மங்கையும் வரலட்சுமியும் வெண்ணிலாவை தடுத்து விட்டு தாங்களே வேலவனை அழைத்துக் கொண்டு கிளம்பி இருக்க வாசலில் கார் வந்து நின்றது.
   
    “இந்த நேரத்தில் யார் காரு…நீ எதுவும் வரச் சொன்னியா வரா… ஆட்டோ போதாதா”என்று கேட்டபடியே மங்கை வெளியே வர
   
   
    “தெரியலையே அண்ணி நான் கார் வரச் சொல்லலையே”என்றபடி வரலக்ஷ்மி அவருக்கு முன்பாக வாசலை விட்டு கீழே இறங்கவும் வர்மன் இரும்பு கேட்டைத் திறந்து கொண்டு “சர்ப்ரைஸ்”என்று முகம் கொள்ளா புன்னகையுடன் துள்ளிக்குதித்து வரவும் வரலக்ஷ்மிக்கு உண்மையிலேயே அத்தனை மகிழ்ச்சி பொங்கியது.
   
    “வர்மா”என்ற அழைப்பிலேயே அத்தனை பாவனை காட்டினார் வரலக்ஷ்மி.
   
    “என்னங்க…நிலா”என்று ஆரவாரமாக அழைத்தவர் மகனைக் கட்டிக் கொண்டு முகம் முழுவதும் சிரிப்புடன் கண்கலங்க நின்றார்.
   
   
    மங்கைக்கு உணர்வே இல்லை முகத்தினில்.
   
    “என்ன அத்தை ஷாக் ஆகிட்டீங்களா…”என்று சிரிப்புடன் கேட்கவும் வேலவன் வெண்ணிலா அவள் குடும்பம் என்று அனைவரும் வெளியே வந்து விட்டனர்.
   
    “ஹ்ஹான் ஹான் ஆமா ஆமா”என்ற மங்கைக்கு பேச்சே எழவில்லை.
   
   
    வெண்ணிலா ஏக்கமும் தவிப்புமாக பார்க்க வேலவன் மகனைக் கட்டிக் கொண்டு “ஏன் தம்பி எளைச்சு போயிட்ட…மருமக ஒழுங்கா பார்க்கவில்லையா உன்னை”என்று கேட்க அதில் அகிலாவின் குடும்பம் சங்கடப்பட்டாலும் அவரது உடல்நிலை மனநிலை கருதி வேறெங்கோ வெறித்தனர்.
   
   
    “சரி சரி உள்ள வாங்க…வரா ஏங்கண்ணு கூட்டிட்டு வா. வெளியே நிக்குதானே பேரன்”என்று விசாலம் தான் சூழலை மாற்றி உள்ளே அழைத்துச் சென்றார்.
   
   
    வெண்ணிலா உள்ளே நகரப் போக அவளை விடாமல் கையைப் பிடித்துக் கொண்டவன் பார்வையால் வருடினான்.
   
   
    “ஷ்ஷ்ஷ் மாமா”என்றபடி அவள் கண்காட்ட தலையசைத்தானே ஒழிய கையை விடவில்லை.
   
   
   
    “நீ போய் பேக் வச்சுட்டு ரெஸ்ட் எடு வர்மா அப்புறம் பேசலாம்”என்று வரலக்ஷ்மி உடனே அவனை அனுப்ப பார்க்க வேலவன் மகனிடம் பேச வேண்டும் என்று நின்றார்.
   
    “நான் இங்கே தான் ப்பா இருப்பேன் ஜெட் லாக் டயர்டா இருக்கு ஒரு டூ ஹவர்ஸ் தூங்கிட்டு வர்றேன்”என்றதும் மனதேயின்றி அவர் நிற்க
   
   
    “சரி ஓகே உங்களுக்காக”என்று அமர்ந்து கொண்டான். ஆனாலும் வெண்ணிலாவின் அருகில் செல்ல முடியாத தவிப்போடு தான் சுற்றும் முற்றும் பார்த்தான்.
   
    “நான் குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்”என்று எழுந்து சென்றாள் வெண்ணிலா.
   
    “அப்போ நாளைக்கு போயிக்கலாம் வரா”என்று மங்கை கிளம்ப பார்க்க
   
    “எங்கே த்த?”என்றான் மேகன்.
   
    “வேலன் செக்கப் வர்மா அதுக்கு தான் கிளம்பினோம்”என்றவர் வேறெதுவும் பேசாமல் நிற்க அதுவே வர்மனுக்கு ஆச்சரியம் தான்.
   
    “சரிங்க ண்ணி நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு போகலாம்”என்று வரலக்ஷ்மி கூறி விட தன் எண்ணம் பலிக்காமல் போனதில் மங்கைக்கு வருத்தம் என்றாலும் எப்படியும் கடனை அவர்கள் தானே அடைக்கப் போகிறார்கள் என்ற அலட்சியமும் இருந்தது.
   
    “ரெஸ்ட் எடு வர்மா நான் அப்புறம் வர்றேன்”என்று மங்கை கிளம்பி விட வரலக்ஷ்மியிடம் உடல் நிலை பற்றி விசாரிக்க துவங்கி விட்டான் மேகவர்மன்.
   
    “நீங்க ஏன் மா இவ்வளவு இளைச்சுப் போய் இருக்கீங்க”என்று கவலையுடன் கேட்ட மகனை கண்ணீர் ததும்ப பார்த்தார் வரலக்ஷ்மி.
   
    “ஒண்ணும் இல்லைப்பா நீ வந்துட்ட இல்ல இனிமே சரி ஆகிடுவேன்”என்று மட்டும் கூறியவருக்கு மகனிடம் எல்லாம் பேச வேண்டும் என்ற ஆவல் உந்தியது.
   
   
    “தம்பி நீங்க ரெஸ்ட் எடுங்க. “என்ற அகிலா வேலவனிடம் திரும்பி”அண்ணா நீங்க மாத்திரை போட்டு இருக்கீங்க தூக்கத்தை கன்ட்ரோல் பண்ணக் கூடாது உடம்புக்கு சேராது.” என்று அவரையும் அனுப்பி வைத்தார்.
   
    வர்மன் எழுந்து கொள்ளவும் “நிலா நீ இந்த டிஃபனை தம்பிக்கு கொண்டு போய் குடு நீயும் அப்படியே இந்த பழத்தை எல்லாம் சாப்பிடு”என்று அவளை அழைத்துக் கொடுக்க வர்மன் தன்னறைக்குள் சென்றிருந்தான்.
   
   
    “அத்தை…”என்று தயங்கிய வெண்ணிலா “மாமா”என இழுக்க
   
    “ப்ப்ச் அவர் வந்தா நான் சொல்றேன் நீ போடா”என்று வரலக்ஷ்மி அவளை அனுப்பி வைத்து விட்டு “நீயும் ரெஸ்ட் அத்தையும் ரெஸ்ட் எடுங்க அகிலா நான் அவரை பார்த்துக்கிறேன்”என்று சொல்லி விட்டு செல்ல வெண்ணிலா வர்மனுக்கான உணவோடு தங்கள் அறை சென்றாள்.
   
   
    கதவைத் திறந்தவளை மெத்தையில் அமர்ந்தபடியே பார்த்திருக்க “ஃப்ரெஷ் ஆகிட்டு வரலாம் ல ஏன் அப்படியே உட்கார்ந்து இருக்கீங்க”என்று கவனமாக உணவை டேபிளில் வைத்து விட்டு அவனருகில் செல்ல சடாரென தன் பக்கம் இழுத்துக் கொண்டான் அவளை.
   
    திடுக்கிட்டவளோ”பார்த்து மேகன். உங்க பேபி பயந்துடும்”என்றாள் நெஞ்சில் கைவைத்தபடி.
   
   
    “ஓஓஓ நீங்க பேபியா மேடம். ஆளைப் பாரு. மனுஷன் எவ்வளவு ஏக்கத்தோட வந்திருக்கான்னு புரியாம”என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க
   
   
    “நான் பேபி இல்லை உங்க பேபி. புரியுதா மிஸ்டர் உராங்குட்டான். உங்க.. ம்ஹூம் நம்ம”எனும் போதே உணர்வுக்குவியலாய் இருந்தவனுக்கு பேசுவதற்கு நாவெழவில்லை.
   
   
    கழுத்து எலும்பு வாங்கிய இதழொற்றல் அப்படியே நிற்க கண்டு அவனை அமர்ந்தவாக்கில் திரும்பிப் பார்த்தாள் வெண்ணிலா.
   
   
    “என்னங்க”என்று அவள் பரிதவிப்பாய் கேட்கவுமே கண்களில் நீர் திரண்டு விட்டது அவனுக்கு.
   
   
    “முகி”என்றவனின் முகபாவனைகள் கோடி பெறும்.
   
   
    லட்சோப லட்ச நியூரான்களின் தூண்டுதல் அவன் வதனத்தில் பிரதிபலித்தது.
   
   
    “என்னாச்சு ங்க”என்றவளுக்கு
    அமைதியை பதிலாய் தந்தவன் மெதுவாய் அவளது மணிவயிற்றில் கரம் பதித்தான். தொடுகை வருடலாய் மாற நிலைகுலைந்த பெண்ணவள் விழிகள் மூடி அந்நொடியை அனுபவித்தாள்.
   
   
    “எனக்கு எனக்கு”என்றவன் “நிஜமாவே எக்ஸ்பிரஸ் பண்ண தெரியலடி. அச்சோ நான் நான் தேங்க் யூ டா நிலாமா”என்று ஆர்ப்பரிப்பாய் அவளை விலக்கி எழுந்தவன் அவளின் இதழ்களில் பதிந்தான்.
   
   
    இத்தனை நாள் பிரிவின் தவிப்பு தன் வாரிசை அவள் சுமக்கும் தருணத்தின் ஆர்ப்பரிப்பு என்று கலவையாய் உணர்வுகளை தாங்கியவனின் இதழொற்றல் இதமாய் இனிதாய் அவளை ஆக்கிரமித்தது.
   
   
    சிறிது இடைவெளி விட்டு அவள் வதனம் கண்டு புன்னகை சிந்தவும் மீண்டும் இதழ் பதிக்கவுமாய் இருந்தவனுக்கு எதுவுமே போதவில்லை.
   
    “என்ன பண்ற உராங்குட்டான் விடு போதும்”என்றாள் சிணுங்கலாக
   
   
    “எனக்கு போதவே இல்லடி”என்றவன் அவள் மேனி மீது கரம் கொண்டு பாதை அமைக்க
   
   
    “இது பத்தி டாக்டர் கிட்ட கேட்டுப்போம் மேகன். இப்போ வேண்டாமே”இறைஞ்சுதலாய் கேட்கவும் “ஆமா அது வேற கேட்கணும் ல இன்னும் ஹாஸ்பிடல் போகலை தானே எப்போ போகணும் நானும் உன்னோடு வரவா”என்றான் ஆர்வமாக.
   
   
    “நீங்க தான் வரணும்”என்றவள் “இனிமே ஆன்சைட் போக வேண்டி இருக்காது தானே”என்றாள் தவிப்பாக.
   
   
    “ஹ்ம்ம் தெரியவில்லை”என்றவன் “உன் கூட நான் இருக்கணும் னு தோணுதா வெண்ணிலா”என்றான் சிரிப்புடன்.
   
    “ஏன் உங்களுக்கு தோணலையா”என்று அவள் முறுக்க
   
    “அதானே கொஞ்சம் லவ்ஸா கேட்டீயேனு நினைச்சு சந்தோஷப்பட்டேன். என் கிட்ட ஆர்கியூ பண்ண உனக்கு மட்டும் தோணிட்டே இருக்குமாடி”என்றான் கிண்டலாக.
   
   
    “அப்புறம் இது ஒரு கேள்வியா. இருக்கிறதால தானே கேட்கிறேன்”என்று சலுகையாக அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள் “ப்ளீஸ் இனிமே போகாதீங்களேன்”என்றாள்.
   
   
    “அப்போ பூவாக்கு என்ன செய்றதாம்”என்று கேலி பேச
   
    “நான் கெஞ்சறேன்னு ஓவரா பேசுறீங்களா”என்று மல்லுக்கு நிற்க வர்மனுக்கு அத்தனை ஆனந்தம் அதில்.
   
    “உன்னோடு தான் இனிமே”என்றவன் “ஆன்சைட் வந்தாலும் வெண்ணிலா இந்த மேகத்தை விட்டு நகராதாம்னு சொல்லி கூட கூட்டிப் போயிடுவேன்”என்றான் புன்னகையுடன்.
   
   
    “ஹ்ம்ம் அது ஃபாதர் ஆன பிறகு தான் அறிவு வேலை செய்யுது. கீப் இட் அப் மேகா”என்றதில் அப்படி ஒரு சிரிப்பு அவனுக்கு.
   
   
    “ப்ப்ச் பேசிட்டே இருந்ததில் டிஃபன் ஆறிடுச்சு. நான் போய் வேற கொண்டு வர்றேன்”என்று கூற
   
    “அதெல்லாம் வேண்டாம். இதுவே சாப்பிடறேன். நீ ஃப்ரூட்ஸ் எடுத்துக்கோ”என்றபடி அவளை அருகில் அமர்த்திக் கொண்டு உணவருந்த மீனா அழைத்திருந்தாள்.
   
   
    சிறிது நேரம் பேசிவிட்டு வைத்ததில் வெண்ணிலாவிற்கு முகமே நாணத்தில் சிவந்து கிடந்தது.
   
    “அவங்க என்ன சொன்னாங்க இவ்வளவு நெர்வஸ் ஆகற நீ முகமே ஒரு மாதிரி ரெட்டிஷா இருக்கு. எதுவும் சண்டை போட்டாங்களா”என்று கேட்க
   
   
    “அச்சோ எதுவும் இல்லை அமைதியாக இருங்க”என்று சிரித்துக் கொண்டாள்.
   
    “அப்படி என்ன சொன்னாங்க இப்படி ப்ளஸ் பண்ற”என்று நெற்றிச் சுருக்க
   
   
    “ஹ்ம்ம் அவங்க கொழுந்தனாரை பட்டினி போட வேண்டாமாம்”என்றாள் சிறு முறைப்புடன்.
   
    “அதான் டிஃபன் தந்துட்டியே”அப்போதும் புரியவில்லை அவனுக்கு.
   
    “அது இல்லை”என்றவள் அடுத்த வார்த்தை கூறாமல் அவன் முகத்தை கூர்நோக்க அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் வாய் விட்டுச் சிரித்தான்.
   
    “அச்சோ சிரிக்காதீங்க”என்று அவன் வாயை மூட அவளின் உள்ளங்கையில் இதழ் பதித்து “அப்போ எனக்கு சாப்பாடு கண்டிப்பாக வேணும்”என்றான் கண்சிமிட்டி.
   
   
    “பேசாம இருங்களேன்”என்றவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.
   
    “பேசாதடா மடையா …செயல்ல”எனும் போதே அவன் வாயை மீண்டும் அடைத்தாள். ஆனால் இந்த முறை கைகளில் அல்ல இதழ்களால்.
   
   
    அவளின் செயலை தனதாக்கியவன் முன்னேறி சென்ற நொடியில் அவள் தன்னை மறக்க இருவருக்குமான உலகம் தனியாக, நெடுநாளைய பிரிவின் தவிப்புக்களும் ஏக்கங்களும் நிலை கொள்ள முடியாமல் விலகிச் சென்றது இருவரின் சங்கமத்தில்.
   
    வார்த்தையற்ற தேடல்கள் கணக்கின்றி விரிய இருவரின் உள்ளக்கிடக்கையும் சத்தமின்றி ஒருவருக்கு ஒருவர் சங்கேத மொழியில் கடத்தப்பட்டது.

ஆடை நெகிழ்ந்த நிலையில் இளைப்பாறிய நிலையில் வேலவன் வெளியே இருந்து கதவைத் தட்டி “வர்மா எழுந்து வாப்பா மருமக வந்தாச்சு” என்று அழைத்தார்

…. தொடரும்