாக் இங்க்லீஷ்… டாக் இங்க்லீஷ்… ஈட் இங்க்லீஷ்…” சொல்லிக் கொண்டே சுரிதார் துப்பட்டாவை ரஜினி ஸ்டைலில் சுழற்றி தோளில் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியேறிய கோமளவல்லியை இருவரும் திகிலோடு நோக்கி நின்றனர்.
“ஐஸு… ஐஸூ பேபி… வேர் ஆர் யூ மை டியர்…” கேட்டுக் கொண்டே ஐஸ்வர்யாவைத் தேடி மாடிக்கு வந்த கோமளவல்லி அவள் பால்கனியில் நிற்பதைக் கண்டதும், “ஓ யூ ஆர் தேர்… ஐ வில் கம்…” என்று அங்கே சென்றார்.
“ஹாய் பேபி… வாட் ஆர் யூ டூயிங்…” என்ற பாட்டியை எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தவள், “வேண்டாம் கோமு… நானே டென்ஷன்ல இருக்கேன்… கடுப்பேத்தாம போயிரு…” மிரட்டினாள் பேத்தி.
“ஒய் ஹாட் பேபி… கூல்… யுவர் நேம் ஆல்சோ ஐஸ்… ஒய் யூ ஹேவ் பியர்ஸ்… டோன்ட் வொர்ரி மை டியர்…”
“இப்ப உன் இங்லீஷை நிறுத்தப் போறியா இல்லியா பாட்டி…”
அவள் வார்த்தைகள் சூடாகவும், எரிச்சலாகவும் வரவே ஸ்டார் மூவிஸை ஆப் செய்துவிட்டு சன் டிவி மோடுக்கு மாறினார் கோமளவல்லி.
“இப்ப, என்ன உன் பிராப்ளம் ஐஸு பேபி…”
“ஏன், உனக்குத் தெரியாதா… நீயும் இதுல கூட்டுக் களவாணி தானே…” என்றாள் எரிச்சலுடன்.
“நோ நோ, ஐ ஆம் ஆல்வேஸ் யுவர் பிரண்டு யூ நோ…” என்றவரை நம்பலாமா வேண்டாமா என்ற பார்வை பார்த்தாள் ஐஸ்வர்யா.
“டெல் மீ டியர்… வாட்ஸ் யுவர் பிராப்ளம்…”
“நீங்கல்லாம் சேர்ந்து நான் பிறந்ததுமே எனக்கு நிச்சயம் பண்ணி வச்சிங்களே… அந்த மாப்பிள்ளை தான் பிராப்ளம்…” என்றவள், “கோமு… என்னை நல்லாப் பாரு… நான் அழகாருக்கேனா…” என்றாள் கண்ணை உருட்டியபடி.
அவளை மேலிருந்து கீழாய் பார்த்த கோமளவல்லி, “ஹூம்… என் அளவுக்கு இல்லேன்னாலும் நாட் பேட்… அழகா தான் இருக்கே… “ என்றதும் அவள் முறைத்தாள்.
“என்ன சொன்னே, நாட் பேடா… என் பின்னாடி எத்தனை பேர் பிரபோஸ் பண்ண அலையறாங்க தெரியுமா… பேரன்ட்ஸ் பாக்குற மாப்பிள்ளையைத் தான் கட்டிக்குவேன்னு எல்லாரு கிட்டயும் கெத்தா சொல்லிட்டு இப்ப இந்த கருவாட்டுக்கு கண்ணாடி போட்டு விட்ட போல இருக்குறவனை என் மாப்பிள்ளைன்னு சொன்னா எல்லாரும் சிரிக்க மாட்டங்க…” முகத்தை சுளித்துக் கொண்டு சிணுங்கினாள்.
“வ்வாட் கருவாடு…” என்றவர் சிரிப்புடன்,
“வாட் அ கருவாடு… வாட் அ கருவாட்…
வாட் அ கருவாட்… ஏ வாட் அ கருவாட்…”
என்று பாடத் தொடங்கவும் பேத்தியின் பார்வை  உக்கிரமாகத் தொடங்க மைக்கை ஆப் ஆக்கினார்.
“ஆஆ பாட்டி… உனக்கு என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா… தாத்தா ஏன் உன்னை விட்டுட்டு ஓடிப்போனார்னு எனக்கு இப்பதான் புரியுது…” என்றாள் கடுப்புடன்.
“என்ன ஐஸு பேபி, உன் கிரேனியைப் பார்த்து இப்படி சொல்லிட்ட… வெரி சாட்… இத்தனை நாளா உனக்குத் தெரியாம இருந்த ஒரு ரகசியத்தை ஓபன் பண்ண வேண்டிய நேரம் வந்திருச்சுன்னு நினைக்குறேன்…” வருத்தமாய் கூறியவர் தலையைத் தூக்கி வானத்தை வெறிக்க,
“அங்க என்ன லுக்… காக்கா பறக்குதா…” என்றாள் பேத்தி.
“பிளாஷ்பாக் பேபி… இரு… யோசிச்சுக்கறேன்…” என்றதும் டார்ட்டாய்ஸ் சுழல கடந்த காலத்திற்கு சென்றார்.
அவரது கண்கள் கனவுலகத்தில் மிதக்க, “உன் தாத்தா கல்யாண டைம்ல எப்படி இருப்பார் தெரியுமா… தகதகன்னு MGR நிறத்துல, கமலஹாசனையும், ஜெய்சங்கரையும் ஒண்ணா கலந்தா எப்படி இருப்பாங்க… யோசிச்சுப் பாரு…”
“ஹூம்… ரெண்டுபேரையும் மிக்ஸ் பண்ணா பவர் ஸ்டார் போல காமெடியா இருப்பாங்க…” அவள் கிண்டலுடன் சொல்ல பேத்தியை செல்லமாய் முறைத்தார் பாட்டி.
“கிரான்ட் பாதரை அப்படி எல்லாம் சொல்லப்படாது செல்லம்…” என்றவர் தொடர்ந்தார்.
“அவரை முதல்ல போட்டோல பார்த்ததும் அப்படியே சொக்கிப் போயிட்டேன்… மாநிறமா சுமாரா இருக்கற நமக்கு இப்படி ஒரு பேரழகன் புருஷனா வரப் போறான்னு வானத்துல மிதந்தேன்… தரைல நீந்தினேன்… வெறும் பத்தாங்கிளாஸ் படிச்ச எனக்கு வெளிநாடெல்லாம் போயி நிறையப் படிச்ச மாப்பிள்ளைன்னு தலைகால் புரியாம கர்வத்துல மிதந்தேன்… ஆனா அதெல்லாம் கல்யாணம் பண்ணின கொஞ்ச நாள்லயே காணாமப் போயிருச்சு…” சோகமாய் தலையாட்டியவரிடம், “என்னாச்சு கோமு…” என்றாள் ஆர்வத்துடன்.
“அவரு பெரிய ஆபீஸ்ல நல்ல வேலைல இருந்தார்… வாயத் திறந்தா இங்கிலீஷ் தான்… பட்டிணத்துலயே படிச்சு வளர்ந்தவருக்கு என்னைப் போல பட்டிக்காட்டுப் பொண்ணு மேல ஆசை இருக்குமா… அதுவும் அவரைப் போல அழகனைக் கொத்திட்டு போக எத்தனை பொண்ணுங்க கோடாலிக் கொண்ட போட்டுட்டு சுத்துவாங்க… முதல்ல எங்களுக்குள்ள எதுவும் பெருசா தெரியலைனாலும் போகப் போக எதுக்கெடுத்தாலும் நான் ஒரு பட்டிக்காடு… தத்தி, இங்கிலீஷ் தெரியாது… உன்னை எல்லாம் என் ஒய்ப்னு மத்தவங்களுக்கு அறிமுகப்படுத்தவே அசிங்கமாருக்குன்னு சொல்லி எல்லாத்துலயும் என்னை ஒதுக்கி வைக்க ஆரம்பிச்சார்… நானும் போகப் போக சரியாகிடும்னு நினைச்சேன்… நான் பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்குப் போயிருந்த சமயத்துல வெளிநாட்டுக்கு வேலை விஷயமா போனவர் அங்கயே ஒரு வெள்ளைக்காரியோட செட்டில் ஆயிட்டார்… அதுக்குப் பிறகு அவரை நான் பார்க்கவே இல்ல… அவருக்குப் பிடிச்ச போல மாடர்னா என்னை மாத்திக்கணும்னு நினைச்சேன்… ராபிடெக்ஸ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புக் எல்லாம் வாங்கிப் படிச்சேன்… பாட்டு, சினிமா கூட இங்கிலீஷ் தான் பார்ப்பேன்… ஹூம்… ஆனா என்ன, அவர் தான் திரும்ப வரவே இல்லை… என் வாழ்நாள் லட்சியமே அடுத்து அவரைப் பார்க்கும்போது இங்கிலீஷ் பேசி அவரை அதிர்ச்சியடைய வைக்கனும்னுங்கறது தான்…” கணவன் நினைவில் உருக்கமாய் பேசிக் கொண்டிருந்த பாட்டியைக் கண்டு மனம் கனிந்தவள், “ம்ம்… உன் இங்லீஷ்க்கு பின்னாடி இப்படி ஒரு சோகமான பிளாஷ்பாக் இருக்கும்னு நான் நினைச்சே பார்க்கலை கோமு… தாத்தா உன்னை இப்படி அம்போன்னு விட்டுட்டுப் போயும் அவர் மேல உனக்கு கோபமோ வெறுப்போ வரலியா…” என்றாள்.
“ஏன் வரலை, அதெல்லாம் நிறையவே வந்துச்சு… அப்புறம் யோசிச்சேன்… ஆம்பளைக்கு அழகு முக்கியமில்லை… அன்பான மனசு தான் முக்கியம்னு… தோற்றத்துல அவ்ளோ அழகா இருந்து என்ன… அவர் மனசு அழகா இல்லியே… அந்தாளு இனி எனக்குத் தேவையில்லைன்னு நினைச்சதும் அந்தக் கோபமும் வெறுப்பும் வீறாப்பா மாறிடுச்சு… அவர் சொன்ன குறையெல்லாம் நிறையா மாத்திக்க அப்ப இருந்து முயற்சி பண்ணிட்டு இருக்கேன்…” என்றார் அவர். 
“ஹூம், அதுக்கு எங்களை எல்லாம் சோதனை எலியா மாத்திட்ட… உன் இங்கிலீஷ் தாங்க முடியாம சில நேரம் வீட்டை விட்டு ஓடிடலாமான்னு கூட யோசிச்சிருக்கேன் தெரியுமா…” என்றவள் புன்னகையுடன் அவர் வருத்தத்தை மாற்றும் விதமாய் பேசினாள்.
“ஹூக்கும், ஓகே, ஓகே… கமிங் டு த மேட்டர் பேபி…” என்று பழைய பார்ம்க்கு திரும்பியவர், “அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா பேபி… இந்த ரகுவரனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு நிறைய அட்வான்டேஜஸ் இருக்கு… இந்த மாதிரிப் பசங்களை எல்லாம் பார்த்த உடனே பிடிக்காது… தனுஷ் மாதிரி பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்… உன்னை மாதிரி சூப்பர் பொண்ணு சுமாரா ஒரு பையனைக் கல்யாணம் கட்டிகிட்டா உன் காலடியே சொர்க்கம்னு அவன் விழுந்து கிடப்பான்… யாரையும் திரும்பிப் பார்க்க பாட்டான்… ஏன்னா, அவனையும் எவளும் திரும்பிப் பார்க்க பாட்டா… நாமளும் புருஷனை எவளாச்சும் கொத்திட்டுப் போயிடுவாளோன்னு பயமில்லாம இருக்கலாம்… சோ, வாட் ஐ ஆம் சே, ஆல் வேஸ் ஐ திங்கிங், யூ மேரி தி கருவாடு பாய் ஈஸ் பெட்டர் பார் பீஸ்புள் லைப்…” என்று உரையை முடித்த பாட்டியை யோசனையுடன் பார்த்தவள்,
“அதுக்காக அந்த சொங்கியை என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லறயா… அவன் மூஞ்சியும் மண்டையும்… எலும்புக்கு தோல் சுத்தின போல உடம்பும்… எப்படி கோமு…”
“அதுக்கெல்லாம் வழி இருக்கு பேபி…”
“என்ன வழி…” எரிச்சலாய் கேட்டாள் ஐஸ்வர்யா.
“மென்ஸ் பியூட்டி பார்லர்… அதுல ஓரளவுக்கு தேத்திடலாம்… அப்புறம் கல்யாணம் ஆகிட்டா நல்லா சமைச்சுப் போட்டு கருவாடை மீனா மாத்திடலாம்… எப்படி என் ஐடியா…” அவர் சொல்லவும் “மாத்திடலாமோ…” என்று சிறிது யோசிக்கத் தொடங்கியவள், “போ கோமு… நான் சமைக்கறதை சாப்பிட்டா பல்லியா இருக்கவன்கூட தும்பியா ஆகிடுவான் நான் போறேன்…” என்றவள் வருத்தமாய் சென்று விட்டாள்.
“வாட் இஸ் திஸ்… புட்டிங் லாட் ஆப் பிட், பட் நோ வொர்க் அவுட்…” யோசனையுடன் சென்ற பேத்தியையே நோக்கி நின்றார் கோமளவல்லி.
கணவர் விட்டுச் சென்றபிறகு கைக் குழந்தையுடன் புகுந்த வீடு திரும்பியவரை இரு கைகள் நீட்டி அரவணைத்துக் கொண்டனர் அவரது மாமியாரும், மாமனாரும். ஓரளவிற்கு வசதியான குடும்பம் என்பதால் வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை. பாராட்டி சீராட்டி வளர்த்த ஒரே மகன் ஏதோ ஒருத்திக்காய் தன் குடும்பத்தை விட்டுச் சென்றதில் மனமுடைந்து நின்றவர்களுக்கு பேரக் குழந்தையும் மருமகளுமே உலகமென்று ஆயினர்.
அவர்களின் உதவியோடு மகன் கோபிநாத்தை நன்றாகப் படிக்க வைத்தார். அவர் ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்தபோது ஒரே பேரனை மிலிட்டரிக்கு அனுப்புவதா என்று பெரியவர்கள் தயங்க, “நாட்டுக்கு சேவை செய்வது பெத்த தாய்க்கு சேவை செய்வது போலத்தான் அம்மா…” என்ற மகனைப் பெருமையுடன் அனுப்பி வைத்தார்.
கோபிநாத் இராணுவத்தில் சேர்ந்து சிறிது நாட்களிலேயே அவரது மாமியார் விஷக் காய்ச்சலில் இறந்துவிட மனைவி இறந்த துக்கத்தில் ஆறு மாதத்திலேயே ஒரு நள்ளிரவில் வந்த மாரடைப்பில் மூச்சை நிறுத்திக் கொண்டு மருமகளைத் தனியாக்கி மாமனாரும் சென்றுவிட்டார்.
மதுரையில் அவர்கள் வீட்டை ஒட்டி நான்கைந்து வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தனர். ஊரிலிருந்த நிலத்தைக் குத்தகைக்கு கொடுத்ததில் இருந்தும் வருமானம் வந்து கொண்டிருந்தது. மட்டுமில்லாமல் வங்கியிலும் தேவையான அளவு சேமிப்பு இருக்கவே கோமளவல்லி யார் தயவும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்தே நின்றார்.
மகனை வெகு நாட்கள் தனியே விடாமல் உரிய வயதில் தூரத்து சொந்தமான உஷாவை மணமுடித்து மகனுடனே டில்லிக்கு அனுப்பி வைத்தார். அங்கே கோபிநாத்துடன் பணி புரிந்த உயிர் நண்பன் தான் புருஷோத்தமன்.
அவன் மனைவி மேனகாவும், உஷாவும் ஆண்களைப் போலவே நெருங்கிய தோழியராகிவிட இருவர் குடும்பமும் அன்பாலும் நட்பாலும் நெருங்கிய சொந்தங்களைப் போல வாழ்ந்தனர். ஐஸ்வர்யா பிறந்த போது ரோஜாக்குவியல் போலக் கிடந்த குழந்தையை கோபிநாத்தை விட அதிகம் புருஷோத்தமன் குடும்பமே கொஞ்சிக் கொண்டாடியது. அப்போது ரகுவரனுக்கு நான்கு வயது.
“என் மருமக எவ்ளோ அழகாருக்கா… அச்சோ குட்டி தேவதை போல கொள்ளை அழகா இருக்காடா… டேய் கோபி… இப்பவே சொல்லிட்டேன்… இவ பெருசானதும் எங்க வீட்டுக்கு தான் மருமகளா அனுப்பணும்… வேற எங்கயும் கட்டிக் கொடுத்துட மாட்டியே…” புருஷோத்தமன் ஆசையாய் கேட்க உஷாவும் கோபிநாத்தும் சந்தோஷமாய் சிரித்தனர்.
“டேய் புருஷூ, உன் வீட்டுக்கு மருமகளா அனுப்பறதை விட பெரிய சந்தோஷம் எங்களுக்கு என்ன இருக்கு… ரகு தான் என் மாப்பிள்ளை… வேணும்னா இப்பவே எழுதிக் கொடுத்திடறேன் போதுமா…” என்று கேட்டுக் கொண்டே குழந்தையின் விரல்களைத் தொட்டு கொஞ்சிக் கொண்டிருக்கும் ரகுவரனை அணைத்துக் கொண்டு,
“என்னடா மாப்பிள்ள, என் பொண்ணைக் கல்யாணம் கட்டிக்க உனக்கு சம்மதம் தானே…” என்று கேட்பார்.
“கல்யாணம் கட்டிகிட்டா பாப்பாவை என்னோட எங்க வீட்டுக்கே அனுப்பிடுவிங்களா மாமா…” என்று கேட்பான் குழந்தையும் விவரம் புரியாமல்.
“ஆமாடா கண்ணா… அவ உனக்குன்னு பிறந்தவ… உன் கூட தானே இருப்பா…” கோபிநாத் சொல்லும்போது குழந்தையின் கன்னத்தில் ஆசையாய் முத்தமிட்டு குதிப்பான் ரகுவரன்.
குழந்தைகள் பெரிதாகப் பெரிதாக இரு குடும்பத்துக்குள்ளும் இருந்த பிணைப்பும் இறுகிக் கொண்டே வந்தது. ஐஸ்வர்யாவும் ரகுவின் பின்னாலேயே எல்லாவற்றுக்கும் சுற்றிக் கொண்டிருப்பாள். அவளுக்கு நான்கு வயது இருக்கும்போது தான் கண்பட்டது போல அந்த அதிர்ச்சியான நிகழ்ச்சி நடந்தேறியது.
ஒருநாள் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் செய்யும் மிஷனில் கோபிநாத்தும், புருஷோத்தமனும் இருக்க, கோபியை நோக்கி எறியப்பட்ட வெடிகுண்டை கவனித்த புருஷோத்தமன் காலால் தட்டிவிட, அது அவரது காலையும் சிதைத்துக் கொண்டு தள்ளிச் சென்று விழுந்தது. அந்தப் போராட்டத்தில் காலை இழந்தவரால் அதற்குப் பிறகு பணியைத் தொடர முடியாமல் போயிற்று. தனக்கு வரவேண்டிய கஷ்டம் தன் நண்பனின் காலில் விழுந்ததை எண்ணி மிகவும் துடித்துப் போனார் கோபிநாத்.
சிதைந்து போன காலை அகற்றி பிளாஸ்டிக் காலைப் பொருத்தியபடி நடக்கும் நண்பனைக் கண்டு கோபிநாத் வருத்தப்பட, “எனக்கு ஒரு கால் போனா என்னடா… உன்னோட ரெண்டு கால் இருக்கே நான் நடக்க…” என்று பெருமையாய் கூறும் புருஷோத்தமனை நெஞ்சோடு அணைத்துக் கொள்வார் கோபிநாத்.
பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த பிரியம் வைத்திருக்க, ஐஸ்வர்யாவுக்கு ஐந்து வயது இருக்கும்போது கோபிநாத்துக்கு பஞ்சாபுக்கு பதவி உயர்வுடன் மாற்றல் வர அவர் குடும்பம் அங்கே செல்ல வேண்டிய நிலை வந்தது. இரு குடும்பமும் பிரிவின் சோகத்தில் தவித்தனர்.
“நான் ரகுவை விட்டு வரமாட்டேன்… நாம இங்கயே இருக்கலாம்பா… மாமா, அப்பாட்ட சொல்லுங்க மாமா…” என்று தேம்பித் தேம்பிக் கதறும் ஐஸ்வர்யாவையும் அவளைப் பிரியப் போகும் சோகத்தில் மௌனமாய் மூலையில் நின்று அழுது கொண்டிருக்கும் ரகுவையும் தேற்ற முடியாமல் பெரியவர்கள் கலங்கி நின்றனர்.
அதற்குப் பிறகு புதிய இடமும் சூழ்நிலையும் மாற்றத்தைக் கொடுக்க அதற்குப் பழகிப் போயினர். ஸ்கூலும் புதிய நட்பும் ரகுவின் நினைவுகளை மெல்ல பின்னுக்குத் தள்ள பெற்றோர் நண்பனின் குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது மட்டும் ஐஸ்வர்யா அவர்களை நினைக்கும் நிலையானது. மொபைல் வசதி இல்லாததால் கடிதம், எப்போதாவது தொலைபேசி வாயிலாக மட்டுமே தொடர்பு தொடர்ந்தது.
ஒரு வருடத்திற்குப் பிறகு அன்னைக்கு உடல்நிலை சரியில்லாததால் சொந்த ஊருக்கே குடும்பத்துடன் செல்வதாக புருஷோத்தமன் கோபிநாத்தின் முகவரிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அந்த நேரத்தில் கோபிநாத் பஞ்சாப் எல்லைக்கோட்டை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு எதிர்த் தாக்குதல் நடத்தும் பணியில் கோபிநாத் டீமின் வீரர்களும் இருந்தனர். இந்திய இராணுவம் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தும் பணியில் எல்லைப் பகுதியிலேயே பல நாட்கள் தங்க வேண்டி வந்ததால் கடிதம் மெதுவாகவே அவரது கைக்குக் கிடைத்தது.
அதற்குப் பிறகு அவர் அந்த முகவரிக்கு புருஷோத்தமனைத் தொடர்பு கொள்ள கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் வரவே இல்லை. சில நாட்கள் முன்புதான் உடன் பணி செய்த நண்பன் ஒருவரை எதேச்சையாய் சந்திக்க புருஷோத்தமன் பற்றிய பேச்சின் நடுவில் அவர் சேலம் சங்ககிரியில் இருக்கும் விஷயம் கோபிநாத்துக்கு தெரிய வந்தது. உடனே அவர் கொடுத்த முவரிக்கு சென்று பார்க்க அங்கே நண்பனின் குடும்பத்தைக் கண்டவர் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டார். அன்னைக்கு உடல்நிலை சரியில்லாமல் சொந்த ஊருக்கு வந்தவர் அவரது புற்றுநோய் சிகிச்சைக்காய் குடும்பத்துடன் சென்னை சென்று தங்கி விட்டிருந்தார். இரண்டு வருடங்கள் போராடியும் அன்னையைக் காப்பாற்ற முடியாமல் போக மீண்டும் பழைய ஊருக்கு செல்லப் பிடிக்காமல் சங்ககிரியில் மேனகாவின் அன்னை வீட்டிலேயே  தங்கி விட்டிருந்தனர்.  ரகுவரன் என்ஜினியரிங் முடிந்து சென்னையில் இப்போது ஒரு நல்ல IT கம்பெனியில் உத்தியோகத்தில் இருக்கிறான்.
தன்னைக் காண வந்த கோபிநாத்தைக் கண்டதும் கண்ணீருடன் தழுவிக் கொண்ட புருஷோத்தமன், “கோபி, ஒருவழியா என்னைக் கண்டுபிடிச்சு வந்துட்டியாடா… தங்கச்சி எப்படி இருக்கா… என் மருமக எப்படி இருக்கா…” என்று அதே மாறாத அன்போடு விசாரிக்க கோபிநாத் நெகிழ்ந்து போனார்.
மேனகாவும் உஷா, ஐஸுவைப் பற்றிக் கேட்க அலைபேசியில் உஷாவை அழைத்து இருவருடனும் பேச வைத்தார் கோபிநாத். உணர்ச்சிப் பெருக்கில் கண்கள் கலங்க தொண்டை அடைத்துக் கொள்ள அங்கும் இங்குமாய் ஏதேதோ பேசினாலும் இறுதியில் அனைவரின் எண்ணமும் ஐஸ்வர்யா, ரகுவரனிலேயே வந்து நின்றது. மனைவியிடம் கலந்தாலோசித்து விட்டு ஒரு நல்ல நாளில் வீட்டுக்கு அழைப்பதாய் நண்பனிடம் சொல்லிவிட்டு வந்த கோபிநாத் மகளின் இந்த பதிலை எதிர்பார்க்காமல் திணறிப் போனார்.
பேத்தி நோ சொல்லிச் சென்றதில் மனசு நடந்ததை எல்லாம் அசை போட்டுக் கொண்டிருக்க யோசனையுடன் அமர்ந்திருந்தார் கோமளவல்லி. மகள் கூறியதைத் தெரிந்து கொள்ள அவரைத் தேடி அங்கு வந்தார் உஷா.
“அத்தை… ஐஷு கிட்டே பேசினீங்களா… என்ன சொன்னா…”
“நானும் எப்படில்லாமோ சொல்லிப் பார்த்துட்டேன்… அவ ரொம்ப தீர்மானமா வேண்டாம்னு சொல்லறாளே உஷா… வாட் கான் ஐ டூ…” என்றார் கையை விரித்துக் கொண்டு.
“அச்சோ, உங்களை தான் நம்பிருக்கோம் அத்தை… எப்படியாச்சும் அவளை சம்மதிக்க வைங்களேன்… அவங்க இங்கே வந்து நம்ம எல்லாரையும் பார்க்கணும்னு கேட்டுட்டு இருக்காங்க… முக்கியமா இவளைப் பார்க்க தான் துடிக்கிறாங்க… இவ எதாச்சும் சொல்லிடுவாளோன்னு பயமா இருக்கு… ஏதாச்சும் பண்ணுங்க அத்தை…” என்றார் கெஞ்சுதலாய்.
“ஓகே… யூ டோன்ட் வொர்ரி…” என்றவர் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே நடந்து யோசித்தார்.
ஐ ஆம் கோயிங் அப்வார்ட்ஸ்
தி வோல் வோர்ல்ட் ஈஸ் பிலோ மை பீட்…
தேர் ஈஸ் அ குரூப் ஆப் ஸ்டார்ஸ் அபவ் மீ
லைக் தி பிளவர்ஸ் நெக்டார் யு ஸ்ப்ரேடு அன்டு மீ…
அவர் பாடியது என்ன பாடல் என்று வெகுநேரம் யோசித்த உஷாவுக்கு ஒருவழியாய் அந்தப் பாடல் எதுவென்று புரிய,
“ஐயோ கடவுளே… அழகான தமிழ் பாடலை இப்படி இங்கிலீஷ்ல பாடி கொல்லுறாங்களே… இவங்களா ஐஸு மனசை மாத்தப் போறாங்க…” பயமாய் பார்த்து நின்றார்.
வாழ்க்கைல பிடிச்சது
கிடைக்கறதில்ல…
கிடைக்கறது பிடிக்கறதில்ல…
இந்தா வாழ்ந்துக்கோன்னு
விதி நம்மகிட்ட வச்சு
நீட்டும்போது கம்முனு
வாங்கிக்கணும்…
அப்பத்தான் வாழ்க்கை
ஜம்முனு போகும்…

Advertisement