அத்தியாயம் – 31

செழியன் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகள், தான் எவ்வளவு அபத்தமாகக் கேட்டிருக்கிறோம் என்று திவ்ய பாரதிக்குப் புரியவைத்தது. தான் பேசிய வார்த்தைகள் அவனை எவ்வளவு காயப்படுத்தும் என்றும் உணர்ந்திருந்தாள்.

தனக்காக தன் தாய் தகப்பனை, உயிருக்கும் மேலாக நேசிக்கும் பணியையும் தூக்கி எறிந்துவிட்டு, தன்னையே சுற்றி வருபவனிடம் இப்படிச் சொன்னது, எவ்வளவு பெரிய அபத்தம் என்று புரிந்துகொண்டாள்.

மன்னிப்பு கேட்க எண்ணி வாயைத் திறந்தவளின் வாயில் விரல் வைத்து மூடியவன்,

“ப்ளீஸ் பாரதி! எதுவும் பேசாத! எதுனாலும் காலையில் பேசிக்கலாம்” என்று முடித்துவிட்டான்.

செழியனின் பாரதி என்ற அழைப்பே, அவன் இன்னும் சமாதானமாகவில்லை என்று சொல்லாமல் சொல்லியது திவ்யபாரதிக்கு. அதில் மேலும் கலங்கியவள், செய்வதறியாமல் படுத்துக் கொண்டாள்.

செழியனின் அன்பில் மூச்சு முட்ட மூழ்கி இருக்கிறாள். அவனின் முதல் கடுமையான கோபம், சாமாளிக்கத் தெரியாமல் தவித்தவள், எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

காலையில் கண்விழித்தபோது செழியன் படுத்திருந்த இடம் காலியாக இருந்தது. எப்போதும் முதலில் கண்விழிப்பது திவ்யபாரதிதான். ஆனால், இன்று செழியனைக் காணவில்லை என்றதும்தான், நேற்று இரவு நடந்த வாக்குவாதம் நினைவில் வந்தது.

அதில் பயந்துபோய் வீடு முழுக்கத் தேட, எங்கும் செழியன் இருப்பதற்கான அடையாளம் தென்படவில்லை. வீட்டுக்கு வெளியில் வரவும்,

ஜீப்பை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான் கார்த்தி.

இவ்ளோ காலையில் எங்கே ஜீப்பை எடுத்துக்கொண்டு போய் வருகிறான் என்று நினைத்தவள், அதையே கார்த்தியிடமும் கேட்க,

ஆராய்ச்சியாக அவளைப் பார்த்தவன் “ஏன் உங்கிட்ட செழியன் ஊருக்குப் போறதை சொல்லலியா?” என்றான் எதிர் கேள்வியாக.

“ஊருக்கா..? எப்போ…?” என்று பதறிக்கொண்டு கேட்டவளையே பார்த்திருந்தவன்,

“இப்போதான் கொண்டு போய் பஸ் ஸ்டாண்டில விட்டுட்டு வரேன்” என்றான் அதே ஆராய்ச்சிப் பார்வை மாறாமல்.

அதில் கண்களில் உடைப்பெடுக்க, இருந்தும் கார்த்தியிடம் மறைக்க எண்ணியவள் திரும்பிச் செல்லப்போகவும், “பாரதி..!” என்றழைத்திருந்தான் கார்த்தி.

நின்று திரும்பிப் பார்த்தவளின் விழிகள், இதற்கு மேல் முடியாது என்று விழி நீரை வழியவிட்டிருந்தது.

பார்த்திருந்த கார்த்தி, “இங்க பாரு பாரதி! எனக்கு உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியாது, அவன் முகமும் சரியில்ல. இங்க வந்து பார்த்தா நீயும் அழுதுட்டு இருக்க. ஒன்னு மட்டும் நிச்சயம் சொல்ல முடியும், கண்டிப்பா தப்பு அவன் மேல இருக்காது.

ஏன்னா, அவன் உயிரை விட மேலா உன்னை நேசிக்கிறான். இன்னமும் அவன் தங்கைக்கு பிறந்த குழந்தயைக் கூட அவன் பார்க்கப் போகல. உன்னைப் பிரிஞ்சி வெளிநாடு போகனுமேன்னு, இன்னும் போகாம இருக்கான். தாய்மாமன் சீர் கூட என்னையத்தான் கொண்டுபோய் குடுத்துட்டு வரச் சொன்னான்.

அதில, அவன் தங்கச்சிக்குக் கூட கோபம்தான், இருந்தும் உன் நிலைமையச் சொல்லி சமாதானப் படுத்தி வச்சிருக்கான். உனக்காகப் பார்த்து பார்த்து செய்றவனை புரிஞ்சிக்கோ அவ்வளவுதான்.” என்றவன்

“இப்போ எதுவும் யோசிக்காத, உன்னைத் தாண்டி எங்கேயும் போக மாட்டான். நீதான அவனைத் திரும்ப வேலையில சேரச் சொல்லி சண்டை பிடிச்ச, அது விஷயமாத்தான் போயிருக்கான். இரண்டு நாள்ல வந்துருவான்.” என்று சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தான்.

திவ்யபாரதி சென்றதும், மாடிக்குச் சென்று குளித்துவிட்டு வந்தவன் முன், திவ்யபாரதி உப்புமா என்ற பெயரில் தட்டில் ஏதோ வைத்திருந்தாள்.

தட்டில் இருந்ததை எடுத்து ஒரு வாய் வைத்தவன் முகம் அஷ்ட கோணலாகி, ‘உப்புமாவா இது ரொம்ப தப்பும்மா.’ என்று மனதில் நினைத்தவன் திவ்யபாரதியை நிமிர்ந்து பார்க்க, எங்கே அவள் நினைவுகள் எல்லாம் செழியனோடு அல்லவா பறந்து விட்டிருந்தது. விட்டத்தை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

கஷ்டப்பட்டு விழுங்கியவன், திரும்பி ஹென்றி மட்டும் அவன் சகாக்களைப் பார்க்க, அவர்களோ முகர்ந்து பார்த்து விட்டு, தொடாமல் கூட வைத்திருந்தனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மாறனோ காலால் தட்டை எட்டித் தள்ள, கார்த்தியின் ஒற்றை சொடக்கு சத்தத்தில் தள்ளிய தட்டை மீண்டும் அருகில் இழுத்துக்கொண்டான்.

“அது” என்று பார்வையால் கண்டித்தவன், எதுவும் பேசாமல் வாயில் அள்ளிப் போட்டுக்கொண்டான்.

சாப்பிட்டுவிட்டு எழுந்தவன், “பாரதி! ரெண்டு நாளைக்கு நீ எதும் சமைக்காத. நான் திரையன் ஐயா வீட்ல இருந்து குடுத்தனுப்பச் சொல்றேன்.” என்று சிறு கரிசனத்துடன் சொன்னவனை, அப்போதும் ஒன்றும் புரியாமல் ‘ஹான்’ என்றுதான் பார்த்திருந்தாள், திவ்யபாரதி.

ஏதோ கேட்கிறான் என்று தலையை மட்டும் ஆட்டி வைத்தாள். என்ன கேட்டான் என்று திருப்பிக் கேட்டால் சொல்லத் தெரியாது.

முற்றிலும் உடைந்திருந்தாள், திவ்யபாரதி. செழியன் கூடவே இருக்கும் போது தெரியவில்லை. ஆனால், இன்று எதுவோ தன்னிடமிருந்து காணாமல் போனது போல் தவித்தாள்.

ஹென்றியை மட்டும் வீட்டில் துணைக்கு இருக்கச்சொன்ன கார்த்தி, மற்றவர்களை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

பாவமாகப் பார்த்த ஹென்றியிடம் வந்தவன், “இருடா  உனக்கும் சேர்த்துதான் சாப்பாடு வரும்.” என்றதும் குஷியாகிய ஹென்றி வாலாட்டி அனுப்பி வைத்தான்.

சொன்னது போலவே அரைமணி நேரத்தில் திரையன் அரிமா வீட்டில் இருந்து சாப்பாடு வந்திருந்தது. வகை வகையாக இருந்த சாப்பாட்டை தொடக்கூடப் பிடிக்காமல், போய் படுத்துவிட்டாள் திவ்யபாரதி. முடிந்தவரை அழுது தீர்த்தாள்.

அழுது கொண்டே படுத்திருந்தவள், அப்படியே தூங்கியும் இருந்தாள். மதிய வேளையில் கண் முழித்தவளுக்கு, மனம் மட்டும் பாரமாய் இருக்க, சாப்பிடாமல் படுத்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது.

மெதுவாக வெளியே வந்து பார்த்தவளுக்கு, ஹென்றி சோகமாய் வாசலில் படுத்திருப்பது கண்ணில் பட்டது. அவன் முன்பு இருந்த தட்டில் வைத்த உப்புமா அப்படியே  இருந்தது.

அதில் சந்தேகப் பட்டு மீதம் இருந்ததை வாயில் வைத்து சுவைக்க, சுத்தமாக உப்பு காரம் எதுவுமில்லை. தலையில் அடித்துக் கொண்டவள், இதையும் எதுவும் சொல்லாமல் விழுங்கி வைத்த கார்த்தியை நினைத்து பெருமை கொண்டாள்.

முதல் வேலையாக ஹென்றிக்கு, கார்த்தி கொடுத்து அனுப்பிய சாப்பாட்டை வைத்தாள்.

கார்த்தி, ஏன் தன்னை சமைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போனான் என்று நினைத்துச் சிரித்தவள், தனக்கு கடவுள் முன்பாதி வாழ்க்கையை தன்னிடமிருந்து பறித்துக் கொண்டாலும். பின்பாதி வாழ்க்கையை அழகான சொந்தங்களுடன் அருமையாக அமைத்துத் தந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டாள்.

தன் வாயால் இதையெல்லாம் கெடுத்துக் கொள்ள இருந்தோமே என்று நினைத்து, தலை குனிந்தாள்.

இரண்டு நாட்கள் எப்படி கழிந்தது என்று கேட்டால், திவ்ய பாரதிக்கு சொல்லத் தெரியாது. கடமைக்குச் சாப்பிட்டாள். ஆனால் தூக்கம்? இரவு செழியன் மார்பில் தலை வைத்துப் படுக்காமல், பொட்டு தூக்கம் கூட வரவில்லை. பத்தாதுக்கு பகலில் வேறு தூங்கியிருந்தாள் அல்லவா…?

தூக்கம் வராமல் வீட்டு வாசலில் இருந்த திண்டில் அமரவும், சிறிது நேரத்தில் மாடியிலிருந்து இறங்கி வந்த ஹென்றி, சற்றே தொலைவில் திவ்ய பாரதியை பார்த்துக் கொண்டே படுத்துக் கொண்டான்.

அருகில் வந்தால் பயப்படுவாள் என்று புரிந்து, அதே நேரத்தில் தனியேவும் விட மனதில்லாத அந்த ஜீவன் மீது, திவ்யபாரதிக்கு கொஞ்சமே கொஞ்சம் பாசம் பிறந்தது.

அந்த இரவிலும் பாலை சூடு ஏற்றிய திவ்யபாரதி, ஒரு கப்பை தனக்கு எடுத்துக் கொண்டு, இன்னொரு கப் பாலை ஹென்றியின் தட்டில் ஊற்றிட, இருவரும் அந்த ஏகாந்தத்தை இரசித்துக் கொண்டே குடித்துக் கொண்டிருந்தனர்.

“பார்..டா! அதிசயமா இருக்கு, எனக்கெல்லாம் பால் இல்லையா” என்று கேட்டுக்கொண்டே இறங்கி வந்தான், கார்த்தி. அவன் பின்னால் நூல் பிடித்தது போல் மற்ற மூவரும் வர, அனைவருக்கும் மிதமிருந்த பாலை ஊற்றித் தந்தாள்.

திவ்யபாரதியை தனிமை தாக்காமல் பேசிக்கொண்டிருந்த கார்த்தி! சிறிது நேரத்தில் “நீ போய் படு பாரதி! நான் வாசலில் கட்டில் போட்டு படுத்துக்கிறேன்.” என்று அனுப்பி வைத்தான்.

செழியன் இல்லாமல் பயப்படுகிறாளோ என்று கார்த்தி நினைத்திருக்க, அவளோ சொல்லாமல் கூட சென்ற செழியனின் கோபத்தில் மறுகிக் கொண்டிருந்தாள்.

இரண்டு நாட்கள் என்பது மூன்று நாட்களாய் கடந்திருக்க, சொல்லாமல் சென்றவன் மீது பரிதவிப்பும், அதே நேரத்தில் கோபமும் முளை விட ஆரம்பித்தது.

மூன்றாம் நாள் மதிய வேளையில் வந்து சேர்ந்திருந்தான், செழியன். செழியனைக் கண்டதும், ஹென்றி பாய்ந்து கொண்டு ஓட, அவனையும் தாண்டிக்கொண்டு ஓடி வந்த திவ்யபாரதி, ஒரே பாய்ச்சலில் செழியனை கட்டிக்கொண்டு, அவன் மார்பில் முகம் புதைத்திருந்தாள்.

செழியனின் மனமோ எதிர்பாரா தாக்குதலில் சற்று பின்னால் சரிந்தவன், தாக்கியது புயல் அல்ல பூவென்று தெரிந்ததும், வாரி அணைத்துக் கொண்டான்.

திவ்யபாரதியின் இந்தத் தேடல் செழியனே எதிர் பார்த்திராத ஒன்று. கோபித்து மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டிருப்பாள் என்று தான் நினைத்திருந்தான்.

இவ்வளவு தூரம் பரிதவித்துத் தன்னை தேடுவாள் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்கவில்லை.

செழியனின் மனம் ஆனந்தக் கூச்சலிட்டது. இதைத்தான் எதிர்பார்த்திருந்தான் அவன்.  திவ்யபாரதி தனக்காக இல்லாமல், அவளுக்காக மட்டுமே அவனைத் தேட வேண்டும் என்று நினைத்திருந்தான்.

செழியனின் சின்ன கோபம் கூட, தன்னவளை இவ்வளவு பாதிக்குமா என்று நினைத்தவன், அவள் காதலை அடைந்து விட்ட திருப்தியில், மேலும் இறுக்கி கட்டிக்கொண்டான்.

“எவ்வளவு நேரம், இப்படி வாசல்லயே நிக்கறதா உத்தேசம்” என்ற குரல் பின்னால் கேட்கவும் தான், திரும்பிப் பார்த்த திவ்யபாரதி வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே வீட்டுக்குள் ஓடி விட்டாள்.

செழியனின் தோளில் தட்டிக் கொடுத்த கார்த்தி, “மேடம் ரெண்டு நாளா  தூங்கலை. சரியா சாப்பிடலை. என்னன்னு போய் பாரு.” என்றவனிடம்,

“தோட்ட வேலை முடிஞ்சிதா” என்று கேட்க, இரு கை பெரு விரல்களையும் தூக்கிக் காட்டிய கார்த்தி, சிரித்து விட்டு “நாளைக்கு நான் ஊருக்கு போய்ட்டு வரேன். இங்க எல்லாம் பார்த்துக்க. அப்புறம் நீ போன வேலை சக்ஸஸ் தானே.” என்றான்.

“ம்.. ம்ம் சக்சஸ் தான். சும்மாவே என்னைய தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்த துடிப்பானுங்க.” என்று சிரித்தவன் “நானே அப்படி ஒரு இடத்தில போஸ்டிங் கேட்கறப்போ, குடுக்காம இருப்பாங்களா? விட்டது சனின்னு குடுத்துட்டானுங்க.” என்று சத்தமாகச் சிரித்தவன், இன்னும் மூனு… மாசம் இருக்கு சஸ்பென்ஷன் முடிய. அப்புறம் ஜாய்ன் பண்ணிக்கலாம்.” என்றான்.

வீட்டுக்குள் நுழைந்ததும், மெத்தையில் மூஞ்சை தூக்கி வைத்து அமர்ந்திருந்த திவ்யபாரதியைப் பார்த்து சிரித்து விட்டான், செழியன்.

“என்ன சிரிப்பு, என்னைய பார்த்தா எப்படி தெரியுதாம்?”

“இல்லை, யாரோ ஓடி வந்து கட்டில்லாம் பிடிச்சாங்க. அது நீ இல்லையா பாப்பு..! கனவு எதும் கண்டிருப்பேன் போல…” என்று அடக்க மாட்டாமல் சிரித்தான்.

“சொல்லாம போனதும் இல்லாமல், கிண்டல் வேறயா பண்றிங்க” என்று கோபம் போல் பேசியவளிடம்,

“சொல்லாம போனதுனால தானே என் பாப்பு என் மேல எவ்வளவு லவ் வச்சிருக்கா, என்னை எவ்வளவு தேடுறான்னு புரிஞ்சிது.” என்றவன் நெருங்கி வந்திருந்தான்.

“அதெல்லாம் பேச நேரமில்லை. படுங்க முதல்ல.” என்றவளை அதிர்ச்சியாகப் பார்த்த செழியன் வாயில் கை வைத்து “இது பட்டப் பகல்டி, பாப்புக்குட்டி.” என்றான்.

“அதுக்கு என்ன இப்போ, எனக்கு இப்போ வேணும்.”

“என்னடி வேணும், என்னவோ மிட்டாய் வேணும்னு கேட்கிற மாதிரி கேட்கிற?” என்றவனுக்கு நிஜமான அதிர்ச்சி தான். இவள் தெரிந்து தான் பேசுகிறாளா என்று.

“முதல்ல படுங்க, சொல்றேன்” என்று செழியனை இழுத்து படுக்க வைத்தவள், இழுத்த இழுப்பில் அவன் மெத்தையில் சரிந்ததும், நெஞ்சில் தலை வைத்துப் படுத்துக்கொண்டாள்.

“தூங்கி இரண்டு நாள் ஆச்சு, இப்படி பழக்கம் பண்ணி விட்டுட்டு, சொல்லாம கொல்லாம போனா என்ன அர்த்தமாம். எனக்கு தூக்கம் வருது. நீங்களும் பஸ்ல வந்தது டையர்டா இருக்கும், தூங்குங்க.” என்றாளே பார்க்கலாம்.

என்ன என்னவோ எதிர்பார்த்த செழியனோ, சத்தமாகச் சிரித்துவிட்டான்.

சிரிப்பு சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள், நிஜமாகவே தூங்காமல் சிவந்து கிடந்தது.

அந்த கோவைப்பழக் கண்களில் முத்தமிட்டவன், “இந்தப் பழக்கம் உனக்கு மட்டும் தானா? எனக்கும் தாண்டி இரண்டு நாளா தூக்கம் வரல…” என்றவன், இழுத்து அணைத்துக் கொண்டான்.

நாளைய விடியல் அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறதோ!