சிவா தனஞ்செயன் இருவரும் விடுமுறை முடிந்து துபாய் கிளம்ப ஒரு வாரமே இருந்தது . 

சூரியாவிற்கும் பரிட்சை ஒரு வாரம் இருக்க,  சிவா, தனஞ்செயன் இருவரையும் கருப்பசாமி அழைத்தார். 

“சொல்லுங்கப்பா என்ன விஷயம் ??”  

“தனா . அவசியம் வெளிநாட்டுக்கு போயே ஆகனுமா ?? கம்பெனியில் சொல்லி எழுதி குடுத்திடுங்களேன் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.  நீங்க ஒரு பக்கம் மருமகளுங்க ஒரு பக்கம் னு இருந்துக்கிட்டு வேணாமே நமக்கு இருக்கிற காசு பணம் போதும் , கஷ்டமோ நஷ்டமோ இங்க இருந்தே சம்பாதிங்க அதான் தண்ணியும் பரவாயில்லை மாதிரி வருது நெலத்தை தான் மலர் பார்த்துக்குது, ஒத்தாசைக்கு சூர்யா இருக்கு.  இன்னும் ரெண்டு கறவை மாடு வாங்கிக்கலாம் நாலு ஆட்டுக்குட்டி வாங்கினா போதும் பொழப்புதனத்துக்கு நீங்க ரெண்டு பேரும் திருச்சியிலேயே ஒரு வேலையை தேடிக்கங்க.  அந்த வருமானம் போதும்யா எங்களுக்கும் வயசு ஆகுது இல்ல ரெண்டு பேரும் கூட இருந்தா எங்க கடைசி காலம் நிம்யதியா இருக்கும் ஆயா மலரு, சூரியா ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க எப்படி இங்கனயே இருந்து வேலைக்கு போகட்டுமா இல்ல ??வெளிநாடு தான் போகணுமா ?? “என்று தனது மருமகள்களிடமும் ஒரு வார்த்தை கேட்டுக் கொண்டார்.

“உங்க முடிவு தான் மாமா. நீங்க சொல்றது தான் முடிவு “என்றனர் இருவரும்.

“அப்புறம் என்னய்யா புள்ளைங்களே சொல்லிடுச்சு நீங்க தான் இனிமே சொல்லணும் “என்று மகன்களின் முடிவுக்கே விட்டு விட்டார் கருப்பசாமி. 

“இங்கேயே இருந்து வேலை பார்க்கிறோம்ப்பா கம்பெனியில் சொல்லி எழுதி கொடுத்துட்டு வர்றோம்”என்றனர் ஒருசேர

“அப்புறம் என்ன கருப்பு அதான் பேரனுக ஒத்துக்கிட்டானுகளே,  சரி சரி எல்லாம் இருக்கட்டும் சீக்கிரம் கொள்ளுப் பேரன் பேத்தியை கண்ணுல காட்டுங்கடா அப்ப தான் என் கட்டை வேகும்” என்று சொல்ல “நல்லா சொல்லு வேலு “என்றபடி வந்தமர்ந்தார் பொன்னர். கூடவே செண்பகவல்லியும் வந்திருந்தார்.

“என்ன ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீய சூரியா காபி வை.  மலரு நீ போய் ஒலையில ஒரு பிடி அரிசி சேர்த்து போடு,  என்ன பெரியப்பா விஷயம் ??”என்று கேட்டார் சித்திரை செல்வி. 

“அது ஒண்ணும் இல்ல மா அந்த வடிவரசி பிள்ளைக்கு வளைகாப்பு பண்ண போறானாம் சங்கன்.  எல்லாத்துக்கும் சொல்லி செய்யணும் னு சொன்னான்.  இங்க நம்ம வீட்டுக்கு சொன்னா வருவீங்களான்னு தயங்கி தயங்கி கேட்டான்.  அதான் நான் ஒரே பேச்சா சொல்லிட்டேன் உன் பொண்டாட்டி எதுவும் பேசாமல் இருந்தா அவங்க வருவாங்கனு சொன்னேன்.  இருந்தாலும் உங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும் இல்லையா அதான் கேட்க வந்தேன் அந்த ரௌடிப்பய வேற வயித்து பிள்ளதாச்சி னு பார்க்காம அடிச்சுடுறானாம் ஆளுக யாரும் கேட்கலைங்கிற தைரியத்துல ஆடுறான்,  நாம போய் நின்னா தான் அவனுக்கும் பயம் வரும்.. பிள்ளை பொறக்கிற வரை அப்புறம் வடிவு அங்க போக விருப்பப்படலைனா நாம இங்கேயே கூட்டிட்டு வந்திடலாம்”என்றார். 

“நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை மாமா.  பசங்க தான் இனி சொந்த பந்தங்களை பார்த்துக்கணும் நீங்க என்ன டா தம்பி சொல்றீங்க ??”என்று கேட்க 

சிவாவோ ” வந்து மொறைப்படி சொல்ல சொல்லுங்கப்பா போகலாம் எனக்கு தூத்துக்குடியில சில வேலைகள் இருக்கு “என்றான் சூட்சுமமாக. 

சங்கரனும் பொன்னரின் சொல்படி முறையாக வந்து வளைகாப்பிற்கு அழைத்து விட்டு சென்றார். 

பொன்னுசாமிக்கும் அழைப்பு விடுத்திருக்க அவரும் வர சம்மதித்தார். 

மலர் அமைதியாக இருந்தாள்.  

“டீச்சரம்மா ரொம்ப அமைதியா இருக்கீங்க என்ன விஷயம் ?? வளைகாப்பிற்கு வர்றோம் என்று சொன்னதுக்கு கோவமோ ??”மனைவியின் மனவோட்டம் அறிந்தது போல கேட்டான். 

“இல்ல பெரியவங்க போயிட்டு வரட்டுமே நாம எதுக்கு ??” தயங்கினாள் மலர். 

“நீ வேண்டாம் என்று சொன்னால் போக வேண்டாம் வீட்டில் இருந்துக்கலாம் என்றவன் மீண்டும்,” ஏன் பனி ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே !!”

“கேளுங்க “

“உனக்கு மனசுல அந்த வடிவரசி கஷ்டப்படுறது சங்கடமா தானே இருக்கு உன்னால் அவ வாழ்க்கை வீணாகிடுச்சு னு கவலை இருக்கு தானே இல்லையென்று சொல்லாதே வீட்டுப் பத்திரம் வாங்கப் போகும் போது நான் உன்னை கவனிச்சேன். வடிவை கவலையாப் பார்த்துட்டு இருந்த “என்றான். 

ஆழ்ந்த பெருமூச்செறிந்தபடி.,” ஆமா பார்த்தேன் தான். நான் யோசிக்கவே இல்லை அந்த பாண்டி இப்படி வடிவரசியை கல்யாணம் பண்ணிப்பான்னு ஒரு வகையில் அவ கஷ்டப்படுறதுக்கு நானும் தானே காரணம்” வேதனையாக தான் பதில் அளித்தாள். 

மலரை அருகில் வந்து அமர சொன்னவனோ தன் நெஞ்சில் சாய்த்தபடி தலைக் கோதியவன்,” பனி அதையே நினைச்சு கவலைப்பட்டா மட்டும் சரி ஆகிடாது, ஏதாவது செஞ்சா தான் சரி ஆகும் புரியுதா? நாம வளைகாப்பிற்கு போகலாம் , அவனை சரி கட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையது அப்படியும் மொரண்டு பிடிச்சான்னா நாம வடிவை அழைச்சுட்டு வந்திடலாம் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்போம்” என்றான். 

“நான் வேணுன்னா அவனோட அக்கா கிட்ட பேசிப் பார்க்கவா ??” என்று கேட்க 

“முயற்சி பண்ணு ஒர்க் ஆச்சுனா நல்லது தான் “என்றான்.

“ம்ம்ம் சரி அப்போ போகலாம் ஆனால் அவங்க வண்டியில் வேண்டாம் நாம வெற்றி அண்ணா வண்டியில் போகலாம் “என்று சொல்ல சிவா அர்த்தமாக சிரித்துக் கொண்டான். 

“டீச்சரம்மா வீம்புக்காரி டி நீ சரி நான் வெற்றி கிட்ட சொல்லிடுறேன் “என்று எழுந்து கொண்டான். 

அனைவரும் தூத்துக்குடிக்கு எல்லா சீர்வரிசைகளும் எடுத்துக் கொண்டு சென்றனர்.

சங்கரபாண்டி தெனாவெட்டாக நிற்க , அவனது பெற்றோர் தான் வரவேற்றனர். 

வடிவரசி எல்லோரையும் வரவேற்று விட்டு காபி கலந்து அனைவருக்கும் கொண்டு வந்து கொடுத்தாள். அவளே வளைகாப்பிற்கு தேவையான பொருட்களையும் ஒவ்வொன்றாக கொண்டு வர அவளது ஓரகத்தி எடுத்து வைத்தாள். சங்கரபாண்டியின் அக்காக்களோ ஆளுக்கொரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

“வடிவு நீ வா உனக்கு சேலை கட்டி அலங்காரம் பண்ணி விடுதேன்” என அழைத்துச் சென்றாள் சங்கரபாண்டியின் அண்ணி. 

வடிவரசியை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் அவளது ஓரகத்தி. 

“வடிவு பிள்ளை பிறந்து அஞ்சு மாசம் கழிச்சு வா அப்படி அவனை காயப் போட்டா தான் உன் வழிக்கு வருவான்ல புரியுதா !! அப்படியே இங்க நடக்கிறதை கொஞ்சம் உன் வீட்டிலையும் சொல்லு ல தைரியமா இருக்கனும் சரியா?” என்று சொல்ல அவளோ வாசலை எட்டிப் பார்த்து கொண்டிருந்தாள்.

முத்துலெட்சுமி உள்ளே நுழைந்தார்.

தாய்க்கும் மகளுக்கும் தனிமை கொடுத்து விட்டு அவள் கிளம்பி விட அவசரமாக மலரும் வந்திருக்கிறாளா என்று கேட்டாள். 

“எல்லாம் வந்திருக்கா வந்திருக்கா வந்ததும் அவளைத் தான் கேட்பியா ?” என்று நொடித்துக் கொண்டார் முத்துலெட்சுமி. 

“அப்பாடா!” என்று பெருமூச்சு விட்டவளோ,”  நேத்தைக்கு கூட வந்து அடிச்சுப்புட்டான் மா “என்றாள் பாவமாக. 

“எதுக்குடி அடிச்சான் ?,அவன் கையில கட்டை மொளைக்க “என்று சாபம் விட 

“எல்லாம் என் தலையெழுத்து நான் வேற என்ன சொல்றது ??”

“சரி சரி வீட்டில் போய் பேசிக்கலாம். சிரிச்ச மூஞ்சியா இரு. பிள்ளை பிறக்கட்டும் அப்புறம் இருக்கு அவங்களுக்கு “என்று மகளைத் தேற்றினார். 

வடிவரசி தன் ஃபோனை எடுத்து தன்னை ஃபோட்டோ எடுக்க ஆரம்பித்து விட்டாள்.  

சங்கரபாண்டியின் அக்கா உள்ளே நுழைந்தவள்.,”ஏம் ல எத்தனை தடவை சொல்லி இருக்கேன். இப்படி ஃபோனை வச்சுட்டு அலையாத னு பொறவு அவன் அடிக்காம என்ன பண்ணுவான் ? , வெரசா கிளம்பு ஊர் சனம் எல்லாம் வந்துட்டாக “என்று விட்டு சென்றாள்.

“இப்படி தான் மா ஃபோனை எடுத்தாலே திட்டுறாங்க அவரு அடிக்கிறாரு “என குறைபட்டுக் கொண்டாள். 

“சரி சரி வா எல்லாம் சரி பண்ணிடலாம்” என வெளியே வந்தார் முத்துலெட்சுமி . 

வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடந்து முடிய அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.

“பனி மா நீ சாப்பிடுடா நான் அங்க போயிட்டு வரேன்.  சகல அட சகல சங்கரபாண்டி உன்னை தான் வாய்யா மொத மொத வீட்டுக்கு வந்திருக்கோம், வீடு, தோப்பை சுத்தி காட்டுறது இல்ல”என்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல தனஞ்செயன், வெற்றி, வீரமலை, மூவரும் பின்னால் சென்றனர். 

“அப்புறம் சகல என்னம்மோ என் மச்சினியை படக்குனு அடிக்கிறியாம், ஊருக்கு வந்தா என் பொண்டாட்டி கையைப் பிடித்து இழுக்குறியாம்.  அவ்வளவு பெரிய சண்டியரா நீயி இது தெரியாமல் போச்சே எனக்கு “என்றான் அவனை இறுக்கி பிடித்தபடி. 

அவனிடமிருந்து விலகி நின்ற சங்கரபாண்டியோ “என்னல லந்தா என் கிட்டயே உன் பேச்சுத் திறமையை காட்டுதியோ,  ம்ம்ம்.  ஆமால அவ என் பொண்டாட்டி அவளை நான் அடிப்பேன், மிதிப்பேன் அதை கேட்க நீ ஆருல?  நான் ஆசைப்பட்டவளை கட்டிக்கிட்டு திமிர காட்டுதியோ?  உன்னை கொன்னுட்டு அவளை என் வூட்ல வேலைக்காரி மாதிரி நடத்தல நான் சங்கரபாண்டி இல்லல ” என்று திமிர் பேச்சு பேசியவனை விட்டான் ஒரு அறை 

  

“நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் ஓவரா பேசுற. டேய் வெற்றி மாப்ள, அவனைப் பிடிங்கடா இன்னைக்கு அவன் கொடலை உருவி என் பொண்டாட்டிக்கு மாலையா போடுறேன் அழகு பிள்ளையை கட்டிக்கிட்டு வந்து அடிச்சது மட்டுமில்லாமல் கொடுமை படுத்திட்டு இருக்க நீ இன்னொரு தடவை அந்த பொண்ணு மேல கையை வை மவனே உன் கையை ஒடைச்சு இதே தூத்துக்குடி ஹார்பர்ல மீனுக்கு இரையா போட்டுடுறேன்” என்று மிரட்ட, சங்கரபாண்டி சற்று அதிர்ந்து தான் போனான். 

ஆனாலும் திமிரை விடாது “என் வீட்டில் வந்து என்னையவே மிரட்டுதியோ பார்த்திடுவோம் ல யார் கொடலை யார் உருவுறதுனு ? “என்றான் மிரட்டலாக. 

“இங்கப் பாருடா அடங்கி நடந்துக்க இல்ல தடம் தெரியாமல் போயிருவ பார்த்துக்க வாங்கடா போகலாம். என் பொண்டாட்டியை நினைச்சதுக்கே உன்னை கொன்றுப்பேன் வடிவரசி மொகத்துக்காக விடுறேன் இது தான் உனக்கு கடைசி இனிமே என் பனி கிட்ட தப்பா நடந்துக்க நெனச்ச அவ்வளவு தான் பார்த்த இடத்திலேயே பொதைச்சிடுவேன்”என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு சென்றான். 

சங்கரபாண்டி கோவத்தில் கொந்தளித்து கொண்டிருந்தான்.

“என்ன மாப்ள பொசுக்குனு அடிச்சுபுட்ட ஆனாலும் அவனுக்கு திமிரு மாப்ள” என்றவன்,” நீ வடிவுக்காக பேசுவன்னு நினைக்கலை மாப்ள.  அந்த புள்ள பண்ணுன வேலைக்கு நானா இருந்தா திரும்பி கூட பார்க்க மாட்டேன்” என்று வீரமலை சொன்னவுடன்,” இல்லடா பழைய மாதிரி இல்லடா அந்த புள்ள, பனி ஒரு நாள் வடிவு ரோட்டுல போகும் போது பார்த்திருக்கு ரொம்ப இளைச்சு போயி ஆளே ஒடுங்கிப் போய் இருந்திருக்கா முன்னாடி எல்லாம் அப்படியே பந்தாவா போயிட்டு வரும் இப்ப பாரு ஆள் மெலிஞ்சு போயி ஆனா அந்த பழைய திமிரு இல்ல மாப்ள மாறிடுச்சு வளைகாப்பு அதுக்கு தானே போட வந்தோம் இங்கன வேலை பார்க்கிறது யாரு அந்த பிள்ளை தான் பார்க்கவே கஷ்டமா இருக்கு மாப்ள அதான் இனியும் அடிச்சான்னு தெரிஞ்சா பேசாம மணப்பாறைக்கே அழைச்சுட்டு போயிட வேண்டியது தான்.. இவனை விட்டா மாப்ளையா கிடைக்காது என்ன குழந்தையோட யாராவது ஏத்துக்கிடணும் இல்லையா நாம பிள்ளையை வளர்த்துக்கிட்டு இதுக்கு வேற ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட வேண்டியது தான்” என்றான் சிவா. 

“அடேய் நீ என்ன டா இவ்வளவு தூரம் போயிட்ட அது எல்லாம் அவ்வளவு சுலபம் இல்ல மாப்ள பார்க்கலாம் இப்ப தானே மிரட்டி இருக்கோம்.  இதுக்கு மேற்பட்டு என்ன பண்றான் னு பார்த்துட்டு தான் மத்ததை பார்க்கணும் இவனைத் தவிர மத்த ஆளுக எல்லாம் நல்லா தான் மாப்ள பழகுறாங்க பார்ப்போம் சரி வா சாப்பிட போகலாம்” என்று வெற்றி அனைவரையும் அழைத்து சென்றான். 

வடிவரசியை அழைத்து கொண்டு கருத்தம்பட்டி வந்து விட்டனர். 

சிவசக்தி தன் வீட்டிற்கு வந்து மிரட்டியதால் அவனை அவன் ஊரில் வைத்து மிரட்டி அடித்து போட வேண்டும் என்று எண்ணியபடி மணப்பாறைக்கு கிளம்பி வந்தான் சங்கரபாண்டி . 

   …..தொடரும்