கண்கள் உன்னை
கண்டிட….
காலங்கள் நான்
மறந்திட..
இது காதல்
தானோ..
என் காயங்கள்
கலைக்கும்
ஆறுதல் நீயோ!..
மகளின் பிடிவாதத்திற்கு பணிந்து திருமணத்திற்கு சம்மதம் சொல்லி வந்த வசுந்தரா கணபதிநாதனை தனிமையில் சந்தித்து, “இந்த பொண்ணுக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்ததுன்னு புரியல!” என்றார்.
“எனக்கு முன்னாடியே இப்படி ஒரு யோசனை இருந்தது, ஆனா பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரியாம முடிவு எடுக்ககூடாதுன்னு தான் விதுரனுக்கு வேற இடத்துல பொண்ணு தேடுனேன். எந்த கடவுள் புண்ணியமோ அந்த மருது பிரச்சனை பண்ணி நம்ம பொண்ணுக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கிறது தெரிஞ்சு, மாட்டவே மாட்டேன்னு அடம்புடிச்சுட்டு இருந்தா மருமகனும் நம்ம பொண்ணோட பிடிவாதத்துக்கு முன்னாடி பதில் பேச முடியாம தானா இறங்கி வந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாரு. இனி ரொம்பநாள் தள்ளிப்போடக் கூடாது , மருமகன் மனசு எப்போ வேணும்னாலும் மாறும், அதுக்குள்ள நல்ல நாளாப் பார்த்து கல்யாணத்தை முடிச்சிடனும்” என்று மனைவியின் மனதில் இருக்கும் உறுத்தல் புரியாமல் நிம்மதியாய் பேசினார் கணபதிநாதன்.
கணவர் குரலில் இருந்த நிம்மதியை தனதாய் உணர மறுத்து, “சந்தியா தற்கொலைக்கு என்ன காரணம், அவ விஷயத்துல என்ன நடந்ததுன்னு எதுவுமே சரியா தெரியல, இன்னும் நிறைய விஷயம் மர்மமாவே இருக்கு, இப்போ இப்படி ஒரு அவசர கல்யாண முடிவு தேவை தானா?, தப்பு பண்ணுறோம்னு உங்களுக்கு தோணலையா? என் மனசுல ஏதோ நெருடல் இருந்துகிட்டே இருக்கு”, என்று கலங்கிய குரலில் வினவினார்.
மகளுக்காக சம்மதம் சொல்லி விட்டு இங்கு வந்து மறுத்துப்பேசும் மனைவியை குழப்பமாய் பார்த்த கணபதிநாதன், “இந்த கல்யாணம் நடக்கணும்னு இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி விதுரன் காலுல விழப்போன, இப்போ உள்ள வந்து நெருடலாக இருக்குன்னு சொல்லுற, இப்படி மாத்தி மாத்தி பேசினா என்ன அர்த்தம் வசு?” என்றார் சற்று கோபமான குரலில். “உங்க பொண்ணும் உங்களை மாதிரியே பிடிவாதம் பிடிக்கும்போது வேறு என்ன செய்ய சொல்றீங்க? இருக்குற ஒரு பொண்ணையும் இழந்திடக்கூடாதுன்னு மனச கல்லாக்கிட்டு சம்மதம் சொன்னேன். இருந்தாலும் பெத்த மனசு இல்லையா நடந்தத நினைச்சு பதறுது. கல்யாணம் முடிஞ்சு ரெண்டே மாசத்துல என்ன காரணம்னே தெரியாம தற்கொலை பண்ணிக்கிட்ட பெரிய பொண்ணு மாதிரி இவ வாழ்க்கைலையும் ஏதாவது ஒரு விபரீதம் நடந்ததுன்னா?” என்று தன் அச்சத்தின் காரணம் கூறினார் வசுந்தரா.
“வசு, இத நான் உன்கிட்ட பலதடவை சொல்லிட்டேன் என் வார்த்தைக்காக சந்தியாவை கல்யாணம் பண்ணுனத தவிர நடந்ததுல விதுரன் தப்பு எதுவுமே இல்ல. அவனை மாதிரி அடுத்தவங்க உணர்வை புரிஞ்சு நடத்துக்கிற நல்லவன் கூட வாழுற குடுப்பினை நம்ம பெரிய பொண்ணுக்கு கிடைக்கல, சின்ன பொண்ணுக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. கடவுள் முடிபோட்ட பந்தத்த நாம மாத்தி முடிச்சு வைச்சோம், நாம தப்பா போட்ட முடிச்சை சரி பண்ண கிடைச்சிருக்க வாய்ப்பாத் தான் இந்த கல்யாணத்தை பாக்குறேன்”, என்றவர் மனைவி முகம் தெளிவில்லாமல் இருக்க, “ பெரியவளுக்கு நடந்தது சின்னவளுக்கும் நடந்திடுமோங்கிற வீண் பயத்தை முதல விடு, பாதி குழப்பம் தீந்திடும். நம்ம இரண்டு பொண்ணுங்களும் ஒரே குணம் இல்ல. சந்தியா மூத்த பொண்ணுன்னு கைக்குள்ளயே வைச்சு நீ வளர்த்துட்ட, அதனால தனக்கானத கேட்டு வாங்கக்கூட தைரியம் வந்ததில்ல. ஆனா ஹனி தனக்கு என்ன வேணும்னு தெளிவா முடிவெடுக்க தெரிஞ்சவ!, ஒரு பிரச்சனை வந்தா அதை சமாளிக்க பலவிதத்துல வழி தேட தெரிஞ்ச கெட்டிக்காரி, அதனால உன் கவலைய விட்டுட்டு கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாட்டை கவனி. இன்னொரு விஷயம், உன் மனசுல இப்படி ஒரு சஞ்சலம் இருந்ததுன்னு உன் மருமகனுக்கு தெரியக்கூடாது, தெரிஞ்சா அதையே காரணமா காட்டி இந்த கல்யாணத்தையே நிறுத்திடுவான். மறுபடியும் உன் பொண்ணு பிடிவாதமா ரூமுக்குள்ள போய் உட்கார்ந்துக்குவா, அதுதான் உனக்கு விருப்பமா ? இல்லேல, அப்போ உனக்குள்ள இருக்கிற நெருடல உன்னோடயே வச்சுக்கோ, வெளியக்காட்டாத, அதுதான் உன் பொண்ணுக்கும் அவ வாழ்க்கைக்கும் நல்லது”, என்று குழப்பத்துடன் கலங்கி தவித்த மனைவிக்கு ஆறுதலாய் அறிவுரை வழங்கினார் கணபதிநாதன்.
“ பிடிக்கலனாலும் என் பொண்ணு சந்தோசத்துக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுறேன், அவ நிம்மதிக்காக மட்டும் அந்த விதுரனை மாப்பிள்ளையா ஏத்துக்குறேன், என் பொண்ணு கொஞ்சம் கண்ணு கலங்குனாலும் சரி, நான் கொடுக்குற மரியாதை வேற விதமா இருக்கும்”, என்று தான் என்றுமே விதுரனை மன்னிக்கத் தயாரில்லை என்று சொல்லாமல் சொல்லிச் சென்றார் வசுந்தரா.
‘இவள திருத்தவே முடியாது, மக கூட மருமகன் சந்தோசமா வாழுறத பார்த்து தானா திருந்தினாத்தான் உண்டு’, என்று எண்ணிக்கொண்டவர் அந்த மாற்றம் நிகழும் நாளையும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தார்.
திருமணத்திற்கு சம்மதம் சொல்லி வந்தவன், மனம் மட்டும் ஏதோ தவறு நிகழ்வதை போல் குற்றம் உணர்வில் நச்சரிக்க, தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று வான்நிலவின் குளுமையில் தனது மனக்குமுறல் தீராதோ என்ற எண்ணத்தில் வான் வெறித்து நின்றான் விதுரன்.
“அத்தை” என்று குதூகலத்துடன் அழைத்தபடி வந்தவளை ஆவலுடன் வரவேற்ற தேன்மொழி “வாம்மா, எங்க வீட்டு மகராசி! உன்னால தான் நாங்க இழந்த சந்தோசத்தை மீட்கணும்னு இருக்கு” , என்றார் உவகை நிறைந்த குரலில்.
“ நான் மகராசி இல்ல அத்தை”, என்று புருவம் உயர்த்தி இல்லை என்பது போல குறும்பாக தலையசைத்தவள், “ மருமக ராசியாக்கும்” என்று செல்லம் கொஞ்சி சிணுங்கினாள்.
எப்போதும் தன்னுடன் செல்லம் கொஞ்சி வாயாடும் பெண்ணை புன்னகையுடன் பார்த்தவர், “ கொஞ்சம் இரு உன்கூட சரிக்கு சரி வாயாட தெம்பு வேணும், நான் போய் என் ப்ரெஷர் மாத்திரை போட்டுட்டு வரேன்” என்று அறைக்குள் எழுந்து சென்றார்.
உள்ளே சென்றவர் திரும்பி வருவதற்குள் வீட்டையே ஒருமுறை சுற்றிவந்தவள், தனக்கான மருந்து எடுத்துக்கொண்டு திரும்பி வந்த தேன்மொழியிடம் “எங்க அத்தை மாமாவ காணோம், எனக்கு பயந்துட்டு ஊரைவிட்டே ஓடிட்டாரா?” என்று கிண்டலுடன் ஹனிகா வினவிட, “சரியான வாயாடி, என் பிள்ளையோட பிடிவாதத்தை சமாளிக்கக் கூடிய ஒரே ஆள் நீதான்! கல்யாணப் பேச்சை எடுத்தாலே காட்டுக்கத்தல் கத்துற உன் மாமனை ஒரே வார்த்தையில மடக்கிட்டயே! நானே உன் பிடிவாதத்த பார்த்து ஆடிப்போய்ட்டேன். ஆனா இந்த மாதிரி தற்கொலை அது இதுன்னு மிரட்டுறது இதுதான் கடைசி தடவையா இருக்கணும். ஒருத்திய பிரிஞ்சு அனுபவிக்கிற கஷ்டம் போதும், இனி கனவுல கூட உனக்கு அப்படி ஒரு நினைப்பு வரக்கூடாது என்ன புரியுதா? ” என்று பெரியவராய் கண்டித்தார் தேன்மொழி.
“என் மாமன் கூட வாழப்போறேன், இதுக்கு மேல சாவை பத்தி யோசிப்பேனா என்ன?, உங்க பையன் கூட நூறு வயசு வரைக்கும் ஒண்ணா சந்தோசமா வாழாம இந்த கட்டை வேகாது. அதிருக்கட்டும், நான் கேட்ட கேள்விக்கு முதல பதில் சொல்லுங்க, எங்க என் மாமா?” என்று அவள் வழமையான துடுக்குத்தனத்துடன் பேசினாள் ஹனிகா.
“கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு உங்க வீட்ல இருந்து வந்ததும் மொட்டை மாடிக்கு போனவன் தான், இன்னும் கீழ இறங்கி வரல, நானும் சாப்பிட சொல்லி பல தடவை கூப்பிட்டு பார்த்துட்டேன், பசிக்கலனு பிடிவாதமா உட்கார்ந்திருக்கான், “என்று தேன்மொழி அலுத்துக்கொள்ள “ சாப்பாடு சாப்பிடாம அப்படி என்ன பிடிவாதம்?” என்றாள் ஹனிகா.
“ ஒருவேளை உன்னை மாதிரியே பிடிவாதம் பிடிச்சு கல்யாணத்த நிறுத்த திட்டம் போடுறானோ என்னவோ?” என்று மாமியார் நிறுத்த, “அவர் என்ன திட்டம் போட்டாலும் இந்த கல்யாணம் நிக்காது. கல்யாணத்த நிறுத்த உங்க மகன் தலைகீழா நின்னாலும், தலைகீழா நின்னுட்டே என் கழுத்துல தாலி கட்டுங்கன்னு நானும் அவரை மாதிரியே தலைகீழா நின்னு காரியம் சாதிச்சுடுவேன்” என்று சிரித்தவள், தேன்மொழியும் கவலை மறந்து புன்னகை செய்து, “ நீ செஞ்சாலும் செய்வ!” என்றிட, “என்ன சிரிக்கிறீங்க? இதுக்கு எல்லாம் நீங்க தான் காரணம், என்ன பிள்ளை வளர்த்து வைச்சிருக்கீங்க, எவ்ளோ பிடிவாதம்! ஒரு விஷயத்தை செய்ய வைக்கிறதுக்குள்ள மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குது”, என்று தேன்மொழி வளர்ப்பை ஹனிகா குற்றம் கூறிட, “ அடடா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லாரையும் கதிகலங்க வைச்சவ, பிடிவாதம் பிடிக்கிறத பத்தி பாடம் எடுக்கிறா..!” என்று தேன்மொழி சிரிக்க, “ நல்லது யார் சொன்னாலும் ஏத்துக்கனும் அத்தை. அவங்க வரலாறை புரட்டி பாக்க கூடாது “ என்று கண்சிமிட்டி ஹனி சிரிக்க, “ஏத்துக்குறேன் மருமகளே! என் வளர்ப்பு தான் சரியில்ல தான். கல்யாணம் பண்ணிட்டு நீ நல்லா வளர்த்துக்கோ உன் மாமனை” என்று சிரித்தபடியே பதிலடி கொடுத்தார் தேன்மொழி.
“அதென்ன கல்யாணத்துக்கு அப்புறம்? திருத்தணும்னு முடிவு எடுத்துட்டா அதை இப்பவே செஞ்சிடனும், நல்லநேரம் எல்லாம் பார்க்கக்கூடாது. நீங்க போய் சுடச்சுட ஒரு டஜன் தோசை சுட்டு வையுங்க நான் போய் மாமாவ கூட்டிட்டு வரேன்”, என்று ஹனிகா கட்டளையிட, “ ஒரு டஜன் போதுமா உன் மாமனுக்கு !” என்று தேன்மொழி வாய் பிளக்க, “ இரண்டு பேருக்கு வேணும்ல, மாமாவ கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைச்சது சங்கடமா இருந்தது. மாமாவை நேருல பார்த்து சமாதானம் செஞ்சுட்டு தான் அடுத்த வேலைன்னு ஓடிவந்துட்டேன்” என்றிட “ உன் மாமா மேல அவ்ளோ அக்கறையா?” என்று அவள் மனதில் இருக்கும் எண்ணம் அறிந்திட மறைமுகமாய் வினவினார் தேன்மொழி.
“ அக்கறையா.. ?, அது முன்னப்பின்ன தெரியாதவங்க மேல கூட வரும், எனக்கு மாமா மேல இருக்குறது காதல், அளவுக்கு அதிகமான காதல்!” என்று அழுத்தி சொன்னவள், தேன்மொழி முகத்தில் இருந்த தயக்கம் அகன்று நிம்மதி படர்வதை உணர்ந்து, “அப்பா சொன்னாரு, மாமாவுக்கு நல்லது, இப்படி எதையும் யோசிச்சு இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கல அத்தை. இது முழுக்க முழுக்க என்னோட சுயநலத்துனால நடக்குது” என்றவள் “சுயநலமா!” என்று எதிரில் இருந்தவர் முகத்தில் உறைந்த குழப்பத்தை கண்டு, “ சுயநலம் தான் அத்தை. உங்க பையன் கூட வாழ்ந்தா மட்டும் தான் என் வாழ்க்கை சந்தோசமா இருக்குங்கிற என்னோட சுயநலமான எண்ணம் தான் இந்த கல்யாணத்துக்கு காரணம். இந்த கல்யாணம் நடந்தா எங்க வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு உங்க மனசுல இருக்கிற கொஞ்ச நஞ்ச குழப்பத்தையும் துடைச்சு எறிஞ்சிடுங்க, எந்த சூழ்நிலையிலயும் உங்க பையனை விட்டு பிரியவும் மாட்டேன், அவர் மேல நான் வைச்சிருக்குற அன்பை மாத்திக்கவும் மாட்டேன், இது உயிருக்கு உயிரா விரும்புற என் மாமன் மேல சத்தியம். நம்ம குலசாமி மேல சத்தியம்”, என்று அதுவரை இருந்த குழந்தைத்தனத்தை கைவிட்டு உணர்வுப்பூர்வமாய் பேசினாள் ஹனிகா.
“ இது போதும் ஹனிமா.. பெத்தபிள்ளை வாழ்க்கைய இழந்ததுட்டு நிக்கிறத பார்த்து பார்த்து வாழும்போதே நரக வேதனைல செத்து பிழைச்சேன். இந்த கல்யாணம் தான் இனி நான் வாழப்போற வாழ்க்கைக்கான தெம்பு, நான் வளர்த்த பிள்ளைங்க ஒன்னா சந்தோசமா வாழுறத பார்க்கிறதவிட வேற என்ன நிம்மதி வேணும் எனக்கு!, அப்படி நினைச்சு தான் … ” என்று பாதி வார்த்தையில் வார்த்தை வராமல் நிறுத்தியவர், கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்க, “அந்த குறைய தீக்கத்தான் நான் வந்துட்டேன்ல அத்தை” என்று உரிமையாய் தன் வருங்கால மாமியாரை செல்லமாய் கட்டிக்கொண்டாள் ஹனிகா.
“ உன் மாமனை எப்படியாவது சமாதானப்படுத்தி சாப்பிட கூட்டிட்டு வந்திடு ஹனிமா. ஏதாவது கோபமா பேசினா எனக்காக பொறுத்துக்கோ” என்று கெஞ்சலுடன் தேன்மொழி கேட்டிட., “என் பொறுமைய பத்தி உங்களுக்கே தெரியும், கோபமா பேசினா நானும் கோபமா தான் திருப்பிக் குடுப்பேன், அது தான் என் குணம். போலியா நடிக்கிறத விட என் குணம் இதுதான்னு உண்மையா இருக்கிறது தான் எப்பவும் நல்லது அத்தை. அப்படி இருக்கிறது தான் மாமாவுக்கும் பிடிக்கும்” என்று ஹனிகா சுயவிளக்கம் கொடுக்க, “நீ சொல்லுறது உண்மை தான், துடுக்கு தனமான தைரியம் தான் விதுவுக்கு உன்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம், உன்னை மாதிரி சந்தியா தைரியமான பொண்ணா இருந்தா நல்லா இருக்கும்னு பலதடவை சொல்லிருக்கான், நீ நீயாவே இரு அது தான் நல்லதும் நிரந்தரமும் கூட!” என்று மருமகளின் விளக்கத்தை ஏற்றார் தேன்மொழி.
மொட்டை மாடியில் தனிமையில் பாறையாய் இறுகியிருந்த முகத்தில் பலவித யோசனையை சுமந்து நின்ற விதுரனை கண்ட ஹனிகாவிற்கு இளமையின் வேகத்தில் விபரீத ஆசை வந்திட அவனை பின்னிருந்து அணைத்தாள்.
அழுத்தமாய் உரசாத தேக அணைப்பு என்றாலும் அவள் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இதமான நெருக்கத்தை ஏற்படுத்திட, உடல் விறைத்து ஒருவித பதட்டத்துடன் விலகி நின்று “ உன்னை யாரு இந்த நேரத்துல இங்க வரச்சொன்னது?” என்று எரிச்சலுடன் குரலை உயர்த்தினான் விதுரன்.
“ உங்க வருங்கால பொண்டாட்டிங்கிற உரிமை வரச்சொன்னது” என்று அசராமல் பதில் கொடுத்தவளை புருவம் உயர்த்தி ஏளனமாய் பார்த்தவன், “ அந்த உரிமைய எப்படி தட்டிப் பறிச்சன்னு மறந்துடாத!” என்றான் அதே இளக்கார குரலில்.
“கேட்டு கிடைக்காதப்போ தட்டிப் பறிக்கிறதுல தப்பு இல்ல. இந்த பாடத்தை எனக்கு கத்துக்குடுத்ததே நீங்கதான மாமா !, என்ன அப்படி முழிக்கிறீங்க? எப்போன்னு யோசிக்கிறீங்களா? டென்த் முடிக்கவும் எனக்கு சயின்ஸ் படிக்க ஆசை அப்பா காமெர்ஸ் படிக்க கட்டாயப்படுத்தும் போது, அடுத்தவங்க விருப்பதுக்காக பிடிக்காத ஒன்னை தேர்ந்தெடுத்துட்டு ஆயுசுக்கும் கஷ்டப்படுறத விட, பிடிச்சத படிக்க கொஞ்சம் அதிகமாவே போராடலாம் தப்பில்லன்னு நீங்கதான சொன்னீங்க. அந்த வார்த்தைய தான் இப்போ யூஸ் பண்ணிக்கிட்டேன். எனக்கு ரொம்பப்பிடிச்ச என்னோட மாமாவ காலம் முழுக்க என்னோட பிடிச்சுவைக்க என்னால முடிஞ்ச போராட்டம்” என்று மையல் கொண்ட கண்களில் காதலை நிறைத்துக்கொண்டு சிரித்தாள் ஹனிகா.
காதல் கணை கொண்டு தன்னை துளைக்கும் விழிகளை சலனமில்லாமல் வெறித்தபடி “ உனக்கு என் மேல இருக்கிறது வெறும் ஈர்ப்பு மட்டும் தான்! அதை காதல்ன்னு தப்பா புரிஞ்சுகிட்டு கல்யாண விஷயத்துல அவசரப்பட்டு தப்பான முடிவு எடுத்திருக்க ஹனி. உனக்கு வந்திருக்கிற ஈர்ப்பு எப்போ வேணாலும் மாறலாம், அது மாறும் போது காதலும் கல்யாணமும் கசக்க ஆரம்பிச்சிடும். இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல, மாமாகிட்ட நான் பேசுறேன் உனக்கு பொருத்தமான மாப்பிள்ளை பார்த்து நானே கல்யாணம் பண்ணிவைக்கிறேன்” என்று அறிவுரை வழங்கி அவள் மனம் மாற்றும் முயற்சியில் இறங்கினான் விதுரன்.
“ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணுறதுக்கு தான் உங்கள சுத்திசுத்தி வாறேனாக்கும்” என்று கோபமாய் துவங்கியவள், விதுரன் மனத்திலிருக்கும் சஞ்சலம் தீர்ந்தால் மட்டுமே இந்த திருமணத்திற்கு மனநிறைவுடன் சம்மதிப்பான் என்ற எண்ணத்துடன், அவன் வார்த்தைக்கு விளக்கம் கொடுக்க துவங்கினாள். “ என்னோட முறைப்பையன் அப்படி பார்க்கும் போது முதல நீங்க சொன்ன மாதிரி உங்க மேல வெறும் ஈர்ப்பு மட்டும் தான் இருந்தது. உங்களுக்கும் சந்தியாவுக்கும் கல்யாணம் முடிவானதும் சந்தியாவ பார்க்கும் போது உங்க கண்ணுல இருக்கிற காதலை பார்த்து இப்படி காதலோட இருக்கிறவர் தான் நமக்கு வாழ்க்கைத்துணையா வரணும்னு ஈர்ப்பு ஒருவித எதிர்பார்ப்பா, விருப்பமா மாறிடுச்சு, சந்தியா இறந்தப்போ இந்த உலகமே இடிஞ்ச மாதிரி கதறி துடிச்சீங்க பாருங்க, அப்போ உங்க கூட எப்பவும் நான் இருப்பேன்னு உங்க கைய பிடிச்சுட்டு ஆறுதல் சொல்லணும் போல இருந்தது. அந்த நிமிஷம் உங்க கண்ணீர் என்னையும் கலங்கவைக்கும்ங்கிற உண்மை புரிஞ்சது. என் அக்கா உங்களுக்கு கொடுக்காத சந்தோஷத்தையும் நான் கொடுக்கணும், காலம் முழுக்க உங்கள காதலிச்சுட்டே இருக்கனும்னு முடிவு எடுத்தேன். எனக்கு காதல் வந்தப்ப நீங்க என் அக்காவுக்கு புருஷன் இல்ல மாமா. அதனால எனக்கு வந்த காதலும் தப்பில்ல”, என்று தன் காதலை உணர்வை தூய்மைப்படுத்தினாள் ஹனிகா.
“உனக்குள்ள உண்டானது காதல் தான்னு முடிவு எடுக்கும்போது என்ன வயசு பதினஞ்சு, அந்த வயசுலயே வாழ்க்கையையே தீர்மானிக்கிற இவ்ளோ பெரிய முடிவு எடுத்துட்டியா என்ன ?” என்று நம்பாமல் புருவம் உயர்த்தி வினவியவன், அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அறிந்தவள் போல நீ பேசி முடி பிறகு மொத்தமாய் பார்த்துக்கொள்கிறேன் என்ற திமிரான பார்வையுடன், இடையில் கைவைத்து செல்லமாய் முறைத்தவளை கண்டு வெளிப்பட்ட ரசனை சிரிப்பை அடக்கிகொண்டு, “நம்மளோட காதல் கையைவிட்டு போகும்போது எல்லோரும் கதறத்தான் செய்வாங்க அதை பார்த்துட்டு காதலிச்சேன்னு சொல்லும் போதே தெரியுது உன்னோட மெச்சூரிட்டி. உனக்கு என்ன உன்கூட நான் எப்பவும் இருக்கனும் அவ்ளோ தான? நான் இருக்கேன். எப்பவும் உன்னோட நல்லது கெட்டதுல பங்கெடுத்துக்க உன் விது மாமா உன் கூடவே இருக்கேன், போதுமா? இப்போ சொல்லு இந்த கல்யாணத்தை நிறுத்திடலாமா? ” என்று விதுரன் தன் நிலையை நியாயப்படுத்தி பேசினான்.
இடையில் வைத்திருந்த கையை மெதுவாய் விலக்கியவள், “பேசி முடிச்சுட்டீங்களா?” என்றவள் விதுரன் கன்னத்தில் அடிக்க எண்ணிட அது அவள் உயரத்திற்கு சற்று அதிகமாய் இருந்திட, சுலமபாய் எட்டும் அவன் மார்பிலும் வயிற்றிலும் வலிக்கும்படி குத்திவிட்டு, “எங்க வீட்டுல வைச்சு என்ன கேட்டீங்க? கல்யாண ஆசை வந்தா வீட்டுல சொல்லி வேற மாப்பிள்ளை பார்க்கணுமா? அதுக்கு பதில் குடுக்கத்தான் உங்கள தேடிவந்தேன், இப்பவும் அதே மாதிரி தான் உளருறீங்க! இந்த பதில் போதுமா இன்னும் வேணுமா? உங்களுக்கு என்னை பிடிக்கலங்கிறதுக்கு சரியான காரணம் சொல்லுங்க அதை விட்டுட்டு கண்டதையும் உளராதீங்க!” என்று தன்னை அத்தனை அடி அடித்துவிட்டு மூச்சு வாங்க ஊசிப்பட்டாசாய் வெடித்தவளை கண்டு கன்னம் குழி விழ சிரித்தவனை தன்னை மறந்து பார்த்து நின்றவள், “நீங்க இப்படி கன்னக் குழி விழ சிரிக்கிறத பார்க்கும் போது எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா? என் விது மாமா எப்பவும் இப்படி சிரிச்சுட்டே இருக்கனும் அதுக்கு நான் அவர் கூடவே இருக்கனும்” என்று ரசனையாய் கூறியவள் விழிகளில் இருந்த காதல் கண்டு தடுமாறிபோனான் விதுரன்.
சின்னப்பெண் என்று எண்ணி அவளை விட்டு விலகி நிற்க நினைக்க அவன் மனமோ கொஞ்சம் கொஞ்சமாய் அவள் புறம் சரிவது புரிந்து, ‘இது சரியில்ல, இவளுக்கு நான் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாதவன், இந்த கல்யாணம் ரெண்டு பேருக்கும் நல்லது இல்லன்னு பொறுமையா புரியவைச்சு விலகிடனும்’ என்று உள்ளக்குள் தீர்மானம் எடுத்துக்கொண்டவன், அவன் மொபைல் அழைத்திட சற்று தூரம் விலகி சொன்றான்.
அந்த நேரம் ஏதோ எண்ணி ரசித்து சிரித்தபடி தனது மொபைலை எடுத்து அதில் சில வரிகளை பதித்து குறுந்செய்தி ஒன்று அனுப்பிவிட்டு விதுரன் வரவுக்கு காத்திருந்தாள் ஹனிகா.
போன் பேசுவதற்கு விலகி சென்றவன் அலைபேசிக்கு குறுந்செய்தி ஒன்று வந்திட அதை பிரித்து படித்தவன் முகம் தானாய் புன்னகை சூடியது.
கன்னக்குழி
என்பேனா?
என்னை களவாடி
உன்னுள் புதைக்கும்
புதைகுழி என்பேனா..
விடை தெரியா
கேள்வியாய் நீ..
மீண்டும் மீண்டும்
புதைந்திடும்
ஆவலில் நான்..
என்னவோ செய்து தன்னை வசீகரிக்கும் வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டவன் அதே முறுவலுடன் ஹனிகா அருகில் வந்திட, “என்ன மாமா, அவ்ளோ ரசனையா சிரிக்கிறீங்க ?” என்ற ஹனிகாவை யோசனையாய் பார்த்தவன் ‘இது தான் சரியான வாய்ப்பு இதை பயன்படுத்தி இந்த கல்யாணத்த நிறுத்திடனும்’ என்ற எண்ணத்துடன், தனக்கு வந்த கவிதை வரிகளை காட்டி “ இத பாரு!” என்றிட அவளும் வாங்கி வாசித்துவிட்டு “ கவிதை நல்லா இருக்கே, பார்வர்ட் மெசேஜ்ஜா யாரு அனுப்பினது?” என்றாள் ஒன்றுமே அறியாதவள் போல.
“ பார்வேர்ட் இல்ல, ஒரு ஆறு ஏழு மாசமா எனக்கு விதவிதமா இப்படித்தான் கவிதை அனுப்பும் இந்த பொண்ணு. என்னை ரொம்ப நாளா ஒன் சைடா லவ் பண்ணுறா போல”, என்று அலட்டிக்கொள்ளமல் விதுரன் பதில் தர “ ஒன் சைடாத்தான மாமா, விடுங்க. நினைக்கிற வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்குறது இல்லேல” என்று ஆருடம் கூறினாள் ஹனிகா.
“இல்ல. எனக்கும் அந்த பொண்ணு மேல….” என்று சற்று தயங்கியவன், ஹனிகா குறுகுறுப்பாய் பார்த்திட, அவள் கண்களை பார்ப்பதை தவிர்த்து வேறுபுறம் திரும்பி நின்றவன், “ என்ன காரணம்னு தெரியல ஒருவாரமா அந்த பொண்ணுகிட்ட இருந்து மெசேஜ் வரல. எதையோ இழந்த மாதிரி வெறுமையா இருந்தது. இப்போ அவளோட கவிதை பார்க்கவும் தான் தெரியுது என் வெறுமைக்கான காரணம். என்னையும் அறியாம அவ கவிதைக்கு ரசிகனாகிட்டேன்”, என்று மெலிதாகிவிட்ட குரலிலும் அழுத்தமாய் கூறினான் விதுரன்.
“ கவிதைக்கு தான.. நானெல்லாம் கவிதை எழுதினா ஊரு தாங்காது, படிக்கிறவங்க கண்ணு தூங்காது, அதனால தான் அந்த ஏரியாவை விட்டு ஒதுங்கி இருக்கேன். உங்களுக்கு ஓக்கேன்னு மட்டும் சொல்லுங்க, எனக்குள்ள இருக்குற கவிஞரை தட்டி எழுப்பி கவிதை புத்தகமே போட்டுடுறேன்” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டு சவடால் பேசினாள் ஹனிகா.
“ சின்ன குழந்தை மாதிரி பேசாத ஹனி. இதுல கவிதை மட்டும் விஷயம் இல்ல.” என்று தயங்கியவன் பேசி முடிந்துவிடும் வேகத்தில் பெருமூச்சை ஒன்றை வெளியேற்ற “ இத எப்படி உன்கிட்ட சொல்லுறதுன்னு புரியல, ஆனா சொல்லாம உனக்கும் புரியப்போறது இல்ல. உன்கிட்ட ஒரு எல்லைக்கு மேல என்னால நெருங்க முடியாது ஹனி. என் கண் பார்வையில வளர்ந்தவ நீ. உன்கிட்ட எப்படி காதலோட நெருங்க முடியும் கணவனா நடந்துக்க முடியும்?” என்று வெளிப்படையாக பேசமுடியாமல் விதுரன் தடுமாறிட, “ அக்காவும் உங்களுக்கு அப்படி தான மாமா” என்றாள் புரிந்தும் புரியாதது போல. “தியா வேற, அவளுக்கும் எனக்கும் நம்மல மாதிரி வயசு வித்தியாசம் அதிகம் இல்ல” என்று விதுரன் விளக்கம் கொடுக்க, “சரி உங்க பாய்ண்டுக்கே வரேன்! தியா வேற நான் வேற, என்னை காதலோட பார்க்க முடியாதுன்னா அந்த மெசேஜ் அனுப்புற பொண்ணை அப்படி பார்க்க முடியுமா?” என்றாள் ஒருவித கிண்டலான குரலில். “ அத உறுதியா சொல்ல முடியாது. ஆனா உன்கிட்ட கணவன்ங்கிற உரிமையில நெருங்க எனக்கு மனசு வரல”, என்றான் விதுரன்.
“சும்மா இதையே சொன்னா என்ன அர்த்தம் மாமா? சரியான காரணம் கேட்டேன். அதை சொல்லுங்க என்னை பிடிக்கலனா வேற யாரையாவது பிடிச்சிருக்கா என்ன?” என்று ஹனிகா கேட்க, “ பிடிச்சிருக்கு பிடிக்காததையும் தாண்டி இது வேற விஷயம் ஹனி. இதை சொன்னா உனக்கு புரியுமான்னு கூட தெரியல. நான் ஒன்னும் ஆசையே இல்லாத பிரம்மச்சாரி இல்ல. எனக்கும் அடிப்படை ஆசை, சபலம் எல்லாம் இருக்கு. என் தேவைய உன்கிட்ட நிறைவேத்திக்க சங்கடமா இருக்கு, உனக்கு ஒரு முத்தம் குடுத்தா கூட சின்ன குழந்தைக்கு கொடுக்குற மாதிரி பீல் ஆகும் போது வேற எண்ணத்துல எப்படி நெருங்க முடியும். பிறகு எப்படி?” என்று தடுமாற்றத்துடனே தன் தயக்கத்தின் காரணம் கூறினான் விதுரன்.
“ ஓ..” என்று இழுத்து ராகம் பாடியவள், “கண்ணை மூடுங்க” என்று சட்டமாய் அறிவிக்க, “எதுக்கு ?” என்றவனை வம்படியாய் தான் சொன்னதை செய்யவைத்தவள், அவன் உயரத்திற்கு எட்டவில்லை என்றதும் “ தூக்கு மாமா..” என்று கிசுகிசுப்பாய் காதுகளில் மந்திரம் ஓதினாள் ஹனிகா.
சிறுவயதில் இருந்தே இது இவர்களின் வழமையான பழக்கம். விதுரன் அவள் வீட்டிற்கு வந்ததும் ஏதாவது ரசியம் சொல்கிறேன் என்று அவன் காதுகளை ஹனிகா தேடிட, அது எட்டாத போது ஒட்டி நின்று ‘தூக்கு மாமா’ என்றதும் அவளை அவன் உயரத்திற்கு தூக்கிக் கொள்வான், கொஞ்சம் வளர்ந்ததும் தூக்க முடியாமல் போனபோது அவள் உயரத்திற்கு குனிந்து வருவான், இப்போதும் அதையே எண்ணி விதுரன் சற்று குனிந்து வர, அவன் கழுத்தில் மாலை போல் தன் கரம் கோர்த்துக்கொண்டவள், “ வயசு வித்தியாசம் உறவு முறை பாக்காம பச்சை குழந்தை மேல கூட தப்பான எண்ணத்துல கை வைக்கிற இந்த காலத்துல உன்கூட வளர்ந்தவ, பத்து வயசு வித்தியாசம், சந்தியா தங்கச்சி இதையே காரணமா வைச்சு என்னை விலக்கிவைக்க நினைக்கிற நீ என்னோட பொக்கிஷம் மாமா. உன்னை எப்படி என்னால விட முடியும்” என்று தன்னை வசீகரிக்கும் குழி விழும் கன்னத்தில் காதல் முத்தம் பதித்து நான் சிறு குழந்தை அல்ல, காதல் கொள்ளும் கன்னி என்று அறிவிக்க, ஹனிகாவின் செயலில் கலங்கிப்போனவன், “ஹனி..” என்ற அழுத்தத்துடன் விலக முயல, விலக முடியாமல் இறுகப் பற்றியவள், மற்றொரு கன்னத்திலும் முத்தமிட்டு “ நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல மாமா, ஒரு கணவன் தேவை என்னனு புரிஞ்சு தீர்த்து வைக்கிற வயசு தான், இப்போ சொல்லுங்க, என் முத்தம் சின்ன குழந்தை முத்தம் மாதிரி இதமா இருக்கா? இல்ல இம்சையா இருக்கா?” என்று அவன் நெற்றியில் பட்டும்படாமலும் இதழ் உரசி அறிவித்தவள் ஏக்கம் தீரா முகபாவனையுடன் கண் மூடி கிடந்த விதுரன் காதுகளில், “போதும் போதும் கிறங்கிக்கிடந்தது. மிச்சமெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்..” என்று விலகிக்கொள்ள, எதையோ எதிர்கொள்ளும் ஆவலுடன் இருந்தவன் அடுத்து தன் எதிர்பார்ப்பு என்னவென்று புரிந்து பதட்டத்துடன் எழுந்துகொண்டான்.
“ கீழே அத்தை தோசை ஊத்திட்டு நமக்காக காத்திட்டு இருப்பாங்க, வாங்க” என்று வெட்கம் கலந்த துள்ளலுடன் ஹனிகா முன்னே செல்ல, மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல் பெண்ணவள் இதழ் தொட்ட கன்னத்தை தடவிக்கொண்டவன், இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற தீர்மானத்துடன் “ இந்த கல்யாணம் நான் வேணாம்னு சொல்ல இன்னொரு காரணம், அந்த பொண்ணு”, என்றான். “எந்த பொண்ணு?” என்று முன்னே சென்றவள் திருப்பி கேள்வியாய் பார்க்க, “ எனக்கு கவிதை அனுப்பிவைக்கிற பொண்ணு” என்றான் விதுரன்.
ஹனிகா நம்பாமல் புருவம் உயர்த்த “ உண்மையிலேயே ரொம்ப நாளா எனக்கு இந்த யோசனை இருக்கு. அந்த பொண்ணை கண்டுபிடிச்சு என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்கப்போறேன், நீ உன் பிடிவாதத்தை விட்டுடு” என்று உண்மை போலவே பேசினான் விதுரன்.
“ எதுக்கு தேடிப்போய் கண்டு பிடிக்கனும், உங்க கையில தான் போன் இருக்கே, அதுல கூப்பிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு, கேட்க வேண்டியது தான! ” என்று நம்பாத பாவனையில் ஹனிகா சீண்டிட, “ இல்ல எனக்கு எப்பவும் கவிதை மட்டும் தான் மெசேஜ் வரும் போன் பண்ணுனா பேசமாட்டாங்க. நானும் எத்தனையோ தடவை பேச முயற்சி பண்ணிருக்கேன், அவங்க ஒரு தடவை கூட பேசுனது இல்ல” என்று உண்மையில் நடந்ததை விதுரன் விவரிக்க, “இப்படி சொல்லி தப்பிக்க பாக்கிறீங்க நான் நம்பமாட்டேன். என் கண்ணு முன்னாடி போன் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுங்க. நான் பிரச்சனை பண்ணாம ஒதுங்கிக்கிறேன்” என்று ஹனிகா பிடிவாதம் பிடிக்க, எப்படியும் தன் அழைப்பை கவிதை அனுப்பும் பெண் தவிர்ப்பாள் என்ற முடிவுடன் அந்த எண்ணிற்கு விதுரன் தொடர்புகொள்ள அவனுக்கு முன் நின்றவள் மொபைல் மெதுவாய் பாடல் இசைத்து,
மாமனே உன்னை காணாம
வட்டியில் சோறும் உண்ணாம
பாவி நான் பருத்தி நாரா போனேனே
காகம் தான் கத்தி போனாலோ
கதவு தான் சத்தம் போட்டாலோ
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஒடக்கரையோரம் கத்தியே உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம் கத்தியே உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே.
யோசனையாய் பார்த்தபடி விதுரன் நிற்க அலைபேசியின் சிணுங்களை நிறுத்தி காதில் வைத்தவள், “ சொல்லுங்க கன்னக்குழி அழகா! என் கவிதையில மயங்கி என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?” என்றாள் ஹனிகா.
“ ஹனி!” என்று அதிர்ச்சியுடன் விதுரன் நிற்க மெதுவாய் அவனை நெருங்கியவள், “உங்களையே நினைச்சு இங்க ஒருத்தி உருகிட்டு இருக்கேன், நீங்க என்னன்னா இப்படி ஒருத்தி இருக்கிறதையே மறந்துட்டு ஊர் பக்கம் எட்டிக்கூட பார்க்காம இருந்தா என்ன அர்த்தம்! அதான் இப்படி ஒரு வழி கண்டுபிடிச்சு உங்கள என் வழிக்கு கொண்டுவர முயற்சி பண்ணுனேன், ஆனா நீங்க அதுக்கும் மசிஞ்சு குடுக்கல. அடுத்து என்ன திட்டம் போட்டு உங்கள என் பக்கம் இழுக்கலாம்னு யோசிக்கிறதுக்குள்ள நீங்களே வசமா வந்து மாட்டிட்டீங்க. இப்போ சொல்லுங்க. உங்களுக்கு அந்த கவிதை பொண்ணு வேணுமா, இல்ல இந்த ஹனி வேணுமா?” என்று கண்ணடித்து சிரித்தாள் ஹனிகா.
“ உன்கிட்ட இதை நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல ஹனி. எனக்கு தெரிஞ்ச ஹனி குழந்தைத்தனமா சேட்டை செய்வா. இப்படி சதி செய்யமாட்டா! என்னைய அடைய இன்னும் நீ என்னென்ன செய்வாயோன்னு நினைக்கும் போது அருவருப்பா இருக்கு ” என்று விதுரன் தான் கொண்ட ஏமாற்றத்தின் காரணமாக கோபமாய் வார்த்தை விட,
“ அருவருப்பா ?” என்று கோபம் தெறிக்கும் விழிகளுடன் முறைத்து நின்றவள், “எனக்கு தெரிஞ்ச என் விது மாமா அடுத்தவங்க உணர்வை மதிக்க தெரிஞ்சவங்க. யாரையும் காயப்படுத்த தெரியாதவங்க. அந்த மதிப்பும் மரியாதையும் இன்னும் இருக்கிறதுனால தான் என் காதலை உங்களுக்கு புரியவைக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன், இல்லன்னா நீங்களாச்சும் உங்க புடலங்கா காதலாச்சுன்னு போயிட்டே இருப்பேன்.” என்று சற்றும் குறையாத கோபத்துடன் “பசங்க அவங்க காதலை சொன்னா கெத்து, பொண்ணுங்க சொன்னா அருவருப்பு! ஆண்களுக்கு இருக்கிற உணர்வு தான பொண்ணுங்களுக்கு இருக்கு. நாங்க வெளிப்படையா பேசினா அவ தப்பானவ, காதலிக்க தகுதி இல்லாதவ. வெளிய பேசும் போது மட்டும் பொண்ணுங்க தைரியமா இருக்கனும் சுயமா முடிவு எடுக்கனும்னு பெண்ணியம் பேசி ஆயிரம் பாடம் எடுப்பீங்க, ஆனா உண்மையில அப்படி ஒருத்திய பார்த்தா ஒதுங்கி போயிடுவீங்க. குனிஞ்ச தலை நிமிராம தரைய பார்த்து நடக்குற பொண்ணு தான் பொண்டாட்டியா வரணும்னு எதிர்பார்ப்பீங்க!, ஏன்னா உங்களுக்குள்ள இருக்கிற ஆணாதிக்கம் அப்படி!” என்று பதிலடி கொடுத்தாள் ஹனிகா.
கோபத்தில் சற்று அதிகமாகவே பேசிவிட்டோம் என்று புரிய “ நீ தான் அதுன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ஹனி, அதான் சட்டுன்னு கோபத்துல வார்த்தை விட்டுட்டேன், சாரி டா” என்றிட, சற்று கலங்கிய விழிகளுடன், “ என் உணர்வுகளை காயப்படுத்தின உங்க கூட பேச எனக்கு விருப்பம் இல்ல மாமா” என்று விலகி செல்ல முயன்றாள் ஹனிகா.
அவள் கரம் பற்றி தடுத்து நிறுத்தியவன், “நான் சந்தியாவை அளவுக்கு அதிகமா காதலிக்கிறேன் ஹனி, அவ இருந்த இடத்தில வேற யாரையும் நினைக்க முடியல.” என்றவன் இன்னும் அவள் கோபமாய் நிற்க கண்டு “ நான் தான் அவசரப்பட்டு சொல்லிட்டேன்னு சாரி கேட்குறேன்ல”, என்று கண்களால் கெஞ்சிட, “நீங்க அவசரப்பட்டு சொன்ன வார்த்தை என் காதலை அவமானப்படுத்திடுச்சு. இந்த உலகத்தை விட்டுப் போன சந்தியா மேல நீங்க வச்சிருக்க காதலுக்கு கொஞ்சம் கூட சளைச்சது இல்ல நான் உங்க மேல வச்சிருக்கிற காதல். என் காதலை புரிஞ்சு எனக்கு வாழ்க்கை குடுங்கன்னு உங்கள கெஞ்சல. கெஞ்சி கேட்டு கிடைக்குறதுக்கு பேரு காதல் இல்ல, பிச்சை! எனக்கு நீங்க இரக்கப்பட்டு போடுற பிச்சை வேணாம். திரும்பவும் சொல்லுறேன், இந்த கல்யாணத்துக்காக நான் உங்களை கட்டாயப்படுத்தல. நீங்களும் என் காதலை கொச்சை படுத்தாதீங்க, உங்க விருப்பம் என்னவோ அது தான் நடக்கும்”, என்று நொடியும் தாமதியாது விலகி போனாள் ஹனிகா.
கோபமாய் செல்பவளை எப்படி சமாதனம் செய்வது என்று புரியாமல் கீழே வர, “ எங்க என் மருமக.. உன்கூட சேர்ந்து சாப்பிடுறேன்னு சொன்னா?” என்று தேன்மொழி ஆர்வமாய் வினவிட, “அவ கிளம்பிட்டா” என்ற விதுரனை குழப்பத்துடன் பார்த்தவர் “ஏதாவது கஷ்டப்படுத்துற மாதிரி சொல்லிட்டியா விதுரா” என்றார் வருத்தம் நிறைந்த குரலில், “சும்மா இந்த கல்யாணத்த பத்தி பேசிட்டு இருந்தேன், சட்டுன்னு கோபமா கிளம்பிட்டா” என்று உண்மையை மூடி மறைத்தான் விதுரன்.
“ கல்யாணத்தை பத்தி என்ன பேசுன?” என்ற அன்னையை கூர்ந்து கவனித்தபடி, “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொன்னேன்” என்றான்.
அதுவரை இருந்த மலர்ச்சி வடிந்தது போல முகம் வாடி நின்றவர், “ உனக்கு நீ சந்தியா மேல வைச்சிருந்த அன்பு பெரிசு. அதனால மத்தது எல்லாம் மட்டமா தெரியுது. உனக்காக எல்லா உறவையும் விட்டுட்டு சாகப்போனா. இதுக்கு மேலயும் அவ அன்பு உனக்கு புரியலனா உன்னை மாதிரி ஜடம் யாரும் இல்ல”, என்று பெற்ற பிள்ளை என்றும் பாராது சாடினார் தேன்மொழி.
“அம்மா என் நிலைமைய கொஞ்சம் புரிஞ்சு பேசுங்க”, என்று விதுரன் அவன் தரப்பை சொல்லத் துவங்க “ என்ன நிலைமை? உன்னைவிட பத்து வயசு சின்னவ, அது தான உன் நியாயம்? அந்த காலத்துல இதுக்கு மேல வயசு வித்தியாசம் இருந்தவங்க கூட கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழ்ந்திருக்காங்க, உன் பக்கத்து நியாயத்தை யோசிக்கிறயே உன்னை உயிரா நினைச்சுட்டு இருக்குற ஹனியை பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா? இல்ல, கடைசி வரைக்கும் பையன் இப்படியே காலத்தை ஓட்டிடுவானோன்னு கவலைப்படுற என்னை பத்தி யோசிச்சியா? உனக்கு உன் பிடிவாதம் தான் முக்கியம். கடைசி வரைக்கும் இப்படியே இரு. நானும் நம்ம பையனுக்கு ஒரு நல்லது நடக்காதான்னு ஏக்கத்துலயே காலத்தை முடிச்சுக்கிறேன்” என்று புடவை தலைப்பில் கண்ணீரை துடைத்த படி கூறிட எதையோ தீவிரமாய் யோசித்தபடி உணவை மறுத்து தனது அறைக்கு சென்று முடங்கினான் விதுரன்.
நெடு நேரமாய் எதையோ யோசித்துக் கொண்டிருந்தவன் அலைபேசி மெதுவாய் சிணுங்கிட தனது சிந்தனையை கலைத்தது யாரென்று பார்த்தவன், ‘ஹனி கோபமா போனாளே ஏதாவது தப்பா’ என்று அவசரமாய் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன், “சொல்லுங்க மாமா. அங்க எதுவும் பிரச்சனை இல்லையே!” என்று பதட்டமான குரலில் வினவிட, “ இங்க எந்த பிரச்சனையும் இல்ல, உங்க குரலை கேட்கும் போது தான் ஏதோ பிரச்சனைன்னு தோணுது”, என்று கணபதிநாதன் விசாரிக்க, “ பிரச்சனை ஒன்னும் இல்ல மாமா, இந்த கல்யாணத்தை பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்”, என்று விதுரன் காரணம் கூறிட, “நானும் அது சம்பந்தமா பேச தான் உங்கள கூப்பிட்டேன் மாப்பிள்ளை. அடுத்த வாரம் நடக்கப் போற நம்ம குலதெய்வ கோவில் திருவிழால உங்களுக்கும் ஹனிகாவுக்கும் நிச்சயத்தை முடிச்சுடலாம்னு யோசிக்கிறேன். உங்க விருப்பம் என்னன்னு சொன்னா நல்லாயிருக்கும்” என்று விதுரன் விருப்பத்தை விசாரித்தார் கணபதிநாதன்.
“ இதுல நான் சொல்ல என்ன இருக்கு, நீங்க அம்மா கிட்ட இதை பத்தி பேசிக்கோங்க”, என்றான் விதுரன். “அது இல்ல மாப்பிள்ள, ஒரு வார்த்தை நீ சரின்னு சொல்லிட்டா நிம்மதியா அடுத்த வேலைய கவனிப்பேன்”, என்றார் கணபதிநாதன் சற்று வற்புறுத்தலான குரலில்.
சில நொடி பேச்சின்றி அமைதியானவன், “எனக்கு சம்மதம். நீங்க ஏற்பாட்ட கவனிங்க” என்று சம்மதம் கூறி அழைப்பை துண்டித்து கட்டிலில் சரிந்தான் விதுரன்.
காதல் என்ற
வார்த்தை
மட்டும் அறிந்தவள்..
உன் கண்களில்
கரைந்து
காதலில் கலந்திட ..
தவிக்கிறேன்..
என் தவிப்பு தீர…
உன் தயக்கம் உடைத்து..
கரம் சேர்த்து
என்னுள் என்னவனாய்
கலந்திடு..