மருத்துவமனையில் இருந்து வந்தவர்களிடம் தர்மதுரை எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டு “மன்னிச்சிடு மச்சான் இதுக்கு மேல என்ன சொல்றது னு எனக்கு தெரியலை”என்ற தர்மதுரை மனைவியை எதிர்கொள்ள தயாராக வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பிறகு தான் மங்கை வந்து பேசியது சாபமிட்டது எல்லாம் நிகழ்ந்திருக்க தர்மதுரையும் விடுமுறைக்கு வந்திருந்த மகனிடம் எல்லாம் சொல்லி துரிதகதியில் தன் தம்பி வீட்டிற்கு கிளம்பலாம் என்று கூற அவனும் சம்மதித்து இதோ மங்கை வந்ததும் கிளம்பி விட்டனர் இருவரும். மங்கையின் அகங்காரம் இதனால் கூடியதே தவிர துளியும் குறையவில்லை. அடுத்து இந்த வட்டி பணத்திற்கும் அசலை அடைக்கவும் என்ன செய்யலாம் என்று சிந்திக்க விசாலம் தான் நினைவிற்கு வந்தார். தன் பெற்றோரின் பங்கு பூர்வீக நிலத்தில் இருப்பதாக வேலனிடம் விசாலம் கூறியது நினைவிற்கு வர அதைக் கேட்டு எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று எண்ணி வால்பாறைக்கு கிளம்பி இருந்தார் மங்கை. ஒன்று அந்த பூர்வீக நிலத்தில் இருந்து தன் பங்கை வாங்கி விற்பது இல்லையா அதில் அங்கேயே ஒரு சிறிய வீட்டைக் கட்டி குடியிருந்து கொள்ள வேண்டியது தான் என்ற எண்ணத்தில் தான் மங்கை கிளம்பி இருக்க விசாலம் ஏற்கனவே அந்த நிலத்தை விற்று பணத்தை வேலவனிடம் தந்து விட்டதாக கூறி விட்டார். “என் கையெழுத்து இல்லாம எப்படி வித்தீங்க நீங்க”என்று தாம் தூமென்று குதிக்க விசாலமோ நிதானமாக “என்ன உளறிட்டு இருக்க மங்கா. வேலன் கல்யாணத்தப்பவே தான் நெலத்தை வித்தோம். நீ கூட சேர்ந்து வந்து தான் பணத்தை வாங்கின. மறந்து போச்சா உனக்கு”என்று கேட்க மங்கை குழப்பமாக “இல்லையே நான் எப்போ வாங்கினேன்”என்று வினவ “இந்தா பாரு நெலத்தை வித்த ஆளு இங்கே தான் இருக்காங்க. அவங்க கிட்ட பத்திரம் வாங்கிப் பாரு எந்த வருஷம் எல்லாம் தெரியும் வேதா பொறந்த மூணு வருஷத்திலேயே வந்து வாங்கிட்டு போயிட்டீங்க”என்று பட்டென்று சொல்லி விட்டார் விசாலம். “என்னென்னவோ சொல்லி எங்களை ஏமாத்த நெனைக்கிறீங்க சித்தி”என்று பேச “அதெல்லாம் எனக்கு வராது மங்கா. ஒனக்கு சந்தேகமா இருந்தா நீயி விசாரிச்சுக்க.”என்றவர் “மீனா உம்பெரியாத்தாவுக்கு சோறு போடு கண்ணு”என்றபடி எழுந்து கொண்டார் விசாலம். “எனக்கு பசியில்லை நான் கிளம்புறேன்”என்ற மங்கை அங்கிருந்து கிளம்பி விட விசாலம் ஆசுவாசமாக அமர்ந்து விட்டார். “ஏன் அத்தை இப்படி இருக்காங்க இவங்க”மீனா ஆதங்கமாய் கேட்க “விடுகண்ணு. கஷ்ட ஜீவனத்துல வளந்தவளுக்கு ஒரு கட்டத்துல அவ தம்பி வளர்ச்சியே பொறாமைய உண்டாக்கிருச்சு.”என்றவர் “என்ன தான் தம்பி தாங்குறான்னாலும் அவங்கவங்க குடும்பத்தை அவங்க தான் கண்ணு வளக்கோணும். அடுத்தவன் காசு குடுத்து முன்னேற முடியாது. நம்ம ஒழைப்புனு ஒண்ணு வேணுமல்லோ. அது மங்கா கிட்டயும் கெடையாது அவ புருஷன் கிட்டயும் கெடையாது”என்றார். “அவரு என்னங்கத்த செய்வாரு பாவம்” “என்னத்த பாவமோ போ. பொண்டாட்டிக்கு எந்த விஷியத்துல ஆதரிக்கணும்னு ஒரு வரைமொறை இருக்கம்மணி. தன்னால ஒழைக்க முடியாட்டி தஞ்சம்பாத்தியத்துல வாழுற பொண்டாட்டியா இவளை மாத்தி இருக்கோணும் அதை விட்டுட்டு தம்பி குடும்பத்தை மொட்டை அடிக்கிறானு தெரிஞ்சே அமைதியா இருக்குறது தப்பிலையா கண்ணு”என்று விளக்கம் கொடுக்க மீனா ஆமோதிப்பாய் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள். வரலக்ஷ்மி ஏற்கனவே விசாலத்திடம் நடந்த அத்தனை பிரச்சினைகளையும் கூறி வருத்தப்பட்டு இருக்க அதனைக் கொண்டு தான் இப்போது மங்கையிடம் இப்படி பேசி அனுப்பி இருந்தார் விசாலம். உண்மையில் ஏதேனும் வேலவனைப் பற்றி குறை சொல்ல தான் மங்கை வருவார் என்று விசாலம் நினைத்திருக்க மங்கையோ பூர்விக இடம் பற்றி கேட்க வந்ததே அதிர்வு தான் விசாலத்திற்கு. அதை மேகவர்மனுக்காக பாதுகாத்து வைத்திருக்கையில் மங்கை கேட்டதும் அதைத் தர மனதே இல்லை. அதிலும் வரலக்ஷ்மி அவ்வளவு சொல்லி இருக்க சுத்தமாக விருப்பம் அற்றுப் போனது விசாலத்திற்கு. ‘இப்படியும் இருப்பாளா ஒருத்தி’என்று மங்கையைப் பற்றி நினைக்க நினைக்க கோபம் தான். இத்தனை நேரம் பொறுமையாக பேசி மங்கையை அனுப்பி வைத்ததே விசாலத்தை பொறுத்தவரைக்கும் பெரிய விஷயம் . ************ நிலா தான் தன் மருமகள் என்று அறிந்ததில் இருந்து வேலவனைத் தான் கையில் பிடிக்க முடியவில்லை. “நான் கேட்டதுமே ஒத்துக்கிட்டியா நிலாமா நிஜமாவாடா பாத்தியா வரு. எப்பவும் நிலாவுக்கு என் மேல பாசம் அதிகம் தான். இல்லாட்டி நிமிஷத்துக்கு நிமிஷம் சண்டை போடற ஒருத்தனை மேரேஜ் பண்ணிக்க யாராவது சம்மதிப்பாங்களா… என் மருமகள் ஒத்துக்கிட்டு இருக்கா பாரு. அதுதான் பாசம்.”என்று சிலாகித்தவர் “ஆமாம் வர்மா உன்னே இப்பவும் திட்டுறானாமா? சண்டைக்கு நிற்கிறானா? எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லிடணும் நிலா மா”என்றார் வாஞ்சையாக “ஆமாம் மாமா ரொம்ப பண்றார் இவர்”என்று வெண்ணிலா சிரிப்புடன் மேகனைப் பார்த்தபடி கூற அவனோ மூக்கை விடைத்தபடி பார்த்து நின்றான். முகத்தைச் சுளித்து வம்பு செய்தவளைக் காண அவனுக்கு தெவிட்டுமா என்ன… பார்வையில் மட்டும் தான் அந்த முறைப்பு எல்லாம். உள்ளூர அவளின் மூக்கை நிமிண்டி சிரிக்க ஆசை பொங்கிக் கொண்டு இருந்தது அவனுக்கு. நீண்ட மாதங்கள் கழித்து வீட்டில் சகஜநிலை திரும்பி இருந்தது வேலவனின் புரிதலினால். அதே சமயம் மங்கையோ தன் நிம்மதியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் தெரியவில்லை யாரும் இல்லாவிட்டால் என்ன நான் தனியாக இருப்பேன் எனக்கு தைரியம் உண்டு என்று இறுமாப்பாய் இருந்தவருக்கு இரண்டு மூன்று நாட்களிலேயே மனது தவித்தது. தன் பேச்சுக்கு தலையாட்டும் கணவன், வேலையே இல்லாவிட்டாலும் தான் என்ன கூறினாலும் தலையால் செய்து முடிக்கும் வரலக்ஷ்மி என்று சுகபோகத்திற்கு பழகிய மங்கையால் ஒரு கட்டத்தில் எதுவும் முடியவில்லை. இதில் வட்டிக்கு பணம் கொடுத்தவன் வேறு மணிக்கு ஒரு முறை அழைத்து கத்துகிறான். கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் செயினை அடகு வைத்து ஆறு மாதத்திற்கு வட்டி கட்டி விடலாம் பிறகு மற்றதை கவனிப்போம் எப்படியும் வேலனுக்கு தான் இல்லாமல் எந்த வேலையும் ஓடாது என்ற எண்ணம் வேறு அவருக்கு. அந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது என்று புரியவில்லை மங்கையின் மடமனதிற்கு. நாட்கள் அதன் போக்கில் செல்ல வேலவன் இதுநாள் வரை மங்கையை அழைத்துப் பேசவில்லை. அவர் மட்டும் அல்ல மங்கையின் கணவர் பிள்ளை என்று ஒருவரும் அழைப்பதில்லை. மேகன் மீண்டும் வேலைக்குச் செல்கிறான் . வெண்ணிலா வீட்டில் இருக்க வேலவன் மகன் கிளம்பும் போது வாசலில் வந்து நின்று வழி அனுப்பி வைக்கிறார். அதுவே மங்கையின் கோபத்தை தூண்டி விட்டது. நான் மட்டும் தனிமையில் இருக்க இவர்கள் குடும்பமாக இருப்பதா என்ற ஆவேசம் அவருள் பொங்க தம்பியிடம் சண்டைக்குச் சென்று விட்டார். “ஏன் டா உன்னை வளர்த்து ஆளாக்கின நான் இன்னைக்கு இந்த கதியில நிக்குறேன் நீ பகுமானமா குடும்பத்தோட கும்மாளம் போடுறியே வெக்கமா இல்லை”என்று கத்த வேலன் அமைதியாக உள்ளே செல்ல முயன்றார். “என் வயித்தெரிச்ச உன்னை சும்மா விடாதுடா. ஏன் எனக்கு செஞ்சா நீ குறைஞ்சு போயிடுவியா…இதுக்கா நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன். வளர்த்த நான் நடுத்தெருவில் நிக்கிறேன். கொஞ்சம் கூட கண்டுக்காம போறீயே நீ வெளங்குவியா”என்று வாசலில் கேட்டைப் பிடித்தபடி அந்த தெருவே கேட்கும்படி கத்தினார். “வாய்க்கு வந்தபடி பேசினீங்க அப்புறம் போலீஸ் ல கம்ப்ளைன்ட் தந்திடுவேன்”என்று நிலா பொறுக்க முடியாமல் பேசிவிட “எல்லாம் உன்னால தான்டி. என்னைக்கு இந்த வீட்டில் நீ காலடி எடுத்து வச்சியோ என் மரியாதை எல்லாம் போச்சு. நீ மட்டும் வாழவாப் போற…நாசமத்து போவடி”என்று சாபமிடுவது போல மண்ணை வாரி இரைக்க வரலக்ஷ்மிக்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது. பதறிப்போனவர் வெண்ணிலாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டே “நீங்க எல்லாம் மனுசி தானா… எங்க மூஞ்சியிலேயே முழிக்காதீங்க. போங்க இங்கிருந்து”என்று ஆத்திரம் பொங்க பேசிவிட வேலவன் தளர்ந்து போய் அமர்ந்து விட்டார். “நான் மனுசி தான் டி. நீங்க தான் நன்றி கெட்ட நாய்ங்க. என் ரத்தத்தை உறிஞ்சி வளர்ந்த அற்பபுழு இவன்… பூர்வீக இடத்தை கூட எனக்கு இல்லாம செஞ்ச ஈனப்பிறவி”என்று வார்த்தைகளால் வேலனை தேள் போல கொட்டினார் மங்கை. “வீட்டோட பிறந்த மகளை அழ வச்ச உங்க வம்சம் வெளங்குமா இதோட அழிஞ்சு போயிரும்”என்றெல்லாம் பேச அதற்கு மேல் தாங்க முடியாமல் வெண்ணிலா வேலனையும் வரலக்ஷ்மியையும் உள்ளே அழைத்துச் சென்று கதவைச் சாத்தி விட்டாள். மங்கை அங்கேயே நின்று கத்திக் கொண்டிருந்தது அனைவருக்கும் கேட்க தான் செய்தது . “படுபாவி நன்றி இல்லாம இப்படி பேசுறாளே”என்று வரலக்ஷ்மி அழுதுவிட வெண்ணிலா “அழாதீங்க நீங்க அவ்வளவு தான்”என்றவள் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவள் உடனேயே வெளிக் கதவை பூட்டி விட்டு மங்கையிடம் வந்து விட்டாள். கையில் இருந்த கைபேசியை எடுத்தவள் “ஹலோ தினேஷ் அண்ணா நான் வெண்ணிலா பேசறேன்”என்று சொல்லி விட்டு “ஆமாண்ணா…வீடு காலி பண்றாங்க. அவங்களுக்கு எங்க அட்வான்ஸ் பணத்தில் வாழப் பிடிக்கலையாம். நீங்க வேற ஆளுக்கு வாடகைக்கு விட்டுடுங்க. அதோட இங்கே”எனும் போதே கைபேசியை மங்கை பிடுங்கிக் கொண்டவர் “யார் கிட்ட டி பேசுற”என்று அலற “வீட்டு ஓனர் கிட்ட… உங்களுக்கு தான் நாங்க நன்றி கெட்ட நாய்ங்களாச்சே.. அப்புறம் ஏன் இந்த நன்றி கெட்ட நாய்களோட பணத்தில் நீங்க குடி இருக்கணும் இல்லை வாழணும் வேணாம் வேணவே வேணாம்”என்று சொல்லி விட்டு “அப்புறம் அங்கே இருக்க ஒவ்வொரு சாமானும் என் மாமனாரும் புருஷனும் வாங்கி வச்சது. மளிகை சாமான்கள் உள்பட அதனால திங்கிற சோறு செரிக்கணும் நன்றி இல்லாத எங்களோட காசுல சமைச்சு தின்னா சோறு செரிக்காது ஸோ வெளியே போயிடுங்க”என்றாள் அலட்சியமாக. “ஏய்”என்று அதிர்வாய் வெண்ணிலாவின் முடியைப் பிடித்து இழுத்து அடிக்கப்போக பின்பக்கம் இருந்து ஓடி வந்த வேலவன் மங்கையை அடித்து இருந்தார். ……… தொடரும் “” “”