மாடிப்படியில் தாவி இறங்கிக் கொண்டிருந்தான் மணிமாறன். சிரைக்கப்பட்ட தலை முடி ஓரளவுக்கு வளர்ந்திருக்க, அவன் அணிந்திருந்த காக்கிச் சட்டைக்கு இந்த சிகை அலங்காரம் சற்றும் பொருந்தவில்லை.
ஆம் நம் நாயகன் மணிமாறன் ACP என்ற பெயரை நெஞ்சில் குத்தி இருந்தான்.
“அம்மா சாப்பாடு எடுத்து வைங்க… கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு அப்பொறம் டியூட்டில ஜோஇன் பண்ண போறேன். என்ன கூத்தெல்லாம் பண்ணி வச்சிருக்காங்களோ தெரியல” புலம்பியவாறே சாப்பாட்டு மேசையில் அமர
மருத்துவமனையிலிருந்து வீடு செல்லும் பொழுதே தாயையும் தந்தையையும் அமரவைத்து “உங்களுக்குள்ள என்ன பிரச்சினை இருந்தது என்று நான் கேக்க மாட்டேன். இப்போ ஒரு பிரச்சினையும் இருக்குற மாதிரி தெரியல. ஏன் நீங்க சேர்ந்து ஒரே வீட்டுல இருக்கக் கூடாது”
“மாறா…” இருவரும் ஒரே நேரத்தில் அழைக்க,
“நான் என்ன சொல்ல வரேன்னான்… நாம எல்லாரும் ஒரே வீட்டுல ஒண்ணா இருக்கலாமே. என்ன சொல்லுறீங்க?” மாறன் அன்னையையும் தந்தையும் மாறி மாறி பார்த்து விட்டு, தாத்தாக்களையும் பார்த்து கண்களையே “இது சரி வருமா?” என்று கேட்க அவர்களும் கண்களாலும், கையாளும் பதில் சொல்லலாயினர்.
“மாறா….” பூபதி ஏதோ சொல்ல வர
“என்ன மாறா? மாறானு அவன் பேர சொல்லிக்கிட்டு. அதான் உன் மகனே சொல்லிட்டானே அவன் சொல்லுறதுதான் செய்யணும்” செல்வபாண்டி மீசையை நீவியவாறு சிரிக்க, தர்மதுரையும் சிரித்தார்.
லதாக்குக்கும் கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை இருக்க, அதை செயலால் காட்டி இருந்தவள் வார்த்தைகளால் சொல்லவில்லை என்ற அச்சம்தான் பூபதி அவளோடு பேசி விடலாம் என்று மகனை தடுத்தார்.
ஆனால் மனைவியின் முகத்தில் தெரிந்த அதீத சந்தோசமே அவளுக்கு இதில் முழு சம்மதம் என்று புரிய அமைதியானார்.
இன்று அனைவரும் பூபதி பாண்டியனின் வீட்டில்தான் வசிக்கின்றனர்.
“அங்க என்ன பார்வ? இந்த வயசுலயும் அப்பா ஸ்டெதாஸ்கோப்ப கழுத்துல மாட்டிகிட்டு ஆஸ்பிடல் போறாரே கொஞ்சம் கூட அத பத்தி கவல படாம, என்ன பத்தி பேசிகிட்டு இருக்க? வயசான அவரே போறாரு… நான் போனாதான் என்னவாம்”
“எதற்கு எதை முடிச்சு போட்டு பேசுகிறான்” தந்தை மகனை மெச்சுதலாக பார்த்தார் என்றால் லதா முறைத்தவாறே “அவர் பாக்குற வேலையும் நீ பாக்குற வேலையும் ஒன்னா?”
“என்ன வித்தியாசம் இருக்கு? அவரும் ரெத்தம்தான் பாக்குறாரு, நானும் ரெத்தம் தான் பாக்குறேன்” தந்தை அறுவை சிகிச்சை செய்து உயிர்களை காப்பாற்றுவதையும், அவன் ரௌடிகளை வெளுத்து வாங்குவதையும் ஒன்று என்பது போல் பேச பல்லைக் கடித்தாள் லதா.
“ஏன்டா அவர் உசுர காப்பாத்துறதும், நீ உசுர எடுக்குறதும் ஒண்ணா?” அவன் எத்தனை ரௌடிகளை என்கவுண்டர் செய்தான் என்று தொலைக்காட்ச்சி செய்தியில் உடனடி செய்தியாக வருவதை பார்த்து பதறி துடிக்கும் தாய் உள்ளம்தானே.
“ஆ… நான் பண்ணுறதும் ஆபரேஷன் தான் மா… அப்பா ஒரு உசுர காப்பாத்துறாரு. நான் ஒரு சமூகத்தையே காப்பாத்துறேன்”
“அப்படி சொல்லுடா என் சிங்கள் குட்டி” செல்வபாண்டியன் மீசையை நீவியவாறே சத்தமாக சிரித்தார்.
“அம்மா… அவனை அவன் போக்குல விடென்மா…” தர்மதுரையும் பேரனுக்கு ஒத்தூதினார்.
“எல்லாரும் இவனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து குட்டி சுவராக்குங்க, இவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வைக்க யாரும் யோசிக்கலையே. அடுத்த மாசம் வந்தா இருபத்தி எட்டு முடிஞ்சிடும்” லதா மெதுவாக கல்யாண பேச்சை எடுத்தாள்.
“பாக்குறதையும் உன்ன மாதிரி இல்லாம கொஞ்சம் அழகான பொண்ணா, புத்திசாலி பொண்ணா பாருமா… இல்லனா என்ன வேலைய விட சொல்ல போறா” மாறன் கிண்டலடிக்க,
“பாருங்கப்பா…. இவன…” தந்தையிடம் மகள் புகார் வாசிக்க அனைவருயும் சிரிக்கலாயினர்.
“அதான் அவன் பொண்ணு பார்க்க சம்மதிச்சிட்டானே. சீக்கிரமா ஒரு பொண்ண பார்த்துட வேண்டியதுதான்” மகனின் பேச்சை கவனித்த பூபதி பாண்டியன் பேச
“அப்பா மட்டும்தான் கவனமா இருக்காரு” என்று சிரித்த மாறன் கூலரை கண்களுக்கு மாட்டி தனது ரங்களேர் ஜீப்பில் காவல்நிலையம் கிளம்பிச் சென்றான்.
கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு பிறகு வேலைக்கு செல்வதால் DIGஐ சந்திக்க அவரது ஆபீஸ் உள்ளே நுழைந்தவன் அனுமதி இல்லாமலையே அவர் அறைக்குள் நுழைந்தான்.
கதவில் விஸ்வநாதன் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது போலவே மேசையிலும் DIG விஸ்வநாதன் என்ற அவரது பெயர் பலகை இருந்தது.
“வாய்யா மணிமாறா… மண்டைல அடிபட்டத்துல பழசெல்லாம் மறந்து போய் இருக்கும். நீ பார்த்துகிட்டு இருந்த கேஸ அலெக்ஸுக்கு கொடுக்கலாம்னு இருந்தேன்” DIG கூறவும்
“திருநெல்வேலில இருந்தாவன இங்க வரவழைச்சு கேஸ கைல கொடுத்தது எதுக்காம். தூக்கி கைல கொடுத்துட்டு, தலைல அடிபட்டதும், கழட்டி விட பாக்குறீங்களா?” அவருக்கு முன்னால் அமர்ந்தவாறே பேசினான் மணிமாறன்.
“மாறன் பி சீரியஸ் உனக்கு நடந்த எக்சிடன் தானா நடந்ததா? உனக்கு ஸ்கெட்ச் போட்டானுங்களா?” DIG கவலையாகவே கேட்க
“எக்சிடண்ட் ஆன உடனே நான் மயங்கிட்டேன். அதுக்கு அப்பொறம் என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியல. நான் வந்த உடனே என்ன போட்டு தள்ள பாத்திருக்கான்னா என்ன பத்தி அவனுக்கு நல்லா தெரிஞ்சிருக்கணும் இல்லையா சார்” சிரித்தான் மாறன்.
“யாருக்கு போஸ்டிங் போட்டிருக்கு என்று விசாரிச்சு, அவன் லஞ்சம் வாங்குவானா? கை சுத்தமா? அவன் பேச்சுக்கு அடிபணிபவனா? இல்லையா? எல்லாம் விசாரிச்சு அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்டன்னுதான் உன்ன போட்டுத்தள்ள பாத்திருக்கணும்” DIG சீரியஸ்ஸாக சொல்ல
“அவன் பண்ணுற தப்ப நான் கண்டு பிடிக்க வந்தேன். இது போலீசுக்கும், கல்ப்ரிட்டுக்குமான உறவு. என்ன எக்சிடண்ட் பண்ணி கொல்லுறதா என் அண்ணன கொன்னுட்டான். இப்போ இது பெர்சனல் பகை. அவன் யாரு? என்ன? அவன் ஜாதகத்தையே தோண்டி எடுப்பேன். இந்த கேசுல இருந்து எந்த காரணத்துக்காகவும் என்ன வெளிய அனுப்பிடாதீங்க” என்ற மாறன் சாலியூட் வைத்து விட்டு வெளியேறினான்.
DIGக்கும் மாறனுக்குமான உறவு தந்தை மகன், நண்பர்கள் போல்தான். அவன் இன்ஸ்பெக்டராக ஊட்டியில் பதவி ஏற்ற பொழுது இருந்தே இருவருக்கும் நல்ல பழக்கம்.
தனது காரியாலயத்துக்கு வந்து இருக்கையில் அமர்ந்தவன் “ஏட்டு ஆறுமுகம் அந்த காலேஜ் பொண்ணு சூசைட் கேஸ் பைல கொண்டு வாங்க. இன்னும் என்ன சூசைட் என்று சொல்லிக்கிட்டு மர்டர் என்று மாத்திடுங்க” குரலை உயரத்தியே கூற,
அவனது கம்பீரக் குரலில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு ஓடி வந்து “ஓகே சார்” என்றவாறே ஏட்டு ஆறுமுகம் மாறன் கேட்ட பைலை எடுத்துக் கொடுத்தார்.
மாறன் அதை வாங்கி சூசைட் என்று இருப்பதாய் பென்னால் ஒரு கோடு போட்டு வெட்டியவன் ஆங்கிலத்தில் MURDER என்று எழுத ஏட்டு ஆறுமுகம் தலையை சொறிந்தவாறு அவனை பார்த்திருக்க,
“என்ன PC லுக்கே வேற மாதிரி இருக்கு? போங்க போய் சூடா ஒரு டீ வாங்கிட்டு வாங்க” என்றதும் ஏட்டு ஆறுமுகம் அவனை ஒரு மாதிரி பார்த்தவாறு வெளியேறினார்.
“எக்சிடன் ஆனதுல இருந்து ஒரு மார்கமாதான்யா இருக்காரு. வலது கை பழக்கமுள்ளவரு இடது கையால எழுதுறாரு. வழக்கமா காபிதான் சாப்பிடுவார் இன்னக்கி டீ கேட்டாரு. ஒன்னும் புரியல”
“என்னய்யா சொல்லுற?” பழனிவேல் கதை கேட்க ஆரம்பித்தார்.
“அவரு லுக்க மாத்திக்கிட்டு வந்து என் லுக்கு ஒரு மாதிரின்னு வேற பேசுறாரு” மாறனின் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பற்றி கிண்டலடித்தார் ஆறுமுகம்.
“PC பழனிவேல்” மாறன் குரல் கொடுக்க,
“நீ சொன்னது உண்மதான்யா… என் வயசுக்கு மரியாதை கொடுத்து அண்ணே என்றுதான் எப்பவும் கூப்பிடுவாரு. ஆளே மாறிட்டாரு இல்ல” ஏட்டு பழனிவேல் ஆறுமுகம் சொன்னதை ஆமோதிக்க,
“முதல்ல உள்ள போய்யா… திட்ட போறாரு” என்ற ஆறுமுகம் டீ வாங்க சென்றார்.
PC பழனிவேல் உள்ளே வந்ததும் “இன்ஸ்பெக்டர் எங்கயா போனாரு? SIயையும் காணோம். எங்கதான் போய் தொலைஞ்சாங்க? இந்த கேஸ் முடியிற வரைக்கும் என் கூட, எனக்கு கீழ வேல பார்க்கணும்னுதுதானே எல்லாரையும் வேலைல வச்சிருக்காரு அந்த பெரிய மனிசன். என்னமோ அப்படி கிழிப்பாங்க, இப்படி கிழிப்பாங்கனு சொன்னாரு. உன் தொப்பயை பார்த்தாலே தெரியுது நீ என்ன கிழிப்பனு. என் கிட்ட கேக்காம, என் பர்மிசன் இல்லாம அந்த ரெண்டு பேரும் வெளிய போய் இருக்காங்க. என்ன மசமசவென பார்த்துகிட்டு இருக்க? போய்யா… போய் உனக்கு கொடுத்த வேலையாச்சும் பண்ணு”
மாறன் PC பழனிவேலை திட்டிக்கொண்டிருக்கும் பொழுதே ஆறுமுகம் டீயோடு உள்ளே நுழைந்தார்.
“என்னய்யா நீ. நான் டீ சாப்பிட மாட்டேன்னு தெரியாதா? தெரிஞ்சும் நீ என்ன வெறுப்பேத்த டீ எடுத்துக்கிட்டு வந்திருக்கியா? போய்யா… போ… போய் காபி எடுத்துட்டு வா…” ஆறுமுகத்தை விரட்டியவன் கேஸ் பைலில் முழ்கினான்.
“சத்தியமா இவருக்கு காத்து கருப்பு அடிச்சிருச்சு” முணுமுணுத்தவாறே ஆறுமுகம் வெளியேறி இருந்தார்.
பூங்குழலி வயது இருபது. ஹாஸ்டல் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டாள் என்றுதான் போலீஸ் கோப்பில் எழுதப்பட்டிருந்தது. விசாரித்ததில் காதல் விவகாரம் என்றும் எழுதி இருந்தது.
பூங்குழலியின் பெற்றோர் “போலீஸ் சரியாக விசாரிக்கவில்லை. தங்களது மகள் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை. அதுவும் காதல் விவகாரம் என்று சொல்வதெல்லாம் அபத்தம். எங்க பொண்ணுக்கு சொந்தத்துல ஒரு பையன பார்த்து நிச்சம் பண்ணி இருக்கோம். என் பொண்ணுகிட்ட சம்மதம் கேட்டுத்தான் நிச்சம் பண்ணோம். அப்படி அவ யாரையாவது காதலிக்கிறதா இருந்தா எங்க கிட்ட சொல்லி இருப்பா. நாங்க ஜாதி கூட பாக்குறது இல்ல. அப்படி இருக்கும் பொழுது காதலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவித்திருக்க மாட்டோம். எங்க பொண்ணு கண்டிப்பா தற்கொலை பண்ணி இருக்க வாய்ப்பில்லை” மாறி மாறி இருவரும் கூறியதில் கேஸை மறுவிசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆரம்பத்தில் இரண்டு இஸ்பெக்டர் இந்த கேஸை விசாரிக்க, அதில் ஒருவர் விபத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவருக்கு மிரட்டல் அலைபேசி அழைப்புக்கு வரவே விலகிக் கொண்டார்.
இது ஒரு சாதாரண தற்கொலை கேஸாக DIGக்கு தெரியவில்லை. அதனாலயே திருநெல்வேலியில் இருந்து மாற்றலாகி வந்த மணிமாறனிடம் இந்த கேஸை ஒப்படைத்திருந்தார். அவனுக்கு நடந்தது விபத்தா? சதியா? என்ற குழப்பம் இருந்தது.
இந்த கேஸை மாறன் விட மாட்டான் என்று தெரியும். அவன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தால் அவன் வீட்டில் உள்ளவர்கள் விடுவார்களா? அவனுக்கு விபத்து நடந்தது முதலில் காவல் நிலையத்துக்கு அல்லவா தகவல் வந்தது. அவர் தானே லதாவுக்கு தகவல் சொன்னார்.
ஒரு தாயாய் அவனை பாராமலையே அவள் கதறிய கதறல் இன்னும் அவர் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்க, லதா கெஞ்சிக் கூத்தாடி மாறனை போலீஸ் வேலையில் இருந்தே விலக சொல்லி விடுவாளோ, குறைந்த பட்சம் இந்த கேஸிலிருந்தாவது விலகிக் கொள்ள சொல்வாளோ, மணிமாறனும் கேஸை கைவிட்டால் என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தவருக்கு நடந்தது விபத்தா? சதியா என்று தெரியவில்லை என்றதோடு வந்தவன் நேராக வேலையை பார்க்க கிளம்பி விட்டான் என்றதும் நிம்மதி.
பைலை கையில் எடுத்தவனும் அதை பார்த்து விட்டு தான் இந்த கேஸை கையில் எடுத்ததும் தான் விசாரித்த தகவல் அடங்கிய பென்ட்ரைவை கணனியில் பொருத்தி பார்க்க ஆரம்பித்தான்.
அந்த பெண் பூங்குழலி பாலியலில் தொழிலில் ஈடுபட்டதாகவும், அதனால்தான் அவள் விடுமுறை நாட்களில் கூட ஊருக்கு செல்வதில்லை என்றும் அதில் இருந்தது.
“என்ன இது பெத்தவங்க ஒன்னு சொல்லுறாங்க, இந்த பொண்ணு இப்படி இருக்கு. வர வர இந்த காலேஜ் படிக்கிற பொண்ணுங்க படிக்கிறத தவிர மத்த எல்லா வேலையும் பாக்குறாளுங்க போல” தனக்குள் முணுமுணுத்தவாறே இருந்தான் மாறன்.
“யோவ் ஏட்டு இப்போ நீ என்ன AC சார பார்க்க விடல அவரே உன்ன அடிப்பாரு” ஒரு பெண் குரல் கத்துவது கேட்க,
“அங்க என்னய்யா? சத்தம்? மனிசன் நிம்மதியா? வேல பாக்க விடுறீங்களா?” மாறனின் குரல் உயர்ந்ததும் ஏட்டு ஆறுமுகம் உள்ளே ஓடி வந்து ஒரு பெண் மாறனை பார்த்தே ஆகா வேண்டும் என்று அடம்பிடிப்பதாக கூறினார்.
“உள்ள வர சொல்லுயா” யார் அது தன்னை பார்த்தே ஆகா வேண்டும் என்ற பெண் மாறனும் கதவையே பார்த்திருந்தான்.
உள்ளே வந்தவளோ உரிமையாக “ஏன்டா பிஸ்தா போலீஸு சிக்கனல்ல இருந்து கிட்டு உன்ன பார்த்து அப்படி கத்துறேன். கண்டுக்காம போற? நீ ஜீப்பிளையும். நான் ஸ்கூட்டிலையும் இருக்கோம் எங்குற இளக்காரமா? வகுந்துடுவேன் உன்ன” கோப மூச்சுக்கலை தீப்பொறியாக வெளியேற்ற,
மாறனின் மைண்ட் வாய்சோ “வந்தா திட்ட ஆரம்பிச்சா… யார் இவ?” என்றிருந்தாலும் மாறனின் கண்கள் அவளை அணு அணுவாக ரசிக்க ஆரம்பித்திருந்தன.
“என்ன மாறன் எங்க அக்கா தற்கொலை பண்ணிகிட்டத்துக்கு பின்னால பெரிய காரணம் இருக்கும்னு சொல்லிட்டு போன. அப்பொறம் ஆளையே பார்க்க முடியல. போன் பண்ணா நோட் ரீச்சபல்னு வேற வருது. ஒஹ்.. ஓஹ்.. சாருக்கு ஏகப்பட்ட கேஸ் இருக்கு போலயே. எங்க எனக்கு ஹெல்ப் பண்ண நேரமிருக்கும்” அவனை பந்தாடியவாறே அவனின் அனுமதியின்றி எதிரில் அமர்ந்தவள் அவனை முறைக்க ஆரம்பித்தாள்.
“யார் இவள்?” மாறன் புருவம் சுருக்கி யோசிக்க அவன் இதயம் பந்தய குதிரையின் வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது.
மூளைக்கும், இதயத்துக்கும் நடுவில் நடக்கும் போராட்டத்தை மாறனால் ஆராய்ச்சி செய்ய நேரம் பத்தவில்லை. நெஞ்சை நீவியவன் “நீ ஷாலினி இல்ல” என்று கேட்டதும்
பல்லைக் கடித்தவள் “என்ன விளையாடுறியா? மண்டைல அடிபட்டு மர கழன்டுருச்சா? உன்ன கொல்ல போறேன் பாரு” கையை அவன் கழுத்துக்கு நேராக நீட்ட, அனிச்சையாக பின்னால் நகர்ந்தவன் தனக்கு நடந்த விபத்தை பற்றி சுருக்கமாக கூறினான்.
“ஒஹ்… அதான் மொட்டை அடிச்சிருக்கியா? நான் ஏதோ நினச்சேன்” உடனே சோகமான ஷாலினி “அப்போ எங்கக்கா கேஸ உன்னால விசாரிக்க முடியாதா? நான் உன்னைத்தான் நம்பி இருந்தேன்” கண்களில் லேசாக கண்ணீர் எட்டிப்பார்த்திருந்தது.
“உங்கக்கா கேஸ யாரு விசாரிச்சா?” அவளின் சோகமான முகம் மாறனின் இதயத்தை குத்திக் கிழிக்க, தான் பார்த்துக் கொண்டிருந்த கேஸ் பைலை மூடியவாறே கேட்டான்.
“அந்த இன்ஸ்பெக்டர் பாண்டியன்தான் விசாரிச்சார். க்ளியரா தற்கொலைனு எனக்கும் தெரியுது. ஆனா எங்க அக்கா எதுக்கு தற்கொலை பண்ணாங்கன்னு தான் தெரியல” ஷாலினியின் முகத்தில் குழப்ப ரேகைகைகள் அப்பட்டமாக தெரிய, குரலில் பதட்டமும் கூடி இருந்தது.
மேசையில் இருந்த தண்ணீர் குவளையை கையில் எடுத்தவன் அவள் புறம் நகர்த்தியவாறே “பதட்ட படாம நடந்தத முதல்ல இருந்து சொல்லு” என்றவன் இரண்டு சுவிங்கத்தை வாயில் திணித்து மெல்ல ஆரம்பித்தான்.
தண்ணீரை பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஷாலினியும் சொல்ல ஆரம்பித்தாள்.
“உனக்கே தெரியுமே என் அக்காதான் எனக்கு எல்லாமே என்று. என்ன வளர்த்தது, படிக்க வச்சது”
அவள் பேச்சில் குறுக்கிட்ட மாறன் “உன் அக்கா பேரென்ன? போட்டோ இருக்கா?”
அவனை முறைத்தவள் “மண்டைல அடிபட்டவன் கிட்ட வந்து நானும் உனக்கு தெரியுமேனு சொல்லி கிட்டு இருக்கேன் பாரு நான் தான் அர மெண்டல்” சத்தமாகவே புலம்பியவள் அவள் அலைபேசியில் அவளும் அவள் அக்காவும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காட்ட,
அவளையே பார்த்திருந்த மாறன் “நீ சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்க ஷாலு. எப்பவும் இப்படியே இரு” என்றதும் அவள் சிரிப்பு சட்டென்று நின்றது.
“அது உன் கைலதான் இருக்கு” என்று இவள் சொன்னதும் இவன் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.
“என்ன இவள பார்த்ததும் இப்படி துடிக்குது” மாறன் மனதோடு பேசிக்கொள்ள
“என் அக்காவோட மரணத்துக்கு பின்னால உள்ள உண்மையான காரணத்தை கண்டுபிடி அப்போதான் அக்கா ஆத்மா சாந்தி அடையும். நானும் நிம்மதி அடைவேன். சந்தோசமா இருப்பேன். அப்பொறம் என்ன? இதே மாதிரி சிரிச்சிகிட்டு இருக்க போறேன்” என்றாள்.
“என்னமோ உன்ன கல்யாணம் பண்ணத்தான் அவ சந்தோசமா இருப்பா எங்குற ரேஞ்சுக்கு நினைச்சிட்டியே து… தேவைதான் உனக்கு” அவன் மனம் தூற்ற, புன்னகையால் அதை துடைத்தவன்
“சரி உன் அக்கா மாலினி பத்தி சொல்லு”
“என்ன சொல்ல?” அவன் முகத்தை பார்த்தவள் “அக்கா ஒரு ஸ்கூல் டீச்சர்”
“எந்த ஸ்கூல்மா… எல்லாத்தையும் நான் கேக்காமலையே விளக்கமா சொல்லு” மாறன் தீவீர முக பாவனையில் கூற ஷாலினியும் அவன் நிலையை புரிந்துகொண்டு தலையசைத்தாள்.
எந்த பாடசாலையில் தனது அக்கா வேலையில் இருந்தால் என்பதை கூறியவள் “தற்கொலை செய்து கிட்டா இல்ல. ஒரு வாரத்து பிறகு அவளுக்கு கல்யாணம். கல்யாணத்துக்கு நானும் அவளும் சேர்ந்துதான் ஷாப்பிங் போனோம்”
“இரு இரு கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருக்கைல தற்கொலை பண்ணிகிட்டாங்கனு சொல்லுற, அவங்க கல்யாணத்துக்கு சந்தோசமா தயாரானங்களா? இல்ல கவலையா இருந்தார்களா?” ஷாலினியின் பேச்சில் குறுக்கிட்டு கேட்டான் மாறன்.
“சந்தோசமா தான் இருந்தாங்க. ஆனா எதையோ யோசிச்சி கிட்டே இருந்தாங்க. நானும் கல்யாணத்துக்கு பிறகு என்ன தனியா விட்டு போறத பத்தி யோசிக்கிறானு அவளை பல தடவ சமாதானப் படுத்தினேன். முடியாத பட்சத்துல மாமா கிட்ட கூட பேசினேன்”
“மாமா…” மணிமாறன் யோசனையாக கேட்க,
“அக்காவ கல்யாணம் பண்ண இருந்தவர் தான். அக்கா வேல பார்த்த ஸ்கூல் அவரோடதுதான்” எனறவள் அவளுக்கு தெரிந்த தகவல்களை சொன்னாள்.
“அப்போ லவ் மேரேஜா?”
“லவ் என்றும் சொல்ல முடியாது. இல்ல என்றும் சொல்ல முடியாது” ஷாலினி தலையை வலது புறம், இடது புறம் அசைத்து கூற,
அதில் ஒரு நொடி மயங்கியவள் தலையை உலுக்கிக் கொண்டு “மாமா காதலிக்கிறேன்னு எல்லாம் சொல்லல ஸ்ட்ரைட்டா கல்யாணம் பண்ணிக்கலாமான்னு தான் கேட்டிருக்காரு”
“ஜென்டில்மேன்” மாறனின் வாய் அசைவைவில் ஷாலினியின் முகம் புன்னகையை தத்தெடுத்தது.
“அக்காக்கு கல்யாணம் பண்ணா என்ன பிரியனும் எங்குற பயம். முடியாதுனு சொல்லி இருக்கா… உன் தங்கச்சி ஷாலினியை நினைச்சி தானே சொல்லுற, கல்யாணத்துக்கு அப்பொறம் அவளும் நம்ம கூடவே இருப்பா.. ஒரு அண்ணனா அவ கல்யாணத்த நானே நடத்தி வைக்கிறேன். எனக்கு கூட பொறந்த தம்பி இல்ல இருந்தா நல்லா இருந்திருக்கும்னு சொல்லி இருக்காரு”
“நல்லவேளை” பட்டென்று மாறன் சொல்ல
“என்ன…” ஷாலினி சட்டென்று கேட்டு விட்டாள்.
“நல்லவரா இருக்காருன்னு சொன்னேன்” மாறன் சமாளிக்க
“ம்ம்.. ஆமா” தலையசைத்தாள் ஷாலினி.
“ஆமா உங்க அக்கா மரணத்தை பத்தி உங்க மாமா என்ன சொல்லுறாரு?”
“என்ன என் மாமாவையே சந்தேகப்படுறியா?”
“சே சே… சும்மாதான் கேட்டேன்” வாய்தான் ஷாலினிக்கு அவ்வாறு பதில் சொன்னாலும் அவன் போலீஸ் மூளை அவனை எல்லாவற்றின் மீதும், எல்லோரின் மீதும் சந்தேகம் கொள்ளத்தான் செய்தது.
“ஆ… நீ நல்லவரு, வல்லவருனு பேசும் போதே தெரியும் இப்படித்தான் சந்தேகப்படுவானு. அக்கா தற்கொலை பண்ணிகிட்டான்னு கேள்விப்பட்டு வந்தவரு அவளை கட்டி பிடிச்சிக்கிட்டு கதறி அழுதாரு. நான் கூட அம்புட்டு அழல. ஸ்கூலுக்கு கூட இன்னும் போகலையாம்”
“யார் சொன்னா உனக்கு”
“பாத்தியா நீ இல்லனு சொன்னாலும் உன் போலீஸ் புத்தி உன்ன காட்டிக் கொடுக்குது” வாய் மூடி சிரித்தவள் “அவரோட பி.ஏ என்று நினைக்கிறன். சார் வீட்டுலையே இருக்காரு. எந்த வேலையும் பாக்குறதில்ல. எந்த பேப்பர் கொடுத்தாலும் கையெழுத்து போடுறாரு. யாராவது சொத்தெல்லாம் எழுதி எடுத்துக்க போறாங்க என்று எனக்கே பயமா இருக்கு. இன்னும் ஏதேதோ”
“இந்த சினிமால வர மாதிரி அக்காவ கல்யாணம் பண்ண இருந்தவாறு தங்கச்சிய பார்த்ததும் மனசு மாறி அக்காவ போட்டு தள்ளி அனுதாபத்துல தங்கச்சிய கல்யாணம் பண்ண திட்டம் போடுவாங்களே அந்த மாதிரி இருக்கு” மாறன் கிண்டலாக சொல்வது போல் தன் சந்தேகத்தை முன் வைத்து ஷாலினியை எச்சரிக்க முயன்றான்.
“சீ.. சீ அப்படி எல்லாம் இல்ல. ஒரு ஆம்பள பாக்குற பார்வையை வச்சே அவனை கணிக்கலாம். மாமா அப்படி பட்டவர் இல்ல”
“எத வச்சி சொல்லுற?”
“நீயும் தான் நான் வந்ததுல இருந்தே சைட் அடிச்சி கிட்டு இருக்கியே, அவர் அப்படி இல்ல” சிரித்தாள் ஷாலினி
ACக்கு அந்த AC அறையிலும் வியர்க்க ஆரம்பித்திருக்க, அவள் சொன்னது காதில் விழாதது போல் பாசாங்கு செய்யலானான்.
“யாரையாவது லவ் பண்ணுறியா?”
“இல்ல”
“வீட்டுல பொண்ணு பார்த்துட்டாங்களா?”
“இனிமேல் தான்”
“அக்கா தற்கொலைக்கு என்ன காரணம்னு கண்டு பிடி மேற்கொண்டு பேசலாம்”
“என்ன பேசலாம்?”
“ஆ… கூட்டான்சோறு சமைக்கிறத பத்திதான். ஆளப்பாரு” என்றவள் வெளியேறி இருந்தாள்.