துணையான இளமானே..

1
துணையின் துவக்கம்…

பிரச்சனைகள்
நம்மை துரத்தும்போது..
தனிமையும்
ஒரு வரமே…
நமக்கு பிடித்தவர்கள்
அதை கொடுத்திடும்போது..
தனிமையும்
ஒரு சாபமே..

அன்புள்ள விதுரா…
“எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை காதலித்தாய்.. நான் உன்னிடம் காட்டிய பாராமுகத்திற்கும் இருமடங்கு காதலை திருப்பித்தந்தாய். நீ காட்டிய அன்புக்கு நான் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவள் விது. திருமணமான நாள் முதல் நீ எனக்கு சந்தோஷத்தை மட்டுமே தர முயற்சித்தாய்.. ஆனால் நான் உனக்கு நிரந்தரமான கஷ்டத்தை விட்டுச்செல்ல போகிறேன். என் முடிவை நீ எப்படி ஏற்றுக்கொள்வாய் என்று எனக்கு தெரியவில்லை, நாம் பிரியும் காலம் வந்துவிட்டது. நான் உன்னிடம் ஒரு உண்மையை மறைத்துவிட்டேன். அந்த உண்மையை களங்கமில்லாத காதலை மட்டும் சுமந்து நிற்கும் உன் கண்களை பார்த்து சொல்லும் தைரியம் எனக்கு கொஞ்சம் கூட இல்லை. அதனால் தான் இப்படி ஒரு முடிவுக்கு வருகிறேன். உன்னிடம் இந்த கடிதம் வந்து சேரும் முன் நான் நிரந்தரமாய் உன்னை விட்டு பிரிந்திருப்பேன்” , என்று வலிகள் தரும் வரிகளை கண்ணீர் சுமந்த விழிகளுடன் கடந்த ஐந்து வருடத்தில் பலமுறை படித்து பத்திரப்படுத்திவைத்த கடிதத்தை.. மீண்டும் ஒருமுறை வாசித்து அதை எழுதியவள் நினைவையும், வரிகள் சுமந்து நின்ற வலிகளையும்.. நெஞ்சில் நிறைத்துக்கொண்டு, ‘என்னை தனிமையில் தவிக்கவிட்டு போற அளவுக்கு நான் உனக்கு என்ன கொடுமை செஞ்சேன் தியா, உன் சம்மதத்தோடத்தான நம்ம கல்யாணம் நடந்தது.. அப்புறம் எதுக்கு என்னை விட்டுட்டு போன?’ என்று அவள் நினைவுகளை சுமந்து நின்ற இல்லம் வந்ததிலிருந்து அவள் எண்ணத்தில் மட்டுமே உழண்டுகொண்டிருந்த விதுரன், ‘இங்க வந்ததுல இருந்து உன் நியாபகம் அதிகமா வருது தியா! உன்னை இழந்த வலி தாங்கமுடியல, வெளிய என் அம்மாவுக்காக சிரிச்சாலும் உள்ளுக்குள்ள ஒவ்வொரு நாளும் உன் நினைவால செத்துட்டு இருக்கேன்’, என்று சிலகாலம் தன்னுடன் மனைவியாய் வாழ்ந்து சென்ற சந்தியாவிடம் மனதால் பேசிக்கொண்டான் விதுரன்.
“ விதுரா உள்ள என்ன செய்ற?… சீக்கிரம் கிளம்பு நம்ம வெங்கடேசன் மாமா மகள் கல்யாணத்துக்கு தேடி வந்து பத்திரிகை வைச்சாங்க, இவ்ளோ தூரம் வந்துட்டோம் போகாம இருந்தா நல்லா இருக்காது. ஒரு நடை போய் தலையை காட்டிட்டு வருவோம்…” என்று வேண்டுதலாய் கேட்டுக்கொண்டபடி தேன்மொழி விதுரன் அறைக்குள் நுழைந்திட, கண்ணீரில் நனைத்திருந்த கண் இமைகளை துடைத்து கவலையை மறைத்து தன் அன்னையை பார்த்து ஏளனமாய் புன்னகை செய்தவன், “தேடி வந்துன்னு சொல்லாதீங்க, நாம இந்த ஊருக்கு வந்தது தெரிஞ்சுன்னு சொல்லுங்க, இந்த ஐஞ்சு வருசமா நாம எங்க இருக்கோம் எப்படி இருக்கோம்னு நினைச்சுக்கூட பார்க்காதவங்களுக்கு ஊருக்குள்ள திரும்பி வந்தது தெரிஞ்சதும் திடீர்னு அக்கறை வந்திடுச்சா?” என்று உறவினர்கள் செயலில் உண்டான விரக்தியில் பேசினான் விதுரன்.
“என்ன விதுரா? இப்படி பேசுற, அப்போ இருந்த சூழ்நிலை அப்படி, திடீர்னு அந்த மாதிரி நடக்கும்னு யாரும் நினைச்சுக்கூட பார்த்திருக்கமாட்டாங்க, அவங்க தூக்கி வளர்த்த பொண்ணுக்கு நடந்ததை பொறுத்துக்க முடியாம கோபப்பட்டுட்டாங்க, அதுக்காக அதையே மனசுல வைச்சுட்டு சொந்தபந்தத்தை ஒதுக்கமுடியமா என்ன?” என்று உறவினர்களுக்கு பரிந்துவந்தார் தேன்மொழி.
“தியா அவங்க தூக்கி வளர்த்த பொண்ணுன்னா! நானும் அவங்க கண்ணு முன்னாடி இதே சொந்தபந்தம் பார்க்க வளர்ந்த பையன் தான! என் மேல அபாண்டமா பழிபோடும்போது மட்டும் அவங்களோட நியாயமான கோபம் எங்க போச்சு?, இத்தனைக்கும் அவங்க எல்லாத்தையும் விட எனக்கு தான் இழப்பு அதிகம், சந்தியா போனதும் அவங்களாவது ஒரு உறவை தான் இழந்துட்டு நின்னாங்க.. நான் என் வாழ்க்கையும் சேர்த்து இழந்துட்டு நின்னேன். என் தியாவை இழந்துட்டு நான் என்ன சந்தோஷமாவா இருந்தேன்.. நான் அனுபவிக்கிற கஷ்டத்தை நேர்ல பார்த்தபிறகும் கூட உண்மை என்னன்னு தெரியாம என் நிலைமைய புரிஞ்சுக்க முயற்சி பண்ணாம, வார்த்தையாலேயே கொன்னாங்க… இவங்களோட மறுபடியும் ஒட்டி உறவாடச் சொல்லுறீங்களா?” என்று அன்று உண்டான வலியை மீண்டும் உணர்ந்தவனாய் ஆதங்கத்துடன் பேசினான் விதுரன்.
“நம்ம வலியையும் வேதனையையும் அடுத்தவங்க புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறத விட பெரிய முட்டாள்தனம் இந்த உலகத்துல வேற எதுவும் இல்ல. எவ்வளோ பாசமானவங்களா இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல நம்ம வலிய அவங்களால உணரமுடியாது. நான் உன் அம்மா தான், நீ அனுபவிக்கிற கஷ்டம் புரியுது, அதுக்காக எல்லா நேரமும் உனக்கு சாதகமா பேசணும்னு எதிர்பார்க்காத, ஒருநிலைக்கு மேல எல்லா வலியையும் கஷ்டத்தையும் மறந்து அதை கடந்து வெளிய வந்துதான் ஆகணும், அதுதான் உலக நியதி, நான் உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன் புரிஞ்சுக்கோ”, என்று சித்தாந்தம் பேசினார் தேன்மொழி.

“நீங்க சொல்லுறது சரிதான், ஒருத்தவங்க வலிய அடுத்தவங்களால புரிஞ்சிக்கமுடியாது தான், அதனால்தான் தியாவும் அவள் இல்லாத வாழ்க்கை எனக்கு வலிக்கும்னு புரிஞ்சிக்காம போயிட்டா”, என்று எங்கோ வெறித்து வெறுப்புடன் பேசினான் விதுரன்.
மகனின் வெறுமை நிறைந்த குரலில் இருந்த வலியின் காரணம் புரிந்து அதுவரை இருந்த மனோதிடம் மறைந்திட, “கல்யாணம் ஆயிரங்காலத்து பயிர்னு சொல்லுவாங்க… உன் வாழ்க்கையில அந்தப் பயிர் முளைக்கும் முன்னாடியே கருகிப்போச்சே!. யாராவது அவங்க பிள்ளைங்க கல்யாணத்தை பத்திப்பேசினாலே.. வாழத் துவங்குறதுக்கு முன்னாடியே வீணாப்போன உன் கல்யாண வாழ்கை தான் நினைவுக்கு வருது. நான் இருக்குற காலத்துலயே உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழுறத பார்க்க மனசு ஏங்குது, பொண்ணு கேட்டு போற இடத்துல எல்லாம்.. உன் முதல் கல்யாணக்கதை பேசியே பொண்ணு தர யோசிக்கிறாங்க, கல்யாணம் முடிஞ்சு இரண்டே மாசத்துல விட்டு போனவள நினைச்சே உன் மிச்ச வாழ்க்கையும் முடிஞ்சுடுமோன்னு கலக்கமா இருக்கு”, என்று மகனின் கவலையை தன் மனதிலேற்றி புலம்பினார்.
தன் தனிமை கண்டு அன்னை வருந்துவதை தாங்கப்பொறுக்காமல்.. “ அம்மா இவ்ளோ நேரம் எனக்கு தைரியம் சொன்ன நீங்களே இப்போ கலங்குனா எப்படி?”, என்று அவரையும் மீறி துளிர்த்த கண்ணீரை ஆதரவாய் துடைத்த விதுரன், “நடந்து முடிஞ்சது பற்றி பேசி என்ன பிரயோஜனம்…? நாம கஷ்டப்படுறத பார்த்து போனவங்க திரும்பி வரப்போறாங்களா என்ன?.. அப்படி வருவாங்கன்னா சொல்லுங்க நானும் உங்க கூட சேர்ந்து ஒரு மூலையில உட்கார்ந்து அழுகுறேன்”, என்று அன்னை சொன்ன வார்த்தையையே வேறுவிதமாய் திருப்பி படித்தவன் அவர் கவலையை போக்கும் விதமாய், கன்னக்குழி விழ சிரித்திட.. மகனின் குழிவிழும் கன்னத்தை பற்றி பரிவுடன், “போனவங்க வரமாட்டாங்க, புதுசா வரலாம்ல! இந்த சிரிப்பை உன் முகத்துல நிரந்தரமா பிடிச்சுவைக்க அவளால முடியும்ல”, என்றவர் விதுரன் கோபமாய் முறைக்கவும், “சரி, சரி முறைக்காத, இனி இந்த பேச்சை எடுக்கல, நீயும் அம்மா கூட கிளம்பு, ஏற்கனவே லேட்.. சொந்த பந்தம் எல்லாரும் வந்திருப்பாங்க” என்றார் தேன்மொழி.
“ நான் உங்களையே போக வேணாம்னு சொல்லுறேன், நீங்க என்னையும் உங்க கூட கூப்பிட்டா என்ன அர்த்தம்?, அங்க எல்லாரும் நம்மகிட்ட எப்படி நடந்துக்குவாங்கன்னு தெரியாது. வீணா மனக்கஷ்டம் எதுக்கு?. இத்தனை நாள் எப்படி ஒதுங்கி இருந்தோமோ அதேமாதிரி இனிமேலும் இருந்துக்கலாம் அம்மா. அது தான் எல்லாருக்கும் நல்லது”, என்றான் விதுரன்.
“இப்படியே எல்லாத்தையும் விட்டு எத்தனை நாள் ஓட முடியும்னு நினைக்கிற விதுரா? யார் கண்ணுலயும் படாம இப்படி மறைஞ்சு இருக்கிறதுனால நடந்தது இல்லைன்னு ஆகிடுமா? இல்ல, எல்லாரும் எல்லாத்தையும் மறந்திடுவாங்கன்னு நினைக்கிறாயா?” என்று தேன்மொழி மகனை சரிக்கட்ட முயல.. “சிலர் குற்றவாளி மாதிரியும், சிலர் பாவமேன்னு இரக்கப்படுறதையும் பார்க்கும்போது என்னமோ மாதிரி இருக்கு. நான் எங்கேயும் வரல.. நீங்களும் போக வேண்டாம். நாம இங்க எந்த வேலைக்கு வந்தோமோ அந்த வேலைய முடிச்சுட்டு இன்னும் இரண்டு நாளுல யாருக்கும் தொந்தரவு தராம வந்ததும் தெரியாம போனதும் தெரியாம கிளம்பிடுவோம்”, என்று தீர்மானமாக கூறினான் விதுரன்.
“ நடந்ததுல உன் தப்பு என்ன இருக்கு? ”, என்றவர் மகன் கண்களில் தேங்கிய வலியை கண்டு.. பேச்சு செல்லும் விதம் சரியில்லை என்று உணர்ந்து, “இது நான் பிறந்து வளர்ந்த ஊர், என் சொந்த பந்தம் எல்லாம் இங்கதான் இருக்கு, இதைவிட்டு இத்தனை நாள் மறைஞ்சு வாழ்ந்ததை தப்புன்னு நினைச்சுட்டு இருக்கேன், இதுல நீ வந்த சுவடே தெரியாம திருடன் மாதிரி கிளம்பனும்னு சொல்ற…., அதெல்லாம் முடியாது! நாம எந்த தப்பும் பண்ணல, நாம ஒளிஞ்சு ஓடவேண்டிய அவசியமும் இல்ல, நான் இந்த கல்யாண வீட்டுக்குப் போகப்போறேன், விட்டுப்போன சொந்த பந்தத்தை மறுபடியும் பார்க்கப்போறேன் நீயும் என்கூட வர!”, என்று அன்னையாய் குரலை உயர்த்தி கட்டளையிட்டார் தேன்மொழி.
“ நீங்க இப்படி சின்னக்குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா உங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்கவே மாட்டேன். நான் மட்டும் வந்து காதும் காதும் வச்ச மாதிரி விஷயத்தை முடிச்சிட்டு கிளம்பி இருப்பேன்”, என்று விதுரன் அலுத்துக்கொள்ள.. “டேய் கண்ணா! ஒரு தடவை அம்மா பேச்சை கேளுமா, எனக்கு என்னமோ இந்த கல்யாணத்துக்கு போறதால உன் வாழ்க்கையில் ஏதோ ஒரு நல்லது நடக்கும்னு தோணுது, அந்த காலத்துல ஒரு கல்யாணத்துல வைச்சுத்தான் நிறைய கல்யாணத்தை பேசி முடிப்பாங்க… அப்படி ஏதாவது உன் வாழ்க்கையில் நடக்கலாம்ல, நம்ம சொந்த பந்தம் எல்லாம் இந்த கல்யாணத்துக்கு வருவாங்க, ஒருவேளை நம்ம நேரம் நல்லா இருந்து இந்த கல்யாணத்துல உனக்கு ஒரு துணை கிடைச்சா அதை விட வேற எனக்கு என்ன வேணும் கண்ணா,” என்று கனவுகளை சுமந்த விழிகளுடன் பேசினார் தேன்மொழி.
“வரவர உங்க இம்சை தாங்க முடியல, எப்போ ஆரம்பிச்சாலும் கல்யாணத்தைப் பத்தியே பேசி கடுப்பேத்துறீங்க!, இப்போ என் வாழ்க்கையில என்ன குறை ? நல்ல வேலை கை நிறைய வருமானம், இருக்க சொந்தவீடு வேளாவேளைக்கு விதவிதமா வாய்க்கு ருசியாய் சமைச்சுப்போட நீங்க, இது போதாதா ஒரு மனுசன் நிம்மதியா வாழுறதுக்கு? இதுக்கு மேல என்ன வேணும்? இன்னொரு கல்யாணம் பத்தி பேசி தொந்தரவு பண்ணாதீங்க”, என்று பிடி கொடுக்காமல் பேசினான் விதுரன்.
“கல்யாண பேச்சு எடுத்தாலே இப்படி ஏதாவது வக்கனையா பேசி என் வாயை அடைச்சுடு.… நீ சொல்லுற மாதிரி நிம்மதியான வாழ்க்கைக்கு இதுமட்டும் போதும்னு நினைச்சா… மத்தவங்க எதுக்கு கல்யாணம் பண்ணி… குடும்பத்துக்கு அழகழகான வாரிசைப் பெத்துக்கிறாங்க… வசதியா வாழ்ந்தோமா நல்லவிதமா உயிரைவிட்டோமான்னு உன்னை மாதிரியே எல்லாரும் வாழத்தொடங்கிட்டா.. உலகத்துல பாதிபேர் தனி மரமா தான் நிப்பாங்க… வாழ்க்கைத்துணை இழந்து தனிமரமா நிற்கவேண்டிய வயசா உனக்கு? இந்த காலத்து பசங்க முதல் கல்யாணமே முப்பது வயசுக்குமேல தான் பண்ணிக்கிறாங்க.. ஒருவேளை ஜோசியத்துல சொன்ன மாதிரியே உனக்கும் முப்பது வயசுக்கு மேல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா உன் வாழ்க்கையும் நல்லா இருந்திருக்குமோ என்னவோ..! வீட்டுக்கு ஒரே பையன், துணைக்கு உன் அப்பாவும் இல்ல… நான் நல்லா இருக்கும்போதே உனக்கு காலகாலத்துல நல்லது செஞ்சுவச்சுட்டா பாரம் குறையும், வந்தவ உன்னை கவனிச்சுக்குவாள்னு நினைச்சு.. பார்க்குற ஜோசியர் சொன்ன பரிகாரம் எல்லாம் செஞ்சு…. இருபத்தியஞ்சு வயசுலேயே.. அவசரஅவசரமா என் அண்ணன் மகளை உனக்கு கல்யாணம் பண்ணிவச்சு இப்படி உன்ன அனாதையா நிற்க வைச்சுட்டேன். வந்தவ சும்மாவா போனா? உன் வாழ்க்கையை சேர்த்து அழிச்சுட்டுல போயிட்டா!” என்று வேதனையில் தேன்மொழி புலம்பிக்கொண்டே சென்றிட, ஆதரவாய் அவள் தோளில் கைபோட்டு… “மனிதனுக்கு பலவீனமே அவன் கண்ணீர் தான்.. இது எனக்கு சொல்லிக்கொடுத்ததே நீங்கதான் இப்போ நீங்களே மனசு ஒடிஞ்சு அழலாமா?“ என்று ஆறுதலாய் பேசினான்.
கண்ணீரை துடைத்துக்கொண்டு.. “ஏற்கனவே கஷ்டத்துல இருக்குற நீ என் கண்ணீரை பார்த்து இன்னும் அதிகமா கலங்கக்கூடாதுன்னு மனசை கல்லாக்கிக்கிட்டு உனக்கு ஆறுதல் சொல்லுறேன். எவ்ளோ பெரிய கல்லு மனசுக்காரியா இருந்தாலும் பெத்த பிள்ளை கலங்கி நிக்கிறத பார்த்தா எந்த தாய் மனசு கேட்கும்? அதான் என்னையும் மீறி சிலநேரத்துல இப்படி அழுது புலம்புறேன், ஒருவேளை என் புலம்பல் அந்த கடவுள் காதுலவிழுந்து என் மனக்குறை தீர்க்க உனக்கான ஒருத்தியை காட்டமாட்டாரான்னு ஒரு நப்பாசைதான்”, என்று தேன்மொழி கூறிட, “இப்படி நடக்காத விஷயங்களை பேசிக்கிட்டே இருந்தா.. நீங்கள் சொன்ன மாதிரியே அங்க கல்யாணம் முடிஞ்சு பிள்ளைக்கு பேர் வைச்சுடுவாங்க”, என்ற மகனை தேன்மொழி விசித்திரமாய் பார்த்திட, “என்ன அப்படிப் பாக்குறீங்க? சின்ன குழந்தை மாதிரி கல்யாண வீட்டுக்கு போகணும், சொந்தபந்தத்த பாக்கணும்னு கண்ணை கசக்கி அழுதுட்டு இப்போ இப்படி பார்த்தா என்ன அர்த்தம்? இந்த ஒருதடவை தான்.. இனி இந்த மாதிரி அழுது பிடிவாதம் பிடிக்கக்கூடாது”, என்று என்னவோ கல்யாணத்துக்கு செல்வதற்காகவே கண்ணீர்விட்டது போல சிறு கண்டிப்புடன் கூறினான்.
அன்னை முகத்தில் உண்டான புன்னகையை கண்டு, ‘உங்க முகத்துல இப்போ நிறைந்திருக்கிற சந்தோசம் கல்யாண வீட்டுக்குப் போனா கலைஞ்சு போயிடும்னு பயமா இருக்கு அம்மா’ என்று தனக்குள் கூறிக்கொண்டு, “அங்கே யாராவது ஒரு மாதிரி பார்த்தாலோ பேசினாலோ உடனே கிளம்பிடுவேன், அதற்கு மேல் அங்கே இருக்கமாட்டேன்”, என்று ஒரு கட்டாய நிபந்தனையுடன் திருமண விழாவிற்கு உடன் வர சம்மதம் தெரிவித்தான் விதுரன்.
நாளை திருமணம் என்ற நிலையில் இன்று நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தின் வாசலில் கார் வந்து நின்றதும்… தன்னை சரிப்படுத்திக்கொண்டு கீழே இறங்கிய தேன்மொழியை கண்டதும் அவரின் வயதை ஒத்த உறவு பெண்கள் சந்தோசமாய் வரவேற்றிட… தன் சோகங்களை பின்தள்ளிவிட்டு முகமலர்ச்சியுடன் அவர்களுடன் இணைந்து கொண்டார் தேன்மொழி.
“வா தேன்மொழி, உன்னை பார்த்து எத்தனை நாள் ஆச்சு… கடைசியா நம்ம மாதவன் கல்யாணத்துல பார்த்தது” என்று ஒரு பெண்மணி அங்கலாய்த்துக் கொள்ள… “பாவம் அவளும் என்ன செய்வா? மகனுக்கு ஆசையாசையா ஊரையே கூட்டி கல்யாணம் பண்ணிவைச்சு… அவங்க சந்தோஷமா வாழுறத பார்க்கணும்னு கனவு கண்டா! ஆனா நடந்த கதையே வேற இல்லையா! வந்த மகராசி வாழ வழியில்லாம பாதியிலேயே போய்சேர்ந்துட்டா.. போனவ சும்மா போனாளா! பிள்ளை வாழ்க்கையையும் சேர்த்து கருக்கிட்டு போயிட்டா .. பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளை வாழ்க்கையை இழந்துட்டு நிக்கிறத பார்த்து நொந்து வீட்டுக்குள்ளயே முடங்கி கிடந்தவ இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் வெளியில தலைய காட்டுறா..” என்று குத்தலாய் கூறியவர் அதற்கு நேரெதிர் உருவமாய் முகத்தில் புன்னகை நிறுத்தி, “தீடீர்னு அப்படி ஒரு சம்பவம் நடக்கவும் பையனோட ஊரைவிட்டு போனவள அடுத்து இப்போ தான் பார்க்கிறோம்.. இப்போவாது ஊருக்கு வரணும் தோனுச்சே”, என்று உச்சுக் கொட்டி இரக்கம் காட்டி பேசியவர் அடுத்தநொடி… “ஆனா இத்தனை வருஷம் வராதவ திடீர்னு ஊருக்குள்ள ஒரு விசேஷத்துக்கு வந்திருக்கேனா காரணம் இல்லாமல் இருக்காதே..! உன் பையன் இரண்டாவது கல்யாணத்துக்கு இன்னொரு அப்பாவி குடும்பம் மாட்டுச்சா? இல்ல, நம்ம சொந்தத்துல இன்னொரு இளிச்சவாய் குடும்பத்தை தேடி வந்தாயா?, அப்படி நினைப்போட இந்தப்பக்கம் வந்திருந்தா அந்த எண்ணத்தை இப்பவே மாத்திக்க, இந்த ஊருல உன் அண்ணன் வார்த்தை மீறி எதுவும் நடக்காது, எவனும் பொண்ணு தரமாட்டான்”, என்று குத்தலாய் பேசினார் அந்த பெண்மணி.
முகம் வாடி நின்ற தேன்மொழி அருகில் வந்த விதுரன், “அடடா வாணி அத்தை.. உங்கள பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு.. கடைசியாக எங்க கல்யாணத்துல உங்க பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டு என் மாமா மகள கட்டிக்கிட்டேன்னு கண்ண கசக்கிட்டு சண்டை போட்டு போனீங்களே அப்போ பார்த்தது! ஆமா, உங்க பொண்ணு கூட கல்யாணமான ஆறு மாசத்திலயே அவன் கூட வாழமாட்டேன்னு உங்க வீட்டுக்கு திரும்ப வந்துட்டாளாமே , அது உண்மையா? பொண்ணை பெத்து செல்லம் கொட்டி வளர்த்தா மட்டும் போதாது.. பெரியவங்கள எப்படி மதிக்கணும்… மத்தவங்கள எப்படி அனுசரிச்சு போகணும்… அடுத்தவங்க மனசு காயப்படாம எப்படி பேசணும்னு கூட கத்துக்கொடுக்கணும் அத்தை. அது சரி உங்களுக்கே தெரியாத ஒரு விஷயத்தை எப்படி உங்க பொண்ணுக்கு கத்துக்கொடுப்பீங்க!.. இத்தனை வயசு ஆகுது உங்களுக்கே இன்னும் அடுத்தவங்ககிட்ட பேசுற விதம் தெரியலையே…!, உங்க பொண்ணுக்கு மட்டும் எப்படி தெரியும்?”, என்று அவரைப்போலவே பதில் தந்து, தன் அன்னையை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
“ இந்த மாதிரி பேச்சு கேக்க கூடாதுன்னு தான் எந்த வீட்டு பங்ஷனுக்கும் போகாம ஒதுங்கியே இருக்கலாம்னு சொன்னேன்… என் பேச்சை எங்க கேக்குறீங்க?.. இப்போ கூட ஒன்னும் கெட்டுப்போகல, இப்படியே திரும்பிடலாம்”, என்று விதுரன் மெதுவாய் கடிந்தபடி வாயில் புறம் திரும்பிட… அவன் கரம் பற்றி தடுத்தவர், “இன்னும் எத்தனை நாளைக்கு தான்… ஊர் என்ன நினைக்கும்னு பயந்து ஒதுங்கியே இருக்கிறது… யாரு என்ன வேணாலும் பேசிட்டு போகட்டும், எனக்கு என் பையன பத்தி தெரியும்… உன் நல்ல மனசுக்கு கண்டிப்பா நல்லது நடக்கும்”, என்று மகனின் உரிமையான கோபத்தையும் பெருந்தன்மையாய் ஏற்றார் தேன்மொழி.
“கட்டுன பொண்டாட்டி கூட சந்தோசமா வாழத்தெரியாதவன் எல்லாம் எனக்கு பாடம் சொல்ல வந்துட்டான். எல்லாம் என் நேரம், என்ன பேச்சு பேசிட்டு போறான்னு பாருங்களேன், கொஞ்சம் கூட மரியாதை இல்லாம… பெரியவங்கள மதிக்கிறத பத்தி இவன் எனக்கு சொல்லுறான், ஒரு வார்த்தை கூடக்குறைய பேசிட்டோம், அதுக்காக நம்மளையே இந்த பேச்சு பேசுறான். கூட வாழ வந்தவளையும் சும்மாவா விட்டு வைச்சுருப்பான், அவகிட்டயும் குத்தலா ஏதாவது பேசியிருப்பான்… பொறுக்கமுடியாத ரோஷக்காரி ஒரேயடியா போய் சேர்ந்துட்டா…” என்று தன்னை கண்டித்து சென்றவன் மீது உண்டான கோபத்தில் சுற்றி இருந்தவர்களிடம் கடுமையாக விமர்சித்தார் வாணி.
“நீ சொல்றது தான் உண்மையா இருக்கும், பார்த்தாலே தெரியல சரியான திமிர் பிடிச்சவன்னு, பாவம் அந்த பொண்ணு இவன்கிட்ட என்ன பாடுபட்டாளோ! ஒருநிலைக்கு மேல பொறுத்துக்க முடியாம போயிட்டா!”, என்று இல்லாமல் போனவளுக்கு இரக்கப்பட்டு இருப்பவனை இழிவுபடுத்திட அதற்கும் ஆமாம் போட்டனர் சில பெண்கள்.
மண்டபத்தினுள் நுழைந்த தேன்மொழியை கண்டதும்.. மகிழ்ச்சியுடன் ஆர்வமாய் வந்து வரவேற்றனர் திருமண வீட்டார். இன்முகமாய் வரவேற்றவர்களை கண்டு மென்புன்னகை சிந்தி நின்ற விதுரனை அனுதாபமாய் பார்த்தனர் நெருங்கிய உறவினர். தன்னை கண்டவர் முகத்தில் உண்டான அனுதாப அலைகளை கண்டு.. “நான் அந்த பக்கம் இருக்கேன், நீங்க கிளம்பும் போது கூப்பிடுங்க வரேன்”, என்று அங்கிருக்க பிடிக்காமல் மற்றவர்கள் பார்வையில் அதிகம்படாத ஓரமான இடத்திற்கு சென்று அமைதியாய் தன் மொபைலை எடுத்து அதில் எதையோ ஆர்வமாய் பார்த்தபடி சுற்றயுள்ள எதையும் கவனியாது முழ்கிப்போனான் விதுரன்.