ஷக்தி தயாராகி கௌஷியின் வீட்டுக்கு வர, கௌஷியும் ஒரு அனார்கலி சுடிதாடரை அணிந்துகொண்டு நிறைமாத கர்ப்பிணி போல் தயாராகி நிற்க பர்வதம் அத்த குழந்தைக்கு தேவையான பையோடு வந்து சேர்ந்தாள்.
மூவரும் மின்தூக்கியில் ஏறியதிலிருந்து அவர்களின் இதயம் படபடக்க ஆரம்பித்து வியர்வையும் பூக்க ஆரம்பித்திருக்க, “முருகா… எல்லாம் நல்லபடியா நடக்கணும். போற காரியம் கைகூடனும்” பர்வதம் அத்த வேண்டியவாறே பையை முன் இருக்கையில் வைத்து விட்டு கௌஷியை பின் இருக்கையில் அமருமாறு கூறியவாறே தானும் அமர்ந்து கொண்டாள்.
“ஏன் பா… போன கைல வச்சிக்கிட்டு வண்டி ஓட்டினா போலீசுக்கு சந்தேகம் வராதா?”
“சரி நீங்களே வச்சிக்கிட்டு எனக்கு ரூட்டை மட்டும் சொல்லுங்க” பல்லைக் கடித்தவாறே ஷக்தி வண்டியை ஓட்டலானான்.
“ஏம்மா… கௌஷி இப்படி அமைதியா வந்தா எப்படி?” என்றவாறே பர்வதம் தந்து தனது கைப்பையிலிருந்து எடுத்த வெட்டி வைத்த தேசிக்காயை அவள் கண்களின் அருகில் கொண்டு சென்று திருக, சாறு அவள் கண்களுக்குள் செல்ல எரிச்சலில் துடிக்கலானாள் கௌஷி.
“என்ன பண்ணுறீங்க அத்த?” என்றவள் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்துகொண்டே இருக்க, கண்ணாடி வழியாக பார்த்த சக்திக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து அவளிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொள்ள முடியாததால் உதடு கடித்தவாறு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.
“அத்தையாம் அத்த. நீ இன்னமும் கேரட்டருக்குள்ளயே வரல கௌஷி. முதல்ல உனக்கு பிரசவ வலி வந்திருக்கு கைய வயித்துல வச்சிக்கிட்டு கத்தனும். இப்போ கத்தி என் காத பஞ்சர் பண்ணாத. போலீஸ் செக்போஸ்ட பார்த்தா மட்டும் கத்த ஆரம்பி சரியா?”
“நா எங்க செக்போஸ்ட்ட பார்க்க, கண்ணு எரியுது அத்த” அழுதவாறே சொல்ல
“அடியே நான் உன் அம்மாடி… அம்மானு சொல்லி பழகு. போலீஸ்காரன் கிட்ட என்ன மாட்டிவிடுவ போலயே” கௌஷியை கடிந்த பர்வதம் “நீ சிரிக்காம வண்டிய ஓட்டு ஷக்தி. உன் பொண்டாட்டிக்கு வலி வந்திருக்கு. நீ சிரிச்சுக்கிட்டு இருக்க? இது போதாதா போலீஸ் நம்மள உள்ள வைக்க?” சக்திக்கும் குட்டு வைக்க, கௌஷி சத்தியை முறைக்க முடியாமல் வசைபாட ஆரம்பித்தாள்.
“அப்படிதான். அப்படிதான். இதுக்கு காரணம் இவன்தான் நல்ல திட்டு” பர்வதம் ஏத்தி விட “எதற்கோ திட்டினாள், எதற்கோ அர்த்தம் கற்பிக்கிறாளே இந்த அத்த” கௌஷி கப்சிப் என்றானாள்.
முதல் செக்போஸ்ட்டிலையே வண்டியை போலீஸ் நிறுத்த ஷக்திக்கு தானாகவே இதயம் படபடக்க ஆரம்பித்தது.
“நிறுத்து நிறுத்து. எங்க ஊரு சுத்த கிளம்பிட்டீங்க?” சோதனை சாவடியில் வண்டியை நிறுத்திய போலீஸ் கௌஷி வலியில் கத்தியவாறு இருப்பதைக் கண்டு “என்னம்மா பிரசவா கேஸா.. நேரா போய் லெப்ட் கட் பண்ணு. சாரதா க்ளினி வரும்”
“மருமகனே அதான் சார் வண்டிய எடுக்க சொன்னாரே சீக்கிரம் எடுங்க. என் பொண்ணுக்கு வண்டியிலையே கொழந்த பொறந்துடும் போலயே” கண்ணை கசக்கியவாறு பர்வதம் பேச ஷக்தி வண்டியை இயக்கி இருந்தான்.
போலீஸ் இடது பக்கம் திரும்ப சொன்னாலும் வலது பக்கம் திரும்பிய ஷக்தி வண்டியை நிறுத்தாது செலுத்திய வண்ணம் இருந்தான்.
வேளச்சேரி, கிண்டி, டி நகர், கோடம்பாக்கம், அண்ணாநகர் என ஒவ்வொரு ஏரியாவையும் கடந்து ஒருவாறு பாலமுருகனின் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.
வீடு பூட்டி இருக்கவே “என்ன வீடு பூட்டி இருக்கு? ஒரு வேல ஊருக்கு போய்ட்டானா?” கௌஷி அதிர்ந்தவாறே கேக்க,
வெகுநேரம் அழைப்பு மணி அடித்த பிறகு தூக்க கலக்கத்தில் பாலமுருகன் கதவை திறக்க, பர்வதம் பாய்ந்து அவன் கன்னத்தில் மாறி மாறி அறைய, தூக்கம் கலைந்தவன் கன்னத்தில் கைவைத்தவாறு என்ன நடந்தது என்று புரியாமல் பர்வதத்தை ஏறிட்டான்.
“என்னடா முழிக்கிற? பணத்தை என்னடா பண்ண?” பர்வதம் மீண்டும் அறைய
“என்ன பணம்? சார் யார் சார் இந்த அம்மா? என்ன சொல்லுறாங்க?” பின்னால் நின்ற சக்தியை பார்த்து கேட்டான் பாலமுருகன்.
“அத்த கொஞ்சம் பொறுமையா இருங்க நாங்க விசாரிக்கிறோம்” என்ற கௌஷி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
அவள் தோற்றத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை வியப்போடு பாலமுருகன் பார்த்திருக்கையிலையே “மிஸ்டர் பாலமுருகன். ஆபீஸ்ல நடந்த பண மோசடியை பத்தி செயர்மன் ராஜவர்மன் சொல்லி இருப்பாரே” என்று ஷக்தி கூறியதும்
“அந்த பணத்தை நான் எடுத்தேன்னு நினச்சா இந்தம்மா என்ன அடிச்சாங்க? அந்த பணத்தைத்தான் கௌசல்யா எடுத்தாங்களே” கௌஷியை முறைத்தான் பாலமுருகன்.
“பணத்தையும் ஆட்டைய போட்டுட்டு. பொய் வேற சொல்லுறியா? உன்னயெல்லாம் இப்படி விசாரிக்கக் கூடாது. ஷக்தி இவன இந்த இருக்கைல கட்டி போடு. அடிக்கிற அடில உண்மைய மட்டும்தான் பேசணும்”
“யார் சார் இவங்க? போன ஜென்மத்துல ஜெய்லரா இருந்தாங்களா?” சக்தியிடம் கூறியவன் பர்வதம் சொன்ன இருக்கையில் அமர்ந்தவாறே “யேம்மா என் சம்பளம் என்னனு தெரியுமா? அத விடுங்க. என் வீட்டை பாருங்க. என் மாமனார் சீதனமா கொடுத்தது. அதோ அந்த பீரோல என் பொண்டாட்டி நகைகள் இருக்கு. என் பேங்க் பாஸ் புக் என் பொண்டாட்டி பாஸ் புக், என் ரெண்டு புள்ளயோட பேங்க் பாஸ் புக் இருக்கு. எவ்வளவு பணம் போட்டு வச்சிருக்கோம்னு பாருங்க.
என் மாமனார் வட்டிக்கு காசு கொடுக்குறவரு. அந்த பணத்துலதான் இதெல்லாம் வாங்கி கொடுத்திருக்காரு. என்னையும் அந்த தொழில பார்க்க சொல்லிக்கிட்டு இருக்காரு. அடிதடில இறங்க முடியாதுனு நான்தான் ஒதுங்கி போய்ட்டேன். நான் இப்போ பாக்குற வேலையும் கௌரவமான, நல்ல சம்பளம் கிடைக்குது. அப்பொறம் நான் எதுக்கு ஆபீஸ் பணத்துல கைவைக்கணும்” நீளமாக பேசினான் பாலமுருகன்.
அவன் பேசுவதை சக்தியும் சரி கௌஷியும் சரி உன்னிப்பாக கவனித்த வண்ணம்தான் இருந்தனர். பணத்தை எடுத்திருந்தால் எங்கே மாட்டிக்கொள்ள போகிறோமோ என்ற சிறு பதைபதைப்பில் வியர்வை துளி தலையிலிருந்து வழியும். பதட்டத்தில் நா குளறி. கொஞ்சம் உளறக்கூட செய்யலாம். வழமையான நடத்தைக்கு மாறாக சில விடயங்களை கூட செய்யலாம். ஆனால் பாலமுருகன் எதையுமே செய்யாமல் தெளிவாகவும், திமிராகவும் பேசினான்.
ஒன்று அவன் பேச்சில் உண்மை இருக்க வேண்டும் அல்லது அவனுக்கு இந்த மாதிரியான வேலைகள் செய்து அனுபவம் இருக்க வேண்டும்.
அவன் சொல்வது உண்மையாக இருந்தால் அவனால் கூட ஏதாவது உதவி கிடைக்கக் கூடும் என்று கௌஷி யோசித்துக் கொண்டிருந்தாள்.
“யோவ் நீ காச எடுக்கலைனா வேற யார்யா எடுத்தாங்க? நீயும், கௌஷியும்தான் பணத்தை வாங்கிக்கிறதா ராஜவர்மன் சார் சொன்னாரு. கௌஷி காசுக்கு ஆசைப்படுறவ இல்லை” ஷக்தி கத்த
“சார் உங்களுக்கு உங்க வைப் மேல நம்பிக்கை இருக்கும். அதற்காக நீங்க என் மேல சந்தேக படுறது நியாயமே இல்ல. அந்த பெரியவருக்கு கொடுத்த பேப்பர்ல உங்க மனைவிதான் சைன் பண்ணி இருக்காங்க” பீரோவை திறந்து கௌஷி கையொப்பமிட்டதாக கூறப்பட்ட காகிதம் அடங்கிய கோப்பை கொண்டு வந்து சக்தியிடம் கொடுத்தான்.
அதை உன்னிப்பாக பார்த்த ஷக்தி “நம்ம கம்பனி பேட் தான் யூஸ் பண்ணி இருக்காங்க. இங்க்லிஷ்லேயே அழகா டைப் பண்ணி நம்ம கம்பனில எப்படி பண்ணுறாங்களோ அப்படியே பண்ணி திருடன் கம்பனி ஆளுன்னு சொல்லிட்டான். ஆனா கையெழுத்தை மட்டும் கௌஷி கையெழுத்தை போட்டிருக்கான்”
சக்தியின் பேச்சில் குறுக்கிட்ட பாலமுருகன் “போட்டிக்கான இல்ல சார். போட்டிருக்கா… போட்டிருக்கா… அந்த பெரியவர் வீட்டுக்கு போனது ஒரு பொண்ணு” என்றவாறே கௌஷியை பார்த்தன்.
அந்த பார்வை “உன் கணவன் உன்னை நம்பலாம் நான் நம்ப மாட்டேன்” என்றிருந்தது.
“அதைத்தான் நானும் சொல்ல வரேன். கௌஷியோட அப்பா பேர் கதிர்வேலன். ரெண்டு பேரோட பேரும் Kல ஆரம்பிக்கிறதால கௌஷி அவளோட முதல் எழுத்தான கேய இரண்டுதடவ எழுதுவா. ஐ மீண்ட் Kக்கு மேலையே K பார்க்குறவங்களுக்கு பென் எழுதலனால அவ திரும்ப எழுதினதா தான் தோணும். சோ இந்த டொக்கியூமெண்ட்டுல சைன் பண்ணவங்க ஒரு Kயைத்தான் போட்டிருக்காங்க” எனறவன் கௌஷியிடம் காகிதத்தை கொடுக்க, கௌஷி ஆச்சரியமாக கணவனை பார்த்திருந்தாள்.
“தான் தனது கையொப்பத்தில் தந்தையின் பெயரின் முதலெழுத்தை சேர்த்திருப்பது இவனுக்கு எப்படித் தெரியும்? யாருக்குமே தெரியாத ரகசியம் இவனுக்கு மட்டும் எப்படி தெரிந்தது?” ஷக்தி நீட்டிக்கொண்டிருந்த காகிதத்தை வாங்கிப் பார்த்தவள் ஷக்தி கூறியது அனைத்தும் உண்மை என்று ஒப்புக்கொண்டாள்.
“நீங்க இல்லனு நீங்க ரெண்டு பேரும் சொல்லிக்கிட்டா சரியா? எப்படி ப்ரூப் பண்ண போறீங்க?” பாலமுருகன் சாதாரண முக பாவனையில் கேட்டாலும் கொஞ்சம் கேலி கலந்த குரலில்தான் கேட்டிருந்தான்.
“அது ஒன்னும் அவ்வளவு கஷ்டமான விஷயமில்லை பாலமுருகன் அந்த பெரியவர் கிட்ட கௌஷியை கூட்டிட்டு போய் இந்த பொண்ணுதான் உங்க கிட்ட பணம் வாங்கினங்களானு கேட்டா உண்மை தெரிஞ்சிட போகுது. கௌஷிதான் பணத்தை எடுத்திருந்தா அவ அவளோட கையெழுத்தையே போட்டு சாட்ச்சிய விட்டுட்டு வர மாட்டா இல்ல”
ஷக்தி அவ்வாறு சொன்னதும் பாலமுருகன் யோசிக்க ஆரம்பித்தான்.
“நீங்க சொல்லுறதும் சரிதான் சார். இப்போ இருக்குற சிட்டுவேஷனுக்கு நாம அங்க போய் விசாரிக்கவும் முடியாது. போய் எந்த பொண்ணு உங்க கிட்ட பணம் வசூல் பண்ணான்னு கேட்கவும் முடியாது கம்பனி ப்ரேஸ்டீஜ் ப்ரோப்ளம். என்ன பண்ணுறது?”
“என்ன நீ அபசகுனமாவே பேசிகிட்டு இருக்க? உண்மையிலையே இவங்களுக்கு ஹெல்ப் பண்ண நினைக்கிறியா? இல்ல காச நீதான் எடுத்தியா? கண்டு பிடிக்க கூடாதுன்னே பேசிகிட்டு இருக்க”
“சார் இந்தம்மாவ பேசாம இருக்க சொல்லுங்க” பாலமுருகன் பர்வதத்தை பார்த்து கூற,
“ஷக்தி நீயே பேசு நான் காபி சாப்பிட போகிறேன். எனக்கு தலை வலிக்குது. டேய் முருகா… உன் சமயக்கட்டு எந்த பக்கம் சொல்லு” என்று கேட்க பாலமுருகன் அதிர்ச்சியாகவே சமையலறை பக்கம் கைகாட்டி இருக்க “உனக்கு வேணுமா?” என்று கேட்கவும் மறக்க வில்லை.
“அந்த பைல்ல இருக்கு. போன் பண்ணி என்ன கேக்க போறீங்க?”
கௌஷி கேட்கும் பொழுதே அவள் கையிலிருந்த கோப்பை வாங்கிய ஷக்தி அந்த பெரியவருக்கு அழைத்து வணக்கம் சொல்ல அவரும் வணக்கம் சொன்னார்.
“தான் யார் எங்கிருந்து பேசுகிறேன் என்று சொன்ன ஷக்தி “ஐயா நான் புது மேனேஜர் உங்களுக்கு டீல் முடிச்சி கொடுத்தது யார்னு எனக்கு தெரியல. எங்க கம்பனில இருந்து அவங்களுக்கு பரிசா ஒருதொகை பணம் கொடுக்க சொல்லி இருக்காங்க. உங்களால அவங்கள அடையாளம் காட்ட முடியுமா? நான் சில போட்டோஸ் அனுப்பி வைக்கிறேன்” என்று கேட்க அவரும் சரி என்று கூறினார்.
ஷக்தி உடனே தனது காரியாலயத்தில் வேலை பார்க்கும், பார்த்த என அத்தனை பெண் ஊழியர்களினதும் புகைப்படங்களை அனுப்பி வைத்தான். கூடவே கௌஷியின் புகைப்படத்தையும் அனுப்பி இருந்தான்.
அவன் செய்வதை பார்த்திருந்த பாலமுருகன் “சார் நீங்க என்னவோ திட்டம் போட்டீங்கனு புரியுது. என்னன்னுதான் புரியல” என்றான்.
“போட்டோ பார்த்துட்டு யாரு அவர் வீட்டுக்கு வந்தாங்கனு அவர் போன்லேயே சொல்லுவாரு. அதற்கு பிறகு என்ன பண்ணலாம்னு யோசிப்போம்” என்றான் ஷக்தி.
நிமிடங்கள் கரைந்து கொண்டிருக்க, பர்வதம் அத்த கொடுத்த காபியை அனைவரும் குடித்திருந்தனர்.
“ஷக்தி லன்ச் கூட இங்கேயேவா?” கேட்டது பர்வதம் அத்தைதான்.
“அம்மா காபி சூப்பர். அப்படியே உங்க கையாள சமைச்சிடுங்க. முடிஞ்சா இருக்குறத எல்லாம் சமைச்சி வச்சா நா ப்ரிஜ்ஜுல வச்சே சாப்பிட்டுகிறேன். என் பொண்டாட்டி ஊருக்கு போனதுல இருந்து நல்ல சாப்பாடே கிடைக்கல. நீங்க என்ன அடிச்சதுக்கு பரிகாரம்னு நினச்சிக்கீங்க” சோகமாக பாலமுருகன் சொல்ல
“இந்த பேச்சுக்கே உன்ன இன்னும் நல்லா போடணும். பொண்டாட்டிக்கு கூடமாட ஒத்தாசை செஞ்சிருந்தா அப்படியே சமையலையும் கத்துக்கொண்டிருப்ப. இருந்தா பொண்டாட்டிய கரிச்சி கொட்டுங்க. இல்லனா சோககீதம் பாடுங்க” சக்தியை பார்த்தவாறே குடித்து வைத்திருந்த காபி கப்புகளோடு சமயலறைக்குள் சென்றாள் பர்வதம்.
அந்த பெரியவரிடம் அலைபேசி அழைப்பு வரவும் கௌஷி வேண்டிக்கொள்ள, சக்திக்கும், பாலமுருகனுக்கும் பதட்டம் கூடியது.
ஷக்தி வணக்கம் சொல்ல “தம்பி இந்த போட்டோஸ்ல இருக்குற யாருமே என் வீட்டுக்கு வரலையே தம்பி” என்றார்.
இருந்த ஒரே வழியும் மூடி விட சக்தியின் முகம் தொங்கிப் போனது.
“ஆனா தம்பி இதுல இருக்குற ஒரு பொண்ணு வண்டில அடுத்த தெருவுல இருந்தா. உள்ள வந்த பொண்ணு அந்த பொண்ணு கூட பேசிட்டு, அது பாட்டுக்கு அவ வண்டில ஏறி போனா. அந்த பொண்ணும் போயிருச்சு. கூட வந்த பொண்ணா, இல்ல வழில பார்த்ததால் பேசிச்சானு தெரியல்னு அப்போ யோசிச்சேன். யேன்னா கூட வந்திருந்தா ஒரே வண்டில இல்ல வந்திருக்கணும். ஒரே திசைல இல்ல போய் இருக்கணும். இவங்க வேற வேற திசைல இல்ல போனாங்க. இப்போ பாருங்க ஒரே ஆபீஸ்ல வேலை பாக்குறதால வழில பார்த்து பேசி இருக்கும் போல” விளக்கோ விளக்கு என்று விளக்க கடுப்பானான் பாலமுருகன்.
“லூசா அவரு” என்று கௌஷி சைகை செய்ய
அமைதியாக இருக்கும்படி சைகை செய்தவாறே ஷக்தி “ஐயா நீங்க பார்த்த அந்த பொண்ணு போட்டோவையே அனுப்பிடுங்க. நாங்க அவங்க கிட்ட கேட்கிறோம்”
“அந்த கிளட்டுக்கு இந்த வயசுலயும் பொண்ணுங்க மேல கண்ணு. ரோட்டுல எந்த பொண்ணு போகுது, வருதுன்னு நோட்டம் விட்டிருக்கு” பாலமுருகன் பொரும
அவனை முறைத்த ஷக்தி “தப்பா பேசாதீங்க பாலமுருகன். அவர் அந்த நேரத்துலதான் வாக்கிங் போவாரு. அவரை விசாரிச்சதுல தெரிஞ்சிகிட்டேன். அவர் வீட்டு வாசல்ல அந்த லேடிய பார்க்கல. அடுத்த தெருவுலதான் பார்த்திருக்காரு. நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணு யார் கூட பேசுறா? என்று பார்த்திருப்பார்.
நாமதான் என்ன நடந்தாலும் கண்டுக்காம போவோம். வயசானவங்க அப்படி இல்ல சுத்தி என்ன நடக்குதுன்னு கவனமாத்தான் இருப்பாங்க. அவர் அப்படி இருந்ததால நமக்கு யூஸ் புல்லான இன்போர்மேஷன் கிடைச்சிருக்கு” என்று ஷக்தி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவன் அலைபேசிக்கு புகைப்படம் வந்ததற்கான ஒலி எழுப்பியது.
அவசரமாக அது யார் என்று பார்க்க பாலமுருகனும் எட்டிப் பார்த்து “இவளா… இந்த பூனையும் பால் குடிக்குமான்னு ஒரு மூஞ்சி இவளா பணத்தை அடிச்சது”
அந்த புகைப்படத்தில் குமுதா சிரித்துக் கொண்டிருந்தாள். அந்த பெரியவரிடம் பேசியது, விளக்கம் கூறியது எல்லாமே குமுதாதான். ஆக குமுதா தான் திட்டம் போட்டு பணத்தை கையாடல் செய்திருப்பது தெளிவாக புலப்பட்டிருந்தது.
ஷக்திக்கு வந்த புகைப்படத்தை பார்த்த கௌஷி “இவங்கதான்னு எப்படி கன்போர்ம் பண்ணுறது ஷக்தி” குழம்பி நின்றாள். அவள் கையெழுத்தை பார்த்து அச்சு அசலாக போட்டிருக்கலாம். அது குமுதாவாக இருக்காம் அதில் கௌஷிக்கு எந்த சந்தேகமும் இல்லை.
“கண்போர்மா இவங்கதான். அந்த நேரத்துல இவங்களுக்கு அந்த பெரியவர் வீட்டு பக்கத்துல என்ன வேல? அது அவங்க ஏரியாவே இல்லையே. அப்படியே பெர்சனல் வேலையா போய் இருந்தாலும் காச எடுத்த பொண்ணுக்கும் இவங்களுக்கும் கண்டிப்பா தொடர்பிருக்கு. நாம உடனே கிளம்பனும். என்ன நாம வந்த திசைக்கு எதிர்திசைல பயணம் பண்ணனும்” சோர்வானான் ஷக்தி.
வரும் வழியில் எத்தனை சோதனைசாவடிகளை கடந்தான். எப்படிக் கடந்தான் என்று அவனுக்கு இருந்த கசப்பான அனுபவம்தான்.
“ஐயோ சார் உங்களுக்கு விஷயமே தெரியாதா? அவளுக்கு போன மாசம்தான் கல்யாணம் ஆச்சு. பக்கத்து தெருவுலதான் அவ புருஷன் கூட குடிவந்திருக்கா. இதுல கொடும என்னனா என் கூட என் கேப்லதான் வரா” என்றான் பாலமுருகன்.
“என்ன சொல்லுறீங்க” என்ற ஷக்தியின் முகம் மிளிர்ந்தது.
“வாங்க சார் போலாம். அவ முடிய கோத்தா புடிச்சி விசாரிக்குற விதத்துல விசாரிக்கலாம்” பாலமுருகன் ஷக்தியின் கையை பிடித்து இழுக்கலானான்.
“ஷக்தி ஒரு நிமிஷம்” என்ற கௌஷி “அவங்கள இங்க வர சொல்லி விசாரிக்கலாம்” என்று சொல்ல
“என்ன மேடம் என்ன மட்டும் அடிச்சி விசாரிச்சீங்க. அவங்கள மட்டும் இங்க கூட்டிகிட்டு வர சொல்லுறீங்க… ஓஹ்… கட்டி வச்சி விசாரிக்க போறீங்களா…” குஷியாக கேட்க
“கொஞ்சம் நேரம் பேசாம இருங்க பாலமுருகன்” எனறவள் “ஷக்தி எனக்கு குமுதாவோட வீட்டு நிலவரம் தெரியும். அவ இப்படி ஒரு காரியம் பண்ணி இருந்தா. அது அவ பணக் கஷ்டம் மட்டும்தான்”
“நீ ஒன்னும் சொல்ல வேணாம். பாலமுருகன் இத பண்ணி இருப்பான் என்றதும் அவரு மூஞ்ச அடிச்சி உடைக்கிற அளவுக்கு கோபம் வந்ததே. அவருக்கு மட்டும் பணக் கஷ்டம் இருந்து அவர் செஞ்சிருந்தா ஏத்து கிட்டு இருப்பியா? பொண்ணுங்கன்னா மட்டும் மனசு அப்படியே இலக்கிடுமே. தப்பு யார் பண்ணாலும் தப்புதான்.
பாலமுருகன் குமுதற்க்கு போன் பண்ணி நானும், கௌஷியும் உங்க வீட்டு இருக்கிறதாக சொல்லி ஆபீஸ் வேலைனு உடனே வர சொல்லுங்க” என்ற ஷக்தி சோபாவில் அமர்ந்து கொண்டான்.
“சார் நான் போன் பண்ணா அவ சத்தியமா வர மாட்டா” பம்மினான் பாலமுருகன். அவளிடமும் வாலாட்டி இருப்பான் என்று அவன் பேச்சிலையே புரிந்தது.
“நானே போன் பண்ணுறேன்” என்ற கௌஷி குமுதாவுக்கு அழைத்து தானும் சக்தியும் பாலமுருகனின் வீட்டில் இருப்பதாக தெரிவித்து உடனே வரும்படி கூறினாள்.
“சார் நான் குளிச்சிட்டு வரேன். நீங்களாச்சு, குமுதாவாச்சு” என்றவாறே பாலமுருகன் குளிக்க சென்றான்.
“ஷக்தி பொறுமையா விசாரிக்கலாம். பாலமுருகனை அடிச்சா மாதிரி கைய நீட்டிடாத. பிரச்சினையாகிடும்” கௌஷி பதட்டமாக சொல்ல
“நீ அமைதியாக இரு நான் பாத்துக்கிறேன்” என்ற ஷக்தி யோசனையாக அங்கும் இங்கும் நடந்த வண்ணம் இருந்தான்.
பத்து நிமிடங்களில் குமுதாவும் வந்து சேர “வாங்க மேடம் உக்காருங்க” ஷக்தி முகத்தில் எதையும் காட்டாது பேச
நல விசாரிப்போடு தன்னை எதற்காக வரச்சொன்னதாக கேட்டாள் குமுதா.
“நம்ம ஆபீஸ்ல ஓல்ட் எம்ப்ளயிஸ்ல யாரெல்லாம் சிறப்பா வேல பாத்திருக்கங்களோ அவங்கள்ல ஒருத்தருக்கு ப்ரோமோஷன் கொடுக்க போறாங்க. அதுல உங்க நேம் இருந்தது உங்களுக்கு தெரியும் தானே. உங்களுக்குத்தான் ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு. அந்த விசயமாத்தான் பேச வந்தோம்”
“என்ன சார் சொல்லுறீங்க?” ஆனந்த அதிர்ச்சியில் கூப்பாடு போட்டாள் குமுதா.
“பாரின் டுவர், பரிசுகள் என ஏகப்பட்டது கிடைக்கும் அது உங்களுக்கும் தெரியுமே. ஆனா கொரோனானால பாரின் டுவர் மட்டும் கேன்சல் அதுக்கு பதிலா சூப்பர் மார்கெட்ல ஆறு மாசத்துக்கு பொருட்கள் வாங்க கூப்பன் வழங்க போறாங்க. கொஞ்சம் பேபர்ஸ்ல சைன் பண்ணனும்” என்று ஒரு கோப்பை ஷக்தி கொடுக்க, கம்பனியில் நடப்பதால் சற்றும் யோசிக்காமல் அவன் சொன்னவைகளை நம்பியவள் கோப்பை படித்துக் கூட பாராமல் மளமளவென கையொப்பம் போட்டுக் ஷக்தியிடமே கொடுத்திருந்தாள்.
“என்ன சார் குமுதா வந்தாச்சா…” குளித்து விட்டு பாலமுருகன் வர, அவனை முறைத்தாள் குமுதா.
“வந்த வேகத்துக்கு நான் தான் பணத்தை அடிச்சேன்னு சைன் பண்ணி கொடுத்துட்டாங்க. இனி இத போலீஸ் கிட்ட கொடுத்துட்டு வேண்டியதுதான்” என்றான் ஷக்தி.
உண்மையிலையே ஷக்தி அப்படியொரு காகிதத்தை தயார் செய்துதுகொண்டுதான் வந்திருந்தான். அதில்தான் குமுதா கையொப்பமிட்டிருந்தாள்.
குமுதாவை கிண்டல் செய்வது நன்றாக புரிந்தாலும் யாருக்கும் சிரிப்பு வரவில்லை.
பெரியவர் காரியாலயத்துக்கு வந்தது குமுதாவிடம் பேசியது எப்படி சிடீவியில் பதிவாகி இருந்ததோ அதே போல் குமுதா ஆள் அனுப்பி அந்த பெரியவரிடம் பணம் வாங்கிய பின் அந்த பெண்ணோடு பேசி இருவரும், இரு திசையில் பயணித்ததும் அந்த ஏரியாவில் இருந்த ஒரு வீட்டு சிடீவியில் பதிவாகி இருப்பதாக ஷக்தி கூற, குமுதாவுக்கு தான் வசமாக சிக்கி விட்டது புரிந்து போக அச்சத்தில் வியர்வையும் பூத்து ஷக்தியின் காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்தாள்.
“அந்த பெரியவர் தானே குமுதா போட்டோ அனுப்பி வச்சாரு. இவர் என்ன கத விட்டுகிட்டு இருக்காரு?” பாலமுருகன் தலையை துவட்டியவாறு பாத்திருக்க,
“எங்கே அந்த பெரியவர்தான் குமுதாவை பார்த்ததாக கூறினால், வயதானவர், கண்ணு சரியாக தெரிந்திருக்காது வேறு யாரையோ பார்த்து விட்டு தன்னை பார்த்ததாக உளறுவதாக குமுதா பேசியே சாதிப்பாள் என்று புரிந்து கொண்ட ஷக்தி தனது புத்தி சாதுரியத்தால் சிசிடீவியில் எல்லாம் பதிவாகி இருப்பதாக கூறி இருக்க, பெரிய பிரச்சினையிலிருந்து தான் வெளிவரக் காரணமாக இருந்த கௌஷிக்கு கணவனை நினைத்து உள்ளம் சிலிர்க்கலானது.