அத்தியாயம் – 17

கடிதத்தையும், அது சம்பந்தமாக தன் தந்தை எழுதி வைத்த குறிப்புகளையும் படித்து முடித்த செழியன், அதன் கனம் தாங்காமல் தந்தையை ஏறிட…

“இந்த லெட்டர்ல அந்த சின்னப்பையனால என்ன எழுத முடியுமோ, அதைத்தான் எழுதியிருந்தான், மத்த எல்லாம் அவன் சொன்னதையும் விசாரிச்சதையும் வச்சி, இப்படித்தான் நடந்து இருக்கும்னு என் அனுமானம். மீதி..” என்றவர் “அந்த லெட்டர்ல கடைசியா என்ன எழுதியிருக்கான் பாத்தியா..?” என்று கனத்த மனதுடன் வினவினார்.

“ம்..ம்ம்.. யெஸ் டாடி” என்று பெருமூச்சொன்றை வெளியேற்றியவன், அந்த கடைசி வரிகளை மீண்டும் ஒருமுறை படித்துக் காண்பித்தான்.

“நீங்க தான சொன்னீங்க, போலீஸால தண்டிக்க முடியும்னு, நான் வளர்ந்து போலீஸாகி தண்டிக்க ரொம்ப நாளாகிடும், ப்ளீஸ் சார், நீங்க எனக்காக தண்டிப்பீங்களா…” என்று முடிந்திருந்தது அந்தக் கடிதம்.

“இது நடந்தப்போ, நான் அந்த ஊர்ல தான் இன்ஸ்பெக்டரா சார்ஜ் எடுத்து இருந்தேன். அன்னைக்கு அந்த ஊரே மரண ஓலத்துலதான் இருந்தது. கண்ணால பார்த்த ஒரே சாட்சி, இந்தப் பையன் தான். ஆனா… அன்னைக்கு அந்தப் பொண்ணொட இறப்ப அவனால ஏத்துக்க முடியல. அவனால சரியா பேசக்கூட முடியல.. அவன் என் கிட்ட சொன்ன ஒரே விஷயம், திருவிழாவுக்கு பந்தல் போட வந்தவங்கன்னு மட்டும் தான். அன்னைக்கு அவன் கிட்ட சொல்லிட்டு வந்தேன். கவலைப்படாதப்பா, என்ன நடந்ததோ அத நாளைக்குச் சொல்லு, போலீஸால கண்டிப்பா தண்டனை வாங்கித் தர முடியும்னு. ஆனா.. மறுநாள்… ப்ச்…” என்று மறுத்துத் தலை ஆட்டிய மகேந்திரன்,

“அவங்க குடும்பமே எங்க போச்சின்னு தெரியல. இந்த லட்டர் மட்டும் தான் என் ஜீப்போட பின் சீட்லருந்து கிடைச்சிது.” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டவர்,

“இந்த நாகராஜும், சுந்தர பாண்டியும், அப்போவே கட்சி மீட்டிங் அது இதுன்னு ரவுடியாதான் சுத்தித் திரிஞ்சானுங்க, எதும் பெரிய லெவல்ல மிரட்டி இருப்பானுங்கன்னு நினைக்கிறேன். பயந்து, அவங்க அந்த ஊரை விட்டே காலி பண்ணிட்டு போய்ட்டாங்க. விசாரிச்சதுல எங்கேயும் அவங்கள கண்டுபிடிக்க முடியல. நான் அப்படியும் விடாம, அந்தக் கேஸை நோண்டவும், என்னைய வேற ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்க.  அதுக்கு அப்புறமும் எனக்கு பதவி உயர்வு அது இதுன்னு எவ்வளவு கிடைச்சாலும், என் மனசு.. இந்தக் கடிதத்துக்கு மட்டும் பதில் சொல்ல முடியலயேன்னு குமைஞ்சு கிட்டே இருந்தது. என் பீரியட்ல ரெண்டு வாட்டி இவனுங்கள குண்டாஸ்ல தீர்த்துக் கட்டப்பார்த்தேன், ஆனா.. பல அரசியல்  தலைகளோட சப்போர்ட், தப்பிச்சிட்டே வந்துட்டானுங்க.” என்று முடித்தார்.

தந்தையை ஆறுதலாக கட்டிக்கொண்டவன்,  “அவங்க போட்டோ ஏதும் இல்லையாப்பா” என்று கேட்க,

“அவங்க யாரோட ஃபோட்டோவும் இல்ல. ஆனா… இறந்த அந்தப் பொண்ணோட ஃபோட்டோ மட்டும்,. அந்த ஃபைல்லயே இருக்குப்பா” என்றார்.

போட்டோவை எடுத்துப் பார்த்த செழியன், “இதான், அந்தப் பொண்ணு அம்முவாப்பா” என்று நெற்றியை சுருக்கிக் கொண்டே கேட்க,

அதை வாங்கிப் பார்த்தவர், “ஆமாப்பா, இது அவங்க வீட்ல மாட்டி வச்சி இருந்த போட்டோ, அந்தப் பொண்னோட முகமெல்லாம் காயமா இருந்ததால, அங்க சுவர்ல மாட்டி இருந்த இந்த போட்டோவ, ஒரு போட்டோ எடுத்துக்கச் சொல்லி.. சொல்லி இருந்தேன், அதான் இது.” என்றார்.

போட்டோவை கூர்ந்து பார்த்த செழியன், “இத.. நான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேப்பா..” என்று நெற்றியை வருடி யோசித்தவன், பின் நினைவு வந்தவனாக, “எஸ்.. எஸ்…” என்று  சொல்லி விரைவாக, தன் வீட்டின் நடு ஹாலில் மாட்டியிருந்த, போட்டோவின் அருகில் சென்றான்.

அது அவன் போலீஸ் ட்ரெயினிங்கின் போது எடுத்த குரூப் போட்டோ. அந்த குரூப் போட்டோவில், குறிப்பிட்ட ஒரு உருவத்தை ஆட்காட்டி விரலால் வட்டமிட்டபடி, “அப்பா, இவன் பேரு, இளவரசன், எல்லாரும் இளான்னு கூப்பிடுவோம். இவனோட பர்ஸ்ல தான், அந்த அம்மு பொண்ணோட போட்டோ பார்த்து இருக்கேன். எப்பவுமே இந்தப் போட்டோவ வச்சிருப்பான். நைட்ல அடிக்கடி இதை எடுத்து பார்ப்பான்.. கேட்டா ஒரு விரக்தி புன்னகை, அது மட்டுமே அவனோட பதிலா இருக்கும். யார்கிட்டயும் அவ்ளோ பேசமாட்டான். ஆனா.. என்னோட பேட்ச்ல இவன்தான் நம்பர் ஒன், சிறந்த டாக்(dog) ட்ரெயினராவும் இருந்தான். நாங்கல்லாம் இவன் எப்படியோ வருவான்னு எதிர்பார்த்திட்டு இருந்தா, திடீர்னு ஒருநாள், அவன் ட்ரெயின் பண்ன நாய்க்கு, சின்ன பார்வை குறைபாடுனால டீம்ல சேர்த்துக்க முடியாதுன்னு ஹையர் ஆஃபிசியல்ஸ் சொன்னதால, சண்டை போட்டுட்டு பேட்ச்ச கம்ப்ளீட் பண்ணாமயே போயிட்டான்.” என்றவன்,

“அப்பா, நீங்க சொன்னதை வச்சிப் பார்த்தா போலீஸாகனும்னு ஆசைப்பட்டிருக்கான். டாக் ட்ரெயினரும் கூட.. செத்தவங்கள்ல நாய் கடிச்சி இறந்தவங்கதான் ஜாஸ்த்தி, இவன் தான் அந்த கார்த்தின்னா, இவனுக்குத்தான் கொலைக்கான மோட்டிவ் அதிகமா இருக்கு. இவனைப் பிடிச்சா.. பாரதிய காப்பாத்த ஏதாவது வாய்ப்பிருக்கான்னு பார்க்கலாம்.” என்றான்.

செழியனின் தோளில் தட்டிக்கொடுத்து பெரு மூச்செறிந்தவர்,

“இருக்கலாம்பா, கோ அஹெட். ஆனால், அவன் இப்படி மாறினதுக்கு நானும் ஒரு காரணமோன்னு உறுத்துதுப்பா. நான் மட்டும் அன்னைக்கு அவனுங்கள தண்டிச்சிருந்தா, மே பி அவன் இப்படி ஆகி இருக்க மாட்டான். ஒரு நல்ல போலீஸ் ஆஃபிசரா இருந்திருப்பான்ல..” என்று கண் கலங்கிய அந்த மெல்லிய மனம் படைத்த தந்தை, செழியன் அறியாமல்.. கார்த்தியின் போட்டோவிடம் மன்னிப்பை வேண்டினார்.

கேஸில் ஒரு வெளிச்சம் கிட்டியதும், தன் முழு போலீஸ் ஃபோர்ஸையும் பயன் படுத்திய செழியன், அன்றைய இரவே கார்த்தியின் முன் நின்றிருந்தான்.

கண்டிப்பாக, கார்த்தி கடைசியாக நடைப்பெற்ற கொலையின் சுற்று வட்டாரத்தில் தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தவன், ஹாலில் மாட்டியிருந்த போட்டோவிலிருந்து, கார்த்தியின் முகத்தை மட்டும் ஜூம் செய்து தன் மொபைலில் படமாக்கிக் கொண்டான். அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள அத்தனை சிசிடிவி கேமரா பதிவுகளிலும், கார்த்தியின் போட்டோவை அனுப்பி செக் செய்யச் சொன்னவன், கூடவே நாய்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் இடங்களையும் கண்காணிக்கச் சொன்னான்.

தேடுதல் வேட்டை ஆரம்பித்து, அடுத்த இரண்டே மணி நேரத்தில், நாய்களுடன் கார்த்தி நடைபயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சிக்கியிருக்க,

அடுத்த சில மணித்துளிகளில், கார்த்தியைத் தேடி.. அந்த குறிப்பிட்ட வீட்டின் முன் நின்றிருந்தான், செழியன்.

செழியன் கேட்டை திறந்து உள்ளே சென்றதுமே, பாய்ந்து வந்த ஹென்றி! செழியனைக் கண்டதும்.. தன் இரண்டு காலை தூக்கியபடி, ஒற்றை காலை நெற்றியில் வைத்து சல்யூட் அடித்தபடி நின்றது.

ஹென்றியின் சல்யூட்டை வைத்தே தெரிந்துகொண்டான், இவன் தான் ட்ரெயினிங்கில் நிராகரிக்கப்பட்ட அந்த நாய் என்று.

ஹென்றி வாலாட்டியபடி நிற்க, அவனைத் தொடர்ந்து உள்ளிருந்து வந்தனர் மற்ற மூவரும். அனைவரும் ஒருத்தர் பின் ஒருத்தராக கட்டுக்கோப்பாக வர, கடைசியாக ஒரு புன்னகையுடன் வந்து சேர்ந்தான் கார்த்தி. அனைவராலும் இளா என்றழைக்கப்பட்ட கார்த்தி இளவரசன்.

முகத்தில் கொஞ்சமும் பயமோ பதற்றமோ இல்லாமல் வந்த கார்த்தி “என்ன ஆபிஸர், காதலியைக் காப்பாத்த புயல் வேகத்துல பறந்து வந்துட்ட போல, வெல்கம் மை ஹொம்.” என்றவன் “வா வா, நீ வருவன்னு தெரிஞ்சி உனக்கும் சேர்த்துதான் டின்னர் ரெடி பண்ணி இருக்கேன். கொஞ்சம் லேட் ஆகிடுச்சி. இருந்தாலும் பரவால்ல, வா சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” என்றான்.

ட்ரெயினிங்கில் யாருடனும் கலகலப்பாகப் பேசாதவன், இவ்வளவு பேசுவதே ஆச்சரியமாக இருக்க, கார்த்தியின் கதையை கடிதம் மூலம் தெரிந்துகொண்ட செழியனுக்கு, ஏனோ அவன் மேல் கடுமை காட்ட முடியவில்லை. எனவே எதுவும் பேசாமல் வீட்டுக்குள் நுழையவும்,, நடுஹாலில் ஒரு பக்க சுவரையே மறைத்தபடி வீற்றிருந்தாள் கார்த்தியின் அம்மு. செழியன் குட்டியாக பாஸ்போர்ட் சைஸில் பார்த்த அந்த போட்டோ, என்றும் வாடாத சந்தன மாலையோடு பெரிதுபடுத்தப்பட்டு மாட்டப்பட்டிருந்தது.

செழியனைத் தொடர்ந்து கார்த்தியின் சகாக்களும் உள்ளே வர,

செழியன் அமர இருக்கையை காட்டியவன் “இவன் ஹென்றி! மை படைத்தளபதி, இவன் பைரவ், இவன் ராக்கி அண்ட் கடைசியா மாறன் என்று செழியனுக்கு அறிமுகப்படுத்தி வைக்க, அவரவர் பெயர் சொல்லும் போதும், தனித்தனியே செழியனுக்கு சல்யூட் வைத்தனர், அந்த உயிர் நண்பர்கள்.

‘நல்ல ட்ரெயினிங்’ என்று மனதில் நினைத்துக்கொண்ட செழியனுக்கு, சாதுவாக இருக்கும் இவர்களா அவ்வளவு கொடூர கொலைகளை செய்தது என்ற ஆச்சரியம் எட்டிப் பார்க்காமல் இல்லை. அவர்களின் செயல்பாடுகள் தன் முதலாளியின் கட்டளையைப் பொறுத்தது என்று அறியாதவன் அல்லவா..?

அவர்களுக்கு கண் காட்டிய கார்த்தி, “எனக்கு சார் கூட கொஞ்சம் வேலை இருக்கு.. நான் பேசி முடிக்கிற வரை யாரும் இருந்த இடத்தை விட்டு அசையக்கூடாது.” என்று ஜாடை காட்ட, அனைவரும் செழியன் அமர்ந்திருந்த ஒற்றை ஷோபாவை சுற்றி நின்றிருந்தனர்.

அதைப்பார்த்த செழியனுக்கு, “இவனை நான் அரெஸ்ட் பண்ண வந்தேனா, இல்ல.. இவன் என்னை அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கானா?” என்ற சந்தேகம் முளைவிட்டது.

உள்ளே சென்ற கார்த்தி, தட்டில் இரண்டு ப்ரெட் ஆம்லெட் வைத்து எடுத்து வந்து செழியனிடம் தர,

“எனக்குத் தேவையானது இது இல்லைன்னு உனக்கு தெரியும் இளா..” என்றான். ட்ரெயினிங்கில் இளவரசன் என்பதால் இளா என்று அழைத்தே பழக்கம்.

“உன் லவ்வர அரெஸ்ட் பண்ணதிலிருந்தே சரியா சாப்பிட்டு இருக்க மாட்ட, சாப்பிடு. பொறுமையா என் கதையை கேட்டுக்கலாம்.” என்றான் கார்த்தி.

“எனக்கு உன் கதையும் தேவையில்ல.” என்று சொல்ல,

“ஓ.. என் கதையை உங்கப்பாகிட்ட கேட்டு தெரிஞ்சிக் கிட்டுதான வந்துருப்ப…” என்றவன் “ஆனா உனக்கு தேவையானதையும் தெரிஞ்சிக்கனும்னாலும், நீ இத சாப்பிட்டுத்தான் ஆகனும். பல வருஷமா தனியாதான் சாப்பிடுறேன், இன்னைக்கு நீ கம்பெனி குடுக்கக் கூடாதா..” என்றான் பிடிவாதமாக.

அவன் வார்த்தை மனதை தைக்க, சாப்பிடாமல் விடமாட்டான் என்று தோன்றவும், வேறு வழி இல்லாமல் செழியன் தட்டை வாங்கிக்கொண்டான். தனக்கும் சேர்த்து ஒரு தட்டை எடுத்து வந்தவன், செழியனின் எதிரில் அமர்ந்து கொண்டான்.

“நீ இவ்ளோ கூலா என்னை ஹேண்டில் பண்றதுலயே தெரியுது, நீ எல்லாம் தெரிஞ்சிதான் வந்திருக்கன்னு, இல்லைன்னா, இந்நேரம் என் முட்டிய பேத்திருக்க மாட்ட…!” என்று ஒரு வாய் எடுத்து வைத்தபடியே கார்த்தி ஆரம்பிக்க,

“ரொம்ப பேசுற இளா” என்ற செழியன், “பாரதிய உனக்கு எப்படி தெரியும், இதுல.. ஏன் அவள மாட்டிவிட்ட” என்றான்.

அதைக்கேட்டதும் பக்கென்று சிரித்த கார்த்தி, “என்னது நான் மாட்டி விட்டேனா, அந்தப் பைத்தியக்காரி, உன் மேல இருக்கற லவ்வுல அவளா வந்து மாட்டிக்கிட்டா. அப்புறம் என்னவோ அவ கொலையே செய்யாத மாதிரி பேசுற. உனக்கு நல்லாவே தெரியும். அதுல ரெண்டு கொலைகளை பண்ணது பாரதிதான்னு…” என்று சிரித்தவன் “ஓ.. எல்லா கேஸையும் எம்மேல போட்டுட்டு, அவளக் காப்பாத்த பாக்குறியா..?” என்றான் நக்கலாக.

“ஏன் நீ செய்யல, நீ செஞ்ச கொலைகளையும் அவ மேல போட்டுட்டு நீ ஜாலியா இருக்கல..” என்று செழியன் கோபப்பட,

“நானா அந்தப் பைத்தியக்காரிய எல்லா கொலையையும் செஞ்சதா ஒத்துக்கச் சொன்னேன்?” என்றவன், “அப்படியும் அவ மேல சந்தேகம் வரக் கூடாதுன்னு, விசாரணை நடந்த அன்னைக்கு அந்த மந்திரி பையனை கொன்னு தூக்கி வீசுனேன். வெளியதான் இன்னும் கொலைகாரன் இருக்கான்னு நினைச்சிக்கட்டும்னு. ஆனா… அவ அதையும் நாய வச்சி பண்ணேன்னு அவளுக்குச் சாதகமா மாத்திக்கிட்டா, வாட் கேன் ஐ டூ ப்ரோ…” என்று நிறுத்தினான்.

“அன்னைக்கு நான் தான் உன்னை போட்டுத் தள்ளக் கிளம்பினேன் தெரியுமா..?” என்று கார்த்தி சொல்லவும்,

“அவ என்னைக் கொல்லனும்னு கனவுல கூட நினைக்க மாட்டா” என்ற செழியன், ‘மேலே சொல்லு’ என்பது போல் அமைதியாக கார்த்தியை பார்க்க.

“எனக்கும் பாரதிக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சிக்கனுமா?” என்று சிறு புன்னகையுடன் கேட்ட கார்த்தி, “எங்களோடது, கொலை கார நட்பு நண்பா…” என்று சொல்லி, சத்தமாகச் சிரித்தான்.

எப்போதும் ஏதோ விரக்தியில் ‘புன்னகை என்ன விலைன்னு’ கேட்கும் இளாவா இது என்று அதிசயித்துப் பார்த்த செழியன், ‘இவன் அழகன்’ என்று மனதில் நினைத்துக் கொண்டான். பின்னே… அவனும் அல்லவா அந்தப் புன்னகையில் மயங்கி நிற்கிறான்.

இதை எதையும் கவனத்தில் கொள்ளாத கார்த்தியோ, தனக்கும் பாரதிக்கும் ஏற்பட்ட நட்பை பத்தியும்,  பாரதி அரெஸ்ட் ஆன தினத்தில் நடந்ததையும், எந்த ஒரு பிகுவும் செய்யாமல் செழியனிடம் விவரிக்க ஆரம்பித்தான்.