அத்தியாயம்: 31

சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தாள் எழிலரசி. கணவன் நான் இல்லன்னா பூவாக்கு என்ன பண்ணுவீங்களாம் என்று கேட்டது வெகுவாகச் சீண்டியிருக்க, நேரங்கிடைக்கும் போதெல்லாம் தாயிடம் திட்டும் கொட்டும் வாங்கி ஓரளவுக்குக் கற்றுக் கொண்டாள். 

சூப்பராக இல்லை என்றாலும் சுமாராக சமைக்கிறாள். மனம் மட்டும் பிசைந்தச் சப்பாத்தி மாவைப்போல் குழம்பிக் கிடக்க, வழக்கம் போல் மாமன் மடி தேடியது. சற்று முன்புதான் பேசிவிட்டு வைத்திருந்தாள். அறுவடை நேரம் என்பதால் முடித்து வருவதாகச் சொல்லியிருந்தான்.

கணவனிடம் காட்ட முடியாதக் கோபத்தைக் கையில் கிடைத்த மாவில் காட்டிக் கொண்டிருந்தாள்.

நாயகன்‌ படத்தில் வருவதுபோல் ‘நீ நல்லவனா கெட்டவனா? என்று தன் நாயகனைக் கேட்கத் தோன்றியது. அதையே நேரடியாக அவள் கேட்டும் இருக்க, வழக்கம்போல் ஏமாற்றத்தையே பரிசளித்திருந்தான் அவளவன்.

இன்று முருகானந்தம் சென்றதும், கிளம்பப் போனவன்முன் வழிமறித்து நின்றிருந்தாள் எழிலரசி.

இதை எதிர்பார்த்தே இருந்தவனும், “சொல்லுங்க கலியுகக் கண்ணகி மேடம்! என்றான் இரசனையாய்க் கண்களைச் சிமிட்டி. 

‘இவன் வேற நேரங்காலந் தெரியாம’ அவனின் செய்கையில் தொலையப் பார்த்த மனதை அவனைத் திட்டி அவள் சமன் படுத்த, 

“அதெப்படி நான் தூங்கினதும் என் கழுத்து காயத்துக்கு களிம்பு பூசிட்டு இங்க என்னை ஆள் வச்சி போட்டுத்தள்ள ஏற்பாடு பண்ற? டிப்பிக்கல் பொண்டாட்டி டி நீ!” சற்றுமுன் அவள் முருகானந்தத்திடம் போட்டுடு என்று சொன்னதை நினைத்துச் சிரித்தான். 

அதைக் கண்டு கொள்ளாதவள், “இவர் பணம் கொடுத்ததால அந்த பையனை நீங்க ரீலீஸ் பண்ணலையா?” என்றாள் ஆர்வமும் எதிர்பார்ப்புமாக. 

சற்றுமுன் முருகானந்தம் ‘நான் போன் பண்ணும்போதே ஷ்யாம் வீட்டுக்கு வந்துடுவான்னுதான் உன் புருஷன் சொன்னான்’ என்று சொன்னது மனதை உறுத்திக் கொண்டிருக்க கேட்டுவிட்டாள். 

கண்கள், ‘இல்லை என்று சொல்லிவிடேன்’ என்ற எதிர்பார்ப்புடன் அவனிடம் கெஞ்ச, அது புரிந்தவன் இதழ்களில் குறுநகை. 

“ஏன் இவர் மட்டும்தான் பணம் கொடுக்கனுமா என்ன?” என்றான் அதே புன்னகை மாறாமல்.

“இல்ல நீங்க பொய் சொல்றீங்க! எதையோ எங்கிட்டருந்து மறைக்கிறீங்க. அவர் ஏன் அவர் பையனை நீங்க மறைச்சி வச்சிருக்கிறதா சொல்றார். உண்மையிலே நீங்க தான் மறைச்சி வச்சிருக்கீங்களா?” அலைப்புறும் விழிகள் மீண்டும் அவனிடம் எதையோ யாசித்தது.

புரிந்தும் புரியாததுபோல், “ரூல்ஸ் மீறக்கூடாது மேடம்!” என்றவன் அவளை மிகநெருங்கி, “அப்புறம் நானும் அத்துமீற வேண்டியது வரும்!” என்றான் சீண்டலாக. அத்துமீற என்ற வார்த்தை மட்டும் தனித்தொனியில் ஒலிக்க, முகம் வெளுத்தாள்.

“வழக்குப் பத்திதானக் கேட்கக் கூடாது. என் புருஷனைப் பத்தி தெரிஞ்சிக்கக் கூடாதுன்னு எதும் ரூல்ஸ் இல்லையே! அதுக்கான கேள்விதான் இது” என்றவள் முகத்தைத் திருப்ப, அவளின் சாமார்த்தியமான பதிலில் சிரித்து விட்டான். 

“புருஷனைப் பத்தி தெரிஞ்சிக்கணும்னா நெருங்கிப் பழகணும் பொண்டாட்டி. ஐ ஹவ் நோ அப்ஜெக்ஷன்!” என்றவன் தோளைக் குலுக்கித் தாராளமாகத் தன் கையை விரிக்கவும், அமைதியாகத் திரும்பி ஒரு பார்வை மட்டுமே பார்த்தாள்.

அதில், ‘இது போலீஸ் ஸ்டேஷன்’ என்ற முறைப்பு இருக்க, 

 “அதைச் சொன்னவர்கிட்டயே நீங்க கேட்டிருக்கலாமே மேடம்!” என்று பதிலடியாய் பன்மைக்குத் தாவினான். அவளுக்கு ஆயாசமாக வந்தது. 

‘ஒரு பதிலையாவது இவனிடமிருந்து வாங்க முடியுதா? கல்லுளி மங்கன்’ மனதிற்குள் வசைபாட, எங்கோ ஒரு மூலையில் அவன் வழக்கில் தடுமாறவில்லை என தன் மனம் நம்பிவிடாதா என்று ஏங்கினாள்.

“அப்போ எதுக்காக அந்தப் பையனை விடச்சொன்னீங்க?அவர் போன் பண்ண முன்னாடியே எல்லா ஏற்பாடும் பண்ணி இருக்கீங்க. உண்மையச் சொல்லுங்க?” என்று அதேக்கேள்வியில் மீண்டும் வந்து நின்றாள்.

இரண்டு நிமிடங்கள் அவளை நிதானமாக ஏறிட்டவன், “காசுக்காக சோரம் போனேன். நீதான் சொன்னியே?” என்று அலட்சியமாகச் சொல்லவும், சட்டென நிமிர்ந்தாள். 

நேரம் பார்த்துத் திருப்பிக் கொடுத்திருந்தான்.

அவள் கேட்ட அதேக்கேள்விதான். ஆனால் அதையே அவன் சொல்லிக் கேட்கும்போது அவளுக்கே ஒருமாதிரியாகி விட்டது. 

ஒரு பெண்ணை அப்படிக் கேட்பது எவ்வளவு அநாகரிகமோ, அதையே ஆணிடம் கேட்பதும் நாகரிகமற்ற செயல் அல்லவா? 

அதில் தவறு செய்த குழந்தையாய் அவன் முகம் ஏறிட அது உணர்ச்சிகளற்றுக் கல்லாய் இறுகிக் கிடந்தது.

அவனைக் காதலித்த மனம், அவன் பொய்த்துப் போனதில் காயப்பட்டுவிட,  அன்று வார்த்தைகளுக்கு விலங்கிட மறந்துவிட்டாள். 

பணியில் சேர்ந்தது முதல் அவள் எடுத்த ஒவ்வோரு வழக்கிலும் அவன் தலையீடு. அதுவும் அன்று போலியாகக் குண்டு வெடிப்பு நடத்தி குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு, குற்றத்தைத் தானே ஒப்புக்கொண்ட ஷ்யாம் சுந்தரை, விசாரிக்கக்கூட விடாமல் வழக்கும் பதியாமல் கூட்டிச் சென்றான். எப்படி நம்புவது? இன்றுவரை அவனது செயல்களுக்கான விளக்கங்களைத் தந்திருக்கானா? 

‘இப்படித்தானே விஜய் விசயத்திலும்…’ அதற்குமேல் நினைக்கப் பிடிக்காதவளாக ஒருமுறை கண்களை இறுக மூடித்திறந்து தன்னைச் சமன் செய்தாள்.

அதில் நீ பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதுபோல் அதுவரை அடமாய் அவன்முன் நின்றவள், தான் உதிர்த்த வார்த்தையின் வீரியத்தில் அடிபட்டக் குழந்தையாய் கலங்கி நிற்க அவனுக்கு பாவமாக இருந்தது. மனைவியை கலங்க விட்டால் அது வெற்றி இல்லையே?

இன்னமும் என்ன கேட்பது எப்படிக் கேட்பதெனத் தெரியாமல் தடுமாறி நின்றிருந்தவளிடம் நெருங்கினான்.

 “பணம் அமைச்சர்தான் குடுக்கணுமா என்ன? அவரோட மாமனார் குடுத்திருக்கக் கூடாதா?” என்றான் கண்சிமிட்டி.

‘இவனைப் போய்த் திட்டிட்டேன்னு வேற கவலைப் பட்டனே!’ வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொள்ள, மனைவி தெளிந்துவிட்டதை உணர்ந்து கொண்டவனிடம் மென் புன்னகை.

“அமைச்சரை விடப் பெரிய பணக்காரர். சின்னப் பேரன் பெத்தப் பெட்டி. தெரியுமா?” என்று அவள் காதில் இரகசியம் சொன்னவன், அவளைத் தெளிவாகக் குழப்பிவிட்டே அங்கிருந்து அகன்றான்.

எப்போதும் சமைத்ததும் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுபவள் இன்று வழக்கமில்லாத வழக்கமாக உணவுமேஜையில் கணவனுக்காகக் காத்திருந்தாள்.

அது தெரிந்தோ என்னவோ அன்று இரவு மணி பத்தை நெருங்கியும் அவன் வரவில்லை.

நேரம் ஆக ஆக தூக்கம் சொக்கியது. ‘இங்கதானே வந்தாகணும்’ வாய்க்குள் வசைபாடி, தனியாகவே உண்டு முடித்தவள், தூங்கிவிடக்கூடாது என்பதற்காகவே தொலைக்காட்சியில் பாடல்களை ஒலிக்கவிட்டுப் படுத்துக் கொண்டாள். வழக்கமாக அவன் தான் இதைச் செய்வான். இரவில் பாடல்கள் கேட்பது அவனது வழக்கம்.

இரவு பதினொன்றை நெருங்கும்போது வந்தவன் உடைமாற்றி உண்டு முடிக்கும்வரை உருண்டு பிரண்டுப் படுத்தபடி தூக்கத்தை விரட்டியடிக்க, ஒருவழியாக அருகில் வந்து படுத்தான் அவளவன்.

எப்படி முதலில் ஆரம்பிப்பது எனத் தடுமாறி அவன் முகத்தைப் முகத்தைப் பார்த்திருக்க, விழிமூடிக் கிடந்தவனின் வசீகரக் குரல் அவள் செவியைத் தீண்டியது. 

தொலைக்காட்சியில் பாடல்கள் ஓடிக்கொண்டிருக்க, கட்டிலில் படுத்தபடி, கூட சேர்ந்து மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருந்தான். அவள் கணவன். 

அவள் மிகவும் இரசிக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று. 

அருகருகே படுத்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் சட்டை செய்ததில்லை. அவரவர் வழியில் முதுகுகாட்டித் திரும்பிக்கொள்வர்.

தூக்கம் வராது அவள் புரண்டு புரண்டு படுக்கும் நாட்களில் தொலைக்காட்சியில் பாடல்களை ஓடவிடுபவன், அப்படியானத் தருணங்களில் கூட சேர்ந்து அவன் பாடுவதும் வெகு அரிதாக நடக்கும். 

கண்ணை மூடித் திரும்பி இருந்தாலும் அவன் குரல் அவள் இதயத்தை தட்டி எழுப்ப மறந்ததில்லை. வெகுவாக இரசிப்பாள்.

அந்த காந்தக்குரலில் தன்னையும் மீறி ஈர்க்கப்படுவதை உணர்ந்தாலும் ஒருநாளும் அவனைத் தடுத்ததில்லை. அப்படியான நேரங்கள் அவள் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. இவன் என் காதலன் என்று அவளுக்கு நினைவூட்டுபவை. அதை எப்படி மறுக்கத் தோன்றும்?

இன்றும் அவன் குரல் மனதைத் தீண்ட, குறுக்கிட மனமின்றி விழிமூடிக்கொண்டாள். அதில் அவன் வந்ததும் கேட்கவேண்டும் என்று காத்திருந்தக் கேள்விகள் மறந்தது. ஏன் இந்த உலகமே மறந்தது.

அதைத்தான் அவனும் எதிர்பார்த்தான் போலும். வந்ததிலிருந்து புழுவைப் போல் நெளிந்துக் கொண்டே கிடந்தவளில் அவள் எண்ணம் புரிந்துவிட, வீண் பேச்சைத் தவிர்ப்பதற்காகவே பாட ஆரம்பித்து விட்டான்.

வழக்குப் பற்றி அவள் ஏதும் கேட்டால் பதில் சொல்ல வேண்டுமே என்ற பயம். அப்படிக் கேட்டால் பொய் சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும். தவிர்க்க நேர்ந்தாலும் விவாதங்கள் வரும். எதுவாக இருந்தாலும் நிச்சயம் காயப்படப்போவது அவள்தான். அது அவனுக்கும் வலிக்குமே!

அன்றைய களரிப் போட்டியின் பின் ஒட்டிக்கொள்ளவில்லையேத் தவிர இருவருக்குள்ளும் சுமூகமான மனநிலையே நீடித்தது.

அதை கெடுத்துக்கொள்ள விருப்பமின்றி இருவரும் விசயத்தை விரும்பியே ஆறப்போட, அவர்களது போறாத நேரம் காதல் பாட்டின் வடிவில் விளையாடியது.

தல அஜீத்தின் பெரும் இரசிகையான அவள் அஜீத் ஹிட்ஸ் என்று தேடி எடுத்து ஒலிக்க விட்டிருந்தாள். 

பாடலோடு சேர்ந்து அவன் குரலில் கரைந்து கொண்டிருந்தவள், தான் இரசிப்பது தெரியக்கூடாது என்பதற்காகவே முகுக்காட்டித் திரும்பிக் கிடக்க, அவன் குரலை மட்டும் கேட்க விரும்பி தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைத்து வைத்தாள். 

அது புரிந்தும் குறும்புன்னகையோடு தொடர்ந்தான் அவன்.

“மூக்குத்தியின்‌ மின்னல் சிறு தீபம் ஏற்றி வைத்துப் போக…  

சொக்குகின்ற வெட்கம் வண்ணக் கோலமொன்று போட…

என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க…” பாடலோடுச் சேர்ந்து கரைந்து கொண்டிருந்தவளின் முகம் அவளையும் அறியாமல் சிவந்தது.

இரவும், குளிர்நிலவும், காதல் ததும்பியப் பாட்டும் புது மணத்தம்பதிகளை தங்களையும் மீறி வேறோரு உலகத்துக்குள் இட்டுச் செல்ல, அதிலும் மாதனின் குரலில் மதிமயங்கிக் கிடந்த மாதவள் கண்ணை மூடிக் கிறங்கிக் கிடந்தாள்.

“முத்தங்களின் ஓசைகளே பூஜை மணி ஆனதே…

செவ்விதழின் ஈரங்களே தீர்த்தம் என்று தோணுதே…”

பாடியவனின் விழிகளோ பாடலோடு மூடியேக் கிடக்க, அதன் வரிகளை அதுவும் தன்னவனின் குரலில் உள்வாங்கியவளோ செங்கொழுந்தாகச் சிவந்து நிற்க, அவனை தடுக்கும் வழிதெரியாது திணறிக் கொண்டிருந்தாள்.

இன்று நடந்தச் சம்பவங்கள் தன்னவன் தடுமாறவில்லை என்று எங்கோ ஒரு மூலையில் ஆழ விதைத்துச் சென்றதோ என்னவோ… அடி மனதின் காதல்வேறு அணைஉடைத்துக் கரை தளும்ப, கொஞ்சம் கொஞ்சமாக அவனது குரலில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள்.

“காலநேரம் என்பது காதலில் இல்லையா…

காமதேவனின் கோயிலில்…” என்ற நொடி உருண்டு வந்து அவன் இதழ் அடைத்தாள். அதற்குமேலும் அவனது குரலைக் கேட்கும் சக்தி அவளிடம் இல்லை.

பட்டென்று அவன் கண் திறக்க, ‘மேலும் பாடாதே ப்ளீஸ்’ அவள் விழிகள் கெஞ்சிற்று.

அவளது கெஞ்சிய அஞ்சனங் கலைந்த விழிகளின் மையலில் தன்னைத் தொலைத்தவன், அவள் மைவிழிக்குள் நர்த்தனமிட, இருஜோடி விழிகளும் ஒருநொடியில் கலந்து நின்றன.

கலக்கத் துடித்த உடல்கள் விலகியேக் கிடக்க விழிகளுக்கு விலங்கிடுவார் யார்?

மன்னவனும் மதிமயங்கினான். தன் இதழ்களுக்கு விலங்கிட்ட விரல்களை அழுந்த பற்றிப் பிடித்தவன், அவள் காந்த விழிகளின் பிடியில் தன்னை மறக்க, கண்மூடி முதல் அச்சாரத்தை அந்த வெண்டை விரல்களில் பதித்து, மீண்டும் மான்விழிக் காண, நிலைகுலைந்தாள் அவள்.

அவன் ஆசைப்பட்டதுபோல் தானே அவனை நெருங்கியதில் கழிவிறக்கம் தோன்ற அவளையும் மீறி கலங்கிவிட்டன கண்கள். அதோடு சிறு பதற்றமும் உருவாக, அவனிடமிருந்த விரல்களை சட்டென உருவவும்தான் சுயம் திரும்பினான் அவளது கணவனும்.

மனையாளின் கலங்கி விட்ட கண்களைப் பார்த்துவிட்டவனுக்கு பெருங்கலக்கம் உண்டாக, தடுமாறி பற்றி இருந்த விரல்களை விட்டவன், உடனேயே எழுந்து அமர்ந்து கொண்டான்.

அமர்ந்த நிலையிலயே பிடறிக்கோதி தன்னைச் சமன் படுத்திக் கொள்ள, அது முடியாமல் போகவும் பெண்ணவளைத் திரும்பியும் பாராமல் எழுந்துச் சென்று கார்த்தியின் அறையில் புகுந்து கொண்டான்.

சில நிமிடங்களில் ஜீப் உறுமும் சத்தம் கேட்டது. கேவிக் கேவி அழுதாள். அவளும் வேண்டுமென்று கையை உருவிக் கொள்ளவில்லை. தன்னையும் மீறி அதைச் செய்திருந்தாள். கணவனது மன நிலையும் புரிந்தது. தன் மீது கொள்ளைக்காதல் வைத்திருப்பவன் இவ்வளவு காத்திருப்பதே வரமன்றோ!

ஆனால் அனைத்தையும் மறந்து தன்னால் ஒன்ற முடியவில்லையே! ‘நான் என்ன செய்வது?’ முதல் முறையாக அவனைத் திருமணம் செய்து அவன் வாழ்க்கையையும் பாழாக்கி விட்டோமோ என்று குமுறினாள்.

எத்தனையோ பிரச்சனைகள் அவர்களுக்குள் தீர்க்கப்படாமல் கிடக்க இதுவேறு புதுப் பிரச்சனையாய் உருவெடுத்திருந்தது.

கேவல்கள் விசும்பல்களாக மாற மன்னிப்பு கேட்பதற்காக வெளிப்புறம் ஓடிச்சென்றாள். அதற்குள் யூனிஃபார்ம் சகிதம் அவனது ஜீப் வெளிக் கேட்டைத் தாண்டி இருந்தது.

வெகுநேரம் மாடியிலயே நடைபோட்டவளின் நடைதளரும்போது நேரம் அதிகாலை மூன்று மணியைத் தொட்டிருந்தது.

அதற்கும்மேல் முடியாது அறைக்குள் நுழைய, அவனில்லாத வெற்று அறையே வரவேற்றது. 

சற்றுமுன் நடந்தது கண்முன் விரிய மீண்டும் கண்கள் கலங்கிக் கொண்டு வர அவனில்லாத அறைக்குள் மீண்டும் நுழையப் பிடிக்கவில்லை.

கீழே தங்கையின் அறைக்குள் நுழைந்து அவளது படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

அன்றுதான் ஊர் திரும்பியிருந்தாள் மிருத்யூஸ்ரீ. பக்கத்துப் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த தங்கையைச் சில நொடிகள் அசையாது பார்த்தவளின் விழிகள் சொக்கியது.

தன்னவனுக்காக இதுவரை தங்கையிடம் எதும் கேட்டுக் கொள்ளவில்லை அவள். அதேநேரத்தில் சாதாரணமாகவும் அவளைக் கடக்க முடியவில்லை. 

தன் வாய் சும்மா இருக்காது எதும் கேட்டு வைத்துவிடும் என்று பயந்தே ஊர்திரும்பியத் தங்கையைக் காணாது தவிர்த்துவிட்டாள்.

எப்போது கண்ணயர்ந்தாளோ திடிரெனக் கேட்ட தங்கையின் அலறலில் பதறி எழுந்தமர்ந்தாள்.

கண்ணைத் திறவாமலே மிருத்யூ என்னென்னவோ சொல்லிக் கத்திக்கொண்டிருக்க, “மிருத்யூ” என அருகில் சென்று கன்னத்தைத் தட்டவும், இவள் உடையைக் கொத்தாகப் பற்றிக்கொண்டு, “அக்கா நெருப்புக்கா.. நெருப்புக்கா” என்று கதறினாள்.

பதறி இவள், மீண்டும் மீண்டும் கன்னத்தைத் தட்டவும் கண் விழித்தவளின் முகம் இரத்தப் பசையை இழந்திருந்தது. அருகிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீட்டவும் மடக் மடக்கென தண்ணீரைக் குடித்தவளின் கரங்கள் இலேசாக நடுங்க அது அவளது இரவு உடையை நனைத்தது.

“ஒன்னும் இல்லடி கெட்ட கனவு. தூங்கு” என்றவள் தங்கையின் அருகில் அமர்ந்து அவளது கரத்தைப் பற்றிக்கொள்ள சிறிதுநேரத்தில் உறங்கிப் போனாள் மிருத்யூ.

அவள் உறங்கும் வரைக் காத்திருந்தவள், தன்னுடைய இடத்தில் படுத்துக் கண்மூட, நெருப்பில் கருகிக் கிடந்த தேஜஸ்வினியின் உருவம் கண்முன் வரவும் படக்கென விழிதிறந்தாள்.

அவளது கால்கள் இரண்டு இரண்டு படிகளாகத் தாவி கார்த்தியின் அறையை அடைய, அவசரம் அவசரமாக அலமாரியைத் திறந்து ஒரு புத்தகத்தினுள் மறைத்து வைத்திருந்த விரலி(பென் ட்ரைவ்)யைத் தேடி எடுத்தாள்.

கணினியை உயிர்ப்பித்து அதில் விரலியைச் சொருகிவிட்டுக் காத்திருந்தவளின் இதயம் தன் துடிப்பை அதிகப்படுத்தி இருந்தது. கணினியில் காட்சிகள் விரிய, அதை விரைவாக ஓடச் செய்தவள் அன்று கல்லூரியைவிட்டு ஷ்யாம் சுந்தர் கிளம்பும் நொடியில் நிறுத்தினாள்.

அவன் கார் கல்லூரியின் வளாகத்தைத் தாண்டவும் அவளது பார்வை உன்னிப்பாகச் சில நிமிட இடைவெளியில் மிருத்யூவின் இருச் சக்கரவாகனம் கல்லூரியை விட்டு வெளியேறவும் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது எழிலரசிக்கு.

இவள் ஏன் அன்று பாதியில் கல்லூரியை விட்டு வெளியேறினாள்? 

அன்று கல்லூரியில் இவளை விசாரித்தபோது போது வெற்றி ஏன் குறுக்கில் வந்துத் தடுத்தான். தங்கை அவன் பெயரைக் குட்டிச்சீயான் என்ற போது வெற்றியின் கண்டனப் பார்வை தங்கையின் மீது படிந்ததைக் கண்டிருந்தாள்.

தேஜஸ்வினி இறந்த அன்றுதானே குளிர் காய்ச்சலில் மிருத்யூவை மருத்துவமனையில் அனுமதித்ததும். அதில் சந்தேகம் கொண்டுதானே அவளும் தங்கைக் கல்லூரியை விட்டுக் கிளம்பிய நேரத்தைப் பார்ப்பதெற்கென ஓடி வந்திருந்தாள். 

கேள்விகள் வண்டாய்க் குடைய கணினிக் காட்சிகள் மனதில் பதியவில்லை. நீர்த்திரையிட்டு மறைக்க மீண்டும் இருவரும் கல்லூரியிலிருந்து வெளிவருவதிலிருந்து ஓடவிட்டாள்.

ஷ்யாம் சுந்தரின் கார் கல்லூரியைவிட்டு வெளியில் சென்றும் வேகம் எடுக்கவில்லை. மிருத்யூவின் வாகனம் கார் அருகே நெருங்க, காரை நிறுத்திவிட்டு வெளியில் வந்தவன் மிருத்யூவின் இருச் சக்கரவாகனத்தை மறித்தபடி நின்றிருந்தான்.

எதுவோ சொல்லி விரல் நீட்டி அவன் மிரட்டுவதும், மிருத்யூ தலையாட்டி மறுப்பதும் பதிவாகியிருந்தது. அடுத்து அவன் மிருத்யூவின் கையைப் பிடித்துக் காருக்குள் இழுக்க மறுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

கோவத்தில் அவன் மீண்டும் மிரட்டிவிட்டு, கார்க் கதவை அறைந்துச் சாத்தியவன், உயர்வேகத்தில் காரைக் கிளப்பிக்கொண்டுப் போனான்.

முகம் கலங்க, அக்கம் பக்கம் பார்த்தபடியே வாகனத்தைக் கிளப்பினாள் அவள் தங்கை. ஆனால் கிளம்பிய தங்கையின் வாகனம் வீட்டிற்கு செல்வதற்காக இடதுபுறம் திரும்பாமல், ஷ்யாம் சுந்தரி சிவப்பு நிற ஃபெர்ராரி திரும்பிய அதேத் திசையில் வலப்பக்கச் சாலையில் திரும்பவும், எழிலரசியின் இதயம் அடைத்துக் கொண்டு வந்தது.

ஷ்யாம் சுந்தர் தங்கையையும் மிரட்டினானா? தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

இதுவரை தங்கை ஏதோ போதைப் பொருளுக்கு அடிமையான பெண்ணிடம் பழகியிருக்கக் கூடும். அப்படித்தான் அந்த புத்தகமும் அவள் கைகளுக்கு வந்திருக்க வேண்டும். அதனால்தான் நான் பேசமாட்டேன் என்று நினைத்துத் தன் முகம் காண அஞ்சுகிறாள் என்றே நினைத்திருந்தாள்.

இது வெற்றிக்கு தெரிந்ததால்தான் தங்கையைக் காப்பாற்றிவிடுகிறான் என்றல்லவா சாதாரணமாக நினைத்துவிட்டாள். ஆனால்…? அவள் விழிகள் இடைவிடாது நீரைப் பொழிந்தது. 

போதைக்கு அடிமையானாளா இவளும்? அதை வைத்துத்தான் மிரட்டுகிறானா அந்த ஷ்யாம் சுந்தர்?

அன்று மழையில் நனைந்ததால் ஜூரம் என்று வந்தவள், மாடியிலிருந்து இறங்கியபோது கூட இதற்காகத்தான் தன் முகம் காண அஞ்சினாளா? தன்னைக் கூட படுக்க வரவேண்டாம் தாயுடன் படுத்துக் கொள்வேன் என்றவள் தனியாக அறையில் படுத்தது ஏன்? நடு இரவில் நடுங்கியது ஏன்?

நினைவுகள் பின்னோக்கி இழுக்க, அன்று தானே… அன்றுதானே இவள் மாமனும் இவளும் திரும்பி வருகையில் அதிவேகமாகச் சென்ற மிருத்யூவைக் கண்டது.

ஸ்பெஷல் கிளாஸ் என்று கட்டடித்துவிட்டு கழுதை சுற்றுதுபார் என்று மாமன் கிண்டலடித்தப் போதுகூட அவளது சீனியர் மாணவியின் வீடு இந்தப் பக்கம் இருப்பதாக இவள் சமாளித்தது நினைவில் வந்தது. 

அந்த சீனியர் மாணவி யார்? ஒருவேளை.. ஒருவேளை அது தேஜஸ்வினியா? அன்றுதானே தேஜஸ்வினி இறந்ததும். அம்முவின் உடல் நடுங்கியது. நாற்காலியை விட்டு எழுந்துகொள்ள முடியாமல் தடுமாறினாள்.

விழிகள் இடைவிடாதுக் கொட்ட கழிவறைச் சென்று முகத்தைத் திரும்ப திரும்ப அடித்துக் கழுவினாள். அந்த விடிகாலை நேரத்தில் காக்கி உடையை மாட்டிக் கொண்டவளின் வாகனம் நேராகச் சென்று நின்றது போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டு அலுவலகம்.

குறிப்பிட்ட நாளும் தேதியும், நேரமும் சரியாகச் சொல்ல அதிகச் சிரமம் இல்லாமல் அரைமணி நேரத்திலேயே அவள் கேட்டக் காணொளித் தரவுகள் கிடைத்தன.

அன்றையத் தினத்தில் தங்கையை, அவள் மாமனும் அவளும் எந்தச் சாலையில் கண்டார்களோ அந்த தரவுகளைத்தான் கேட்டிருந்தாள். அது மிக முக்கியச் சாலையின் சந்திப்பு என்பதால் அங்கு நான்கு கோணங்களிலும் சிசிடிவி புகைப்படப் பதிவுகள் இருந்தன.

அதில் எதிர்ச் சாலையில் இவளது மாமனின் கருப்பு நிற ரேங்கிளர் (wrangler) வந்து கொண்டிருக்க, அவளது தங்கையின் இருச்சக்கர வாகனம் அதிவேகத்தில் இந்தப்பக்கம் பாய்ந்து கொண்டிருந்தது. அவள் எதிர்பார்த்தது போலவே சிவப்பு ஃபெர்ராரி தன் வேகத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாமல் அவளது தங்கையின் வாகனத்தின் முன்னால் சீறிக் கொண்டிருந்தது.

உலகின் உயிர்கள் எல்லாம் அந்தநொடி அசைவற்று நின்றுவிட, தன் மூச்சையும் அந்த ஒருநொடி நிறுத்தி இருந்தாள் அவளது ஆருயிர் தமக்கை.