அத்தியாயம் – 15

திவ்யபாரதியை பத்திரமாக மீண்டும் செல்லுக்குக் கொண்டு வந்த செழியனுக்கு, மனது ஒரு நிலையில் இல்லை. நீதிபதி சொன்னது போல் திவ்ய பாரதியை மத்திய சிறைச்சாலையில் ஒப்படைக்கும் முன், செழியனுக்கு நிறைய தெரிய வேண்டி இருந்தது. கிட்டத்தட்ட தூக்கு தண்டனை உறுதியாகி விட்ட நிலையில், இன்னும் இந்த கேஸில் எங்கோ இடிப்பது போல் செழியனுக்குத் தோன்றியது.

கண்டிப்பாக அந்த நூலைப்பிடித்துக்கொண்டு அவன் முன்னேறி ஆக வேண்டும். இதன் மூலம் தன்னவளை காப்பாற்ற, சிறு இழை கிடைத்தாலும் விடமாட்டான்.

‘ஆனால் அந்த நுலின் நுனி எங்கே…? திவ்யபாரதி வாய் திறக்கப்போவதில்லை. ஆனால், நான் இப்படியே விட்டு விட முடியாது’ என்று முடிவு செய்து கொண்டவனுக்கு, திவ்யபாரதியை தனியே விட்டுச் செல்லவும் மனதில்லை.

‘கண்டிப்பாக, அந்த மந்திரி திவ்யபாரதியை மத்திய சிறையில் ஒப்படைக்கும் முன், கொலை செய்ய முயற்சி செய்வான். அவன் மீது ஏற்கனவே பல கேஸ்கள் நிலுவையில் உள்ளது. இப்போது அவன் ஆளும் கட்சியாக வேறு இருப்பதால், மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திவ்யபாரதியை யாரையும் நம்பி விட்டுச் செல்ல முடியாது.’ யோசித்து யோசித்து தலையை பிடித்துக்கொண்டான் செழியன்.

அப்போது “சாரி சார்” என்ற குரலில் நிமிர்ந்தவன் முன் நின்றிருந்தாள், ரெஜினா.

“என்ன..?” என்பதாய் புருவங்களை விரித்தவனிடத்தில்..

“நான் திவ்ய பாரதிய தப்பா நினைச்சிட்டேன் சார், ஷி இஸ் கிரேட், நாமெல்லாம் அந்த சூழ்நிலையக் கடந்து இருப்போமான்னே தெரியாது, ஆனால் அவங்க..” என்று சற்று நிறுத்தியவள், “அவங்கள கொலைகாரின்னு சொன்ன நான், இப்போ பரம விசிறி ஆகிட்டேன்.” என்றாள் மூச்சு விடாமல்.

திவ்ய பாரதியை, அக்கியூஸ்ட் என்று சொன்ன வாய், வார்த்தைக்கு வார்த்தை மரியாதையாக அழைப்பதை பார்த்திருந்தவன்,

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்றிங்களா ரெஜினா?” எனக் கேட்டவன், அவள் சம்மதத்திற்கு காத்திராமல் “எனக்காக திவ்யபாரதிய பத்திரமா பாத்துக்கறிங்களா? உங்களுக்கே தெரியும், இப்போ அவ என்ன மாதிரியான ஆபத்துல இருக்கான்னு, ஆனா, நான் வெளிய போயே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். ப்ளீஸ், உண்மையாவே அவளை நம்புறிங்கன்னா, எனக்கு இந்த ஒரு உதவி மட்டும் செய்யுங்க.”

என்று கேட்டவனுக்குத் தெரியும், அவன் எப்படியோ ரெஜினாவும் அப்படியே. அவளிடம் ஒப்படைத்தால் தன் உயிரையும் கொடுத்து காப்பாத்துவாள் என்று. அதனால் ரெஜினாவை நம்பி திவ்யபாரதியை ஒப்படைக்கத் தயாராக இருந்தான்.

முதலிலும் அந்த நம்பிக்கை ரெஜினா மீது இருந்ததினால் மட்டும் தான் விட்டான். ஆனால் தவறான புரிதலின் காரணமாக, ஏதோ தவறு நடந்து விட்டது.

ஆனால் ரெஜினா கண்களில் தற்போது இருந்த உண்மையான வருத்தம், அவனை மீண்டும் நம்பச் சொன்னது. இன்னொன்று அவனுக்கு வேறு வழியும் இல்லை. ரெஜினா மட்டுமே பணத்துக்கோ, அதிகாரத்துக்கோ விலை போக மாட்டாள். வேறு யாரையும் நம்ப அவன் தயாராக இல்லை.

செழியனின், இந்த நம்பிக்கையில் அவன் தன்னை மன்னித்துவிட்டதை அறிந்த ரெஜினா, “கண்டிப்பா சார்” என்று மகிழ்ச்சியுடன் சொல்லவும்,

செழியன் சிறு சந்தேகத்தோடு பார்க்க, அவன் கண்களை நேருக்கு நேர் ஏறிட்டவள் “நம்புங்க சார், யாரா இருந்தாலும் என்னைத் தாண்டிதான் திவ்யபாரதிய தொட முடியும். இட்ஸ் அ ப்ரோமிஸ்.” என்றாள்.

அதில் முழு நம்பிக்கை பெற்ற செழியன், கடைசி வாய்ப்பாக எண்ணி திவ்யபாரதியை தேடிச் சென்றான்.

நேராக செல்லைத் திறந்து திவ்யபாரதியிடம் வந்தவன், “இன்னும் என்ன எல்லாம் என்கிட்ட இருந்து மறைச்சி வச்சிருக்க பாப்பு!” என்றான் கோபமாக.

அவன் கேள்வியில் சிறிது அதிர்ந்தாலும், பின் அதனை மறைத்தவளாய் “உங்ககிட்ட மறைக்க என்கிட்ட என்ன இருக்கு DSP” என்றாள்.

“ஆஹான்..” என்று நக்கல் மிகுந்த குரலில் கேட்டவன், “அத வந்து சொல்றேன், அதுவரைக்கும் பத்திரமா இரு” என்று சொல்லிவிட்டு, திரும்பியும் பாராமல் வெளியேறி விட்டான்.

திவ்யபாரதிதான் தவித்துப்போனாள் செழியனைப்பற்றி நன்கு அறிந்தவள் அல்லவா…?

செழியன் வெளியே சென்றதும், உள்ளே வந்தாள் ரெஜினா.

உதட்டில் முகிழ்த்த சிறு புன்னகையால் வரவேற்பாய் திவ்யபாரதி தலையசைக்க, சற்று அசந்து தான் போனாள், ரெஜினா.

தான் நடந்து கொண்ட விதத்துக்கு தன்னை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டாள் என்று நினைத்திருக்க, மாறாக அவளின் புன்னகையோ, ரெஜினாவின் குற்ற உணர்வை மேலும் அதிகரித்தது.

“என்னை மன்னிச்சிடுங்க பாரதி.” என்று மன்னிப்பு கேட்கவும்,

வியப்பாகப் பார்த்த பாரதி “இதுல மன்னிக்க என்ன இருக்கு, என் கொலைகளுக்கான நியாயம் எனக்கு, உங்களைப் பொறுத்த வரை  நான் குற்றவாளி தானே!” என்றாள்.

“இல்ல எனக்கு கொஞ்சம் பெர்சனல் வெஞ்ஜன்சும் உங்க மேல இருந்தது, அதான் அப்படி கடுமையா நடந்துக்கிட்டேன்.” என்று ரெஜினா தயக்கமின்றி ஒத்துக்கொண்டாள்.

அதைக்கேட்டு மெலிதாக சிரித்த திவ்யபாரதி “அந்த மனுஷன யாருக்குத்தான் விட்டு குடுக்க மனசு வரும். நானா இருந்தா, இத விட மோசமா நடந்து இருப்பேனா இருக்கும்.” என்றாள்.

“அப்போ.. உங்க மனசுலயும் காதல் இருக்கு, சரியா..?” என்று புன்னகையுடன் கேட்டவளிடம்,

“மனசுல இருக்கு. ஆனா உடம்பு ஏத்துக்காதே..!” என்று விரக்தியாகச் சிரித்தவள், “என் செழியனோட குழந்தைங்க வத வதன்னு என் மடியில விளையாடணும்னு ஆசை, அதுக்கு அவன் நல்ல பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்ல?” என்று கேள்வி கேட்டவள், “நீங்க செழியன நல்லா பாத்துக்குவீங்கன்னு நம்பிக்கை இருக்கு.” என்றாள்.

அதைக்கேட்டு புன்னகைத்த ரெஜினா, “உங்களுக்கு அடுத்து காக்கி சட்டைக்கு மட்டும் தான் அந்த இடம்ன்னு அவர் தெளிவா சொல்லிட்டாரு.” என்றாள்.

அவள் இதயத்திலும் லேசாக வலித்தாலும், முன்பிருந்த கோபம் இல்லை, நிறைவாகவே உணர்ந்தாள். அது உண்மை காதலுக்கு அவள் தரும் மரியாதை.

ஏற்கனவே தெரிந்ததுதான். இருந்தாலும் இன்னொருவர் வாய் வழி கேட்கும் போது, இந்த ஜென்மத்துக்கும் இது போதும் என்று தன்னவனின் காதலில் தன்னையே தொலைத்துக் கொண்டாள் பாரதி, அவனின் பாப்பு.

…………………

அதே நேரம், செழியன் எதிர்பார்த்தது போலவே.. திவ்ய பாரதியை கொல்ல, சதித் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான், அந்த மந்திரி.

புள்ளையை வாரி கொள்ளையில் போட்டவனுக்கு வெறி அடங்கவில்லை. தன் பொறுக்கித் தனத்துக்கு சற்றும் சளைக்காமல் பிறந்திருந்த பிள்ளையை கண்டிக்காமல் தட்டிக்கொடுத்ததன் விளைவு என்று உணர, அவன் தயாராய் இல்லை. எத்தனையோ பலிபாவங்களை செய்து இந்த நிலைக்கு வந்திருந்தவன், இப்போது தன் ஒற்றை வாரிசை அழித்த திவ்யபாரதியை, கொன்று கூறு போடத் தயாராக இருந்தான்.

செழியனை மீறி ஜெயிலில் திவ்யபாரதியை ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்துகொண்ட அந்த பெரிய முதலை.. அவளைக் கொல்ல, வேறு திட்டம் போட்டுக் கொண்டிருந்தது. தன் திட்டப்படி திவ்ய பாரதியை  மத்திய சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் கொல்வது என்று முடிவு செய்தவர், தனக்காகவே நிழல் வேலைகள் செய்யும், அந்த லாரி டிரைவரை போனில் அழைத்து, வீட்டுக்கு வரச் சொன்னார்.

அவன் வந்ததும் செய்ய வேண்டியவற்றை சொல்லி, இரண்டு கட்டுகள் பணத்தை தூக்கிப் போட, லாவகமாக பிடித்துக்கொண்ட அந்த டிரைவரும் “கட்சிதமா முடிஞ்சிடுங்க அய்யா, நீங்க கவலைப்படாதீங்க” என்றவன் விசிலடித்துக் கொண்டே சென்றுவிட்டான்.

இங்கு செழியனோ, திவ்ய பாரதி சம்பந்தப்பட்ட அணைத்து பைலையும், நியூஸ் பேப்பர்களையும் அள்ளிக்கொண்டு தன் வீடு வந்து சேர்ந்தான். அனைத்து ஃபைலையும் ஷோபா செட்டின் அருகிலிருந்த டேபிளின் மீது போட்டவன், அந்த ஒற்றை ஷோபாவில் தானும் அமர்ந்து கொண்டு ஒவ்வொன்றாக பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். எந்த இடத்தில் தவறு நடந்திருக்கிறது என்று அனைத்தையும், முதலில் இருந்து அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அப்படி ஆரம்பித்தவனுக்கு, ஒன்று மட்டும் தெளிவாக விளங்கியது, ‘திவ்ய பாரதி யாரையோ காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள். அது யார்? அவனோ, இல்லை அவளோ.. அது யார்? எப்படி? இவர்களுக்குள் என்ன சம்பந்தம்?’ இப்படி வரிசையாக கேள்விகள் குடைய, யோசித்து யோசித்து தனக்குள் குழம்பிக் கொண்டிருந்தான்.

திவ்யபாரதி கோர்ட்டில், நடந்த எல்லா கொலைகளுக்கும் விளக்கம் அளித்திருக்கவில்லை. செய்யாத கொலைகளுக்கு எப்படி விளக்கம் தர முடியும். அந்தக் கேள்விகளை, அவள் லாவகமாக தவிர்த்திருப்பது இப்போது புரிந்தது. ஆனால் அவளையும் அறியாமல் அவள் கொடுத்த ஸ்டேட்மென்ட் தான், செழியனை யோசிக்க வைத்தது. மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் செழியனுக்குத் தெரியுமே, பாரதிக்கு நாய் என்றாலே பயம் என்று.

அப்படி இருக்க, அவள் நாயை வளர்த்து இருப்பாள் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அவளிடம் நாய் தற்போது எங்கிருக்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கு, கோர்ட்டில் பதில் அளிக்க மறுத்து விட்டிருந்தாள், சாகத் துணிந்தவளுக்கு எந்தக் கேள்விகளும் பொருட்டே அல்ல, தான் சொல்ல நினைத்ததை மட்டுமே கோர்ட்டில் சொல்லி இருந்தாள்.

ஆனால், செழினுக்கு அப்போதிருந்தே மனதில் உறுத்த ஆரம்பித்துவிட்டது. அதற்கு வலுவான காரணமும் செழியனிடம் இருந்தது.

ஒரு முறை டியூட்டி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் தான் பார்த்தான், திவ்யபாரதி தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்த நாய்களைப் பார்த்துவிட்டு, உடல் நடுங்க நின்றிருந்ததை. வெகுநேரமாக நின்றிருப்பாள் போலும், அவள் உடல் வியர்வையால் குளித்திருக்க, கண்களில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.

அவனும் என்னதான் செய்கிறாள் பார்ப்போம் என்று ஓரமாக காரை நிறுத்தி, தன்னவளை சைட் அடிக்க ஆரம்பித்து விட்டிருந்தான்.

பாரதியோ குளிரில் நடுங்குவது போல கையை கன்னத்தில் வைத்துக்கொண்டிருக்க, அவள் பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்து இருந்தது. போக போகத்தான் திவ்யபாரதியின் பயம் வித்தியாசமாகத் தெரிய,

காரிலிருந்து இறங்கிய செழியன், நாயை விரட்ட குனிந்து கல் எடுக்கவும், அவை தலை தெறிக்க ஓடின.

நாய்கள் ஓடி மறைந்த அடுத்த நொடி, எதற்கோ பயந்தவள் போல நின்றிருந்த பாரதி, “திவி…” என்று அலறிக் கொண்டே செழியனை ஓடி வந்து கட்டிக்கொண்டாள். அப்போது இருந்த நிலையில் சைட் அடிக்க வந்தவனுக்கு, ஜாக்பாட்டே அடிக்க…  அவளின் வித்தியாசம் மனதில் பதியாமல் போனது. அன்றைய மோசமான இரவின் எச்சமாகத்தான் அவள் நடுங்கி இருக்க வேண்டும். தன்னைக் கண்டதும் தனக்கு நெருக்கமான திவ்யாவாக உணர்ந்துதான், அன்று ஓடி வந்து அணைத்து இருக்கிறாள் என்று, இன்று புரிந்து கொண்டான்.

இந்த நிகழ்ச்சிதான் இப்போது, திவ்யா இந்த அணைத்து கொலைகளையும் செய்திருக்க வாய்ப்பில்லை என்று அவனை துரத்திக்கொண்டிருக்கிறது. ஏனெனில் திவ்யா செய்த முதல் கொலை, நாகராஜ் என்று வைத்துக்கொண்டால், அதற்கு முன்பே இருவர் கொல்லப்பட்டிருந்தனர். அப்படியிருக்க… நாய்களால் கடித்து குதறப்பட்டிருந்த அந்தக் கொலைகளை செய்தது யார்..?

விசாரணையில் சிசிடிவி ஜாமர் கருவிகளை பயன்படுத்துவதை ஏற்கனவே பாரதி ஒப்புக்கொண்டுவிட்டாள். இப்போது மந்திரி மகனின் பிணங்கள் கிடைத்திருப்பதோ, ஆள் அரவமற்ற புறநகர்ப் பகுதியில், அங்கு எந்த cctv கேமராக்களும் இல்லை.

இதை வைத்துக்கொண்டு, இதற்கு மேல் முன்னேறவும் வழி இல்லாமல், தன்னவளை எப்படி காப்பது என்றும் தெரியாமல், தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான், செழியன்.

‘யாரையோ காப்பாற்ற நினைக்கும் திவ்யபாரதியிடம், என்ன கேட்டாலும் பதில் சொல்லப்போவதில்லை. இந்த நிலையில் யாரைக் கேட்பது? எப்படி தன்னவளை மீட்பது..?’

தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தவன் முன், காபி கப் ஒன்று நீட்டப்பட்டது.

அவன் தலையும் ஆதரவாகக் கோதப்பட, அந்தப் பரிசத்துக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவன் போல, விஷுக்கென நிமிர்ந்தவன் “அப்பா..” என்று எழுந்து கட்டிக்கொண்டான்.

காபி கப்பை அருகில் வைத்த மகேந்திரனும், ஆதரவாக மகனைக் கட்டிக்கொண்டார்.

அன்று கேஸ் என்னாயிற்று என்று கேட்பதற்காக மகனுக்கு போன் செய்திருக்க, தனக்கு மனைவியாக வர வேண்டியவளே குற்றவாளியாய் நின்ற அதிர்ச்சியில் இருந்த செழியன், தன் தந்தையின் ஃபோன் வரவும் பேச முடியாமல் திணறியவன், “அப்..பா.. பாப்பு… பாரதி..” என்றதோடு, மேற்கொண்டு பேச முடியாமல் கட் செய்துவிட்டான்.

முதல் முறை மகனின் கலக்கத்தைக் கண்டவர், பதறித்தான் போனார். செழியனின் பாப்பு என்ற அழைப்பே,  ஆயிரம் கதை சொல்ல, இப்போது மகனுக்கு ஆறுதல் தேட ஒரு இடம் தேவை என்றுணர்ந்தவர், அடுத்த நொடி ஃப்ளைட் ஏறி விட்டார்.

இங்கு வந்ததுமே, தன் நண்பன் மூலம் காலையில் கோர்ட்டில் நடந்தவற்றை முழுமையாகத் தெரிந்துகொண்டவர் மகனுக்காகக் காத்திருந்தார்.

ஒருவேளை செழியன் வீட்டுக்கு வந்திருக்காவிட்டால் ஸ்டேஷன் சென்று பார்க்கத் தயாராக இருந்தவர் தான், செழியனின் கார் சத்தம் கேட்கவுமே, மகனுக்காக காபி தயாரித்து எடுத்து வந்திருந்தார்.

செழியன் தன் தந்தையை கண்ட ஆனந்தத்தில், புது தெம்பு கிடைத்தது போல் உணர்ந்தவன், எழுந்த அவசரத்தில் மடியில் இருந்த ஃபைலை தவற விட்டிருக்க, அதில் இருந்த பேப்பர்கள் எல்லாம் திசைக்கொன்றாகச் சிதறி, அதிலிருந்த போட்டோ ஒன்று, அவன் தந்தையும், முன்னாள் ஐஜியுமான மகேந்திரனின் காலடியில் விழுந்தது.

தன் காலடியில் குப்புற விழுந்துகிடந்த போட்டோவை கையில் எடுத்த செழியனின் தந்தை மகேந்திரன், அதன் முன் பக்கம் திருப்பிப் பார்த்தவர், “நாகராஜ்…” என்று அழுந்த உச்சரித்தார்.