12

உருகும் மனம்…

சூறாவளியில் சிக்கிய
சிறு வாழை குருத்தாய்
சிதைந்து கிடந்தேன்,
நானடி..
பட்டும் படாமல்
தொட்டுச்செல்லும்
பட்டாம் பூச்சியாய்
என் வாழ்வில் நுழைந்து
பசுமை செய்தாய்
நீயடி..

மாலை மறைந்து இருள் படர்ந்த வேலை,தன் வெளியூர் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார் ராதாவின் கணவர் மாதவன். 

தனது அன்றாடப் பணிகளை கவனிக்க துவங்கிய கணவரிடம் காலையிலிருந்து நடந்த நிகழ்வுகளை வரிசையாய் அடுக்க துவங்கினார் ராதா.

 “ என்ன  பொருத்தம் தெரியுமா மாது! அந்த பொண்ணுக்கு விதுரன் மேல அவ்ளோ அன்பு” என்று   கதையளந்தவளை தன்  கையணைவில் கொண்டுவந்தவன், “அப்போ நாம பொருத்தமான  ஜோடி இல்லையா  ரதி” என்று கேட்டுக் கொண்டே நெருங்கிட “ பொருத்தம் இருக்க போய் தானே இத்தனை நாளா உங்க அலும்பல பொறுத்து போறேன்” என்று ராதா பதில் தர, “ ஏய் இப்ப நான் என்ன  பண்ணிட்டேன். எதுக்கு இவ்வளோ அலுத்துகிற”, என்று மனைவியை சமாதானம்  செய்ய  முயன்றான்  மாதவன். 

“ பின்ன என்ன? மாசத்துல பாதி நாள் வேல விஷயம்னு   ஊர்  சுத்துறது, மீதி நாள் வேலை டென்ஷன் போகணும்னு   வெக்கேஷன் கிளம்பியட வேண்டியது,  இப்படி ஊர் ஊரா சுத்துறக்குத்தான் தேடி வந்து என்னை கல்யாணம் பண்ணிட்டீங்களா?”  என்று ராதா கோபமாய் முகம் திருப்ப அவள்  பற்றி தன்னை பார்க்க செய்தவன் “எனக்கும் ஊர் சுத்துறத விட்டுட்டு உன்னை மட்டுமே சுத்திவர ஆசைதான், ஆனா பசங்களையும் நல்லவிதமா வளர்க்கணுமே., அதுக்கு இந்த ஓட்டம் அவசியம், ரதி”  தன் நிலையை வெளிப்படுத்தினான் மாதவன்.

“நம்ம குடும்பத்துக்காக தான்  சம்பாதிக்கிறேன்னு சொல்லிட்டு குடும்பத்தை விட்டு விலகி நிக்கிறீங்க அது உங்களுக்கு புரியலையா? பிள்ளைகளுக்காக  பணம்  சேர்த்து வைக்கிறது எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு அப்பாவோட பாசமும் கண்டிப்பும்  பிள்ளைகளுக்கு முக்கியம். உங்க  ஒர்க் சுச்சுவேஷன்  என்னன்னு புரியுது அதுக்காக வேற எந்த வேலையும் பாக்காம உங்க  வேலையை மட்டும் பார்த்தா உங்கள மட்டுமே நம்பி இருக்கிற இந்த  குடும்பத்தை யார் பார்த்துகிறது?”  என்று தன் நியாயமான கோபத்தை வெளிப்படுத்தினார்  ராதா.

“சரி, இனி எங்க போனாலும் உன்னையும் குழந்தைகளையும் கூட்டிட்டு போறேன்.. போதுமா கோபம் போயிடுச்சா”, என்று ஒருவழியாக சமாதானம்  செய்து முடித்தார் மாதவன்.

“பாருங்க எதையோ சொல்ல ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டேன். எல்லாம் உங்களால தான்”  என்று ராதா பொருமிட, “அவங்க ரெண்டு பேரோட ஜோடிப்பொருத்தத்தை பத்தி பெருமையா பேசிட்டு இருந்த, ஏன் நாம  பொருத்தமான ஜோடி இல்லையான்னு கேட்டதும் , நீ உடனே உன் புலம்பல ஆரம்பிச்சிட்ட அதுக்கு நான் என்ன பண்ண முடியும். ஒரு விஷயம் பேச ஆரம்பிச்சா அதிலேயே ஸ்ட்ராங்கா நின்னு பேசி முடிக்கணும்.  ஒரு  வக்கீலுக்கு வாக்கப்பட்டு இத கூட சரியா செய்யலைன்னா என்ன அர்த்தம் ரதி?” என்று மாதவன் தன் மனைவியை கிண்டல் செய்ய கோபமாய் முறைக்க துவங்கிய ராதா, “உங்கள அப்புறம் கவனிச்சிக்கிறேன் இப்ப பேச வந்தத முதல்ல பேசி முடிச்சிடுறேன், என்ன சொல்லிட்டு இருந்தேன்,” என்று  யோசித்திட, “பொருத்தமான ஜோடி” என்று  எடுத்துக் கொடுத்தார் மாதவன்.

“ஆமா, விதுரனும் ஹனிகாவும் பொருத்தமான ஜோடியா இருக்காங்க. அந்த பொண்ணு கூட இருக்கும்போது விதுரன் எவ்வளவு இயல்பாக சிரிக்கிறான் தெரியுமா? பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.  இருந்தாலும் விதுரன் அம்மாவுக்கு  தன்  பையன்  பிடிவாதத்தை நினைச்சு   கொஞ்சம் பயம் இருக்கத்தான்  செய்யுது.  நீங்க கொஞ்சம் விதுரன் கிட்ட  பேசிப்பாருங்க அவன் மனசுல இருக்கிற விஷயத்தை உங்ககிட்ட மட்டும் தான் வெளிப்படையா பேசுவான்”, என்று மாதவனுக்கு அவர் செய்யவேண்டியதை நினைவுபடுத்தினார் ராதா.

இதை நீ எனக்கு சொல்லவே வேண்டியதில்லை என்பது போல் மென்மையாய் புன்னகைத்தபடி,  நின்ற மாதவனை கண்டு, “உங்களுக்கு ஏற்கனவே  விஷயம் தெரிஞ்சு இருக்கு, விதுரன் உங்ககிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணி இருப்பான், அப்படித்தான!” என்று  வினவிய மனைவியை தோள்களில் கைபோட்டு  பரிவாய் அணைத்துக்கொண்டவர், “கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு வந்ததும், சில விஷயம் பேசினான்,  இப்போ அவன் எடுத்த முடிவுல   ஏதாவது மாற்றம் இருக்கான்னு பேசிப்பார்த்தாதான் தெரியும்” என்றார் மாதவன்.

“அதானே பார்த்தேன்,  எப்படி உங்க கிட்ட சொல்லாம  இருக்கமாட்டானே”, என்று ராதா கூறிட “விதுரன் மனசுவிட்டுப் பேசறது என் ஒருத்தன்கிட்ட தான் அது பொறுக்கலையா உனக்கு. ஷேர் பண்ண நான் ஒருத்தன் இருக்கிறனால தான்   நிம்மதியா இருக்கான்”, என்று பதில் தந்தவர் அதற்குமேல் விவாதம் செய்து நேரத்தை கடத்தாமல்,   தன் குடும்பத்துடன் புதுமண தம்பதிகளுக்கு பரிசளிக்க வாங்கிய பரிசுப் பொருட்களை மறவாமல் கையோடு எடுத்துக்கொண்டு கிளம்பினார். 

மாதவனை கண்டதும் ஆவலுடன் முன்வந்த விதுரன், “எத்தனை தடவை படிச்சு படிச்சு சொல்லிட்டு போனேன் கல்யாணத்துக்கு கண்டிப்பா நீங்க வரணும்னு. கடைசி நேரத்துல முக்கியமான கேஸ்ன்னு  கிளம்பி போயிட்டீங்க.” என்று உரிமையாய் கோபம் கொண்ட விதத்திலேயே தெரிந்தது அவர்களுக்கு நடுவில் இருக்கும் உறவின் ஆழம். 

“ அதான் நீயே சொல்லிட்டல முக்கியமான கேஸ்ன்னு” என்று மாதவன் நிறுத்த “ ஓ.. என்  கல்யாணத்த விட முக்கியமானதா?”  என்றான் விதுரன். “உன் கல்யாணத்தை விட முக்கியமானது இல்ல தான், ஆனா முன்னாடியே ஒத்துக்கிட்ட கேஸ் வர முடியாதுன்னு சொன்னா   என் மேலயே கேஸ் போட்டுடுவாங்க அந்த அளவுக்கு பெரிய இடம்”  என்று  மாதவன் தன் சூழ்நிலையை விளக்கிட, “ போதும் விது  மாமா வீட்டுக்கு வந்தவங்கள நிக்க வச்சு  விசாரணை பண்ணிட்டு இருக்கீங்க”, என்று விதுரனை அடக்கியவள், “வாங்க அண்ணா” என்று  வந்தவர்களை வரவேற்று அமரச்செய்தவள் “ நீங்க வருவீங்கன்னு தான் அத்தை ஸ்பெஷலா சமைச்சிட்டு இருக்காங்க, நான் போய் அத்தைய கூட்டிட்டு வரேன்”,  என்று ஹனிகா  அங்கிருந்து விலகி சென்றிட, “நீ இருமா  உங்களை   பார்க்க தான்   வந்திருக்கோம், நீயே போனா எப்படி?” என்று  ஹனிகாவை  தடுத்தவர், “ ரதி சொன்னா நீ ரொம்ப எதார்த்தமான பொண்ணுன்னு. நான் கூட அவ சொன்னப்ப  நம்பல, உன்னை பார்த்ததும் ரதி சொன்னது எந்தளவுக்கு உண்மைன்னு புரியுது, இப்பதான் பார்த்தோம் அதுக்குள்ளேயும் பலநாள் பழகின மாதிரி இயல்பா பேசுறியே”, என்று வியப்புடன்  கூறினார்  மாதவன்.

“ஒரு சிலர பார்த்ததும் பலநாள் பழகின மாதிரி தோணும்,  அண்ணிய பார்த்ததும் அப்படி தான் இருந்தது, உங்கள பார்க்கும் போதும் அப்படி தான் தோணுது”, என்று வெகு  இயல்பாய்  கூறி சிரித்தவளை, அர்த்தமாய் பார்த்து புன்னகை செய்தவர், விதுரன் புறம்  திரும்பி  கண் ஜடையால் எதையோ அறிந்திட  முயல,  அவர் செய்கை புரிந்தும் புரியாதது போல முகம் திருப்பி கொண்டான் விதுரன்.

தன் கேள்வி புரிந்தும் பதில் கூற விரும்பாமல் முகம் திருப்பி நின்ற விதுரனை     எண்ணி சிரித்தபடி, ‘எவ்வளவு நேரம் தப்பிக்க முடியும், வசமா மாட்டும் போது எல்லாத்தையும் சொல்லித்தான ஆகணும்’,  என்று உள்ளுக்குள் எண்ணிக்கொண்டவர்,  “நல்லவேளை உன் புருஷன்கிட்ட இருந்து இந்த அண்ணன  காப்பாத்திட்ட,  இல்ல  கேள்வி கேட்டே என்னை ஒருவழி பண்ணிருப்பான், இப்ப கூட பாரு, கோபம் குறையாம முகத்தை தூக்கி  வைச்சிருக்கிறத!” என்று ஹனிகாவிடம் குற்றப்பத்திரிகை வாசித்தவர், “டேய் போதும் முறைச்சது, வந்து  பக்கத்துல நின்னு பெரியவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ” என்று  வம்பு செய்தபடி , கையில் கொண்டு வந்த பரிசு பொருட்களை    வழங்கினார். 

“வாங்க தம்பி”, என்று   அங்கு வந்த தேன்மொழி,  “போன வேலை நல்லபடியா முடிஞ்சதா ? உங்களுக்கு ஊருக்கு போகவேண்டிய வேலை இருக்குன்னு தெரிஞ்சு இருந்தா, நாங்க கல்யாணத்துக்கு கிளம்பும்போதே ராதாவையும் பிள்ளைகளையும் எங்க கூடவே கூட்டிட்டு  போயிருப்போம்” என்றிட, “ஏற்கனவே முடிவு பண்ணுனது திடீர்ன்னு தேதி மாத்திட்டாங்க   அம்மா,  அவாய்ட் பண்ண முடியல!” என்று மாதவனும் காரணம் கூறிட, “அட அத்தை, இப்போ தான் உங்க பையன் இதே கேள்விய வேற டிசைன்ல கேட்டாரு, நீங்களும் அதையே திரும்பி கேட்டா என்ன அர்த்தம்?, வீடு தேடி வந்தவங்கள இப்படிதான் வெறும் வயித்தோட உட்காரவைத்து பேசி இருப்பார்களா?” என்று மாமியாரை மருமகள் அடக்கிட, “தப்பு தான் பெரிய மனுஷி”, என்று கிண்டலாய் ஹனிகாவிற்கு பதில் தந்தவர், “நைட் சாப்பாடு எல்லாருக்கும் ரெடி பண்ணிட்டேன் சாப்பிட வாங்க” என்று வந்தவர்களுடன் மகனையும்   மருமகளையும்  உணவு உண்ணும் அறைக்கு அழைத்துச் சென்றார்  தேன்மொழி. 

இரவு உணவு முடிந்து இரு ஆண்களும்  தோட்டத்தில் அமர்ந்து பொதுவான விஷயங்கள் பேசிட, குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் பொறுப்பை தேன்மொழி எடுத்துக்கொள்ள, ராதாவும் ஹனிகாவும் அவர்களின் அரட்டையில்  கலந்துகொள்ள வந்து அமர்ந்தனர்.

  மாதவனை விதுரன் சூப்பர் ஹீரோ என்று அழைப்பதை கவனித்து, “அது என்ன அண்ணன சூப்பர் ஹீரோன்னு சொல்லுறீங்க ?, வித்யாசமா இருக்கு! இப்படி கூப்பிடறதுக்கு ஏதாவது காரணம் இருக்கா என்ன?” என்று ஹனிகா  ஆர்வத்துடன் வினவிட குறும்பில் கண்கள் சுருங்க, கள்ளனாய் கன்னக்குழி விழ சிரித்தவன், “என்ன சூப்பர் ஹீரோ உங்க ரகசியத்த போட்டு உடைச்சிடலாமா?”,  என்று  சிரித்தான் விதுரன்.

“ நீ என்னடா உடைக்கிறது நானே சொல்றேன்”, என்று விதுரனை தடுத்து விதுரன் தன்னை சூப்பர் ஹீரோ என்று செல்வதற்கான காரணத்தை விவரிக்க துவங்கினார் மாதவன்.

“அது வந்துமா, கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி தெரியாத்தனமா ஒரு தப்பை தப்பே இல்லாம சரியா பண்ணிட்டேன், அதுக்கு தான் இவன் என்னை சூப்பர் ஹீரோன்னு சொல்லுறான்”,  என்று பூடாகமாய் நிறுத்த, “ என்ன கிண்டலா?” என்று ராதா கோபமாய் துவங்க,  “அக்கா  சும்மா விடாதீங்க, ஒரு கை பார்த்திடுங்க, அதெப்படி  உங்கள கல்யாணம் பண்ணுனத  தப்புன்னு சொல்லலாம்,  சொல்லப்போனால் இவர் அந்த காரியத்தை பண்ணாம இருந்திருந்தா இந்நேரம் நீங்க அந்த என்ஆர்ஐ மாப்பிள்ளை கல்யாணம் பண்ணி  அமெரிக்கால செட்டில் ஆகிருப்பீங்க,   இவர்  செஞ்ச  வேலையால பாவம் இந்த கோயம்புத்தூருல  குப்பை கொட்டிவிட்டு இருக்கீங்க”,  என்று நேரம் பார்த்து ராதாவை உசுப்பேற்றினான் விதுரன்.

“ அதான?    நல்லா நடக்க இருந்த கல்யாணத்த நிறுத்தி, கட்டாய தாலி கட்டிட்டு பேச்சை பாரு” என்று மாதவன் தொடையில் ராதா  கிள்ளிட, “  அச்சோ இங்க என்ன நடக்குது? யாரவது புரியுற மாதிரி சொல்லுங்க!”  என்று  தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாக கத்தினாள் ஹனிகா. 

“ நானே நடந்தது என்னனு சொல்லுறேன், சூப்பர் ஹீரோ சொன்னா  அவருக்கு தகுந்தபடி கதைய திரிச்சு சொல்லுவாரு” என்று   தொண்டையை செருமி  சரிசெய்தபடி துவங்கினான், விதுரன்.

“ இவங்க ரெண்டு  பேருக்கும், வீட்டு பெரியவங்க  பார்த்து தான்   கல்யாணத்துக்கு ஏற்பாடு  பண்ணுனாங்க, நல்ல நாள் பார்த்து நிச்சயம் கூட முடிச்சது, அதுக்கப்புறம் வழக்கமான கல்யாண ஜோடிகள மாதிரி போன்ல பேசியே இரண்டு பேரும்  தெய்வீக காதலை வளர்த்துக்கிட்டாங்க , கல்யாணம் நாள் நெருங்கி வரும் போது  வீட்டு பெரியவங்களுக்குள்ள ஏதோ மனஸ்தாபம் பிரச்சனை பெரிசாக  கல்யாணத்தையே நிறுத்திட்டாங்க. தன் பொண்ணோட கல்யாணம் பாதில நின்னா  குடும்ப மானமே போயிடும்ன்னு  குறிச்ச  தேதில  கல்யாணத்த முடிக்கணுங்கிற    வேகத்துல அவசர அவசரமா சொந்தத்துல இருந்த என்ஆர்ஐ மாப்பிள்ளையோட அக்காவுக்கு கல்யாணம் பேசி முடிச்சுட்டாங்க. அக்காவும் வீட்ல இருக்கிறவங்ககிட்ட தனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல, இந்த கல்யாணம் நடந்தா செத்துடுவேன்னு   எவ்வளவோ சொல்லி பாத்துட்டாங்க. வீட்டு ஆளுங்க எதுக்கும் மசியல.   சாகுறதா இருந்தா  கல்யாணம் பண்ணிட்டு செத்துப்போ, எங்களுக்கு குடும்ப மானம் தான்  முக்கியம்னு பிடிவாதமா  நின்னாங்க. கல்யாண நாளும் வந்துச்சு அக்காவும் மணப்பெண் அலங்காரத்துல மேடையில் வந்து உட்காருறாங்க. சினிமால வில்லன் ஹீரோயின் கழுத்துல தாலி கட்ட வரும்போது கரெக்டா ஹீரோ வந்து இந்த கல்யாணம் நடக்காதுன்னு நிறுத்துவார் பாரு. அதுமாதிரி, நம்ம சூப்பர் ஹீரோ கல்யாண மண்டபத்துக்கு வந்து நானும் அந்த பொண்ணும் உயிருக்குயிராக காதலிக்கிறோம். பொண்ணோட விருப்பமில்லாம இந்த கல்யாணம் நடக்குது,  சட்டப்படி கல்யாணப்  பொண்ணு மேஜர் அவளுக்கு என் கூட  வாழத்தான் விருப்பம், அது இதுன்னு  ஏகப்பட்ட வசனம் பேசி,  கல்யாணத்தை நிறுத்த, அக்காவும்  எல்லார்  முன்னாடியும் எந்திரிச்சு, இவர் சொல்லுறது உண்மை தான், எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை, நான்  விரும்புறது இவரை தான்னு இவரை கைய காட்ட, நம்ம ஹீரோ வேற சட்டம் படிச்ச வக்கீலாச்சே, அதுக்கு மேல பிரச்சனை பண்ணாம பெரியவங்க விட்டுக்குடுக்க, அந்த  மண்டபத்துலயே வைச்சு நம்ம ஹீரோயின் கழுத்துல தாலி  காட்டிட்டாரு நம்ம சூப்பர் ஹீரோ” என்று கதை கூறி முடித்தான் விதுரன்.

“ வாவ் செம்ம!” என்று கதை கேட்ட  சுவாரஸ்யத்தில் கைதட்டி  ஆர்ப்பரித்த ஹனிகா, “காதலுக்காக சொந்தபந்தத்தை எதிர்க்கிறது எவ்ளோ பெரிய   விஷயம், உண்மையிலேயே நீங்க இரண்டு பேரும் கிரேட் தான்” என்று இருவரையும் கொண்டாடி தீர்த்தாள் ஹனிகா.

“போதும் எங்க கதைய விடு,  உன் காதல் கதைய சொல்லு” என்று ராதா பேச்சு கொடுக்க “என் காதல் கதையா..?” என்று ஹனிகா தயக்கத்துடன் விதுரனை பார்க்க, “ காதலிச்சு இருந்தா தான கதை இருக்கிறதுக்கு,  ஏதோ அவசரத்துல நடந்த கல்யாணம், காதல் கதைக்கு நாங்க எங்க போக?” என்று சிறு  தயக்கமும் இல்லாமல் கூறினான் விதுரன்.

விதுரன் பதிலில் முகம் வாட  அமர்ந்தவளை கண்டு, “சரியான மடையன் இந்த விதுரன், அந்த பொண்ணு முகம் எப்படி வாடிருச்சு, பாரு” என்று மனைவி காதில் ரகசியம் பேசினார் மாதவன்.

“உங்க சிஷ்யன் தான, வேற எப்படி இருப்பான்” என்று  சமயம் பார்த்து காலை வாரினார் ராதா. “ இருந்தாலும் நான் இந்த  விதுரன் அளவுக்கு மோசம் இல்லப்பா” என்று மாதவன் மேலும் கிசுகிசுக்க, “இதை பத்தி தான் பேசுங்கன்னு சொன்னேன்”  என்று எடுத்துக்கொடுத்தார் ராதா. “நீ சொல்லுறதும் சரிதான்  இது  பேசினா தான் சரியா வரும்” என்று மனைவிக்கு சம்மதம் சொன்னவர்,  “விதுரா  உன்கூட கொஞ்சம் தனியா  பேசனும்” என்று அழைக்க, அவர் அழைப்பதன் காரணம் புரிந்தவன் போல அசையாமல் அமர்ந்திருந்தவன்  கையை  பிடித்து வம்படியாக தன்னுடன் இழுத்து சென்றார் மாதவன்.

“ பாருங்க அண்ணி, நாம இருக்கும் போதே, தனியா ரகசியம் பேசப்போறாங்க”, என்று ஹனிகா பொருமிட, “ பார்த்து பல நாளாச்சுல  அதான், பாவம் இந்த ஒருதடவை  விட்டுடுவோம்”,  என்று ஹனிகாவை சமாளித்தார் ராதா. 

தேன்மொழி கொடுத்த உணவை மறுக்காமல் உண்டு முடித்து வந்த குழந்தைகளுடன்   கதை பேசத் துவங்கியவள் குழந்தையோடு குழந்தையாக  ஓடிப்பிடித்து விளையாடத் துவங்கிட,   சமையல் செய்த பொருட்களை ஒதுக்கிட தேன்மொழிக்கு உதவி செய்ய ராதாவும் வீட்டினுள் சென்று விட,   தனிமையில் பேசிட வந்தவர்கள் மெதுவாய் பேச்சை துவங்கினர், “அந்த பொண்ணுக்கு மாப்பிளை தேடுறத பத்தி சொல்லியிருந்தேன் அது சம்மந்தமா  ஏதாவது  முன்னேற்றம் இருக்கா?” என்றான் விதுரன்.  “இரண்டு ஜாதகம் அனுப்பி வைச்சிருக்கேன்,  பார்க்கலாம் எது பொருந்துதுன்னு” என்றார் மாதவன்.  “அவங்க குடும்பத்துக்கு நல்லது பண்ணுனதுக்கு பிறகு தான்  என் குற்றயுணர்ச்சி கொஞ்சமாவது  குறையும் ஹீரோ சார்”, என்றவனிடம், “அதனால தான் எனக்கு விருப்பமே இல்லைன்னாலும் உன்  மனநிம்மதிக்காக, நீ செய்ய சொல்லுறதை எல்லாம் செஞ்சுட்டு இருக்கேன்” என்று வேண்டா வெறுப்பாக  பதில் தந்தார் மாதவன். 

மொட்டை மாடியில்  நின்று குழந்தைகளுடன்  ஓடி விளையாடிய ஹனியை பார்த்த விதுரன் கண்களில் ரசனையை உணர்ந்தவர், அடுத்தநொடி அவர் கண்டது பொய்யோ எனும் அளவு அது இல்லாமல் போக, “ உனக்கு  என்ன பிரச்சனை?  இன்னும் உனக்குள்ள இருக்கிற தயக்கம் போகலையா?”  என்று விசாரித்தார்  மாதவன்.

“  தயக்கத்துக்கான காரணம்  அப்படியே இருக்கும்போது,   தயக்கம்  எப்படி போகும்?  சந்தியாவை இன்னும்  மறக்க முடியல ஹீரோ சார், நானும் எல்லார் முன்னாடியும் நல்லபடியா வாழ்ந்து காட்டணும்னு நினைக்கிறேன், ஆனா ஹனியை நெருங்கும்போது ஏதோ ஒன்னு தடுக்குது! சந்தியா  இருந்த இடத்துல அவ தங்கைச்சிய நினைக்க குற்றவுணர்வா இருக்கு போல” என்று விதுரன் தடுமாற,

“கல்யாணம்  பண்ணுணத்துக்கு அப்புறமும்  கூட  சேர்ந்து வாழ காரணம் தேடுற.  உன்னைப் பார்த்தா எப்படி இருக்கு  தெரியுமா?  சம்சாரி வாழ்க்கையும் வேணும்,  சந்நியாசி நிம்மதியும் வேணும்னு     கேட்குற முட்டாள் மாதிரி இருக்கு,   நான் தெரியாம கேட்குறேன், சந்தியா  தங்கச்சிக்கிறதுக்காக  அந்த பொண்ணுக்கு   காதல் வரக்கூடாதா என்ன?, சரி,  அறியாப்பிள்ளை தெரியாத்தனமா  உன்னை காதலிச்சுடுச்சு, இப்போ அந்த பொண்ணோட காதலுக்கு என்ன பதில் சொல்லப்போற?,  உன்னை நெருங்க விடாம தடுக்கிறது  என்ன?  ஹனி சந்தியா தங்கச்சி அதானே! நீ ஏன் அவள சந்தியாவோட தங்கச்சியா மட்டும் பார்க்கிற,  உன் பொண்டாட்டியா பாரு, பிரச்சனை முடிஞ்சது  “ என்றார் மாதவன்.

“ நான் கொஞ்சம் டைம்  கேட்டிருக்கேன் ஹீரோ சார்,  அவளும் சரின்னு சொல்லிட்டா” என்றான் விதுரன்.

“  சரின்னு சொல்லாம வேற என்ன சொல்லுவா?,  அந்த பொண்ணு மனசு அப்படி!” என்றார் அவர்,   விதுரன் மௌனமாய் நிற்க “அடுத்து உன்னோட தயக்கம்  வயசு வித்தியாசம்! உனக்கும் அந்த பொண்ணுக்கும் பத்து வயசு வித்தியாசம் இருக்குமா!  அதெல்லாம் இப்போ  பெரிய விஷயமே இல்ல, மனசை மட்டும் பார்க்கிற காதல் வயசை பார்க்காது, அதனால இந்த வயசு வித்தியாசத்தை தூக்கி தூரப்போடு, அடுத்து என்ன மெச்சூரிட்டி இல்லாம குழந்தைத்தனமா இருக்கான்னு சொல்லுறியா?, ஊர் உலகத்துல வந்து பாரு, நேத்து பிறந்தது கூட காதலிச்சிட்டு  திரியுதுங்க, எப்போடா பதினெட்டு வயசாகும்   கல்யாணம் பண்ணிக்கலாம்னு காத்திட்டு இருக்காங்க,  பதினெட்டாவது பிறந்தநாள் முடிஞ்ச அடுத்த நாளே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறாங்க, அவங்களுக்கு எல்லாம் நீ சொன்ன மெச்சூரிட்டி இருக்கா என்ன? என்னை கேட்டா உன் முதல் மனைவி சந்தியாவ விட ஹனிதான் ரொம்ப  மெச்சுரூரான பொண்ணுன்னு சொல்லுவேன்” என்று     ஹனிகாவிற்கு சாதகமாய் பேசிக்கொண்டே  சென்றார் மாதவன். 

பிள்ளைகளுடன்  விளையாடிக்கொண்டிருந்த ஹனிகாவை பார்த்து “  குழந்தை  ஹீரோ” என்று விதுரன் தன் உள்ளத்தின் வார்த்தையை சொல்ல முடியாமல் தடுமாறிட.. “ ஒருசிலர் தனக்குப் பிடிச்சவங்க கிட்ட மட்டுமே தன்னோட கோபத்தையும் கண்ணீரையும் குழந்தை தனத்தையும் காட்டுவாங்க,  ஹனியும்  அவளுக்கு பிடிச்ச உன்கிட்ட மட்டும் குழந்தைத்தனத்தை காட்டுறா, உன் கவனத்தை அவ பக்கம் திசை  திருப்ப   இப்படி முயற்சி பண்ணுறா. அதை வைச்சு அவளை குழந்தைன்னு முடிவு பண்ணாத.  நீ பார்த்து வளர்ந்த பொண்ணா இருக்கலாம்,  ஆனா இன்னும் அவ   சின்ன குழந்தையும்  இல்ல. சந்தியா மாதிரி தெளிவான முடிவு எடுக்க தெரியாத  குழப்பவாதியும்  இல்ல. சந்தியவோட  நீ வாழ்ந்த வாழ்க்கை  எப்படி இருந்ததுன்னு  தெரிச்சவங்கிற  முறையில சொல்லுறேன்,   கடந்து போன கசப்பான  வாழ்க்கைய நினைச்சு கவலைப்பட்டுட்டே  கையில கிடைச்சிருக்க சொர்க்கத்தை விட்டுடாத! ” என்று விதுரன்  மீது இருக்கும் அக்கறையில் அறிவுரை வழங்கினார் மாதவன்.

“நீங்க சொல்லுறது சரிதான். நான் ஒன்னும் அவளை ஒரேடியா ஒதுக்கி வைக்கல. கொஞ்சம் கொஞ்சமா அவ காதலை புரிஞ்சுட்டு காதலிக்க தொடங்கிடுவேன்” என்றான் விதுரன். “மடையா ஹனி  கண்ணை பார்க்கும் போதே, உனக்கான காதல்  தெரியுது. நீ காதல் இல்லன்னு சொன்னதும் அவ முகம்  வாடிப்போச்சு, இன்னும் எத்தனை நாளைக்கு தான் உன் உணர்வுகளை மறைச்சுட்டு,  அந்தப் பொண்ணோட உணர்வுகள்ல விளையாடுவ?  நீ பிராக்டிகலா  யோசிக்கிற ஆளு, உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை.  டைம்  வேஸ்ட் பண்ணாம  வாழ்க்கைய ஒழுங்கா வாழப்பாரு  இந்த நிமிஷத்துல இருந்து ஹனிகாவ காதலிக்க ஆரம்பிச்சுடு, உன் வாழ்க்கை அர்த்தமாகிடும்”, என்றார் மாதவன்.

வயதில் மூத்தவர் வார்த்தையை மறுக்க முடியாமல் சம்மதமாய் தலையாட்டி வந்தான் விதுரன்.

இரவு அறைக்குள் வந்தவளை  தன் கையணைவில் படுக்க வைத்துக்கொண்டவன்,  “தூங்கிட்டேனான்னு   பார்த்துட்டு வந்து பக்கத்துல படுக்க வேண்டியது இல்லை ஹனி, இது உனக்காக இடம்,  தயக்கமே  இல்லாம வந்து படுத்துக்கலாம்” என்று தன்  நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டவன், நெற்றியில் முத்தமிட்டு, “குட் நைட் ராட்சஸி” என்று கிசுக்கிசுப்பாய் கூறிட அவன் அன்பிலும் அணைப்பிலும் கிறங்கியபடி உறங்கிப்போனாள் ஹனிகா. 

உன்னோடு சேராத நாட்கள்..
என் வாழ்நாளில்
நான்   வாழ்ந்தும்
வாழாத நாட்கள்…