வயது – 2
அவன் செயலற்று இருந்தது சில நொடிகளே பின் காற்றைவிட வேகமாக தன் காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
அவனுக்கு அழைத்து பேசியது அரவிந்தன் ஒரு மருத்துவனையில் இருந்து.தன் அம்மா அனுராதாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக அவன் சொன்ன விஷயமே செழியனின் இந்த நிலைமைக்கு காரணம்.
காரை எடுத்த 1௦ நிமிடத்தில் அவன் மருத்துவமனையை அடைந்தான். அவன்அக்காவை ஐசியூ வில் சேர்க்கப்பட்டு இருப்பதை அறிந்து அங்கு விரைந்தான்.அங்கு ஐசியூவிற்கு வெளியில் திவாகரன், அனிஷா இருவரும் ஒவ்வருமூலையில் சோர்ந்து அமர்ந்து இருந்தனர்.
முதலில் அவனைப் பார்த்து அனிஷா தான் “மாமா…. அம்மாக்கு அம்மாக்கு……. “மேலே பேசமுடியாமல் அவள் குரல் அடைத்தது.
“அனிஷா ஜஸ்ட் ரிலாக்ஸ்” என்று தன் கலக்கத்தை மறைத்து அவளுக்கு ஆறுதல் சொல்லும் நேரம் இது என்று உணர்த்து சொன்னான். அரவிந்தன் மருத்துவரைக் காணச் சென்றிருந்தான்.
கண்ணாடித் தடுப்பு வழியாக தன் அக்காவைப் பார்த்தான்.சாந்தமும் சிரிப்புமாக காட்சிதரும் தன் அக்கா உருங்குலைந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அவன் கண்கள் பனித்தது.அவன் அம்மாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் அவன் இருந்தான் தான் அப்போது அவனுக்கு வலித்ததை விட பலமடங்கு இப்பொழுது அவன் இதயம் நின்று நின்று துடிப்பது போல் இருந்தது
அவனை சுற்றி பல பேர் இருந்தாலும் அவனுக்கு இருக்கும் ஒரே பிடிப்பு அவர்தானே. அவனின் எல்லா காலத்திலும் அவன் உறுதுணையாக பற்றி கொள்வது அவருடைய கைகளை தானே.
அந்த கைகள் தானே அவன் கண்ணீர்களை துடைப்பதும்,சிரிக்கும்பொழுது வாஞ்சனையாக கன்னத்தில் தட்டுவதும்,கிண்டல் செய்யும்பொழுது கிள்ளுவதும், பசியறிந்து அவனுக்கு ஊட்டுவதும்,கலங்கி நிறுக்கும்பொழுது நான் இருக்கேன் என்று தோளில் அழுத்தம் தருவதும்,கஷ்டங்களை பகிரும்பொழுது அவன் தலை கோதி விடுவதும் என்று பல பரிமாணங்கள் கொண்டது.
உண்மையில் அவன் அனுஷாவின் நிலைமையை விட மோசமாக தான் இருந்தான்.அவன் மனது இப்பொழுது அவனின் வயதை விட கம்மியாக ஒரு குழந்தையாக கலங்கியது.தன் தாயின்
வெண்மையான,பாதுகாப்பான அருகாமையை தவறவிட்டு ஓர் இருட்டறையில் மாட்டிக்கொண்ட தவிப்பு அவனிடத்தில்.
நர்ஸ் வந்து சில மாத்திரைகளை வாங்கவேண்டும் என்று கூற அனிஷா தான் வாங்கி வருவதாக சொல்லி சென்றாள்.
மெல்ல அவன் பார்வை தன் மாமா திவாகரன் மேல் வந்தது.எப்பொழுதும் அவர் முகத்தில் ஒரு வித கம்பீரமும் தெளிவும் இருக்கும். அவர் தான் அவனுக்கு ஓருஎடுத்துக்காட்டு. இன்று அவர் இடிந்து போய் அமர்ந்து இருப்பதை பார்க்க கஷ்டமாக இருந்தது.
அவர் பக்கத்தில் அமர்ந்து அவர் கையைத் தொட்டு “என்னால தான மாமா…”சொல்லும் போதே செழியனின் குரல் கரகரத்தது.
தன் வலதுகையால் அவன் கையை அழுத்திப் பற்றி “அப்படியெல்லாம் பேசாத செழியன் ” என்றார்.
“இல்ல மாமா நேத்து நைட் கூட அக்கா என் விஷயத்தைப் பற்றி ரொம்ப நேரம் விவாதம் பண்ணிட்டிருந்தாங்க”
தெரியும் என்று தலையசைத்தவாறே “நைட் என்கிட்டயும் உன்னைப் பத்தி ரொம்ப கவலையா பேசிட்டு லேட்டா தான் தூங்கினா காலையில எழுந்து பார்த்தா…” கண்களில் கண்ணீர் வர அதை மறைக்க வேறுப்புறம் திரும்பினார்.அனி,அரு வருவதைப் பார்த்து அத்தோடு பேச்சை விட்டனர்.
பின் நிதானத்துக்கு வந்தவன் தன் மொபைலில் ஒரு கால் செய்தான்.அதன் விளைவாக சென்னையில் உள்ள முக்கியமான இருதய நிபுணர்கள் அனைவரும் அவன் இருந்த மருத்துவமனைக்கு வந்தனர்.அவன் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு எல்லாம் விரைவாக நடந்தது.வந்தவர்களின் மருத்துவமனைகள் எல்லாம் இவன் உதவியால் தான் எழுந்தது உதவி என்றால் அதில் இடம்,பொருள்,பணம் எல்லாம் அடங்கும்.
அதன்பின் ஒரு மணிநேரம் பிறகு மருத்துவர்கள் வந்து இனி நிலைமை சீராக உள்ளது என்று சொல்லிய பிறகுதான் எல்லோர் முகத்திலும் ஒரு நிம்மதி பரவியது.
நர்ஸ் வந்து பேஷண்ட் கண்விழித்து விட்டார் என்று சொல்ல அனைவரும் மருத்துவர்களின் அனுமதி மற்றும் அறிவுரை பெற்று உள்ளே சென்று பார்த்தனர்.
உள்ளே சென்றவுடன் அனிஷா தன் அம்மாவை அந்த நிலைமையில் பார்த்தவுடன் அழுகை வர அவர் முன்பு எமோஷனல் ஆக கூடாது,அவரையும் ஆக விட கூடாது என்ற அறிவுரைப்படி அவசரமாக கதவைத் திறந்து வெளியே ஓடினாள்.அவளை சமாதானம் செய்ய அரவிந்தன் பின் தொடர்ந்து சென்றான்.
அனு தன் கணவனைப்பார்க்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் ஒருபார்வை பார்த்து அவள் கையைப் பற்றி அழுத்தி விட்டு தன் மனதை உணர்த்தி வெளியேறினார்.
அனுவை நெருங்கிய செழியன் “அக்கா… “என்று சொல்லி இவ்வளவு நேரம் கலங்கி தேக்கி வைத்த கண்ணீரில் ஒரு துளி வெளியேற்றினான்.
வெளியில் கம்பிரமாக தெரிந்தாலும் உள்ளுக்குள் அவன் தவித்தது அவனுக்கு தானே தெரியும்.அவன் தவிப்பை புரிந்த அனுவின் கண்களிலும் கண்ணீர் பெருகியது.
“அழாதடா எனக்கு இருக்குற ஒரே கவலை நீ தான்…..நான் இந்த நிமிஷம்செத்தா கூட எனக்கு பிரச்சனை இல்ல உன் மாமா கண்டிப்பா அரவிந்தையும்அனிஷாவையும் நல்லப்படியா கரை சேப்பாரு அரவிந்த் உன்ன மாதிரி அனிஷாக்கு நல்ல வழிகாட்டியா இருப்பான்.கடவுள் எனக்கு கொடுத்த பொறுப்பு எல்லாத்தையும் நான் நல்லவிதமா செஞ்சு இருக்கேன் உன்னை தவிர…உனக்கு மட்டும் நான் எந்த ஒரு நல்லதும் நான் செய்யல்ல ரொம்ப சுயநலமா இருந்துயிருக்கனோனு மனசு சொல்லுது இப்படியே இருந்தா இந்த நினைப்பும் அதோட குற்றவுணர்ச்சியும் என்ன கொல்லாமா கொல்லும்” என்றார் கண்ணீர் மல்க உடல் ஒத்துழைக்காத பொழுதும் தன் பலத்தை திரட்டி பேசினார்.
“ஏன்கா இப்படி பேசுற? நீ எனக்கு எல்லா பண்ணியிருக்க இது எல்லா உன்னால தான் சாத்தியம்.இந்த பேர்,புகழ்,பணம் எல்லாமே உன்னோட துணையாலதான் ”
“பேரு, புகழ், பணம் மட்டும் போதுமாடா எல்லாத்தையும் மீறி உனக்குனு ஒரு குடும்பம் வேண்ணுடா”
“அக்கா ப்ளீஸ்!!!இப்போ இந்த டாப்பிக் வேண்டாம் முதல்ல ரெஸ்ட் எடு…அப்புறம் பேசிக்கலாம்”
“போதும் டா…அப்புறம் பேசினாலும் இதே தான் சொல்லுறவன் கிட்ட என்ன சொல்லி போராடுறது.பேசாம என்னை காப்பாத்தாம விடுங்க செத்து போறேன்…இந்த மனஉளைச்சலோட வாழ முடியாது.ஆயிரம்தான் இருந்தாலும் நான் அக்கா தான…அம்மா இல்லல…அம்மா இருந்து சொல்லியிருந்தா கேட்டிருப்பில”
“ஐயோ..தயவுசெஞ்சு இப்படி எல்லா பேசாதகா”
“அப்போ இந்த அக்கா கடைசியா கேக்குறேன் உனக்கு எல்லா செஞ்சன்னு சொல்லுறியே அதுக்கு தட்சனையா கேக்குறேன் எனக்காக கல்யாணம் பண்ணிக்கிறியா?”
அக்காவின் உயிர்முன் அவனின் பிடிவாதம் பெரிதாக படவில்லை.தன் உணர்வை கொன்றாவது அக்காவை மீட்டெடுக்க நினைத்தான்.ஒரு நிமிடம் கண்மூடி மெளனமாக இருந்தான்.அவன் மனம் படும்பாடு அவன் தொண்டை ஏறி இறங்கியத்திலும் முடிய அவன் கண்களில் அவன் கருமணி அலைப்பாய்ந்ததிலும் தெரிந்ததுதான்.
கசப்பு என்று தெரிந்தாலும் தாய் தன் பிள்ளைக்கு மருந்து தருவது தானே நியாயம்.அதனால் தான் அவன் கஷ்டங்கள் அனைத்தும் புரிந்த போதும் தயவு தாஞ்சன்யம் பார்க்காமல் தன் முடிவில் குறியாக இருந்தார்அனுராதா.தன்னை கட்டுப்படுத்தி கொண்டு கண் திறந்து அனுவின் கைகளை இறுக்கமாக பற்றி “சரி நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் செழியன் தன் உணர்வுகளை கொன்றுவிட்டு
ஆயிற்று அனுராதாவை மருத்துவமனையில் சேர்த்து இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.மருத்துவர்கள் அவரின் மனஉளைச்சல் அதோடு சேர்ந்த வேலைப்பளுவும் தான் இந்த மைல்டு அட்டாக்கிற்கு காரணம் என்று சொல்லியிருந்தனர்.
அதை கேட்டபொழுதே செழியனுக்கும்,திவாகரனிற்கும் அந்த மனஉளைச்சல் தான் அனுராதாவின் நிலைமைக்கு காரணம் என்றும் அதோடு அது எதனால் வந்தது என்பதும் புரிந்தது.
மருத்துவரின் அறையை விட்டு தங்களுக்கு என்று இருந்த விஐபி சூட் வரும்போது வரைக்கும் அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.அறைக்குள் செல்லும் போது செழியன் தனியாக வெளியே போட்டிருந்த சோஃபாவில் தன் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான்.
திவாகர்க்கு அவன் நிலை புரிந்தது.அவர்களின் பிணைப்பையும் பந்தத்தையும் கடந்த 29 வருடங்களாக பார்ப்பவர் ஆயிற்றே.அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் தோள் தொட்டு அழுத்தினார்.
“என்னாச்சு டா செழியா”
“ப்ளீஸ் மாமா!!! நீங்களாவது என்ன திட்டிடுங்க..என்னால தான அக்காக்கு இந்த நிலைமை..உங்க எல்லாருக்கும் இந்த கஷ்டம் “
“சே..சே..என்னடா பேசுற…எப்போ இருந்துடா உன்னால என்னாலனு பிரிச்சுப்பாக்கா ஆரம்பிச்ச இல்ல நாங்க தான் அப்படி பார்த்து இருக்கோமா”
“இப்படி நீ சொல்லுறது தான்டா எனக்கு கஷ்டமா இருக்கு” அவர் பேச்சில் உண்மையான வருத்தம் இருந்தது .
அதை புரிந்து கொண்டவனாக நிமிர்ந்து அவரை பார்த்தான்.செழியனின் கண்கள் சிவந்து கலங்கி போயிருந்தது.எப்பொழுதும் கம்பிரமாக வலம்வருபவனா இது என்று தோன்றியது.
“டேய் செழியா!!!உன் அக்கா உன்ன இப்படி பார்த்தா இன்னும் உடைஞ்சு போவா.இங்க பாரு உன்னோட நிலைமையும் புரியுது அதே மாதிரி ராதாவோட எதிர்பார்ப்பும் எனக்கு புரியுது.என்ன பொறுத்த வரைக்கும் அவ நினைக்கிறதுல தப்புயில்லையே.கடவுள் எல்லாருக்கும் எல்லாத்தையும் கொடுக்குறது இல்ல.ஒன்னு நமக்கு வேனும்னா இன்னோனுத்த நம்ம விட்டு தான் ஆகணும்.ராதாவுக்காக உன்னோட பிடிவாதத்தா விடு.அவ எப்போவுமே உனக்கு நல்லத மட்டும் தான் நினைப்பா”
“புரியுது மாமா…ஆனா சில சமயம் நம்ம அறிவு சொல்லுறத மனசு புரிஞ்சுசுக்க மாட்டேங்கிது”
“எல்லாமே நல்லதுக்கு தான் நினை,ராதாவோட பலமே நீ தான்டா செழியா” என்று சொல்லியப்படி எழுந்தார்.
“அதனால தான் அக்கா கிட்ட மேரேஜ்க்கு ஒகே சொல்லிட்டேன் ” என்று அவனும் அவருடன் எழுந்தான் .
“டேய் இந்த நல்ல விஷயத்த தானடா நீ முதல்ல சொல்லணும்” என்று சந்தோஷத்துடன் அவனின் கைகளில் அடித்தார்.
ஆனால் செழியனிடம் அந்த மகிழ்ச்சிக்கு எந்த ஒரு பிரதிபலனும் இல்லை.அதை உணர்த்தவரும் ‘அவன் சம்மதம் சொன்னதே பெரிய மாற்றம்’ என்று எண்ணி கொண்டார்.
பின் “அப்போ உன் அக்காவ கைல பிடிக்க முடியாது…இப்போவே டிஸ்சார்ஜ் ஆகணும் அடம் பிடிப்பாளே” என்றார் கிண்டல் செய்யும் குரலில்.
“ஐயோ மாமா…இன்னும் 3 டேஸ் இங்க நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்”
“அதுவும் சரிதான்…அவ தூங்குறா கண்ணு முழிக்கட்டும் நான் பேசுறேன்”
“சரி நீயும் ரெண்டு நாள் இங்கதான் இருக்க நீ வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு…ரிலாக்ஸா இரு…ஏதவாதுன்னா நான் கால் பண்றேன்” என்று சொல்லும் போதே வீட்டிற்க்கு ரெப்பிரேஷ் செய்துகொள்ள சென்ற அனிஷாவும் அரவிந்தும் வந்தனர்.
“கரெக்ட்!!! நாங்க ரெண்டு பேருமே வந்துட்டோம்ல நீங்க வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க…நாங்க அம்மாவ பார்த்துக்குறோம்” என்றாள் அனிஷா.
“ஆமா மாம்ஸ் அப்பாவையும் கூட்டிட்டு போங்க…உங்கள சொல்லிட்டு அவரும் புல்லா இங்கதான் இருக்காரு…ரெண்டு பேருமே போங்க” என்றான் அரவிந்தனும் அவர்கள் மறுக்க இடம் அளிக்கதவாறு.
அதன்பின் செழியன்,திவாகர் இருவரும் வீட்டிற்க்கு செல்ல முடிவெடுத்தனர்.திவாகரை அவர் வீட்டில் இறக்கிவிட்டு அவன் தன் வீட்டிற்க்கு செல்லும் வழியில் பிரகாஷிடம் இருந்து கால் வந்தது.அட்டென்ட் செய்து ப்ளூடூத்யில் கனெக்ட் செய்ய மறுபுறம் ப்ரகாஷியிடம் இருந்து “ஹலோ செழியா…இப்போ எங்க இருக்க?” என கேட்க
“இப்போ தான் டா ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்…என்ன ஆச்சு ?”
“இல்ல இல்ல நானும் ப்ரியாவும் அக்காவ பாக்க ஹாஸ்பிடல் போய்ட்டு இருக்கோம் அதான் உன்ன கேட்டேன்”
“ஓ..சரி டா அப்போ நீ பார்த்துட்டு வா நான் உன்ன ஆஃபீஸல பார்க்கிறேன்”
“ஹேய் அதெல்லாம் வேண்டாம் நீயே இப்போ தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுற நான் ஆஃபீஸ் ஒர்க் எல்லாம் பார்த்துக்குறேன்…நீ ரெஸ்ட் எடு…நான் ஈவ்வினிங் வீட்டுக்கு வந்து உன்ன பார்க்குறேன்” என்று பேசி பிரகாஷ் வைக்க…வீட்டை அடைந்து தன்னுடைய ரூம்மிற்கு வந்து விட்டத்தை பார்த்தவாறு படுக்கையில் விழுந்த செழியனுக்கு மனதில் வெறுமையும் குழப்பமும் மட்டுமே சூழ்ந்தது கண்களில் கோர்ந்துவிட்ட கண்ணீருடன்.
அவனுக்கு தெரியவில்லை அக்காவிற்காக எதையும் செய்யும் தானே ஒரு நாள் அவரை வார்த்தைகளால் கொன்று வெறுத்து ஒதுக்குவோம் என்று.
விதி அதன் விளையாட்டை அனுராதாவின் மூலம் தாயம் போட்டு விளையாட ஆரம்பித்தது.
விதி வலியது!!!
” இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி துன்பமும் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம் “