உயிருடன் கலந்த உறவாய் உன்னை நினைப்பதாலோ என்னவோ ஒவ்வொரு முறை துடிக்கும் போதும்.. உன் பெயரை உச்சரிக்கிறது என் இதயம்….
“பாஸ் அக்கம் பக்கத்து தோப்புல வேலை பாத்துட்டு இருந்தவங்க கிட்ட ஓரளவு விசாரிச்சேன். இது யாரோ சுதாகர் ஐயாவோட வீடுன்னு சொல்றாங்க, “என்று சித்தேஷ் நிறுத்த… “அவர் யாரோ இல்ல, சுஹனியோட அப்பா” என்றான் கீர்த்தன்.
“அப்போ உங்க மாமனார் வீடுன்னு சொல்லுங்க “என்று கிண்டலாய் சித்தேஷ் கூறிட.. ” எனக்கும் அந்த பொண்ணுக்கும் நடுவுல எதுவும் இல்லைன்னு ஏற்கனவே சொல்லிட்டேன். தேவை இல்லாம பேசி உதை வாங்காத!” என்று கண்டிப்புடன் எச்சரித்தான் கீர்த்தன்.
“ஒன்னும் இல்லாம தான், கல்யாணம்னு சொன்னதும் இவ்வளவு தூரம் பதறி அடிச்சுட்டு ஓடி வந்தீங்களா!, கொஞ்சம் நம்புற மாதிரி பொய் சொல்லுங்க பாஸ்” என்று அப்போதும் விடாமல் கிண்டல் செய்தான் சித்தேஷ்.
“வாய மூடிட்டு வந்த வேலையை மட்டும் பார்ப்போமா!, ஆமா உன்னை கார் கிட்ட தானே வெயிட் பண்ண சொன்னேன், நீ எதுக்கு தேவையில்லாம அக்கம் பக்கத்துல போய் விசாரிச்ச.. , நாம இப்படி விசாரிக்கிற விஷயம் வெளியே தெரிஞ்சா அவங்க உஷாராகிட மாட்டாங்களா?” என்று கடுகடுத்தான் கீர்த்தன்.
“என்னை சொல்றீங்களே! சார் என்ன பண்ணுனீங்க?, அந்த பழனி கிட்ட விசாரிச்சுட்டு வரேன்னு தானே போனீங்க அது மட்டும் வெளியே தெரியாதா?” என்றான் சித்தேஷ்.
“உன்கிட்ட பேசி புரிய வைக்க முடியாது சரி சொல்லு நீ விசாரிச்சதுல வேற என்ன விஷயம் தெரிஞ்சது?” என்று விபரம் அறிய முயன்றான் கீர்த்தன்.
“பெருசா ஒன்னும் இல்ல பாஸ், இது சுஹனி மேம் அப்பாவோட பேர்ல இருக்கிற தோப்பு வீடு, இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கார் ஆக்சிடெண்ட்ல சுஹனி மேம் அப்பா அம்மா ரெண்டு பேரும் இறந்துட்டாங்க போல, அவங்க இறந்ததுக்கு அப்புறம் யாரும் இந்தப் பக்கம் வரது இல்லையாம், வீடு இத்தனை நாளா பூட்டி தான் இருந்திருக்கு, இப்ப நாலு நாளைக்கு முன்னாடி தான் வீட்டை திறந்து சுத்தம் பண்ணியிருக்காங்க. ஆனா இங்க இருக்குற யாரும் இப்போ வரைக்கும் சுஹனி மேம்மை பாக்கவே இல்லையாம் பாஸ். எல்லாரும் அவங்க சென்னையில படிச்சிட்டு இருக்கிறதா தான் நினைச்சுட்டு இருக்காங்க. “என்று தான் விசாரித்து அறிந்த விபரங்களை கூறினான் சித்தேஷ்.
“இவ்வளவு தான் விசாரிக்க முடிஞ்சதா?, இதைத் தான் நான் பழனி கிட்டயே கேட்டுட்டு வந்துட்டேனே!, உனக்கு புதுசா எதுவும் இன்பர்மேஷன் கிடைக்கலையா?,” என்று சோர்வுடன் வினவினான் கீர்த்தன்.
” ஆ.. அப்புறம் பாஸ்… சொல்ல மறந்துட்டேன் பாருங்க, இது தோட்டத்து வீடு தானாம், இதுக்கு பக்கத்துல சின்னதா இன்னொரு பண்ணை வீடு இருக்காம், ஒருவேளை மேம்மை அங்க மறைச்சு வைச்சிருபாங்களோ!, “என்று சந்தேகத்துடன் கூறினான் சித்தேஷ்.
“இல்ல அவ அங்க இருக்க வாய்ப்பு இல்ல. ” என்றவன் எதையோ தீவிரமாக யோசித்த முகபாவனையுடன், “இங்க என்னவோ தப்பா இருக்கிற மாதிரி இருக்கு சித்தேஷ்.” என்று குழப்பத்துடன் பேசினான் கீர்த்தன்.
“கட்டாயக் கல்யாணம் பண்றதே தப்பு தான பாஸ். அதுக்கு மேல வேற என்ன தப்பா இருக்க போகுது!”என்று புரியாமல் பேசினான் சித்தேஷ்.
“இல்ல சித்தேஷ் எனக்கு என்னமோ இங்க வந்ததுல இருந்து மனசு ஒரு மாதிரி படபடன்னு இருக்கு… எனக்கு பிடிக்காதவங்க யாரோ என் பக்கத்துல இருக்கிற மாதிரி உள்ளுக்குள்ள வெறுப்பா இருக்கு.” என்று தன் மனம் உணரும் உணர்வுகளை மறைக்காமல் வெளிப்படுத்தினான் கீர்த்தன்.
“இருக்கும் இருக்கும் ஏன் இருக்காது!, உயிருக்கு உயிரா காதலிக்கிற பொண்ண கல்யாணம் பண்ணிக்க கடத்திட்டு வந்தவன் பிடிக்காதவனா தானே இருப்பான்,..”என்று எள்ளலுடன் பேசினான் சித்தேஷ்.
“உன்கிட்ட போய் சொல்றேன் பாரு என்னை சொல்லணும், இன்னொரு தடவை என்னையும் அந்த பொண்ணையும் சம்பந்தப்படுத்தி பேசின, உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” என்று கோபமாய் கீர்த்தன் கூறிட, “அட சும்மா கலாய்ச்சேன் பாஸ். இதுக்கெல்லாமா சீரியஸாவீங்க, ஆமா என்னமோ தப்பா இருக்கிற மாதிரி தோணுதுன்னு சொன்னீங்கல அது என்ன?” என்று காரணம் வினாவினான் சித்தேஷ்.
” கல்யாணம் பண்ணனும்னு கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தவங்க, வந்த உடனே கல்யாணத்துக்கான ஏற்பாட கவனிக்காம, நாலு நாளா.. சுஹனியை யாருக்கும் தெரியாம எங்கேயோ மறைச்சு வச்சிருக்காங்க.. இதுல இருந்து அவங்களோட நோக்கம் கல்யாணம் மட்டும் இல்லைன்னு தெளிவா தெரியுது.” என்று தனது சந்தேகத்தை கூறினான் கீர்த்தன்.
“ஆமால நீங்க சொல்றது சரிதான், ஒருவேளை அவங்க சொத்தையும் எழுதி வாங்குறதுக்காக தான், இத்தனை நாள் டைம் எடுத்துக்குறாங்களோ!” என்றான் சித்தேஷ்.
“மே பி இருக்கலாம்.. கட்டாய கல்யாணம் பண்றதுக்கு ஊருக்கு ஒதுக்கப்புறமா இருக்கிற இந்த வீடுதான் அவங்களோட ஆப்ஷனா இருக்கும்னு நான் நினைக்கிறேன். சோ நீ இங்க பக்கத்துலயே நம்ம தங்கறதுக்கு ஏதாவது இடம் கிடைக்குதான்னு பாரு.” என்று உத்தரவு பிறப்பித்தான் கீர்த்தன்.
“நீங்க இத தான் சொல்லுவீங்கன்னு எனக்கு ஏற்கனவே தெரியும் பாஸ். அதனால தான் பக்கத்திலேயே நாம தங்கறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். அதோ தெரியுதே அந்த மா தோப்புக்கு நடுவுல ஒரு வீடு இருக்கு!, அதோட ஓனர் கிட்ட பேசிட்டேன். நாம இங்க இருந்து கிளம்புற வரைக்கும் அங்கே தங்கிக்கலாம்னு சொல்லிட்டாங்க, என்ன பணம் தான் கொஞ்சம் அதிகமா எதிர்பார்க்கிறாங்க, இருந்தாலும் ஓகே சொல்லிட்டேன் ” என்றான் சித்தேஷ்.
“குட்.. நல்ல வேலை பண்ணுன, இங்க இருக்கிற யாருக்கும் நம்ம மேல சந்தேகம் வந்திடக் கூடாது, அதனால டூரிஸ்ட் மாதிரியே காட்டிக்குவோம். சரி வா அந்த வீட்டுக்கு போவோம்” என்று தனது உடமைகளுடன் வாடகைக்கு பார்த்து இருந்த வீட்டில் தஞ்சம் புகுந்தனர் இருவரும்.
“பாஸ் இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உக்காந்துட்டு இருப்பீங்க.. லஞ்ச் டைமாச்சு வாங்க ஊருக்குள்ள போய் சாப்பிட்டு வருவோம்..”என்று தன் எஜமானனை உடன் அழைத்தான் சித்தேஷ்.
“எனக்கு பசிக்கல நீ போய் சாப்பிட்டு வா..”என்று கீர்த்தன் மறுக்க..”என்ன பாஸ் பீலிங்கா!, “என்று கிண்டலுடன் துவங்கியவன், கீர்த்தன் கண்களில் பிரதிபலித்த கோபத்தை கவனித்து.. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, “உங்களுக்கு ஏற்கனவே ஹீமோகுளோபின் ப்ராப்ளம் இருக்குன்னு வேற சொல்லி இருக்கீங்க. இன்னைக்கு காலைல பீட்ரூட் ஜூஸ் வேற குடிக்கல, இப்போ இப்படி சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகுறது. வாங்க பாஸ் போய் சாப்பிட்டு வரலாம்..” என்று வற்புறுத்தினான் சித்தேஷ்.
‘ இவன் இன்னும் அதை மறக்கலையா!’ என்று தனக்குள் சலித்துக் கொண்டவன், “இங்க பாரு நான் ஒன்னும் சின்னக் குழந்தை இல்லை, எனக்கு வேண்டியதை பார்த்துக்க எனக்கு தெரியும். உனக்கு பசிக்குதுனா, நீ போய் சாப்பிட்டு வா” என்றான் கீர்த்தன்.
” பிடிவாதம் பிடிச்சா விட மாட்டீங்களே.. சரி வரும்போது ஃப்ரூட் ஜூஸ் கடையில் உங்களுக்காக பீட்ரூட் வாங்கி கொடுத்து அதை ஜூஸ் போட்டுத் தர சொல்லி கொண்டு வரேன், அதையாவது பிடிவாதம் பிடிக்காம குடிங்க..”என்று சித்தேஷ் அன்புக் கட்டளை இட.. “இங்க பாரு நான் சொல்லாம எதையாவது வாங்கிட்டு வந்து நின்ன.. தோலை உரிச்சிடுவேன் ராஸ்கல். வெளிய போனா உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்த்துட்டு வா தேவையில்லாம எனக்கு நல்லது பண்றேன்னு நினைச்சிட்டு எந்த கிறுக்குத்தனமும் பண்ணி வைக்காத…” என்று எரிச்சலுடன் எச்சரித்தான் கீர்த்தன்.
இதற்கு மேல் முதலாளியிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று புரிந்து கொண்ட சித்தேஷ் தனது வயிற்றை நிறைத்துக் கொள்ள ஊருக்குள் சென்றான்.
சித்தேஷ்.. தலை கண் மறைந்ததும் தன் உடமைகளில் பத்திரமாய் பாதுகாத்து வந்த கை அடக்க குளிர்சாதன பெட்டியில் இருந்த ரத்தத்தை எடுத்து அப்படியே குடித்து முடித்தவன் அப்போதும் பசி அடங்காமல்.. தோட்டத்தில் சுற்றித்திரிந்த கோழி ஒன்றை பிடித்து அதன் சூடான ரத்தத்தை ரசித்து ருசித்து பருகினான்.
இரவு உணவின் வேளையிலும் சித்தேஷ் வற்புறுத்த அப்போதும் விடாப்படியாக மறுத்தவன்.. “சரி நீ இவ்ளோ தூரம் கம்பெல் பண்ற ஒரு ஃபுல் கிரில் சிக்கனும், ஒரு ஃபுல் தந்தூரி சிக்கனும் வாங்கிட்டு வா..” என்றான் கீர்த்தன்.
“பாஸ் நான் ஒன்னு கேட்டா தப்பா எடுக்க மாட்டேங்கல, உங்களுக்கு நான்வெஜ் மட்டும் தான் பிடிக்குமா வெஜ் சாப்பாடே பிடிக்காதா?” என்று பல நாள் தன் மனதில் குடைந்து கொண்டிருந்த சந்தேகத்தை வினவினால் சித்தேஷ்.
“எனக்கு வெஜ் அலர்ஜி…”என்று கீர்த்தன் பதில் தர.. “அப்போ பீட்ரூட் ஜூஸ் குடிக்கிறீங்க!” என்று சந்தேகத்துடன் வினவினான் சித்தேஷ்.
” புடிக்கலனாலும் அதை நான் குடிச்சு தான் ஆகணும். அது என் தலையெழுத்து.. சும்மா நோண்டி நோண்டி கேள்வி கேட்காம போய் எனக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிட்டு வா” என்று உத்தரவு பிறப்பித்து விட்டு தன் உதவியாளனை ஊருக்குள் அனுப்பி வைத்தான் கீர்த்தன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ எல்லாத் திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.