குழந்தைகளை தத்தெடுக்க போவதாக பார்த்தீபன் கூறியதால் அடுத்த நாளே கார்த்திகேயனும், கயல்விழியும் கோயம்புத்தூர் கிளம்பி சென்று கொண்டிருந்தனர்.
தத்தெடுக்கும் நாளன்று காலையில் விமானத்தில் சென்றிருக்கலாம். கல்லூரி செல்லும் காலத்தில் காதலிக்கும் பொழுது ஆசையாய் லோங் ட்ரைவ் செல்ல வேண்டும் என்று தனது ஆசைகளில் ஒன்றாக கயல்விழி கூறியது ஞாபகத்தில் வரவே, சென்னையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி காரில் செல்லலாம். அதுவும் நாளை செல்லலாம் என்று கயல்விழியிடம் கூறினான் கார்த்திகேயன்.
இவனால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் சட்டென்று யோசிக்க முடிகிறது. சற்று முன் தான் ஆதங்கமாக பேசினான். இதோ இப்பொழுது காதலாக பேசுகிறான் என்று அவனை பார்த்த கயல்விழிக்கு வார்த்தையே வரவில்லை. மெதுவாக தலையசைத்து தனது சம்மதத்தை தெரிவித்தவளின் கண்களுக்குள் கார்த்திகேயன் பேசியது வந்து நின்றது.
கார்த்திகேயன் நினைத்தது போல் கயல்விழி அடுத்து பேசியதே அவர்களது திருமணத்தை பற்றியும் அவர்கள் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை பற்றியும்.
“என் மேல் அனுதாபப்பட்டு பொய் சொல்லி உங்க அப்பா அம்மாவ சம்மதிக்க வச்சி, என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட. என்ன போல ஒருத்தியை கல்யாணம் பண்ணி என்ன சந்தோஷத்த கண்ட கார்த்தி? என்னால உனக்கு நிம்மதியும் போச்சு. என்ன இப்படியே விட்டுடேன் கார்த்தி. நீ வேற கல்யாணம் பண்ணி சந்தோஷமா இரு. எனக்கு பயமா இருக்கு. ரொம்ப பயமா இருக்கு. நடந்தது எதையுமே என்னால மறக்க முடியல. என்னால உனக்கு எந்த சந்தோஷத்தையும் கொடுக்க முடியாது. கார்த்தி ப்ளீஸ் என்ன விட்டுடு” அவன் இல்லை என்றால் அவளது உலகமே இருண்டு விடும் என்று தெரிந்த பொழுதும், என்னவோ பல நாள் வாழ்ந்து அனுபவப்பட்டவள் போல் அச்சத்தின் உச்சத்தில் நின்று அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் கயல்விழி.
நடந்த சம்பவத்துக்கு பின் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்ற கயல்விழிக்கு மருத்துவர் கூறியது. “உனக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையுமில்லை. தாம்பத்தியத்தில் ஈடுபடுவதிலும் எந்த சிக்கலுமில்லை. நீதான் நடந்த சம்பவத்தை மறந்து, அதிலிருந்து வெளியே வந்து உன் மனதுக்கு பிடித்தவனை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ வேண்டும்”
உடம்பில் உயிரிருக்கும் வரை வாழ வேண்டுமே. அதற்காக தன்னை தேற்றுக் கொண்டு விருப்பமான துறையில் கல்வி கற்று வேலையிலும் சேர்ந்திருந்தாள்.
திருமணம். நடந்த சம்பவம் சதா இம்சை செய்ய, திருமணம் என்ற ஒன்றை கனவிலும் நினைத்துப் பார்க்க அஞ்சினாள்.
கார்த்திகேயன் காதல் கணவன். இன்று அவளை புரிந்து நடந்து கொள்பவன். அவளுக்காக எதையும் செய்ய துடிப்பவன். அவனது ஆசைகள் தூண்டப்பட்ட நேரத்தில், இவளால் அவனது இச்சைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போய்விட்டால் ஒருநாள் பொறுமையை இழந்து, கோபத்தில் “நீ மாசு பட்டவள். என்னை விட்டு சென்றவள். அதனால் தான் உனக்கு இந்த நிலைமை” என்று கூறி விட்டால் தாங்குமா? அவளது சிறு இதயம்.
அவன் வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தையை கேட்பதைவிட தான் இறந்து விடுவதே மேல்.
அவளுக்கு உதவி செய்ய வேண்டும். அவள் தன்னோடு இருக்க வேண்டும் என்று கார்த்திகேயன் கயல்விழியை திருமணம் செய்திருக்க, அவன் அறியாமலேயே பாறாங்கல் சைசில் அவள் நெஞ்சில் அச்சத்தையே விதைத்திருந்தான். அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த அச்சம் அவளது தொண்டை குழியில் வந்து அடிக்கும். உடல் நடுங்கும். என்ன செய்ய வேண்டும் என்று கூட அவளுக்கு புரியவில்லை.
நடந்த சம்பவத்தால் தன்னால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது. கார்த்திகேயனை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியாது என்ற அச்சம் மேலோங்கி இருக்கவே, கயல்விழி இவ்வாறு பேசலானாள்.
அவளை பேச விட்டு கார்த்திகேயன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசினால் தானே அவள் மனதில் என்ன இருக்கிறது என்று வெளியே வரும்.
தன்னை சமாதானப்படுத்த கூட இவனுக்கு தோணவில்லையா? தான் கூறியதில் உண்மை இருக்கிறது என்பதினால் தான் அமைதியாக இருக்கிறான் என்று அவனை பார்த்தவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.
அவளது இன்ப துன்பம், ஆதி அந்தம் எல்லாமே அவன் தானே அதை அவள் புரிந்து கொண்டிருக்கிறாளா? தெரியவில்லை புரிந்தும் புரியாமலும் இருக்கிறாளா? தெரியவில்லை. அவனை விட்டு விலக நினைப்பவளுக்கு அவன் இல்லாமல் இனி ஒரு நொடி கூட நகராது என்றும் தெரியவில்லை.
தன்னை விட்டு விடுமாறு கூறுபவள், அவன் அவளை விட்டு விட்டால் அதற்கும் குற்றம் கூறுவாளே தவிர சந்தோஷமடைய மாட்டாள். அதையும் அவள் உணர்ந்தாளில்லை. உணர்ந்து இருந்தால் இவ்வாறு எல்லாம் பேசி இருப்பாளா?
அவ்வளவு நேரமும் ஆவேசமாக பேசியவள் அழ ஆரம்பிக்கவும் அதட்டினான் கார்த்திகேயன்.
“இப்போ எதுக்கு கண்ண கசக்குற? தூசி போயிருச்சா? இவ்வளவு நேரமும் நான் வேணாம் என்று தானே பேசின. இல்ல இல்ல எனக்கு நீ வேணாம் என்று பேசின”
அவன் பேசியதை கேட்டு சற்றென்று அழுகையை நிறுத்தியவள் அவன் முகம் பார்க்க அவன் முகமோ எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை.
“நான்தான் அப்போல இருந்து சொல்லுறேனே, நீ இல்லாத என் வாழ்க்கையே என்னால யோசிச்சு பார்க்க முடியாது என்று. நீ என் கூட இருந்தா போதும் உன்கிட்ட இருந்து நான் எதையுமே எதிர்பார்க்க மாட்டேன். எனக்கு தலையில அடிபட்டதும் எனக்கு ஏதோ ஆயிருச்சு என்று பயந்து தானே என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன. உண்மையிலேயே எனக்கு ஏதாவது ஆச்சுன்னா தான் நீ என்கூட இருப்பியா என்று கேட்க, தாவி வந்து அவன் வாயை தன் கையால் பொத்தி இருந்தாள் கயல்விழி.
“பேச்சுக்கு கூட இப்படி சொல்லாத கார்த்தி” பல வருடங்களுக்கு முன் கார்த்திகேயனின் காதலி கயல்விழியாக மாறி அவனிடம் யாசிக்கலானாள்.
அவளின் முகபாவனையை படித்தவனின் மனமும் சட்டென்று கல்லூரி நாட்களுக்கு பயணித்து சென்று வந்தது. அவளின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் அவனின் இதயத்தில் காதல் ஊற்றெடுக்க, அவளை அள்ளிப் பருகும் ஆவல் எட்டிப் பார்க்கவே அவள் முகம் நோக்கி குனிந்தவன், அவள் விழிகளை விரிக்கவும், அவள் முகத்தில் விழுந்திருந்த முடிகளை ஒதுக்கி விட்டான்.
“நான் திரும்ப இப்படி பேசுறதும், பேசாம இருக்கிறதும் உன் கையில தான் இருக்க கயல். எனக்கு நீ வேணும். எந்த சூழ்நிலையிலும் நீ வேணும். திரும்ப நீ இப்படி பேசினா, உன் விருப்பப்படி உன்ன விட்டுடுவேன். விட்டுட்டு நான் கண்கானாத இடத்துக்குப் போயிடுவேன்” என்று மிரட்டினான்.
ஆம் மிரட்டத் தான் செய்தான். தீயென்றால் சுட்டுவிடுமா? கயல் என்று அவளை சமாதானப்படுத்த ஒன்றும் அவன் நினைக்கவில்லை. அவளுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூட சொன்னானில்லை. அவள் இருக்கும் மனநிலையில் அவளுக்கு ஆறுதலான வார்த்தைகள் அவசியம் தான். ஆனால் அவன் அவளுக்கு வார்த்தையால் ஆறுதல் கூறுவதை விட சைகையால் கூறுவது தான் இப்பொழுது செய்ய வேண்டியது. வார்த்தைகளால் ஆறுதல் சொன்னால் நிச்சயமாக அவள் சமாதானம் அடையாமல் அவனை படுத்திய எடுப்பதோடு அவனை விட்டு விலகுவதிலையே குறியாக இருப்பாள்.
அவன் இறந்து விடுவான் என்ற பொய்யை தொடர்ந்து கூறினால், அவள் அவளுடைய பிரச்சனைகளை மறந்து தன்னோடு இருப்பாள். ஆனால் மனவேதனையோடு இருப்பாள். அந்த மனவேதனையை அவளுக்கு கொடுக்கக் கூடாது என்று தான் கார்த்திகேயன் உண்மையை கூறி இருந்தான்.
அதை புரிந்து கொள்ளாத அவளோ, தன்னால் அவனுக்கு சந்தோஷத்தை கொடுக்க முடியாது என்று அவனை விட்டு விலகுவதாக பேசலானாள். அவளை சமாதானப்படுத்துவது கடினம் என்று உணர்ந்தமையால் மிரட்டலானான் கார்த்திகேயன்.
அது கொஞ்சம் வேலை செய்யவே, சமாதானமடைந்தவளிடம் தான் நாளை காலை கோயம்புத்தூர் செல்வதாக கூறியிருந்தான்.
“நாளைக்கேவா? காலையிலேயேவா? இங்க நிறைய வேலை இருக்கே” கொஞ்சம் ஆச்சரியமாகவும், கொஞ்சம் ஆதங்கமாகவும் கூறினாள். அவளுக்குத் தெரியும் அந்த முடிவு கூட அவளுக்காக எடுக்கப்பட்டது என்று. அதை அவன் வாயால் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் முகத்தை சுளித்தாள்.
“நான் வேலை செய்ய ஆரம்பிச்சதுல இருந்தே லீவே எடுக்கலடி” ஆதங்கமாக ஒலித்தது அவன் குரல். அவள் முறைத்த முறைப்பில் அது அவள் எதிர்பார்த்த பதில் இல்லை என்று புரிந்து கொண்டவன் புன்னகைத்தவாறே “நமக்கு இப்பதான் கல்யாணம் ஆயிருச்சு. இப்போதைக்கு ஹனிமூன் போக முடியாது. நீ லோங் ட்ரைவ் போலாம்னு சொன்னியே ஞாபகம் இருக்கா? நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு நாம நம்ம வாழ்க்கையை புதுசா ஆரம்பிக்கலாமா?” அந்த எல்லாத்திலும் அழுத்தத்தை கூட்டி இருந்தான் கார்த்திகேயன்.
அவளுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. அவனோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சந்தித்த ஒவ்வொரு நாட்களையும் அவளால் மறக்கத்தான் முடியுமா?
காதல். அவன் மேல் வைத்த காதலால் அவளால் அவனையும் மறக்க முடியவில்லை. அவனை சந்தித்த நாட்களையும் அவனோடு பேசியவற்றையோ அவளால் இன்றும் மறக்க முடியவில்லை. அவளின் நினைவில் நின்றவனுக்கு புன்னகையை மட்டும் பதிலாய் கொடுத்தாள் கயல்விழி.
இதோ சற்றுமுன் தன்னை விட்டு செல்லுமாறு அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவள், அவள் அவன் மீது வைத்திருக்கும் காதலை உணர்ந்து கொண்ட பின், அவளால் அவனை விட்டு செல்ல முடியாது என்று கோயமுத்தூர் செல்ல வேண்டும் என்று கூறியவாறு வேலைகளை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று புலம்பலானாள்.
அவள் புலம்பல்களை ரசித்தவாறே வேலைகளை முடித்த கார்த்திகேயன் கோயம்புத்தூர் செல்ல தயாராகி இருக்க, இதோ காலையிலே இருவரும் கோயம்புத்தூர் கிளம்பி இருந்தனர்.
நதியாக நீயும்
இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம்
வரை கரையாகிறேன்
இரவாக நீயும்
நிலவாக நானும் நீயிருக்கும்
நேரம் வரை உயிர் வாழ்கிறேன்
முதல் நாள் என் மனதில்
விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பார்க்கையிலே
வனமாய் மாறிவிட்டாய்
நாடி துடிப்போடு
நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்
என்னை தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா உன்னை
சீராட்டும் பொன் ஊஞ்சல்
நான் அல்லவா
உன்னை மழை என்பதா
இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று
நீ என்பதா உன்னை நான் என்பதா
என்னை தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா உன்னை
சீராட்டும் பொன் ஊஞ்சல்
நான் அல்லவா
கார் பயணத்தில் இருவரும் கல்லூரி காலத்துக்கு சென்றது மட்டுமல்லாது காதலர்களாகவே மாறியிருந்தனர்.
கார்த்திகேயன் அவளை அடிக்கடி வந்து சந்திப்பதில்லை. அப்படி வந்து சந்திக்கும் பொழுது அவன் என்னவெல்லாம் வாக்குறுதி கொடுத்தான் என்று கயல்விழி கூறி சிரிக்க, அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதாக மீண்டும் வாக்குறுதியளித்தான் கார்த்திகேயன்.
“நீ லாயரா இருக்குறதுக்கு பதிலா பேசாம பொலிட்டீசியனாகிடு கார்த்தி” மீண்டும் சிரித்தாள் கயல்விழி.
“எனக்கு இருக்கிற புகழுக்கு ஆனா என்ன தப்பு என்று தான் நானும் யோசிச்சுகிட்டு இருக்கேன்” நாடியை தடவியவாறு பதில் கிண்டல் செய்தான்.
“நாடு தாங்குமா?” என்று கேட்டவாறு அவன் தொடையில் அடிக்க, அவள் கையை பற்றி தன் கைக்குள் பொத்திக் கொண்டான்.
பேச்சு சுவாரஸ்யத்தில் கார்த்திகேயனின் அந்த செயல் கயல்விழியின் கவனத்தில் இல்லை.
“லைப்ரரி, காபி ஷாப் இந்த ரெண்டு இடத்தையும் தவிர சாருக்கு மீட் பண்ண வேற எந்த இடமும் கிடைக்கல. அது சரி சார் தான் மீட் பண்ண வரவே மாட்டாரு” அவனை கிண்டல் செய்தவள் “என் செயின் என்னாச்சு அதை திருப்பிக் கொடுக்கவே இல்ல” சட்டென்று ஞாபகம் வரவே கேட்டாள்.
வண்டி ஓட்டியவாறு அவளைப் பார்த்து “அதுதான் உன் கழுத்துல இருக்கே! அத பத்தி எதுக்கு இப்போ கேட்கிற?” சிரித்தான்.
அவளுடைய அன்னையின் தங்கமாலையை கழட்டிக் கொடுக்கும் பொழுது அது அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்று அவள் கூறி இருந்தாளே அதை அவளிடம் சேர்க்க மறப்பானா? அதைத்தான் தாலியாக மாற்றி உன் கழுத்தில் போட்டேன் என்றான்.
அவனை ஆச்சரியமாக பார்த்தவள் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அன்று மருத்துவமனையில் அவள் இருந்த மனநிலையில் எதையும் ஆராய்ச்சி செய்யவும் இல்லை. அதன்பின் ஆராயத் தோன்றவும் இல்லை. ஆராயும் சூழ்நிலையும் இல்லை. மனநிலையிலும் அவள் இல்லை. வலது கைதான் அவனிடம் சிறைப்பட்டிருந்ததே இடது கையால் மாலையை இழுத்துப் பிடித்தவாறே அவனை பார்த்து புன்னகை மட்டும் செய்தாள்.
“வேற ஒன்றும் கேட்க இல்லையா?” அவளைப் பார்த்து கேட்டுவிட்டு பாதையில் கவனமானான்.
“வேற என்ன கேட்க?” அவனிடமே கேட்டவள் “நான் கொடுத்த கிப்ட் எல்லாம் என்ன பண்ண? வீட்டுல எதையும் காணோம். என் போட்டோஸ் மட்டும் மாட்டி வச்சிருக்க” கிண்டலாக கேட்பது போல் கூறினாலும் அவனுக்குத் தன் மீது இருக்கும் காதலை உணர்ந்து கண்களில் பெருமிதத்தோடு கூறினாள்.
“ஆ மியூசியத்துல வெச்சிருக்கேன்” என்றவன் தன் கையோடு பொத்தி இருந்த அவள் கைக்கு முத்தம் வைத்திருந்தான்.
தன் காதலி தன்னோடு இவ்வாறெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்ற ஆனந்தத்தின் உச்சத்தில் முத்தமிட்டு விட்டான். அதை அவள் எவ்வாறு எடுத்துக் கொள்வாளோ? அவள் மனநிலையோ அவன் சிந்தனையில் இல்லை.
கயல்விழியின் உடலில் மெல்லிய அதிர்வலை பாய்ந்தது. உடல் சிலிர்த்தவள் நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்.
கார்த்திகேயன் தன்னிலையில் இல்லாமல் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு அவன் அதை வேண்டுமென்றே செய்தது போல் தெரியவில்லை. அவன் சந்தோஷத்தை கெடுக்க விரும்பாமல், அவனிடமிருந்து கையையும் பிரித்தெடுக்காமல், அவனை பார்த்து புன்னகைத்தவள் அமைதியாக அவன் பேசுவதை கேட்கலானாள்.
“என்ன அமைதியாகிட்ட? மியூசியத்துல வச்சிருக்கேன் என்று சொன்னதை நம்ப முடியலையா?” என்று சிரித்தான்.
“நீ வச்சாலும் வச்சிருப்ப. ஆனா அது எந்த மாதிரியான மியூசியம் என்று தான் எனக்குப் புரியல. அதை பத்தி தான் யோசிச்சேன்” தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு சமாளித்தாள்.
“வேற எங்க வீட்டுல தான்” என்று அவள் முகம் பார்த்தவன் மீண்டும் பாதையை நோக்க,
“வீட்டுலையா?” இவன் தன்னிடம் பொய் சொல்ல மாட்டானே என்ற பார்வையை அவன் முகத்தில் வீசியவள், வீட்டில் எங்கே வைத்திருந்தான் என்று யோசனையோடு அவனை பார்த்திருந்தாள்.
“என்ன கண்டுபிடிக்க முடியலையா? அவள் நல்ல மனநிலையில் இருந்திருந்தால் அவளே கேட்டிருப்பாள். அவள் தான் சுற்றுப்புற சூழலில் என்ன நடக்கிறது என்ற சிந்தனை எதுவுமே இல்லாமல் இருக்கிறாளே. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனத்தில் இல்லாமல் இருப்பவள், தன்னை சுற்றி என்ன இருக்கிறது என்று கவனத்தில் இருப்பாளா?
அவன் சொல்வதை ஊகிக்க கூட அவளால் முடியவில்லை. அவனை வெறித்து வெறித்து பார்க்கலானாள்.
அவளை மேலும் கஷ்டப்படுத்தாமல் புன்னகைத்தவன் “வீட்ல தான் வச்சிருக்கேன். வாசல்ல ஒரு ஷோகேஸ் இருக்கே, அதுல தான் இருக்கு. கிஃப்ட் மட்டுமில்ல, கிஃப்ட்ட சுத்தி கொடுத்து ரேப்பிங் பேப்பர் கூட கைவினை பொருட்களா செஞ்சு அங்கதான் வச்சிருக்கேன். நீ கவனிக்கலையா?” என்று கேட்டான்.
ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தவள் “என்ன” என்று கேட்டது மட்டுமல்லாது வாசலில் இருந்த பொருட்களை ஞாபகத்தில் கொண்டு வர முயன்றாள். அந்தோ பரிதாபம் அவளுக்கு அந்த வீட்டில் இருந்த எந்த பொருட்களுமே ஞாபகத்தில் வரவில்லை.
தான் இப்படி இருந்தால் சரியா? ஒரு வழக்கில் ஆதாரங்களை திரட்ட பல இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். அப்படி சென்ற இடத்தில் பார்வையில் பட்ட எல்லாவற்றையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள நேரிடும். எவற்றை எல்லாம் பார்த்தோமோ அவற்றை எல்லாம் குறிப்பெடுத்தாலும் சிலவற்றை தேவையில்லை என்று விட்டு விடுவதும் உண்டு. சென்று வந்தபின் தேவையில்லை என்று விட்டது கூட சில நேரம் ஆதாரங்கள் என்று கண் முன் வந்து நிற்கும். அப்படிப்பட்ட துறையில் இருக்கும் நான் கார்த்திகேயனின் வீட்டில், இல்லை அது எனது வீடு. எனது வீட்டில் இருந்த பொருட்களே எனக்கு ஞாபகம் இல்லை என்றால் சரியா? சோகமாக கார்த்திகேயனை பார்த்தாள்.
அவள் சோகம் கார்த்திகேயனுக்கு நன்றாகவே புரிந்தது. அதை மாற்றும் பொருட்டு உனக்கொன்று தெரியுமா? திருமலை படம் பார்த்தேன் அப்போ தளபதி வந்து ஜோ கொடுத்த டாபிகவர ஒரு பொம்மையாக செஞ்சி வச்சிருப்பாரு. அத பார்த்து தான் நீ கொடுத்து கிப்ட் ரப்பிங் பேப்பரக் கூட தூக்கிப் போடாம ஹேண்ட் கிராப்ட்டா செஞ்சு வெச்சிருக்கேன் என்று சிரித்தான். கயல்விழிக்கும் சிரிப்பாக இருந்தது.
அவன் சொன்ன பின்பு ஏதேதோ பொருட்களை வீட்டுக்குள் பார்த்தது போல் ஞாபகம் அவள் கண்களுக்குள் வந்து போனது.
“நீ உன் கையாலே செஞ்சியா? உனக்கு ஹேண்ட் கிராப்ட் எல்லாம் செய்ய தெரியுமா? சொல்லவே இல்ல” ஆச்சரியமாகவும் ஆசையாகவும் கேட்டாள்.
அவர்கள் சந்தித்த நாட்களோ மிகவும் குறைவு. அப்படி சந்தித்த பொழுது அவள் ஏதேதோ பொருட்களை கொடுத்து இருந்தாள் அது கூட அவளுக்கு சரியாக ஞாபகம் இல்லை. அவளது பிறந்தநாள், காதலர் தினம் என்று அவன் சில பொருட்களை அவளுக்கு கொடுத்திருந்தான். அவை எல்லாம் அவளது வீட்டில் தான் இருக்கின்றன. ஆனால் அதை சுற்றி கொடுத்த பேப்பரை எல்லாம் அவள் வைத்திருக்கவில்லை. அதை என்றோ தூக்கிப் போட்டு இருந்தாள்.
கிப்ட் ரப்பிங் பேப்பரக் கூட தூக்கிப் போடாமல் வைத்திருக்கிறான் என்றால் அவனுடைய காதல் எத்தகையது என்று அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. விழிகளை விரித்து வியப்பாக அவனை நோக்கியவள் முருவலித்தாள்.
நாடியை தடவி யோசிப்பது போல் பாவனை செய்தவன் “என் கையாலே செய்ய வேண்டும் என்று தான் ஆசை. ஆனா எனக்குத்தான் அதெல்லாம் செய்யத் தெரியாதே. செய்ய தெரிஞ்சவங்க கிட்ட கொடுத்து செஞ்சு வெச்சிருக்கேன்” என்று சிரித்தான்.
இது தனக்கு தோணவில்லையே என்று சிரித்த கயல்விழி அதை அவனிடம் தெரிவித்தாள்.
“லைஃப்ல நமக்கு எது முக்கியம், எது முக்கியம் இல்ல என்று நாமதான் டிசைட் பண்ணுறோம் கயல். உனக்கு முக்கியம் இல்லன்னு தோணுது எனக்கு முக்கியமா பட்டுச்சு அவ்வளவுதான். அத பத்தி ரொம்ப யோசிக்காதே” அவள் முகம் பார்த்து கூறினான்.
“எது? பிடிவாதமா என்ன கல்யாணம் பண்ண டிசைட் பண்ணியே அத சொல்றியா?” கயல்விழி ஒன்றும் கோபமாக சொல்லவில்லை. குரலில் கொஞ்சம் ஆதங்கம் இருந்தது.
அவள் முகம் பாராமல் கோர்த்திருந்த அவள் கையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் “இந்த உலகத்துல காதல் என்ற பெயரில் ஏமாந்து போற பெண்கள் தான் எத்தனை பேர்? சில பேருக்கு குழந்தையை கொடுத்து ஏமாத்திட்டு போறானுங்க. சில பேர விபச்சார விடுதியில் வித்துட்டு போறானுங்க. சில பேர காதலிச்சு கை விட்டுட்டு போறானுங்க .எல்லாரும் தற்கொலை பண்ணிக்கொள்வதும் இல்லை. நடந்ததை நினைச்சுட்டு அப்படியே இருந்ததும் இல்ல. அவங்களுக்காக இல்லனாலும், யாருக்காக வேண்டியாவது நடந்தத கடந்து வந்து வாழ்ந்துகிட்டு தான் இருக்காங்க. உனக்காக நான் இருக்கேன் கயல். எனக்கு நீ வேணும். நாம சந்தோஷமாக வாழ வேணும்” என்றான்.
அவன் பேச பேச உடல் சிலிர்த்தவள், “சந்தோஷம்” என்ற வார்த்தையில் உடல் இறுகினாள்.
தன்னால் சந்தோஷமாக இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இப்பொழுது கார்த்திகேயனின் சந்தோஷத்தை கெடுக்க கூடாது என்று அமைதியாக புன்னகைத்தவள் “எல்லாம் சரிதான் ஒன்றரை வருஷமா நான் கஷ்டப்பட்டு தகவல் திரட்டி, உன் ஃபேவரிட் ஹீரோ சாரோட போட்டோ எல்லாம் ஒட்டி ஒரு புக் கொடுத்தேனே அது என்ன ஆச்சு?” தனக்குள் நடக்கும் பிரளயத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவாறே கேட்டாள்.
“அதுவும் வீட்லதான் இருக்கு” சிரித்தவாரே கார்த்திகேயன் வண்டியை முன்னோக்கி செலுத்த, இவர்களது பேச்சும் சிரிப்பும் கோயம்புத்தூர் வரை நீண்டது.