கார்த்தியின் வீட்டிலிருந்து கிளம்பிய செழியன், நேராக DGP ராஜேந்திரனின் வீட்டிற்குச் சென்றான். அங்கு அரைமணி நேரங்கள் போல் பேசிக்கொண்டு இருந்தவன், கடைசியாக திவ்யபாரதியை, நாளை மத்திய சிறையில் ஒப்படைக்கப் போவதாகச் சொல்லி, அனுமதி வாங்கிக்கொண்டான்.
அதுபற்றி மேலும் விவாதித்து, அவரின் அறிவுரைகளையும் பெற்றவன், அங்கிருந்து வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல்.. தன்னவளைக் காண ஸ்டேஷனுக்கு வண்டியை விரட்டினான்.
ஸ்டேஷன் வந்ததும் மணியைப் பார்க்க, மணி விடியல் 3 am என்று காட்டியது. காலை 10 மணிக்கெல்லாம் திவ்ய பாரதியை சிறையில் ஒப்படைக்க வேண்டும். அதற்குத் தேவையான பேப்பர்களை, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ராகவனிடம் தயார் செய்து வைக்கும்படி சொல்லிய செழியன், சிறிது ப்ரஷ்-அப் செய்து கொள்ள, ஸ்டேசனை ஒட்டியுள்ள ஓய்வு அறைக்குச் செல்வதாக சொல்லிச் சென்றான்.
செழியன் கண் மறைந்ததும், அந்த மந்திரிக்கு அழைத்த இன்ஸ்பெக்டர் ராகவன், “சார்! காலையில பத்து மணி போல.. அந்த திவ்யபாரதிய மத்திய சிறைக்குக் கொண்டு போகப் போறாங்க சார்.” என்ற தகவலை மந்திரியிடம் தெரிவித்தவர், மேலும் எதிர்முனையில் கேட்கப்பட்ட தகவல்களையும் தந்து கொண்டிருந்தார்.
அதற்கு எதிர்முனை என்ன கேட்டதோ.. “ஆமா சார்! கன்ஃபார்ம் தான்.” என்ற ராகவன் பின்னால் நின்றிருந்த செழியனைப் பார்த்து அதிர்ந்து நின்றார்.
ஓய்வறைக்குச் சென்று முகத்தை கழுவி விட்டு அப்போதுதான் திரும்பி வந்திருந்தான், செழியன்.
செழியன் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவான் என்று அந்த இன்ஸ்பெக்டர் எதிர்பார்க்கவில்லை போலும், பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தார்.
கைகளை குறுக்காக கட்டிக்கொண்ட செழியன், “என்ன கன்ஃபார்ம் மிஸ்டர் ராகவன்..?” என்று எப்போதும் போல், தன் வலக்கையால் இடது பக்க மீசையை முறுக்கிக் கொண்டே கேட்க..
அதிர்ந்த ராகவனோ.. வார்த்தைகள் தந்தியடிக்க, “வொய்ஃப்.. வொ..ய்ஃப்.. வெளிய கூப்பிட்டு போ..போறதா சொல்லியிருந்தேன், அதான் கன்ஃபார்மா வருவேன்னு சொல்லி…க்கிட்டு இருந்தேன் சார்.” என்று நடுங்கிய குரலில் சொன்னவரிடம்,
“அதுக்கேன் இந்த நடுக்கம்.. ஓ..பர்மிஷன் வேணுமா..? என்று மெலிதாகச் சிரித்தபடி கேட்கவும்,
“ஆ..ம்..” என்றும் “இல்லை” என்றும் இருவிதமாக தலையாட்ட, சத்தமாகச் சிரித்த செழியன்,
“யூ கேன் கோ நவ்! (நீங்க போகலாம்)” என்று வெளிவாசலை நோக்கி கை காண்பித்தான்.
திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றவரிடம்,
“ஆல் த பெஸ்ட் ராகவன்” என்றதும்,
ராகவன் அதிர்ந்து செழியனைப் பார்க்க, “என்ன ராகவன் அப்படி பாக்கறீங்க? வொய்ஃப் கூட வெளிய போறீங்களேன்னு ஜஸ்ட் ஆல் த பெஸ்ட் சொன்னேன்.” என்றான் உதட்டில் ஒளித்த புன்னகையுடன்.
ஆசுவாசப் பெருமூக்சு விட்ட ராகவன் திரும்பிச் செல்ல, “ஹான்.. ராகவன் ஒரு நிமிஷம்! சொல்ல மறந்துட்டேன், உங்க வொய்ஃப் ரொம்ப நாளா கவர்ன்மெண்ட் வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்காங்க தானே! அவங்களுக்கு நம்ம டிப்பார்ட்மெண்ட்லயே ரைட்டர் போஸ்ட்க்கு ரெக்கமெண்ட் பண்ணி இருக்கேன். கூடிய சீக்கிரம் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்துரும்.” என்றான்.
“ரொம்ப நன்றி சார்” என்று கை கூப்பியவரை தடுத்து, “நன்றியெல்லாம் எதுக்கு ராகவன்? இது என் கடமை.” என்று சொல்லி, ராகவனின் அருகில் சென்று தன் மீசையை முறுக்கிவிட்டவன்,
“நாளைக்கே, உங்களுக்கு கை கால் உடைஞ்சிதுன்னு வைங்க, திங்கறதுக்கும் கழுவுறதுக்கும் கை இல்லாத போது, உங்க வொய்ஃப்க்கு இந்த வேலை, ரொம்ப உதவியா இருக்கும் ராகவன்!
ஏன்னா நாம போலீஸ்காரங்க, எப்போ வேணா, எது வேணா நடக்கலாம்..” என்று உதட்டில் நெழிந்த புன்னகையுடன் சொன்னவன், “நீங்க பேனிக் (பயப்படாதீங்க) ஆகாதீங்க ராகவன்! சும்மா பொதுவா சொன்னேன்.” என்று அவர் தோளில் கைபோட்ட செழியன்,
அவர் மீசையை மேல் நோக்கி திருகி விட்டு “போலீஸ்காரன்னா, மீசை இப்படி இருக்கணும் ராகவன்!” என்றான் கண்களில் கனல் பறக்க..
ராகவனுக்கு அவன் பேச்சும் புரியவில்லை, செயலும் புரியவில்லை. புரிந்திருந்திருக்கலாம் பாவம்.
திரும்பிச் செல்லும் ராகவனின் முதுகை வெறித்திருந்த செழியன், அவர் சென்ற அடுத்த நொடி, நேராக திவ்ய பாரதி இருந்த செல்லை நோக்கிச் சென்றான்.
இப்போது திவ்யபாரதி தூங்கிக்கொண்டிருப்பாள் தான். ஆனால் செழியன், தனக்கு கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான நொடிகளை இழக்க விரும்பவில்லை. நேற்றிலிருந்து ஒரு பொட்டு கூட உறக்கம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறான். ஆனாலும், தன்னவள் தன் பாதுகாப்பில் இருக்கும் வரைக்கும், இமைக்குள் வைத்து காக்க நினைத்தான்.
செல்லுக்குள் நுழைந்ததும், சிறு குழந்தை போல் கால்களை கட்டிக்கொண்டு மூலையில் குறுக்கிப் படுத்திருந்தவளை, அப்படியே அல்லிக்கொள்ளச் சொன்ன மனதை கஷ்டப்பட்டு அடக்கி வைத்தான்.
அவள் படுத்திருந்த விதமே சொன்னது, தூக்கத்திலும் ஒருவித பாதுக்காப்பின்மையை உணர்கிறாள் என்று.
நான் இருக்கிறேன் என்று அணைத்துக்கொள்ள கை பர பரக்க, அருகில் சென்றவன் பட்டும் படாமல் அவள் நெற்றியில் பூத்திருந்த வியர்வையை கர்சீஃப் கொண்டு ஒற்றியெடுத்தான்.
அந்தச் சின்ன அசைவிற்கே பதறித் துடித்து எழுந்தவள், செழியனைக் காணவும், தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். தன்னையும் அறியாமல் அவனிடம் பாதுகாப்பை உணர்ந்திருப்பாள் போலும். அதை அவள் விட்ட ஆசுவாச மூச்சிலிருந்து தெரிந்து கொண்டான்.
திவ்யபாரதியின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டு இருந்த அவனின் மனது புண்ணாகிப் போனது. எவ்வளவு துன்பங்களை அடைந்திருந்தால், இப்படி பதறித் துடிப்பாள் என்று நினைத்தவன், அவளின் ஒவ்வொரு இரவும் இப்படித்தானே ஒருவித பயத்துடன் கடந்திருக்கும் என்று நினைத்து, வருத்தம் கொண்டான்.
இத்தனையும் மனதில் நினைத்தவன், பார்வையில் சிறிதேனும் வெளிப்படுத்தவில்லை. தன்னவள் அதை விரும்ப மாட்டாள் என்று அறிவான். எந்த நிலையிலும் அவளின் தன்னம்பிக்கையை குலைத்து, அவளை பலவீனப்படுத்த செழியன் விரும்பவில்லை.
அவளுக்குள் இருக்கும் அந்தத் திமிர்தான், அவளின் தன்னம்பிக்கை என்று உணர்ந்திருந்தான். அந்தத் திமிர், அவளைக் காத்துக்கொள்ள அவளாக போட்டுக்கொண்ட திரை. அதைக் கிழித்து உள்ளே நுழைய, செழியன் விரும்பவில்லை.
தன்னை பலவீனப் படுத்தும் எந்த விஷயங்களையும், அவள் அனுமதிப்பதே இல்லை, அல்லவா…? அவன் தான் அவளின் பலவீனம் என்று அவள் சரணடைந்த போதே அறிந்து கொண்டான்.
பதறி எழுந்தவளை சிறிதும் கண்டுகொள்ளாதது போல் நடித்தவன்,
கண்களில் கோபம் ஏந்தி “மனசுல என்ன தியாகின்னு நினைப்பா?” என்றான்.
அந்த விடிகாலை நேரத்தில், அவன் கேள்வியில் முதலில் திகைத்தாலும், கடைசியாக அவளை சந்தித்து விட்டுக் கிளம்பும் போது,
‘இன்னும் என்கிட்ட சொல்லாம என்ன மறைக்கிற’ என்று கேட்டதையும் தற்போதைய ‘தியாகியா’ என்ற கேள்வியையும் ஒப்பிட்டுப் பார்த்தவள், கார்த்தியைப் பற்றி அறிந்து கொண்டான் என்று புரிந்து கொண்டாள்.
செழியன், கார்த்தியை கண்டுபிடிக்கா விட்டால் தான் அதிசயம் என்று அவனைப் பற்றி முழுமையாக அறிந்தவளாக நினைத்திருந்தாள்.
திவ்யபாரதி பத்திரிகை உலகில் கால் பதித்ததில் இருந்தே, செழியனைப் பற்றிய செய்திகளில், தன்னையும் அறியாமல் மனதை அவனிடம் தொலைத்திருந்தாள்.
தானாக தேடித் தேடி அவனைப்பற்றியச் செய்திகளை சேகரிக்க ஆரம்பித்தாள். அப்படித்தான் அவர்களின் சந்திப்பும் நிகழ்ந்தது.
செழியன் தன் மனதை ஆட்சி செய்வதை உணர்ந்து கொண்ட திவ்யபாரதி, அவனை தன் மனதில் இருந்து அழிப்பதற்காகவே, முதல் பேட்டியின் போதே அவனைக் கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட்டாள்.
ஆனால், முதல் பார்வையில்.. அவளின் முதல் கேள்வியில் அவளிடம் விழுந்தவன் தான், செழியன்.
அனைவரும் அவனுக்கு அடங்கிப்போக, துருதுருவென்று கேள்வி கேட்டவளை மனதில் பச்சக்கென்று ஒட்ட வைத்துக் கொண்டவன், சற்றும் தாமதிக்காமல் முதல் சந்திப்பிலேயே தனதறைக்கு வரவழைத்து, காதலைச் சொல்லியிருந்தான், அதுவும் நகுலனின் முன்பே!
அவனும் தான் என்ன செய்வான், நகுலன் இல்லாமல் மேடம் எங்கும் அசைவதில்லையே. ஆனால், அவனுக்கு கிடைத்த பதில் என்னவோ, இன்று வரை பூஜ்ஜியம்தான்.
உறுமியபடி “தியாகியான்னு கேட்டேன்!” என்று அழுத்திச் சொல்ல, “ஏன் சுய நலமா இருக்கக் கூடாதா..? என்று பதில் கேள்வி கேட்டாள், திவ்ய பாரதி.
“ஓ..! அவன் என்னை போட்டுருவான்னு பயமா..?” என்று படு நக்கலாகக் கேட்க..
“உங்களால அவருக்கு எதுவும் ஆகிடக் கூடாதுங்கற எச்சரிக்கை உணர்வாவும் இருக்கலாமில்லையா..?” என்ற திவ்யபாரதியின் பதில் என்னவோ, மீண்டும் கேள்வியாகவே இருந்தது.
“ஓ.. கிரேட்!, அப்படி அவன் என்ன முக்கியம்?” மெலிதான பொறாமை உணர்வு செழியனிடம்.
“இந்த சமூகத்துக்கு நீங்க எவ்ளோ முக்கியமோ, அப்படித்தான் கார்த்தியும், பாதை தான் வேற வேற, இலக்கு ஒன்னு தானே..!”
“நானும் அவனும் ஒண்ணா…?” சிறிது கடுப்பு அவன் குரலில். காதலுக்கே உரிய இயல்பான பொஸஸிவ் செழியனை கடுப்பாக்கிக் கொண்டிருந்தது.
கார்த்தியையும் தெரியும் தன்னவளையும் தெரியும், இருந்தும் அவளுக்கு முதன்மையாக தான்தான் இருக்க வேண்டும் என்ற இறுமாப்பு செழியனிடம்.
“கண்டிப்பா இல்ல, யோசிச்சுட்டு போட்டு தள்ளுறதுக்கும், போட்டு தள்ளிட்டு யோசிக்கறதுக்குமான கடுகளவு வித்தியாசம் தான்.” என்றாள் நக்கல் நிறைந்த குரலில்.
“எஸ், யூ ஆர் ரைட்! (நீ சொல்வது சரிதான்), அதுதான் யோசிக்காம அவனைப் போட்டுத் தள்ளிட்டேன்.” இடது பக்க மீசையை வலது கையால் முறுக்கிவிட்டுக்கொண்டே சொல்ல,
“கொஞ்சமாவது நம்பற மாதிரி பொய் சொல்லுங்க DSP..! அவனைத் தேடி இவ்ளோதூரம் போன உங்களுக்கு, நிச்சயம் கார்த்தியோட கதை தெரியாம இருந்திருக்காது. அது தெரிஞ்சும் அவனைக் கொல்ல என் செழியனால முடியாது.” அவசரத்தில் வார்த்தைகளைச் சிதறவிட்டிருந்தாள்.
“வாட்! கம் அகைன் (எங்க திரும்ப சொல்லு)” குறும்புப் புன்னகை அவன் முகத்தில்.
அவன் குறும்புப் புன்னகையை கண்ட பிறகே, தான் உணர்ச்சி வேகத்தில் வார்த்தையை விட்டது தெரிந்தது.
“இல்ல…! அது ஏதோ தெரி..யா..ம, வாய்ல வந்துருச்சி..” என்று தடுமாறியவளின் அருகில் நெருங்கி வந்தவன்,
“மனசுல நான் இல்லாமையா பாப்பு.. ‘என் செழியன்னு’ சொன்ன..? உன்னை நீயே ஏமாத்தி, என்னையும் ஏமாத்தாதடி” என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன், கையை அவள் முகத்தை நோக்கிக் கொண்டுபோக,
விலகியவளின் நெற்றிக் கேசத்தை ஒதுக்கி, அவள் காதோரம் சொருகினான். அதற்கே அவள் உடலில் மெல்லிய நடுக்கம் ஏற்பட்டு அடங்கியது.
திவ்யபாரதியின் நடுக்கம் செழியனுக்குள் இமயமலையை வெடிக்கச் செய்தது. இது ஏற்கனவே அவன் உணர்ந்த விஷயம் தான்.
அதனால் தான் திவ்யபாரதியின் கதைதெரிந்த அன்று கூட, ஆற்றாமையால் ஓடி வந்து அணைத்துக் கொண்டவன், ‘எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோடி’ என்று தன்னவளிடம் யாசித்து நின்றான்.
அதுமட்டுமா நெற்றியில் இதழ்பதித்தபோது அருவருத்து துடைத்தவளிடம், என்னையும் குழந்தையா நினைச்சிக்கோ என்று சமாளித்திருந்தான். தன் தொடுகையைக் கூட ஏற்க முடியாமல் தவிப்பவளைக் கண்டு, மரண வலி கொண்டான்.
திவ்யபாரதிக்கோ மனது உள்ளுக்குள் அடித்துக் கொண்டது. எங்கே கார்த்தியும் கைதாகி விட்டானோ என்று கவலை கொண்டாள். அதை நேரடியாக செழியனிடம் கேட்டு, எங்கே அவன் ‘ஆம்’ என்று சொல்லி விடுவானோ என்ற பயம். ஆனால் கேட்டாலும் பதில் வராது என்று தெரிந்து வாயை மூடிக்கொண்டாள்.
அந்த பயத்தில் அவள் கண்கள் அலைபாய, அவள் கண்களின் அலைப்புறுதலில் மனதைப் படித்தவன்,
“எதையும் யோசிக்காம, கொஞ்ச நேரம் படுடி.., எல்லாம் நான் பாத்துக்கறேன்.” என்றான்.
அவளுக்கும் அசதியாகத்தான் இருந்தது. ரெஜினா ஏற்படுத்திய காயங்கள் அவளை மிகவும் பலவீனப்படுத்தி இருந்தது. ஆனாலும், செழியன் அங்கேயே இருந்து கொண்டு படு என்றால்.. எப்படி படுப்பதாம் என்று மனதில் நினைத்தவள், அப்படியே அமர்ந்திருந்தாள். அணுவளவும் அவளை கண்காணித்துக் கொண்டே இருப்பவனுக்கு, அவளின் சோர்வு தெரியாதா என்ன..?
அவனது அறையிலிருந்து தலகாணியும், பெட்சீட்டையும் கொண்டு வரச் சொல்லி, அதை விரித்து வைத்துவிட்டு திவ்ய பாரதியின் அருகில் வந்தவன்,
“இன்னைக்கு ஒரு நாளாவது எந்த பயமும் இல்லாம தூங்கு பாப்பு! நான் இங்கேயே தான் உன்னை பார்த்துட்டே தான் இருப்பேன். என் மேல நம்பிக்கை இருந்தா, போய் படுடி.. ப்ளீஸ்.” என்றான்.
அவன் வார்த்தைகள் மனதுக்குள் என்னவோ செய்ய, மறுக்கத் தோன்றவில்லை திவ்யபாரதிக்கு. உடலும் தூக்கத்திற்கு ஏங்க, எதுவும் பேசாமல் போய் படுத்து விட்டாள்.
நேற்றைய இரவு அதிர்ச்சி, இன்று அலைச்சல் என்று இவ்வளவு நேரம் அவளை கவனித்துக்கொள்ள முடியாமல் போனதுக்காக, தன்னையே நொந்து கொண்ட செழியன், அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
திவ்யபாரதி படுத்ததுமே, செழியனின் பெட்சீட் தலகாணியிலிருந்து அவனின் பிரத்யேக மணம் வர, அதை ஆழ்ந்து சுவாசித்தவள், அது ஏற்படுத்திய பாதுகாப்பு உணர்வில்.. வெகு வருடங்கள் தாண்டி நிம்மதியான உறக்கம் கொண்டாள்.
செழியன் சில நேரங்களில் அர்த்த ராத்திரியில் ரோந்துப் பணிக்கு சென்றுவிட்டு அங்கேயே தங்கி விடுவதால், ஸ்டேசனை ஒட்டி உள்ள அறைகளில் தங்கிக்கொள்வான்.
சில முடிக்க முடியாத கேஸ்களை, ‘சம்பவம்’ செய்வதும் அப்படிப்பட்ட இரவுகளில் தான். அதனால் எப்போதுமே இங்கே ஒரு செட் யூனிஃபார்மும், படுக்க தேவையான பொருட்களும் இருக்கும். அதைத்தான் இப்போது திவ்யபாரதிக்குத் தந்திருந்தான்.
திவ்யபாரதி தூங்கும் வரை, அவளுக்கு சங்கடம் தர விரும்பாமல் திரும்பி அமர்ந்திருந்தவன், அவள் தூங்கியது தெரிந்ததுமே, திரும்பி அமர்ந்து இமை கொட்டாது தன்னவளின் முகத்தை விடிய விடியப் பார்த்திருந்தான்.
‘இனி இதுபோல் வாய்ப்பு, தன் வாழ்வில் வருமோ… வராதோ…?’ என்ற தவிப்பு அவனிடம்.