27….

நம்மை தொலைத்தவர்களை

தேடி செல்லாதீர்கள்..

இன்று இல்லை என்றாலும்

என்றேனும் அவமானம் தான் மிஞ்சும்…

நம்மை தேடுபவர்களை

தொலைத்து விடாதீர்கள்..

உண்மையான அன்பு

நமக்கு கிடைக்காமலேயே

போய் விடக்கூடும்..

அரண்மனை வைத்தியரின் ஆலோசனையை ஏற்ற முக்கிய பிரமுகர்கள் பணிப்பெண் மரண செய்தியை அந்நாட்டின் மன்னனான கீர்த்தி வர்ம தேசிங்கனுக்கு தெரிவிக்காமல் மறைத்தனர்.

வளமை போல் அரசவையில் அனைவரும் கூடியிருக்க சற்று தாமதமாகவே அரசவை வந்து சேர்ந்தான் கீர்த்தி வர்மன்.

மன்னனைக் கண்டதும் பணிவுடன் அனைவரும் எழுந்து நிற்க.. கை அசைத்து அனைவரையும் அமரும்படி செய்கை காட்டியவன்.. சோர்வுடன் வந்து அரியணையில் அமர்ந்தான்.

எப்போதும் பொலிவுடன் காணப்படும் மன்னன் முகத்தில் இருந்த சோர்வை கவனித்த நிதி அமைச்சர், “தாங்கள் நலம் தானே!, தங்கள் முகம் ஏன் சோர்ந்து தெரிகிறது?”என்று காரணம் வினவினார்.

“அது ஒன்றும் இல்லை.. இரவு உறக்கம் சரியில்லை, அதனால் சற்று சோர்ந்து தெரிகிறேன் அவ்வளவே, “என்று காரணம் கூறினான் கீர்த்தி வர்மன்.

முக்கிய அமைச்சர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அர்த்தமாய் பார்த்துக் கொண்டு அமைதி காத்திட… தன்னை சூழ்ந்துள்ளவர்களின் சூழ்ச்சி புரியாத கீர்த்தி வர்மன்.. ” பணிப்பெண்ணின் மர்ம மரணம் குறித்து ஏதேனும் தகவல் கிட்டியதா?” என்று தான் கேட்பது சரிதானா என்ற தயக்கத்துடனேயே வினவினான்.

“எந்த மரணத்தை பற்றி கேட்கின்றீர்கள்? அரசே!” என்று எதுவும் அறியாதவர் போல் ஆலோசகர் பேசிட… “என்ன எந்த மரணம் என்று ஒன்றும் அறியாதது போல் வினவுகின்றீர்.. நேற்று இரவு அந்தப்புர வளாகத்தில் பெண்ணின் சடலம் கிட்டியதே அது குறித்து தான் நான் பேசிக் கொண்டிருக்கின்றேன்” என்று பதற்றமாய் பேசினான் கீர்த்தி வர்மன்.

எதிலும் நிதானத்துடன் செயல்படும் கீர்த்தி வர்மனின் முகத்தில் புதிதாய் தெரிந்த பதற்றத்தை கவனித்துக் கொண்டிருந்த அமைச்சர்கள் அனைவரும் ரகசியமாய் பார்வை பரிமாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருக்க, தனக்கிருந்த குழப்பத்தில் அதை எதையும் கவனிக்காத கீர்த்தி வர்மனோ…”அப்பெண்ணை காயப்படுத்தி கொலை செய்தது யார் என்று கண்டறிவதற்கான விசாரணையை துவங்கி விட்டீர்களா?, தளபதியாரே!” என்று தனது கேள்வியை படைத்தளபதியின் புறம் திருப்பினான்.

தன் பதவியின் பெயரை சொல்லி அழைக்கவும் மரியாதையுடன் எழுந்து நின்ற படைத் தளபதி, “தாங்கள் அனுமதி வழங்கினால் விசாரணையை தீவிர படுத்த வேண்டிய ஏற்பாட்டை கவனிப்பேன் அரசே!,” என்றான்.

“இனிதான் விசாரணையை துவங்க வேண்டுமா?, நல்லது..”என்று ஒருவித நிம்மதியுடன் கூறியவன்.. ஒரு நொடி தயங்கி பின் எதையோ அறிந்து கொள்ளும் ஆவலுடன், “நடந்த சம்பவம் குறித்து தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா?, இதை யார் செய்திருக்கக் கூடும் என்று தங்களுக்கு எவர் மீதேனும் சந்தேகம் உள்ளதா?”என்றான் கீர்த்தி வர்மன்.

“இதில் சந்தேகிக்க என்ன உள்ளது அரசே!, அப் பெண்ணின் சடலத்தை காணும் போதே தெரிகிறது இது ஏதோ காட்டு விலங்கின் வேட்டையாடும் வெறிச் செயல் என்று!, அந்தப்புரத்திற்குள் காட்டு விலங்கு எப்படி வந்திருக்க கூடும் என்ற கோணத்தில் விசாரணையை துவங்கி உள்ளேன்.” என்று அமைச்சர்கள் பேசி வைத்தது போல்.. கீர்த்தி வர்மன் மீது சந்தேகம் இல்லாதது போல் பேசினார் படைத் தளபதி.

“காட்டு விலங்கின் செயல் என்று தான் உங்களுக்கு தோன்றுகிறதா?, இதை வேறு எவரேனும் செய்திருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் சிறிதும் உங்களுக்கு எழவில்லையா?” என்று தெளிவு படுத்திக் கொள்ளும் விதத்தில் வினவினான் கீர்த்தி வர்மன்.

“பெண்ணின் சடலத்தை பரிசோதித்துப் பார்த்தபோது, அப்பெண்ணின் தேகத்தை காயப்படுத்தி உதிரத்தை மட்டும் பருகியது போல் தெரிகிறது, இது வேட்டை விலங்கின் செயலாக அல்லாமல் வேறு எவரின் செயலாக இருக்கக்கூடும் அரசே!, என்னால் இந்த அளவுக்குத்தான் யோசிக்க முடிந்தது. தங்களுக்கு எவர் மீதேனும் சந்தேகம் இருந்தால் கூறுங்கள் அந்த கோணத்திலும் விசாரணையை மேற்கொள்கிறேன்..”என்று பொய்யான பணிவுடன் பேசினான் படைத்தளபதி.

“இல்லை வேண்டாம் எனக்கு எவர் மீதும் சந்தேகம் இல்லை… நீங்கள் காட்டு விலங்கு எனும் கோணத்திலேயே இந்த விசாரணையை மேற்கொள்ளுங்கள்..” என்று உத்தரவு பிறப்பித்தான் கீர்த்தி வர்மன்.

மன்னரின் பதில் இதுவாகத்தான் இருக்கக்கூடும் என்று ஏற்கனவே கணித்திருந்த ஆலோசகர் அமைதியாய் எழுந்து நின்று.. “இடையில் பேசுவதற்கு மன்னிக்கவும் அரசே!, சிறு சந்தேகம் அதை வினவலாமா?” என்று அனுமதி வேண்டினார்.

சம்மதமாய் கீர்த்தி வர்மன் தலை அசைக்க.. “பணிப் பெண்ணின் மரணம் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லையே… பிறகு எப்படி தாங்கள் இதை அறிந்தீர்கள்.. “என்றார் முதன்மை ஆலோசகர்.

“இதையே தான் நான் தங்களிடம் கேட்க எண்ணினேன் ஆலோசகரே!, என் அரண்மனைக்குள் இப்படி ஒரு கோர சம்பவம் நிகழ்ந்ததை ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை. “என்று ஆலோசகர் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் அவரிடமே எதிர் கேள்வி கேட்டான் கீர்த்தி வர்மன்.

“இரவு பொழுது என்பதால் தாங்கள் அயர்ந்த உறக்கத்தில் இருப்பீர்கள் எப்படியும் அரசவையில் இது குறித்து பேசப்படும் அப்போது விளக்கமாக கூறிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன் அரசே!” என்று அதற்கு மேல் அரச பதவியில் இருப்பவனை எதிர் கேள்வி கேட்க முடியாமல் அமைதியாய் அமர்ந்தார் ஆலோசகர்.

அரசவை களையட்டும் என்று கீர்த்திவர்மன் அங்கிருந்து எழுந்து சென்றதும்.

அவை நீங்கிச் சென்ற முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தங்களது ரகசிய கூட்டத்தை அரண்மனை வைத்தியரின் வைத்திய சாலையில் நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.

“வைத்தியரே தாங்கள் கூறியது போல் பெண்ணின் மரணம் குறித்து மன்னருக்கு தெரியப்படுத்தாமல் இருந்தோம். ஆனால் அரசவையில் மன்னர் அப்பெண்ணின் மரணம் குறித்து தான் முதலில் கேள்வி எழுப்பினார்.”என்று அரசவையில் நிகழ்ந்த சம்பவங்களை வரிசையாய் அடுக்கிக் கொண்டே சென்றனர்.

” கொலை செய்தவருக்கு கொலை சம்பவம் குறித்து அறியாமல் போகுமா..!” என்று ஏளனப் புன்னகையுடன் கூறினார் வைத்தியர்.

“இன்னும் இதை நம் மன்னர் தான் நிகழ்த்தியிருக்கக்கூடும் என்பதற்கான முக்கிய ஆதாரம் எதுவும் நமக்கு இதுவரை கிட்ட வில்லையே வைத்தியரே!, அதற்கும் நம் மன்னர் மீது அபாண்டமாக பழி போடுவது சரிதானா!” என்று படைத் தளபதி சந்தேகமாய் வினவ..

“நம் மன்னரின் விசித்திர நடவடிக்கை தான் நாம் தேடும் முக்கிய ஆதாரம்..” என்றார் வைத்தியர்.

“புரிந்தது..இதுவே இக்கொலைக்கும் நம் மன்னருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை எனில் நடந்த நிகழ்வை ஏன் முதலில் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று ஆவேசம் கொள்வார். அது தான் நம் மன்னரின் இயல்பும் கூட, ஆனால் இம்முறை அவர் ஆவேசம் கொள்வதற்கு பதிலாக சற்று தடுமாறியது போல் தெரிந்தது. எந்த நிகழ்வு நடந்தாலும் அதை பல கோணத்தில் இருந்து ஆராயக்கூடிய மன்னர் இன்று காட்டு விலங்கு தான் பெண்ணின் மரணத்திற்கு காரணம் என்ற கோணத்தில் மட்டுமே விசாரணையை மேற்கொள்ள சொன்னது சற்று வியப்பாகவும் விசித்திரமாகவும் இருந்தது. இதிலிருந்தே!, அப்ப பெண்ணின் மரணத்தில் நம் மன்னருக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது “என்று வைத்தியர் என்ன சொல்ல வருகிறார் என்று தெளிவாய் புரிந்து கொண்டு பதில் தந்தார் ஆலோசகர்.

“தங்கள் கூற்று சரியா!” என்று மற்ற முக்கிய பிரமுகர்கள் ஆலோசகரின் பேச்சை ஆமோதிக்க..

“மன்னரின் இத்தகைய விசித்திர நோய்க்கு ஏதேனும் மருந்து உண்டா வைத்தியரே!,” என்று அக்கறையுடன் வினவினார் நிதி அமைச்சர்.

“இல்லை இது சாபத்தால் உண்டானது இதற்கு எவ்வகை மருத்துவமும் கை கொடுக்காது. இனி நம் மன்னர் கொஞ்சம் கொஞ்சமாக மனித தன்மையை இழந்து.. வேட்டையாடும் மிருகம் போல் மாறிவிடுவார்.” என்றார் வைத்தியர்.

“இதற்கு வேறு தீர்வே இல்லையா?”என்று ஆதங்கத்துடன் வினவினார் நிதி அமைச்சர்.

“இதற்கான தீர்வு என்னிடம் உள்ளது..”என்று தனது தந்திர புத்தியை காட்டினார் ஆலோசகர்.

ஆலோசகர் கூறிய திட்டத்தை சில பல நிபந்தனைகளுடன் மற்ற அமைச்சர்களும், படைத்தளபதியும் வைத்தியரும் ஏற்றுக்கொள்ள..”இல்லை என்னால் இதை ஏற்க இயலாது, இது நம் மன்னருக்கு செய்யும் துரோகம்.”என்று ஆலோசகரின் திட்டத்தை மறுத்து கூறினார் நிதி அமைச்சர்.

“ஏற்க இயலவில்லை எனில் அனைத்திலும் இருந்து விலகிக் கொள்ளுங்கள் நிதி அமைச்சரே!” என்று ஆலோசகர் கூறிட..”அதைக் கூற நீ யார்?,”என்று ஆவேசமாக வினவினார் நிதி அமைச்சர்.

“என்ன அமைச்சரே இப்படி கேட்டு விட்டீர், என் திட்டம் தங்களுக்கு சரியாக விளங்கவில்லை போலும்!.. நானே இந்நாட்டின் அடுத்த அரசன்… எனக்கு உறுதுணையாய் நிற்பவர்கள் அனைவரும் எனக்கு அடுத்தடுத்த பதவி வகிப்பர், மேலும் பெரும் சன்மானம் அவர்களுக்கு கிடைக்கக்கூடும்…”என்று ஆசை வார்த்தையில் நிதி அமைச்சரை தன் வசப்படுத்திக் கொள்ள முயன்றார் ஆலோசகர்.

“வாயை மூடு கயவனே நீ எல்லாம் அரசனா!, நயவஞ்சகா… இதோ இப்போதே சென்று மன்னருக்கு எதிராக நடக்கும் சதி திட்டத்தை அவருக்கு தெரியப்படுத்துகிறேன்..”என்று அவசரமாய் அங்கிருந்து நிதி அமைச்சர் வெளியேறிட… அடுத்த நொடியே படைத்தளபதியின் குறு வாள் அவர் நெஞ்சை கிழித்து உயிரைக் குடித்தது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு,24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~