அத்தியாயம் 16
“செல்லாக் குட்டி, பட்டுக்குட்டி… அப்பா பாரு அப்பாரு… எங்க அப்பா பார்த்து சிரி.. அப்பா கிட்ட ஓடி வாங்க…” இனிமையான கனவுலகில் இருந்தான் இனிமொழியன்.
திடிரென்று கொட்டும் மழையில் சிக்குண்டு முகம் முழுவதும் தண்ணீரோடு எழுந்தமர்ந்தான். எதிரே அனுபமா முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அனுபமா தூங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தில் ஜல அபிஷேகம் செய்து எழுப்பி விட்டிருக்க, முகத்தை துடைத்தவாறே இனியன் அவளை முறைக்கலானான்.
“என்னதான் பிரச்சினை உனக்கு? சண்டே அதுவுமா மனுஷன நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்க விடுறியா?” வேலைக்கு செல்லும் நாட்களில் அலாரம் வைத்து காலையிலையே எழுந்து விடுபவன். விடுமுறை என்பதால் தூங்கியிருக்க, அது கூட இவளுக்கு பொறுக்கவில்லையா என்ற கோபத்தை முகத்தில் அப்பட்டமாக கட்டினான்.
“கொஞ்ச நேரமா? எக்ஸாம் இருக்கு படிக்கணும் என்று சொன்ன என்னையும் படிக்க விடாம காலைல படிக்கலாம் என்று சொல்லி நைட் பத்து மணில இருந்து தூங்கி கிட்டு தானே இருக்க. என்னமோ நைட்டு முழுக்க வேல பார்த்து இப்போ தான் தூங்கினது போல் பேசுற? சரி அத விடு காய்கறி வண்டிக்காரன் வந்திருக்கான். போ போய் தக்காளியும், ஏதாச்சும் காயும் வாங்கிட்டு வா” என்றாள். 
“நானா?” விழித்தவனுக்கு அப்பொழுதுதான் தாங்கள் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் ஞாபகம் வந்தது. “ஆனாலும் வர வர ரொம்பதான் மரியாதையா பேசுற” அவனை அவள் ஒருமையில் பேசுவது ஒன்றும் இனியனுக்கு கோபத்தை உண்டு பண்ணவில்லை. அவள் அதட்டுவதுதான் அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.  
“பின்ன பக்கத்து வீட்டுக்காரனையா எழுப்பி அனுப்ப முடியும்? நீ தானே என் புருஷன் போ. எவ்வளவு நேரமா கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன். கும்பகர்ணனுக்கு தம்பியா இருப போல இப்படி தூங்குற”
அனுபமா அவனை தொடாமல் எழுப்புவதற்கு அழைத்துக் கொண்டு தான் இருந்தாள். தட்டி எழுப்பியிருந்தால் இனியன் எழுந்திருப்பான். கனவு கண்டு கொண்டிருந்தவனின் காதில் இவள் குரல் விழாததன் விதி படுக்கையிலையே முகம் கழுவி விட்டாள்.
“ஒரு கேள்வி கேட்டா ஒன்பது பேச்சு பேசி விளக்கம் கொடுத்து அவங்கண்ணனுக்கு தங்கச்சி என்று நிரூபிக்கிறா” முணுமுணுத்தவன் குளியலறைக்குள் செல்ல முட்பட்டான்.
அவனை இழுத்து நிறுத்தியவள் “எங்க போற? எழுந்ததே லேட். நீ ஆடி அசஞ்சி போகும் போது வண்டிக்காரன் கிளம்பி இருப்பான். சீக்கிரம் போ”
“ஏன்டி… பள்ளு விளக்கல, முகம் கழுவல, காலை கடன் என்று சில விஷயம் இருக்கு…” என்றவனை முறைத்தவள்    
“அதெல்லாம் எனக்கு தெரியாது. வண்டிக்காரன் போய்ட்டான் வெறும் சாதம் மட்டும் தான் வைப்பேன்” என்று மிரட்டினாள்.
“இவ ஒருத்தி…” மனதுக்குள் அவளை வசை பாடியவன் கைலியிலிருந்து போர்டமுக்கு மாறி கையில் கிடைத்த டீசர்ட்டையும் அணிந்து கொண்டு கதவை திறக்க சென்றான்.
“எங்க போற?” அனுபமா கையை கட்டிக்க கொண்டு கேலியாக கேட்டாள்.
என்ன இவ தூங்குறவன எழுப்பி காய்கறி வாங்கச் சொல்லிட்டு கேள்வி கேக்குறாளே என்று இனியனின் மைண்ட் வாய்ஸ் அனுபமாவை ஏகத்துக்கும் முறைத்தாலும் “காய்கறி வாங்க” என்று பதில் சொல்லவும் தவறவில்லை.
“காய்கறி வண்டிக்காரன் உன் அண்ணனா? தம்பியா? உனக்கு மட்டும் காசே வாங்காம சும்மா கொடுப்பானா? காசு எடுத்துட்டு போ. அதுவும் சில்லறையா. காலையிலையே அவன் வாயில விழுந்து வேற அவமானப் படப்போறியா?” நீ அவமானப்படுவதை என்னால் பார்க்க முடியாதே என்ற வருத்தத்தில் ஞாபகப்படுத்தியதை போலவே கூறினாள்.
“இதுக்கு எதுக்குடி இந்தப் பேச்சு பேசுற? காசு எடுத்து போக சொன்னா போக மாட்டேனா?” அனுபமாவை வாயுக்குள்ளே வசை பாடியவன் பணத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் கதவை திறக்க சென்றான்.
“பைய யாரு கொண்டு போவாங்க? உங்க அப்பா வந்தா கொண்டு வந்து தருவாங்க? இல்ல உங்கம்மா வந்தா கொண்டு தருவாங்க. எடுத்து போ. தண்டமா பையன வளர்த்து வச்சிருக்காங்க. எந்த வேலையும் சுத்தமா தெரியாது. என்ன பண்ணனும் என்று கூட தெரியாது. காதல் மட்டும் பண்ண தெரியுது” இனியனின் காதில் விழ வேண்டியே முணுமுணுத்தான்.
“பையா? என்ன பை” புரியாது கேட்ட இனியன் “எங்கம்மா அப்பா என்ன நல்லாத்தான் வளர்த்திருக்காங்க. வேலை செஞ்சி கஷ்டப் பாடணும் என்ற சூழ்நிலை எங்க வீட்டுல இல்ல. கண்டபடி முணுமுணுக்குறத நிறுத்து. உன் குணம் என் புள்ளைக்கு வந்துடப் போகுது” அவளுக்கு குட்டு வைக்க எண்ணி கூறினான்.
“இதையும் சினிமா பார்த்துதான் தெரிஞ்சிகிட்டியா?” கேலியாக கேட்டவள் “காய்கறியெல்லாம் எதுல எடுத்துட்டு வருவ? கையிலையா? அதுக்குதான் பை” என்றவாறே அவன் கையிலே திணித்தாள்.
சேத்துலையும் அடிவாங்கி, சோத்துலையும் அடிவாங்கிய முகபாவனையோடு “யப்பா முடியலடா சாமி…” என்றவாறே காய்கறி வாங்க கீழே சென்றான் இனியன்.
இனியன் இவ்வாறெல்லாம் பொறுத்து போகிறவன் கிடையாது. குழந்தை உண்டானால் ஒரு பெண்ணை எவ்வாறெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்? அவள் மனநிலை எவ்வாறு இருக்கும்? அது குழந்தையை எவ்வாறு பாதிக்கும் என்று அறிந்து வைத்திருந்தமையால் அவன் குழந்தைக்காக அனுபமாவை பொறுத்துப் போவதாக தனக்குத் தானே கூறிக்கொள்வான்.
“பாப்பா மட்டும் பொறக்கட்டும் டி உன்ன கவனிக்கிற விதத்துல கவனிக்கிறேன்” கருவிக்கு கொண்டான் இனியன். 
மின்தூக்கியில் கீழே செல்லும் பொழுதுதான் “நமக்குத்தான் காய்கறியே வாங்கத் தெரியாதே. கீழே போய் என்னத்த வாங்குறது? எப்படி வாங்குறது” புரியாது முழித்தான்.
கீழே சென்றால் காய்கறி வண்டியை சுற்றி பெண்கள் கூட்டம்தான் நின்றிருந்தனர். 
“இந்த கூட்டத்தை பிளந்து கொண்டு நாம போய் எப்படி காய்கறி வாங்குறது?” இனியன் அங்கேயே நின்று வேடிக்கை பார்த்திருந்தான்.
“என்ன தம்பி புதுசா தெரியிறீங்க? யாரு நீங்க?” ஒரு பெரியவர் விசாரிக்க, தளத்தையும் பிளாட்டின் நம்பரையும் கூறினான் இனியன்.
“வடிவேல் ஐயா வீடு. அவருக்கு பையன் இல்லையே. மாப்பிள்ளையா? என் பேர் மதியழகன். உங்களுக்கு கீழ் பிளாட்டுதான். மாலைல வாக்கிங் போறப்போ ஐயாவை பழக்கம். இப்படி பார்த்திருந்தா வேலைக்காகாது வாங்க, வாங்க” என்று அழைத்து சென்றவருக்கு வடிவேலின் வயதிருக்கும்.
 “ஹே..ஹே..  தள்ளுமா.. தள்ளுமா.. தம்பிக்கு இடம் கொடு” என்று இனியனுக்கு காய்கறி வாங்க இடம் கொடுத்தார்.  
இனியனுக்கு எல்லாமே சினிமா அறிவுதான். எதோ ஒரு சினிமாவில் வெண்டைக்காயின் நுனியை உடைத்துப் பார்த்து வாங்க வேண்டும், தேங்காய் ஆட்டிப் பார்த்து வாங்க வேண்டும் என்றெல்லாம் ஞாபகம் வர செவ்வனே என்று காரியத்தில் இறங்கினான்.
“யோவ் யோவ் என்னய்யா பண்ணுற? நீ பாட்டுக்கு எல்லாத்தையும் ஒடச்சி போட்டு போய்ட்டீனா. அதெல்லாம் யாரு வாங்குவாங்க? கொஞ்சம் பொறு இவங்கள அனுப்பிட்டு உன்ன கவனிக்கிறேன். என்ன வேணும்னு சொல்லு நானே போட்டுத்தாறேன்” என்றான் வண்டிக்காரன்.
“அதுவும் சரிதான். நமக்கு ஒரு வேல மிச்சம்” என்று இனியன் ஒதுங்கிக்கொள்ள
“என்ன தம்பி புதுசா கல்யாணமானவரா நீங்க?”
“புதுக் குடித்தனமா?”
“பொண்டாட்டிய வேலை வாங்க மனசில்லையா?”
“கல்யாணமான புதுசுல என் புருஷனும் இப்படித்தான். இப்போ…” அழுத்துக் கொண்டது ஒரு குரல்.
“ஏன்டா காய்கறி வாங்க வந்தது குத்தமாடா?” என்பதை போல் அவர்களை பார்த்தவன் அமைதியாக நின்றிருந்தான்.
“தம்பி அவன் அப்படித்தான் சொல்லுவான். நீங்க வாங்க. நான் சொல்லித்தரேன்” அழைத்தார் மதியழகன்.
யாரோ, எவரோ என்றே தெரியாத மனிதரிடம் காய்கறி வாங்கக் கற்றுக்கொண்டான் இனியன். அவர் மாத்திரமல்ல அங்கிருந்த சில பெண்களும் மலிவாக வாங்கி எவ்வாறு நீண்ட நாட்களுக்கு எடுத்து வைக்கலாம் என்பதை அவனுக்கு கூறலாயினர். 
“ஓஹ்… இவ்வளவு விஷயமிருக்கா…” ஆச்சரியப்பட்டவனுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது. வண்டிக்காரன் கொடுத்ததை வாங்கிச் சென்றிருந்தால் அனுபமா அவன் காதில் இரத்தம் வரும் வரையில் பாட்டுப் பாடியிருந்திருப்பாள்.
அழுகிய காய்கறிகள் இல்லைதான். இரண்டு மூன்று நாட்கள் பழையவை கலந்து போட்டு விடுவான். பாவம் அவன் நிலைமை அவனுக்கு. அதற்காக அதை வாங்கிக் கொண்டு சென்று அனுபமாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள முடியுமா?
தொட்டதுக்கெல்லாம் அவள் அதிகமாக பேசுவது போல் தெரிகிறது. தான் எப்பொழுது சின்ன தவறு செய்தாலும் அவள் தண்டனை கொடுக்க காத்திருக்கிறது போலவும் நடந்துக்க கொள்கின்றாள். அவள் இருக்கும் நிலைமையில் அவளை திட்டவும் முடியவில்லை. கடியாவும் முடியவில்லை.
ஒருவாறு தேவையானதை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று மேசையில் வைத்து விட்டு திரும்ப
“என்ன லேட்? ஒழுங்கா பார்த்து வாங்கினியா? இல்ல வண்டிக்காரன் கொடுத்ததை கையோட கொண்டு வந்தியா?” என்று ஆரம்பித்தாள்.
இனியன் எதுவுமே பேசாமல் குளியலறைக்குள் நுழைந்தான். 
இனியனை திட்டுவதை விட அவனை இவ்வாறு அதட்டுவது அனுபமாவுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இனியன் ஏன் எதிர்த்து பேச மாட்டேங்குறான்? எரிந்து விழ மாட்டேங்குறான்? இது அவன் குணமே இல்லையே என்று யோசித்த அனுபமாவுக்கு அவள் பேசும் பொழுதெல்லாம் அவன் அடிக்கடி அவள் வயிற்றை பார்த்து அவனை கட்டுக்குள் கொண்டு வருவதைக் கண்டு மேலும் குஷி.
“ஒவ்வொரு மனுஷனுக்கு ஒவ்வொரு வீக்கனஸ். இவனுக்கு இவன் குழந்தை போல. எது எப்படியோ… யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று சொல்லி இருக்காங்களே. இது என்னோட காலம். இனி எப்பவும் என்னோட காலம் தான். குழந்தையை வச்சே உன்ன உண்டு இல்லைனு ஒரு வழி பண்ணுறேன்” தனக்கு நடந்த அனைத்தும் நெஞ்சம் முழுவதும் பற்றி எரியும் பொழுது கருவிக்கொள்வாள் அனுபமா.
“உள்ள புகுந்தா என்ன அர்த்தம்…? யார் காய நறுக்கி கொடுப்பாங்க? சீக்கிரம் வா” கொஞ்சம் குரலை உயர்த்தி அதட்டினாள்.
“வண்டிக்காரன் போய்டுவான்னு என்ன அனுப்பினல்ல. ஒரு மனுஷன் எவ்வளவு நேரம் அடக்கிகிட்டு இருப்பான். ஆத்திரத்தை கூட அடக்கலாம் மு….. அடக்க முடியாதுடி…” என்று கத்தினான்.
தலையில் அடித்துக் கொண்ட அனுபமா “நீ வந்து காய்கறி நறுக்கிக் தந்தா தான் நான் சமைக்கவே ஆரம்பிப்பேன்” என்று விட்டு அகன்றாள்.
காயை எவ்வாறு நறுக்க வேண்டும் என்று வந்து நின்றான் இனியன்.
“முதல்ல சோப் போட்டு கைய கழுவினியா?” சலனமே இல்லாமல் அனுபமா கேட்க அவளை நன்றாக முறைத்தான் இனியன்.
அதை கண்டு கொள்ளாமல் “இந்தா கட்டிங் போர்ட். கத்திய ஒழுங்கா பிடிச்சி காய கட் பண்ணு. விரலை கட் பண்ணி ஸீன் போடாத” என்றவள் அவளை பாராமல் அடுத்த வேலையை கவனிக்கலானாள்.
“ரொம்ப பண்ணுறாளே” கோபம் கனன்றாலும் எதுவும் பேசாமல் வேலையை பார்த்தான் இனியன்.
இரண்டு நாளைக்கு ஒரு முறை காய்களை வாங்கி  வருவதும், கண்களில் கண்ணீர் வழிய வழிய வெங்காயம் நறுக்குவதும், பச்சை மிளகாயை நறுக்கி விட்டு கண்ணை கசக்கி அல்லல் படுவதும். காராட்டை சாப்பிட்டு அனுபமாவிடம் திட்டு வாங்கிக் கொள்வதும். உப்பு சரியாக இருக்கா என்று பார்க்க சொல்லி அவன் கையில் இவள் சூடு வைப்பதுமாக காலை நேரம் பரபரப்பாக செல்லும்.
அதன் பின் இருவரும் குளிக்க செல்ல ஒரு சண்டை நடக்கும்.
“எனக்கு வேலைக்கு செல்ல நேரமாகுது என்று இனியன் கத்த”
“நானும் காலேஜ் போகணும்” என்று அவனுக்கு மேல் கத்துவாள் அனுபமா.
“அதான் இன்னொரு வாஷ் ரூம் இருக்கே அங்க போக வேண்டியது தானே” என்று இனியன் சொன்னால்
“ஏன் நீ போக வேண்டியது தானே” என்பாள்.
எந்த விதத்திலும் அவனுக்கு விட்டுக் கொடுத்து செல்ல முனையவே மாட்டாள். வீம்புக்கென்றே பிடிவாதம் பிடிப்பாள். இனியன்தான் இறங்கி வர வேண்டியிருந்தது. 
சமைப்பவள் தனக்கு மட்டும் தட்டில் போட்டுக் கொண்டு சாப்பிடுவாள்.
“ஏய் எங்கடி எனக்கு சாப்பாடு?”
“ஏன் உனக்கு கையில்லையா? சமச்சத்து மட்டுமில்லாம போட்டு வேற தரணுமோ? ஏன் ஊட்டி விட சொல்லேன்”
“கல்யாணம் பண்ணி வச்சதே பொண்டாட்டி வந்து பரிமாறுவா என்பது போலவே எங்கம்மா பேசுவா… இவ பேசுறத அவங்க கேட்டிருக்கணும். முணுமுணுத்தவன் “நான் தான் காய் நறுக்கிக் கொடுத்தேன் பரிமாறினாதான் என்னவாம்?”  கொஞ்சம் குரலை உயர்த்திக் கேட்டான்.
அவனுக்கு அஞ்சுபவளா “ஏன் யாரும் பரிமாறாம தொரைக்கு சோறு தொண்டையில் இறங்காதோ?” அனு கிண்டலடிக்க,
இவள் வழிக்கு வர மாட்டாளென்று புரிய தானே சென்று தட்டில் போட்டு சாப்பிட்டவன் கழுவியும் வைத்தான்.
ஒருநாள் அனுபமா பாத்திரம் விளக்கினால், ஒருநாள் இனியன் விளக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.
“நாய்க்கு வாக்கப்பட்டா அர்த்த ராத்திரியில் குறைச்சிதானே ஆகணும் பேய்க்கு வாக்கப்பட்டா புளிய மரத்துல தொங்கித் தானே ஆகணும்” என்று அடிக்கடி கூறிக்கொள்வான் இனியன்.
அடுத்த பிரச்சினை வாஷிங் மெஷின் வாங்க சென்றதில் வந்தது.
தானாக இயங்கும் வாஷிங் மெஷின் வாங்கிக் கொள்ளலாமென்று இனியன் கூற, இல்ல அது வேண்டாம் மேனுவல் தான் வேண்டும் என்றாள் அனுபமா.
“எதுக்கு? எனக்கு வேற வேலையிருக்கு. அதுலயும் எனக்கு ஏதாவது வேலை கொடுக்கலாம் என்று எண்ணமோ?” அனுபமாவின் காதருகில் குனிந்துக் கேட்டான் இனியன்.
“இங்க பாரு. சில துணிய கையாள துவைக்கணும். சிலாத மெஷின்லயே போடலாம். பாதி கைல துவைச்சு, மெஷின்ல போடத்தான் மேனுவல் கேக்குறேன்” என்றாள்.
“ஓஹ்…… நான் எண்ணமோ கரண்ட் பிள்ளை கம்மி பண்ண கேக்குரியோன்னு நினச்சேன்” என்று கிண்டல் செய்ய அனுபமா அவனை நன்றாகவே முறைத்தாள்.
“வந்த இடத்திலும் இப்படி முறைக்கிறாளே. ஆயிரம் சினிமா பார்த்து என்ன பிரயோஜனம்? பொண்டாட்டிய ஷாப்பிங் கூட்டிகிட்டு போகக் கூடாதென்று தெரியலையே. தனியா வந்து வாங்கி இருந்தா நிம்மதியா வாங்கி வீட்டுக்கு டிலிவரியும் போய் இருக்கும்” தனக்குள் புலம்பியவன் “இங்க பாரு ஆபர்ல ஆட்டோ மெஷின் தான் விலை குறைவாக இருக்கு. சிக்கனமாக செலவு செய்ய சொன்னல்ல” என்று அவள் பாணியிலையே பேசி அவனுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு வீடு வந்தான் இனியன்.
ஒருவாறு மெஷினை வீட்டில் பொருத்தி அருகே அழுக்குத் துணிகளை போட ஒரு பிளாஸ்டிக் கூடையையும் வைக்கப்பட்டது.
இருவரினதும் அழுக்குத்துணிகளை ஒரே கூடையில் போடுவதில் அனுபமாவுக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை. துணி துவைக்கும் வரை இனியனுக்கும் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.
அனுபமா அவளது துணிகளை மட்டும் வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து அழகாக காய போட்டிருந்தாள்.
சண்டே அதுவுமாய் நேரம் சென்று எழுந்து வந்த இனியன் தனது துணிகள் எதுவுமே துவைக்கப்படாமல் இருப்பதைக் கண்டு “அனுபமா…” என்று அவள் பெயரை அழைத்தவாறே சென்றவன் “ஏன் என் துணி எதுவுமே துவைக்கப் படாம இருக்கு என்ன காரணம்?” அடக்கப்பட்ட கோபத்தோடு விசாரித்தான்.
இனியன் கையினால் துணி துவைப்பதென்ன? வாஷிங் மெஷினில் கூட அவனது துணிகளை போட்டதில்லை. வாஷிங் மெஷின் வாங்கியது எதற்காக?  ஒருவாரமாக அவன் துணிகள் துவைக்கப்படாமல் இன்று சண்டே துவைத்தால் தானே நாளையிலிருந்து வேலைக்கு துணியை போட்டு செல்ல முடியும்.
“என்ன?…” அலட்ச்சியமாக கேட்டாள் அனுபமா.
“நான் கேட்டது உன் காதுல விழலையா? விழாத மாதிரி நடிக்காத. ஏன் என் துணியெல்லாம் துவைக்கல”
“நான் என்ன சொன்னேன் உன் கிட்ட?”
“என்ன சொன்ன? வேலையெல்லாம் பங்கு போட்டுக்கலாம் என்று சொன்ன நீ மெஷிங்க துணிய போட்டிருந்தா நான் காய போட்டிருப்பேன். காய போட்ட துணிய எடுத்து வச்சிருந்திருப்பேன். நீ மடிச்சு வச்சிருப்ப” உசாராக பதில் கூறினான்.
“அந்த ஈரவெங்காயமெல்லாம் எங்களுக்குத் தெரியும். மேனுவல் வாங்கிச் சொன்னேனே அத வாங்காம உன் இஷ்டத்து ஒன்ன வாங்கிட்டு வந்த. என் சாயம் போற துணியெல்லாம் என் துணியோடவே போட முடியாது. இதுல உன் துணியோட போட்டு. சாயம் உன் துணில பட்டா.. அதுக்கு நீ என்ன திட்டுவ?”
என்னடா இவ என்று பார்த்தவன் “சரி உன் துணியெல்லாம் போட்ட பிறகு போட வேண்டியது தானே. ஏன் போடல” இவ வேண்டுமென்றேதான் செய்திருக்கா இனியனின் மனம் கூவியது.
என் துணியெல்லாம் போட்டு முடிஞ்ச உடனே ரொம்ப டயடா பீல் பண்ணேன். போய் தூங்கிட்டேன். அதான் நீ எந்திரிச்சு வந்துட்டல்ல. உன் துணியெல்லாம் நீயே மெஷின்ல போடு. அப்பா வரேன்னு சொன்னாரு நான் அவர் கூட போறேன்”
தூங்கியதாக அவள் கூறியது பொய் என்று நொடியில் இனியப்புக்கு புரிந்தது. பால்கனியில் அவள் மாரளவுக்குத்தான் கயிறே கட்டியிருக்கின்றான். குனிந்து, நிமிர்ந்து காயப்போட அவசியமும் இருக்காத பட்சத்தில் டயர்ட் என்று கூறியது உண்மையா? பொய்யா? தெரியவில்லை. ரொம்பவும் டயடாக இருந்தால் அவள் அப்பாவோடு வெளியே கிளம்பிச் செல்லவும் மாட்டாளே என்றெண்ணியவன் தனது துணிகளை மெஷினில் போடலானான்.
அனுபமா எங்க செல்கிறாள்? எதற்காக செல்கிறாள்? என்றெல்லாம் இனியன் கேட்கவேயில்லை.
வாஷிங் மெஷினை இயக்குவது எப்படி என்று கூட இனியனுக்கு தெரியவில்லை. அதற்குண்டான புத்தகத்தை பார்த்து புலம்பியவன் ஒன்றும் புரியாமல் யூ டியூப் இல் ஒரு வீடியோவை பார்த்து ஒருவாறு இயக்கினான்.
அவன் செய்கையை அனுபமா ஒரு ஓரமாக இருந்து வேடிக்கை பார்த்து ரசித்தளே ஒழிய அவனுக்கு எந்த உதவியும் செய்ய முனையவில்லை.
அவள் பார்ப்பது தெரிந்தாலும் இவனும் அவளை கண்டுகொள்ளாமல் அவன் வேலையில் கவனமாக இருந்தான். அவளிடம் கேட்டிருந்தால் நிச்சயமாக கிண்டல் செய்து குத்திக் காட்டி பேசியிருப்பாளே ஒழிய தனக்கு உதவியிருக்க மாட்டாள் என்று இனியனுக்கு நன்றாகவே தெரியுமென்பதால் அவளை திரும்பியும் பார்க்கவில்லை.  
“இவனெல்லாம் லவ் பண்ணி ஓடிப்போய் கல்யாணம் பண்ணி தனியா வாழ்ந்திடுவானா? விளங்கும். ஒருவேல உருப்படியா பண்ணத் தெரியல. இவன நம்பி அந்த ஜான்சி எப்படித்தான் லவ் பண்ணாலோ” மானசீகமாக தலையில் கைவைத்தவளுக்கு புரியவில்லை. அவனோடு அவள் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றாலென்று.     
மகளை அழைத்து செல்ல வந்த வடிவேல் இனியனைக் கண்டு “மாப்புள நீங்க வீட்டுலையா இருக்கீங்க? சண்டே அதுவுமா வீட்டுல இருக்க மாட்டீங்க. வெளிய போய்டுறதாக அனு சொன்னா”
“அவ என்னென்னெனவோ சொல்லுவா… அதெல்லாமா நம்புவீங்க?” என்று அவரை பார்த்து புன்னகைத்து வைத்தவன் “கிளம்பனும் மாமா. கொஞ்சம் உடம்பு படுத்துறது போல இருக்கு. அதான் போகலாமா? வேண்டாமா என்று யோசிக்கிறேன்” என்றான் இனியன்.
அவ்வளவுதான். என்னாச்சு மாப்புள. டாக்டர் கிட்ட போகணுமா? ரொம்ப முடியலையா?” என்று நலம் விசாரித்தார். 
“என்ன இவரு சும்மா சொன்னதுக்கே ரொம்ப ஓவரா பண்ணுறாரு. இவரு குணம் தான் இவரு பொண்ணுக்கும் போல” என்று இனியன் பார்க்க, 
“அனு நீ வீட்டுலையே இருந்து மாப்பிளையை பார்த்துக்க, நான் இந்நேரம் கணி மாப்பிளை கூட அம்மாவும் நிலுவும் வந்திருப்பாங்க. நான் போறேன். நீ மாப்பிளைக்கு கூட போய் தேவையானதை வாங்கிக்க” என்றார்.
மாமனார் பேசிய பின்தான் கணி, நிலுபமா ரிசப்ஷனுக்கு துணியெடுக்க செல்லத்தான் வடிவேல் அனுபமாவை அழைத்து செல்ல வந்திருக்கிறார் என்று புரிந்தது. அனுபமா வேறு இனியனை முறைக்கலானாள். 
“எனக்கு ரொம்ப எல்லாம் முடியாம இல்ல மாமா. நீங்க அனுபமாவ கூட்டிகிட்டு போங்க. அனு உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்க” என்று அவனது பேங்க் கார்டையும் கொடுத்தான்.
அதை வாங்காமல் “கல்யாணத்துக்கு வாங்கின புடவையை ஏகப்பட்டது இருக்கு அதுல ஒன்ன உடுத்திக்கிறேன். நான் எனக்கு எதுவும் வாங்கப் போகல. நிலுக்குத்தான்” என்றவள் வடிவேலோடு கிளம்பி சென்று விட்டாள்.
இனியன் செய்ததை அவனாலையே நம்ப முடியவில்லை. கணிக்குக் கூட எக்காரணத்தைக் கொண்டும் அவன் கடனட்டையை கொடுக்க மாட்டான். அனுபமா கேளாமலையே எடுத்துக் கொடுத்திருந்தான்.
“தான் எதுக்கு அவ்வாறு செய்தோம்?” கடனட்டையை கையில் வைத்தவாரு தலையை உலுக்கி யோசித்தவன் “அவ கூட தானே வாஷிங் மெஷின் வாங்கப் போனேன். அந்த ஞாபகத்துல கொடுத்திருப்பேன்” என்று கூறிக் கொண்டான்.
அவன் மனசாட்ச்சியோ “கணியோடு எத்தனை தடவை சினிமாவுக்கு போய் இருப்ப? கடனட்டையை பார்க்கவாவது கொடுத்திருப்பியா?” என்று கேலி செய்தது.
“அவ வேற யாரோ இல்லையே என் குழந்தைக்கு அம்மா..” என்று தனக்குத்தானே கூறியவன் அடுத்த வேலையை பார்கலானான்.
தந்தையோடு கடைக்கு பயணித்துக் கொண்டிருந்த அனுபமாவுக்கும் இதே சிந்தனைதான். இனியன் கடனட்டையை கொடுத்த உடன் அதை பெற்றுக்கொண்டு செலவு செய்யுமளவுக்கு தானோ தங்களது உறவு இருக்கிறது? தந்தை இருந்ததால் இனியன் கொடுத்தானோ? அவன் கொடுத்த காசில் தான் துணி வாங்கி அணிய வேண்டுமா? தனக்கு என்ன தேவையோ இன்றும் தனது தந்தை செய்து கொடுப்பார். கர்வமாக நினைத்துக் கொண்டாள்.
ஒரே வேலையை இருவரும் பங்கு போட்டுக்கொண்டு செய்தாலும் தாமரை  இலையின் மேல் தண்ணீர் போல் தான் இருவரின் உறவும் ஒட்டாமல் நகர்ந்து கொண்டிருந்தது.
யார் யாரை முதலில் புரிந்துக் கொள்வார்களா?
முயற்சியாவது எடுப்பார்களா?
பொறுத்திருந்து பார்க்கலாம்.