அனுபமாவை வீட்டில் விட்ட இனியன் வீட்டுக்கு செல்லும் பொழுது அவனை அழைத்த கணி தானும் வருவதாக கூறியிருக்க, காவல்துறை வண்டியில் தான் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
வரும் வழியில் தான் இனியன் தம்பியிடம் அனுபமா டைவோர்ஸ் கேட்ட விஷயத்தை கூறி புலம்பியவாறு வந்திருந்தான். கணிக்கும் வள்ளி பேசியது மனதில் உறுத்திக் கொண்டு இருக்கவே இவளை திருமணம் செய்து தன்னால் ஒரு நாளும் நிம்மதியாக இருக்க முடியாது என்று வீட்டுக்கு வந்தால் அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் வள்ளி நடந்துகொண்டிருந்தாள்.
இரவு தூக்கத்தை தொலைத்து வெகுநேரமாக சிந்த்தித்து, ஒரு முடிவுக்கு வந்தவன் அடுத்த நாளே நிலுபமாவின் காலேஜுக்கு சென்று அவளை சந்தித்தான்.
“நிலுபமா வடிவேல் உங்கள தேடி போலீஸ் வந்திருக்கு. பிரின்சிபால் உங்கள கூட்டிகிட்டு வர சொன்னாரு” பியூன் வந்து கூறவும் வெலவெலத்துப் போன முகத்தோடுதான் அதிபரின் அறையை அடைந்தாள் நிலுபமா.
அங்கே அமர்ந்திருந்த கணிமொழியனை கண்டவள் முதலில் புருவம் உயர்த்தி அதன் பின் முறைக்கலானாள்.
அனுபமா திருமணம் செய்து சென்ற பின் சோகமாக இருந்தவளுக்கு வடிவேல் சென்னையில் வீடு வாங்கியது, தன்னை சென்னையில் படிக்க வைக்கப் போவதும் தெரிய வந்ததும் சந்தோஷமடைந்தாள்.
ஆனால் சென்னை வந்தவளுக்கு அக்கா மாமாவை பிரிந்து வந்து விட்டாள் என்பது அன்னையின் புலம்பலினூடாக புரிந்தது. அக்காவிடம் கேட்டால் மௌனம். அன்னையிடம் கேட்டால் திட்டும், தந்தையிடம் கேட்டால் “நீ சின்ன பொண்ணு பாப்பா” என்றார்.
அக்காவின் வாழ்க்கையில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. ஆனால் அக்கா கர்ப்பமாக இருக்கிறாள். மாமாவின் வீட்டிலிருந்து யாருமே வரவில்லை என்றதும் கோபமாக இனியனை சந்திக்கலாமென்று நினைத்து அவன் காரியாலயம் சென்றால் அவன் லண்டன் சென்று விட்டதை அறிந்து மேலும் கொதித்தாள்.
“இப்பொழுது இவன் எதற்காக என்னை சந்திக்க இங்கே வந்திருக்கின்றான்?” கணியை முறைத்தவாறே அதிபரை ஏறிட்டாள்.
“உன் கிட்ட எதோ கேஸ் விஷயமா இன்வெஸ்டிகேஷன் பண்ணணுமாம். போமா போய் கோப்ரேட் பண்ணு போ” அதிபர் முறைத்தவாறே உத்தரவிட கோபமாக வெளியே வந்தாள் நிலுபமா.
“கேஸ் விஷயம் என்றா சொல்லணும்? சொந்தக்காரி என்று சொல்ல முடியாத? அப்படி என்ன எங்க குடும்பத்து மேல உங்களுக்கு பகை” என்று கணியின் மேல் பாய்ந்தாள்.
அவளின் அவ்வார்த்தையும், கோபமும் அவன் மனதில் தென்றல் வீசியது. பாவம் அவனுக்கு தெரியவில்லை அது அவள் அக்காவின் மீது வைத்த பாசத்தால் வந்த வார்த்தையென்று
“ஓஹ்.. ஓஹ்.. அமைதி அமைதி… சொந்தக்காரி என்று சொன்னா காலேஜ் முடிஞ்ச பிறகு சந்திச்சு பேசுங்க என்று காவலாளியே சொல்லுறாரு. அதுவரைக்கும் காக்கிசட்டைக்கு பொறுமை இல்ல. அதான் இப்படி ஒரு பிட்ட போட்டு உன்ன தள்ளிக்கிட்டு வந்தேன்”
“நான் என்ன கேஸ் விஷயமாகவா பேச வந்தேன்?” சிரித்தான் கணி.
“ஆமா எதுக்கு என்ன பார்க்க வந்தீங்க?”
“உங்கக்கா என் அண்ணாவை பிரிஞ்சி வந்திருக்காங்களே? அவங்கள சேர்த்து வைக்க வேணும் என்று கொஞ்சம் கூட அக்கறை இருக்கா? இருந்திருந்தா என்ன வந்து சந்திச்சு பேசி இருப்ப” கடைசி வாக்கியத்தை முணுமுணுப்போடு முடித்தான்.
“நான் எதுக்கு உங்கள சந்திச்சு பேசணும். மாமாவை சந்திச்சு பேசலாம் என்று ஆபீஸ் போனேன். அவர் லண்டன் போய்ட்டார் என்று சொன்னாங்க. அதான் வந்துட்டாரே. இனி எல்லாம் சுமூகமாக முடியுமென்று அப்பா சொன்னாரு” சலனமே இல்லாமல் தான் கூறினாள் நிலுபமா. இவ்வாறு நடந்து விட்டதே என்ற கோபம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
“இவ ரொம்ப பாஸ்ட் தான்” என்ற மைண்ட் வாயிசை மட்டம் தட்டியவன். “என்ன சுமூகமாக முடிஞ்சிடும். உங்கக்கா அண்ணா கிட்ட டிவோர்ஸ் வேணும் என்று கேட்டாங்களாம்” அவளை நேர்பார்வை பார்த்துதான் கூறினான்
“என்ன?” அதிர்ந்த நிலுபமா அடுத்த கணம் “ஆமா டிவோர்ஸ் வேணும் என்று சொல்லுற அளவுக்கு அவங்களுக்குள்ள என்ன பிரச்சினை? உங்க வீட்டுல எங்கக்காக்கு என்ன நடந்தது? டாச்சர் பண்ணீங்களா? போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன்” முறைத்தவாறே மிரட்டலானாள்.
நொடியில் மாறிய அவள் முகபாவங்களை ரசித்தவன் “என்ன நடந்தது என்று இவளுக்கு தெரியாதோ?” என்று யோசித்தவன் நிலுபமா மிரட்டியதால் சிரித்தவாறே “நானே போலீஸ் தான். மறந்துடாதே. அண்ணி கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லி கேட்டேன். அவங்க கொடுக்கல” உதடு பிதுக்கி தோளையும் உலுக்கி மெஸ்மரிசம் செய்தான்.
அதை ரசிக்க வேண்டியவளோ அவனை நம்பாத பார்வை பார்த்து “அக்கா இத பத்தி வீட்டுல எதுவுமே சொல்ல” என்றாள்.
“எது நான் கம்ப்ளைன்ட் கொடுக்க சொன்னதையா?” சிரிக்காமல் கணி கேட்க,
அவனை முறைத்தவள் “டைவோர்ஸ் கேட்டதை பத்தி சொன்னேன்” என்றாள்.
சட்டென்று கணியின் முகத்தில் மின்னல் தோன்றி மறைய, “அண்ணி என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க அவங்க மனசுல? வள்ளி எங்க மாமா பொண்ணு தானே. உரிமையா அண்ணா கூட பேசக் கூட முடியாதா? அண்ணா வள்ளியை லவ் பண்ணுறதாக பேசுவாங்களா?” கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான்.
“என்ன சொல்லுறீங்க? நீங்களும் வள்ளியக்காவும் தானே லவ் பண்ணுறீங்க?”
“ஆகா நம்ம நினைச்சது சரிதான். இவ இப்படி நினைச்சா நான் எப்படி இவள கல்யாணம் பண்ணுறது?” தனக்குள் முணுமுணுத்தவன்
“யார் சொன்னா? அப்படி எதுவுமில்ல. எங்கம்மாவுக்கு வள்ளி நம்ம வீட்டுக்கு மருமகளாகணும். அதுவும் மூத்த மருமகள். ஆனா வள்ளிக்கு என்னதான் பிடிச்சிருக்காம். அதனால அண்ணாக்கு உங்கக்காவை பேசி முடிச்சிட்டாங்க. எங்கம்மா வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்காம வள்ளி மூத்தமருமகளாக இருந்தவ என்று அண்ணிய கடுப்பேத்த, அண்ணி காண்டாகி அண்ணன் கூட சண்டை போட, அதுக்கு எதுவா வள்ளி அண்ணன் கூட பேசுறதுக்கு அமைஞ்சிருச்சு”
“இதுக்கு போயா அக்கா டிவோர்ஸ் கேக்குறா?” அதிர்ச்சியான நிலுபமாவை தான் சொன்ன கதையை நம்பினாளா? என்று கணி சந்தேகமாக பார்த்தான்.
அனுபமா சில விஷயங்களை விட்டுக் கொடுக்க மாட்டாள். வடிவேலின் பாசமும் அவ்வாறுதான். தந்தையின் பாசத்தையே தங்கையோடு பங்கு போடாதவள் கணவனை கண்டவளோடு சேர்த்து வைத்து பேசினால் பொறுத்துக் கொள்வாளா? மாமா இதை புரிந்துகொள்ளாததால் இவர்களிடையே பிரச்சினை பெரிதாகி, அக்கா விவாகரத்து வேண்டும் என்று கோபத்தில் கேட்டு விட்டாள் என்று கணியிடம் கூறினாள் நிலுபமா.
“ஆஹா நாம கோடு போட்டா இவ ரோடு போட்டு கத சொல்லுறாளே” அவளை பார்வையாலையே கொஞ்சிக் கொண்டவன் “கோபத்துல கூறினாங்கனு நினச்சியே அத ஒத்துகிறேன். ஆனா படு சீரியஸ்ஸா தான் பேசி இருக்காங்க”
“என்ன சொல்லுறீங்க?” நிச்சயதார்த்தத்துக்கு இனியன் வராததால் அன்னம் தனது அலைபேசியிலிருந்த இனியனின் புகைப்படத்தைக் காட்டிய பொழுது அனுபமாவின் முகத்தில் தோன்றிய மெல்லிய வெட்கப்புன்னகை கண்ணுக்குள் வர “மாமா அப்பா பார்த்த மாப்பிள்ளைதான். நிச்சயதார்த்தம் நடந்த பிறகுதான் போட்டோவையே பார்த்தா. நான் கூட எதுக்கும் ஒரு தடவ பாத்துக்க, அப்பொறம் மாப்பிளையை பிடிக்கலைனு சொல்லாதே என்று சொன்னேன். ஆனா அவ “அவருக்கு என்ன பிடிச்சிருக்கே. அதனாலதானே ஓகே சொன்னாரு. எனக்கு டபுள் ஓகே” என்று சொன்னா.
தன்னிடம் இனியனின் புகைப்படத்தை அவளின் அலைபேசிக்கு மாற்றிக்கொள்ளும்படி கூறிய தருணம் கண்முன் தோன்றி மறைய, “இப்போ டிவோர்ஸ் கேக்குறான்னா. உண்மையிலயே ரொம்ப கோவமா இருப்பா. அவ முடிவு பண்ண மாத்த மாட்டாளே. கண்டிப்பா டிவோர்ஸ் பண்ணிடுவா. ஐயோ பாப்பா வரும் நேரம் இப்படியா முட்டாள்தனமா முடிவெடுக்கணும்”
அனுபமா எதையும் அலசி ஆராய்ந்து தீவீரமாக சிந்தித்துப் பார்த்துதான் முடிவெடுப்பாள். அவள் மனதில் என்ன ஓடுகிறது என்று நிலுபமாவால் கணிக்க முடியவில்லை. அவளிடம்தான் நடந்ததை எதையுமே யாரும் பகிர தயாராக இல்லையே. கணியின் சாமர்த்தியமான பேச்சில் அவன் பொய் சொல்கிறானென்றும் அவளுக்கு புலப்படவில்லை.
“எங்கே இனியனின் காதல் விவகாரத்தை கூறினால் நிலுபமா தான் போடும் திட்டத்துக்கு ஒத்துக்கொள்ள மாட்டாளென்று கணி இவ்வாறு கூற, அவளோ நடந்த எதையும் அறியாமல் எதையெதையோ நினைத்து அவன் சொல்வதை முழுவதாக நம்பினாள்.
“ஐயோ நாம இப்போ என்ன பண்ணுறது?” அக்காவின் வாழ்க்கை, குழந்தையின் எதிர்காலம் என்றதும் பதட்டமாக கணியிடம் தீர்வு கேட்டாள்.
“ஒரேவழிதான் நாம கல்யாணம் பண்ணிக்கணும்” அமைதியாக பதில் கூறினான் கணி.
“என்ன?” என்றவள் சத்தமாக சிரித்து விட்டு, சுற்றிலும் தங்களை யாராவது கவனித்தார்களா என்று பார்கலானாள்.
“காதலிக்கிறேன்” என்று கூறினால் நிச்சயமாக நிலுபமா ஒத்துக்கொள்ள மாட்டாள். அவள் திருமணத்துக்கு சம்மதிக்க வேண்டும். வலுக்கட்டாயமாக அவளை திருமணம் செய்து புதிதாக ஒரு பிரச்சினையும் உண்டு பண்ண முடியாது. அவள் சம்மதம் ரொம்ப முக்கியம். திருமணமான பின் வரும் பிரச்சினையை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்த கணி சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி புதிதாக ஒரு கதையை கூறினான்.
“நாம கல்யாணம் பண்ணுறதுக்கும், அக்கா மாமாவோட சேருறதுக்கும் என்னங்க சம்பந்தம்? சரியான சிரிப்பு போலீஸுங்க நீங்க. உங்கள போய் வள்ளிக்கா லவ் பண்ணுறாங்க. ஜாடிக்கேத்த மூடிதான்” அவளால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்க, அவளை முறைக்க முடியாமல் பார்த்திருந்தான் கணி.
அவள் சிரிப்பை நிறுத்தியதும் “இது ஒரு நல்ல கேள்வி. நானும் யோசிச்சு பார்த்தேன். உங்கக்காவை லாக் பண்ண உன்னால மட்டும்தான் முடியும். என்ன லவ் பண்ணுறேன். கல்யாணம் பண்ண ஆசைபடுறேன்னு சொன்னாலே போதும். அண்ணி ஒரே தங்கச்சி. செல்ல தங்கச்சி ஆசைபட்டானு அண்ணா கூட சேர்ந்து வாழ யோசிப்பாங்க. இல்லையா”
“அட ஆமா… அப்படியே சொல்லலாமே” நிலுபமாவின் கண்கள் மின்னின.
சோகமான நிலுபமா “ஆமா ஆனா அவ வாழ்க்கை நல்லா இருக்கணும் என்று தானே…”
“அத அவங்க புரிஞ்சிக்கணும் இல்லையா? நான் வள்ளியை கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவ நம்ம வீட்டுல இருப்பா. அதனால உன் அக்காக்கும், என் அண்ணாகும் இடையில சண்டை தொடரும்.
பொய்ய உண்மையாக்கிட்டா. உனக்கும் பிரச்சினை இல்ல. வள்ளியும் வீட்டுக்கு வர மாட்டா. இனிமேல் அண்ணாகும், அண்ணிக்கும் இடையில சண்டையும் வராது” என்றான்
“ஐடியா நல்லாத்தான் இருக்கு. அப்போ வீட்டுல போய் நாம லவ் பண்ணுறதாக சொல்லுவோம், அவங்களே கல்யாணம் பண்ணி வைப்பாங்க” என்றால் நிலுபமா.
“கிளிஞ்சது போ. கைய, கால கட்டி வள்ளி கழுத்துல தாலி கட்ட வைப்பாங்க” அவளை முறைத்தான் கணி.
“கால கட்டினா ஓகே, கைய கட்டினா தாலி எப்படி கட்டுவீங்க?” வாய் மூடி சிரித்தாள் நிலுபமா.
“ஜோக்கு?” என்றவனுக்குத் தானே தெரியும் அன்னம் எவ்வாறு புலம்பி வள்ளியை அவன் தலையில் கட்டுவாளென்று.
நிலுபமாவை திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைத்து விட்டான். அடுத்து அவள் சம்மதத்தோடு அவளை உடனே திருமணம் செய்தாக வேண்டும். அவன் தந்தை வரதராஜனுக்கோ, மாமா ராஜகோபாலுக்கோ விஷயம் கேள்விப்பட்டால் பிரச்சினை. “இவளை எப்படி சம்மதிக்க வைப்பது?” யோசனையாக பார்த்தான்.
“என்ன?” என்று நிலுபமா கைகளாலையே வினவ
“உண்மையிலயே உங்கக்கா வாழ்கை நல்லா இருக்கணும் என்று நினைக்கிறியா? என்ன?” அமைதியான குரலில் நிதானமாகக் கேட்டான்.
“ஆ…மா” தலையசைத்து பதில் கூறியவளின் கண்களில் நீர் கோர்த்தது.
“அப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”
“இல்ல வீட்டுல சொல்லாம எப்படி?” தயங்கினாள்.
“எங்க வீட்டுல யாருமே ஒத்துக்க மாட்டாங்க. அண்ணி கூட சேர்ந்து வாழனும் என்று ஆசைப்படும் அண்ணன் கூட சப்போர்ட் பண்ண மாட்டான். உங்க வீட்டுல எப்படி? எங்க வீட்டு சம்மதம் இல்லாம நமக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்களா?”
அதுவே அவனுக்கு போதுமாக இருக்க, “அப்போ வா இப்போவே போலாம்”
“எங்க?” மிரண்டாள்.
“நாம லேட் பண்ணுற ஒவ்வொரு நிமிஷமும் உங்கக்கா பிரச்சினை பண்ணுவாங்க. கிளம்பு கிளம்பு” அவளை யோசிக்க விடாமல் ரெஜிஸ்டர் ஆபீசுக்கு அழைத்து சென்றான் கணி.
கணியின் காலேஜ் நண்பனொருவனின் தாத்தா விவாக பதிவாளர். உடனே திருமணம் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் கணி இருக்க, நிலுபமாவை சந்திக்க வரும் பொழுதே நண்பனை அழைத்து விஷயத்தைக் கூறி, ஏற்பாடு செய்து விட்டுத்தான் வந்திருந்தான்.
காவல்நிலையத்தில் திருமணம் செய்திருந்தால் ராஜகோபாலுக்கு உடனடியாக சேதி போயிருக்கும். எல்லாம் யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்திருந்தான்.
காக்கிச்சட்டையில் கணி காரியாலையத்தின் உள்ளே வரவும் கேஸ் விஷயமாக வருகிறான் என்று நினைத்தவர்களுக்கு திருமணம் செய்ய வந்தது அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் தான்.
கணியின் காலேஜ் நண்பர்கள் சிலரும் வந்திருக்க, முறைப்படி நிலுபமாவை திருமணம் செய்து கொண்டான். அதை புகைப்படம் மற்றும் வீடியோவா எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவும் செய்திருந்தனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட காவல்காரன் என்ற தலைப்பில் வீடியோ வைரலாக அதை பார்த்து விட்டுத்தான் வள்ளி ராஜகோபாலுக்கு தகவல் கூறி விட்டு வந்து சேர்ந்தாள்.
ராஜகோபால் வரதராஜனுக்கு தகவல் கூற அழைக்க, அன்னம் தகவல் கூறி விட்டதாக அவரும் வந்து சேர்ந்திருந்தார்.
இதோ இப்பொழுது கணியின் அறையில் வடிவேலுவுக்கு நிலுபமா நடந்ததை கூறி முடித்தாள்.
அனைவரின் முன்னிலையிலும் உண்மையை கூறினால் நிலுபமா தன்னை காதலிக்கவில்லையென்ற உண்மை அனைவருக்கும் தெரிந்து விடும், வள்ளி பிரச்சினை செய்யக் கூடும் சுதாரித்தவன் “மாமா உங்க பொண்ண என் ரூமுக்கு கூட்டிகிட்டு போய் பேசுங்க” என்றான்.
“எதுக்கு தனியா போய் பேச சொல்லுற?” அன்னம் எகிற
“இதுக்குதான் அவ, அவளோட அப்பாகூட பேசுறா. நடுவுல நீ குறுக்க பேசி பிரச்சினை பண்ணுவ என்றுதான் ரூமுக்கு போக சொன்னேன்” என்றான் கணி.
வரதராஜனும் “போங்க போய் பேசுங்க” என்று கூற கலைவாணி மகளை இழுத்துக் கொண்டு கதவை சாத்தியிருந்தாள்.
“அடிப்பாவி உண்மை என்னான்னே தெரியாம நீயும் இந்த குடும்பத்துல வந்து விழுந்துட்டியே” மகளை போட்டு அடிக்கலானாள் அன்னை.
மனைவியை தடுத்த வடிவேல் கணியை உள்ளே அழைத்தார்.
“என்னங்க இதுங்க பாட்டுக்கு கூடி கூடி பேசுறாங்க? என்ன நடக்குது இங்க?” அன்னம் கோபத்தில் கத்த,
“பையன பெத்த நானே காதல் என்று சொன்னப்போ எரிமலையானேன். அவரு பொண்ண பெத்தவருடி… கொஞ்சம் பொறுமையா இரு” என்றார் வரதராஜன்.
தனது சின்னமகளை ஏமாற்றி திருமணம் செய்த கணியை அறையும் அளவுக்கு கோபம் இருந்தாலும் “தம்பி உங்க வீட்டுல என்ன பிரச்சினை நடக்குது என்று தெரிஞ்சிதான் என் பொண்ண கல்யாணம் பண்ணீங்களா?” பொறுமையாக கேட்டார்.
கணிக்கு நிலுபமாவை பார்த்த உடனே பிடித்திருந்தது. அவனுக்குத்தான் வீட்டில் வள்ளியை பேசி வைத்திருக்கிறார்களே. அதனால் அவன் மனதை அடக்கி வைத்திருந்தான்.
இனியனின் காதல் விவகாரம். அதை தொடர்ந்து வீட்டில் நடந்த பிரச்சினை, வள்ளி நடந்துகொண்ட முறை என்று குழம்பிப் போய் இருந்தவனுக்கு ஒன்று மட்டும் நன்றாகவே புரிந்தது.
எடுத்திருக்கும் இந்த ஜென்மத்தில் மனதுக்கு பிடித்த பெண்ணோடு வாழாமல் குடும்பத்துக்காக தியாகம் செய்வதாக வாழ்நாள் முழுக்க பிடிக்காத வாழ்க்கையை வாழ வேண்டுமா? குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம் வாழ்க்கையை? நிச்சயமாக முடியாது என்றுதான் நிலுபமாவை திருமணம் செய்ய முடிவு செய்தான்.
அண்ணனுக்கும் சப்போர்ட் செய்யும் எண்ணத்தில் இனியனிடம் கூட ஜான்சியை பற்றியும், அனுபமாவை பற்றியும் நேரடியாகப் பேசினான். ஆனால் இனியனோ தனக்கு தன் குழந்தை முக்கியம் என்று அனுபமாவை தேர்ந்தெடுத்து விட்டான். நிச்சயமாக இனியன் மனமுவந்து இந்த முடிவை எடுத்திருக்க மாட்டான். ஆனால் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பான். என்றோ ஒருநாள் தான் எடுத்த முடிவு சரியானது என்று தோன்றவும் கூடும் அல்லது தவறானது என்று கூட தோன்றக் கூடும் அது இனியன் அனுபமாவோடு வாழும் வாழ்க்கையில் உள்ளது.
அண்ணன் அவன் வாழ்க்கையை பார்த்துக்கொள்வான். நிலுபமா… அவளை விட்டு விட முடியுமா? நிலுபமாவிடமே அவளை காதலிக்கிறேன் என்று கூறினால் அவளே ஏறுக்கொள்ள மாட்டாள். இதில் அவன் குடும்பமோ, அவள் குடும்பமோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் திட்டம் போட்டு திருமணம் செய்தான்.
“உங்க பொண்ண காதலிக்கிறேன் மாமா. எங்க வீட்டுல வள்ளியை தான் கட்டிக்கணும் என்று கட்டாய படுத்துறங்க. காதலிக்கிறேன்னு சொன்னா உங்க பொண்ணு சத்தியமா என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்ட. எங்க வீட்டுல நடந்த பிரச்சினையை பத்தி எந்த உண்மையும் உங்க பொண்ணுக்கு தெரியல. அத சாதகமா பயன் பாத்திகிட்டு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” வடிவேலிடம் பேசினாலும் கணியின் பார்வை முழுவதும் நிலுபமாவின் மேல்தான் இருந்தது.
“உங்கண்ணன் என் மூத்த பொண்ண கல்யாணம் பண்ணி வேறொரு பொண்ண காதலிக்கிறதா சொன்னாரு. நீங்க காதலிக்கிறேன் என்று கல்யாணம் பண்ணி இருக்கிறீங்க. அதுவும் அவளை ஏமாத்தி”
“என்ன சொல்லுறீங்க?” வடிவேலுக்கு இது தெரியாததால் கொஞ்சம் அதிர்ச்சிதான்.
“அப்பா இவன் பொய் சொல்லுறான்” நிலுபமா தன்னை கணி ஏமாற்றியதில் முறைக்க
“நான் பொய் சொல்லல. நீங்க அண்ணி கிட்டயே கேட்டுப் பாருங்க. அண்ணா ரொம்ப அப்சட்டா இருந்தான். வள்ளியால ஒரே பிரச்சினைதான். அவ நம்ம குடும்பத்துல இருந்தா அண்ணனும் நிம்மதியா இருக்க மாட்டான். அண்ணியையும் சந்தோசமா இருக்க விடமாட்டா. எனக்கும் நிலுபமாவை பிடிச்சிருக்கு. அவங்க ரெண்டு பேரையும் ஒன்னு சேர்க்க இதுதான் வழி என்று தோணிருச்சு. உண்மைய சொன்னா இவ ஒத்துக்க மாட்டான்னு. இப்படி பண்ணிட்டேன். என்ன மன்னிச்சிடுங்க மாமா” கணி வடிவேலிடம் மட்டுமே மன்னிப்பு கேட்டான். நிலுபமாவை பார்த்து கண்சிமிட்டி புன்னகைத்தான்.
“இவன்கண்ண ஒருத்திய காதலிப்பாராம். அக்காவை கல்யாணம் பண்ணுவாராம். வேணடாம் என்று சொல்லுராம். குழந்தை வந்ததும் வேணும் என்று சொல்லுவாராம். அக்கா என்ன சிலையா? உயிருள்ள மனிசி தானே. உங்கண்ணன் எப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணாரோ” அவனை முயன்றமட்டும் முறைத்தாள்.
“எங்கண்ணன் பண்ணதுக்கு நீ என்ன பழிவாங்க கிளம்பாத. அவன் நினைச்சிருந்தா என் குழந்தையே இல்லனு லண்டன்லேயே இருந்திருக்க முடியும். அவனுக்கு குழந்தைதான் முக்கியம். டிவோர்ஸ் வேணும் என்றால் குழந்தையை அவனுக்கு கொடுக்கிறதா எழுதிக் கொடுக்க சொல்லி இருக்கான். கல்யாணமான பிறகு அவன் அண்ணியை கோவிச்சு நான் பார்க்கல. கண்டிப்பா ஒருத்தர ஒருத்த புரிஞ்சி வாழ்வாங்க. எனக்கு எங்கண்ணன் பத்தி தெரியும்”
இனியனின் அறைக்குள் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று கணிக்குத் தெரியாதே. இனியன்தானே வரதராஜனின் முன் சிறப்பாக நடித்தான். வீட்டில் அவன் கண் முன்னால் நடந்ததை வைத்துதானே கூற முடியும். தான் பார்த்தத்தைத் தான் கூறியுமிருந்தான்.
அவன் பேசுவதை அமைதியாக கேட்டிருந்த வடிவேல் “நிலு உன் புருஷன மரியாதை குறைவாக பேசாதே” என்று விட்டு கணியின் புறம் திரும்பி “ஆனா மாப்புள என் பொண்ணு மேல எந்த தப்புமில்ல. நீங்கதான் எல்லாம் பண்ணீங்க என்று உங்கப்பாவுக்கு தெரியணும்” என்றார்.
நிலுபமா எந்த தவறும் செய்ய வில்லை என்பதை விட, ஏற்கனவே இனியன் அனுபமாவின் வாழ்க்கையில் பிரச்சினை. இவர்களின் திருமணத்தால் இன்னொரு பிரச்சினை வேண்டுமா? உண்மையை கூறுவதால் பிரச்சினை தீருமெனில் கூறலாமே என்றுதான் வடிவேல் எண்ணினார்.
“அப்பாகிட்ட சொல்லுறது எனக்கு பிரச்சினையில்ல. இப்போவும் அவர் எல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருக்காரு” எனறவன் அவன் அலைபேசியை காட்ட, மறுமுனையில் வரதராஜன் தொடர்பில் இருந்தார்.
“எதுக்கு இதெல்லாம்” எனும் விதமாக வடிவேல் கணியை பார்க்க,
“எங்கப்பா பேச்ச நான் தட்ட மாட்டேன். முதல் தடவ மீறிட்டேன். மனசு கேக்கல. யார் மேல தப்பு, என்ன நடந்தது என்று அவருக்கு இப்போ புரிஞ்சிருக்கும்” என்றான்.
கணியின் பேச்சில் உண்மையிருக்க, அவனை மருமகனாக ஏற்றுக்கொண்டார் வடிவேல். பெண் பிள்ளைகளை பெற்ற தந்தையாக அவர்களின் வாழ்க்கை அவருக்கு முக்கியமில்லையா? யோசனையாக வாசலுக்கு வந்தார்.
அலைபேசி வழியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த வரதராஜனுக்கு நிலுபமாவின் மீது எந்த தவறுமில்லை என்று புரிந்ததோடு, அவளோ வடிவேலின் மகள். தங்களுடைய ஜாதி என்றதில் கணியின் திருமணத்தை ஏற்றுக்கொள்வதிலும், அவளை மருமகளாக ஏற்றுக்கொள்வதிலும் வரதராஜனுக்கு எந்த பிரச்சினையுமில்ல. மனைவியையும், மச்சானையும் தான் அவர் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.