“அக்கா வால்பாறைக்கு போக வேண்டாம் னு சொல்றாங்க வரு “வேலன் முகத்தைச் சுருக்கியபடி சொல்ல வரலட்சுமிக்கு அத்தனை ஆதங்கமாய் இருந்தது. ‘மருமகன் எடுத்து மருமகளே வரப் போகிறாள். ஆனாலும் இந்த அதிகார வலையில் இருந்து நம்மால் மீள முடியவில்லை இனியும் மீள வழி இல்லை’என்று நொந்து கொண்டு “அண்ணி சொன்னா சரியா தான் இருக்கும்”என்றார் வரலட்சுமி. மனைவியின் முகத்தை மெச்சுதலாகப் பார்த்த வேலவன்,”சரிம்மா. நீ போய் வேலை இருந்தா பாரு. வேதா ஃபோன் பண்ணினாளான்னு தெரியலை. நான் பார்க்கிறேன்”என்று கைபேசியை எடுத்துக் கொண்டு எழுந்தார். பெருமூச்சுடன் நகர்ந்த வரலக்ஷ்மி மாலை பலகாரத்திற்கு தயார் செய்தார். மகன் இப்போதெல்லாம் விரைவில் வந்து விடுவதால் புதிதாக மாலையில் சிற்றுண்டி தயாராகிறது. திருமண வேலைகளில் மும்முரமாக இருப்பவனுக்கு இரவு உணவு வேறு தாமதம் ஆகிறது. அதனாலேயே இந்த ஏற்பாடு. “பொண்ணுக்கு நிச்சயத்தன்னைக்கு அஞ்சு சவரன் ல செயினும் ஒரு சவரன் ல கல்லு வச்ச மோதிரமும் வாங்கிடனும் வேலவா”என்று மங்கை சொல்லிய விதத்தில் மனம் தன்னால் தங்கத்தின் விலையை கணக்கிட்டது. சில லட்சங்கள் அதுவே வருமே… இன்னும் நிச்சயதார்த்த ஏற்பாடு உறவினர் வருகை அதற்கு துணிகள் என்று ஏகப்பட்ட செலவு பிறகு திருமண ஏற்பாடுகள் தாலிக்கொடியை முன்பே வாங்கிவிட வேண்டும் என்று மங்கை சொல்லி இருந்தார். அதுவும் பதிமூன்று சவரனாம். அதில் தாலி குண்டு காசு என்று கோர்த்தால் பதினைந்தை தொட்டு விடும் போல. பெண் வீட்டார் என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வியே வராமல், தானே ஒரு என்பதாயிரத்தில் பைக்கும், மாப்பிள்ளைக்கு இரண்டு பவுன் செயினும் அரைபவுனில் மோதிரமும் போட வேண்டும் என்றும் அது போக பொண்ணுக்கு பத்து பவுன் போட வேண்டும் என்றும் சொல்லி தீர்மானித்த மங்கையின் சூட்சும புத்திசாலித்தனம் பெண் வீட்டாரை பெருமிதத்தில் தள்ளாட வைத்தது என்றால், வேலவனை அக்காவின் சேவை மனப்பான்மையை கொண்டாட வைத்தது. லட்சத்தில் சம்பளம் வாங்கும் மணமகனுக்கு இவ்வளவு சல்லிசா பெண் தேடிய மங்கை வெளியே இப்படி பெண்ணெடுத்திருப்பாரா என்றால் அதுதான் இல்லை. அப்போது மணப்பெண் யாரென்று நன்றாக விளங்கியிருக்கும் உங்களுக்கு. மங்கையின் கொழுந்தனார் மகளை தான் மேகவர்மனுக்கு பேசி முடித்து இருக்கிறார் மங்கை. தாமதமான திருமணத்தில் அவருக்கு பிள்ளைப்பேறும் தாமதம் தான். ஆண்பிள்ளை அவருக்கு பதினேழு வயதை இப்போது தான் தொட்டிருக்கிறான் மங்கையின் குலக்கொழுந்து பவேஷ். தம்பி தங்கைக்கெல்லாம் திருமணம் முடித்து கடமையாற்றிய பின்னர் தன் திருமணத்தை தம்பியை வளர்த்த மங்கை வரனாக வரவும் தன் குடும்பத்தையும் தூணாக தாங்குவார் என்று எண்ணி அவரோடஉ நடத்திக் கொண்டார் சுவாமிநாதன். மங்கை தூணாக தாங்கினாரோ இல்லையோ உங்கண்ணன் இத்தனை செய்து திருமணம் செய்து வைத்தார் தொழில் துவங்கி கொடுத்தார் என்று தன் நாத்தனார் கொழுந்தனாரிடம் சொல்லிச் சொல்லியே அவர்களை தன் கீழ் வைத்து ஆட்சி செய்தார். அதிகாரத்தை அன்பில் குழைப்பது போல குழைத்து அதிகாரத்தை தான் காட்டினார். ஆனால் அதைக் கண்டறியும் சூட்சுமத்தை அவர்கள் தான் தெரிந்து கொள்ளவில்லை. அண்ணி செய்தால் எதுவும் சரியாக தான் இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு பழக்கி இருந்தார் மங்கை. மங்கை கூறிய வரன் என்று சம்மதித்தாலும் மேகவர்மனை மறுக்க பெண் வீட்டாருக்கு காரணம் எதுவும் இருக்கவில்லை. அதனாலேயே உடனேயே திருமண ஏற்பாடுகள் நடந்தேறியது. மேகவர்மனுக்குமே வர்ஷினியை மறுக்க காரணம் எதுவும் இல்லை. அழகான பெண், பி.காம் படித்து இருக்கிறாள். வேலைக்குச் செல்லவில்லை. அவ்வபோது சில விஷேஷ நிகழ்வுகளில் பார்த்தும் இருக்கிறான். மென்மையான சிரிப்புடன் பேசுவாள். சில நேரங்களில் இது பொண்ணு எவ்வளவு ஷாஃப்டா பேசுது. அந்த வால்பாறை வானரம் இருக்கே அது பொண்ணா யப்பா வாயைத் திறந்தா மூடாம பேசுற ரேடியோ அவளை எல்லாம் எவன் கட்டி குப்பை கொட்டப் போறானோ என்று நினைத்து கொள்வான். ********* “என்ன இப்படி சொல்றீங்க சாமி” மங்கை பயத்துடன் கேட்க “உண்மையை சொல்றேன் மாமி. தெய்வம் ஆயிரம் இடத்தில் இருந்தாலும் அதது பிறப்பிடத்தில் இருக்கற உங்க குலத்தை காக்கிற தெய்வத்திற்கு பவர் அதிகம் தான். அதை ஒதுக்கி விட்டு செய்றாப்போல இருக்கு உங்க செய்கை. அதனால எதையும் நினைக்காம உங்க குலதெய்வத்துக்கு ஒரு அபிசேகம் செய்துட்டு பத்திரிக்கை படைச்சுட்டு வாங்கோ.எல்லாம் நல்லதே நடக்கும்.”என்றார். மங்கைக்கு அந்த குருக்கள் மீது அளவுகடந்த நம்பிக்கை. குழந்தைப்பேறு தாமதம் ஆனதில் செவ்வாய் வெள்ளி கோவிலுக்கு வரும் மங்கை அழுது கொண்டே இருக்கவும் கற்பகாம்பாள் கோவிலுக்கு போயிட்டு வாங்கோ ரெண்டொரு மாதத்தில் நல்ல செய்தி கிடைக்கும் என்றது சொல் மாறாமல் பலித்திட அதில் இருந்து ஆஸ்தான குருக்கள் ஆகிவிட்டார் அவர். அவர் எதாவது ஒரு செய்தி கூறினால் சரியாக இருக்கும் என்று நம்புவார் மங்கை. இப்போது மேகவர்மன் திருமண பத்திரிக்கை குலதெய்வ கோவிலில் படைக்க வேண்டும் என்று கூறவும் தன் கோபம் பகை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு தம்பி குடும்பத்தோடு கிளம்பி விட்டவர் கிளம்பும் நேரத்தில் மாதவிடாய் வந்து தான் இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் நல்ல நாளில் பத்திரிக்கை படைத்து விட்டு வாங்க என்று ஆயிரம் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். ******** மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் வால்பாறை தொடர்ந்து காணப்படும் மலைகளும் குளிரும் சொந்த ஊர் வந்து விட்டோம் என்று பறைசாற்றியது. முகத்தில் அறைந்த சில்லிப்பும் சிறு கீற்றாய் வெயிலும் மேகவர்மனை சிலிர்க்க வைத்தது. “ப்பா எவ்வளவு நாள் ஆகிடுச்சுல்ல ம்மா”என்று சிலாகித்தபோது வரலக்ஷ்மி மென்மையாக சிரித்துக் கொண்டார். “சீக்கிரம் வாப்பா. கோவிலுக்கு போயிட்டு அப்புறம் பொறுமையா ரசிப்போம்”என்று மகனை அழைத்தபடி நடந்தார் வேலவன். “இந்த அஞ்சு வருஷத்தில் எவ்வளவு மாற்றம்… கடைகள் கூட ஒண்ணு ரெண்டு அதிகமா இருக்கிற மாதிரி தெரியுது”என்று பேசிக் கொண்டே நடந்தவர்கள் கோவிலை சமீபித்திருந்தனர். ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததால் கோவில் பூசாரி அவர்களுக்காக காத்திருக்க பத்திரிக்கை படைத்து பூஜையை முடித்து விட்டு கிளம்பினர். “நல்லா திருப்தியா சாமி கும்பிட்டாச்சு. ஏங்க வந்தது வந்துட்டோம். நம்ம சிவசாமி மாமா வீட்டுக்கு மட்டும் போயிட்டு வருவோமே.”என்று மனைவி கேட்டதும் முகம் சற்று வாடித்தான் போனதே வேலவனுக்கு. அவருக்குமே ஆசையிருந்தது தன் அப்பாவோடு உடன் பிறந்த தம்பி வீட்டை அழைக்க ஆனால் மங்கைக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. நாம் சிறு பிள்ளையாக இருந்தபோது அவர்கள் அரவணைக்க வில்லை என்று குற்றம் சாட்டி ஒதுக்கி வைத்தார். ஆனால் வேலவன் பள்ளி செல்கையில் கல்லூரி செல்கையில் எல்லாம் அவரின் சித்தப்பா காத்திருந்து எதாவது பேசிவிட்டு தான் செல்வார். பேசும்போதெல்லாம் வீட்டிற்கு அழைப்பார். “எங்களுக்கு மட்டும் யாருய்யா இருக்கா”என்று சித்தப்பாவின் உருகும் குரல் இன்றளவும் வேலவன் காதில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. அக்காவின் பேச்சையும் மீன் முடியாது. போகவும் ஆசை. ஒரு வழியாக மனைவி மகன் முகம் பார்த்து ஒப்புக் கொண்டவர் ஊருக்குள் செல்ல சம்மதித்தார். “ஒரு ஃபோன் கூட செய்யாமல் போறோம். “புலம்பிக் கொண்டே வந்தாலும் வரலக்ஷ்மிக்கு அத்தனை ஆவல் சொந்தங்களைப் பார்ப்பதில். என்றோ எப்போதோ ஏதாவது விஷேஷத்தில் பார்த்தாலும் ‘மருமகளே’ என்று அழைக்கும் அந்த பாந்தத்தில் வீழ்ந்து தான் போனார் வரலக்ஷ்மி. வேலவன் தடுமாறி சென்றாலும் வரவேற்ற வர்களுக்கு தடுமாற்றம் இல்லை. ஆனந்த அதிர்வுடன் வரவேற்றனர் அந்த முதிய தம்பதி. “எய்யா இப்படி சொல்லாம கொள்ளாமல் வச்சிருக்கீங்க. பொண்ணும் மெட்ராசே தானா…சரி சரி பேரன காதுகுத்தையில பாத்தது. கலியாணத்துலதான பாக்கணும்னு அமுசம் போலருக்கு. அம்மணி அந்த துன்னூரை கொண்டா.”என்று ஆர்பரித்தார் வேலவனின் சித்தப்பா. மங்கை என்ற ஒருவரை தற்காலிக ஞாபகமறதியில் இணைத்து விட்டு சொந்தத்தோடு இணங்கிப் போயிருந்தார் வேலவன். கிளம்புவோம் என்று எத்தனிக்கையில் மழைத் தூறல் போட்டு அப்படியே வலுத்தது. “அக்கா சாமி கும்பிட்டு முடிக்கவுமே மழை ஆரம்பிச்சிடுச்சு”என்று வேலவன் சொல்லவுமே வசவு மழையைத் துவங்கி விட்டார் மங்கை. “இதுக்குத் தான் அங்கே வேணாம்னேன் இந்த சாமி சொன்னதால அனுப்பி வச்சு இப்ப பாரு. ஊருக்குள்ள போவ வேணாம். நேரா நீங்க ஏதாவது ஓட்டல்ல ரூம் எடுத்து தங்குங்க”என்றார் கட்டளையாக “அக்கா அது வந்து”என்று இழுக்கும் போதே அவருக்கு புரிந்தது ஏதோ தம்பி செய்து விட்டான் என்று “என்ன வேலா இழுக்குற”என்றதில் சித்தப்பா வீட்டிற்கு வந்ததை மறைக்காமல் கூறிவிட்டார் வேலன். சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரின் சித்தி கைபேசியை வாங்கி “ஏங்கண்ணு மங்கா எப்படி இருக்குறீங்…உன்ர சின்னய்யா தானுங்களே அம்மணி பெறவென்ன கோவம். ஊட்டுக்கு வான்னு நான்தானுங்கம்மணி கூப்டேன்”என்று சொல்ல வேறெதுவும் பேசிடாமல் “சரி சரி பாத்து மழை நிக்கவும் அனுப்பி வைங்க”என்று இணைப்பைத் துண்டித்தார். “இதுக்குப்போய் இம்புட்டு அஞ்சுதீங்க. அம்மணி ஒண்ணுஞ்சொல்லல. வா வேலு ராத்திரி பலகாரத்தை எடுத்து வைக்கேன்”என்று உள்ளே போனார் சித்தி. “ம்ம்க்கும் போய்தான் இருக்கு இப்ப எதுவும் சொல்லாம இருந்தா பேசாமலா இருப்பாங்க”என்று முனகிக் கொண்டார் வரலக்ஷ்மி. “பேராண்டி மேல உன்ர அண்ணன் ரூம்பு இருக்குதுங். அதுல தங்கிக்கலாம் நல்ல காத்தோட்டமா இருக்கும்”என்று வழிகாட்ட மேகவர்மன் புன்னகை மாறாமல் மேலே சென்றான். அவன் மனதெல்லாம் தோழனிடம் இருந்தது. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் அவனுக்கு மட்டுமாவது பத்திரிக்கை தந்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். கூடவே அவளின் நினைவும் சம்மன் இல்லாமல் ஆஜரானது. இப்ப எப்படி இருக்கும் அந்த அராத்து. இன்னும் அதே கோபத்தோட இருப்பாளா என்று நினைத்து சிரித்துக் கொண்டான். நிஜமும் அதுதான். அவள் அதே கோபத்தில் தான் இருந்தாள். மேகவர்மன் என்று பெயரைக் கேட்டாலே அந்த மேக்னட் மண்டையன் பேரைக் கேட்டாலே கடுப்பாகுது. யாராச்சும் பேசினீங்க என்று கோபமாய் குதிப்பாள். “ப்பா வந்ததும் வந்துட்டோம் சஞ்சய் வீட்டுக்கு மட்டும் இன்விடேஷன் தரலாம்ப்பா அவனைப் பார்த்தே வருஷம் ஆகிடுச்சு”என்று மகன் ஆவலாய் கேட்டதில் மறுக்க முடியாமல் தானும் கிளம்பினார் வேலவன். “நானுமே நரசிம்மன் கிட்ட பேசணும் தம்பி”என்று கிளம்பி இருக்க வரலக்ஷ்மி சேர்ந்தே போகலாம் என்றதில் காலை உணவை முடித்துக் கொண்டு நரசிம்மன் வீட்டிற்கு கிளம்பினர். அங்கேயோ “ம்மா நான் ஈவ்னிங் தான் வருவேன் அதுவரைக்கும் நோ ஃபோன் கால்ஸ் ஓகே.டுடே மை டே ஸோ டோன்ட் டிஸ்டர்ப் மீ”என்று அகிலாவைக் கொஞ்சி அனுமதி வாங்கி விட்டு தோழியின் வீட்டிற்கு கிளம்பி இருந்தாள் வெண்ணிலா. ….. தொடரும்