மங்கை தன் தந்திரம் அகப்பட்டு விட்டதை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்று யோசிக்க வர்மன் அவரை வார்த்தைகளால் விளாசி தள்ளியிருந்தான்.
“உங்களைப் போய் எங்கப்பா தெய்வம் மாதிரி நினைச்சாரே…ச்சே இவ்வளவு கீழே இறங்குவீங்கனு நான் கனவுலயும் நினைக்கலை”என்று கத்தியவன் “இனிமே இந்த வீட்டுப் பக்கம் வந்திடாதீங்க போதும் உங்க உறவும் பாசமும்”என்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டான்.
வேலவன் கல்லென இறுகி சமைந்திருந்தார்.
“வேலா அவன் என்ன பேச்சு பேசறான்”என்று தம்பியிடம் திரும்ப
அவரோ மௌனமாக கையெடுத்துக் கும்பிட்டு ஒரே செய்கையில் தமக்கையை ஒதுக்கி இருந்தார்.
“வேலா”என்று மீண்டும் அதிர்ந்த மங்கை “உன்னை வளர்த்து ஆளாக்கி”என்று ஆற்றாமையில் பேசத் துவங்க
“போதும் விட்டுடுக்கா. நீ இதுக்கு என்னை வளர்க்காமலேயே இருந்திருக்கலாம். ரோட்டில் பிச்சை எடுத்து என் வயித்தை கழுவி இருந்தா கூட இந்த துரோகத்தை நான் சந்திச்சு இருக்க மாட்டேன்.”என்று தளுதளுத்த குரலில் சொல்லியே விட்டார் வேலவன்.
“எனக்கு இடம் வாங்கி குடுன்னு கேட்டு இருந்தாலே அவர் செஞ்சு தந்திருப்பார் இவ்வளவு சகுனித்தனம் செஞ்சு தான் உங்களுக்கு சொத்து வாங்கணுமா நீங்க.உங்க பேச்சை இதுநாள் வரைக்கும் நம்பினேனே”என்ற வரலக்ஷ்மி”தீபா பண்ணதுல துளியும் தப்பு இல்லை னு எனக்கு இப்போ தோணுது”என்று சொல்லி விட்டார்.
“விடு வரு. எதுவுமே ஒரு அளவுக்கு தான் னு உணராம இருந்தது என்னோட முட்டாள்தனம்”என்று தளர்ந்து போய் பேச மங்கையோ அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் தன் பக்க நியாயத்தை பேசினார்.
“சரிடா நான் செஞ்சது தப்புன்னே வச்சுக்குவோம் அதுக்கு மூல காரணம் யாரு. உன்னை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி விட்டதால தானே இந்த பகுமானம். எப்படியும் போடானு விட்டு எனக்கு புடிச்ச மாதிரி இருந்திருந்தால் இந்நேரம் உன் கதி என்ன. அதை கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா… இல்லை வேலை கிடைச்சது சம்பாதிச்சேன் அதுல அக்காவுக்கு ஏதாவது செய்வோம் னு நினைச்சியா வேலை கிடைச்ச ஒரு வருஷத்துக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வைனு வந்து நின்ன பண்ணி வச்சேன்”
“செலவு எங்கப்பா தானே செஞ்சார். நீங்க செய்யலையே”என்றான் வர்மன்.
“ஆனா எடுத்து நடத்தினது நான் தானே… இவனுக்கு ஒரு வாழ்க்கையை பாத்து வச்சதும் தானே நானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”
“அதுக்குமே எங்கப்பா தானே செலவு செஞ்சாரு”நறுக்கென்று கேட்டான் வர்மன்.
“அது அவனோட கடமை ஏன் கூடப் பிறந்தவளுக்கு பசங்க கல்யாணம் பண்ணி வைக்கிறது இல்லையா ஏன் நீ உங்கக்காவை கட்டி தரலை”என்று வார்த்தைகளால் குத்த
“எங்கக்கா ஒண்ணும் உங்களை மாதிரி ஃப்ராடு பண்ணி சொத்து சேர்க்கலையே”
“வர்மா”என்று மங்கை கத்த
“சும்மா கத்தாதீங்க.”என்றவன் “உங்க சுயநலத்துக்கு எங்கப்பாவை ஆட்டி வச்சுட்டு”எனும் போதே வேலவன் “வர்மா விடுடா”என்றார் மிகவும் சோர்வாக.
மனதும் உடலும் அவரை தளர்வடைய செய்திருந்தது. மங்கை நேரடியாக இந்த இடத்தை வாங்கிக் கொடு என்று சொல்லி இருந்தால் கூட பெரிதாக எடுத்திருக்க மாட்டார் வேலவன். அவருக்கு அந்த இடத்தை அவரே வாங்கித் தந்திருப்பார். ஆனால் சூழ்நிலையைப் பயன்படுத்தி இப்படி நயவஞ்சகமாக நடந்து கொண்டதை தான் அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இப்போதும் கூட தப்பு செய்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தால் கூட மன்னித்து ஏற்றிருப்பாரோ என்னவோ… ஆனால் இந்த நொடி வரைக்கும் தன் நிலையில் இருந்து மாறாத மனுஷியை ஏன் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க அது மட்டும் இல்லாமல் இத்தனை சுயநலம் பிடித்தவருக்காக ஏன் என் மகன் தண்டம் அழ வேண்டும் என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்து கொண்டார் வேலவன்.
“இப்போ இடத்தை காலி பண்றீங்களா”என்ற மேகன் வாசல் பக்கம் கைகாட்ட வெறுப்பை உமிழும் பார்வை பார்த்து விட்டு வெளியேறி இருந்தார் மங்கை.
“நீ நல்லாவே இருக்க மாட்டடி”என்று வெண்ணிலாவைப் பார்த்து சாபம் வேறு விட்டுச் செல்ல அவளோ”நல்லவங்க சாபமே பலிக்கறதில்லை. இப்படி அண்ணன் தம்பி உழைப்பை சுரண்டி உறிஞ்சி குடிக்கிற உங்க சாபமா பலிக்க போகுது”என்றாள் அசட்டையாக.
மங்கை நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு வீதியே கேட்கும்படி அழுது கொண்டு போனாலும் ஓரிருவர் என்னவென்று கேட்டனர் அவ்வளவே வேறு யாரும் அருகில் கூட செல்லவில்லை.
கிடைத்த ஆளிடம் வேலனை வளர்த்த கதையை எல்லாம் பேசி அவர்களை தூற்ற அவர்களோ “நீயும் தான் ஆகட்டும் மங்கை இப்படி ஆஸ்பத்திரியில் இருந்து வந்தவரை அலைகழிக்கலாமா. இல்லாம தானே அவங்க சொல்றாங்க”என்று வேலவனுக்கு ஆதரவு கூற சப்பென்றானது மங்கைக்கு.
வீட்டிற்கு சென்றவர் தன் கணவனைத் தேட தர்மதுரையோ மகனோடு தன் கையில் ஒரு பை மட்டும் எடுத்துக் கொண்டு “எப்படியும் நான் உன் தம்பி கிட்ட உண்மையைச் சொன்னதுக்கு வீட்டை விட்டு துரத்திடுவ. இல்லை என்னை கண்டபடி கரிச்சுக் கொட்டுவனு தெரியும் அது எதுக்கு.நானே வெளியே போறேன். என் மகனை வர்றியாடானு கேட்டேன் வர்றேன்னான். கூட்டிட்டு போறேன்.எங்களுக்கு ஆடம்பர இடமோ வீடோ வேணாம் மங்க. உள்ளதை வச்சு பொழைச்சுக்கிறோம். உனக்கும் அப்படி ஒரு எண்ணம் ஒரு நாளைக்கு வந்தா எங்களை வந்து பாரு. எங்கேயும் போகல. என் தம்பி வீட்டுக்கு தான் போறேன். நாங்க போறோம் மங்கை”என்றவர் “ஹான் அப்புறம் வீட்டு வாடகை மளிகை சாமான் வாங்கணுமேனு யோசிக்காத அது மாசா மாசம் வந்துடும்”என்றவர் மங்கையின் பதிலையும் எதிர்பார்க்கவில்லை. முகத்தையும் நோக்கவில்லை.
“போங்க எல்லாரும் போங்க எனக்கு என்ன வந்தது.இதெல்லாம் எனக்காகவா நான் செஞ்சேன் எல்லாம் நீங்க மதிப்பு மரியாதையுமா இருக்கணும் னு தானே செஞ்சேன்.ஏன்டா பவேஷு உனக்கு தானே டா இவ்வளவு கஷ்டமும் நான் பட்டேன். இப்படி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம உங்கப்பனோட போறீயே”என்று ஆத்திரமும் ஆற்றாமையுமாக கத்தினார் மங்கை.
வாசல் வரை சென்ற பவேஷ் திரும்பி மங்கையை பார்த்தவன் “நான் கேட்டேனாம்மா இப்படி ஒரு சொத்து. மாமா என்னை எவ்வளவு நல்லா படிக்க வச்சாங்க. இந்த வீட்டுக்கு வாங்குன பொருள் எல்லாம் அவங்க காசு தானே… இதெல்லாம் உங்களுக்கு தானே செஞ்சாங்க ஆனா நீங்க அவர்களையே கடங்காரங்க ஆக்கி இருக்கீங்க. அங்கே மாமாவுக்கு அடிபட்டப்ப கூட உங்களுக்கும் ம்ஹ்ம் நமக்கும் சேர்த்து தானே செலவு பண்ணாங்க. அப்படி இருக்கும் போது நீங்க ஏன் மா இப்படி செஞ்சீங்க. எனக்கு ஒண்ணும் வீடு வேணாம். “என்றவன்
” நான் பாட்டுக்கு தாமரை சித்தி வீட்டில் ஜாலியா இருந்தேன். என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க. வரு அத்தை அவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டாங்க. ஆனா அங்கேயும் விடாம ஹாஸ்டல்ல சேர்த்து விட்டீங்க. என்னை நீங்க கவனிக்கவே இல்லை மா.அப்புறம் ஏன் நான் உங்க கூட இருக்கணும்.அப்பா வாங்க போகலாம்”என்று தந்தையோடு சென்று விட்டான்.
மங்கைக்கு இதற்கு நியாயமாக குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும் ஆனால் அவரோ தன் மகன் மீதும் கோபம் தான் கொண்டார்.
“உனக்காக செஞ்சேனே அப்பன மாதிரியே நன்றி கெட்டது”என்று பொருமிக் கொண்டே உணவருந்தி விட்டு படுத்து விட்டார்.
“எங்க போவீங்க.எவ்வளவு நாள் இந்த புடிவாதம்னு நானும் பார்க்கிறேன். ரெண்டு நாளைக்கு வயிறு காஞ்சா தன்னால வரப் போறீங்க”என்று திட்டிக் கொண்டே தான் படுத்துறங்கினார்.
வெண்ணிலா கணக்கு நோட்டை எடுத்து வைத்து எல்லாம் சரி பார்த்ததில் எந்த இடத்திலுமே வேலவன் இவ்வளவு பெரிய தொகை வாங்கியதாக கணக்கில் வரவில்லை.
சட்டென்று வேதா அழைக்கவும் கைபேசியை எடுத்தவள் அங்கிருந்தபடியே பேசத் துவங்க பேச்சு வேலவன் விபத்திற்குள்ளான தினத்திற்கு செல்ல பேச்சுவாக்கில் வேதா “அன்னைக்கு மட்டும் இந்த அத்தை அவசரமா அப்பாவை கூட்டிப் போகாம இருந்திருந்தால் இந்நேரம் அப்பா இவ்வளவு சிரமப்பட்டு இருக்க மாட்டாங்க”என்று ஆதங்கமாய் சொல்லி விட வெண்ணிலாவிற்குள் சட்டென வெளிச்சம் பிறந்தது.
“அண்ணி அதுக்கு முன்னாடி தானே மங்கை பெரியம்மா மாமாவை இடம் பார்க்க கூட்டிப் போனாங்க அப்போ கூட காசு எவ்வளவு என்னன்னு பேசினோம்”என்று கேட்க
“ஆமா நிலா அத்தை தான் சொன்னாங்களே தர்மா மாமா வீட்டுல சொத்து வித்தப்ப தந்த காசுல வாங்கிப் போட்டதா”என்று வேதா நிறுத்தினாள்.
“ஆமா ஆமா”என்று ஆமோதித்தவளிடம் “அதை எதுக்கு நிலா இப்போ கேட்கிற அத்தை எதுவும் பணம் கேட்டாங்களா என்ன”என்று வேதா சந்தேகமாக கேட்க
“ஒரு விஷயம் பத்தி தெரியணும் அண்ணி அது ஊர்ஜிதம் ஆனதும் உங்களுக்கு விளக்கம் சொல்றேன் நான்”என்றவள் சற்று பழைய உற்சாகத்துடன் பேசி முடித்து விட்டு வைத்து விட்டு நிச்சயம் இந்த பணம் மங்கைக்கு வாங்கியதாக தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.
சற்று நேரத்தில் வந்த மங்கை வேறு பேசிக் கொண்டிருக்க வெண்ணிலா மெதுவாக அவர்களின் இடம் வீடு கட்டும் விஷயம் பற்றி பேச்சுவாக்கில் விசாரித்தாள்.
“வீட்டு வேலை ஏதோ நடக்குது எங்க என்னைக் கட்டுனவரு சரியா இருந்தா இவ்வளவு அல்லாட்டம் தேவையா”என்று நொடித்தவர் “வேலன் நல்லா இருந்தா கூட வீடு கட்ட காசு தந்திருப்பான். உன் புருஷன் கிட்ட உரிமையா கேட்க முடியுமா இதுவே தீபாவை கட்டி இருந்தா என் கொழுந்தன் மகன்னு கேட்டு இருப்பேன் அவளும் நம்ம பெரியம்மாக்கு தானேனு வாங்கி தந்திருப்பா”என்று வெண்ணிலா வை குத்தலாக பேசி காரியத்தை சாதித்து கொள்ள நினைக்க அவளோ “இப்போ மட்டும் என்ன பெரியம்மா உங்க தம்பி மகன் கிட்ட நீங்களே கேட்டு வாங்கிக்கங்க நான் எதுவும் சொல்ல மாட்டேன்”என்றாள் நைச்சியமாக.
“ஹ்ம்ம் ஹ்ம்ம் அகிலா மவளுக்கும் நல்ல மனசு தான் போலிருக்கு”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் கைபேசி இசைத்தது
தர்மதுரை தான் அழைத்திருந்தார்.
தர்மதுரை தானே என்று நினைத்து அசட்டையாக அழைப்பை ஏற்றவர் “ஹலோ”என்று சொல்லும் முன்பே தர்மதுரை தன் வீட்டிற்கு இருவர் வந்திருப்பதாகவும் உடனே வர வேண்டும் என்று அழைக்க மங்கை பதற்றத்துடன் எழுந்து செல்ல முற்பட வெண்ணிலாவும் அவரோடு செல்ல தடுக்க வழி தெரியாமல் அமைதியாக போக அங்கே வெண்ணிலா வந்ததைக் கூட உணராமல் தர்மதுரை வட்டி தருவது வரலக்ஷ்மி அழைப்பை ஏற்காதது துவங்கி எல்லாம் சொல்லி பேச வேலவனும் மருத்துவமனையில் இருந்து வந்தவர்கள் சத்தம் கேட்டு அங்கே செல்லவும் மங்கையின் நாடகம் வெட்ட வெளிச்சம் ஆகிப் போனது.