2..
மனதின் தேவைகள் அதிகரிக்கும் போது…
மனிதனின் தேடல்கள் அதிகரித்து விடுகிறது…
தேவைகள் குறைந்தாலும்..
தேடல்கள் மட்டும் குறைவதே இல்லை…
கி.பி 2022….
சென்னை புறநகர் பகுதியில் இருந்த மருத்துவ வளாகத்திற்குள் தன் அடையாளத்தை மறைத்தபடி கண் கண்ணாடி அணிந்த ஒருவன் வரவேற்பில் இருந்த பெண்ணை அணுகி, ” நான் சீஃப் டாக்டரை பாக்கணும் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா?” என்றான்.
” உங்க பழைய ரிப்போர்ட் இருக்கா சார்.. ” என்று மருத்துவமனை பணிப்பெண் வினவ, ” இல்ல நான் இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் வரேன், ” என்றான் அவன்.
” கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், ஃபர்ஸ்ட் ஹெல்த் ரிப்போர்ட் கார்டு ரெடி பண்ணிக்கிறேன்” என்று மருத்துவ குறிப்புகள் அடங்கிய அட்டையை எடுத்து முன் வைத்தவள், ” உங்க நேம் அட்ரஸ் எல்லாம் சொல்லுங்க.. ” என்றாள்.
” கிவ் இட் டு மீ, ஐ வில் ஃபில் இட்..” என்றவன் அந்த அட்டையை வாங்கி சில விபரங்களை குறித்து விட்டு, ” ஐ டோன்ட் ஹவ் மச் டைம், சோ ப்ளீஸ் அரேஞ்ச் அப்பாயிண்ட்மெண்ட் இமெடியட்லி” என்று வந்தவன் அவசரம் காட்டிட…
” வெயிட் பண்ணுங்க சார் உங்களுக்கு முன்னாடி இருக்கிறவங்க போனதுக்கு அப்புறம் தான் உங்களை அனுப்ப முடியும், ” என்று சாதாரணமாக கூறினாள் அந்தப்பெண்.
” நான் சொல்றது புரியல, எனக்கு அதிக நேரம் இல்ல நான் உடனே உங்க டாக்டரை பாக்கணும்” என்று அதிகாரமாய் வினவினான் அவன்.
” சாரி சார் ரூல்ஸ் எல்லாருக்கும் ஒன்னு தான் ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க.. ” என்று தன்மையாகவே அந்த பெண் கூறிட, பொறுமை இழந்தவனோ தனது கண் கண்ணாடியை அகற்றிவிட்டு, எதிரில் இருந்த பெண்ணவள் விழிகளை கூர்ந்து கவனித்தான். ” என்னை இப்போவே உங்களோட சீஃப் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போ, ” என்று கட்டளையிட்டான்.
அடுத்த நொடியே அவனது கட்டளைக்கு கட்டுப்பட்டு மறுவார்த்தை பேசாமல் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் இருக்கும் இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றாள் அந்த செவிலியப் பெண்.
தன் விவரம் அடங்கிய அட்டையை தன் சட்டை பைக்குள் அடக்கிக் கொண்டு, மீண்டும் கண்ணாடியை அணிந்து கொண்டு, செவிலியப் பெண்ணை பின் தொடர்ந்தான் அவன்.
தலைமை மருத்துவரின் அறைக்குள் அவன் நுழைந்ததும் ஏதோ கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டது போல் தலையை சிலுப்பிக் கொண்டவள்.. ‘ நான் இங்க என்ன பண்ணுறேன்?, நான் ரிசப்ஷன்ல தானே இருந்தேன்! இங்க எப்படி வந்தேன்!’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு தனது பழைய இடத்திற்கு சென்றாள் அந்த செவிலியப் பெண்.
முன் அறிவிப்பு எதுவும் இன்றி திடீரென்று அறைக்குள் நுழைந்த புதியவனை கண்டு எரிச்சல் அடைந்த தலைமை மருத்துவர், ” ஹூ ஆர் யூ? ஹூ ஆஸ்க்டு யு டு கம்? கெட் அவுட்..” என்று கோபமாய் கத்தினார்.
மருத்துவரின் வார்த்தைக்கு சிறிதும் மதிப்பளிக்காமல் அவருக்கு முன் இருந்த நாற்காலையில் அமைதியாக சென்று அமர்ந்தவன், ” எனக்கு உங்க ஹெல்ப் வேணும் டாக்டர். ” என்றான்.
” நான் உன்னை வெளிய போக சொன்னேன்.. ” என்று மருத்துவர் அழுத்தமாக உரைக்க, “ முடியாது.. எனக்கு நிறைய ப்ளட் தேவைப்படுது” என்று அவன் கூறிட… “ அதை எதுக்கு இங்க வந்து கேட்டுட்டு இருக்க?, பிளட் பேங்க் போய் கேளு” என்று அலட்சியமாய் மருத்துவர் பதில் தர, “ போனேனே.. டாக்டர் ஃபிஸ்கிரிப்ஷன் கேட்குறாங்க? என்ன செய்ய?” என்றான் அவன்.
“ஆமா பிஸ்கிரிப்ஷன் கேட்கத் தான் செய்வாங்க! கேட்டா குடுங்க” என்று மருத்துவர் கூறிட… “ குடுக்கணும், குடுக்கத் தான்… கேட்டு வந்திருக்கேன்” என்றவன், தன் கண் கண்ணாடியை அகற்றி மருத்துவரின் கண்களை கூர்ந்து கவனித்து, ” பிளட் பேங்குக்கு ரெகமெண்ட் பண்ணி உன் பிஸ்கிரிப்ஷன்ல சைன் பண்ணி குடு. ” என்று அவன் கூறிட அடுத்த நொடியே மறுத்து எதுவும் கூறாமல் வசியத்திற்கு கட்டுப்பட்டவர் போல் கையெழுத்திட்டு கொடுத்தார் தலைமை மருத்துவர்.
“ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு டாக்டர்கிட்ட போய் நிக்க முடியல, ஏன் எதுக்குன்னு கேள்வியை கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு, நீ ஒன்னு செய்.. அடுத்த ஒரு வருஷத்துக்கு தேவையான பிஸ்கிரிப்ஷன் ரெடி பண்ணிக் குடுத்திடு, அப்புறம் இனி எனக்கு எப்போ இரத்தம் தேவைப் பட்டாலும் நான் உன்னை தான் காண்டாக்ட் பண்ணுவேன், ” என்றபடி மருத்துவரின் அலைபேசியை எடுத்து அதில் தன் எண்ணை பதிவு செய்தவன், ” இதுதான் என்னோட நம்பர் நான் எப்ப கால் பண்ணாலும் அடுத்த நிமிஷம், நீ உன் பிஸ்கிரிப்ஷன்ல சைன் பண்ணி என் வீட்டுக்கு அனுப்பி வைச்சுடு… ” என்று தனக்கு ஒரு அடிமையை உருவாக்கி விட்டு அமைதியாய் அங்கிருந்து வெளியேறினான் அவன்.
மருத்துவரிடம் இருந்து கையொப்பம் பெற்று வந்த படிவத்தை காட்டி ரத்த வங்கியில் இருந்து போதுமான அளவு ரத்தத்தை சேகரித்துக் கொண்டவன் வாகனம் புறநகர் பகுதியில் தனக்கென்று அமைத்துக் கொண்ட பெரிய மாளிகையை நோக்கி நகர்ந்தது.
நகரம் கடந்ததும் இருள் படர்ந்த சாலையில் வாகனம் நகர்ந்து கொண்டிருக்க தூரத்தில் ஒரு பெண் அச்சத்துடன் அலறும் குரல் கேட்டது.
இலை அசையும் ஓசையும் தெளிவாய் கேட்கும் அவன் செவிகளுக்கு எங்கோ தூரத்தில் எழுப்பப்பட்ட பெண்ணின் அபயக்குரல் மிகப்பெரும் சத்தமாய் காதுகளுக்குள் எதிரொலித்தது, வாகனத்தை ஓரமாய் விட்டு குரல் வந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினான் அவன்.
ஆள் அரவம் இல்லாத சாலையின் ஒதுக்குப்புறமாய் ஒரு வாகனம் நின்றிருக்க, அதனை நெருங்கியவன் உள்ளுக்குள் எவரும் இருக்கின்றனரா என்று எட்டிப் பார்த்தான். கார்க் கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் பயத்தில் அலறும் பெண்ணின் குரல் மிக அருகில் கேட்டது.
அதுவரை கொண்டிருந்த நிதானத்தை கைவிட்டு அவசரமாய் பெண்ணின் குரல் வந்த திசையில் மின்னல் வேகத்தில் ஓடினான் அவன்.
இரு ஆண்கள் ஒரு பெண்ணை வட்டமிட்டு கொண்டிருக்க, அப்பெண்ணோ அரைகுறையாய் கிழிக்கப்பட்ட ஆடையுடன் இரு கை கொண்டு அங்கம் மறைத்தபடி, ” உங்களை ஃபிரெண்டுனு நம்பி தானடா கூட வந்தேன். ஏன்டா இப்படி நடந்துக்கிறீங்க?. ப்ளீஸ்டா என்னை விட்டுடுங்கடா” என்று அழுகுரலில் நம்பி வந்த நண்பர்களிடம் மன்றாடிடாள் அவள்.
பெண்ணவள் குரல் செவிகளில் விழாத அளவிற்கு மது போதையில் நின்றிருந்த ஆண்கள் இருவரும் மானத்திற்காக மன்றாடியவள் கரம் பற்றி இழுத்து வம்பு செய்திட…
குரல் வந்த திசைக்கு விரைந்து வந்தவன் பெண் கரம் பற்றியவன் கரத்தை தட்டி விட்டு… ஆண்கள் இருவரையும் சரமாரியாக அடித்து வீழ்த்தினான்.
நடந்த எதையும் நம்ப முடியாமல் மிரட்சியுடன் நின்றிருந்தவள், ஆறுதலாய் தன்னைக் காத்தவன் கரம் பற்றிக் கொண்டு ” ரொம்ப தேங்க்ஸ்ங்க.., ஆக்சுவலா இவங்க என் பிரெண்ட்ஸ் தான், திடீர்னு ஏன் இப்படி நடந்துக்கிட்டாங்கன்னு தெரியல!” என்றாள்.
தன் கரத்தை வளைத்து பிடித்திருந்தவள் கரத்தை விலக்கி தள்ளியவன், ” இனிமேலாவது இப்படி வெளிய சுத்தாமா கேர்ஃபுல்லா வீடு போய் சேரு ” என்று அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து விலகி நடந்தான்.
” ஹலோ நில்லுங்க, என்னை இங்கே இப்படியே விட்டுட்டு போன என்ன அர்த்தம்?, எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு, என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்க ” என்று தன்னை கண்டு கொள்ளாமல் முன் நடந்தவனை பின் தொடர்ந்தாள் அவள்.
” என்னை எதுக்கு இப்ப ஃபாலோ பண்ற?” என்று எரிச்சலுடன் வினவியவன், அப்போதுதான் அவள் உடை இருந்த நிலையை கவனித்து.. அவசரமாய் தனது மேல் சட்டையை கழட்டி அவள் புறம் வீசி எரிந்து, ” நீ இப்படியே வீட்டுக்கு போக முடியாது, சோ இதை போட்டுக்கோ” என்றான்.
அவன் வீசி எறிந்த சட்டையை சரியாக கையில் பிடித்தவள், வேகமாய் அணிந்து கொண்டு மீண்டும் அவனை பின் தொடர்ந்தாள்.
” இப்ப எதுக்கு என் பின்னாடியே வர?, ” என்று மீண்டும் மீண்டும் அவள் தன்னை பின் தொடர்வதை கண்டு எரிச்சலுற்றப்படி வினவினான்.
” என்னைய ஹாஸ்டல் வரைக்கும் ட்ராப் பண்ண முடியுமா? ப்ளீஸ்” என்று கெஞ்சலாய் வினவினாள் அவள்.
” நீங்க வந்த கார் இருக்குல அதுல போக வேண்டியது தானே?” என்று அவன் பிடி கொடுக்காமல் பேசிட..
” கார் கீ விக்கி கிட்ட இருக்கும், அதான் இப்ப நீங்க ரெண்டு பேர அடிச்சீங்கல அதுல ஃகிரீன் கலர் டீ சர்ட் போட்டு இருந்தவன் தான் விக்கி, அது அவனோட கார் தான். இன்னைக்கு அவனுக்கு பர்த்டேனு பார்ட்டி தரேன்னு கூப்பிட்டான். கடைசில இப்படி ஆயிடுச்சு” என்று வெகுளியாய் பேசினாள் அவள்.
இந்த விபரம் எல்லாம் எனக்கு எதற்கு என்பது போல் அலட்சியமாய் தலையை அசைத்தவன், “வா அவன்கிட்ட இருந்து கார் கீ எடுத்து தரேன், நீ காரை எடுத்துட்டு கிளம்பு, ” என்று அவன் கூறிட.. அசடு வலிந்த புன்னகையுடன் எனக்கு கார் ஓட்டத் தெரியாதே!, ” என்றாள் அவள்.
” சரி சரி வா நானே டிராப் பண்றேன்” என்று அவளையும் தன்னுடன் அழைத்துச் சென்று தனது வாகனத்திலேயே அவள் தங்கியிருக்கும் கல்லூரி விடுதிக்கு அழைத்து வந்தான்.
“நீ சொன்ன ஹாஸ்டல் வந்திருச்சு இறங்கு” என்று கொஞ்சமும் கனிவு இல்லாத குரலில் கண்டிப்புடன் அவன் கூட, ‘ சரியான சிடு மூஞ்சியா இருப்பான் போல’ என்று உள்ளுக்குள் எண்ணிக்கொண்டவள் உள்ளத்தின் எண்ணத்தை வெளியில் மறைத்து..
“என் பெயர் சுஹனி, எம் ஏ சைக்காலஜி,” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு, நட்பாய் கரம் நீட்டிட, அவளை அலட்சியம் செய்யும் முக பாவனையுடன், ” நீ யாரா இருந்தா எனக்கு என்ன? ஃபர்ஸ்ட் கீழே இறங்கு” என்றான் அவன்.
” இவ்வளவு ஹெல்ப் பண்ணி இருக்கீங்க உங்க பேர் என்னன்னு கூட சொல்லாம போறீங்களே!” என்று சுஹனி வினவிட..
“என் பேரு உனக்கு தேவையில்லாத விஷயம்.. ” என்று வெடுக்கென்று பதில் தந்தான் அவன்.
“நான் ஒரு சைக்காலஜி ஸ்டுடென்ட், நான் கெஸ் பண்ணுன வரைக்கும், நீங்க ஒரு மிஸ்டரி பர்சன், உங்களுக்குள்ள பல ரகசியத்தை மறைச்சு வச்சு இருக்கீங்க, அதை யாரும் தெரிஞ்சுக்க கூடாதுன்னு உங்க பக்கத்துல யாரையும் நெருங்க விட மாட்டீங்க அப்படித் தானே!” என்று ஓரளவிற்கு தன் அருகில் இருந்தவனை கணித்துக் கூறினாள் சுஹனி.
தன் விபரங்களை ஓரளவு அனுமானித்த பெண்ணவள் புறம் திரும்பியவன், அவள் கண்களை கூர்ந்து கவனித்து, “இன்னைக்கு உனக்கு நடந்ததை எல்லாம் கெட்டக் கனவா நினைச்சு மறந்திடு, அப்படியே என்னைப் பார்த்த விஷயத்தையும். இந்த நிமிஷத்திலிருந்து உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ என்னை பார்த்ததே இல்ல, ஒகே வா. ” என்றான் அவன்.
” ஓகே.. ” என்றவள் மறுவார்த்தை பேசாமல் காரை விட்டு கீழே இறங்கி அவள் தங்கியிருக்கும் விடுதியை நோக்கி நடந்தாள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை: ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~