“எப்போ வருவீங்க நீங்க”என்று வெண்ணிலா பேச்சைத் துவங்க 

    

    “சீக்கிரமா…”என்றவனின் விழிகள் அவளை அளந்தது ‌ரசனையாய். 

    

    “என்னவோ டல்லா தெரியற வெண்ணிலா… எதுவும் உடம்புக்கு செய்யுதா அத்தை கிட்ட சொன்னியா”என்று அவன் கேள்விகளை அடுக்க

    

    “அப்படியா… ம்ம் அதெல்லாம் எதுவும் இல்லை ட்ராவலிங் டயர்டா இருக்கும்”என்றவள் “நாளையில் இருந்து காலேஜ் போகணும் நான்”என்றாள். 

    

    “போயிட்டு வா வெண்ணிலா. நிறைய லீவ் வேற போட்டுட்ட அட்டென்டன்ஸ் பாதிக்காது தானே”என்று கவலையுடன் கேட்க

    

    “அதெல்லாம் இல்லை. அங்கே சிச்சுவேஷன் சொல்லி பேசி தானே டைம் வாங்கி இருக்கேன் நாளையில் இருந்து போனா போதும்.”என்றவள் “அடுத்த வருஷம் கரஸ்ல ஏதாவது படிக்கிறேன். இப்போதைக்கு வேலைக்கு போகிற ஐடியா இல்லை”என்றாள். 

    

    “ஏனாம்…பிஜி முடிச்சு வேலைக்கு தான் போவேன் னு சொன்ன…”

    

    “சொன்னேன். பட் இப்போ வேண்டாம் ஒரு ரெண்டு மூணு வருஷம் போகட்டும்”என்றதும் மேகன் புருவம் முடிச்சிட அவளைப் பார்த்தான் குழப்பத்துடன். 

    

    

    “என்ன வெண்ணிலா ஏதோ நினைக்கிற ஆனா சொல்ல மாட்டேன்ற”என்று சரியாய் அவளின் எண்ணத்தை கண்டறிய

    

    

    “நீங்க எப்போ வருவீங்க. அதுக்கு பதில் சொல்லுங்க”என்றாள் வேகமாய். 

    

    “ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு”என்றவனை முறைக்க கலகலவென்று சிரித்தவன் “வெய்ட் பண்ணுடி கொரில்லா குட்டி. வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்”என்றான் வம்புக்கென்றே

    

    

    “உராங்குட்டான்…”என்று முணுமுணுத்தவள் ‘நமக்கே பேபி வரப் போகுது நாம சின்னப்பிள்ளை மாதிரி பட்டபேர் வச்சு கூப்பிடுறோம். இனிமே கரெக்டா இருக்கணும். குட்டீஸ் வந்தா நம்மை பாத்து சிரிக்க கூடாது. இந்த உராங்குட்டான்…ச்சே இந்த மேகன் கிட்ட சொல்லி வைக்கணும்’என மனதில் பேசியவளை கண்ணெடுக்காமல் பார்த்த மேகன் 

    

    “எனக்கு உன்னை மாதிரியே ஒரு நிலாக்குட்டி வேணும் முகி”என்றதும் கண்டு கொண்டானோ என அவள் அதிர்ந்து பார்க்க “அதுக்காகவே சீக்கிரம் வந்திடுறேன்”என்றான் கண்சிமிட்டி. 

    

    “ஹப்பா”என்று ஆசுவாசம் கொண்டவள் சட்டென “எப்போன்னு சொன்னா தான் என்னவாம்”என்று முறுக்கிக் கொண்டாள் 

    

    

    ரசனை ராகம் கொண்டு ஸ்வரம் மீட்டியவனாய் “அவ்வளவு தேடுதா என்னை… வெண்ணிலா என்னைத் தேடறாளா”என்றவன் அடுத்தத்தடுத்து பேசிய தெல்லாம் காதலின் அடுத்த நிலை. 

    

    இருவரின் பேச்சிலும் விழியசைவிலும் செந்தூரம் பூசியது அவர்களின் அறை. 

    

    *********

    

    மங்கை பொடுபொடுவென அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க தர்மதுரை அமைதியாக நாளிதழில் தலையை விட்டு அமர்ந்திருந்தார்.

    

    

    “இதுகளை ப்ளான் பண்ணி ஊருக்கு அனுப்பி வச்சா திரும்ப வந்து உசுரை எடுக்குதுக. அதுலயும் எங்க சின்னம்மா எம்மூஞ்சியில ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்குது. இந்த வரா ஏதோ காணாதத கண்டது மாதிரி கண்ணீரு என்ன சிரிப்பு என்ன அப்பப்பா ஒரு நிமிஷத்துல ஓராயிரம் தடவை மூஞ்சி மாத்துறா”என்று திட்டி முனகிக் கொண்டே இருக்க தர்ம துரை வாயே திறக்கவில்லை 

    

    

    “எவ்வளவு நேக்கா அனுப்பி வெச்சேன். இப்போ என் தம்பி வாயாலேயே இங்க இருங்கனு சொல்ல வச்சுட்டாளே”என்று பொருமித் தள்ளியவர் “இப்புடியே எவ்வளவு நேரம் உட்கார உத்தேசம் போய் சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வாங்க”என்று கணவனையும் அதட்ட தர்மதுரை விட்டால் போதும் என்று வெளியேறி விட்டார்.

    

    ‘இனி எப்படி வட்டி கட்டுவது…அசல் பணத்தையும் சேர்த்து கட்ட வைத்தேனே இப்போது எப்படி என்ன செய்வது நந்தி மாதிரி வந்து தொலைஞ்சுட்டாளே’என்று மனதில் கடுகடுத்தவர் “ஏதாவது செய்யணும் மங்கை”என்று வாய் விட்டே சொன்னார்.

    

    

    பளிச்சென்று அந்த யோசனை மூளையில் உதிக்க “அது தான் சரி வரும்”என்று சொல்லியபடி தனக்கு சாதகமான அவ்விஷயத்தை செயல்படுத்துவது பற்றி யோசிக்கத் துவங்கி விட்டார் மங்கை.

    

    வெண்ணிலாவின் குடும்பம் வந்து நான்கைந்து நாட்கள் ஓடிவிட்டிருந்தது. மங்கை அவ்வபோது வந்தாலும் அதிகமாய் இருப்பதில்லை.

    

    

  அன்று  அனைவரும் மதிய உணவு அருந்தி விட்டு உறக்கத்தில் இருக்க வரலக்ஷ்மி அப்போது தான் வெளியே வந்தார்.

    

    

    மங்கையும் மிகச் சரியாக வெளியே வந்தவர்”வரா ஒரு நிமிஷம் இந்த பக்கம் வந்துட்டு போ”என்று அழைக்க வரலக்ஷ்மி எதார்த்தமாய அங்கே சென்றார்.

    

    “என்ன அண்ணி இன்னைக்கு அந்த பக்கமே வரலை”என்று வினவ

  

    

    “ஒரு வேலையா வெளியே போயிருந்தேன். உன்னை நானே பார்க்க வரணும் னு நினைச்சேன்”என்றவர் “வரா அந்த வட்டிக்காரன் ஃபோன் பண்ணான் எனக்கு”என்றார்.

    

    

    “உங்களுக்கா எதுக்கு?”என்று சந்தேகமாக கேட்க 

    

    “என்னத்த சொல்ல…உன்னால வட்டி ஆளுக கிட்ட பேச முடியாது னு நான் என் நம்பரை குடுத்தேன்”

    

    “அதான் மாசம் ஆனா வட்டி கரெக்டா தர்றேனே அண்ணி”என்றதும் 

    

    “அதெல்லாம் தர்ற தான். ஆனா அவனுக்கு என்ன நெருக்கடியோ முழு பணத்தையும் வேணும் னு நாலு நாளா இம்சை பண்றான்”என்று மெதுவாய் இடியை இறக்க வரலக்ஷ்மி அதிர்ந்து பார்த்தார் மங்கையை.

    

    

    “அவ்வளவு பணம் உடனே எப்படி அண்ணி?. வட்டியே என்னால குடுக்க முடியாம திணறிப் போய் நிக்கிறேன். இன்னும் வர்மனுக்கு பதில் சொல்லணுமேனு இருக்கு.”என்று படபடக்க

    

    

    “இதெல்லாம் நானும் யோசிக்காம இருப்பேனா வரா.”என்றவர் வரலக்ஷ்மியை கூர்ந்து பார்த்தபடி “எனக்கு ஒரு யோசனை தோணுது. சரியானு சொல்லு”என்று கூற

    

    “எதுவா இருந்தாலும் சொல்லுங்க அண்ணி. இப்போதைக்கு இந்த பிரச்சினை தீர்ந்தா போதும் “என்றிட 

    

    “வேலன் பேர்ல வால்பாறையில்  வாங்கின டீ எஸ்டேட் இருக்கே…”என்று துவங்க 

    

    

    “அண்ணி அது அவர் கஷ்டப்பட்டு வாங்கின இடம். விசாலம் அத்தை பாதி பணம் போட்டு இருக்காங்க அதுல. அதுவும் இல்லாமல் இந்த கடனுக்கு அந்த இடம் வித்தா எவ்வளவு போகும். மொத்த டீ எஸ்டேட் கூட இல்லையே அது. ஒரு பங்கு நிலம் அவ்வளவு தானே”என்று வரலக்ஷ்மி ஆதங்கமாய் படபடத்து விட

    

    

    “நீ என்ன வித்து எனக்கா தரப் போற. வேலன் வாங்கின கடனைத் தானே அடைக்கப் போற”என்று கூசாமல் பேசியவரின் மனதில் ஒரு உறுத்தலும் இல்லை.

    

    

    ‘அவ்வளவு தூரம் வளர்த்த எனக்கு ஒரு காணி கூட வாங்கித் தர எண்ணம் அவனுக்கும் வரவில்லை தானே இப்போது வாய்ப்பு வரும் போது நான் ஏன் தடுக்க வேண்டும்’என்று சாதாரணமாக தான் எண்ணிக் கொண்டார் மங்கை. தம்பியின் வளமையும் வளர்ச்சியும் அவருக்கு பெருமிதத்தை உண்டு செய்வதற்கு பதில் பொறாமைத் தீயை தான் வளர்த்து விட்டிருந்தது. விசாலம் கூட‌ வேலவனுக்குத் தானே பணம் கொடுத்தார் தனக்கு இல்லையே என்பதிலும் பெருங்கோபம் அவருக்கு.

    

    

    எல்லாம் சேர்ந்து இப்போது கை வரும் வாய்ப்பை நழுவ விட கூடாது என்ற எண்ணம் முகிழ்த்திருக்க கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தினார் மங்கை.

    

    

    “சரிங்க அண்ணி ஏதாவது யோசிக்கிறேன்”என்ற வரலக்ஷ்மிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

    

    

    “இதுல யோசிக்க ஒண்ணும் இல்லை வரா. வர்மன் கிட்ட தான் இந்த இடம் வாங்கின விஷயத்தையே வேலன் சொல்லலையே. அப்புறம் என்ன இப்போதைக்கு இதுக்கு ஒரு வழி இதுதான்”என்று பேசிக் கரைக்க முயற்சி செய்ய மகன் வந்தால் எல்லாம் சொல்லி விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தார் வரலக்ஷ்மி.

    

    

    “அவர் தான் சொல்லிட்டாரே அண்ணி”என்று மீண்டும் குழப்பமாக கேட்க 

    

    

    “எங்க சொன்னான். வால்பாறையில் இடம் வாங்கறதுனா வேணாம் னு சொல்வான். இப்போ சொல்ல வேண்டாம்க்கா கொஞ்ச நாள் பொறுத்து சொல்லிக்கலாம்னு பேசி அப்புறம் தான் கல்யாண பேச்சு வந்திடுச்சு. பத்திரம் கூட சித்தப்பா கிட்ட தானே இருந்துச்சு. வர்மன் கல்யாணத்துக்கு பிறகு போனப்ப தான் வேலன் கிட்ட சித்தப்பா பத்திரம் தந்தாரு. நீ என்ன செய்ற அதை எடுத்துட்டு வா. அந்த பணத்துக்கு ஈடா அதை தருவோம்.”

    

    “அப்படியே இருந்தாலும் அவர் கையெழுத்து போட்டு தரணும் ல அண்ணி”

    

    “இதான் உன் பிரச்சினையா வேலன் கிட்ட நானே கையெழுத்து வாங்கி தர்றேன்”என்றார் வேகமாக.

    

    என்ன இது இவ்வளவு அவசரப்படுத்துகிறார் என்று சலித்தாலும் மகனுக்கு தொல்லை இல்லாமல் கடன் அடைந்தால் போதும் அந்த கடனும் இடமும் அவனுக்கு தெரியாமலேயே போகட்டும் தெரிந்தால் அவனது திருமணத்திற்கு கடன் வாங்கி விட்டாரே தந்தை என்று வேதனை கொள்வான் என்று எண்ணியவர் இதனையும் மறைக்க முற்பட்டார் வரவக்ஷ்மி.

    

   “சாயங்காலம் போகலாம் வரா. ரெடியா இரு வேலனையும் கூட்டிட்டே போவோம். ஹாஸ்பிடல் கூட்டிப் போறதா சொல்லிக்குவோம். முந்திரிக்கொட்டை மாதிரி அந்த வெண்ணிலா வர்றேன் னு நிற்க போறா. ஏதாவது சொல்லி இங்கேயே இருக்க சொல்லு”என்று வேறு எச்சரிக்கை செய்ய அதற்கும் சரியென்று தலையாட்டினார் வரலக்ஷ்மி.

” மறுபடியும் சொல்றேன் வரா. வெண்ணிலாவுக்கு முன்னாடியே ஏதாவது வேலை சொல்லி வீட்டில் இருக்க வச்சிடு. அப்போதைக்கு நானும் வர்றேன் னு அவ நின்னா நான் திட்டி விட்டுடுவேன். “என்றவர் சட்டென்று குரலின் கடுமையை குறைத்து” அவ வேலனோட உடம்பு சரி ஆகற வரைக்கும் தள்ளி இருக்கிறது தான் எனக்கு நல்லதுன்னு படுது வரா. என்ன ராசியோ கெரகமோ என் தம்பி இப்படி கெடக்கிறான்” என்று வேறு மீண்டும் வரலக்ஷ்மி யின் பயத்தை கிளறி விட்டார். அது நன்றாகவே வேலை செய்ய வரலக்ஷ்மி மீண்டும் பயந்து சரி அண்ணி என்றிருந்தார்.

    

    

    ‘எல்லாம் சரியாக நடக்கிறது. கடனும் அடைந்து என் வீடு கட்டும் கனவும் நிறைவே

றிவிடும்’ என்று எண்ணி மங்கை சந்தோஷிக்க அந்த மகிழ்ச்சியில் மண்ணள்ளி போட்டது வர்மனின் வருகை.