அத்தியாயம் : 2

செழியனின் அறைக்குள் நுழைந்த அம்மு விறைப்பாய் சல்யூட் ஒன்றை வைத்துத் தளர்ந்தாள். 

மகளை மிடுக்காக போலீஸ் உடையில் கண்டதும் கர்வம் மேலிட மீசையை மெலிதாய் நீவி விட்டுக் கொண்டான். 

அதை வெளிக்காட்டாதவனாக, “கங்கிராட்ஸ்! இன்னைக்குதான் ஜாய்னிங் இல்லையா?” என்றான். ஒன்றும் அறியாதது போல்.

காலையில்தானே அன்னையையும் தந்தையையும் ஒருசேர நிற்கவைத்து ஆசிர்வாதம் வாங்கி இருந்தாள். தெரிந்தும் ட்யூட்டி என்று வந்துவிட்டால் நீ வேறு என்று பிரித்துக் காட்டிய தந்தையை லேசாக முறைத்து “எஸ் ஸார்” என்றாள் நிமிர்வுடன். தந்தையைப் பற்றி அறியாதவளா என்ன?

அதில், ‘பணியின்போது தந்தை என்ற சலுகையை முடிந்தவரை

நானும் எதிர்பார்க்க மாட்டேன். ஆனால்…?’ என்று நிறுத்திவிட்டாள். காலையில்தானே அவன் பெயரை அவனுக்கே தெரியாமல் உபயோகித்திருந்தாள்.

பெருமிதத்துடன் திரும்பிய செழியன்,  

“மீட் மிஸ்டர் வெற்றி தமிழ்ச்செல்வன். சூப்பரின்டெண்ட் ஆஃப் போலீஸ்” என்று, 

அதே அறையில் தந்தையையும், கொஞ்சம் அளவுக்கதிமாய் அவர் மகளையும் இரசித்திருந்த வெற்றியை அறிமுகப்படுத்தினான்.

‘இப்போதான், அப்பாக்கும் பொண்ணுக்கும் இங்க ஒருத்தன் நிக்கிறதே தெரியுதாக்கும்’ என்று பரபரத்தான் அவன். இந்த ஒரு நொடிக்காகத்தானே பதவி உயர்வு வந்து பலநாளாகியும் தள்ளிப்போட்டு காத்திருந்தான்.

அவள் பணியின் முதல்நாளையும், அவன் பதவி உயர்வின் முதல்நாளையும் ஒரேநாளாக ஆக்கிக்கொண்டது, அவளது பார்வை தீண்டும் இந்த நொடிக்காக அல்லவா!.

அவள் காலடிப்பதிக்கும் முதல்நாளில் தானும் அருகில் இருக்க வேண்டும் என ஆசையோடு வந்தவனை, அவள் கவனிக்க கூடச் செய்யாமல் தந்தையிடம் பெருமை பாசப் பயிர் வளர்க்க, மனதுக்குள் குமைந்தாலும், மெல்லிய முறுவலுடன் தந்தை மகள் நாடகத்தை இரசிக்கத் தவறவில்லை அவன்.

அதுவரை, பாவையின் இடையிலிருந்த காக்கி உடையின் கம்பீரத்தில் கரைந்து கொண்டிருந்தவன், தன்னை அறிமுகப் படுத்தவும் எதுவும் அறியாதது போல் நிமிர்ந்தான்.

அவனின் பதவியைக் கேட்டதும், விறைத்து சல்யூட் வைக்கப் போனவள், அவன் முகத்தைக் கண்டதும் பேயறைந்ததுபோல் நின்றாள். 

பரவசத்தில் இருந்தவள் பெயரை கவனிக்கத் தவறி இருக்க, ‘இவனா! இவன் எப்படி இங்க?’ நொடியில் ஆயிரம் கேள்விகள் மண்டைக்குள் ஓடியது. 

பாதி ஏற்றிய கையை மடக்கவும் முடியாமல், சல்யூட் வைக்கவும் விரும்பாமல் ஒரு நொடி திகைத்தவளைக் கண்டவனின் விழிகளில் சுவாரஷ்யம்.  

கையிலிருந்த தொப்பியை தலையில் மாட்டுவதுபோல் திரும்பி, தந்தை காணாமல் மகளிடம் புருவத்தை ஏற்றி  இறக்க, முழுமையான அவனின் கம்பீரத்தில் தானாக அவளது கை செயல்பட்டு முடித்திருந்தது. ‘அது’ என்றன குறும்பில் சுருங்கிய அவனது விழிகள்.

தந்தை முன்னான அவனது செயலில் அதிர்ந்து, இன்னமும் கையை கீழே இறக்காமல் சிலைபோல் நின்றிருந்தாள் அவள்.

அது அப்பட்டமாய், அவளது உள்ளங்கையில் இருந்த Victory டாட்டூவை காட்டிக் கொடுக்க, விரிந்த புன்னகையை செழியனுக்கு மறைத்து குனிந்து கொண்டவனின் விரல்கள் இயல்பாய் மீசையை நீவிக்கொண்டது.

அவனின் பார்வையைக் கண்டே தன் நிலை உணர்ந்தவள், முகம் கடுகடுக்க, இயல்புபோல் தன் வலக்கையை முதுகின் பின்னால் மறைத்தாற்போல் வைத்துக் கொண்டாள். 

நொடிக்குள் அனைத்தும் நடந்து முடிந்திருக்க, முதல் நாள் பணி அனுபவத்தில் மகள் தடுமாறுகிறாள் என்றெண்ணி, “மிஸ்டர் வெற்றியை தெரியுமில்லையா?” என்றான் செழியன். 

“நார்த்லருந்து ட்ரான்ஸ்ஃபராகி, புரோமோஷனோட சென்னைக்கு வந்திருக்கார். இன்னைக்குதான் அவரும் ஜாய்னிங். உன்னோட சூப்பீரியர்! என்றதும், மெல்லிய அதிர்வுடன் அவன் புறம் திரும்பினாள். குறுநகையுடன் நின்றிருந்தான்.

அவன் திட்டமிட்டே இன்று வந்திருப்பது புரிய, “சாரை தெரியாதவங்க டிப்பார்ட்மெண்ட்ல இருக்க முடியுமா?” என்றாள். ஏளனமா, புகழ்ச்சியா என்று கண்டறிய முடியாத பாவனையுடன். 

“சார்தான் பேப்பர் பிரபலமாச்சே! ரீசண்ட்டாகூட மூணு கொலை பண்ணிட்டதா.. சாரி, ஐ மீன் மூணு என்கவுண்டர் பண்ணிட்டதா பேப்பர்ல படிச்சேன். விசாரணைக் கமிஷன் கூட இருக்குதாமே!” தந்தை அறியாமல் பக்கவாட்டில் நின்றவனைக் கண்டு ஏளனமாய் அவள் உதடுகள் வளைந்தன.

எதிரியின் கண் அசைவுக்கும் காரணம் கண்டறியும் செழியனுக்கு வேண்டுமானால் தன் கன்றின் இலக்கணம் புரியாத புதிராய் இருக்கலாம். 

ஆனால் அவள் உடல்மொழியை அக்குவேறு ஆணிவேறாக அறிந்து வைத்திருப்பவனுக்கு புரியாமல் இருக்குமா? அதே புன்னகை மாறாமல் பெண்ணவளை பார்த்து வைத்தான் வெற்றி. 

அவன் நினைவடுக்குகளில், ஏழாம் வகுப்பில், பாவாடைச் சட்டையில், தன் இரட்டைப் பின்னல்கள் முன்னும் பின்னுமாய் அசைந்தாட, வஞ்சப் புகழ்ச்சி அணியை கரைத்துக் குடித்து, ஆசிரியரிடம் மண்டையை ஆட்டி ஆட்டி ஒப்பித்து நின்ற குட்டி அம்மு வந்து நின்றாள்.

‘நீ மாறவே இல்லடி’ மனதுக்குள் இரசித்துச் சிரித்தான்.

இன்றும், தலையை ஆட்டி, வஞ்சத்துடன் அவனுக்கு புகழ்மாலை சூட்டியவளைக் கண்டதும், ஏழாம் வகுப்பு ஆசிரியராக செழியன் தெரிய, சத்தமாகவே சிரித்து விட்டான்.

ஆசிரியரிடம், கையெழுத்து வாங்கவென அம்முவின் வகுப்பறைக்குள் நுழைந்த வெற்றியை அன்று முறைத்தது போலவே, அவனது சிரிப்பில் இன்றும் முறைத்து நின்றாள் அவனின் எழிலரசி.

“என்ன சிரிக்கிறிங்க வெற்றி?”அவனின் சத்தமான சிரிப்பின் அர்த்தம் புரியாமல் கேள்வியாய் ஏறிட்டான் செழியன்.

“எனக்காச்சும் ட்யூட்டிலதான் விசாரணைக் கமிஷன். மேடம் விசாரணைக் கமிஷனை முடிச்சிட்டுத்தான் ட்யூட்டில ஜாய்ன் பண்ணவே வந்திருக்காங்க!” என்றதும் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து திரும்பினாள் அவள்.

காலை விமான நிலையத்தில் நடந்ததை, மலையைப் புரட்டி தந்தையின் காதுகளுக்குச் செல்லாமல் அவள் மறைத்திருக்க, அதை நொடியில் போட்டுக் கொடுத்தவனை தீயாக முறைத்தாள்.

‘உன்னைப்போல வஞ்சமா இல்லடி நேரடியாவே சொல்வேன்’ என புருவத்தை ஏற்றி இறக்கினான் அவன்.

‘இவனுக்கு எப்படி தெரியும்?’ என்ற சிந்தையைக் கலைத்தது தந்தையின் கேள்வி. 

“என்ன விசாரணை?” என்ற தந்தையை தயக்கத்தோடு ஏறிட்டாள். 

செழியனும் அவளைத்தான் தன் கூரிய விழிகளால் பார்த்திருந்தான். அவள் பதிலின்றி தலை குனியவும், பார்வை சுருங்க வெற்றியின் பக்கம் திரும்பினான்.

“மேடம் டியூட்டில ஜாய்ன் பண்ண முன்னாடியே மோஸ்ட் வான்டட் ஸ்மெக்ளர தப்பிக்க வச்சதும் இல்லாம, அவன் கடத்தலுக்கும் ஹெல்ப் பண்ணி இருக்காங்க.” என்றான் அவன் நமட்டுச் சிரிப்புடன்.

“கடத்தலுக்கு ஹெல்ப் பண்ணினாளா…?! அதிர்ந்த தந்தைக்கு நிகராக, ‘இப்படி புட்டு புட்டு வைக்கிறானே!’ என்ற அதிர்ச்சியில் அவளுக்கு மயக்கமே வரும் போலிருந்தது.

பார்வையால் துளைத்தெடுத்த தந்தையிடம், “அது வந்து.. ப்பா..”  என்றாள் தயங்கி தயங்கி. பதற்றத்தில் பதவி மறந்து தந்தையை அழைக்க வந்த நாவை கஷ்டப்பட்டு அடக்கினாள். 

அதற்குள், “ஹெல்ப்பா?” என்று சிரித்தவன், “அவன் கடத்தினதே இவங்க மூலமாதான்” என்று முழுமையாய் போட்டுக் கொடுக்க, ‘போச்சி’ என்று அவள் மானசீகமாய் தலையில் கை வைத்திருந்தாள். 

‘இதுக்குதான் காத்திருந்து இன்னைக்கு வந்தியாடா எட்டப்பா!’ என்றவள், அவன் பக்கம் திரும்ப, அவளிடம் லேசாய் கண்சிமிட்டி, அவளது தந்தையிடம் விறைப்பாக முகத்தை மாற்றிக்கொண்டான் அவன். 

அவனின் முக பாவனையில், ‘இவன்கிட்ட வேதாளம் அஜீத் தோத்துடுவார்’ என்று அதிர்ந்து நின்றிருந்தாள் பெண்.

“ஆர் யூ ஜோக்கிங்?” என்ற கேள்வியை வெற்றியிடம் வீசிய செழியன், “என்ன கடத்தல்?” என்றான் மகளிடம் திரும்பி. 

மகளின் மௌனத்தில் அவன் முகம் இறுகியது.

அதைக் கண்டதும் வெற்றிக்கே ஒரு மாதிரியாகிப்போனது. எல்லாம் அவனின் திருவிளையாடலால் அல்லவா! 

அதில், “அந்த விசாரணையை என்னன்னு மேடம்கிட்ட நான் பார்த்துக்கிறேன் சார்! இப்போ ட்யூட்டில ஜாய்ன் பண்ணட்டுமே!” என்றான் கரிசனையாக. 

ஏதோ போனால் போகட்டும் என்பதாய் தன் தாராள மனதைக் காட்டியவனில் ‘போட்டும் கொடுத்துட்டு நக்கலைப் பார்’ உள்ளம் கொதிக்க, முதல்நாளே தந்தையிடம் கூனிக்குறுகி நிற்க வைத்தவனில் உள்ளுக்குள் அவமானப்பட்டுப் போனாள்.

“கங்கிராஜூலேஷேன் மிஸ்…மிஸ்..” என வேண்டுமென்றே அவன் ஏலமிட,  ‘இதுல பெயர் தெரியாதமாதிரி நடிப்பு வேற!’ அவள் முகம் கடுகடுக்க, அதைக் கண்டும் காணததுபோல் அவளது நேம் பேட்ஜ்ஜில் பார்வையைப் பதித்து “அம்மு எலி.. சாரி, எழிலரசி!” என்றவன், எலியை மட்டும் அழுத்திச் சொல்லி, அவளை நோக்கி கை நீட்டினான். கை குலுக்கும் ஆர்வத்துடன். 

செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் வாழ்த்துச் சொல்ல கை நீட்டுபவனை முடிந்தவரை முறைத்து, வாய்க்குள் வறுத்தெடுத்தவள், தந்தைக்காகவென, தானும் கை நீட்டினாள்.

வலதுகையில் வாட்ச் அணிந்திருக்க அது அவளுக்கு கூடுதல் அழகு சேர்த்தது. கரம்பற்றி குலுக்கியவனின் ஆட்காட்டிவிரல் மட்டும் நீண்டு Victory ன் V யைத் தீண்டி நிமிண்ட, சரெலென நிமிர்ந்தாள். 

‘மவனே இந்த சட்டையைக் கழற்றிட்டு ஒத்தைக்கு ஒத்தை வாடா’ என்றது அவளது பார்வை.

‘நானும் அதற்காகத்தான்டி வெயிட்டிங்’ கீழ் பற்களால் மீசையின் ஒன்றிரண்டு முடிகளை கடித்துச் சிரித்தவனின் பார்வை சொன்ன அர்த்தம் தான் வேறு!

செழியனின் மேஜையில் இருந்த அலைபேசி ஒலிக்க, அவன் அதில் மூழ்கிய நொடி, “ஷ்ஷ்…” என்ற மெல்லிய சத்தத்துடன் கையை உதறினான் வெற்றி. 

அலைபேசியில் தந்தை கவனத்தைப் பதித்த நொடியில், தன்னை நிமிண்டிய விரலை சொடுக்கெடுப்பதுபோல் வளைத்து ஒடித்திருந்தாள் அவள்.  

வலியில் முகம் சுருக்கியவன் செழியன் முன்னிலையில் உதறவும் முடியாமல் அவள் பின்னுக்கு வைத்தது போலவே தன் வலக்கையை மறைத்து வைத்துக் கொள்ள, ‘அது’ என்றாள் புருவங்கள் கேலியாய் வளைய.

அவன் செய்தது போலவே தொப்பியைக் கழற்றுவதுபோல் அவன்புறம் திரும்பி, ஆட்காட்டி விரலால் தன் புருவத்தில் கோலமிட்டவளோ, வேண்டுமென்றே புருவத்தை இருமுறை ஏற்றி இறக்கினாள்.

அட்சரம் பிசகாமல் திருப்பிக் கொடுத்தவளை, ‘எலிக்குட்டி திருந்தவே மாட்டியாடி’ என்று பார்த்திருந்தவனின் புன்னகை விரிய, விரல்கள் இயல்புபோல் அவனின் புருவத்திலிருந்த A வடிவிலான தழும்பை நீவிக்கொண்டது.

அவளின் உள்ளங்கையிலிருந்த V என்ற தழும்பும், அவனின் புருவத்திலிருந்த A வடிவிலான தழும்பும் சிறுவயது சிலம்பச்சண்டையில் ஒருவருக்கொருவர் மாறி மாறி கொடுத்துக் கொண்டது. 

அதை அவன், அவளின் நினைவுச் சின்னமாக சுமக்க, அவளோ அதை மறைக்கவும், அவனை மறக்கவும் Victory என டாட்டூவாக மாற்றிக் கொண்டாள். 

கொடுமைக்கு விக்டரி என்றால் வெற்றி என அவன் பெயரையே முழுதாக குறித்து நிற்கும் என டாட்டூ குத்தும்போது மறந்துபோனாள். தோழியின் பேச்சைக்கேட்டு V யை Victory யாக மாற்றியதில் இன்றுவரை தன்னை நொந்து கொண்டிருக்கிறாள் பாவம்.  

இன்று விமானநிலையத்தில் அவளை சிக்க வைத்ததும் இந்த டாட்டூவின் மீதான கோபமே! அவன் மட்டும் அந்த டாட்டூவைப் பற்றி பேசாமலிருந்திருந்தால் சாக்லெட்டை வாங்கி இருக்க மாட்டாள். கோவத்தில் அல்லவா வாங்கித் தொலைத்திருந்தாள்.

அதில் காலையில் நடந்தவற்றை தானாக உள்ளம் அசைபோட்டது.

விமானநிலைய அதிகாரிகள் அனைவரையும் நிறுத்தி மீண்டும் வரிசையில் நிற்க வைக்கவும்,

‘இப்போதானே உள்ள எல்லா செக்கிங்கும் முடிச்சி அனுப்பினாங்க திரும்ப என்ன?’ நினைத்ததையே அவர்களிடம் கேள்வியாக்கினாள்.

“ஒரு போன் தகவல் மேடம் ப்ளீஸ் கோ ஆப்பரேட்” என்றனர். டாட்டூவைப் பற்றி அவன் பேசியதில் ஏற்கனவே உட்சபச்ச வெறுப்பில் இருந்தாள். 

‘விக்டரின்னா வெற்றிதானே!’ மீண்டும் அவன் குரல் காதுக்குள் ரீங்காரமிட, எப்போதடா வெளியில் செல்வோம் என்றிருக்க, மீண்டும் அனைத்தையும் திறந்து காண்பிக்கும் நிலையில் நிச்சயம் அவள் இல்லை.

என்னதான் தங்கை வரவில்லை என வம்படித்தாலும், அவள் நிச்சயம் காத்திருப்பாளென்று தெரியும். அவள் கல்லூரிக்கு வேறு செல்லவேண்டும்.

நொடியில் யோசித்து, “சார் ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல நான் ட்யூட்டில ஜாய்ன் பண்ணனும்” தன் போலீஸ் ஐடி கார்டை காண்பித்தவள் ட்யூட்டியில் சேர்வதற்கான உத்தரவையும் அலைபேசியில் காண்பிக்க தடையின்றி வெளிவந்திருந்தாள். 

நிதானத்தில் இருந்திருந்தாள் நிச்சயம் அப்படி செய்திருக்க மாட்டாள்தான். வெளியில் வந்த சிறிது நேரத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகளால் மீண்டும் மடக்கப்பட தந்தைக்கு தெரிந்தால் சமாளிப்பது கடினம் என்றே தாய்மாமனுக்கு மாமனாய் வளர்த்த கார்த்திக்கு அழைத்தாள்.

அவன் ஒரு காலத்தில் போலீஸில் இருந்தவன் தற்போது பெரிய தொழிலதிபன் பத்தாதற்கு டிஜிபி செழியனின் நண்பன். கேட்கவா வேண்டும்? 

இப்படியாக செழியனுக்கு தெரியாமலே மாமனும், மருமகளும் செழியனின் பெயரை உபயோகித்து வெளியில் வந்திருந்தார்கள்.

கூடவே அங்கிருந்த அனைவரின் கைகளிலும் அந்த சாக்லெட்டும் வேறு இருக்கவே அவளும் ஏமாற்றப்பட்டிருக்கிறாள் என தெரிந்தாலும், அவளுடைய உயர் அதிகாரிகள் விசாரிணையின்போது ஒத்துழைக்க வேண்டும் என்று எச்சரித்தே அனுப்பினர்.

இதைத்தான் எப்படியோ தெரிந்துகொண்டு வாலாட்டுகிறான் என அவள் முறைத்து நிற்க, உன் அப்பன் வழி வந்தவனடி நான்! என்னை மீறிதான் உன்னை ஒன்று அண்டமுடியும்! என வீராப்பாய் நின்றிருந்தான் அவனும்..

சிறுவயதில் பார்த்த இருவருக்கும் மறந்திருக்கும் என்றுதான் செழியன் அறிமுகப்படுத்தியது. மறந்தால் அல்லவோ நினைப்பற்கு! 

அழியாத தடமாய்தான் இருவரும் ஒருவரை ஒருவர் உடலில் சுமக்கின்றனரே! அவன் தினமும் முகம் பார்க்கும் கண்ணாடியில் புன்னகையுடனும், அவள் தினம் கட்டும் கைக்கடிகாரத்தில் வெறுப்புடனும், தரிசனம் காண்கின்றனர். 

பிஞ்சிலேயே நெஞ்சில் பதிந்தவளை அவன் மறக்கவும் இல்லை. அவளை மறக்க விட்டதும் இல்லை.

தொலைபேசியில் பேசிமுடித்து வைத்த செழியன் இருவருக்கும் வாழ்த்துச் சொல்லி விடையளிக்க, சிறுவயது சண்டைக்கோழிகள் இரண்டும் ஒன்றையொன்று மறவாமல் முறைத்தபடி ஒருசேர சல்யூட் அடித்து நிமிர்ந்தனர். 

“உனக்கு அடுத்த டாஸ்க் ரெடியா வச்சிருக்கேன் வாடி என் எலிக்குட்டி” அவள் காதோரம் கிசுகிசுத்தபடி வெற்றி வெளியேற தந்தையை தயக்கமாய் பார்த்திருந்தாள் அம்மு எழிலரசி. ‘ஏன் என்னிடம் மறைத்தாய்’ என அவன் பார்வை கேள்வி கேட்க, தலைகுனிந்தாள்.

“இதுக்கு மிஸ்டர் கார்த்தியும் உடந்தை இல்லையா?” செழியனின் அழுத்தமான கேள்வியில் அவள் தலை தானாக ‘ஆம்’ என்று ஆடியது. அவனுக்கு தெரியும் கார்த்தி தலையிடாமல் தன்னிடமிருந்து மறைத்திருக்க இயலாது என்று.

“சின்ன வயசில இருந்து உன்னை காப்பாத்தி விடுறதயே பொழப்பா வச்சிருக்கான். இன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் இருக்கு அவனுக்கு” செழியன் அலுவலகம் என்பதை மறந்து கோபப்பட, அதையே தனக்குச் சாதகமாக்கிக் கொண்டாள் அவள்.

“அப்பா இது ஆஃபீஸ். நீங்க இப்போ டிஐபி” என நிகழ்வை நினைவூட்டி, அவன் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவளோ, நொடியில் அங்கிருந்து ஓட்டமாய் ஓடி மறைந்தாள்.