அத்தியாயம் 9
வீராப்பாக தனது புத்தகங்களை இனியனின் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தாலும் அனுபமா புத்தகங்களை திறந்து பார்க்கவுமில்லை. காலேஜ் செல்ல எண்ணவுமில்லை. அறையிலையே முடங்கிக் கிடந்தாள். 
அன்று இனியன் அலைபேசி அழைப்பு விடுத்த பொழுது தன்னால அவன் கூறியதை கேட்க முடியாமல் போனதை எண்ணி மனம் வருந்தியவளின் கண்ணுக்குள் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய பொழுதிலும் இனியன் அதை நம்பாமல் தான் பொய் கூறுவதாக கூறியது மட்டுமல்லாது, திட்டமிட்டு செயல்படுவதாக கூறியதுமில்லாது ஜான்சி இல்லாமல் வாழ்க்கையே இல்லையென்று பேசியதுதான் திரும்ப திரும்ப அவள் ஞாபக அடுக்கில் வந்து நின்றது. 
“அந்த ஜான்சியை லவ் பண்ணுறவன் எதற்காக என்னை கவனிச்சிக்கணும்?” 
“அதான் சொன்னானே அவன் அப்பாவுக்காக நடித்தேனென்று”
“இப்படியும் கூட நடிக்க முடியுமா?” அனுபமாவால் நடந்ததை நம்ப முடியாமலும் ஏற்றுக்கொள்ள முடியாமலும் கண்ணீரில் கரைந்தாள்.
ஊரிலிருந்த மூன்று நாட்களும் கல்யாண வீடு, சொந்தபந்தங்கள் நிறைந்து வழிந்து கொண்டிருப்பதால் இனியனால் அறையை விட்டு வேறு எங்கும் சென்று தூங்க முடியாது அனுபமாவோடு அறையில்தான் தூங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.
அவனுக்கு கீழே தூங்கி பழக்கமுமில்லை. அனுபமா அறைக்கு வரும் முன் கட்டிலில் சென்று படுத்துக்க கொண்டால் அவள் கீழே தூங்குவாளென்று அவள் வரும் முன் கட்டிலில் சென்று படுத்துக்கொள்ள அறைக்கு வந்த அனுபமாவோ எந்த சங்கடமுமில்லாமல் கட்டிலின் மறுபக்கம் வந்து தூங்கலானாள்.
இதை இனியன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “ஏய் என்ன பண்ணுற? போ… போய் கீழ தூங்கு” என்று விரட்ட,
“நான் எதுக்கு கீழ தூங்கணும்? எனக்கு கீழ எல்லாம் தூங்கி பழக்கமில்ல. கட்டில்லதான் இவ்வளவு இடம் இருக்கே? இடம் பத்தலையா? வேணும்னா நீங்க கீழ தூங்குங்க” என்றவள் அவனைக் கண்டு கொள்ளாது தூங்க ஆயத்தமானாள்.
“நேத்து நைட் நடந்த சம்பவத்துக்கு பிறகு என்னைக் கண்டாலே தெறிச்சு ஓடுவான்னு பார்த்தா. கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் என் பக்கத்துல வந்து தூங்குறேன்னு சொல்லுறா இவள…” பல்லைக் கடித்தவன் அவளைக் காயப்படுத்தவென்றே அதை அவளிடம் கூறினான்.
“என்ன நேத்து நைட் போல ஏதாவது நடக்குமென்று எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்கிறியா? அதான் கீழ தூங்காம கட்டில்ல என் பக்கத்துல வந்து தூங்குறியா? ஒண்ணுமே நடக்கலைனாலும் பரவால்ல தூக்கத்துல கைய கால என் மேல போட்டதாக சொல்லி என்ன கட்டி பிடிச்சிக்கிட்டு தூங்கலாம்னு திட்டம் போடுறியா?”
இனியன் ஒன்று கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு இதை சொல்லவில்லை. நிர்மலமான முகம்தான்.
எதோ சாதாரண தம்பதியினர் சண்டை பிடித்த நேரத்தில் கணவன் மனைவியை சீண்டவென கூறுவதை போல் தான் கூறியுமிருந்தான்.
அவனை ஆயாசமாக பார்த்த அனுபமா “அதான் நேத்தே சொல்லிடீங்களே நேத்து நைட் நடந்த எல்லாமே ஜான்சி கூடத்தான் நடந்தது என்று. அனுபமா என்ற ஒருத்திக்கு தாலி கட்டினதே உங்களுக்கு ஞாபகம் இருக்குறது பெரிய விஷயம். இதுல என் கை, கால் உங்க மேல படும் என்ற கவலை வேற? அதான் சொன்னேனே எனக்கு கீழ தூங்கி பழக்கமில்லை. நீங்க வேணா கீழ தூங்கனு. வேணா எனக்கு கீழ தூங்கி பழக்கமில்லன்னு உங்க போன்ல என் வாய்ஸ்ல ரெகார்ட் பண்ணிக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டவள் அவன் பதிலை எதிர்பாராமல் அவனுக்கு முதுகு காட்டி தூங்க ஆரம்பித்தாள்.  
கிராமத்துக்காரி அதட்டினால் அடங்கி விடுவாளென்று இனியன் நினைக்க, அனுபமா இவ்வாறு பேசுவாளென்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அதுவும் நேற்றிரவு நடந்த நிகழ்வின் பின்னால் அவள் தன் மீது கோபமாக இருப்பாள் அல்லது நாணிக்கோணி அவனை வெறுப்பேத்துவாள் என்றுதான் எண்ணினான். அவள் பேச்சில் இருப்பது நிமிர்வா? திமிரா? இனியனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
“இவளை சமாளிப்பது மட்டும் அவ்வளவு ஈஸியான காரியமில்லை” என்று முணுமுணுத்துக் கொண்டவன் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் “அதான் இவ்வளவு பெரிய கட்டில்ல இவ்வளவு இடமிருக்கே எதுக்கு கீழ தூங்கணும். நீ மேலையே தூங்கு” பெருந்தன்மையாக அவளுக்கு விட்டுக் கொடுப்பது போல் பேசி அவனும் அவளுக்கு முதுகு காட்டி தூங்கியிருந்தான். 
மறுவீடு அழைப்பு எப்போ வைத்துக்கொள்ளலாம்? உங்களுக்கு தோத்து படும் நாளை கூறுமாறு வடிவேல் வரதராஜனிடம் கேட்டிருக்க, இனியன் வேலைக்கு அதிக நாள் லீவும் போட முடியாது. அடுத்த மாதம் கட்டிடம் கட்டும் வேலையாக அவன் லண்டன் செல்ல வேண்டி இருக்கிறது. திருமணம் முடிந்து மூன்று நாட்கள் தான் ஊரில் இருப்போம். இரண்டாம் நாள் குலதெய்வ பூஜைக்கு ஏற்பாடு செய்து இருக்கிறேன். அதற்கு அடுத்த நாள் மறுவீடு அழைப்பை செய்து கொள்ளுங்கள். லண்டன் சென்று வந்த பிறகு ஒருவாரம், பத்துநாள் இருவரையும் ஊருக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார் வரதராஜன்.  
“என்னங்க இப்படி சொல்லுறாரு?” கோகிலவாணி கணவன் எவ்வாறு மகளை பாராது இருக்கப் போகிறார் என்று கவலையாக கேட்க,
“கட்டிக் கொடுத்துட்டோம் வாணி. இனி எல்லாம் மாப்பிள்ளை சௌகரியம் தான். விருந்துக்காவது வரங்களே. மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கும் என்று சம்மந்தியம்மாகிட்ட கேட்டு சமைக்கிற வேலையை பாரு” என்றார் வடிவேல். 
விருந்துக்காக அனுபமாபின் வீட்டுக்கு சென்ற இனியன் வீட்டை பார்த்து ஆச்சரியமடைந்தான். கல்யாணத்துக்காக அவன் குடும்பம் தங்கி இருந்த வீட்டை விட நான்கு மடங்கு பெரிய வீடு அனுபமாவின் வீடு.
“வீட்டுப் பார்த்தாலே தெரியுது மிஸ்டர் வரதராஜன் எதுக்கு இந்த சம்பந்தத்தை தலைகீழாக நின்னு எனக்கு முடிச்சு வச்சார் என்று. ஊருளையே எது பெரிய வீடு என்று கேட்டிருந்தா அனுபமாவோட வீட்டை காட்டியிருப்பாங்க. நேருளையே போய் கல்யாணத்த நிறுத்த சொல்லி இருக்கலாம். போன்ல சொன்னதால் ஒரு வேல பிராங்க் பண்ணுறங்கானு நினைச்சிட்டா போல. கடைசில என் வாழ்க்கைல பெரிய பிராங்க் நடந்திருச்சு” இனியன் தனியாக புலம்ப
“ஆமா ஆமா இவ்வளவு பெரிய வீட்டுல நீ அனுப்பமாவ கண்டு பிடிக்கிறதுக்குள்ள உன்ன வீட்டாளுங்க கண்டு பிடிச்சி தர்ம அடி கொடுத்து வெளிய அனுப்பி இருப்பாங்க”
“அப்படி அனுப்பினா கல்யாணம் நின்னு இருக்குமில்ல”
“அடி வாங்கினாலும் நீ திருந்த மாட்ட இல்ல”
“என்ன மாப்புள இங்க தனியா நின்னு கிட்டு யோசிக்கிறீங்க? ஓஹ்… நீங்க ஆக்கிடெக் இல்ல வீட்டை பாக்குறீங்களா? இது எங்க கொள்ளுத்தாத்தா கட்டினதுதான். என்ன பெர்னிச்சர்ஸ் இன்னும் சில விஷயங்கள் மட்டும் இந்த காலத்துக்கு ஏத்தா போல மாத்தி இருக்கோம்” என்றான் ஹரி.
“வந்துட்டான்யா வந்துட்டான். அறுவைசாமி வந்துட்டான்” ஹரியை பார்த்த உடனே நினைத்தவன் பொய்யாய் புன்னகைத்து வைத்தான்.
“என்னங்க மாமா போன்ல இருக்காரு. எதோ கேஸ் விஷயமா உங்க கூட பேசணுமாம்” என்றவாறு வந்த ஹரியின் மனைவி நித்யகல்யாணி இனியனைக் கண்டு தயங்கி நின்றாள்.
“நான் பாத்துக்கிறேன் அண்ணி. நீங்க அண்ணனை கூட்டிகிட்டு போங்க” என்றவாறு வந்த நிலுபமா “வாங்க மாமா உங்களுக்கு வீட்டை சுத்திக்கு காட்டுறேன்” என்று அழைத்து சென்றாள்.
“பார்த்தீங்களா மாமா அக்கா வந்த உடனே உங்கள கழட்டி விட்டுட்டு அப்பா கூட செல்லம் கொஞ்ச போய்ட்டா…” நிலுபமா கிண்டல் செய்ய
அதை காதிலையே வாங்காமல் “ஆமா உங்கண்ணன் பார்க்க பாசமலர் சிவாஜி மாதிரி இருக்காரே அடிதடி கட்டப்பஞ்சாயத்து கூட பண்ணுறாரா? பார்க்க பாசமலர் சிவாஜி ஆனா வேலாயுதம் விஜய்” தனக்குத் தானே சொல்லிச் சிரித்தும் கொண்டான்.
“கட்டப் பஞ்சாயத்தா என்ன மாமா சொல்லுறீங்க?” புரியாமல் கேட்ட நிலுபமா “ஓஹ்… கேஸ் விஷயம் என்றதும் கேக்குறீங்களா? ஹரி..ண்ணா லாயர். அண்ணி டீச்சர்” என்றாள்.
“என்னது லாயரா?” ஆச்சரியம் கலந்த அதிர்ச்சிக்குள்ளானவன் அடுத்த கணம் “அதான் வளவளன்னு பேசுறானா?” கிண்டலாக முணுமுணுக்க வேறு செய்தான்.
வடிவேலுக்கு ஒரு அண்ணன் முருகவேல். முருகவேல் முதலில் திருமணம் செய்திருந்தது வரதராஜனின் தாத்தாவழி சொந்தத்தில் தான். பிரசவத்தில் மனைவியும் குழந்தையும் இறந்து விட தனிமரமாக நின்றிருந்த முருகவேலுக்கு இரண்டாம் தாரமாக தெய்வயானையை கட்டி வைக்க, பிறந்தவன் தான் ஹரி.
அண்ணனும் தம்பியும் இந்த பெரிய வீட்டில் கூட்டுக் குடும்பமாகத்தான் வாழ்ந்து வந்தார்கள். முருகவேலை தொடர்ந்து தெய்வானையும் இறைவனடி சேர ஹரியின் பொறுப்பு வடிவேலின் பொறுப்பானது.
தனக்கு ஆண் வாரிசு இல்லையென்ற கவலை வடிவேலுக்கு என்றுமே இருந்ததில்லை. சொத்தை பிரித்து கேட்டு ஹரியும் வம்பு பண்ணியதில்லை. ஒற்றுமையாக அவனும் இந்த வீட்டில் தான் மனைவி மற்றும் ஆறு மாத குழந்தையோடு இருக்கின்றான்.
வீட்டை சுற்றிக் காட்டிய நிலுபமா இதையும் சேர்த்து கூறி இருந்தாள். ஹரி ஏன் இவ்வளவு பேசுகிறான் என்று அவளிடம் கேட்டிருந்தால் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையிடம் இந்த வீட்டில் சகஜமாக பேசக் கூடிய ஒரே ஆண் மகன் ஹரி மட்டும் தான். உங்களை சகஜ நிலையில் வைக்கத்தான் பேசுகிறார் என்று கூறி இருப்பாள். அதை புரிந்துகொள்ளும் மனநிலையிலும் இனியன் இல்லை. தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியமும் அவனுத்தான் இல்லையே!
“இதுதான் எங்க அக்கா ரூம். உங்க ரூம் தான் உள்ள போய் பாருங்க” என்றவள் வெளியே நின்று கொண்டாள்.
போகணுமா? வேண்டாமா? என்ற சங்கடமெல்லாம் இனியனுக்கு இல்லை. சட்டென்று நுழைந்து விட்டான். அவன் அறையை விட இரு மடங்கு பெரிய அறை. கட்டில் கூட பெரியதுதான். அறையிலையே தொலைக்காட்ச்சி வசதி, மினி குளிர்சாதனப்பெட்டி, திரும்பிய பக்கம் உட்கார வித விதமான இருக்கைகள், ஊஞ்சல் என்று ஒரு இளவரசியின் அறை போல் காட்ச்சியளித்தது அனுபமாவின் அறை.
“எனக்கு கீழ தூங்கி பழக்கமில்லை” என்று அவள் நேற்றிரவு கூறியது மண்டைக்குள் ஒலிக்க, “பழக்கம் எப்படி வரும்? எப்படி வரும் னு கேக்குறேன். படுக்க இடம் இருந்தா தானே வரும். இங்க உக்காரவே இடமில்லையே” நக்கலாக எண்ணிக் கொண்டவன் அறையை சுற்றிப் பார்க்கலானான்.
“ஆமா நீங்க ஒன்னும் ஜமீன் பரம்பரை இல்லையே வீடு என்ன மினி அரண்மனை மாதிரி இருக்கு. உண்மைய சொல்லு வெள்ளைக்காரனுக்கு ஜால்றா தட்டி தானே இதை வாங்கினீங்க?” நிலுபமாவை கிண்டலடித்தவாறே அங்கே வந்து நின்றான் கணிமொழியன்.
“இந்த நக்கல் தானே வேணாம்கிறது. உழைச்சு சம்பாதிச்சு இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டினா உங்களுக்கு பொறாமையா?”
“பசங்கனா கூட பரவாயில்ல. கல்யாணம் பண்ணி இந்த வீட்டுல குடும்பம் குட்டியா இருப்பாங்க. பொம்பள புள்ளைங்க நீங்க கல்யாணம் பண்ணி போயிடுவீங்க எதுக்கு இதெல்லாம்?” வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாவற்றையும் கண்களால் காட்டியவாறு வம்பிழுத்தான்.
அவனை முறைத்தவள் “ஏன் அப்பா வீடு என்று இங்க வந்து போக மாட்டோமா? இல்ல ஆம்பள புள்ளையாத்தான் பெத்துக்க மாட்டோமா? உங்களுக்கு அவ்வளவு கவலை என்றால் வீட்டோட மாப்பிள்ளையா வந்துடுங்களேன்” என்றாள்.
“ஐடியா நல்லாத்தான் இருக்கு ஆனா என் வேலையால அது கொஞ்சம் கஷ்டம் தான்” என்றான் இவனும்.
என்னவோ கணி கூறியதற்கு கோபத்தில் கூறி இருந்தவள் அதை உணர்ந்து கூறி இருக்கவுமில்லை. அதனால் கணி என்ன சொன்னான் என்று நிலுபமாவால் சட்டென்று புரிந்துக்கொள்ள முடியவில்லை.
“என்ன சொன்னீங்க?” நிலுபமா புரியாமல் திரும்பக் கேட்க,
“ஒரு தடவைதான் சொல்ல முடியும். புரியலைனா வேற ஆளாத்தான் பார்க்க வேண்டி இருக்கும். என் தலையெழுத்து எனக்கு வள்ளிதான்னு எழுதியிருக்கு” என்றான்.
“என்ன சொல்லுறீங்க? ஒன்னும் புரியல”
    
இனியன் வெளியே வரவே நிலுபமா அவனோடு பேச, வள்ளியும் அனுபமாவோடு வீட்டை சுற்றிப் பார்த்தவாறு இவர்கள் இருக்குமிடத்துக்கு வந்து சேர்ந்திருந்தாள்.
“பரவால்ல வீடு பெருசாத்தான் இருக்கு” என்றாள் வள்ளி. பொறாமையும் வெறுப்பும் கலந்திருந்தது என்று அவள் குரலே சொன்னது.
“வீடு மட்டுமில்ல அக்கா எங்க மனசும் பெருசுதான். உங்க கல்யாணத்த ஊருல வைக்க சொல்லுங்க. நம்ம வீட்டுலதான் தாராளமா இடமிருக்கே. கல்யாணம், சாந்திமுகூர்த்தம் எல்லா சாத்திர சடங்கையும் இங்கயே பண்ணிடலாம் என்ன சொல்லுறீங்க?”
“நிஜமாவா?” கண்கள் மின்ன கணியை ஏறிட்டாள் வள்ளி.
“அவ கிண்டல் பண்ணுறது கூட தெரியாம இந்த லூசு கனவு காணுது பாரேன்” அண்ணனிடம் பொருமினான் கணி.
ஹரி வந்து அனைவரையும் சாப்பிட அழைக்க, “வாங்க வாங்க போகலாம்” என்று அனைவரையும் அழைத்தது இனியன்தான்.
வந்த உடன் அனுபமா இனியனைத்தான் பார்த்தாள். அவன் அவளைக் கண்டு கொள்ளாமல் கணியோடு பேசிக் கொண்டிருந்தாலும் சொந்த வீடு போல் அனைவரையும் சாப்பிட அழைத்ததும் மனதில் புது நம்பிக்கையே வந்தது. பாவம் அனுபமா, வள்ளி அங்கிருந்தால் வீணான பேச்சுக்கள் நீளுமென்றுதான் இனியன் அழைத்தானென்று அவளுக்கு புரியவில்லை.
அந்த நம்பிக்கையே உறுதி செய்யும் விதமாகத்தான் ஊரில் அழுதவாறு பெற்றோரிடம் விடைபெரும் பொழுது “நான் பாத்துக்கிறேன் மாமா” என்று வடிவேலிடம் வாக்குறுதி கொடுத்திருந்தான். அது கூட வரதராஜனுக்காகத்தான்.
அனுபமாவின் வசதி வாய்ப்பை கண்டு இனியன் மனம் மாற வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. வரதராஜனும் வசதிப்படைத்தவர் என்று வடிவேல் கூறியிருக்க, அனுபமாவும் சந்தேகம் கொள்ளாமல் தன்னிடம் எரிந்து விழுபவன் தன் குடும்பத்தாரிடம் நல்ல முறையில் தான் பழகுகிறான். கூடிய விரைவில் மனம் மாறுவான் என்று எண்ணினாள்.
சென்னை வந்த உடனே வேதாளம் முருங்கை மரம் ஏறியக் கதையாய் “இது என்னுடைய அறை என் கட்டிலில் நான் தான் தூங்குவேன். நீ கீழே தூங்கு” குழந்தை போல் அடம் பிடித்து உத்தரவிடலானான் இனியன்.
எனக்கு கீழேயே தூங்கி பழக்கமில்லையென்று உங்களிடம் எத்தனை தடவை சொல்வது? உங்களுக்கு வேண்டுமானால் கீழேயே தூங்குங்க. இல்ல மாமா கிட்ட சொல்லி இன்னொரு கட்டிலை வாங்கிப் போடுங்க” அனுபமாவும் மல்லுக்கு நின்றாள்.
வரதராஜன்தான் இந்த வீட்டுக்கு எல்லாமே என்பதை திருமணம் பேசிய நாளிலிருந்தே அனுபமா பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றாள். இல்லையென்றால் பெற்ற மகன் விருப்பமில்லையென்று அறிந்தும் இனியனுக்கு அனுபமாவை திருமணம் செய்து வைத்திருப்பாரா?
அவள் சாதாரணமாகத்தான் மாமனாரின் பெயரை கூறியிருந்தாள். ஆனால் இனியனுக்கு அது அவ்வாறு இல்லையே. அனுபமா இதை போய் அவனது தந்தையிடம் கூறி விட்டால் அவன் அனுபமாவோடு அந்நியோன்யமாக குடும்பம் நடாத்த தயாராக இல்லையென்று ஜான்சியை தந்தை ஏதாவது செய்து விடுவாரோ என்ற எண்ணம்தான் இனியனின் மனதில் உதித்தது.
அதனாலயே அனுபமாவிடம் தொட்டத்துக்கெல்லாம் சண்டை போடாமல் அவள் அவனை நெருங்கினால் மட்டும் வார்த்தையால் வதைக்கலானான். அதுவும் அவனது அறையில், முதலிரவில் நடந்த நிகழ்வு நியாபகம் வந்து இம்சிக்கும் பொழுதும், ஜான்சி லாக்கப்பில் இருந்த தருணம் நியாபகம் வந்து அவனை வாட்டும் பொழுதும்.
அதுவும் ஒரு வாரம் தான் தூங்கும் பொழுது சிடுசிடுத்திருப்பான். அதன்பின் அனுபமாவுக்கு சளி பிடித்ததில் அவனோடு சண்டை போடும் நிலைமையில் அவளில்லை என்றதும் அவனே அவளை கவனித்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. 
முனகல் சத்தம் கேட்டு கண் விழித்த இனியன் “நிம்மதியா தூங்க கூட முடியல” என்று அனுபமாவை திட்டியவாறே திரும்பிப் படுக்க முனைய அவளிடமிருந்து எந்த அசைவுமில்லை.
“என்ன இவ கனவு ஏதும் கண்டு புலம்புறாளா? காது கொடுத்துக் கேட்டா காலைல இவளை ஓட்டலாம்” என்ற எண்ணம் தோன்ற கொஞ்சம் அவளை நெருங்கினான் இனியன்.
அனலாய் கொதித்த அனுபமாவின் தேகத்தின் சூடு அவனையும் தாக்க, சற்றும் யோசிக்காமல் அவள் நெற்றியில் கை வைத்திருந்தான்.
“என்ன இப்படிக்கு கொதிக்குது?” சொல்லியவாறே மின்குமிழை எரிய விட்டவன், காய்ச்சலுக்கு போடும் மாத்திரைகள் இரண்டை கையில் எடுத்து அவளை எழுப்பி புகட்டியும் விட்டான்.
அனுபமாவுக்கு அது கனவு போல்தான் இருந்தது. காலையில் எழும் பொழுது தலை பாரமாக இருந்ததோடு, சளியும் பிடித்துக்கொள்ள, சமையல் செய்யும் பொன்னியிடம் கூறி கசாயம் வைத்து குடித்தாள். காலை மாலை நீராவி பிடிக்கலானாள்.
அதைக் கவனித்தும் கவனிக்காதவன் போல் தான் இனியன் இருந்தான். இருமல் மட்டுமல்லாது, கைக்குட்டையை வைத்துக் கொண்டு மூக்கையும் துடைத்தவாறே இரவில் அனுபமா படும் அவஸ்தையால் இனியனின் தூக்கம் கெட்டது.
அவளை அழைத்துக் கொண்டு ஜோடியாக மருத்துவரிடம் கூட செல்ல அவன் மனம் முரண்டியது. அதற்காக அவள் படும் அவஸ்த்தையை பார்த்துக்கொண்டு இருக்கத்தான் முடியுமா? அன்னையை அழைத்து அனுபமாவை மருத்துவரிடம் அழைத்து செல்லுமாறு கூறினான்.
இருவருக்கிடையில் புரிதல் வர வேண்டும், நெருக்கம் வர வேண்டும் என்று அன்னம் மறுத்து விட்டாள். நீயாச்சு உன் மருமகளாச்சு என்று இனியனும் இரண்டு நாட்கள் கண்டுகொள்ளாமல் இருந்தான்.
அவனால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அதற்கு ஒரு காரணம் அவனோடு அறையில் ஒன்றாக இருக்கும் அனுபமா இரவில் படும் அவஸ்தைதான். மனிதாபிமானமுள்ள எந்த மனிதனும் அவள் படும் அவஸ்தையை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டான்.
அடுத்ததாக காரணம் அவன் அவளை நன்றாக கவனித்துக் கொண்டால் தான் தந்தையை நம்ப வைக்கலாம், அவரை நம்ப வைத்தால் தான் ஜான்சியோடு தான் ஒன்று சேர முடியும் என்று சுயநலமாக எண்ணினான். அதனால் அவளை நன்றாக கவனித்துக்கொள்ளலானான். அதுதான் காரணம் என்று தன் மனதுக்கும் கூறிக் கொண்டான். 
எட்ட நின்று கவனித்துக்கொள்ள முடியுமா? தொட்டுத் தூக்க நேரும் பொழுது சற்றும் தயங்காமல் அனுபாவை நெருங்கி நின்றான் இனியன்.
அது அவள் மனதில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படும் என்று கொஞ்சம் கூட கவலை படாமல் வலுக்கட்டாயமாக ஊட்டி விடுவதும், ஆவி பிடிக்க வைக்கிறேன் என்று அவளை எழுப்பி கட்டிலில் அவளை உக்கார வைத்ததுமில்லாமல், கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கால்களை பிடித்து தூக்கி கட்டிலின் மேல் வைத்து நீராவி பிடித்து முடிக்கும் வரை முதுகை நீவி விட்டவாறு அருகிலையே இருந்தான்.
“என்னங்க பண்ணுறீங்க? தள்ளி நில்லுங்க உங்களுக்கும் சளி பிடிக்க போகுது” அவன் தொடுகை அவளை சங்கடப்படுத்த தடுமாறலானாள்.
“பார்த்து, பார்த்து சுடுதண்ணி கொட்டிடப் போகுது. முதல்ல நீ ஆவி பிடி” அவளை எந்த வேலையையும் செய்ய விடாமல் எல்லாவற்றையும் அவனே செய்ய இனியன் மனம் மாறி விட்டதாகத்தான் நினைத்தாள் அனுபமா.
பாவம் அவளுக்குத் தெரியவில்லை. சுடுநீரை அவனே சுமத்துக் கொண்டு அறைக்கு வரும் பொழுது வரதராஜன் அவன் அறை வாசலில் இருந்த இருக்கையில் தான் அமர்ந்துக் கொண்டு தொலைக்காட்ச்சியை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அதனால்தான் தந்தையின் காதில் விழும்படி இவ்வாறெல்லாம் பேசினானென்று.
வரதராஜன் வழக்கமாக இரவில் தொலைக்காட்ச்சியில் செய்தி பார்ப்பவர்தான். அதனால் அந்த நேரத்தில் அவர் இனியனின் அறை வாசலில் அமர்ந்திருப்பது வழக்கம்தான். அது இனியன் அறிந்திருந்தாலும் என்னமோ வரதராஜன் அவனை வேவு பார்ப்பதற்காக அமர்ந்திருப்பதை போல் தான் அவன் அனுபமாவோடு நடந்து கொண்டான்.
அது இப்பொழுதுதான் அனுபமாவின் புத்தியில் உரைத்தது.
“உண்மைதான் உண்மைதான் அவன் சொன்னது சத்தியமான உண்மைதான். அவன் அப்பாவுக்குக்காகத்தான் எல்லாம் செய்திருக்கிறான். மாமாதான் எங்க அறைக்கு முன்னாலையே அமர்ந்திருப்பார்” வரதராஜன் வழக்கமாக தினமும் தொலைகாட்டிச்சி பார்ப்பதற்காக அமர்ந்திருப்பது இனியனுக்கு வேவு பார்பார்பதாக எவ்வாறு தோன்றியதோ, அனுபமாவுக்கு இனியன் தந்தைக்காக என்று கூறியதன் பின்னால் வரதராஜன் சாதாரணமாக அமர்ந்திருந்தது இன்று வேறு விதமாக தோன்றியிருந்தது. 
அறைக்கு வெளிய நடித்திருக்க வேண்டியது தானே எதற்காக அறைக்குள்ளே நடித்தான்? குளிக்க முடியாமல் தலை முடி சிக்கலாகி இருந்த பொழுது தலையை கூட சீவி விட்டானே. அது கூட நடிப்பா?
இரவில் விழித்து காய்ச்சல் அடிக்கிறதா என்று பார்த்து மாத்திரைக் கொடுத்தானே அது கூட நடிப்பா?
வலுக்கட்டாயமாக உணவூட்டி, மாத்திரை புகட்டி உடம்பு முடியாமல் போனால் தந்தை எவ்வாறு பார்த்துக் கொள்வாரோ அவ்வாறு பார்த்துக் கொண்டானே
“உங்களுக்குத்தான் என்னை பிடிக்காது எதற்காக இதை எல்லாம் செய்யிறீங்க என்று கேட்டதற்கு “எனக்கு உடம்பு முடியாமல் போனால் நீ பார்த்துக் கொண்டு இருப்பாயா? இந்த மாதிரி கவனித்துக் கொள்ள மாட்டாயா? என்ற டயலாக் வேறு?
எது நடிப்பு?
எல்லாம் நடிப்பு.
எல்லாம் அவன் தந்தையை ஏமாற்ற, அவன் காதலியை அடைய.
ஒரு பெண்ணுக்கு எந்த வலியைக் கொடுத்தாலும் தாங்கிக் கொள்வாள். நம்பிக்கையை கொடுத்து அவள் மனதை உடைத்து விட்டால் அதை அவளால் தாங்கவே முடியாது. அதைத்தான் இனியன் அனுபமாவுக்கு செய்திருந்தான்.
அவளை வீட்டார் சமாதானப்படுத்தியவாறும், தைரியமூட்டியவாறும் தான் இருந்தனர். அன்று அவளுடைய பெற்றோர் வராமல் இருந்திருந்தால் நடந்த எதுவும் அவர்களுக்கு தெரியாக் கூடாதென்று பொறுமையாக இனியன் வரும் வரை அனுபமா அங்குதான் இருந்திருப்பாள். எக்காரணத்தைக் கொண்டும் நடந்ததை அவர்களின் காதுக்கு எடுத்து செல்ல விட்டிருக்க மாட்டாள்.
தந்தைக்கு உண்மை தெரிந்த பின் அவளுடைய அச்சம் பறந்தோடியிருந்தது. புதுத்தெம்பும் தைரியமும் வந்திருந்தது.
ஆனாலும் சட்டென்று அனுபமாவால் இந்த இரண்டரை மாதங்களாக நடந்த நிகழ்வுகளிலிருந்து மீண்டு வர முடியவில்லை. எது உண்மை எது பொய் என்ற குழப்பமெல்லாம் அவளுக்கு இல்லை. பேசியது அவன் கணவன் தானே. அது அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்க, புதுக் செய்தியாக இனியன் லண்டன் கிளம்பிச் சென்று விட்டான் என்ற செய்தியும் வந்து சேர்ந்தது.
அவன் தந்தை தடுத்து விடாமலிருக்க வேலை விஷயமாக செல்வதாக கூறி விட்டு நிச்சியமாக அவன் ஜான்சியோடு வாழ வெளிநாடு சென்று விட்டான். அது போல்தான் அன்று எதோ பேசினான். அவன் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தேறி விட்டது. இனி அவன் திரும்பியே வர மாட்டான். அவனை நினைத்தோ, அவன் செய்ததை நினைத்தோ கவலைக் கொண்டு மூலையில் உட்காந்திருப்பது முட்டாள் தனம் தனது குறிக்கோள் பி.எட் படிப்பது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்த அனுபமா அவளாகவே மீண்டு காலேஜ் செல்ல ஆரம்பித்தாள்.