மங்கையின் அதிர்ந்த பார்வை கண்டு திடுக்கிட்ட வரலக்ஷ்மிக்கு ‘அய்யோ உளறி விட்டேனே’என்று நெஞ்சம் கலங்கியது. இருப்பினும் ‘எப்படி இருந்தாலும் இந்த விஷயம் தெரியாமலா போகும்’என தன்னை நிதானித்துக் கொண்டு “ஆமா அண்ணி நிலாவுக்கு நாள் தள்ளி போயிருக்கு”என்றார் வரலக்ஷ்மி.
மங்கை அதிர்ந்தாலும் தன்னை சமாளித்து கொண்டு “சரி சரி வேலன் பேரன் வர்ற நேரமாவது அவனுக்கு நல்லது நடக்கட்டும். நல்லா இரு உடம்பை பார்த்துக்க அலட்டிக்காம இரு”என்று கூறி விட்டு சென்று விட்டார்.
வரலக்ஷ்மிக்கு தான் பதறிக் கொண்டு வந்தது மங்கையின் பேச்சு. வெண்ணிலாவோ ‘நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா’என்பது போல அசட்டையாக சென்று விட்டாள்.
மாதம் ஆகி விடவே வட்டிக்காரன் அழைத்து விட்டான் மங்கைக்கு.
“ஏன் மேடம் உங்களுக்கு நாங்க மாசா மாசம் ஃபோன் பண்ணி வேற சொல்லணுமா பணத்தைக் கொண்டு வந்து சரியா கட்ட மாட்டீங்களா”என்று சத்தமிட மங்கைக்கு வரலக்ஷ்மி மீது ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.
அவ்வளவு தூரம் கூறியும் பணத்தை கட்டாமல் விட்டு இருக்கிறாளே என்ற ஆத்திரத்தில் அவர் வீட்டிற்கு சென்றவர் “வரா எங்க இருக்க”என்று வீடதிர அழைக்கவும் திடுக்கிட்ட வரலக்ஷ்மி வெளியே ஓடி வந்தார்.
அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே தன்னருகே இழுத்து “அவ்வளவு தூரம் சொல்லியும் அவனுக்கு வட்டிப் பணத்தை அனுப்பவே இல்லையா நீ”என்று அடிக்குரலில் சீறினாலும் நன்றாகவே வெளியே கேட்டது.
“யாருக்கு வட்டிப் பணம் தரணும் அத்தை”என்றபடி வந்து விட்டான் வர்மன்.
அவன் வருவான் என்று இருவருமே எதிர்பார்க்காத நிலையில் நெஞ்சில் நீர் வற்றிப் போய் திரும்ப மங்கையை கூர்மையாகப் பார்த்தான் வர்மன்.
“கேட்கிறேன் ல பதில் சொல்லுங்க”என்று சத்தமாக கேட்க மங்கை கிடுகிடுத்து போக வரலக்ஷ்மிக்கு பேச்சே வரவில்லை.
“அது அது வந்து வர்மா உங்கப்பாவோட”என்றவர் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “உங்க அப்பன் ஆப்ரேஷனுக்கு வாங்கின பணம் தான் வர்மா”என்றதும் வரலக்ஷ்மிக்கு தலையே கிறுகிறுத்துப் போனது.
இதென்ன மாற்றி மாற்றி பேசுகிறார் என்று அதிர்ந்த பார்வை பார்க்க
“அப்பாவோட ஆப்ரேஷன் ல இருந்து அவருக்கான ட்ரீட்மெண்ட் வரைக்கும் நான் தான் அமவுன்ட் செட்டில்மென்ட் பண்ணேன் அத்தை. என்னோட ஷேவிங்ஸ் மொத்தமும் போட்டு தான் ட்ரீட் பண்ணேன். விஷ்ணு மாமா பணம் கொடுத்து உதவினார்”என்றான் அழுத்தமாக.
“வரா நீ அப்படி தானே சொன்ன”என்று வரலக்ஷ்மியை இதில் இழுக்க
“வர்மன் கல்யாணத்துக்கு”என்று வரலக்ஷ்மி சொல்லும் போதே அவரை பேச விடாமல் “ஹ்ஹான் அதான் அதான் உன் கல்யாணம் அப்புறம் ஆப்ரேஷன் பண்ண பிறகு நீ வெளிநாட்டில் இருக்கும் போது ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போன செலவு எல்லாம் கடன் தான் வர்மா. உங்கப்பன் எங்க என் பேச்சைக் கேட்டான். உன் கல்யாணத்துக்கு தாம் தூம் னு செலவு செஞ்சான். உன் கிட்ட கணக்குல காட்டாம பணம் தண்ணியா செலவழித்து இப்படி கடன்காரன் ஆகிட்டான். போதாக்குறைக்கு கீழே விழுந்தது”என்று சரளமாக பேச இவர் இப்படியும் பேசுவாரா என்று தான் வரலக்ஷ்மி பார்த்தார்.
“அக்கா நீங்க என்ன உளறிட்டு இருக்கீங்க. வர்மன் கல்யாணம் எல்லாம் அவன வச்சு தான் நான் செலவே செஞ்சேன் ஒத்த ரூபாய் கூட விடாமல் கணக்கு எழுதி வச்சிருக்கேன். எனக்கு ஞாபகம் இருக்கு”என்று தடாலடியாக வேலவன் வந்து நிற்க மங்கைக்கு நெஞ்சில் நீர் வற்றிப் போனது. ஆனால் உடனடியாக சுதாரித்துக் கொண்டார்
“நீ மறந்து போயிட்ட வேலா. வர்மனுக்கு தெரியாது க்கா இந்த பணம் வாங்கறது னு சொல்லி வாங்கிட்டு வந்தியே…அடிபட்டதில் மறந்து போச்சு உனக்கு.”என்று பேச
“ப்ப்ச் அக்கா எனக்கு அடிபட்டு ச்சு தான். அதுக்கு என் பொண்டாட்டி பிள்ளையை கூடவா மறந்தேன் ஏதோ ஒண்ணு ரெண்டு விஷயம் மறந்து போயிட்டேன் அதுக்கு இவ்வளவு முக்கியமானதை நான் எப்படி மறந்து போயிருப்பேன் க்கா”என்று வேலவன் விடாமல் கேட்டதில் மங்கைக்கு சட்டென கோபம் துளிர்த்து விட
“ஏன் மறக்காம முக்கியமான விஷயத்தை மறக்கலையாம்ல…கேட்டுக்க வரா இவன் பேசறதை… போடா போடா உன் மகன் கல்யாணம் நின்னு அது அந்த வால்பாறைகாரி கூட நடந்ததையே மறந்து போயிட்ட இது முக்கியமான விஷயம் இல்லையா”என்று தன்னை அறியாமல் ஏளனமாக சொல்லிவிட வேலவன் கலவரமாக மனைவி மகனைப் பார்த்தார்.
அவர்களோ “அண்ணி, அத்தை”என்று ஒரு பக்கம் அதட்ட வேலவனுக்கு நெஞ்சை இழுத்துப் பிடித்தாற் போல இருக்க தலையை வலிக்கத் துவங்கி விட்டது.
வியர்த்து வியர்த்து வழிய அவரைத் தாங்கி கொண்ட மேகன் “வெண்ணிலா ஆம்புலன்ஸுக்கு கால் பண்ணு”என்றவன் துரிதமாக செயல்பட்டான்.
ஆம்புலன்ஸ் வந்த நொடியில் தந்தையை தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து விட்டு திரும்ப மங்கை அவர்களோடு கிளம்பப் பார்த்தார்.
“படியில் கால் வச்சீங்க அவ்வளவு தான்”என்று விரல் நீட்டி எச்சரிக்கை செய்தவன் “வெண்ணிலா வீட்டில் இருடா நானும் அம்மாவும் போயிட்டு வர்றோம்”என்று சொல்லி பக்கத்து வீட்டு பெண்ணை அழைத்து அவளுக்கு துணையாக வைத்தான்.
அதிலேயே மங்கைக்கு முகம் சிறுத்து கருத்தது.
மருத்துவமனைக்கு விரைந்தவர்கள் வேலவனுக்கு உடனேயே சிகிச்சை துவங்கி விட இங்கு வெண்ணிலா அவர்கள் சென்றதுமே பக்கத்து வீட்டு பெண்ணை தன்னோடு அழைத்துச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டாள்.
மங்கைக்கு ஆங்காரம் இன்னும் இன்னும் கூடிப் போக இதை இப்படியே விடக் கூடாது என்று நினைத்துக் கொண்டார் ஆவேசமாய்.
வெண்ணிலா மேகனின் அலமாரியில் இருந்த கணக்கு எழுதி வைத்திருந்த புத்தகத்தை எடுத்து வைத்தாள். ஒவ்வொரு தாளையும் விடாது படித்துப் பார்த்து மேகனின் திருமண செலவை நன்கு கூர்ந்து கவனித்து பார்த்தாள். மேகன் அத்தனைக்கும் கணக்கு எழுதி வைத்திருந்தான்.
இந்த கந்துவட்டி பற்றிய ஒரு கணக்கு கூட அதில் இல்லாமல் போகவே துணுக்குற்ற வெண்ணிலா வரலக்ஷ்மியின் அறைக்குச் சென்றாள். அடுத்தவர் அறையை ஆராய்வது தவறென்றாலும் அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை.
நல்ல வேளையாக வரலக்ஷ்மி கணக்கு புத்தகத்தை வெளியே மேசையில் தான் வைத்திருந்தார். அதனையும் தீர்க்கமாக ஆராய்ந்ததில் எந்த வட்டிக் கணக்கும் எழுதப்படவில்லை.
மங்கையிடம் தான் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று உணர்ந்தவள் வீட்டினர் வரட்டும் என்று காத்திருந்தாள்.
**********
“அப்போவே தலைப்பாடா அடிச்சுக்கிட்டைன்.கேட்டீயா நீ இப்ப தவளை தன் வாயாலையே கெட்ட மாதிரி நீயே எல்லாம் சொல்லி வச்சுட்டு வந்திருக்க”என்று தர்மதுரை திட்ட
“இப்ப என்ன நடந்துச்சு எதுவும் நடக்கலை. அவன் ஆஸ்பத்திரியில் இருந்து வரட்டும் பேசிக்கலாம்”என்றார் மங்கை .
“வந்து எல்லாம் கேட்டா என்ன செய்வ மங்கை. இப்போ கூட ஒண்ணும் கெட்டுப் போகல எல்லா உண்மைகளையும் வர்மன் கிட்ட சொல்லிடலாம்”என்று தர்மதுரை சொல்ல
“வரட்டும் பேசிக்கலாம் நீங்க வாயை மூடிக்கிட்டு இருங்க”என்று அப்போதும் கணவனை அடக்கத் தான் செய்தார் மங்கை.
என்னவோ செய் என்பது போல தர்மதுரை ஒதுங்கிக் கொண்டார்.
வேலவனுக்கு ஞாபகம் மீண்டும் வர வாய்ப்பு மிகக் குறைவு என்று எண்ணித் தான் மங்கைக்கு அத்தனை ஆணவம்.
ஆனால் எத்தனை காலம் இதெல்லாம் சரியாக இருக்கும். கெட்டிக்காரன் பொய் எட்டுநாளைக்கு என்பது போல மங்கையின் குட்டு வெளிப்பட்டதோடு வேலவனின் நினைவுகள் திரும்பாவிட்டாலும் கடன் நான் வாங்கவே இல்லை என்பதில் மிகத் தெளிவாக இருந்தார் அவர்.
தெளிவாக இருந்ததோடு மட்டுமல்லாமல் கந்துவட்டி காரனை நேரிலேயே பார்த்து பேசி என்ன விஷயம் என்று கேட்கலாம் எனவும் சொல்ல வர்மன் சரியென்று கூறிவிட்டான்.
“நீங்க உடம்பு தேறி வாங்கப்பா எல்லாம் விசாரிக்கலாம்”என்று கூற
“அதெல்லாம் இல்லை வர்மா. நான் நல்லா தான் இருக்கேன் லேசா தலை வலியா இருக்கு.மத்தபடி நான் நல்லா இருக்கேன் வரு நாம போகலாம். எனக்கு முதல்ல நிலாவை பார்க்கணும் அப்புறம் இந்த பிரச்சினை”என்றார் மிகத் தெளிவாக.
மருத்துவருமே “அவருக்கு மெடிசின் நல்லா வொர்க் ஆகுது மா. நீங்க பொறுமையா ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்து சொன்னா இனி புரிஞ்சுக்குவார். நான் கூட சடனா உங்க பையன் மேரேஜ் விஷயம் தெரிஞ்சதில் அஃபெக்ட் ஆகிடுவாரோனு நினைச்சேன் பட் அந்த அளவுக்கு ஆகலை. பெருசா பாதிப்பு இல்லை. இனி பயப்பட வேண்டாம். “என்று சொல்லி விட வரலக்ஷ்மிக்கு அப்போது தான் உயிரே வந்தது.
“இதை என் கிட்ட நீங்க முன்னமே சொல்லி இருக்கலாமே மா. ஏன் மறைச்சீங்க”என்று வரலக்ஷ்மியை அவன் கடிந்து கொள்ள
“இவரை மனசில் வச்சு தான் சொல்லலை டா தம்பி. அதுவும் இல்லாம மங்கை அண்ணி”
“ம்மா பேசாம இருங்க செம கோபம் வருது அவங்க மேல. எதுக்கு இத்தனை பொய் புரட்டு உங்க கிட்ட ஒண்ணு சொல்லி என் கிட்ட அப்பா கிட்ட னு எத்தனை தடவை மாத்தி பேசுவாங்க. இந்த வட்டி பிரச்சினை ல ஏதோ வில்லங்கம் இருக்கு அதான் இந்த மாதிரி பிஹேவ் பண்றாங்க”என்றான் எரிச்சலாக.
“வர்மா நிலாவை பார்க்கணும் என் மருமக கிட்ட மன்னிப்பு கேட்கணும்”என்று வேலவன் மீண்டும் துவங்க
“இதோ கிளம்பிடலாம் ப்பா. வீட்டுக்கு வாங்க உங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு”என்று சொல்லும் போதே வர்மனுக்கு முகம் விகசித்தது.
இத்தனை நாளும் தீபாவை மருமகள் என்று சொல்லி கஷ்டப்படுத்தியதற்கும் வர்மனிடம் மன்னிப்பு கேட்க
“என்னப்பா நீங்க விடுங்க வேணுன்னேவா செஞ்சீங்க”என்று தந்தையை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
கிளம்பும் போதே வெண்ணிலாவிற்கு அழைத்துத் தகவல் கூற அவளும் தன் வீட்டிற்கு சொல்லி விட்டாள் மகிழ்ச்சியுடன்.
“நம்ம கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லை நிலா. இனிமே இருக்கு அந்த மங்கைக்கு.சரி விடு எல்லாம் நல்லதுக்குனு நினைச்சுக்க… நாங்க அடுத்த வாரம் வர்றோம்டா கவனமா இரு.”என்று அகிலா கூறிவிட்டு இணைப்பைத் துண்டிக்க மங்கை வந்து விட்டார்
“என்ன ஆஸ்பத்திரியில் இருந்து ஃபோன் வந்துச்சா”என்று எதுவுமே நடக்காதது போல கேட்க வெண்ணிலாவிற்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.
“இப்போ வந்திடுவாங்க. ஜஸ்ட் வாயு பிரச்சினை தானாம்”என்றவள் வர்மன் வரும் வரை வாயைத் திறக்கக் கூடாது என்று தீர்மானமாக இருந்தாள்.