கோர்ட்டில் திவ்யபாரதியின் கேஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவள் பெயர் அழைக்கப்பட, எந்த வித தயக்கமோ, பயமோ இல்லாமல், கம்பீரமாக நடந்து வந்தவளின் மீது நீதிபதியின் பார்வை படிந்து மீண்டது.
தவறு செய்திருக்க வாய்ப்பில்லை என்று அடித்துச் சொல்லும்படியான முகம், அதில் நான் தான் செய்தேன் என்று தெனாவட்டு காட்டும் கண்கள். கண்களால் திவ்யபாரதியை அளவெடுத்த நீதிபதி, விசாரணையை ஆரம்பிக்கச் சொல்லி கட்டளையிட. அரசு தரப்பு வக்கீல் சார்பில் கேள்விகள் கேட்கப்பட்டது.
வக்கீல் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் நிமிர்வாக நின்று பதில் அளித்தவள், நடந்த அனைத்து கொலைகளையும் தானே செய்ததாக ஒப்புக்கொண்டாள், திவ்ய பாரதி.
கொலைக்கான முகாந்திரத்தைக் கேட்ட வக்கீலிடம், “அவர்கள் பூமிக்கு பாரம்.” என்று நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவள், “நாலாவதா செத்தானே, வடமாநிலத்துக்காரன் அவன் கிட்ட இருந்து ஆரம்பிக்கவா..?” என்று சர்வ சாதாரணமாக ஏதோ சினிமாவுக்குப் போய் விட்டு வந்து கதை சொல்வது போல் கேட்கவும்,
ஜட்ஜே ஒரு நிமிடம் அதிர்ந்து தான் பார்த்தார்.
ஜட்ஜை திரும்பிப் பார்த்த திவ்யபாரதி, “அந்தப் பன்னாடை பேரு, அமல்ராஜ். அன்னைக்குக் காலையில் டீ குடிக்கும் போது தான், அந்த மூஞ்ச பேப்பர்ல பார்த்தேன். அந்த நாய், பக்கத்து வீட்ல விளையாடிகிட்டு இருந்த 6 வயசு பிள்ளையை நாசம் பண்ணி, நடுத்தெருவுல போட்டுட்டு போயிருக்கு. அதுக்கு உங்க நீதிமன்றம் கொடுத்த அதிகபட்ச தண்டனை என்ன தெரியுமா..?” என்று நீதிபதியை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டவள்,
“அந்தப் பரதேசிக்கு, 17 வயசே ஆனதால, வெறும் ஒரு வருஷம் சிறார் சீர்திருத்தப்பள்ளி வாசம்.. அவ்ளோதான்… அவ்வளவேதான்.” என்று விரக்திச் சிரிப்பொன்றை சிந்தினாள்.
“அதான், அவன் நம்பர என்னுடைய பத்திரிக்கை ஐடென்டிய வச்சி, ரொம்ப கஷ்டப்பட்டு தெரிஞ்சிக்கிட்டேன். அவனை பேசிப் பேசியே கோவைக்கு வரவச்சி, கதற கதறக் கொன்னேன்.”
என்று சொன்னவளின் முகத்தில், கொஞ்சமும் வருத்தமோ, பயமோ இல்லை. மாறாக அவனைக் கொன்று தன்னைத்தானே சாந்தப்படுத்திக் கொள்ளும் காளி தேவியாக, ஆவேசம் கொண்டு நின்றிருந்தாள்.
அவள் ஆவேசம் கண்டு, செழியன் கையாலாகா தனத்துடன் அவளையே வெறித்திருந்தான். இன்னும் விசாரணையில் தன்னவள் படப்போகும் வேதனையை நினைத்து, ரண வேதனை கொண்டான், அந்த மென் காதலன்.
“அடுத்ததா, அந்த எக்ஸ் MLA பையன்.” என்றவள்,
“அந்தப் பரதேசி, வெளிநாட்டுல படிச்சிட்டு 15 நாள் முன்னாடி தான், இங்க வந்திருந்தான். அவன் வீட்ல வேலை பார்க்குற சாந்தாக்கா தான் என் வீட்லயும் சமைக்கிறாங்க.” என்று மௌனமானவள், சற்று நிதானித்துக் கொண்டாள், பின்னர் “அன்னைக்கு நைட் 7 மணி இருக்கும்.” என்றவள் அன்றைய சம்பவங்களை நீதிபதியின் முன் விவரிக்க ஆரம்பித்தாள்.
கொலை நடந்த அன்று :
பட படவென கதவு தட்டப்பட, கதவைத் திறந்தாள், திவ்யபாரதி.
பதற்றமாக வெளியே நின்றிருந்த சாந்தா, “பாரதிம்மா! இன்னைக்கு ஒருநாள் வெளிய சாப்பிட்டுக்கிறியா, ஸ்கூல் போன என் பொண்ண இன்னும் காணும் பாரதிமா. எங்க வூட்டுக்காரு தேடிக்கினு போய் இருக்குது. ஸ்கூல்ல கேட்டா வாட்ச் மேன் எப்பவோ எல்லாம் போய்ட்டாங்கன்னு சொல்றான். கொஞ்சம் பயமா இருக்குதுமா. அதான், நானும் அது ப்ரண்ட்ஸுங்க வீட்டல்லாம் கொஞ்சம் பாத்துக்கினு வரேன். இன்னைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ கண்ணு.” என்று சொல்லிவிட்டு கிளம்பப் போகவும்,
தடுத்த திவ்ய பாரதி “அக்கா இருங்க, நடந்தே எத்தனை இடம் போய் தேடுவிங்க..? இருங்க, நானும் வரேன்.” என்றவள் தன் வண்டியின் பின்னால் ஏற்றிக்கொள்ள, ஒவ்வொரு வீடு வீடாகச் சென்றவர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.
கடைசியாகப் பார்த்த பெண் மட்டும், “அமுதா, தன் அம்மாவைப் பார்க்க, அவர் வேலை செய்யும் பண்ணை வீட்டுக்குப் போகப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.” என்று சொல்லவும்,
“மகமாயி” என்று கையெடுத்து கும்பிட்ட சாந்தா, “நன்றி” சொல்லி விட்டுத் தான், வேலை செய்யும் பண்ணை வீட்டை நோக்கி, இருவரும் கிளம்பினார்கள்.
வண்டியில் வர வர, “சமயத்துல, அமுதா என்னை தேடிக்கிட்டு அங்கேயே வந்துரும்.” என்ற சாந்தா, “அங்க இருக்க ஜாதி மல்லினா, அதுக்கு உசுரு, நான் கூட்டிப் பெருக்கக்குள்ள பூவெல்லாம் பறிச்சி கட்டிடும்.” என்று வழி வழியே சொல்லிக்கொண்டே வந்தார்.
“எப்பயும் அந்த வூட்ல ஆள் இருக்க மாட்டாங்க பாரதிமா, கூட்டி பெருக்கிட்டு மட்டும் வந்துருவேன். இப்போதான் நாலு நாளா, அந்தத் தம்பி வந்து தங்கியிருக்கு.” என்றவர், “இன்னைக்கு ஏதோ பார்ட்டி இருக்காம், சமைக்க வேண்டாம்னு சொல்லிருச்சி. அதான் நான் சீக்கிரம் வந்துட்டேன். அது தெரியாம, இந்தக் குட்டி அங்க போய் இருக்கும் போல…” என்றவர் “அந்தத் தம்பி விளையாட்டுப் புள்ள, எப்ப பாரு அமுதா வந்தா அது கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கும்.” என்று கள்ளம் கபடமின்றி இடைவிடாமல் சொல்லிக்கொண்டு வந்தார்.
“நேரம் காலம் தெரியாம, இந்தப் புள்ள அங்கேயே விளையாடிக்கிட்டு இருக்கு போல, போய் வச்சிக்கிறேன் கழுதைக்கு.” என்று வைது கொண்டே வரவும், அந்த மினி பங்களா வீடும் வந்திருந்தது.
திவ்யபாரதி வண்டியை நிறுத்திக்கொண்டிருக்க, வெளி கேட்டை திறந்து, அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்த சாந்தா,
“அமுதா… ஏய் அமுதா… எங்கடி இருக்க, பொழுது போனா வூட்டுக்கு வரத் தெரியாதா?” என்று வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தார்.
உள்ளிருந்து வந்த இளைஞன் ஒருவன், கொஞ்சம் போதையில் இருந்தான் போலும் வந்தவன், “அக்கா, அமுதா எப்பவோ போயிருச்சே.” என்றான்.
அப்போதுதான், திவ்யபாரதி வண்டியை நிறுத்தி விட்டு வரவும், அவளை யார் என்று பார்த்தான்.
அவன் விழியில் மின்னல் போல் சற்று எச்சரிக்கை உணர்வு வந்து சென்றதை கவனித்தாள், திவ்யபாரதி. அப்போது உள்ளிருந்து மேலும் இருவர் வரவும்,
அந்த இளைஞனோ, “இன்னுமா வீட்டுக்கு வரல” என்றவன், “நீங்க இல்லன்னதும் உடனே கிளம்பிட்டா, நான்தான் பார்ட்டில இருந்த கேக்க குடுத்து, அத சாப்பிடச் சொன்னேன். சாப்பிட்டு உடனே கிளம்பிட்டா.” என்றான்.
மேலும் “நான் கொஞ்சம் குடிச்சிட்டேங்க்கா. இல்லனா, நானே உங்க கூட தேட வருவேன்..” என்றான் பரிதாபம் போல..
அவன் பதிலில், சாந்தாவுக்கு பயம் வயிற்றைப் பிரட்ட, புலம்ப ஆரம்பித்து விட்டார்.
“சரி தம்பி” என்று சொல்லி வெளியே வந்ததுமே, இவ்வளவு நேரம் திறந்திருந்த வெளி கேட்டை, பூட்டிக் கொண்டான்.
சாந்தா கதற ஆரம்பிக்க, அவரை ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்த திவ்ய பாரதி. தான் தன் பத்திரிக்கை நண்பர்களுடன் சேர்ந்து தேடுவதாகச் சொன்னவள், மேலும் இப்போது அமுதா வீட்டுக்கு வந்தாலும் வந்திருக்கலாம் என்று சமாதானப்படுத்தி, சாந்தாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்.
அவர் சென்றதும், வண்டியை தூரமான மரத்தடியில் பார்க் செய்தவள், கோணி ஊசியை விட சற்று பெரியதான ஊசி போன்ற சாதனத்தை, தன் வண்டியின் பாக்ஸிலிருந்து எடுத்துக்கொண்டாள். பிரத்யேகமாக, வடிவமைத்து வாங்கி வைத்திருந்தாள், தன் பாதுகாப்பிற்காக.
அந்த இளைஞனின் பார்வை, சந்தேகத்தை பாரதியினுள் விதைத்திருந்தது. அவன் அமுதா கேக் சாப்பிட்டாள் என்று சொன்னதுமே, ஏதோ தப்பாக இருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.
ஏனெனில், அமுதாவுக்கு கேக் என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. திவ்ய பாரதியின் வீட்டுக்கும் அமுதா வருவாள். அப்போது திவ்ய பாரதி கேக் கொடுத்தால், அமுதா தனக்குப் பிடிக்காது என்று சொல்லி, சாப்பிட மறுத்து விடுவாள்.
எனவே, அவன் மீது இருந்த சந்தேகம் வலுகொண்டது திவ்யபாரதிக்கு.
வெளி கேட்டை பூட்டிவிட்டதால், காம்பவுண்டின் கம்பிவேலியை வளைத்து உள்ளே நுழைந்தவள், சுற்றி முற்றி நோட்டம் விட ஆரம்பித்தாள். திறந்திருந்த ஜன்னல் வழியாக மெதுவே எட்டிப்பார்க்க, அங்கே அமுதா இருப்பதற்கான எந்த அரவமும் இல்லை. அந்த மூவரும் மேற்கொண்டு இன்னும் இன்னும் குடித்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் மற்றைய இருவரும் கால் டாக்சி வரவழைத்து கிளம்பி விட,
கேட் வரை சென்று வழியனுப்பிவிட்டு அந்த இளைஞன் திரும்புவதற்குள், திவ்யபாரதி.. திறந்திருந்த வீட்டினுள் நுழைந்து தேட ஆரம்பித்தாள்.
அவன் வரும் அரவம் கேட்கவும், அந்தப் பெரிய சோபாவின் பின்புறம் மறைந்து கொண்டாள்.
திரும்பி வந்தவன், சிரித்துக்கொண்டே, ஒரு அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றான். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வாயிலும் பிளாஸ்டர் போடப்பட்டிருக்க, அமுதாவை அப்படியே கைகளில் அள்ளி வந்தவன், அப்படியே சோபாவில் தூக்கிப்போட்டு, அருகில் அமர்ந்து தோள் மேல் கையைப் போட்டுக்கொண்டே,
“ஏய்.. சின்னக்குட்டி..! நான் என்ன செஞ்சாலும் பேசாம இருந்தீன்னா, சீக்கிரமே உங்க அம்மாகிட்ட அனுப்பிடுவேன்.” என்று சொன்னவன், அவள் ஆடைமீது கைவைக்கப் போக,
பின்னிருந்து தாக்கப்பட்ட ஒரே அடியில், அப்படியே ஷோபாவில், அமுதா மீதே சாய்ந்திருந்தான்.
திவ்ய பாரதிதான், தன் கராத்தே வெட்டை அவன் கழுத்தை நோக்கிக் கொடுத்திருந்தாள். அவன் சுதாரிக்கும் முன், தன் ஸ்டோலை அவன் கழுத்தில் போட்டு இறுக்கி, ஷோபாவின் பின்னிருந்தே தூக்கிப் பிடித்துக் கொள்ள,
பயத்தில் ஷோபாவிலிருந்து உருண்டு கீழே விழுந்த அமுதா, திவ்யபாரதியைக் கண்டதும், கண்ணீல் நீர் வடிய,
“ம்ம்.. ம்ம்..” என்று முனங்கிகொண்டே, தவழ்ந்து திவ்யபாரதியை நோக்கி வந்தாள்.
ஒற்றைக்கையால் ஸ்டோலை இறுக்கிப் பிடித்துக்கொண்ட திவ்யபாரதி, மற்றொரு கையால் அமுதாவின் கைகளை அவிழ்த்து விடவும், அமுதா காற்கட்டையும், வாயிலிருந்த பிளாஸ்டரையும் விலக்கிக் கொண்டாள்.
எதிர்பார்க்காத அடியில் திகைத்திருந்தவன், இப்போது திமிர ஆரம்பிக்க, மீண்டும் இருகைகளால் இறுக்கிப் பிடித்த திவ்யபாரதி,
அமுதாவிடம் “இங்கிருந்து ஓடு முதல்ல. என் வண்டி அங்க மரத்துக்கிட்ட நிக்கும், அதுகிட்ட போய் நில்லு.” என்றவள், “நான் வர வரைக்கும் அங்கயே நில்லு, எங்கயும் போய்டாத.” என்று துரிதமாக ஓடச் சொன்னாள்.
9வது படிக்கும் அமுதாவுக்கு, தனக்கு நடக்க இருந்தது இன்னது என்று புரிந்த படியால், திரும்பியும் பார்க்காமல் வெளியே ஓடி விட்டாள்.
அவள் கதவைத் தாண்டிய அடுத்த நொடி, ஒற்றைக்கையால் இடுப்பிலிருந்து ஊசியை எடுத்த திவ்யபாரதி, ஓரே இறக்காக அந்தக் கயவனின் பின் கழுத்தில் இறக்கி இருந்தாள். பின் கழுத்தில் இறக்கிய ஊசி, அவன் முன் கழுத்தின் தொண்டைக் குழி வழியாக வெளியே எட்டிப்பார்க்க, விழிகள் நிலை குத்திய நிலையில், இரத்தம் வழிய, சரிந்திருந்தான், அந்தக் காமுகன்.
மீண்டும் அந்த ஊசியை உருவி எடுத்தவள், “உங்களுக்கெல்லாம் அந்தப் பிஞ்சி உடம்பு கூட காமப்பெட்டகமா தெரியுதாடா, பரதேசி நாயே!” என்று திறந்திருந்த அவன் இரு கண்களிலும் மாறி மாறி குத்தியவள்.. அப்படியும் வெறி அடங்காதவளாக, “ஆ..ஆ. வென்று வெறிகொண்டு கத்திக்கொண்டே, அவன் உடம்பில் கண்ணில் பட்ட இடங்களில் எல்லாம் குத்தி குத்தி எடுக்க,
ஏற்கனவே கம்பி வேலியை வளைக்கும் போது, காயம் பட்டிருந்த கைகள் இரத்தத்தை சிந்த, அதன் பிறகே தன் ருத்ர தாண்டவத்தை நிறுத்தி இருந்தாள். காலால் அலட்சியமாக எட்டி உதைத்து கீழே தள்ளியவள், நிதானமாக அவன் கழுத்திலிருந்த ஸ்டோலை உருவி, அதில் ஊசியில் படிந்திருந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டாள்.
உள்ளே நுழையும் போதே, திறந்திருந்த கதவின் வழியாக, எங்கும் தன் கைரேகை பதியாமல் எச்சரிக்கையாகத்தான் வந்திருந்தாள். தன் கையிலிருந்து சிந்திய இரத்தத்தை துடைத்தவள், தன் கை பட்டிருக்கும் என்று தோன்றிய இடங்களை எல்லாம் துடைத்தெடுத்தாள்.
அமுதா ஏற்கனவே இங்கு அடிக்கடி வந்து விளையாடிச் செல்வதால், அது பெரிய சந்தேகத்தை தோற்றுவிக்காது என்று விட்டு விட்டாள்.
அமுதாவைத் தேடி, சாந்தாவுடன் வரும் போதே, ஒரு பத்திரிக்கைக்காரியாக, அமுதா உள்ளே இருப்பதற்கான தடையங்களாக சிசிடிவி பொருத்தப்பட்டிருக்கிறதா என்று பார்வையிட்டிருந்தாள்.
இந்த நாதாரியின் லீலைகளுக்கென்றே பொருத்தப் படவில்லை போலும், அதுவும் திவ்யபாரதிக்கு வசதியாகவே முடிந்திருந்தது.
ஊசியோடு சேர்த்து ஸ்டோலை சுருட்டிக்கொண்டவள், தன் வண்டியை நோக்கி வந்தாள். வண்டி பாக்ஸினுள் ஸ்டோலை சுருட்டிப் போட்டவள்,
பதற்றமாக நின்றிருந்த அமுதாவை அணைத்து “இங்க ஒன்னுமே நடக்கலன்னு நினைச்சிக்கோடா.” என்றவள் “அம்மாகிட்ட ஃப்ரண்ட் வீட்ல ஹோம்வொர்க் பண்ணேன் சொல்லு. நாங்க உன் ஃப்ரண்ட் எல்லா வீட்டுக்கும் போய் கேட்டோம், அம்மாவுக்கு தெரியாத ப்ரண்ட் பேரச் சொல்லு. சரியா…?” என்றவள், “அம்மாகிட்ட இதப்பத்தி எதும் சொல்லாத பயந்துக்குவாங்க.” என்றவள், “அந்த நாதாரி பத்தி எந்த விஷயம் கேள்விப்பட்டாலும், காதுலயே வாங்கிக்காத, சரியா.” என்றாள்.
அமுதாவுக்கும் தெரிந்துதான் இருந்தது, ‘சும்மாவே படிக்க வைக்க சிரமப்படும் தன் தாய், இப்படி என்றால் படிப்பையே பாதியில் நிறுத்திவிடுவார்’ என்று, அதனால் திவ்யபாரதி சொன்னதையே சொல்வதாக ஒப்புக்கொண்டாள்.
அமுதாவை வீட்டில் இறக்கிவிட்டவள், சாந்தாவிடமும் அப்படியே சொல்லிச் செல்ல,
அமுதாவின் முதுகில் இரண்டு வைத்த சாந்தாவோ, “கழுத, நேரம் போறது கூடவா உனக்குத் தெரியாது” என்று சொன்னவர், திவ்யபாரதிக்கு நன்றி சொல்ல,
பார்வையால் அமுதாவுக்கு ஆறுதல் கூறிய திவ்யபாரதி, தன் வீடு வந்து சேர்ந்தாள். வீடு வந்ததும் ஸ்டோலை நெருப்பில் இட்ட திவ்யபாரதியின் கண்கள், அது எரியும் போது ஏற்பட்ட ஜ்வாலையில் சிவந்து பளபளத்தது.
போலீஸ் விசாரணையிலும் சாந்தா, தான் கடைசியாக அந்தப் பையனை பார்த்தது அமுதாவை தேடி வந்த போது தான் என்று சொல்லியவர், அமுதா தன் தோழி வீட்டில் இருந்ததையும் சொல்லியிருந்தார்.
விசாரித்த இன்ஸ்பெக்டருக்கு அமுதா கிடைத்திருந்த படியால், இது ஒரு விஷயமாகத் தோன்றவில்லை போலும். அதுற்குமேல் தோண்டித் துருவவில்லை.
ஆனால் செழியன், அத்தனை கேசையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், அந்த வடமாநிலத்தவன் கேஸிலும் ஒரு குழந்தை சம்பந்தப்பட்டிருக்கவே, சாந்தாவின் ஸ்டேட்மெண்டை படித்துப் பார்த்தவனுக்கு, இது ஒரு பாயின்ட் ஆக நெருடியது. அது சம்பந்தமாக சாந்தாவை விசாரிக்க எண்ணியிருந்தான்.
ஆனால் சாந்தா, அந்தக் கொடியவன் இறந்ததில் பயந்து போனவர், மன ஆறுதலுக்காக தன் சொந்த ஊருக்கு, குடும்பத்துடன் சென்றுவிட்டார். அந்த இன்ஸ்பெக்டருக்கு சாந்தா இன்னொசென்ட்டாகத் தெரியவே, எந்த சந்தேகமும் தோன்றவில்லை போலும், அவருக்கு ஊருக்குச் செல்ல தடைவிதிக்க மறந்திருந்தார்.
செழியன் சாந்தா வரவிற்காகக் காத்திருக்க, அதற்குமுன் மேலும் இருவர் கடத்தப்பட்டிருந்தனர். குற்றவாளியைப் பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த செழியன், வேறு வழி இல்லாமல், தன்னையே அப்படி ஒரு குற்றவாளியாய் உருவகப்படுத்திக் கொண்டான்.
இந்த ஒரு பாயிண்டே, அவன் தன் பேரைக் கெடுத்துக் கொள்ள, குழந்தையான கல்யாணியை தேர்ந்தெடுக்கக் காரணம், கல்யாணிக்காக கடிந்து கொண்ட தந்தையையும், இதைச் சொல்லித்தான் சம்மதிக்க வைத்திருந்தான்.