நரசிம்மன் நண்பனின் கையைப் பிடித்துக் கொண்டு நெகிழ்ச்சியாக அமர்ந்திருக்க இரு குடும்பமும் கடந்த கால நினைவுகளை அசை போட்டது.

    

    “எதிர்பார்க்கவே இல்லை நாங்க.ஆமாம் வேதா எப்படி இருக்கா?. கல்யாணம் ஆகிடுச்சாமே?!”என்று ஆவலாய் அகிலா கேட்க 

    

    “ஹ்ம்ம் ஆமாம் அகிலா.  அப்போதைக்கு எங்க  சூழ்நிலை பத்திரிக்கை வைக்க கூட வர முடியாமல் போயிடுச்சு” என்று பெருமூச்செறிந்தவர்,”ரொம்ப நல்லா இருக்கா மாசமா இருக்கா ஏழு மாசம் ஆகுது. அதான் வர்மன் கல்யாணம் முடிச்சு அவளையும் வளைகாப்பு போட்டு கூட்டிட்டு வரலாம்னு இருக்கோம்”என்றார் வரலக்ஷ்மி.

    

    “சந்தோஷம் வரு. பேரன் பேத்தி எடுக்கப் போற. இப்ப தான் குட்டி குட்டியா நின்ன மாதிரி இருக்கு, அதுக்குள்ள தாத்தா பாட்டி ஆக்கிட்டாங்க”என்ற அகிலாவுக்கும் அத்தனை மகிழ்ச்சி.

    

    

    “எங்க வெண்ணிலாவைக் காணல?” கேட்கும் போதே மாடியில் சஞ்சயுடன் பேசிக் கொண்டிருந்த மேகன் கீழே பார்த்தான்.

    

    

    “மேடம் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருக்காங்க. நீங்க வர்றீங்க னு தெரிஞ்சிருந்தா இருக்க வச்சிருப்பேன்.”என்று அகிலா சொல்ல உதட்டை பிதுக்கிக் கொண்டான் மேகன்.

    

    

    

    “கண்டிப்பாக வந்திடனும் சஞ்சய் உன்னை எதிர்பார்த்துட்டே இருப்பேன்”என்றதும் 

    

“ஆமா உங்கத்தை எப்டிடா இங்க வர ஒத்துக்கிட்டாங்க?”என்று சஞ்சய் கேட்கவும் சிரிப்புடன் “அவங்களுக்கு சொன்னா தானே…?!”என்றான் அவனும்.

    

    “அதுசரி”என்றவன் “கண்டிப்பா வந்திடுறேன்டா. சரி பொண்ணு ஃபோட்டோவைக் காட்டுடா”என்க 

    

    “நீ நேரில் வந்து பார்த்துக்கோ”என்று புன்னகைத்தான் மேகன்.

    

    

    மதிய உணவை முடித்து விட்டு தான் கிளம்பினர். அங்கிருக்கும் இன்னும் சில வீடுகளுக்கும் பத்திரிக்கை கொடுத்து விட்டு சென்னைக்கு கிளம்பியிருந்தனர்.

    

    

வரலக்ஷ்மியும் வேலவனும் நரசிம்மனிடம் குடும்பத்தோடு வந்து விட வேண்டும் என்று அத்தனை முறை சொல்லி விட்டு கிளம்ப ‘ம்ம்க்கும் அப்படியே அவ வந்துடுவா’என நினைத்துக் கொண்டான் மேகன். 

    

    அவர்கள் கிளம்பியதுமே சற்று நேரத்தில் நரசிம்மனின் கைபேசி அழைத்தது.

    

    

    “அடடே சொல்லுங்க தரகரே நானே உங்களை கூப்பிட நினைச்சேன்”என்றபடி பேச்சைத் துவங்கிய நரசிம்மன் சைகையிலேயே மனைவியிடம் ‘தரகர் பேசறார்’ என்றார்.

    

    “பேசுங்க “என்று அவரருகில் அகிலா அமர்ந்து கொள்ள, பல ஹ்ம்ம்களை கொட்டிய நரசிம்மன் கடைசியாக “அந்த தேதியிலையா. அன்னைக்கு ஒரு கல்யாணம் இருக்கு அதுக்காக மெட்ராஸ் போகணுமே”என்றார் யோசனையுடன்.

    

    எதிர்முனையில் என்ன சொல்லப்பட்டதோ “ரொம்ப முக்கியமான சிநேகிதன் வீட்டு கல்யாணம். தவிர்க்க முடியாதுங்க. யாரா அட உங்களுக்கு கூட தெரிஞ்சவங்க தான். நம்ம வேலவன் அதாங்க மங்கையர்க்கரசி தம்பி.”என்று விளக்கம் கூறியவர் “அவர் மகனுக்கு கல்யாணம்”என்றார்.

    

    சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைத்த தரகரும் மாப்பிள்ளை வீட்டாரும் அதே திருமணத்திற்கு செல்கிறார்களாம் அங்கே வைத்து பெண்ணை பார்த்து கொள்ளலாமா என்று கேட்கிறார்கள் என்ற தகவலை கூற நரசிம்மருக்கு ஏகபோக மகிழ்ச்சி.

    

    “சந்தோஷம் ங்க அப்படியே செஞ்சுடலாம்”என்று இணைப்பைத் துண்டித்தவர் அகிலாவிடம் விஷயத்தைப் பகிர்ந்தார்.

    

    

    “என்னங்க இது எப்படி அடுத்தவங்க வீட்டு ஃபங்ஷன் ல போய் பொண்ணு பார்க்கிறது எல்லாம்”என்று அவர் தயங்க 

    

    

    “ப்ப்ச் அகி யோசிச்சு பாரேன். நம்ம நிலாவுக்குத் தெரியாம மாப்பிள்ளை கிட்ட காட்டப் போறோம். மேற்கொண்டு விஷயத்தை பேசி முடிக்கற வரை அவளுக்கு சொல்லவும் வேண்டாம் இயல்பா இருப்பா. அதுவும் இல்லாமல் மாப்பிள்ளை பையன் இதுக்காக சென்னையில் இருந்து வால்பாறை வரணும். இது ஒரே வேலையா முடியும் இல்லையா”என சமாதானம் செய்து சம்மதிக்க வைத்துவிட அகிலாவும் சரியென்று கூறினார்.

    

    “நிலா வர்ற வாரம் புதன் கிழமை சென்னைக்கு ஒரு கல்யாணத்துக்கு போறோம். அதுக்கு தகுந்த மாதிரி ரெடி பண்ணிக்கடா”என்று அவளிடம் சொல்லி இருக்க 

    

    அவளோ,”பீச் கூட்டிட்டு போவீங்கன்னா கண்டிப்பாக வர்றேன்”என்றிருந்தாள் மறுக்காமல்.

    

    “அதுக்கென்ன கூட்டிப் போனா போச்சு”என்று நரசிம்மன் சொல்ல 

    

    “ஆமாம் யாருக்கு கல்யாணம் ப்பா”என்றவள் பின் அவளே தொடர்ந்து “ப்ம்ச் யாருக்கா இருந்தா எனன? பீச் போறோம் ல அதான் முக்கியம்”என்று சொல்லி விட்டு போய் விட்டாள்.

சஞ்சய் பெருமூச்சு விட்டவன் “நல்ல வேளைப்பா அவ கிட்ட வர்மன் கல்யாணத்துக்கு போறோம் னு சொல்லலை நீங்க. இல்லாட்டி நான் வரவே மாட்டேன்னு பிடிவாதமா வீட்டில் இருந்திருப்பா”என்றான் 

“ஏன்டா ஏதோ சின்ன வயசுல சண்டை போட்டாங்க இப்பவும் அதேவா நினைச்சுட்டு இருப்பாங்க. அதெல்லாம் வருவாடா”என்ற அகிலா இரவு உணவிற்கு தயார் செய்ய சென்றார்.

“உங்கப் பொண்ணுதானே. நல்லா கூட மறந்து போவா”என்று சலிப்பாக சொல்லிவிட்டு சென்ற சஞ்சய் நண்பனுக்கு அழைப்பு விடுக்க சென்றான்.

    

    ***********

    

    வால்பாறை சென்று வந்ததுமே மங்கை வேலவன் வீட்டிற்கு வந்து விட்டார்.

    

    “ஏன் வேலா உன்னைக் கோயிலுக்கு மட்டும் போயிட்டு வான்னா எதுக்கு அந்தாள் வீட்டுக்கு எல்லாம் போயிட்டு வந்த”என்று வந்ததும் வராததுமாக கத்தினார்.

    

    

    “அக்கா அக்கா அவரு கோவில்ல வச்சு பார்த்துட்டாரு. நம்ம வர்மனை பார்த்ததும் அப்படி ஒரு அழுவை நான் என்ன செய்ய…விடுக்கா இப்பவோ அப்பவோனு கெடக்காங்க.”என்று சமாதானம் செய்ய 

    

    “ஆமாம் அவங்களை நம்பு நீ. நல்லா பவுசா கார்ல போய் இறங்கி நிக்கவும் கூப்டு பேசி இருப்பாரு. இல்லாட்டி வர்றாங்க உங்கூட கொலாவ”என்று அலுத்துக் கொண்டபடி “அந்தாள் கல்யாணத்துக்கு வர்றது எனக்கு கொஞ்சங் கூட பிடிக்கலை. சரி கூப்டுட்ட கல்யாணம் முடிஞ்சதும் மண்டபத்தோட கெளம்பற மாதிரி இருக்கணும். இந்தா வரா நீ பாட்டுக்கு அதுகளை வீட்டுக்கு கூப்பிட போற”என்று எச்சரித்து விட்டு பேச வரலக்ஷ்மி தலையை ஆட்டிக் கொண்டார் அவ்வளவு தான்.

    

    

    “தலையை தலையை ஆட்டறீங்க ஆனா எனக்கு புடிக்காத எல்லாம் செய்றீங்க”என்று கடுப்பாய் மொழிந்து விட்டு எழுந்தாலும் இம்முறை ஏனோ அத்தனை கோபமில்லை அவர் பேச்சில். எதற்காகவோ தன் கோபத்தை இழுத்து பிடிக்கிறார் என்று மட்டும் மேகவர்மனுக்குப் புரிந்தது.

    

    

    “கல்யாணம் நல்லபடியா முடியணுமேனு தான் இதுக்கெல்லாம் சகிச்சு போறேன் வேலா இத்தனை நாளும் இல்லாத சொந்தம் நமக்கு இனிமேட்டும் வேணாம்”என்று அழுத்தமாக கூற சரியென்று தலையாட்டினார் வேலவன்.

    

    

    “பாரு வந்த விஷயத்தையே மறந்து போயிட்டேன் ‌”என்றவர் திருமணத்திற்கு முதல் நாள் வேன் எடுப்பது பற்றி பேசினார்.

    

    “இதெல்லாம் சம்பிரதாயம் தானேக்கா நான் அனுப்பறேன்”என்ற வேலவனிடம் “பொண்ணு வீட்டுக்கு அனுப்பறது சரி வேலா. இன்னொரு வேன் என் ஓரகத்தி ஊருக்கும் அனுப்பணும் அங்கிருந்து வர்றவங்களுக்கு சிரமம் இருக்கக் கூடாது பாரு”என்று கூற மேகவர்மன் வரலஷ்மி இருவரின் முகமும் சடுதியில் இறுகி விட்டது.

    

    “அங்கேயா”என்று திகைத்த வேலனிடம் “இதெல்லாம் மாப்ள வீடு தான் செய்யணும் வேலா. ஏன் என் கல்யாணம் நடக்கும் போது அவங்க அனுப்பலையா”என்று பேசியவரிடம் என்ன சொல்ல… பெண் வீட்டாருக்கு வேன் அனுப்புவதும் பெண் வீட்டின் பாட்டி வீட்டுக்கும் வேன் அனுப்புவதும் ஒன்றாகி விடுமா.

    

    

    வேலன் யோசனையாக இருக்க “என்ன முடியாதா”என்றதில் வேலன் சரியென்று கூறினார்.

    

    ‘அதானே பார்த்தேன் இந்த அப்பாவை ‘என்று மனதில் திட்டத்தான் முடிந்தது மேகவர்மனால்.

    

    

    இப்போதாவது பரவாயில்லை ஏதோ சில விஷயங்களில் தன் கருத்தையும் கூறுகிறார் வேலவன். முன்பெல்லாம் மங்கை எதை சொன்னாலும் தலையாட்டுவது தான் தலையாய கடமை என்பது போல இருப்பார்.

    

    “சரி நான் கிளம்பறேன் வேலா. இன்னும் நாளைக்கு முகூர்த்த கால் ஊணனும் வேலை இருக்கு. இங்கே தான் பண்ணியாச்சே…”என்று கிளம்ப வரலக்ஷ்மி “அண்ணி சாப்பிட்டு போகலாம்.”என்றார் அவசரமாக.

    

    

    “இருக்கட்டும் வரா.வரும் போது சாப்பிட்டு தான் வந்தேன். “என்று கிளம்ப மேகவர்மன் தோளை குலுக்கியபடி அறைக்குள் சென்றான்.

    

    

    இதோ அதோவென திருமண நாளும் நெருங்கி விட்டது.

    

    நரசிம்மன் குடும்பத்தினர் முதல் நாளே சென்னைக்கு வந்து விட்டனர். ஆனால் லாட்ஜில் அறையெடுத்து தங்கி இருந்தனர். திருமணத்திற்கு போய்க் கொள்ளலாம் என்று அந்த முடிவு. அக்கம் பக்கத்தில் எல்லாம் திருமணத்திற்கு அதிகாலையில் வருவதாக சொல்லி இருக்க தாங்கள் முன்பே கிளம்புவதாக அகிலா கூறியிருந்தார். நெருங்கிய நட்பில் மட்டும் வெண்ணிலாவை பெண் பார்க்க வருவதால் முன் கூட்டியே பயணம் என்று கூறினார்.

    

    

    திருமண மண்டபத்திற்கு மதியமே வந்து விட்டான் மேகவர்மன். தன் திருமண வேலைகளை அவனேப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை. 

    

    ‘ப்ப்ச் வால்பாறையில் இருந்திருந்தா என் ஃப்ரெண்ட்ஸே அவ்வளவு வேலையும் செஞ்சிருப்பாங்க இங்கே எல்லாத்துக்கும் தனியா போக வேண்டி இருக்கு’ என்று மனதில் சலித்துக் கொண்டான்.

    

    வேதா பூப்பெய்திய போது அவளின் விஷேஷத்தை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வர்மனின் தோழர்கள் என்று அத்தனை வேலைகளையும் அவர்கள் தான் செய்தனர். அத்தனை ஒற்றுமை இருந்தது அங்கே. இங்கே அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. 

    

    இதையெல்லாம் யோசித்தபடியே அலங்காரத்தை கவனிக்க அவனது கைபேசி இசைத்தது. 

    

    

    “சொல்லுங்க தீபா. அதிசயமா கால் எல்லாம் பண்ணி இருக்கீங்க”என்று சிரிப்புடன் சொல்ல அங்கே கசகசவென்று சத்தம் கேட்டது.

    

    “ஏன் ஒரே சத்தமா இருக்கு. சண்டை போடற மாதிரி”என்றான் சந்தேகமாக 

    

    

    “அதெல்லாம் இல்லை மாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்துட்டீங்களானு கேட்க தான் கூப்பிட்டேன்”என்று மணப்பெண்ணின் தந்தை தான் பேசினார்.

    

    “நீங்களா மாமா நான் தீபான்னு நினைச்சுட்டேன். நான் வந்தாச்சு மாமா”என்றான் அவனும்.

    

    

    “சரிங்க மாப்பிள்ளை இன்னும் ரெண்டு மணி நேரத்துல நாங்களும் கிளம்பிடுவோம்”என்று இணைப்பைத் துண்டித்தார் அவர்.

    

    ‘சண்டை போடற மாதிரி சத்தம் கேட்குது. இவர் அதைப் பத்தி எதுவும் சொல்லலை ‘என்றெண்ணியபடி வேலைகளில் கவனம் வைத்தான்.

    

   சில மணி நேரம் வரைக்கும் அங்குமிங்கும் அலைந்தவன் வேலவன் வரவும் சற்று ஆசுவாசம் அடைந்தான். 

    

    

    “நீ போய் ரெஸ்ட் எடுப்பா இனிமே நாங்க பார்த்துக்கிறோம்”என்று மகனை அனுப்பி வைத்து விட்டு சமையல் கூடத்தை நோக்கிச் சென்றார்.

    

    இன்னும் சற்று நேரத்தில் பெண் வீட்டார் வந்துவிடுவர். இரவு உணவு சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் அங்கே சென்றவர் அத்தனை பளுவிலும் நண்பனின் குடும்பம் வந்தாகி விட்டதா என்று நரசிம்மனுக்கு அழைத்தார்.

    

    

    “நாங்க வந்தாச்சு வேலவா. காலையில் முகூர்த்த நேரத்திற்கு அங்கே இருப்போம்”என்றிருந்தார் நரசிம்மன்.

    

    

    “இதென்ன நரசிம்மா கல்யாணத்துக்கு வந்துட்டு வேற இடத்தில் தங்கறதா. இவ்வளவு பெரிய மண்டபம் பிடிச்சு இருக்கேன். நீங்க முதல்ல ரூமை காலி பண்ணிட்டு இங்க வாங்க”என்று அன்புக் கட்டளை விதிக்க நரசிம்மன் செய்வதறியாது திகைத்தார்.

    

    

    “சரிடா இதோ வர்றோம்”என்று இணைப்பைத் துண்டித்தவர் மனைவியிடம் விஷயத்தை பகிர அகிலா மறுக்க முடியாமல் “சரி போவோம் ங்க”என்றிருந்தார்.

    

    “சஞ்சயும் வெண்ணிலாவும் எங்கே”என்றதும் தான் அகிலாவுக்கு நினைப்பே வந்தது இருவரும் ஷாப்பிங் சென்றிருக்கிறார்கள் என்று.

    

    

    “சஞ்சய்க்கு கால் பண்ணுங்க”என்றதும் நரசிம்மன் அழைப்பு விடுக்க 

    

    அவனோ,”ப்பா நீங்க ரெண்டு பேரும் மண்டபத்திற்கு போங்க நானும் நிலாவும் அங்கே ரீச் ஆகிடுறோம் ‌ எனக்கு இடம் தெரியும் ப்பா எதுவும் பிரச்சினை இல்லை. நாங்க ஷேபா வந்திடுவோம்”என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான்.

    

    அகிலா நரசிம்மன் இருவரும் நேரே மண்டபத்திற்கு சென்று விட வெண்ணிலாவும் சஞ்சயும் ஷாப்பிங் முடித்து விட்டு தான் அங்கிருந்து கிளம்பினர்.

    

    

   “அவ்வளவு பெரிய ஸ்பெஷல் கெஸ்ட் எனக்குத் தெரியாம யாருடா அண்ணா…அப்பா இவ்வளவு பரபரப்பா கிளம்பி போயிருக்காங்க”என்று வெண்ணிலா கேட்க 

    

    “நீயே வந்து பாரேன். சர்ப்ரைஸ் ஆகிடுவ”என்று சஞ்சய் யார் திருமணம் என்று கூறாமல் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று விட்டான்.

    

    …… தொடரும்.