“என்னை ஏன்டா கடுப்பேத்தறீங்க…” என்று குற்றவாளிகளிடம் உறுமியவன், “எங்கே நானும் தான் இங்கே வந்திருக்கேன். தைரியம் இருந்தா என்னைப் போட்டோ எடுங்க பார்க்கலாம்” என்று சொன்னான்.

உடனேயே, “ஓ கூட ஒரு பொண்ணிருந்தா தான் உங்க கேமரா வேலை செய்யுமோ?” என்று நக்கலாகக் கேட்டவன், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், சட்டென்று வேக எட்டுக்களில் சௌதாமினியை நெருங்கி தன் வலது கையால் அவளது வலது கரத்தைப் பற்றி ஒரு சுழற்று சுழற்றி தன்னருகே தன் கை வளைவில் நிற்க வைத்திருந்தான்.

அதில் அவள் திருதிருக்க, அவனுடைய அசிஸ்டண்ட்ஸ் பிரசாந்த், ஓவியா இருவரும் விழிகள் தெறிக்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“இங்கே என்ன பார்வை… சீக்கிரம் எல்லா ஆதாரத்தையும் கலெக்ட் பண்ணுங்க…” என்று அவர்களிடம் உறுமியவன், அந்த பிரௌஸிங் சென்டரை நடத்தும் இளைஞர்களிடமும் திரும்பி “இப்போ எடுங்க டா… போட்டோவையும், வீடியோவையும்…” என்றான் பல்கலைக் கடித்துக் கொண்டு.

அவர்கள் பாவமாகப் பார்த்துக் கொண்டிருக்க, “என்ன செய்யறீங்க?” என்றாள் சௌதாமினி பல்லைக் கடித்துக் கொண்டு.

“இவனுங்க சரியான பிராடுங்க சௌதி. அதான் டெமோ காட்டிட்டு இருக்கேன்”

“அதுக்கு நான் தான் கிடைச்சேனா? மரியாதையா என்னை விடுங்க” என்றாள் அதட்டலாக.

“ஸ்ஸ்ஸ்… போலீஸுக்கு கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணுமா. என்னத்த பப்ளிக்கோ… கொஞ்சம் கூட பொறுப்பில்லை” என்று அவன் சலித்துக் கொள்ள, அவனது பதிலில் கோபம் பொங்க அவனை முறைத்தாள்.

“ஏய்! சும்மா அவனுங்களை மிரட்டத் தான்… நான் என்னவோ வேணும்ன்னே உன் கையை பிடிச்சு இழுத்த மாதிரியும், கிட்ட நிக்க வெச்சு ரசிக்கிற மாதிரியும் இந்த முறை முறைக்கிற…”

“வேணாம் என் கோபத்தை கிளறாதீங்க…”

“ஸ்ஸ்ஸ்… ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இரு சௌதி. என்னை பாரு அதிகமா உன்னை உரசக் கூட இல்லை. அவனுங்களை மிரட்டிட்டு விட்டுடறேன்” என்று சமத்தாகச் சொன்னான்.

இந்த அழகில் நின்று கொண்டுதான் குற்றவாளிகளை மிரட்டுவானா என்று சௌதாமினிக்கு ஆத்திரம் கனன்றதில், “ஏன் என் மானத்தை வாங்கறீங்க. இங்கே எத்தனை பேரு இருக்காங்க எல்லாரும் என்ன நினைப்பாங்க…” என்று கீழ்க்குரலில் அதட்டினாள்.

“ஓ… இவங்க எல்லாம் எதுவும் நினைச்சுப்பாங்க தானே!” என்றவன் வசந்தனை ஒரு பார்வை பார்த்து, “ஆமா ஆமா உன் தம்பி வேற கண்ணு வெளிய தெறிச்சு விழறது போல பார்க்கிறான். போயி அவங்கம்மா கிட்டச் சொல்ல வாய்ப்பிருக்கா…” என்று தீவிரமாகக் கேட்க,

“வாயில நல்லா வந்திடும் பார்த்துக்கங்க…” என அவனை தன்னிலிருந்து அவள் வேகமாக பிரித்துவிட, அவனே சிறு சிரிப்போடு அவளை விட்டு விலகி நின்று கொண்டான்.

அப்பொழுதும் கிசுகிசுப்பாக, “வாயில வந்தா அது வாந்தி. அதுவும் இப்ப வரணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. எப்படியும் நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு, அப்பறம் நம்ம கல்யாணம் நடந்து… அதுக்கு ஒரு ரெண்டு மாசம் ஆயிடும். அதுக்கப்பறம் வாந்தி எடுக்க ஒரு ரெண்டு மாசம்… ஹ்ம்ம் இன்னும் மினிமம் நாலு மாசம் தேவைப்படும்” என்று தீவிரமாகச் சொல்ல, அவளுக்கு வந்த ஆத்திரத்தில்,

அவளது தம்பியின் புறம் வேகமாகத் திரும்பி, அவனது தலையில் கொட்டி, “எல்லாம் நீ இழுத்து வெச்ச வம்பால…” என்று கீழ்க்குரலில் கடிந்து கொண்டாள். வசந்தனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இங்கே மாமா இருப்பதும் விளங்கவில்லை. அவர் அக்காவிடம் வம்பு செய்ததும் விளங்கவில்லை. இப்பொழுது அக்கா தன்னை ஏன் அடிக்கிறாள் என்றும் விளங்கவில்லை.

வசந்தன் திருதிருக்க, “ம்ப்ச் அவனை ஏன் அடிக்கிற சௌதி… அவனே பாவம்… அதோட அவன் எனக்கு எவ்வளவு உதவி செஞ்சிருக்கான் தெரியுமா?” என்று அவனது தோளில் கைபோட்டு தட்டிக் கொடுத்தவன்,

பிரௌஸிங் சென்டர் ஆட்களைப் பார்த்து, “உங்க வண்டவாளமெல்லாம் எப்படி தண்டவாளம் ஏறிச்சுன்னு இப்ப உங்களுக்கு புரிஞ்சுதா? இவன் என்னோட மாமா மகன். இவன் தான் என் ஐடியா படி அவன் பிரண்டை இங்கே கூட்டிட்டு வந்து, உங்ககிட்ட மாட்டற மாதிரி நடிச்சு… உங்க மிரட்டலுக்கு பயந்த மாதிரி பணம், நகை எல்லாம் கொடுத்தான். அதுக்கான எல்லா ஆதாரமும் எங்ககிட்ட இருக்கு. இன்னும் நீங்க செஞ்ச கோல்மால் எல்லாத்தையும் ஒரு மாசமா எங்க டீம் கண்காணிச்சிட்டே தான் இருக்கு. உங்களுக்கு எதிரா நிறைய ஆதரங்களை வலுவா சேகரிச்சு பிறகுதான் உங்களை வலை போட்டு தூக்கியிருக்கோம். இனி நீங்க தப்பிக்கவே முடியாது… உங்களை மாதிரி பிளாக் மெயில் பண்ணற ஆசாமிகளை எல்லாம் ஊரறிய காட்டணும் டா. ஸ்கூல் பிள்ளைங்க, காலேஜ் பிள்ளைங்க கிட்ட எத்தனை சேட்டை செஞ்சிருக்கீங்க? உங்களால அவங்களுக்கு எத்தனை மனவுளைச்சல். உங்களை சும்மா விடலாமா?” என்று தாடையை வலக்கையால் தடவியபடி நிதானமாகக் கேட்க, அவர்கள் அரண்டு விழித்தனர்.

தெரியாம செஞ்சிட்டோம் என்று கூடச் சொல்ல முடியாதபடி வாங்கிய அடி பலமாக இருக்க, “இனி ஒழுங்கா இருக்கோம் சார்…” என்றனர் பரிதாபமாக.

“கண்டிப்பா… கண்டிப்பா… உங்க தண்டனை காலம் முடிஞ்சதும் நீங்க ஒழுங்கா இருக்கணும். அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்” என்று அவன் சொன்னதைக் கேட்டதும் அவர்களது விழிகள் அச்சத்தில் விரிந்தது.

வசந்தனுக்கோ இங்க என்னடா நடக்குது மொமண்ட். மாமா சொல்லி நான் இங்கே வந்தேனா? இது எப்போ நடந்தது? என்று ஒன்றும் புரியவில்லை.

ஓவியா, “சார் மொத்த டேட்டாவும் செக் பண்ணியாச்சு. ரெண்டு பேர் கிட்டேயும் நாலு மொபைல் போன்ஸ், எட்டு சிம் கார்ட், ரெண்டு லேப்டாப்ஸ் இருக்கு. பிரௌஸிங் சென்டர்ல இருக்க கம்பியூட்டர்ல எல்லாம் எதையும் ஸ்டோர் பண்ணி வைக்கலை. அப்பறம் சில போட்டோஸ் அண்ட் வீடியோஸ் கிளவுட்ல அப்லோட் பண்ணியிருக்காங்க. எல்லா ஆதாரமும் பக்கா கிளியர் சார்” என்றவள், சௌதாமினியையும், வசந்தனையும் ஒரு பார்வை பார்த்தபடி, “பிரஸுக்கு சொல்லிடலாமா?” என்று கேட்க,

“குட் ஜாப்” என்று அதிசயமாகப் புகழ்ந்தவன், “இவங்களை வழியனுப்பிட்டு வரேன். நீங்க பிரஸுக்கு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு, மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.

பிரசாந்த் அதிர்ந்து நின்றவளிடம், “என்ன ஓவியா?” என்று கேட்க, “சார் குட் ஜாப்ன்னு சொல்லி பாராட்டினாரு டா” என்றாள் பிரமிப்பாக.

அவனோ சிரிப்போடு, “கண்டுக்காத விடு. கூடிய சீக்கிரம் கல்யாண சாப்பாடு சாப்பிடலாம் போல… ம்ப்ச் மேடம் கிட்டத் தான் பேச முடியலை” என்றான் வருத்தத்துடன்.

“எதுக்கு தாஜா பண்ணி வைக்கிறதுக்கா…” என அவள் சிரிக்க, “ஏன் நீ பண்ண மாட்டியாக்கும்…” என்று அவளது காலை வாரினான் பிரசாந்த்.

அதற்கு சிரித்தபடியே, “சரி விடு அமைச்சரே… தொழில் முக்கியம்… வேலையை கவனிப்போம்” என்று ஜகா வாங்கினாள் ஓவியா. அதன்பிறகு மேலிடத்திற்குத் தகவல் சொல்வது, பிரஸிற்கு தகவல் தருவது என்று அவர்களது வேலைகள் பிஸியானது.

சர்வேஸ்வரன் அவர்களைக் கீழே அழைத்து வந்தவன், “கிளம்புங்க மீதியை மெதுவா பேசிக்கலாம்” என்று அவர்களை வழியனுப்ப எத்தனிக்க,

“இப்ப எதுக்கு இத்தனை பொய்? இவன் உங்களுக்கு உதவி செய்ய அப்படிச் செய்தானா? இதை நம்ப நான் என்ன காது குத்தி இருக்கேனா?” என்று கடிய,

வசந்தனுக்கு கேட்காத குரலில், “அதெப்படி சௌதி கோபத்தை கூட சமத்தா, அமைதியா காட்டற? கொஞ்சம் கூட சத்தமே வெளிய வர மாட்டீங்குது. செம ஸ்கில்…” என்றான் ரசனையாய்.

“நான் என்ன கேட்கிறேன். நீங்க என்ன பேசறீங்க?” என்று கண்ணை உருட்டி மிரட்டினாள்.

“ஹே நான் என்ன இவன் எத்தனை அலும்பு செய்யறான்னு உன்கிட்ட சொல்லவே இல்லையா? சரி தெரிஞ்ச விஷயத்தை சொல்லுவோம்ன்னு வந்தா… என்னைப் பார்த்தலே ஓடி ஒளிஞ்சுக்கிற” என்று சொன்னவனை இடை நிறுத்தி,

“யாரு ஓடி ஒளிஞ்சா? நான் எல்லாம் யாரைப் பார்த்தும் ஓடவும் இல்லை… ஒளியவும் இல்லை” என்றாள் ரோஷமாக.

“ஓஹோ அப்படியா… சரி சரி அப்பறம் ஏன் என் போனை கூட எடுக்கலை” என்று நக்கலாக கேட்டான்.

“எனக்கு எத்தனையோ வேலை இருக்கும்” என்றாள் அவளும் அசட்டையாக.

“எது தையா தக்கான்னு குதிப்பியே அதுவா?” என்று சொல்லி அவளை வெறுப்பேற்றினான்.

அவள் முறைக்கவும், “உன்கூட நாள் முழுக்க சண்டை போடவும் எனக்கு சந்தோசம் தான். அதுவும் இன்னைக்கு கண்ணுக்குக் குளிர்ச்சியா வேற இருக்க. சின்ன பிள்ளைங்க மாதிரி உருண்டு, பிரண்டு சண்டை போட கூட நான் தயாரா தான் இருக்கேன். ஆனா, பாரு இங்கே கொஞ்ச நேரத்துல பிரஸ் பீப்பிள் எல்லாம் வந்திடுவாங்க. என்னை கடமை அழைக்குது. நான் என்ன செய்ய?” என்று விளையாட்டாகக் கண்சிமிட்டி கேட்டவனிடம், எதையும் வெளிப்படுத்த முடியா இயலாமையோடு நன்கு முறைத்துவிட்டு அங்கிருந்து காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

வசந்தன் மட்டும் சர்வேஸ்வரனை வேகமாக நெருங்கி, “உங்க உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன் மாமா…” என்று உணர்வுப்பூர்வமாகச் சொல்ல, அதற்குள் காரின் ஹாரனை அலற விட்டிருந்தாள் சௌதாமினி.

“இனி இதுபோல நடந்ததுன்னு தெரிஞ்சது… உள்ளே அவனுங்க வாங்கின அடியை பார்த்திருப்பன்னு நினைக்கிறேன்” என்று மிரட்டலாக சர்வா சொல்ல,

“மாமா கண்டிப்பா இனி ரொம்ப சமத்தா இருப்பேன்” என்று பணிவாகச் சொன்னவன், மீண்டுமொருமுறை ஹாரன் சத்தம் கேட்கவும், “சரி மாமா நீங்க பாருங்க. நான் நைட் உங்களுக்குக் கால் பண்ணறேன்” என்றதோடு அவசரமாக காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.

அவன் ஏறும் போது, சிறு சிரிப்போடு சௌதாமினிக்கு தலையாட்டி சர்வா விடைகொடுக்க, அவளோ வெடுக்கெனத் தலையை திருப்பிக்கொண்டு வாகனத்தைக் கிளப்பியிருந்தாள். அவளின் அந்த செய்கையையும் சிரிப்போடே பார்த்துக் கொண்டிருந்தான் சர்வேஸ்வரன்.