‘பிரபல தொழில் அதிபரும், எஸ்பி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெகப் பிரதாபன், நேற்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் அது குறித்து விரிவான செய்திகளை இடைவெளிக்குப் பிறகு காண்போம். ‘ என்று வீட்டு வரவேற்பறையில் ஒய்யாரமாய் வீற்றிருந்த தொலைக் காட்சியில் செய்தியாளர் தலைப்பு செய்தியை வாசிக்க… அதனை எந்தவித முக மாறுதலும் இல்லாமல் வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் விஷல்யா.
மனைவியின் கவனம் தொலைக்காட்சியில் இல்லாமல் எங்கோ இருப்பதை புரிந்து கொண்ட அமுதேவ். “ என்ன ஷாலு இன்னும் நடந்ததையே நினைச்சு கவலைப்பட்டு இருக்கியா, இதுல உன் தப்பு எதுவும் இல்ல. சோ எல்லாத்தையும் மறந்துட்டு நீ ரிலாக்சா இரு” என்று ஆறுதல் கூறினான்.
“ அவன் பேசின வார்த்தை ஒவ்வொன்னும் என் மைண்ட்டை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கு. எவ்வளவு கேவலமா பேசினான்னு தெரியுமா?, அவன் வீட்டிலேயும் பொண்ணுங்க இருக்கத்தான செய்வாங்க, அப்போ அவங்களையும் இதே மாதிரி தான் ட்ரீட் பண்ணுவானா?, இந்த மாதிரி ஒரு கேரக்டர் கூட வாழுறது நரகத்துல வாழுற மாதிரி கொடுமையா இருக்காது. “ என்று தனக்கு முன் பின் அறிமுகமே இல்லாத பெண்களை எண்ணி கவலை கொண்டாள் விஷல்யா.
“ எஸ் யு ஆர் ரைட், அவனுக்கு பொண்ணுங்க மேல கொஞ்சம் கூட மரியாதை இல்ல. நீ ரெக்கார்ட் பண்ண வீடியோல அவன் உன்கிட்ட பேசின விதத்தை பாக்கும்போதே எனக்கு கோபமா வந்தது. என்னை விட்டு இருந்தா அந்த இடத்திலேயே அவனை பொளந்து போட்டு இருப்பேன். சுத்தி போலீஸ் இருந்ததால தான் சும்மா விட்டுட்டு வந்தேன். “ என்றான் அமுதேவ்.
என் மீது நம்பிக்கை உள்ளதா? என்ற விஷல்யாவின் கேள்விக்கு, அனைவரின் முன் விட்டுக்கொடுக்காமல் நம்பிக்கை உள்ளது என்று சொன்னவன் உள்ளுக்குள் கோபமாக இருப்பானோ என்ற ஐயத்தில் இருந்தவளுக்கு அவன் பதில் போதுமானதாக இல்லாமல் இருக்க…
“ உனக்கு அப்போ உண்மையிலேயே என் மேல கோபம் இல்லையா? அம்மு. “ என்று தன் சந்தேகத்தை தெளிந்து கொள்ளும் ஆவலுடன் வினவினாள் விஷல்யா.
“ கோபமா?, அந்த பொறுக்கியோடு கேடு கெட்ட புத்திக்கு, உன் மேல எதுக்கு கோபப்படனும். ?” என்று புரியாமல் வினவினான் அமுதேவ்.
“ பீச்சுல ஒருத்தன் என்னை தப்பா பேசிட்டான்னு, நான் சண்டை போட்டேன். அதனால தான் நாம பிரிஞ்சோம் அது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று அமைதியான குரலில் அதேநேரத்தில் சற்று அழுத்தத்துடன் விஷல்யா வினவ..
“ நீ என்ன சொல்ல வரன்னு எனக்கு புரியுது, நம்ம பிரேக்கப் டயத்துல நான் உன் கிட்ட பேசின விதத்தை வைச்சு, இந்த பொறுக்கி மாதிரியே எனக்கும் பொண்ணுகள மதிக்கிற பழக்கம் இல்லன்னு நினைச்சுட்ட அப்படித்தானே!” என்றான் அமுதேவ்.
“ பொண்ணுங்கள மதிக்கத் தெரியாதவன்னு நினைச்சேன், ஆனா அந்தப் பொறுக்கி ஜெகப் பிரதாபன் அளவுக்கு நீ மோசமானவன் இல்லன்னு எனக்குத் தெரியும்!” என்றாள் விஷல்யா.
தன்னவள் தன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை எண்ணி மெதுவாய் புன்னகைத்துக் கொண்டவன்.. மறுநொடி முகம் வாட… “ அன்னைக்கு நான் உன்கிட்ட பேசின விதத்தையும் விசயத்தையும் நினைச்சு எனக்குள்ள பல நாள் ஃபீல் பண்ணி இருக்கேன். மனசுக்குள்ளேயே பல தடவை உன் கிட்ட சாரியும் கேட்டு இருக்கேன்.” என்றான் அமுதேவ்.
“ மனசுக்குள்ளேயே அத்தனை தடவை மன்னிப்பு கேட்டதுக்கு பதிலா, நேரடியா என்கிட்ட வந்து ஒரே ஒரு தடவை சாரி கேட்டு இருந்தா எல்லா பிரச்சினையும் அன்னைக்கே தீர்ந்து இருக்கும்… “ என்றாள் விஷல்யா.
“ கேட்டிருப்பேன் ஆனா எனக்குள்ள இருந்த ஈகோ அதை செய்யவிடல… என்னைக்காவது ஒரு நாள் நீ என் காதலை புரிஞ்சுக்கிட்டு தேடி வருவ.. அன்னைக்கு உன்னை இறுக்கமா பிடிச்சுக்கணும், விட்டுடக் கூடாதுன்னு யோசிச்சேன். அதே மாதிரி நீயும் என்னைத் தேடி வந்த, நானும் உன்னை விடாம பிடிச்சுகிட்டேன். இனி என்னைக்கும் உன்னை விட்டுடக் கூடாதுன்னு என்னையும் மாத்திக்கிட்டேன்” என்றவன் இறுக்கமாய் மனைவியின் கரம் பற்றிக்கொள்ள…
“ இது நீ தானா அம்மு… உண்மையிலேயே இது நீ தானா, இல்ல நான் கனவு கண்டுட்டு இருக்கேனா!” என்று பிரமிப்பு விலகாமல் வினவினாள் விஷல்யா.
“ இதுல என்ன சந்தேகம், நான் தான் உன் அம்மு, இது தான் நிஜம்“ என்று அமுதேவ் கூறிக்கொண்டிருக்க… அவன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் சட்டென்று கட்டியணைத்துக் கொண்டவள்… “ லவ் யூ.. அம்மு. லவ் யூ.. சோ மச்” என்று கண்களில் கண்ணீருடன் கதறினாள் விஷல்யா.
மனைவியின் திடீர் அணுகுமுறையும் கண்ணீரும் அமுதேவ் மனதையும் கலங்கச் செய்தது, “ ஏய் ஷாலு என்ன ஆச்சு?, ஏன் இப்போ அழுகுற?” என்று கணவனாய் காரணம் வினவ… “ உன்கிட்ட இப்படி ஒரு சேஞ்ச்சை நான் கொஞ்சம்கூட எக்ஸ்பர்ட் பண்ணல அம்மு. இதுவரைக்கும் நான் பார்த்து புரிஞ்சுகிட்ட அம்மு வேற, இன்னைக்கு நான் பாக்குற என்னை புரிஞ்சுகிட்ட அம்மு வேற… ரெண்டு குணத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை” என்றாள் விஷல்யா.
“சரி இப்படியே கட்டிப் பிடிச்சுட்டு மட்டும் இருக்க போறயா?, இல்ல வேற எதுவும் ஐடியா இருக்கா… “ என்று சரிசமமாய் அவள் காது மடலில் இதழ் பதித்தான் அமுதேவ்.
“ ஹேய்… உன் சேட்டையை ஆரம்பிக்காத!, எனக்குள்ள நிறைய கேள்விகள் இருக்கு அதுக்கு விடை தெரிஞ்சே ஆகணும், இல்லைன்னா எனக்குள்ள இருக்க குழப்பம் தீரவே தீராது. “ என்றாள் விஷல்யா.
“ பேசலாம் ஆனா இப்படியே கட்டிப் பிடிச்சுட்டு இருந்தா, நான் பேசுற விதம் வேற மாதிரி இருக்குமே… “ என்று மெதுவாய் இடை வருடிட… “ நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன் உனக்கு என்ன விளையாட்டு?” என்று அத்துமீறிய கைகளை விலக்கித் தள்ளிவிட்டு விலகி அமர்ந்தவள், “உண்மைய சொல்லு நீ நல்லவனா? கெட்டவனா?, சமத்துவ வாதியா இல்லை ஆணாதிக்கத் தனமான ஆளா?, இதுல எது நிஜம்?, “ என்றாள் விஷல்யா.
தன் மனைவியின் கேள்வியை கேட்டதும் வாய் விட்டு சிரிக்க துவங்கினான் அமுதேவ், “ சிரிக்காத அம்மு, எனக்கு எப்பவும் உன் விஷயத்துல ஒரு குழப்பம் இருந்துட்டே இருக்கும். ஒவ்வொரு நேரமும் நீ வேற வேற ஆளா தெரியுற!, உன் பேச்சுக்கும் நடத்தைக்கும் என்னைக்கும் சம்மந்தமே இருந்தது இல்ல. உண்மைய சொல்லு எது நீ?” என்றாள் விஷல்யா.
மனைவிக்குள் இருக்கும் குழப்பத்தை தீர்க்காமல் தெளிவு கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்ட அமுதேவ்… “ உண்மைய சொல்லனும்னா, இதுக்கு முன்னாடி நான் செய்யுற விஷயம் சரியா தப்பான்னு எனக்குள்ளேயே குழப்பமும் தடுமாற்றமும் இருந்துட்டே இருக்கும். என்னைக்கு நான் மத்தவங்க சொல்லிக்கொடுத்த வார்த்தைய ஒதுக்கி வைச்சுட்டு, மனசு சொல்லுறதை கேட்டு நடக்க ஆரம்பிச்சேனோ, அன்னைக்கு இருந்து எனக்குள்ள இருந்த தடுமாற்றமும் குழப்பமும் காணாம போயிடுச்சு, சோ நீ இப்போ பாக்குற பேசிட்டு இருக்குற இந்த அமுதேவ்.. அதாவது உன் அம்மு தான் நிஜம்” என்றான் அமுதேவ்.
“ இத்தனை நாளா இல்லாத.. மாற்றம் திடீர்னு வர காரணம் என்ன? அம்மு” என்று குழப்பமான குரலில் வினவினாள் விஷல்யா.
“ நீ தான்… நீ மட்டும் தான் அந்தக் காரணம். இது திடீர்னு வந்த மாற்றம்னு சொல்ல முடியாது, உன்னை காதலிக்க ஆரம்பிச்சத்துல இருந்து எனக்குள்ள இந்த மாற்றம் ஆரம்பம் ஆகிடுச்சுன்னு தான் சொல்லணும். “ என்றான் அமுதேவ்.
“ உணக்குள்ள இப்படி ஒரு மாற்றம் வரதுக்கு காரணம் நான்தான்னு சொல்லுற… அப்புறம் எதுக்கு அன்னைக்கு அந்த மாதிரி மோசமா பேசி என்னை விட்டுட்டு போன?” என்று இருவரும் பிரிந்த நாளை நினைவுகூர்ந்து வினவினாள் விஷல்யா.
“ நல்லா யோசிச்சு பாரு நானா விட்டுட்டு போனேன்!” என்று ஒற்றை புருவம் உயர்த்தி அமுதேவ் வினவ..
“ சரி சரி நான் தான் போனேன். ஆனா நீ பேசின விதம் தான் என்னை போக வைச்சது. நீ எதுக்கு அப்படி பேசின?, அன்னைக்கு எனக்கு எவ்ளோ கோபம் வந்ததுனு தெரியுமா?“ என்றாள் விஷல்யா.
மனைவியின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் மன்னிப்பு வேண்டும் விதமாய் அவள் கரங்களை பற்றிக்கொண்டு… “ அன்னைக்கு பேசின வார்த்தைக்கு நான் இப்ப வரைக்கும் உன் கிட்ட சாரி கேட்காம இருக்கேன்ல. என்னைக்கு நான் பேசின விதம் தப்புன்னு எனக்கே புரிஞ்சதோ!.. அப்பவே உன் கிட்ட சாரி கேட்டு இருந்திருக்கணும். சாரிடா ஷாலு. எனக்கு அன்னைக்கு இருந்த புரிதல் வேற… அதனாலதான் அப்படி பேசிட்டேன் என்னை மன்னிச்சுக்கோ. “ என்றான் அமுதேவ்.
“ அப்பாடா இப்போவாவது மன்னிப்பு கேட்கணும்னு தோணுச்சே!, ஆமா அது என்ன புரிதல்!… புரியல?” என்று குழப்பத்துடன் விஷல்யா நிறுத்த…
” பொண்ணுங்க வீட்டுக்குள்ள இருந்தா தான் நம்ம கூட எப்பவும் இருப்பாங்கன்னு ஒரு தப்பான புரிதல். இன்னும் தெளிவா சொல்லனும்னா, என் அம்மா மேல இருந்த கோபமும் வெறுப்பும்.. நாளுக்கு நாள் எனக்குள்ள அதிகமாக, பொண்ணுகள அடக்கி வைக்கணுங்கிற எண்ணமும் வேகமும் எனக்குள்ள அதிகமாகிடுச்சு, அதுவே என்னை ஆணாதிக்கவாதியா மாத்திடுச்சு. என் எண்ணத்துக்கு தூபம் போடற மாதிரி பாட்டியோட போதனையும் சேர… கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள இருந்த சமத்துவ வாதி எனக்குள்ளேயே புதைஞ்சு போயிட்டான். “ என்று விளக்கம் கொடுத்தான் அமுதேவ்.
“ உனக்குள்ள இருந்த சமத்துவ வாதி புதைஞ்சு போயி ஆணாதிக்கவாதியா மாறிட்டேன்னு சொல்ற, அப்புறம் எப்படி என்னை பார்த்ததும் காதலிக்க ஆரம்பிச்ச?… நாம மீட் பண்ணும் போது நான் ஒன்னும் அடக்க ஒடுக்கமான பொண்ணா நடந்துக்கலையே! அப்புறம் எப்படி உனக்கு என்னை பார்த்ததும் காதல் வந்துச்சு?” என்று அதற்கான விடையை ஏற்கனவே அறிந்திருந்தாலும் மீண்டும் அதே கேள்வியை கேட்டாள் விஷல்யா.
முதல் நாள் கோவிலில் வைத்து விஷல்யாவை பார்த்தது, அவள் பேசிய விதம் அனைத்தையும் ஒருமுறை எண்ணிப் பார்த்து சிரித்துக் கொண்டவன், “ என்னன்னு சொல்றது, உன்னைப் பார்த்ததும் பிடிச்சு போச்சு. உன் பின்னாடியே சுத்த ஆரம்பிச்சுட்டேன். அப்போவே உன் தைரியமான பேச்சு என்னை பிரமிக்க வைக்கும், உன் கண்ணியமான மாடர்ன் டிரஸ் என்னை இம்ப்ரஸ் பண்ணும், உன் மேல இருந்த காதலால எனக்குள்ள மாற்றம் வர ஆரம்பிச்சுடுச்சுன்னு தான் சொல்லணும். பட் அந்த நேரத்துல எனக்கு அந்த சேஞ்ச்சஸ் பிடிக்கல. உன்னோட ஆட்டிடியூட்டை எனக்கு தகுந்த மாதிரி மாத்தணும்னு நினைச்சேன். அதனால தான் உன்கிட்ட ஹார்ஸ்ஸா பிகேவ் பண்ணினேன். பட் கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே டோட்டலா சேஞ்ச் ஆயிடுச்சு. நான் என்ன சொன்னாலும் சரின்னு கேட்டுக்காம, அதிகப் பிரசங்கித் தனமாக எனக்கு எதிரா ஆர்க்கிவ் பண்ணுவ பாரு.. அப்போதான் தப்பா சரியானு தெளிவில்லாத குழப்பத்தோட இருந்த எனக்கு நான் செய்றது எல்லாம் தப்புனு புரிய ஆரம்பிச்சது. சோ கொஞ்சம்கூட யோசிக்காம உனக்குத் தகுந்த மாதிரி என்னை மாத்திக்கிட்டேன். “ என்றான் அமுதேவ்.
“ உனக்கு உன் அம்மாவை பிடிக்காது அப்படித்தானே!” என்று சம்பந்தமே இல்லாமல் விஷல்யா கேள்வி எழுப்ப..
“ யெஸ்.. நான் என் அம்மாவை வெறுக்கிறேன். “ என்று சற்றும் தாமதிக்காமல் தயக்கமின்றி கூறியவன் ஒரு நொடி தயங்கி, “ பட் அவங்க சாயல்ல இருக்கிற உனக்காக என்னையே மாத்திக்கிற அளவுக்கு பைத்தியக்காரத்தனமா காதலிக்கிறேன். விசித்திரமா இருக்குல..” என்றான் அமுதேவ்.
“ விசித்திரம் தான், இந்த விசித்திரம் எதனால நடந்ததுன்னு சொல்லவா?, வெளியே சொல்ல விருப்பமில்லனாலும் உனக்கு உன் அம்மாவை ரொம்ப பிடிக்கும். அதனாலேயே அவங்கள மாதிரியே யோசிக்கிற என்னையும் உனக்கு காரணமே இல்லாம பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. நான் உன்கூட இருந்தா உன் அம்மாவை உன் கூட இருக்கிற மாதிரி இருக்கும்னு நினைச்சு தான் என்னை காதலிக்க ஆரம்பிச்ச.. இதை நான் சொல்லல அந்தமான் போயிருக்கும்போது நீதான் சொன்ன. “ என்றாள் விஷல்யா.
அதுதான் உண்மை எனும் போது மறுத்துக் கூற மனம் இல்லாமல் அமுதேவ் அமைதியாகிட… “ உன் கேரக்டர் சரியில்லன்னு உன்னை விட்டுட்டு வந்ததுக்கு அப்புறம் எப்படி திரும்ப உன்னை தேடி வந்தேன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கியா?, ” என்று விஷல்யா வினவ…
“ அதான் கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே எல்லாத்தையும் சொல்லிட்டயே… இன்னும் ஏதாவது மிச்சம் மீதி இருக்கா என்ன?” என்று அமுதேவ் வினவ…
“ எல்லாத்தையும் சொல்லிட்டேன் தான். நான் சொன்னதுல உனக்கு என்ன புரிஞ்சது? அதை சொல்லு!” என்றாள் விஷல்யா.
“ உன்னோட காதல்!, இதுக்கு மேல இதுல புரியுறதுக்கு என்ன இருக்கு?” என்று அசட்டையாக பதில் தந்தான் அமுதேவ்.
“ உன் அம்மாவோட அன்பு இருக்கு!, என் பிள்ளை நல்லவன் தான்னு நம்பிக்கையோட பேசின.. அவங்களோட நம்பிக்கையும், புரிதலும் இருக்கு. அத்தை உன்மேல் வைச்சிருக்கிற நம்பிக்கை உனக்கு ஏன் அவங்க மேல இல்லாம போச்சு அம்மு. ” என்றாள் விஷல்யா.
“ ஆரம்பிச்சிட்டியா!, என்னடா இன்னும் உன் அத்தைக்கு சப்போட்டா பேசாம இருக்கன்னு யோசிச்சேன். அந்த குறை இப்போ தீர்ந்துடுச்சு. ஆமா நான் தெரியாம தான் கேக்குறேன், அதென்ன எதைப் பத்தி பேச ஆரம்பிச்சாலும் கடைசில அவங்க கிட்டயே வந்து முடிக்கிற.. “ என்று அலுத்துக் கொண்டான் அமுதேவ்.
“ நான் அத்தைக்கு சப்போர்ட் பண்ணி மட்டும் பேசல அம்மு. உனக்காகவும் தான் பேசுறேன். உன் அம்மாவோட அருகாமை உனக்கு தேவைப்படுது அதுக்காக நீ ஏங்குறது உனக்கு புரியலையா?, மத்த விஷயத்துல தெளிவா முடிவெடுக்கிற நீ ஃபேமிலி லைஃப்ல மட்டும் குழம்புறதுக்கும் தடுமாறுறதுக்கும் என்ன காரணம்னு யோசிச்சு பார்த்து இருக்கியா?” என்றாள் விஷல்யா.
“ ஆமா நான் பச்சை குழந்தை பாரு அம்மாவோட அருகாமைக்கு ஏங்குறதுக்கு… சும்மா வாய்க்கு வந்ததை உளராம போய் ரெஸ்ட் எடு. “ என்று அவ்விடம் விட்டு நகர முயன்றான் அமுதேவ்.
தன்னைவிட்டு நகர்ந்து சென்றவனை கைப்பற்றி தடுத்து நிறுத்தியவள், “ எத்தனை வயசானாலும் மனுஷங்க மனசு அன்புக்கு ஏங்குறது இயல்பு அம்மு. அதுவும் அம்மாவோட எதிர்பார்ப்பு இல்லாத அன்பு எப்பவும் ஸ்பெஷல் தான். உன் ஈகோவை விட்டுடு, அத்தை கிட்ட மனசுவிட்டு பேசு, நாம எல்லாரும் ஒரே வீட்டுல ஒன்னா சந்தோசமா இருக்கலாம்” என்றாள் விஷல்யா.
“என்னை வேணான்னு விட்டுட்டு போனவங்களோட அன்பும் அரவணைப்பும் எனக்கு தேவை இல்லை. நான் எந்த அன்புக்காக ஏங்கிட்டு இருந்தேனோ, அந்த அன்பும் அக்கறையும் இப்போ உன்கிட்ட கிடைச்சிடுச்சு, எனக்கு இது போதும். “ என்று அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாமல், தன்னை தடுத்து நிறுத்திய கரத்தை விலக்கித் தள்ளிவிட்டு, அங்கிருந்து விலகிச் சென்றான் அமுதேவ்.
‘ ஈகோ எல்லாத்துக்கும் இந்த ஈகோ தான் காரணம்… ‘ என்று கணவனின் பிடிவாதத்தை எண்ணி தனக்குள் கூறிக் கொண்டவள்.. ‘ இனி இவன் கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல அத்தை கிட்ட தான் அப்ரோச் பண்ணனும்.’ எனும் முடிவுக்கு வந்தாள் விஷல்யா.
விஷல்யாவிற்கு நிகழ்ந்த விபரீதம் அறிந்து அவளை காண இருவீட்டு பெரியவர்களும் அதிகாலையிலேயே வீடு தேடி வந்தனர்.
தன் அன்னையைக் கண்டதும் அங்கு இருக்க மனமில்லாமல் அவ்விடம் விட்டு விலகிச் சென்றான் அமுதேவ்.
தன்னை கண்டதும் விலகிச்செல்லும் மகனை தொலைவிலிருந்து கலங்கிய விழிகளுடன் பார்த்திருந்தார் பானுஸ்ரீ.
தலையில் காயத்துடன் இருந்த விஷல்யாவைக் கண்டதும்… பதறிய பெரியவர்கள்… நலம் விசாரிக்க… “ நீங்கள் இந்த அளவுக்கு பயப்படுற மாதிரி எனக்கு ஒன்னும் இல்ல, லைட்டா சின்ன காயம் தான். வீட்டுக்கு வந்து பேண்ட்ஃயெய்டு ஒட்டி இருந்தாலே போதும். இந்த அம்முதான் தேவையே இல்லாம ஹாஸ்பிடல் வரைக்கும் இழுத்துட்டு போய். இப்படி பாதி தலையை மறைக்கிற மாதிரி பெரிய கட்டுப்போட வச்சுட்டான். “ என்று தன் கணவனின் அதீத அக்கறையை கிண்டல் செய்து சிரித்தபடி கூறினாள் விஷல்யா.
“ சிரிக்காத ஷாலு, அந்த நேரத்துல அந்த மாதிரி இடத்துல உன்னை காயத்தோட பார்த்தப்போ மாப்பிள்ளைக்கு எப்படி இருந்திருக்கும். நீ எங்கள பத்தி யோசிக்க வேணாம் மாப்பிள்ளை பத்தியாவது யோசிச்சு கொஞ்சம் பொறுப்பா நடந்து இருக்க கூடாது. “ என்று மகளை அதட்டினார் தாமரை.
“ அம்மா எனக்கு என்ன அப்படி நடக்கும்னு தெரிஞ்சா போனேன். சைட்டு பாத்துட்டு பிளான் டிஸ்கஸ் பண்ணலாம்னு கூப்பிட்டான், இப்படி ஒரு ஐடியால தான் கூப்பிடுறான்னு எனக்கு என்னத் தெரியுமா?. முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவன் ஆபீஸ்லயே வைச்சு வெளுத்திருப்பேன்” என்றாள் விஷல்யா.
“ இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் வாய் மட்டும் குறையு தான்னு பாரு. உன் விஷயம் நியூஸ் பேப்பர், டிவி நியூஸ்ன்னு வந்து இன்னைக்கு ஊருக்குள்ள இதுதான் பேச்சா இருக்கு, இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவைதானா…?. எதையாவது சாதிச்சு நியூஸ் பேப்பர்ல பேரு வந்திருந்தா சந்தோஷப் பட்டிருக்கலாம். இப்படி கண்டவன் உன்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான்னு உன்னை நீயே அசிங்க படுத்துற மாதிரி வீடியோ எடுத்து … அது ஒவ்வொரு டிவி நியூஸ்லயும் வரும்போது, உனக்கு எப்படி இருக்கோ தெரியல, உன்னைப் பெத்த எனக்குதான் அசிங்கமா இருக்கு“ என்றார் தாமரை.
“ நமக்கு நடக்குற அநியாயத்தை வெளிய சொன்னா அசிங்கமா போயிடுமோன்னு பயப்படுற உங்கள மாதிரி ஆட்களால தான் பொண்ணுங்க தான் இருக்கிற அவலமான சூழ்நிலையை வெளியே சொல்ல தயங்குறாங்க. இன்னும் எத்தனை நாளைக்குத்தான், குடும்ப மானம் கௌரவங்கிற பேருல, பாதிக்கப்பட்டவங்க மேல அசிங்கங்கிற அடையாளத்தை பூசுவீங்க… கொஞ்சம் உங்க கண்ணோட்டத்தை மாத்தி தப்பு பண்ணுணவனை ஊர் உலகத்துக்கு அடையாளம் காட்டி அவன் முகத்துல அசிங்கத்தை பூசுங்க… “ என்று காட்டமாகவே பதில் தந்தாள் விஷல்யா.
“ பேச்சுக்கு எல்லாம் நல்லா தான் இருக்கும், ஆனா நிஜத்துக்கு ஒத்து வராது. நீ போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுத்தவன், பெரிய பணக்காரன் நாளைக்கே அவனுக்கு இருக்குற செல்வாக்கை வச்சு வெளிய வந்து மறுபடியும் உனக்கு பிரச்சனை கொடுப்பான். இதெல்லாம் தேவை தானா?. அசிங்கம்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நாமதான் விலகிப் போகணும். அசிங்கத்தை சுத்தம் பண்றேன்னு அதுக்குள்ள இறங்க ஆரம்பிச்சா நம்ம மேல நாமளே அசிங்கத்தை பூசிக்க வேண்டியதுதான். “ என்று இன்றைய சூழலை மகளுக்கு புரிய வைக்க முயன்றார் தாமரை.
“ என்ன பேசுற தாமரை?, நம்ம பொண்ணு பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சு வந்திருக்கா. அவளுக்கு ஆறுதல் சொல்றத விட்டுட்டு இப்படி திட்டித் தீர்த்துட்டு இருக்க…” என்று மகளுக்காக பரிந்து பேசினார் தாமோதரன்.
“ நான் திட்டலைங்க அவளுக்கு உலக நடப்பை புரியவைக்க முயற்சி பண்ணுறேன். நாம உதவி செஞ்சவங்களே.. எல்லாத்தையும் மறந்துட்டு முதுகுல குத்துற காலம் இது, இதுல இந்த மாதிரி பணக்காரங்க பகை எந்த அளவுக்கு பாதிப்பைக் கொடுக்கும்னு யோசிச்சு பாருங்க” என்று கவலையுடன் கூறினார் தாமரை.
“ அண்ணி நடந்த பிரச்சனையை விடுங்க, அந்த பிரச்சனையிலிருந்து நம்ம பொண்ணு எப்படி தப்பிச்சு வந்தான்னு யோசிங்க… நீங்க சொன்னீங்களே வீடியோ அந்த வீடியோவால தான் இப்போ நம்ம பொண்ணு உருப்படியா வீடு வந்து சேர்ந்து இருக்கா. இல்லைனா இஷ்டத்துக்கு கதை கட்டி அவ வாழ்க்கையை அழிச்சிருபான் அந்த அயோக்கிய ராஸ்கல்.” என்று மருமகள் செயலில் இருந்த நியாயத்தை கூறினார் பானுஸ்ரீ.
“ உண்மைதான் அந்த வீடியோ மட்டும் ஆதாரமா இல்லன்னா, இந்நேரம் நம்ம பொண்ணு நம்ம கூட இருந்து இருக்க மாட்ட தான். ஆனா எல்லா நேரமும் இதே நடக்கும்னு எதிர்பார்க்க முடியாதே அண்ணி!, ஒவ்வொரு தடவையும் வீட்டை விட்டு வெளியே போகும்போதும் ஆதாரத்துக்காக வீடியோ கேமராவை கையில எடுத்துட்டா போக முடியும்” என்றார் தாமரை.
“ ஐயோ அம்மா அதே வீடியோ கேமரா இல்லை பட்டன் கேமரா.. நார்மல் கேமராவை விட சின்னது அதனால ஹேண்டில் பண்றது ரொம்ப ஈஸி.” என்று கிண்டலாய் சிரித்தபடி தன் அன்னையின் புரிதலில் இருந்த தவறை திருத்தி விளக்கம் கொடுத்தாள் விஷல்யா.
“ பாருங்க நான் எதை நினைச்சு கவலை பட்டுட்டு இருக்கேன். இவ என்னடான்னா என்னையே கிண்டல் பண்ணி சிரிக்கிறா… “ என்று கடுகடுத்தார் தாமரை.
“ அம்மா சொல்றதும் நியாயம்தான் ஷாலு. நம்ம நாட்டுல ஆதாரம் இல்லாததால எத்தனையோ நிரபராதிகள் குற்றவாளியாவும், குற்றவாளிகள் நியாயவாதி மாதிரி வெளிய சுதந்திரமாவும் சுத்திட்டு இருக்காங்க. எல்லா நேரமும் நம்மை நிரபராதின்னு நிரூபிக்க கையில ஆதாரத்தை தூக்கிட்டு அலைய முடியாது ஷாலு. அதுனால நீ கவனமா இருக்கணும் மா” என்று அறிவுரை வழங்கினார்.
“ சரிங்க அத்தை இனிமே கவனமா இருக்கேன். யாரோட பிரச்சனைக்கும் போகமாட்டேன் போதுமா!” என்று உறுதி அளித்தப் பிறகே இருவீட்டு பெரியவர்களுக்கும் நிம்மதி கிடைத்தது, அதன்பின்னே அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
நாட்கள் சில கடந்தது… தன் அலுவலக அறையில் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த அமுதேவ் முன் வந்து அமர்ந்த தனுஜ்… “ என்ன நண்பா… யோசனையெல்லாம் பலமா இருக்கு!” என்றான்.
“ ஒன்னும் இல்ல… ஷாலு பிஸினஸ் பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன். அந்தக் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்காக டிஃபரண்டான ஐடியா வச்சிருந்தா.. பட் இப்போ எல்லாம் யூஸ் இல்லாம போச்சு!. “ என்றான் அமுதேவ்.
“ யூஸ் இல்லாம போச்சா!, என்னடா சொல்ற, ஷாலுவோட சொந்த ஐடியா தான அது!, அப்புறம் எப்படி யூஸ் இல்லாம போகும். வேற ஏதாவது கன்ஸ்ட்ரக்சன் பிளானுக்கு அதை யூஸ் பண்ணிக்கலாமே! “ என்று புரியாமல் வினவினான் தனுஜ்.
“ பண்ணிக்கலாம், பட் அதுக்கு ப்ராஜெக்ட் ஏதாவது இருக்கணுமே!, எஸ்பி கன்ஸ்ட்ரக்சன் ஓனர் கூட நடந்த பிரச்சனை நம்ம ஃபீல்ட் இருக்கிற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. சோ பாதிபேர் ஜெகப் பிராதபனுக்கு பயந்தும், மீதி பேர் அவங்க கிட்டயும் இதே மாதிரி ஏதாவது பிரச்சனை பண்ணிடுவாளோன்னு பயந்தும் ஒதுங்கிப் போறாங்க. சோ ஸீ லாஸ்ட் ஹேர் பிஸ்னஸ் கெரியர். “ என்று வருத்தத்துடன் கூறினான் அமுதேவ்.
“ இதைப்பத்தி ஷாலு என்ன சொல்றா?” என்று தனுஜ் வினவ… “ அவ என்ன சொல்லுவா!, யார் தடுத்தாலும் என் திறமையும் கற்பனையும் என்னை விட்டு போகாது, என்னைக்காவது அதுக்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும்னு நம்பிக்கையோட தான் இருக்கிறா!. பட் சரியான ஆப்பர்சூனிட்டி கிடைக்காத திறமைக்கு அங்கீகாரம் எங்க இருந்து கிடைக்கும். “ என்றான் அமுதேவ்.
“ நீ சொல்றதும் சரிதான். பெட்டிக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குறாதல வைரத்தோட பளபளப்பு குறையாது தான், அதுக்காக பெட்டிக்குள்ளேயே இருந்தா அதோட மதிப்பும் யாருக்கும் தெரியாம போயிடுமே!. என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, சொல்லவா” என்றான் தனுஜ்.
“ உருப்படியான ஐடியாவா இருந்தா மட்டும் சொல்லு.. “ என்று அமுதேவ் அலுத்துக் கொண்டே கூறிட..
“ பேசாம நம்ம கன்ஸ்டிரக்ட் பண்ற பில்டிங் இன்டீரியர் டிசைன் வொர்க் எல்லாம் ஷாலு கம்பெனிக்கு குடுத்திடலாம். நமக்கும் நல்ல டிசைனர் கிடைச்ச மாதிரி இருக்கும், அஸ் ஏ சேம் டைம் ஷாலுவோட பிஸ்னஸ்ஸும் டெவலப் ஆகும். “ என்று தனது யோசனையை கூறினான் தனுஜ்.
“ நல்ல ஐடியாதான்.. ஷாலு கிட்ட இதைப் பத்தி பேசி பாக்குறேன். “ என்று அமுதேவ் கூறிக்கொண்டிருக்க அலுவலக பணியாளர் ஒருவர் உள்ளே வர அனுமதி கேட்டு கதவை தட்டினார்.
அப்போதைக்கு இருவருக்குமான உரையாடலை நிறுதிக் கொண்டு பணியாளர் உள்ளே வர அனுமதி வழங்கினான் அமுதேவ்.
“ சார் உங்கள பாக்க அஸ்வின்னு ஒருத்தர் வந்திருக்காரு. உள்ள வர சொல்லட்டுமா சார் “ என்று அனுமதி கேட்க, “ அஸ்வினா!,” என்று குழப்பத்துடன் தனுஜ் கூறிட.. “உள்ள வர சொல்லுங்க” என்று தன்னைக் காணக் காத்திருந்த நண்பனுக்கு உள்ளே வர அனுமதி வழங்கினான் அமுதேவ்.
“ ஹாய் டா தேவ்.. ஹாய் தனுஜ்.. ஒரு இம்பார்டன்ட் விஷயம் பேச தான் உங்களை பார்க்க வந்தேன். இப்போ ஃப்ரீயா இருந்தா பேசலாம். பிசியா இருந்தா சொல்லுங்க அப்புறம் மீட் பண்ணலாம். “ என்றான் அஸ்வின்.
“ என்னடா இம்போர்ட்டண்ட் விஷயம்னு இவ்வளவு தூரம் வந்துட்டு அப்புறம் மீட் பண்ணலாம்னு சொல்ற… வந்த விஷயம் என்னன்னு சொல்லு நாங்க ஒன்னும் உன் அளவுக்கு பிஸியான ஆட்கள் இல்லை” என்று அஸ்வின் அமர ஒரு இருக்கையை நகர்த்தியபடி கூறினான் தனுஜ்.
ஒரு நொடி தயங்கியவன், “ எஸ்பி கன்ஸ்டிரக்ஷன் விஷயம் கேள்வி பட்டேன். உன் வைஃப் உண்மையிலேயே தைரியமான ஆள் தான். அவ்வளவு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஓனரையே உள்ள தள்ளிட்டாங்களே!. “ என்று மனதார பாராட்டினான் அஸ்வின்.
“ எஸ் அவ தைரியமான பொண்ணு தான். ஆனா அவளோட அந்த தைரியம்தான் எனக்கு பயத்தை கொடுக்குது.” என்றான் அமுதேவ்.
“ என்னடா இப்படி சொல்ற?” என்று அஸ்வின் குழப்பமாய் பார்த்திட..
“எஸ்பி கன்ஸ்ட்ரக்ஷன் ஓனர் ஜெயிலுக்குள்ள இருக்கும்போதே அவளோட பிசினஸ் கெரியர் பாதிய க்ளோஸ் பண்ணிட்டான். வெளிய வந்து இன்னும் என்னென்ன பண்ணுவானோ நினைக்கும் போதே கவலையா இருக்கு. “ என்று தனது வருத்தத்திற்கான காரணத்தை கூறினான் அமுதேவ்.
“ நீ பயப்படற மாதிரி ஒன்னும் நடக்காது. உன் வைஃப் தைரியமா கம்ப்ளைன்ட் கொடுக்கவும், அந்த கன்ஸ்ட்ரக்ஷன் ஓனரால பாதிக்கப்பட்ட இன்னும் சில பொண்ணுங்களும் கம்ப்ளைன்ட் கொடுக்க முன் வந்திருக்காங்க. அதுமட்டுமில்லாம பொண்ணுகள பத்தி அவன் கேவலமா பேசுன வீடியோ லீக் ஆனதுல கடுப்பான அவன் வீட்டு ஆட்களே அவன ஜாமீன்ல எடுக்க முன் வரல. சோ இனி அவன் பல்லு புடுங்குன பாம்புதான். “ என்றான் அஸ்வின்.
“ஓ ரியலி… அவனால என் ஷாலுவுக்கு என்ன ஆகுமோன்னு நினைச்சு கவலையாயிருந்தது இப்போ தான் ரிலீஃப்பா பீல் பண்ணுறேன். “ என்றான் அமுதேவ்.
“ ஆமாம் நீ இதை சொல்லத்தான் இங்க வந்தியா?, நான் கூட இம்பார்டன்ட் விஷயம்னு சொன்னதும் என்னவோ ஏதோன்னு நினைச்சேன். ” என்றான் தனுஜ்.
“ ஆக்சுவலி நான் உன்கிட்ட ஒரு பிசினஸ் டீல் பேச தான் வந்தேன். “ என்றவன் நண்பர்கள் இருவரும் பார்வை பரிமாறிக்கொள்வதை கவனித்து.. “ என்னடா அப்படி பார்க்கிறீங்க.. உண்மையா தான் சொல்றேன் ஒரு பிசினஸ் டீலிங்க்காக தான் வந்தேன். எஸ்பி கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியோட மகாபலிபுரம் ரிசார்ட் ப்ராஜெக்ட், இப்போ எங்க கம்பெனிக்கு கிடைச்சிருக்கு. எஸ்பி கன்ஸ்ட்ரக்ஷன் மாதிரி பெரிய கம்பெனி தனியா செஞ்சு முடிக்க கூடிய பெரிய ப்ராஜெக்ட்டை நாங்க மட்டும் தனியா ஹேண்டில் பண்றது கஷ்டம், சோ எங்களுக்கு நம்பிக்கையான இன்னொரு கம்பெனியோட சப்போர்ட் தேவைப்பட்டது. நம்பிக்கையான ஆள்னு சொன்னதும் எனக்கு உங்க ஞாபகம் தான் வந்தது. அதனால இந்த ப்ராஜெக்ட்டுக்கு மட்டும் நம்ம ரெண்டு கம்பெனியும் பார்ட்னர் ஆகலாமான்னு கேட்க வந்தேன். வாட் யூ திங் அபவுட் தட்” என்று தான் வந்ததற்கான காரணத்தை கூறினான் அஸ்வின்.
மிகப்பெரிய வாய்ப்பு தங்களைத் தேடி வந்திருப்பதை உணர்ந்து கொண்ட நண்பர்கள்.. “ டீலிங் எங்களுக்கு புடிச்சிருக்கு, பட் ஒன் திங்க். நாம கட்டுற ரிசார்ட்.. இன்டீரியர் டிசைன் ப்ராஜெக்ட் என் வைஃப் கம்பெனிக்கு கொடுக்கணும். இந்த டீலிங் உனக்கு ஓகேவா?” என்றான் அமுதேவ்.
“ நானும் இதைப்பத்தி ஏற்கனவே யோசிச்சேன். உன் வைஃப் டிசைனிங் எனக்கு பிடிச்சா அதைப்பத்தி கன்சிடர் பண்றேன். “ என்று பிடிகொடுக்காமல் அஸ்வின் பேசிட.. “ ஓகே நீ ஃபர்ஸ்ட் ஷாலு கிட்ட இன்டீரியர் ஐடியாவை கேட்டிடு, அது உனக்கு ஓகேன்னா நானும் நம்ம பிசினஸ் டீலிங் பத்தி கன்சிடர் பண்றேன்.” என்றான் அமுதேவ்.
சரி என்று சம்மதித்து அஸ்வின் கிளம்பிச் சென்று விட… “ என்னடா இப்படி பண்ணிட்ட நல்ல ஆப்பர்சூனிட்டி, இப்படி சொதப்பிட்டயே!” என்று புலம்பித் தள்ளினான் தனுஜ்.
“ ஷாலுவோட ஐடியா கண்டிப்பா அஸ்வினுக்கு பிடிக்கும். சோ இந்த டீலிங் கண்டிப்பா நமக்கு கிடைக்கும் யூ டோன்ட் வொரி அபவுட் தட். “ என்று தன் மனைவியின் திறமை மீது இருந்த நம்பிக்கையில் உறுதியுடன் கூறினான் அமுதேவ்.
அமுதேவ் கூறியது போலவே விஷல்யாவை காணச்சென்ற அஸ்வின், அவளது புதுவித யோசனையைக் கேட்டு வியந்து போய்… உடனே ஒப்பந்தத்திற்கு சம்மதம் கூறினான். அதன்படி அஸ்வின் மற்றும் அமுதேவ் தனுஜ் தொழில் நிறுவனங்கள் இணைந்து உல்லாசப்போக்கிடத்தின் கட்டுமானப் பணியை துவங்கியது.
அவ்வப்போது கட்டிடப் பணி நடக்கும் இடத்திற்கு செல்லும் விஷல்யா தனது யோசனைக்கு ஏற்ப நடந்து கொண்டிருக்கும் வேலையை ஒருங்கிணைக்க… எந்தவித தங்கு தடையும் இல்லாமல் கட்டிட பணி விரைவாய் நடந்தது.
இதற்கு இடையில் அமுதேவ் மற்றும் விஷல்யா தம்பதியினர் இருவரும்.. தங்களுக்கு விருந்து அழைப்பு விடுத்த கண்ணன் மற்றும் கமலி தம்பதியினர் வீட்டிற்கு சென்றனர்.
நால்வரும் ஒன்றாய் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்த வேளையில், “ நீங்க கொரியர் பண்ணின புக் கிடைச்சது.. மேம். “ என்று விஷல்யா கூறிட… “ கொரியரா!, என்ன கொரியர்?” என்று முதலில் குழம்பியவர்கள், இது அமுதேவ் வேலையாக இருக்கக்கூடும் என்று ஓரளவிற்கு யூகித்து… “ ஆமா ஆமா நான் தான் கொரியர் பண்ணுனேன்!, நேர்ல வர டைம் இல்ல, அதான் கொரியர் பண்ணிட்டேன்” என்று மனைவியை முந்திக்கொண்டு பதில் கூறினார் கண்ணன்.
கண்ணன் அமுதேவ்வை முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று தனியாக அழைத்துச் சென்று விட…
தனித்து விடப்பட்ட விஷல்யா கமலியிடம் கதையை பற்றிய தனது கருத்தை எடுத்துரைக்க தொடங்கினாள்.“ அந்த கதையை கிட்டத்தட்ட மூன்று தடவைக்கு மேல படிச்சிட்டேன் மேம். ஒவ்வொரு தடவையும் படிக்கும் போதும் புதுசா தெரியுதே தவிர அலுத்துப் போகவே இல்ல. தாய்மையை போற்றுவோம்.. தலைப்புக்கு ஏத்த மாதிரி கதை ரொம்பவே அருமையா இருந்தது. கல்யாணமாகி பல வருஷமா குழந்தை இல்லாத பொண்ணு.. தன் தாய்மையை நிரூபிக்கிறதுக்காக குழந்தைகளை தத்து எடுக்கிறது, ஆறு வருஷமா குழந்தை இல்லாம ஊர் உலகத்தோட அவமானப் பேச்சால அவஸ்தைப் படுற பொண்ணு, குழந்தை பெத்துக் கிட்டா கெரியர் பாதிக்கப்படுமோன்னு பயந்து தாய்மையை தள்ளிப் போடுற பொண்ணு.. இப்படி மூணு பொண்ணுங்க அம்மாங்கிற அந்தஸ்துக்காக அவங்க வாழ்க்கையில சந்திக்கிற அவஸ்தைகளை ரொம்ப அழகா எழுத்து மூலமா சொல்லியிருக்கீங்க. கதையை படிச்சு முடிக்கும்போது கதை படிச்ச மாதிரி ஃபீல் இல்லாம, நானும் அந்தக் கதையோட கதாபாத்திரங்களோட பயணுச்சு வந்த மாதிரி பீல் பண்ண வச்சிருக்கீங்க அந்த அளவுக்கு உங்க எழுத்து எதார்த்தமா இருந்தது.இந்த உலகம் இன்னும் மனிதத் தன்மையோடையும் உயிர்ப்போடயும் இருக்கிறதுக்கு பெண்களோட தாய்மை உணர்வு தான் காரணம்னு சொல்லிருக்கீங்க. அது ரொம்ப நல்லா இருந்தது. பட் பொண்ணுங்க பிறப்பே.. பிள்ளை பெத்துகிறதுக்குத் தான்னு சொல்லாம சொன்ன மாதிரி ஒருவித நெருடலா இருந்தது, அதை என்னால ஏத்துக்க முடியல. ஏன் மேம் பொண்ணுங்க மட்டும் தான் இந்த பொறுப்பை எல்லாம் சுமக்கணுமா?” என்று முதலில் நேர்மறை கருத்தை கூறிவிட்டு… இலை மறை காயாய் எதிர்மறை கருத்தையும் கூறினாள் விஷல்யா.
ஏற்கனவே தனது கணவன் மூலம் பிரச்சனை என்னவென்று அறிந்திருந்தவர்… மெதுவாய் புன்னகைத்து, “ நீ கேட்கிறதும் சரிதான், ஆனா குழந்தைகளோட பொறுப்பை அம்மா மட்டும் சுமக்கிறது இல்லையே. அதுல ஒவ்வொரு அப்பாவோட உழைப்பும் தானே இருக்கு. நாம அன்பையும் அரவணைப்பையும் கொடுத்து அக்கறையா பார்த்திக்கிறோம். அப்பாக்கள் அவங்களோட முழு நேர உழைப்பையும் குடும்பத்துக்காக கொடுக்கிறாங்க. அப்படிப் பார்த்தா ரெண்டு பேரும் குடும்பத்தோட பொறுப்பை சரிசமமா தானே ஏத்துக்கிறாங்க. நம்ம நாட்டுல இன்னும் எத்தனையோ ஆம்பளைங்க, தன்னோட சந்தோசத்தையும் விருப்பங்களையும் விட்டுக்கொடுத்துட்டு குடும்பத்துக்காக அயராது உழைக்கிறாங்க!, அம்மாவோட அன்பு எதார்த்தமானதுனா.. அப்பாவோட அன்பு எதிர்பார்ப்பே இல்லாதது. பொண்ணுங்களோட தியாகத்தை உயர்த்தி பேசுற நாம.. கண்ணுக்கு முன்னாடி ஆண்கள் செய்யுற தியாகத்தை மறந்திடுறோம் மதிக்கிறது இல்ல. “ என்றார் கமலி.
“ எல்லா ஆம்பளைகளும் அந்த பொறுப்பை சரியா செய்றது இல்லையே..” என்று விஷல்யா தனது எதிர் வாதத்தை துவங்கிட… “ அப்படிப் பார்த்தா… சில பொண்ணுகளும் அவங்களோட பொறுப்பை சரியா செய்யுறது இல்லையே!. தப்புன்னு பார்க்க ஆரம்பிச்சா அது இரண்டு பக்கமும் தான் இருக்கும். நான் கதையில சொன்ன மாதிரி உலகம் அடுத்தடுத்த சந்ததிகளை பார்த்து உயிர்ப்போட இருக்கிறதுக்கு தாய்மை அவசியம். அதே மாதிரி உருவான சந்ததிகள் வளமா வாழுறதுக்கு தந்தையோட பங்களிப்பு அவசியம். யாரோட உழைப்பு தியாகம் பெருசுன்னு போட்டி போடுறதை விட்டுவிட்டு ரெண்டு பேரும் அவங்கவங்க பொறுப்பை உணர்ந்து கடமையை சரியா செஞ்சா இந்த உலகம் எப்பவும் உயிர்ப்போட மட்டும் இல்லாம அழகான உணர்வுகளை சுமந்து இருக்கும். “ என்றார் கமலி.
“ நீங்களும் மத்த எழுத்தாளர்கள் மாதிரிதான்.. நீங்க எழுதினது சரின்னு நிரூபிக்கிறதுக்காக… என்னென்னவோ சப்பைக் கட்டு கட்டுறீங்க… “என்று வெடுக்கென்று விஷல்யா கூறிட… “ நீயும் ஒரு சில வாசகர்கள் மாதிரியே… எதார்த்தத்தை புரிஞ்சுக்காம உன்னோட எதிர்பார்ப்பை என் எழுத்து மேல திணிக்க நினைக்கிற” என்று சிரித்த முகத்துடனேயே பதிலடி தந்தார் கமலி.
“ எதை எதார்த்தம்னு சொல்றீங்க… “ என்று விஷல்யா கோபமாய் துவங்க… “ பொண்ணுங்க குழந்தை பெத்துக்கிறது எதார்த்தம் இல்லையா?, குடும்பத்துக்காக ஆண்கள் உழைக்கிறது எதார்த்தம் இல்லையா?, இதுல நீ எதை எதார்த்தம் இல்லைன்னு சொல்லுற…” என்றார் கமலி.
பதில் கூறமுடியாமல் விஷல்யா அமைதியாகிட… “ பெண்ணியம் பேசுறேன்னு… பெண்களோட அடையாளத்தையே ஒரு சிலர் அழிச்சிட்டு இருக்காங்க, அவங்களோட கூட்டத்துல நீயும் சேராம, ஒரு விஷயத்தை கண்மூடித்தனமா எதிர்க்கிறதை விட, எதுக்காக எதிர்க்கிறோம்னு சரியான காரணத்தை தேடு. என்னோட எந்த கேள்விக்கும் நீ நேரடியா பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உனக்குள்ளேயே உனக்கான பதிலை தேடிக்கோ. “ என்றார் கமலி.
கமலி பேசிய வார்த்தைகள் ஏனோ மனதை குடைய… அதன் பின் ஏதும் பேசாமல் அங்கிருந்து கிளம்பும் வரை அமைதி காத்தாள் விஷல்யா.
தன்னிடம் அறிவுரை கேட்டு சென்ற பிறகு அமுதேவ்விடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை கவனித்த கண்ணன், அமுதேவ்வை தனிமையில் சந்தித்து… “ என்னப்பா உன் நடவடிக்கையில நிறைய வித்தியாசம் தெரியுது. ஆள் பார்க்கவும் ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கு. லைப் எப்படி போகுது?” என்று விசாரித்தார்.
“ லைஃப் ரொம்பவே சந்தோஷமா போகுது. எல்லாம் உங்க அட்வைஸ்ஸால தான். சரியான நேரத்துக்கு நீங்க மட்டும் என்னை சரியா கைட் பண்ணாம இருந்திருந்தா… என் லைஃபே தலைகீழா மாறி இருக்கும். “ என்று நன்றியுடன் கூறினான் அமுதேவ்.
“ நான் எதுவும் பெருசா பண்ணல, நீயே உன் தப்பை புரிஞ்சுகிட்டு சரியான வழிக்கு உன் லைஃபை திசை திருப்பிக்கிட்ட.. அதுதான் உன் சந்தோஷத்துக்கு காரணம். ஆமா உன்னோட இந்த மாற்றத்தை எப்படி உன்னோட வைஃப் அக்சப்ட் பண்ணிக்கிட்டா..?” என்றார் கண்ணன்.
“ ஏன் சார் வீட்டை விட்டு ஓடிப்போன உங்களையே உங்க வைஃப் அக்சப்ட் பண்ணிக்கும் போது, என் வைஃப் என்னை அக்சப்ட் பண்ணிக்க மாட்டாளா!” என்று நமட்டு சிரிப்புடன் வினவினான் அமுதேவ்.
“ இதுக்குத்தான் நம்ம சொந்தக் கதையை அடுத்தவங்களுக்கு சொல்ல கூடாதுன்னு சொல்றது. எவ்வளவு ஈசியா குத்திக்காட்டி பேசிட்ட… “ என்று கண்ணன் குறைபட… “ அச்சோ சாரி சார் சீரியஸா எடுத்துக்காதீங்க ஜஸ்ட் ஜோக்காக சொன்னேன். “ என்று மனம் வருந்தி கூறினான் அமுதேவ்.
“ நானும் ஜோக்குக்கு தான் சொன்னேன் தம்பி… “ என்று இயல்பாய் ஏற்று சிரித்தவர்… “ என் வைஃப் என் தப்பை மன்னிச்சு ஏத்துக்கிட்டது பெரிய விஷயம் இல்ல. ஏன்னா அவ ஒரு ரைட்டர். பொதுவா எழுத்தாளர் ஒரு தரப்பை மட்டும் யோசிக்க மாட்டாங்க. அவங்க எழுதுற கதையில இருக்கிற எல்லா கதாபாத்திரத்தோட கேரக்டராவும் அவங்களையே கற்பனை பண்ணிக்கிட்டு எல்லா தரப்புல இருந்தும் யோசிப்பாங்க. அதனால எங்களுக்குள்ள பிரச்சனை வந்தப்போ.. அவளோட பாயிண்ட் ஆஃப் வியூவை மட்டும் பார்க்காம, என்னோட சைடுல இருந்து யோசிச்சு பார்த்து என்னை புரிஞ்சுகிட்டா. ஆனா உன் வைஃப் அப்படி இல்லையே.. அதனாலதான் கேட்டேன்.” என்றார் கண்ணன்.
“ யுவர் வேர்ட்ஸ் ஆர் சோ ட்ரு சார். என் காயத்தையும் வலியையும் புரிஞ்சிக்காம, பிடிவாதமா எனக்கு பிடிக்காதவங்களுக்காக சப்போர்ட் பண்ணி பேசுறா. அண்ட் என்னோட மாற்றத்தை அக்சப்ட் பண்ணிக்கிட்ட அவகிட்ட இன்னும் எந்த மாற்றமும் தெரியல. பேபி விஷயத்துல என்ன மாதிரி டிசிஷன் எடுப்பான்னு கெஸ் பண்ணவே முடியல” என்றான் அமுதேவ்.
“ எந்த மாற்றமும் உடனே நடந்துடாது தம்பி. கொஞ்சம் டைம் குடுங்க எல்லாம் சரியாகும். “ என்று ஆதரவாய் ஆறுதல் கூறினார் கண்ணன்.
விருந்து உபசாரம் முடிந்து வீட்டை விட்டு கிளம்பும் போது, “ நீங்க சொன்ன மாதிரியே, நாங்க உங்க வீட்டுக்கு வந்துட்டோம். அடுத்து உங்க டர்ன்.. மேம்மை கூட்டிட்டு கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும் “ என்று தங்கள் வீட்டுக்கு விருந்தினராய் வரும்படி அழைப்பு விடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர் அமுதேவ் மற்றும் விஷல்யா.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த கட்டிட வேலையின் மத்தியில் அயராது உழைத்துக் கொண்டிருந்தவள், சில நாட்களாக வழக்கத்தையும் மீறிய அயர்வையும் அசதியையும் உணர ஆரம்பித்தாள்.
காலையில் எழும்போதே படுக்கையை விட்டு எழுந்திட முடியாமல் தலைசுற்றிட… “ என்னடா இது கொஞ்ச நாளா இப்படி போட்டு படுத்தி எடுக்குது… “ என்று தனக்குள் புலம்பிக் கொண்டவளுக்கு சட்டென்று நாள் கணக்கு நினைவில் வர… “ நாள் தள்ளிருக்கே… அப்போ இந்த தலை சுத்தலுக்கு காரணம்… அதுவா இருக்கோமா!” என்று யோசனையுடன் தனது அடிவயிற்றை மெதுவாய் வருடி பார்த்தாள் விஷல்யா.
“ என்ன மேடம் ஒரு வழியா எழுந்திரிச்சுடீங்களா?, வேலை வேலைனு ஓடிக்கிட்டே இருக்கிறதுல, உன்னை நீ கவனிச்சுக்கவே மாட்டேங்குற!, பாரு ஆள் பாதி ஆளா மெலிஞ்சு போயிட்ட.. “ என்று அக்கறையுடன் பேசியவன் மனைவிக்காக கலந்து வந்த தேனீர் கோப்பையை காட்டி…” போய் பிரஷ் பண்ணிட்டு வா டீ குடிக்கலாம்” என்று அழைத்தான் அமுதேவ்.
பல் துலக்கும்போதே.. குமட்டலை உணர்ந்தவள் அந்த உணர்வை கட்டுப்படுத்திக்கொண்டு அமுதேவ் இருக்குமிடம் வந்து சேர்ந்தாள்.
சரியான பதத்தில் மிதமான சூட்டில் இதம் தரும் சுவையுடன் இருந்த தேநீரை ஒரு மிடறு விழுங்கியவள்.. அடுத்த நொடியே குமட்டிக் கொண்டு வர.. குளியல் அறை நோக்கி ஓடினாள் விஷல்யா.
அவசரமாய் எழுந்து ஓடிய மனைவியை பின் தொடர்ந்து வந்த அமுதேவ். “ என்ன ஷாலு என்னாச்சு?” என்று பதற்றத்துடன் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே.. விழுங்கிய தேநீரைக் வெளியேற்றி இருந்தாள் விஷல்யா.
“ என்ன ஷாலு வாமிட்டா?, உடம்புக்கு எதுவும் முடியலையா ஹாஸ்பிடல் போகலாமா?” என்று பரிதவிப்புடன் வினவினான் அமுதேவ்.
முதலில் தனக்கு ஒரு தெளிவு வேண்டும். அதன் பின்னே கணவனுக்கு தான் இருக்கும் நிலையை தெரியப்படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டவள்… “ அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல அம்மு. நீ தான் சொன்னேல சரியா சாப்பிடுறது இல்லன்னு. அதனால அல்சர் வந்திருக்கும். வாமிட்டுக்கும் அதுதான் காரணமா இருக்கும். நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியா போயிடும். நான் இன்னைக்கு ஆபீஸ் போகாம வீட்டிலேயே இருந்து ரெஸ்ட் எடுக்கப் போறேன். சோ நீ என்னை நினைச்சு கவலைப்படாம, வேலைக்கு கிளம்பு. .” என்று ஒருவழியாக சமாளித்து அமுதேவ்வை அவன் பணியை கவனிக்கும் படி அறிவுறுத்தி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தாள் விஷல்யா.
அமுதேவ் சென்றதும்… அவசரமாய் ஆங்கில மருந்தகம் சென்றவள், கர்ப்பத்தை உறுதி செய்யக் கூடிய சிறு கருவியை வாங்கிக்கொண்டு, அதன் உதவியுடன் தன் கருவில் மலர்ந்திருக்கும் உயிரை உறுதி செய்து கொண்டாள்.
என்னவென்று சொல்ல முடியாத உணர்வில் தத்தளித்ததவள் மனத்திரையில் அமுதேவ் முகம் வந்து போனது. செய்தியறிந்த அவன் எப்படி துள்ளிக் குதிப்பான் என்று
ஒருமுறை எண்ணி பார்த்தவள் இதழும் இதயமும் சேர்ந்து மலர்ந்தது போல் புன்னகை செய்தது.
அடுத்த நொடியே தான் கையில் எடுத்திருக்கும் புது தொழில்முறை ஒப்பந்தத்தை எண்ணிப் பார்த்தவள் முகம் புன்னகையை விடுத்து இறுகிப் போனது. தன் தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தால் உருவாகும் கருவை கருவிலேயே அழித்து விடுவேன் என்று எந்தவித அலட்டலும் இல்லாமல் கூறியவள், மனம் தற்போது உள்ளுக்குள் அழுது புலம்ப துவங்கியது.
‘ அம்மு இதை எப்படி எடுத்துக்குவான்?, என்னை புரிஞ்சுக்குவானா?, எனக்கு சப்போர்ட்டா இருப்பானா?’ என்று தனக்குள்ளேயே கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே, கருவில் உருவான சிறு உயிரை கண்ணீருடன் வருடிக் கொண்டாள் விஷல்யா.