29….

நீ இல்லாமல் நான் இல்லை

என்பது கூட

மெய்யாகாமல் போகலாம்…

ஆனால்

உன்னை நினைக்காமல்

நான் இல்லை

என்பது மட்டும் என்றும்

பொய்யாகி போகாது….

நயவஞ்சகர்களின் பிடியிலிருந்து தப்பி வந்தவன்.. 48 வருடத்திற்கு ஒருமுறை வரும் சந்திர கிரகணத்தின் அன்று தன்னை உண்மையாய் நேசிக்கும் பெண்ணை காந்தாரனை கழுவேற்றி கொடும் கொலை புரிந்த இடத்திற்கு அழைத்து வந்து… கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் அவர்களை அங்கேயே கொன்று கொலை செய்த பெண்ணின் உதிரம் அவ்விடத்தில் பரவும் படி செய்து.. தன் சாபம் தீருவதற்கான வழி வகைகளை செய்து கொண்டிருக்கின்றான். ஆனால் இன்னும் அவனுக்கான உண்மையான காதலும் கிடைக்கவில்லை, சாபமும் தீரவில்லை.

‘ இன்னும் ஏழு நாள்ல சந்திர கிரகணம் வரப்போகுது இந்த தடவை சுஹனியை பயன்படுத்தி பார்க்க வேண்டியது தான்..’ என்று கீர்த்தனின் கயமை மனது மீண்டும் மீண்டும் நச்சரித்துக் கொண்டே இருந்தது.

‘இல்ல என்னால முடியாது, சுஹனி விஷயத்துல என்னால இதை செய்யவே முடியாது… சரியோ தப்போ இனிமே என்னால அப்பாவி பொண்ணுங்களோட வாழ்க்கை வீணாகக் கூடாது, என் விதி இதுதான்னா நான் இப்படியே இருந்துட்டு போயிருக்கேன்’ என்று தனக்குத்தானே விவாதித்துக் கொண்டிருந்தான் கீர்த்தன்.

‘அப்பாவி பொண்ணுங்களோட வாழ்க்கையா? இல்லை, சுஹனியோட வாழ்க்கையா?,’என்று நியாயமான கேள்வியை ஆழ்மனம் வினவ…

‘அவளும் ஒரு அப்பாவிப் பொண்ணு தான?, பாவம் இதுவரைக்கும் அவ வாழ்க்கையில எந்த சந்தோஷத்தையும் அனுபவிச்சது இல்ல, காந்தாரன் இந்த பிறவியிலும் அவளை நிம்மதியா வாழ விடல, என்னால மட்டும் தான் அவளுக்கு ஹெல்ப் பண்ண முடியும்னு, முன்ன பின்ன தெரியாத என்னை நம்பி என் வீடு வரைக்கும் வந்திருக்கா, என்னை நம்பி வந்தவங்களுக்கு என்னால எப்படி துரோகம் பண்ண முடியும், ‘ என்று சுஹனியை பனையம் வைக்க துணிந்த கயமை மனதை சமாதானம் செய்யத் தொடங்கினான் கீர்த்தன்.

‘என்னடா திடீர்னு இவ்ளோ நல்லவனா பேசுற…?, பல நூறு வருஷமா எத்தனை பொண்ணுகள கொன்னு தடயமே இல்லாம மூடி மறைச்சு இருக்க… அவங்களும் உன்னை நம்பி வந்தவங்க தான, அவங்களுக்கு துரோகம் பண்ணும் போது இந்த புத்தி எங்க போச்சு?..ஆமா ஒரு உயிரை கொல்றதுக்கு இவ்வளவு சங்கடப்படுறியே அப்பப்போ உனக்கு எனர்ஜி வேணும்னு சில மனுஷங்களை கொன்னு அவங்க ரத்தத்தை குடிக்கிறியே… அதெல்லாம் எந்த லிஸ்ட்ல வரும், அதெல்லாம் உனக்கு தப்பா தெரியலையா?. அவங்க எல்லாம் பாவம் இல்லையா? ‘ என்றது கயமை மனது.

‘அது அது வந்து நான் ஒன்னும்.. நல்லவங்கள கொலை பண்றது இல்லையே!, கொலை பண்ணவன் கொள்ளையடிச்சவன், பொண்ணு கிட்ட தப்பா நடந்துகிட்ட பொறுக்கிங்கள தானே கொன்னு அவங்க ரத்தத்தை குடிக்கிறேன். அது அந்த தப்பானவங்களுக்கான தண்டனை, அது எப்படி தப்பாகும். ‘ என்று அவ்வப்போது தான் செய்யும் கொலைகளை நியாயப்படுத்தி பேசினான் கீர்த்தன்.

‘ஆமா நீ என்ன இன்னும் செங்கோட தேசிங்க புரத்து ராஜான்னு நினைப்பா?.. தப்பு பண்ணுனவங்களுக்கு தண்டனை கொடுக்க. ராஜா காலமெல்லாம் மலை ஏறி போச்சு.. இப்போ நடந்துட்டு இருக்குது மக்களாட்சி மன்னராட்சி இல்ல, இப்போ இங்க மத்த மனுஷங்க மாதிரி நீயும் சாதாரண மனுஷன் தான் அதை மறந்துடாத!… இங்க பாரு இந்த மாதிரி ஆப்பர்சூனிட்டி என்னைக்கும் உனக்கு அமைஞ்சதே இல்ல, ஒவ்வொரு தடவையும் நீயே தான் பொண்ணுகள தேடி போவ.. காதலிக்கிற மாதிரி நடிப்ப, உன்கிட்ட இம்ப்ரஸ் ஆகி அந்த பொண்ணுகளும் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னதும் அவங்கள உன் சாபத்தை போக்குறதுக்காக பயன்படுத்திட்டு இருந்த,…” என்று கயமை மனம் கூறிக் கொண்டிருக்க… இடையில் நுழைந்த காதல் மனம். “ ஹலோ என்ன விட்டா நானே தான் தேடிப் போய் எல்லாக் கொலையும் செஞ்சேன்னு சொல்லுவ போல, சில பொண்ணுங்க அவங்களே என்னைத் தேடி வந்து காதலிக்கிறதா சொல்லிருக்காங்க” என்றது.

“ ஆமா சொல்லிருக்காங்க தான் ஆனா அவங்க எல்லாம் சுஹனி மாதிரி உன்கிட்ட உண்மையான காதலை மட்டும் எதிர்பார்க்கலையே!. சுஹனியே உன்னைத் தேடி வந்தது மட்டும் இல்லாம உன்னை உண்மையா காதலிக்கவும் செய்யுறா, எனக்கு என்னமோ கடவுளே உன் விதியை மாத்தணும்னு நினைச்சு தான் இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்ன்னு தோணுது, இதுதான் சரியான வாய்ப்பு விட்டுடாத , இந்த தடவை இந்த வாய்ப்பை பயன்படுத்திக்காம விட்டுட்டா இன்னும் 48 வருஷத்துக்கு உனக்கு இதே நரக வாழ்க்கை தான். ‘என்று சுஹனியின் மீது இருந்த காதலில் செய்வதறியாது திகைத்து நின்றவனை மூளை சலவை செய்தது கயமை மனம்.

‘நீ என்ன தான் என்னை சமாதானம் செஞ்சாலும்… என்னால சுஹனியை கொல்ல முடியாது..’ என்று தன் முடிவில் பிடிவாதமாக நின்றான் கீர்த்தன்.

‘சரி நீ இப்படியே பிடிவாதத்தோட இரு, இன்னும் ஆயிரம் வருஷம் கடந்தாலும் உனக்கான சாபம் மட்டும் தீரவே தீராது… ‘என்று கயமை மனம் நச்சரிக்க… ‘எத்தனையோ சந்திர கிரகணம் வந்திருக்கு , எத்தனையோ பொண்ணுங்கள கொன்னுருக்கேன் அப்போ எல்லாம் தீராத சாபம் இப்ப மட்டும் தீரும்னு என்ன நிச்சயம்?’ , என்று கீர்த்தனின் காதல் மனம் பதில் தர…

‘அதையே தான் நானும் கேட்கிறேன் எத்தனையோ சந்திர கிரகணம் வந்திருக்கு எத்தனையோ பொண்ணுங்கள கொன்னுருக்க.. அதே மாதிரி இந்த தடவையும் ட்ரை பண்ண வேண்டியது தானே அதை விட்டுட்டு எதுக்கு தேவையில்லாம இவ்ளோ ஆர்க்யூ பண்ற?’ என்றது கயமை மனம்.

‘அப்போ அந்த பொண்ணுகளை எல்லாம் கொல்லுறப்போ எனக்கு வலிக்கல, என் சாபம் தீந்தா மட்டும் போதும்னு இருந்தது. ஆனா இப்போ சுஹனியை அந்த இடத்துல வச்சு யோசிக்கும்போது ரொம்ப வலிக்குது. என் சாபம் தீரலானாலும் பரவாயில்லை, ஹனி என்னைக்கும் என் கூடவே இருந்தா மட்டும் போதும்னு தோணுது…’என்று கலங்கிய விழிகளுடன் தனக்குள்ளேயே கூறிக் கொண்டான் கீர்த்தன்.

‘நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்.. அதாவது இத்தனை வருஷம் நடக்காதது இந்த வருஷம் மட்டும் எப்படி நடக்கும்னு கேட்ட இல்லையா?, அதுக்கான பதிலை நீயே சொல்லிட்ட.. இத்தனை வருஷம் அந்த பொண்ணுங்க மட்டும் தான் உன்னை காதலிச்சாங்க, முதல் தடவையா நீ ஒரு பொண்ண உண்மையா உயிருக்கு உயிரா காதலிக்கிற.. அப்போ இதுதான் உன்னோட உண்மையான காதல், இந்த காதலோட ரத்தம் தான் உன் சாபத்தை தீர்க்கக் கூடியது. அது மட்டும் இல்ல சுஹனி தான் போனப் பிறவில காந்தாரனோட காதலி, உன் காதல் உனக்கு கிடைக்கம போனதுக்கு அவன் தான் முக்கிய காரணம், இப்போ அவன் காதலை அவன்கிட்ட இருந்து பிரிச்சு உன் பகையை தீர்த்துக்கலாம்’ என்று தெளிவான விளக்கம் கொடுத்தது கயமை மனம்.

என்னனவோ விளக்கம் கொடுத்து இறுதியாக கயமை மனம் காதல் மனதை வென்றது. சுஹனியை தன் சுயநலத்திற்காக தன் சாபம் தீருவதற்காக பலி கொடுக்க கனத்த மனதுடன் முடிவெடுத்தான் கீர்த்தன்.

சுஹனியை நெருங்க நெருங்க தன் மனம் தடுமாறி எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கி விடுமோ என்ற தவிப்புடன் இயன்ற அளவு சுஹனியை விட்டு விலகி இருக்க முடிவு செய்தான் கீர்த்தன்.

சுஹனியின் காதலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் கீர்த்தன் இருக்க… கீர்த்தன் மீதான தனது காதலை கொஞ்சம் கொஞ்சமாய் வளர்த்துக் கொண்டே சுஹனி இருக்க… நாட்கள் மெதுவாய் நகர்ந்தது…

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல… நாமும்தான். உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~