14

தொடரும் மர்மம்..

நாளாக நாளாக..
உன் காதலால்
நானும் நானாக
இல்லாமல் …
நீயாக மாறிப்போகிறேன்..

தினம் தினம் விடியலில் விதுரன்  முகம் கண்டு  இரவில் அவன் நெஞ்சில்  சரிந்து  உறக்கம் கொண்டு அவன் நினைவுகளை மட்டும் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருந்தாள் ஹனிகா.  எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள். கன்னியவள் காதல் அவள் கணவனின்  கல் மனதையும் கரைக்க துவங்கியிருந்தது.

தன் துணையான நிலவுக்கு ஓய்வு கொடுத்திட தன் ஒளிக்கதிர்களை உலகெங்கும் பரப்பி விடியலின் அடையாளமாய் எழுந்து நின்றான் கதிரவன்.  அழகாய் விடிந்த காலை பொழுதில் தேன்மொழி தயாரித்து கொடுத்த தேநீரை, தானே சிரத்தை எடுத்து செய்ததுபோல் சிறு துளியும் சிதறாமல் வெகு கவனத்துடன், கையில் ஏந்தி வந்த ஹனிகா படுக்கையில்  விதுரனை காணாது,  அறையெங்கும் தேடிட, குளியல் அறையில் இருந்து   முகம் துடைத்தபடி வந்தவனை கண்டதும் சத்தமில்லாமல் கையில் இருந்த தேநீர் கோப்பையை அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு, தன் காதலுக்கு உரியவனின் கவனத்தை ஈர்க்காமல்  பின்புறமாய் சென்று  இருபுறமும் கைகொடுத்து,   இடையில் கைகோர்த்து முதுகில் சாய்ந்து கொள்ள விதுரன்  மனம் மெலிதாய்  சிலிர்த்து. உடல் மெதுவாய் அதிர்ந்திட இதழ்    மென்மையாய் புன்னகை  செய்தது. “ என்ன மாமா, குளிருதா உடம்பு நடுங்குது”   என்று அவன் உணர்வினை  உணர்ந்தும்  உணராதது போல் வினவினாள்.

“ ஹே.. வாலு, காலையிலேயே என்ன விளையாட்டு” என்று அவள் கரம் பற்றி இழுத்து தனக்கு முன் கொண்டு வந்தவன், தன்னை விட்டு விலகி நிறுத்த முயற்சிசெய்ய அவன் முயற்சியை முறியடித்து ஒட்டிக்கொண்டு நின்றவள், “எது இதுக்கு பேரு விளையாட்டு? உங்கள  வைச்சுட்டு நான் என்னதான் செய்யப் போறேனோ,  அசடு அசடு ” என்று ஹனிகா குறும்பாய் சிரிக்க “ அதான் வைச்சு  செய்யுறயே! இதுக்கு மேல என்ன செய்யப் போற? நைட் நல்ல தூக்கம் போல” என்றான் விதுரன்.

மஞ்சமென
உன் நெஞ்சம்
சாய்ந்த நேரம்
என் நெஞ்சின்
துயரெல்லாம்
பஞ்சென பறந்திட  கண்டேன்..
அதுவரை என்னை
நெருங்க மறுத்து..
விலகி நின்ற உறக்கம்
என்னை முழுதாய்
ஆட்கொள்ள..
நிம்மதி நித்திரை   கொண்டேன்…

என்று கவிதை வரிகளில் தன் நிலையை சொன்னவள், “என்ன நல்ல தூக்கமான்னு   கிண்டலாக கேட்டுறீங்க?, ஏன்   நீங்க சரியா தூங்கலையா?” என்று பதில் கேள்வி கேட்க, தன்னை உரிமை கொண்டாட துடிக்கும் பெண்ணவள் நெருக்கத்தில்  மனமோ தடுமாற, வயதோ வஞ்சியை நாட, நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல்  பரிதவித்த நிலையை மறைத்து, “ எப்படி தூங்கிறது, ரோட் ரோலர் மாதிரி நெஞ்சுல படுத்து உருண்டுட்டு கேட்குற கேள்வியப்பாரு” என்று வேண்டுமென்றே  வெறுப்பேற்றினான் விதுரன்.

கோபமாய்  இடையில் கைவைத்து  , “என்ன சொன்னீங்க?” என்று முறைத்தவளை கண்டும் காணாது விலகி நின்றவன், கைகளை தலைக்கு மேல் தூக்கி சோம்பல் முறித்தபடி,  “ பார்க்க  தான்   கொழுக்குமொழுக்குன்னு கொழுக்கட்டை மாதிரி  இருக்க. அம்மாடி என்ன  கனம் கனக்கிற,  ஒரு பேச்சுக்கு இது உன் இடம்  தாராளமா படுத்துக்கோன்னு சொன்னேன், அதுக்குன்னு  டெய்லி நைட்  முழுக்க மேலயேவா கிடப்ப,  செம்ம டையர்டு,தூங்கவே இல்ல..” என்று   அதே பொய்யை  மீண்டும் மீண்டும் அழுத்தமாய் உரைத்தான்.

“நான் ரோட் ரோலரா?” என்று கேட்டபடி விலகி நின்றவனை துரத்தி பிடித்து தினமும்  இரவில்  தஞ்சம் புகுந்திடும்   நெஞ்சில்  வஞ்சமே இல்லாமல் தன் கோபத்தை  கொட்டித் தீர்த்தாள் ஹனிகா.  “போதும்டி.. சரண்டர் ஆகிடுறேன், முடியல” என்று  புறமுதுகிட்டு போர் நிறுத்தம் அறிவித்தான் விதுரன்.

“ ஹும்! அந்த பயம்   இருக்கட்டும்,   இன்னோரு தடவை என்னை குண்டுன்னு சொன்னீங்க, கடிச்சுடுவேன் கடிச்சு”  என்று போலியாய் மிரட்டி,  தேநீர் கோப்பையை எடுத்து விதுரன் கையில் கொடுத்திட “ நீ போட்டதா?” என்று   பயந்தவன் போல் நடுங்கும் குரலில் வினவி கையில் வாங்கி அதன் மணத்தை  நுகர்ந்தவன், “ வாசமே சொல்லுது அம்மா போட்டதுனு ” என்று பயம் அகன்று  மெல்ல மெல்ல பருகிட துவங்கினான் விதுரன்.

“ என்ன கிண்டல் பண்றீங்களா? இந்த நாள் உங்க காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோங்க, ஒரு நாள் இல்லை ஒரு நாள், என் கையால சமைச்சு அதை உங்கள சாப்பிட வைச்சு, என்னை   கிண்டல் பண்ற இந்த வாயாலேயே   இதுக்கு முன்னாடி இப்படி  ஒன்னை   டேஸ்ட்   பண்ணுனதே  இல்லன்னு  சொல்ல வைக்கிறேன்”,  என்று அவன் முகத்திற்கு நேராக   விரல்களை  சொடுக்கி   ஹனிகா சவால் விடுக்க, “ அதை எதுக்கு என்னைக்கோ ஒருநாள் சொல்லணும்,  இன்னைக்கே இப்பவே  சொல்றேன்.   அப்படி ஒன்னை என் வாழ்நாள்ல இதுவரைக்கும் நான்    டேஸ்ட் பண்ணுனதே   இல்ல” என்று குறும்பாய் சிரித்தபடி என்னவென்று கணிக்கமுடியாத   குரலில்   கூறினான் விதுரன்.

“அச்சோ! அசடு மாமா.. நான் இந்த டீய சொல்லல” என்று தன்  தலையிலேயே தட்டிக்கொண்டு ஹனிகா  ராகம் பாடிட, “நானும் டீய  சொல்லல” என்று விதுரனும் அதே  ராகம் படித்தான்.

“ என்ன?” என்று புரியாமல் விழித்தவள் கன்னத்தில்  செல்லமாய் தட்டி, “ அசடு” என்று அவள் வசனத்தையே  கூறி அறையை விட்டு விதுரன் வெளியேறிட அவன் கரம் பற்றி தடுத்து நிறுத்தியவள், “ புரியுற மாதிரி சொல்லாம எங்கயும்  போகக்கூடாது” என்று ஹனிகா பிடிவாதம் பிடிக்க, “ இப்படி கேட்டா சொல்ல முடியாது” என்று திமிராய்  பதில் தந்தவன்   காதை எட்டி பிடித்து இழுத்து தன் அருகில்  கொண்டுவந்தவள், “இப்படி கேட்டா பதில் கிடைக்குமா?” என்றிட, “ஷ்.. வலிக்குது விடுடி” என்று சிறு குழந்தையின்  சிணுங்கலுடன்  முனங்கியவன் செய்கையில் வாய்விட்டு சிரித்தவளை கண்டு மனம் தடுமாற தன்னை கேலி செய்தவள்  இடையில் கரம்  கொடுத்து சட்டென்று பற்றி நெருக்கத்தில்  நிறுத்தியவன்,   பதட்டத்தில் துடிக்கும் பெண்ணவள்  பட்டான இதழில் பூவின் இதழில் தேன் பருகும் பட்டாம்பூச்சியாய்  பட்டும்பாடாமல் இதழ் ஒற்றினான் விதுரன்.

தன் அணைப்பில் கிறங்கி  நின்றவள்   காதுகளில், “இதை சொன்னேன், இந்த மாதிரி  ஐஸ்கிரீம் இதுவரைக்கும் நான் சாப்பிட்டதே இல்ல. திரும்ப  திரும்ப திடுடி    ருசிக்க சொல்லுற அளவுக்கு திகட்டாத  தித்திப்பா  இருக்கு” என்று  மீண்டும் முத்தமிட்டு  விலக முயல, அவன் சட்டை காலரை இறுக பற்றி விலக  தடைவிதித்தவள்,  “இப்படி கொஞ்சம் கொஞ்சமா  நெருங்கி என்னை கொடுமை பண்ணாத  மாமா, நான் ஜடம் இல்ல! நீ நெருங்கி விலகுற ஒவ்வொரு தடவையும் உள்ளுக்குள்ள  உடைஞ்சு போறேன்”, என்று  தன் உணர்வை மறையாமல் வெளிப்படுத்தினாள் ஹனிகா.

“ நானும்  ஜடம் இல்ல ஹனி, உன்னை நெருங்கி விலகும் போது நானும் எனக்குள்ள  நொறுங்கி  போறேன்.  காதலிக்கிறது தான்  போதைன்னு    நினைச்சுட்டு  இருந்தேன்,  காதலிக்கப்படுறதும் ஒருவித போதைனு இப்போ தான் புரியுது. நான் நானாவே  இல்ல,    முதல் தடவையா   ஒரு பொண்ணோட காதல  முழுமையா அனுபவிச்சு  திக்குமுக்காடி நிக்கிறேன். உன் காதலால  பைத்தியம் பிடிக்குது!” என்றிட, “என்ன பைத்தியமா!” என்று விதுரன் சொன்ன செய்தி சந்தோசத்தை தந்தாலும் செல்லக்கோபத்துடன் ஹனிகா முகம்  தூக்க, நாணத்தில் சிவந்திருக்கும் கன்னம்   பற்றி,  காதல் நிறைந்திருக்கும் கண்களைப் பார்த்து “ஹம்..   உன்  பைத்தியகாரத்தனமான காதலால  நானும் கொஞ்சம் கொஞ்சமா உன் மேல பைத்தியமா மாறிட்டேன்” என்றிட, “ அப்போ உங்கள பைத்தியக்காரத்தனமா காதலிக்கிற முதல் பொண்ணு நான் தான், நீங்க முதல் முத்தம் கொடுத்ததும் எனக்கு தான்.  அப்படித்தான!” என்று அந்தநேரத்திலும் தனது சந்தேகத்தை வினவினாள் ஹனிகா.

“அதுல என்ன சந்தேகம்” என்று  தன்னை மறந்து உளறியவன் சட்டென்று சுதாரித்து  “எனக்கு ஆபீஸ்க்கு லேட்டாச்சு”,  என்று  அவசரமாய்  நகரஆராயும் பார்வையில் தன்னை துளைத்து எடுக்கும் ஹனிகாவின் எண்ணம் புரிந்து, “வர வர உன் போக்கே    சரியில்ல, ஒரே கேள்விய பலவிதத்துல  கேட்கிற!” என்று விதுரன் கூறிட, “ஒருதடவை கேட்கும்போதே சரியான பதில் வந்துச்சுன்னா எதுக்கு திரும்பத் திரும்ப  கேட்கப்போறேன்” என்று   குறும்பாய் குறைபட்டாள் ஹனிகா.

தன் கடந்த காலத்தை அறிந்து கொள்ள முயலும் ஹனிகாவின்  ஆர்வம் புரிந்து, “எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் சொல்லமுடியாது,   சில விஷயங்கள் புரியாம இருக்கறது தான் எல்லாருக்கும் நல்லது, கண்டதையும் போட்டு குழப்பிக்காத” என்று  கண்டிக்கும்  குரலில்  கூறி   அலுவலகம் கிளம்பி சென்றான் விதுரன்.

‘நீ சொன்னது  சரிதான் மாமா,   எல்லார்கிட்டயும் எல்லாத்தையும் சொல்ல முடியாதுதான், அதனால உங்ககிட்ட சொல்லாம சில  விஷயங்கள்  செய்யப்போறேன்,   புரியாம இருக்கிற விஷயங்கள் தானா புரிஞ்சிடும்’ என்று  மானசீகமாய் மனதிற்குள் பேசிக்கொண்டாள்  ஹனிகா.

ஏற்கனவே தன் அன்னை வசுந்தரா மூலம்  உள்ளூரில் இருக்கும் சந்தியாவின் தோழியான பானுவின் பெற்றோரிடமிருந்து அவரின்  தொலைபேசி என்னையும்  முகவரியையும் வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருந்தவள் இன்று எப்படியும் விவரத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்ற தீர்மானத்துடன் பானுவை, தொலைபேசியில் தொடர்புகொண்டாள், “ஹாலோ நான் ஹனிகா பேசுறேன்  அக்கா.  என்னை ஞாபகம் இருக்கா  சந்தியாவோட தங்கச்சி”, என்று ஹனிகா தன்னை அறிமுகம் செய்திட, “நல்லா ஞாபகம் இருக்கு ஹனி, உன் மாமாவையே  கல்யாணம்  பண்ணிடன்னு கேள்விப்பட்டேன்”, என்று வினவினார் பானு.

“எனக்கு எந்த குறையும் இல்ல,  நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் நேருல பேசணும் அக்கா,  எப்போ மீட் பண்ணலாம்” என்றாள்  ஹனி. “மீட் பண்ணலாமே, நான் வீட்லதான் இருக்கேன்,  வெளிய எங்கேயும்  வந்து பார்க்க முடியாது நீ தப்பா எடுத்துக்கலைனா, என் வீட்டுக்கு   வரயா? வீட்டு அட்ரஸ் சொல்லவா ?” என்றிட.. “வீட்டுக்கா?” என்று ஹனி தயக்கமாய் நிறுத்த, “ரொம்ப வருஷம் கழிச்சு குழந்தை நின்னுருக்கு, பெட் ரெஸ்ட்ல  தான் இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க” என்றார் பானு, “வாழ்த்துக்கள் அக்கா,  உங்க அட்ரஸ் என்கிட்ட இருக்கு நானே வந்துடுறேன்”, என்று பதில் தந்தவள், அதற்குமேல் தாமதம் செய்யாமல் உடனே பானுவை காண  புறப்பட்டாள்.

“அத்தை பக்கத்துல இருக்க கோயிலுக்கு போய்ட்டு வந்திடுறேன்”, என்று வெளியில் செல்ல ஹனிகா அனுமதி கேட்க, “ நீயா தனியாவ போற? நானும் கூட வரேன்” என்று துணைக்கு வரத் தயாரானார் தேன்மொழி.

“ நீங்களுமா?” என்று அதிர்ச்சியுடன் துவங்கியவள்  “அதெல்லாம் வேணாம் அத்தை, காலையில சாப்பிட்டு முடிச்சதும்  மாத்திரை சாப்பிடிங்களா? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க நான் இப்படி போயிட்டு அப்படி வந்துடுறேன்”, என்று ஒரு வழியாக தேன்மொழியை தவிர்த்து தனியாக கிளம்பி சென்றாள் ஹனிகா.

‘அப்பாடா ஒரு வழியா தப்பிச்சோம்’ என்று நிம்மதிப் பெருமூச்சை வெளியேற்றிய வாசலைக் கடந்தவளை “அவசரமா எங்க கிளம்புற ஹனி”,  என்று  வழி மறித்துக் கேட்டார் ராதா.

‘இவங்கள வேற சமாளிக்கணுமா?’ என்று உள்ளுக்குள் அலுத்துக்கொண்டவள்,  ஏதாவது உளறி வைத்தால் எங்கு தன் ரகசியம் வெளிப்பட்டு விடுமோ என்ற பதற்றத்துடன் “இன்னைக்கு வெள்ளிக்கிழமைல அதான்  கோயிலுக்கு போறேன்”, என்று ஹனிகா  பதில் தர, “என்ன வெள்ளிக்கிழமையா? இன்னைக்கு வியாழக்கிழமை ஹனி. உனக்கு எந்த பிரச்சனையும் இல்லேல,  நீ நல்லா தான இருக்க”  என்று அவள் பதற்றத்தை  கண்டு  சந்தேகத்துடன் வினவினார் ராதா.

“ பிரச்சனையா எனக்கா, அதெல்லாம் ஒன்னும் இல்ல. அத்தை மாத்திரை போட்டு தூங்குறாங்க. வீட்டுக்குள்ளேயே இருக்க போரடிக்குது அதான் சும்மா வாக்கின்  மாதிரி பக்கத்துல இருக்குற கோவிலுக்கு  போயிட்டு  வரலாம்னு  நினைச்சேன் அண்ணி” என்று அவர் நம்பும்படி  கூறி அங்கிருந்து நகர முய,. “சரி கொஞ்சம் இரு ஹரியையும் கூட அனுப்பி வைக்கிறேன் வீட்டுல இருந்துட்டு அட்டூழியம் பண்றான்”, என்று மகனை ஹனியுடன் அனுப்பிட ராதா திட்டமிட, “ அச்சோ, ஹரியா..?  கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கணும்னு தான் வெளிய போறேன். இவனை கூட்டிட்டு போய் நான் எங்க ரிலாக்ஸா இருக்கிறது,  வேணாம் அண்ணி” என்று அவசரமாய் மறுத்துவிட்டு கிளம்பினாள் ஹினிகா.

ஏற்கனவே மொபைல் ஆப் மூலம் ஏற்பாடு செய்து வைத்திருந்த வாடகை கார் அவளுக்காக  தெருமுனையில் காத்திருக்க  தப்பிப்பிழைத்த நிம்மதியுடன் அதில் ஏறி பானுவின் வீட்டை நோக்கிப் பயணித்தாள் ஹனிகா.

சாய்பாபா காலனி. குறுகி விரிந்த பல  தெருக்களை கடந்து காகிதத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியை கண்டுபிடித்து நிறுத்தினார் வாகன ஓட்டி. பணத்தை கொடுத்து  வாடகை காரை வழியனுப்பி வைத்தவள் செல்வ செழிப்பில் மிடுக்குடன் உயர்ந்திருந்த பலஅடுக்குமாடி கட்டடங்களில் தான் தேடி வந்த  வீட்டை ஒரு வழியாக கண்டுபிடித்து அழைப்பு மணியை அடித்து ஆவலுடன் காத்திருந்தாள்.

சற்றுத் தாமதமாக  வந்து கதவை திறந்த வேலையாள், “யாருமா நீ யாரைப் பார்க்கணும்?” என்று அதிகார தோரணையில் விசாரிக்க “ பானு அக்காவ பாக்கணும்”, என்று தான் தேடி வந்த முகவரி சரிதானா என்று புரியாத தடுமாற்றத்துடன்  ஹனி கேட்க “மாரி,  அது என்  தங்கச்சி தான் உள்ள கூட்டிட்டு வா” என்று படுக்கை  அறையிலிருந்து  அதிகாரமாய் குரல் கொடுத்தார் பானு.

  தன் முதலாளிக்கு நெருங்கிய உறவு  என்று தெரிந்ததும், பணிவுடன் பானு இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் பணியாள்.

குழந்தையின் வரவால்  மேடேறி  இருந்த வயிற்றைத் தள்ளிக்கொண்டு, சோர்வுடன்  எழுந்து அமர்ந்த பானு, ஹனிகாவை ஆர்வத்துடன் வரவேற்றாள்.

“நம்ம ஊர்க்காரவங்கள பாக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?, நீ மட்டும் தனியாவா  வந்த உன் வீட்டுக்காரர் வரலையா?” என்றார் பானு.

“தனியா தான் வந்தேன், அக்கா, நீங்க எப்படி இருக்கீங்க? இது எத்தனாவது மாசம்?  உடம்பு வீக்கா இருக்கா, பொதுவா இந்த நேரத்துல கொஞ்சம் கொஞ்சமா நடந்து கொடுக்க சொல்லுவாங்க, ஆனா உங்களையே பெட் ரெஸ்ட்ல இருக்க சொல்லி இருக்காங்க,  துணைக்கு அம்மாவ கூப்பிட்டுக்கலாம்ல” என்று ஹனிகா அக்கறையுடன் வினவ.

“எல்லாருக்கும் கிடைக்கிற மாதரி இந்த குழந்தை எனக்கு  இயல்பா கிடைச்சிருந்தா, ஒருவேளை நீ சொன்ன  மாதிரி நடக்கச்சொல்லி  இருப்பாங்க, இது   IVF மூலமா கிடைச்சது, இந்த விஷயம் நம்ம ஊர்ல யாருக்கும் தெரியாது தெரிஞ்சா ஒருமாதிரி பேசுவாங்க, என் வீட்டு ஆளுங்களுக்கு கூட இந்த விஷயத்தை நான் சொல்லல.  அம்மா பாத்துக்க வரேன்னு சொன்னாங்க நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன், இந்த விஷயம் என் வீட்டு ஆளுங்களுக்கு தெரிஞ்சா அவரை தப்பா பேசுவாங்க, அவர் வீட்டுக்கு தெரிஞ்சா என்னை தப்பா பேசுவாங்க”, என்று கண்ணீருடன் பேசிட,

“கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அக்கா, இந்த காலத்துல குழந்தை இன்மைக்கு மருத்துவம் பாக்குறது ரொம்ப சகஜமான விஷயம், உங்களுக்கு குழந்தை இல்லையா உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்னு   டிவியில மணிக்கு ஒருதடவை கூப்பாடு போட்டு ஆள் பிடிக்கிறாங்க, ஏனா அந்த அளவுக்கு நம்மளோட உணவும்  வாழ்க்கைமுறையும் மாறிடுச்சு. இப்போ போய் இந்த அளவுக்கு பயப்படுறது,  சரியா என்ன?” என்று ஹனிகா தன் சந்தேகத்தை கேட்க..

“நீ சொல்லுறது சரிதான் இப்போ இதெல்லாம் ரொம்பவே சகஜமாயிடுச்சு. ஆனா இது  சரின்னு  ஏத்துகிற  மனப்பக்குவம் இன்னும்  பலபேருக்கு இல்லன்னு தான் சொல்லுவேன், அதுலயும் முக்கியமா என் வீட்டு ஆட்கள்,  வருஷம் கடந்துட்டே போகுது, இன்னும் குழந்தை வரம்  கிடைக்கல, பெத்துக்கிட்டாதான்    குழந்தையா  தத்து எடுத்து வளர்த்தாலும் நம்ம பிள்ளை தான்னு, இரண்டு குழந்தைங்கள தத்து எடுக்க முயற்சி பண்ணுனோம், எல்லாரும்  எங்களுக்கு எதிரா நின்னாங்க, யாரோ பெத்த பிள்ளை எங்க குடும்ப வாரிசா? எந்த  இரத்தமோ, எப்படி வளருமோ?, ஒருவேளை உனக்கு ஒரு பிள்ளை பிறந்துட்டா  இரண்டு பிள்ளையையும் ஒரே மாதிரி  பாத்துக்க முடியாது அது இதுன்னு ஆயிரம் பேச்சு பேசி எங்க முடிவுல இருந்து பின்வாங்க வைச்சுட்டாங்க” என்று தன் விபரம் கூறிக்கொண்டே சென்றவர், “பாரு முதல் தடவையா எங்க வீட்டுக்கு  வந்திருக்க உன்னை சும்மா உட்கார வைச்சு என்  சொந்தக்கதை சோகக்கதை சொல்லிட்டு இருக்கேன்”, என்று நிறுத்தி “மாரி ஹனிக்கு குடிக்க சாப்பிட  கொண்டுவாங்க”, என்று பணியாளை பணிந்துவிட்டு, “நீ சொல்லு உன் மாமா  உன்னை நல்லா பார்த்துகிறாரா? ஆமா எப்படி உன் அம்மாவ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கவைச்ச? அவங்களுக்கு உன் மாமாவ பிடிக்காதே. சந்தியாவ கட்டினுத்துக்கே அந்த குதி குதிச்சாங்க  உன்னையும் எப்படி அவருக்கே கட்டி கொடுத்தாங்க?”  என்று வரிசையாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றாள் பானு.

“எங்க அம்மாவை கூட ஒரு வழியா சம்மதிக்கவைச்சுட்டேன், என் மாமாவ  சரிகட்டுறதுக்குள்ள தான் போதும் போதும்னு ஆகிடுச்சு”  என்றவள் சற்று தயக்கத்துடன், “எனக்கு உங்ககிட்ட சந்தியா அக்காவை பத்தி கொஞ்சம் பேசணும், இந்த ஊருல  அவ அடிக்கடி வந்து பார்த்தது உங்களத்தான். அவ சாவுக்கு  என்ன காரணம்னு நிச்சயம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்”, என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் ஹனிகா.

சந்தியா பெயரைக் கேட்டதும்.. முகம் வாட, “இதப்பத்தி பேசத்தான் நீ வரேன்னு தெரிஞ்சிருந்தா உன்னை வர வேணாம்னு சொல்லி இருப்பேன்”, என்று பானு மறுத்திட, “நீங்க பேசுற விதத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏதோ விஷயம் தெரியும்ன்னு நல்லா புரியுது, எதுவா இருந்தாலும் என்கிட்ட தயங்காம சொல்லுங்க. இது என் வாழ்க்கை சம்பந்தப்பட்டது, என் அக்காவோட சாவுக்கு என் மாமாவும் ஒரு காரணம்னு ஊர் நம்புது, இப்போ இல்லனாலும்  என்னைக்காவது ஊர் பேச்சை நான் நம்ப ஆரம்பிச்சுட்டா.  எங்க வாழ்க்கையே நரகமாகிடும்”, என்று ஹனிகா  வற்புறுத்தி கேட்க தனக்கு தெரிந்த விபரங்கள் கூற தயாரானாள் பானு.

“உன் விதுரன் மாமா எவ்வளவு அன்பானவர் தெரியுமா?  கல்யாணமான நாள்ல இருந்து  விரல் கூட  தன் மேலப்பட அனுமதிக்காத உன் அக்காவ அந்த அளவுக்கு அன்பா பார்த்துக்கிட்டார், அவளோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து விலகி இருந்தார், ஆனா அவரோட காதலை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம சுயநலமா முடிவு எடுத்துட்டா உன் அக்கா,   பைத்தியக்காரி.   நல்ல புருஷன் கிடைக்கமாட்டானான்னு  ஒவ்வொரு பெண்ணும்  தவமிருக்கிறாங்க, இவளோ  கிடைச்ச  வாழ்க்கைய ஒரு முட்டாளுக்காக  காத்துல விட்டுட்டா” என்று சந்தியாவின் மரணத்திற்கு காரணமான,     கல்லூரி கால வாழ்க்கையை  விசாரிக்க  துவங்கினாள் பானு.

சந்தியா பொதுவாகவே அமைதியான குணம் கொண்டவள், நான்கு வார்த்தை பேசவேண்டிய இடத்தில் ஒருவார்த்தை பேசக்கூடிய   ஆள். பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி படிப்பை தொடர   பயத்துடன் அடியெடுத்து வைத்தவளை ராக்கிங் என்ற பெயரில் வழி மறித்தனர் சிலர்.  அவர்களிடமிருந்து   எந்த சேதாரமும் இல்லாமல் சந்தியாவை காப்பற்றியவன் தான்  பாலா.  கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்தான்.  பார்த்ததும் பிடித்துப்போன சந்தியாவை விடாமல் பின்தொடர்ந்து காதல் கதை பேசினான்.  தன் குடும்ப  சூழலுக்கு இந்த காதல் ஒத்துவராது என்று  அவனை தவிர்த்துக்கொண்டே இருந்தாள்  சந்தியா.   எத்தனையோ விதத்தில் தன் காதலை  ஏற்றுக்கொள்ளும்படி பாலா வற்புறுத்த  தன் மனம் மறைத்து பாலாவை மறுத்து   வந்தாள், கல்லூரி இறுதியாண்டு முடித்து சென்ற பாலாவுக்கு வெளிநாட்டில்   நல்லவேலை  கிடைத்தும் சந்தியாவை பிரிந்து  செல்ல மனமில்லாமல்  வேலையை தவிர்த்து சொந்த      ஊரிலேயே கிடைக்கும் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.    இந்த நிலையில் தான் சந்தியா கல்லூரி படிப்பை முடித்ததும் அவள் அன்னை அவரின் அண்ணன்  மகனுடன் திருமணம் பேசி முடித்தார்,    சிறுவயதில் இருந்தே தாய்  மாமனையும் அவரின்  மகன்களை  கண்டு  பயத்துடன் ஒதுங்கியே வளர்ந்தவள், அவர்கள் வீட்டிற்கே வாழப்போவதை எண்ணி கலங்கிப்போனாள். அவள் தவிப்பை உணர்ந்தவர் போல,  அவளின்  தந்தை சந்தியாவிற்கும் விதுரனுக்கும்  திருமண  ஏற்பாடு செய்தார். தாய் மாமன் மகன்களுக்கு விதுரன் மேல் என்று, சிறுவயதில் இருந்து  தன்னிடம் அன்புடன் பழகும்  விதுரனுடன் நடக்கும் திருமணத்திற்கு    சம்மதம் சொன்னாள்  சந்தியா.

“அப்போ நான் நினைச்சது சரிதான். ஆரம்பத்துல விருப்பம்  இல்லாம தான் கல்யாணம் பண்ணிகிட்டா. போகப் போக மாமாவை  பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு, மாமா கூட வாழனும்னு முடிவு எடுத்தத்துக்கு அப்புறம் எதுக்கு தற்கொலை பண்ணிக்கிட்டா”, என்று தன் அனுமானத்தை  ஹனிகா வினவ.,

“உண்மைய சொல்லனும்னா, பைத்தியம்  மாதிரி காதல் வசனம் பேசிட்டு பின்னாடியே  திரிஞ்ச பாலாவ உன்  அக்காவுக்கும்  பிடிச்சது.  வீட்டுல தன் விருப்பத்தை சொல்ல பயம். உன் அப்பாவை எதிர்த்து பேச பயம், அதனால தன்னோட காதலை மறைச்சுட்டு உன் மாமாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு இருக்கா. தன் குடும்பத்துக்காக  மனசை மாத்திட்டு கல்யாணத்துக்கு சம்மதிச்ச  அவளை  நிம்மதியா  கல்யாண  விஷயத்துல   கலந்துக்க விடாம செஞ்சது   பாலாதான்.  உன் அக்காவுக்கு கல்யாண ஏற்பாடு செஞ்ச விஷயம்  பாலாவுக்கு எப்படியோ தெரிஞ்சிடுச்சு, எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்து,  நீ இல்லைனா நான் செத்துடுவேன்னு ஒவ்வொரு நாளும் உன் அக்காவா போன் பண்ணி மிரட்ட ஆரம்பிச்சான். அவனோடு மிரட்டலுக்கு பயந்துதான் உங்க அக்கா எந்த விஷயத்துலயும் ஈடுபாடு இல்லாம  இருந்திருக்கா.  இந்த கல்யாணம் நடந்தா கண்டிப்பா மண்டபத்துல வந்து பிரச்சனை பண்ணுவேன். எந்த அப்பாவுக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாயோ  அந்த அப்பாவோட மானம் காத்துல பறக்கும் அப்படி இப்படின்னு ரொம்ப மிரட்டி இருக்கான்.  கல்யாணம் முடிஞ்சத்துக்கு அப்புறம் கூட போன் பண்ணி என்னைய  ஏமாத்திட்டு கல்யாணம்  பண்ணிட்டேல. நீ இல்லாம என்னால  வாழ முடியாது செத்துடுவேன்னு மிரட்டி இருக்கான்,  அந்த மடையன் குடுத்த  டென்ஷன்ல தான்  உன் அக்கா  கல்யாணம்  முடிஞ்சும்  உன் மாமாவோட    வாழாம இருந்திருக்கா.  கல்யாணம் முடிஞ்ச    கொஞ்சநாள்ல உங்க வீட்டுல அத்தை  கேட்கிறாங்கன்னு தான் கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறி உன் மாமாவை ஏத்துக்க ஆரம்பிச்சா.   அதுக்குள்ள என்ன நடந்ததுன்னு  தெரியல  இப்படி ஒரு முடிவு எடுத்துட்டா.. “  என்று தான் அறிந்த விபரம் கூறி முடித்தார் பானு.

“அப்போ அக்கா தற்கொலைக்கு   காரணம் பாலா தான். அவனை கண்டுபிடிச்சு   விசாரிச்சா  எல்லா உண்மையும்  தெரிஞ்சிடும்”, என்று  பாலாவின் விபரம் பெற்றுக்கொண்டு  பானு  வீட்டில் இருந்து கிளம்பினாள் ஹனிகா.

பதுங்கியுள்ள
மர்மத்தை
அறிந்திட முயல்கிறேன்..
விடையறியா
சிக்கலில் நானும்
புதைந்து போகிறேன்..