கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கும் போதே மாணவர்கள் அனைவரும் கல்லூரியின் கடைசி நாளை நண்பர்களின் மறு இணைவு தினமாக அறிவித்து வருட வருடம் அதே தேதியில் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்திருந்தனர்.
கல்லூரி முடிந்த சில வருடங்கள் அதனை முறையாக பின்பற்றியவர்கள் வருடங்கள் ஓடிட அவரவர் சொந்த பணி காரணமாக கூட்டத்திற்கு வருவதை தவிர்த்திருந்தனர். ஒரு சிலர் வர இயலவில்லை என்றாலும் மற்றவர்கள் வருடம் தவறாது நண்பர்கள் கூட்டத்தை நினைவில் கொண்டு ஒன்று கூடினர். அந்த வகையில் இன்று நடந்த கூட்டத்தில் அமுதேவ் திருமணத்தில் கலந்து கொண்ட நண்பர்கள் உட்பட இன்னும் சிலரும் வருகை புரிந்திருந்தனர்.
கூட்டம் நடக்கும் இடத்திற்குள் தனுஜூடன் வந்திருந்த அமுதேவ்வை கண்டதும் ஒரு குழு ஆரவாரம் செய்தது… “ டேய் புது மாப்பிள்ளை வந்துட்டாண்டா, “ என்று ஒருவன் குரல் கொடுக்க..” ஹனிமூன் போயிருக்கான்னு கேள்விப்பட்டேன் அதுக்குள்ள ஹனிமூன் ட்ரிப் முடிஞ்சிடுச்சா.?” என்று மற்றொருவன் வினவ.. “ எல்லாத்துக்கும் ஒரு எண்டு கார்டு போட்டு தான் ஆகணும்… “ என்று இன்னொருவன் குரல் கொடுக்க, “ நமக்கு பேச்சுலர் பார்ட்டி வைக்காம ஹனிமூனுக்கு தப்பிச்சு போனான்ல… நம்ம வயித்தெரிச்சல் தான் சீக்கிரமே இழுத்துட்டு வந்திருச்சு போல” என்று இன்னொருவன் கிண்டல் செய்தான்.
“ டேய் சும்மா இருங்கடா எதுக்கு இப்படி ஓவரா கலாய்க்கிறீங்க?, ஹனிமூன் போயிட்டு களைச்சுப் போய் வந்தாலும் பிரண்ட்ஸ்ஸை பாக்கணும்னு ஆசை ஆசையாய் ஓடி வந்து இருக்கான் அவனை போய் கலாய்ச்சுட்டு.. நீ வா தேவ்.” என்றான் அஸ்வின், அமுதேவின் நண்பன்.
“ அவங்க கலாய்ச்சா கலாய்ச்சுட்டு போகட்டும், நீ ஏன்டா தடுக்கிற” என்றான் தனுஜ்.
நீ எல்லாம் ஒரு நண்பனா என்பதுபோல் அமுதேவ் கோபமாய் முறைக்க… “ என்ன முறைக்கிற… அவன் சொன்னதுல என்ன தப்பு, உங்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுக்க நேரமில்லை. கல்யாணத்துக்கு ட்ரீட் வைக்க நேரமில்லை, ஹனிமூன் ட்ரிப் போக மட்டும் நேரம் இருக்கு.. “ என்றவன் கூடி நின்ற நன்பர்கள் புறம் திரும்பி.. “ கொஞ்சம் கூட பாவம் பாக்காதீங்க உங்களுக்கு எவ்வளவு ஓட்ட முடியுமா அவ்வளவு ஓட்டித் தள்ளுங்க. அதுக்கு தான் இவனை கட்டாயப்படுத்தி இங்க இழுத்துட்டு வந்திருக்கேன்” என்றான் தனுஜ்.
“ யூ டூ தனு… துரோகி…” என்று பொய்யான கோபத்துடன் முறைத்தான் அமுதேவ்.
“ நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல, அவன் ஒரு துரோகி கூடவே இருந்து குழி பறிக்கிறான்னு சொன்னேன்ல, அப்போ எல்லாம் என் பேச்சை கேட்காம இப்போ வந்து பொலம்புனா என்ன அர்த்தம்?” என்று குடிபோதையில் வாய் குளரியபடி கூறினான் வினோத்.
தனுஜ் முகம் குற்றவுணர்வில் வாடிட… அமுதேவ் முகம் எரிச்சலில் சுருங்கிட“ டேய் விடுடா அவனே போதைல உளறிட்டு இருக்கான். அவன் பேச்சை எல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு”என்று அமுதேவ் முக மாறுதலைக் கண்டு நண்பர்கள் இருவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்றான் அஸ்வின்.
“ இது ட்ரிங்க்ஸ் பார்ட்டி இல்லையே!, அப்புறம் எப்படி இவன் குடிச்சிருக்கான்!” என்று தனுஜ் வினவிட… “ இல்லடா பொண்ணுங்க யாரும் வரலன்னு சொல்லிட்டாங்க, அதனால பசங்க கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்துக்கிறாங்க “ என்றான் அஸ்வின்.
“ என்னடா அட்வான்டேஜ்.. மனசுல இருக்கிற கஷ்டத்தை எல்லாம் மறந்து காலேஜ் டேஸ் ஞாபகங்களை பேசி சந்தோஷமா இருக்கணும்னு தான் இந்த மாதிரி கெட் டு கெதர் பார்ட்டியையே அரேஞ்ச் பண்ணுறது. இங்க வந்து இப்படி குடிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்?, இவன் சும்மாவே போதையில பேசுற மாதிரி தான் புத்தி இல்லாம பேசுவான், இப்போ போதையில வேற இருக்கான்… என்னென்ன கலாட்டா பண்ணப் போறானோ?, நான் போய் பேசி அவனை வீட்டுக்கு அனுப்பி வைச்சுட்டு வரேன்” என்று அங்கிருந்து நகர்ந்தான் அமுதேவ்.
“ ஹே.. சில் தேவ்… இங்கே இருக்கிற பாதிப்பேர் குடிச்சு தான் இருக்காங்க.. போதையில இருக்குறவங்கள வெளிய அனுப்ப ஆரம்பிச்சா கெட் டு கெதர் பார்ட்டி நடத்த முடியாது. உனக்கு புடிக்கலையா அவனைக் கண்டுக்காத.. “ என்றான் அஸ்வின்.
“ சொசைட்டில அவனுக்குன்னு ஒரு பேர் இருக்கு இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல குடிச்சிட்டு ஏதாவது கலாட்டா பண்ணினா அவனோட பிசினஸ் கெரியர் ஸ்பாயில் ஆக சான்ஸ் இருக்கு. “ என்று நண்பனின் மீது இருந்த அக்கறையில் பேசினான் அமுதேவ்.
“ யா அக்சப்ட் யுவர் பாயிண்ட். பட் அவனுக்கு இப்போ ப்ராப்ளமே பிசினஸ்ல தான். கொஞ்ச நாளா அவனோட பிசினஸ் லாஸ்ல போயிட்டு இருக்கு போல, ரீசண்டா கிடைக்க வேண்டிய பெரிய ஆர்டர் கூட கைய விட்டு போயிருச்சு.. அந்த டென்ஷனை மறைக்கிறதுக்கு தான் இப்படி குடிச்சிட்டு இருக்கான்.” என்றான் அஸ்வின்.
“ஏன் என்ன ப்ராப்ளமா?” என்று அமுதேவ் அக்கறையுடன் விசாரிக்க..
“ தெரியலடா.. சரி விடுடா தெரியாததை பத்தி எதுக்கு பேசிகிட்டு.. அப்புறம் சொல்லு உன் மேரேஜ் லைப் எப்படி போகுது. ஃபர்ஸ்ட் நான் உன் கிட்ட சாரி கேட்கிறேன் உன்னோட கல்யாணத்துக்கு வர முடியல, ரியலி சாரி. சரியா அந்த நேரம் பார்த்து பிசினஸ் விஷயமா ட்ரிப் போகவேண்டி இருந்தது. “ என்று நண்பனிடம் மன்னிப்பு வேண்டினான் விஷ்வமித்திரன்.
“ இதுக்கெல்லாம் எதுக்கு சாரி கேட்டுட்டு விடுடா, உன் அப்பாவுக்கு அடுத்து கம்பெனி பொறுப்பை நீ எடுத்து நடத்துறன்னு கேள்விப்பட்டேன். ஒர்க் எல்லாம் எப்படி போகுது” என்றான் அமுதேவ்.
“ அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல எல்லாம் பர்பெக்ட்டா போகுது. உன் மிஸ்ஸையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே. கல்யாணத்துக்கு வராத என்னை மாதிரி ஆட்களுக்கு இன்ட்ரோ பண்ணி வைச்சிருக்கலாம். “ என்றான் அஸ்வின்.
“ வந்திருக்கலாம்.. பட் இப்போ தான் ட்ரிப் முடிச்சுட்டு வந்தோம். அவ கொஞ்சம் டயர்ட்டா இருந்தா அதான் கூட்டிட்டு வரல.. நெஸ்ட் டைம் கண்டிப்பா கூட்டிட்டு வர ட்ரை பண்றேன். “ என்றான் அமுதேவ்.
அதுவரை தூரத்திலிருந்து இருவருக்குமான பேச்சுவார்த்தையை கவனித்துக்கொண்டிருந்தவன்…” அதெல்லாம் கூட்டிட்டு வர மாட்டான். எப்படி கூட்டிட்டு வருவான். அவனோடு வைஃபை இங்க கூட்டிட்டு வந்தா இவன் கதை கந்தல் ஆகிடாதா?” என்றபடி அமுதேவ் அருகில் வந்தான் வினோத்.
“ என்ன சொல்ற வினோத்?” என்பதுபோல் அஸ்வின் பார்க்க… தவிப்புடன் அவனைத் தடுக்க முயன்றான் அமுதேவ்.
“ நான் என்ன சொல்றது, சார் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி இருக்காரே… அந்த மேடம் இவர் விருப்பப்பட்ட மாதிரி அடக்க ஒடுக்கமான ஆள் இல்ல. இவனையே ஏமாத்தி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா.. இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சதுக்கப்புறமும் சார் அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்த கால்ல நின்னு கல்யாணம் பண்ணிக்கிட்டார், அந்த அளவுக்கு லவ்வு. ” என்று அமுதேவ் திருமண கதையை விவரித்து ஏளனமாய் சிரித்தான் வினோத்.
“ லிசன் வினோ, யூ டாக்கிங் அபௌட் மை வைஃப் . ஜஸ்ட் செட் அப்… “ என்று அமுதேவ் கோபமாய் குரலை உயர்த்த..
“ ஐ நோ சி இஸ் யுவர் வைஃப். யூ நோ சீ இஸ் சீட்டர் ஆல்சோ… எனக்கு கிடைக்க வேண்டிய ப்ராஜெக்ட்டை.. தட்டிப் பறிச்ச சீட்டர். “என்று போதையில் வாய் குழறினாலும் மனதில் இருந்த வெறுப்பை மறைக்காமல் கொட்டினான் வினோத்.
“ எந்தப் ப்ராஜெக்ட் பத்தி பேசுற..?” என்று அமுதேவ் குழப்பமாய் வினவ… “ எந்த ப்ராஜெக்ட்ன்னு கூட உனக்கு தெரியலையா?, எஸ் பி கன்ஸ்டிரக்ஷன். அது எவ்வளவு பெரிய கம்பெனி. அந்தக் கம்பெனியோட ப்ராஜெக்ட் உன் வைஃப்க்கு கிடைச்சிருக்கு.. அதையே உன்கிட்ட இருந்து மறைச்சிருக்கானா… இதுல இருந்தே தெரியுது அவ எவ்வளவு பெரிய பிராடுன்னு.” என்றான் வினோத்.
“ என் ஒய்ஃப் எதையும் என்கிட்ட இருந்து மறைக்க மாட்டா… ப்ராஜெக்ட் பத்தி என்னோட டிஸ்கஸ் பண்ணி, நான் ஓகே சொன்னா தான் அந்த ப்ராஜெக்ட்லேயே சைன் பண்ணுவா, சோ மைன்ட் யுவர் லாங்குவேஜ். “ என்று எச்சரிக்கை விடுத்தான் அமுதேவ்.
“ ஓ… இதெல்லாம் உன் பர்மிஷனோட தான் நடக்குதா?, குட் நல்ல ஹஸ்பன்ட் நல்ல வைஃப்… “ என்று இளக்காரமாக கூறினான் வினோத்.
“ வினோத்… உனக்கு போதை அதிகமாகிடுச்சுன்னு நினைக்கிறேன்… என்ன பேசுறோம்னு புரியாம பேசிட்டு இருக்க, நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு” என்று மற்ற நண்பர்கள் வினோத்தை அங்கிருந்து அனுப்பி வைக்க முயல…
“ போதையா எனக்கா?, போதை எனக்கு இல்ல இவனுக்கு தான் காதல் போதை தலைக்கு ஏறிடுச்சு, அதனாலதான் அந்த ரவுடிக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கான். “ என்று வினோத் கூறி முடிப்பதற்குள் கோபத்தில் அவன் சட்டையை பற்றிய அமுதேவ். “ திஸ் இஸ் யூவர்ஸ் லாஸ்ட் வார்னிங், டோன்ட் டாக் அபவுட் ஹெர். “ என்று கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன் சீறினான் அமுதேவ்.
“நீ பழைய தேவ்வே இல்ல, காலேஜு டேஸ்ல எவ்வளவு கெத்தா இருப்ப.. ஒரு பொண்ணும் உன்னை நெருங்க முடியாது. உன்னையே சுத்தி சுத்தி வந்தாளே!, அவ பேர் என்ன?, அனந்திகா.. அவளை எல்லாம் நீ மனுஷியா கூட மதிக்கல, இப்போ என்னடான்னா பொண்டாட்டி காலுக்கடியில பூனைக்குட்டி மாதிரி கிடக்க.. இப்போ நீ கெத்து இல்ல வெறும் வெத்து…எங்கடா போச்சு உன்னோட கெத்து. பொண்டாட்டி முந்தானையில முடிஞ்சுட்டு வந்துட்டியா? “ என்று அமுதேவ் கோபத்தையும் பொருட்படுத்தாமல் புலம்பிக்கொண்டே சென்றான் வினோத்.
“ போதையில் ஏதோ உளறிட்டு இருக்கன்னு நானும் பொறுமையா பேசிட்டு இருந்தா என்னடா ஓவரா பேசுற.. “ என்று சட்டையில் இருந்து கையை அகற்றி விட்டு அருகில் இருந்த நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வினோத் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் அமுதேவ்.
“ என்னையே அடிச்சிட்டியா.. நான் பேசுறதே உன் நல்லதுக்கு தாண்டா.. அந்த எஸ்பி கன்ஸ்டிரக்ஷன் ஓனர் சரியான ஜொள்ளு பார்ட்டி. அவன்கிட்ட ஒரு ஆர்டர் வாங்கணும்னா அவன் கேக்குறத கொடுக்கணும்… எங்கள மாதிரி ஆட்கள்கிட்ட அவன் எதிர்பார்ப்பு வேற.. உன் பொண்டாட்டி மாதிரி அழகான பொண்ணுங்க கிட்ட அவன் எதிர்பார்க்கிறதே வேற… “ என்றான் வினோத்.
“ இவனை இங்கிருந்து இழுத்துட்டு போயிடுங்க இதுக்கு மேல என் கண்ணு முன்னாடி நின்னா கொலை பண்ணக் கூட தயங்க மாட்டேன்.. “ என்று கோபத்தின் உச்சத்தில் அமுதேவ் கத்திட… நண்பர்கள் சிலர் வினோத்தை அங்கிருந்து வற்புறுத்தி அழைத்துச் சென்றனர்.
கூடியிருந்த மற்ற நண்பர்கள் தங்களுக்குள் சலசலத்து கொள்ள.. எவர் முகத்தையும் காண விரும்பாமல் அங்கிருந்து அவசரமாய் வெளியேறினான் அமுதேவ்.
அவனைப் பின்தொடர்ந்து தனுஜ் வந்திட… அமுதேவ்வை தேடி வந்த அஸ்வின்.. “ வினோத் குடிச்சிட்டு பேசினாலும் அவன் சொன்னதுல ஒரு உண்மை இருக்கு. நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் எஸ்பி கன்ஸ்ட்ரக்ஷன் ஓனர் பெயருக்கு ஏத்த மாதிரி பெரிய மனுஷத் தன்மையா நடந்திக்கிற ஆள் இல்ல. சோ உன் வைஃபை கேர்ஃபுல்லா இருக்க சொல்லு.. “ என்றான் அஸ்வின்.
“ பீச்சுல ஒருத்தன் தப்பா பாத்ததுக்கே போட்டு புரட்டி எடுத்தவ என் ஷாலு. அவகிட்ட எவனும் வாலாட்ட முடியாது. “ என்று தன் மனைவியின் ஒழுக்கத்தின் மீதும் தைரியத்தின் மீதும் இருந்த நம்பிக்கையில் கர்வமாய் அறிவித்தான் அமுதேவ்.
“ நீ உன் வைஃபை அளவுக்கதிகமாக காதலிக்கிறேன்னு நினைக்கிறேன். அதனால தான் உனக்குன்னு இருந்த சில கொள்கை கோட்பாடு எல்லாம் மாத்திகிட்டு அவங்களை கேரிங்கா பார்த்துக்கிற.. ரியலி நீ கிரேட் டா.. உன் மிஸஸ் சோ லக்கி. “ என்று அமுதேவ்விடம் கைகுலுக்கி விட்டு அங்கிருந்து விலகி சென்றான் அஸ்வின்.
வாகனத்தில் ஏறி அமர்ந்த பின்னும் அதனை இயக்க மனமில்லாமல் வெகுநேரம் எதையோ தனக்குள் சிந்தித்துக் கொண்டிருந்தான் அமுதேவ்.
நண்பனின் முகபாவத்தை வைத்தே அவனது குழப்பமான மனநிலையை கணித்த தனுஜ்.. “ வினோத் பேசினது எல்லாம் பெருசா எடுத்துக்காத தேவ். அவனுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கலங்கிற ஆதங்கத்துல அப்படி பேசிட்டான்.. “ என்று நண்பனை சமாதானம் செய்ய முயன்றான் .
“ வினோத் கோபத்தில் பேசியிருந்தாலும் அவன் சொன்ன வார்த்தை உண்மை. ஷாலு ப்ராஜெக்ட் பத்தி சொன்னா, ஆனா அது எந்த கம்பெனி கூடன்னு நான் கேட்காம விட்டுட்டேன். எஸ்பி கன்ஸ்ட்ரக்ஷன் கூட தான் அவ ப்ராஜெக்ட் பண்ண போறான்னு தெரிஞ்சிருந்தா. எப்படியாவது அதை தடுத்து இருப்பேன். ஆனா இப்போ யார் சொன்னாலும் கேட்கிற மன நிலையில ஷாலு இல்ல. அவளுக்கு சப்போட்டா என் அம்மா வேற இருக்காங்க. சோ இந்த நிலைமையில நான் என்ன சொன்னாலும் அவ அதைக் கேட்க மாட்டா.. எனக்கு இப்ப என்ன பண்றதுன்னே புரியல. என்னால ஷாலுவையும் விட்டுக் கொடுக்க முடியல. அவளோட பிஸ்னஸ் எண்ணத்தையும் ஏத்துக்க முடியல.. என்ன பண்றதுனே தெரியாத குழப்பத்துல இருக்கேன்.” என்றான் அமுதேவ்.
“ ஐ திங்க் யூ நீட் கவுன்சிலிங்.. வைஃப் பிசினஸ்க்கு சப்போர்ட் பண்ற யார்கிட்டயாவது ஒப்பினியன் கேளு. உனக்கு ஒரு கிளாரிட்டி கிடைக்கும். மே பீ ஷாலுவை ஹாண்டில் பண்ற ட்ரீக் கூட உனக்கு அவங்ககிட்ட இருந்து கிடைக்கலாம். “ என்று ஆலோசனை வழங்கினான் தனுஜ்.
மனைவியின் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கணவன் என்றதும் அமுதேவ் மனதில் ஒருவர் முகம் வந்து போக.. “ ஹீ இஸ் ரைட் பர்சன். அவர்கிட்ட கண்டிப்பா எனக்கு ஒரு சொல்யூஷன் கிடைக்கும். “ என்றான் அமுதேவ்.
“ யாருடா உன் அப்பாவ தானே சொல்ற?” என்று தனுஜ் வினவிட.. என்ன உளறல் என்பதுபோல் நண்பனை வெறித்தான் அமுதேவ்.
“ ஏன்டா இப்படி பாக்குற?, நான் சரியா தானே சொன்னேன். உன் அம்மாவோட பிசினஸ்க்கு புல் அண்ட் ஃபுல்லா சப்போட்டா இருக்கிறது உன் அப்பா தானே சோ அவர் கிட்ட பேசினா தானே சரியா இருக்கும் “ என்றான் தனுஜ்.
“ நீ சொல்றது சரிதான். அப்பா அம்மாவோட பிஸினஸ்க்கு ஃபுல் சப்போட்டா இருக்காரு. பட் அவர் கிட்ட பேசினா விஷயம் நேரா அம்மாவுக்கு போகும் அம்மா கிட்ட இருந்து ஷாலுக்கு வரும். சோ நான் இப்ப பேச போறது அவர் கிட்ட இல்ல” என்றவன் தன் மனதில் தோன்றி மறைந்த நபரின் சந்திப்பு அட்டையை தேடி எடுத்தவன், அதில் அச்சிடப்பட்டிருந்த அவரது அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டான்.
எதிர்முனையில் அவனுக்கு சாதகமான பதில் வர “இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து மீட் பண்றேன் சார்” என்று அழைப்பை துண்டித்தான் அமுதேவ்.
“ யார் கிட்ட பேசின?” என்று தனுஜ் வினவ… “ உன்னையும் கூட கூட்டிட்டு தான் போகப் போறேன் அங்க வந்து யாருன்னு பார்த்துக்கோ… “ என்று தனது வாகனத்தை இயக்கி, தன்னைக் காண வரச் சொன்னவரின் இல்லம் நோக்கி விரைந்தான் அமுதேவ்.
நண்பர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் அன்றைய கூட்டத்தில் நடந்த நிகழ்வு அனைத்தையும் கல்லூரி நண்பர்கள் வாட்ஸ்அப் குழுவில் பகிரத்துவங்கினர்.
ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நட்பு வட்டாரத்தின் நடுவில் அமுதேவ் மற்றும் வினோத் சச்சரவு பெரும் பிரச்சினையாக பேசப்பட்டது. ஆண் நண்பர்களுடன் இணைந்து விவாதம் செய்ய விரும்பாத பெண்கள் தங்களுக்கு என்று தனியாக உருவாக்கிக் கொண்ட குழுவில் மேலும் இந்தப் பிரச்சினையைப் பற்றி அலசி ஆராயத் துவங்கினர்.
காதலுக்காக தன் குணத்தை மாற்றிக் கொண்டான் என்று அமுதேவ் குணம் குறித்து தொடங்கிய விவாதம் மேலும் விஷல்யாவின் குணத்தை விமர்சிப்பதில் வந்து நின்றது.
நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள் அதுபோல வினோத் சொன்னதில் ஏதாவது ஒரு உண்மை இருக்கும் என்று ஒரு சிலர் வாதிட…
உண்மை என்னவென்று தெரியாமல் ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசக்கூடாது என்று ஒரு சிலர் எதிர் வாதம் புரிந்தனர்.
அமுதேவ் மற்றும் விஷல்யா திருமண புகைப்படத்தை ஒருவர் பகிர்ந்து கொள்ள… “ இவங்கள எனக்கு ஏற்கனவே தெரியும்.. நான் இப்போ ஒர்க் பண்ற காலேஜ்ல தான் இவங்க படிச்சாங்க. ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீச்க்கு காலேஜிலிருந்து இவங்களை தான் இன்வைட் பண்ணி இருந்தாங்க. பொண்ணுகளும் அவங்களுக்குள்ள இருக்கிற திறமையை பயன்படுத்தி தனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கணும்னு அவ்ளோ அழகா பேசினாங்க!. அவங்க பேசுனத கேட்டு இம்ப்ரஸ் ஆகி பாதி பொண்ணுங்க அவங்களையே தங்களோட ரோல்மாடலாக ஏத்துக்கிட்டாங்க , அந்தளவுக்கு போல்ட் அண்ட் கிளவரா இருந்தது அவங்க ஸ்பீச். கண்டிப்பா வினோத் அவனுக்கு ப்ராஜெக்ட் கிடைக்காம போன காண்டுல தான், அவங்கள பத்தி தப்பா பேசி இருப்பான். “ என்று விஷல்யாவை பற்றி ஏற்கனவே அறிந்திருந்த பெண் தனக்கு தெரிந்த விபரங்களை கூறிட…
“ நீ சொல்றது சரி தான். அந்த வினோத்தும் ரொம்ப நல்லவன் இல்லையே. எப்பவுமே பொண்ணுகள மட்டமா தான் பேசுவான். தேவ் அவன் வைஃப்க்காக அவன் குணத்தையே மாத்திக்கிட்டத ஏத்துக்க முடியாம இப்படி கண்டதையும் கதை கட்டி விடுறான். “ என்று குழுவில் இருந்த பெண்கள் அனைவரும் ஒருமனதாக தேவ் மற்றும் விஷால்யாவை புரிந்து கொண்டு அவர்களுக்கு சாதகமாக பேசத் துவங்கினர்.