19… கடிவாளக் காதல்..
எனக்கான உரிமை கோரல்கள்
உன் உணர்வுகளை
காயப் படுத்திவிடுமோ என்று
உரிமைக் குரல் கொடுக்காமல்
இருக்கின்றேன்…
என் கடுமையான வார்த்தைகள்
உன் கனிவான இதயத்தை
காயப்படுத்திவிடுமோ என்று
கடுஞ்சொற்களை
எனக்குள்ளேயே வடிகட்டி
மென் சொற்களை மட்டுமே
உன்னிடம் அனுப்பிவைக்கிறேன்…
இருப்பினும் நீ காயப்படுகிறாய்..
உன்னிடம் சொல்லாமல்
மறைக்க நினைக்கும் கவலைகள்
என் கண்களில்
தேங்கி நிற்கக் கண்டு…
மூன்று இரவு நான்கு பகல்.. நீண்ட நெடுந்தூரக் கப்பல் பயணம்… இருவருக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்தியது.
இத்தனை ஆண்டுகளாய் இருவரும் சந்திக்காமல், ஒருவருக்கொருவர் காதலை பரிமாறிக் கொள்ளாமல் எப்படி வாழ்ந்தார்கள் என்று ஐயம் கொள்ளும் அளவிற்கு இருவருக்கும் இடையில் அன்னியோன்யம் அளவில்லாமல் அதிகரித்திருந்தது.
உணவு உண்ணும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்து, தாங்கள் தேனிலவு தம்பதிகள் என்று சொல்லால் சொல்லாமல் செயலால் உடன் இருந்த மற்ற பயணிகளுக்கு அறிவித்துக் கொண்டிருந்தனர் அமுதேவ் மற்றும் விஷல்யா.
நீண்ட நெடும் கப்பல் பயணம் ஒருவழியாக முடிவுக்கு வர, அந்தமான் நிக்கோபார் தீவு கூட்டங்களின் தலைநகரான போர்ட் பிளேரில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐந்து நட்சத்திர விடுதியில், கப்பலில் பயணம் செய்த களைப்பு தீர போதுமான அளவு ஓய்வு எடுத்துவிட்டு… சிறு குழந்தையின் ஆர்வத் துள்ளலுடன் அந்தமான் அழகை ரசிக்க புறப்பட்டனர் தேன்நிலவுத் தம்பதியினர்.
போர்ட் பிளேர் நகரத்திலிருந்து பவன் ஹான்ஸ் ஹெலிபாக்டர் சேவை மூலம் அந்தமான் நிக்கோபார் தீவு கூட்டங்களில் மிகப்பெரிய தீவாக திகழும் கிரேட் நிக்கோபர் தீவுக்கு வந்து சேர்ந்தவர்கள், தேனிலவு பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் இடமாக கருதப்படும் இந்திரா பாயிண்ட்டில், இந்தியாவின் மிகப் பெரிய கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து நீலப்பச்சை நீரால் சூழப்பட்டு வெண்மணற்ப் பரப்புடன் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் அழகை அணுவணுவாய் ரசித்தப்படி தங்கள் ரசனையைத் தொடர்ந்தனர்.
செல்லும் போது வான்வெளி வழியை தேர்வு செய்து பறந்து சென்றவர்கள், திரும்பும்போது நீர்வழித் தடத்தை தேர்வு செய்தனர். வழியில் லிட்டில் நிகோபார், நான்கௌரி மற்றும் கார் நிக்கோபார் என்று அழைக்கப்படும் வடக்கு நிக்கோபார் தீவுக் கூட்டங்களையும் அதன் அமைதியான அழகையும் ரசித்து வந்தனர்.
இந்திரா பாயிண்டிற்கு அடுத்தபடியாக பயணிகள் அதிகம் விஜயம் செய்யும் சுற்றுலாத் தலமாக பிரசித்தி பெற்ற ‘காம்ப்பெல் பே’ தேசியப்பூங்காவில், நிக்கோபார் ஸ்க்ரப் பவுல் மற்றும் மெகாபாட் எனும் இரண்டு அரிய காட்டு கோழியினங்களை பிரமிப்புடன் பார்த்து வந்தனர்.
காலனி ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயத் தளபதியாக இருந்த ஹென்றி ஹேவ்லாக் என்பவரது பெயரை தனதாக்கிக் கொண்ட ஹேவ்லாக் தீவு, அந்தமான் தீவுக்கூட்டங்களில் மிக முக்கியமான தீவாக புகழ்பெற்றுள்ள இந்தத் தீவு கோவிந்தா நகர், ராதா நகர், பிஜோய் நகர், ஷ்யாம் நகர் மற்றும் கிருஷ்ணா நகர் எனும் ஐந்து அழகிய கடற்கரைப்பகுதிகளை உள்ளடக்கியது.
ராதாநகர் கடற்கரைப்பகுதியில் ஸ்படிகம் போன்று மரகதப்பச்சை ஜொலிப்புடன் மின்னும் கடல்நீருக்கு அடியில் காட்சியளிக்கும் விதவிதமான பவளப்பாறைகளை கண்டு மகிழ்ந்தனர். இதன் அருகில் உள்ள ‘எலிபேண்ட் பீச்’ எனும் கடற்கரைக்கு நடந்தே சென்றனர். மேகத்தில் மிதப்பது போல் உவகைத் தந்த நடைபயணத்தை இருவரும் காதலுடன் கைகோர்த்தபடி மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஸ்கூபா டைவிங் மூலம் நீருக்கடியில் மூழ்கி விதவிதமான வண்ண மீன்கள், கடல் உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் வித்தியாசமான தோற்றத்துடன் அசையும் பவளப்பாறை வளர்ச்சிகள் போன்றவற்றை கண்ணுக்கருகே கண்டு களித்தனர்.
‘ஸ்கூபா டைவிங்’கிற்கு அடுத்தபடியாக டிரெக்கிங் எனப்படும் மலையேற்றத்துக்கு சென்று வந்தனர்.
பிஜோய் நகர் கிராமப்பகுதியில் கைவினைப் பொருட்கள் மற்றும் கடற்சிப்பிகளால் செய்யப்பட்ட நினைவுப் பரிசுகளை வாங்கினர்.
இந்திய அரசியல் கைதிகள் மற்றும் சுதந்திரப்போராட்ட வீரர்கள் சிறை செய்யப்பட்டு, மிகக்கொடுமையான அநீதிகளும் கொடுமைகளும் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வின் மௌனசாட்சியாக விளங்கும், 1800 வது ஆண்டுகளின் பிற்பகுதியில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட காலாபாணி எனப்படும் ‘செல்லுலர்’ சிறைச்சாலைக்கு சென்றனர்.
(பல ஆண்டுகளுக்கு முன்பு ‘சிறைச்சாலை’ என்று வெளியான திரைப்படம் இந்த நிஜ வளாகத்தில் நிஜமான சரித்திர சம்பவங்களோடு எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.)
செல்லுலர் சிறைக்கு அருகிலேயே அமைந்துள்ள நீர் விளையாட்டு வளாகத்தில் படகுப் பாராச்சூட் பறப்பு, வாட்டர் ஸ்கூட்டர், துடுப்புப்படகு, மிதவைப்படகு போன்ற ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவித்து மகிழ்ந்தனர்.
இரவு உறக்கத்திற்கு மட்டும் விடுதியை நாடியவர்கள்.. பகல் பொழுது முழுவதும் அந்தமான் தீவின் முக்கியமான சுற்றுலா தலங்களை உல்லாசமாய் சுற்றித் திரிந்தார்கள்.
எத்தகைய ரசனைக்குரிய இடமாயினும் தன் சொந்த இருப்பிடம் போல் இதம் தராது. அத்தகைய இதம் தரக்கூடிய இருப்பிடத்திற்கு தற்காலிக ரசனையை முடித்துக் கொண்டு இருவரும் நாடு திரும்ப வேண்டிய நாளும் வந்தது.
“ இந்த பத்து நாள் எப்படி போச்சுன்னே தெரியல ஷாலு.. நாள் படபடன்னு ஓடிட்ட மாதிரி இருக்கு. திரும்பிப் போக மனசே வரல.” என்று தேனிலவு பயணத்தை முடித்துக் கொள்ள மனமில்லாமல் அலுத்துக் கொண்டான் அமுதேவ்.
“ நீ சொல்றதும் சரிதான்.. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத இடம் தான் அதுக்காக நம்ம வேலையெல்லாம் விட்டுட்டு நிரந்தரமா இங்கேயே இருந்திட முடியுமா?, உனக்காவது தனுஜ் இருக்காரு.. ஒர்க் பெண்டிங் இல்லாம நடந்துகிட்டே இருக்கும். ஆனா எனக்கு அப்படி இல்லையே.. ஆபீஸ்ல நான் இல்லாம ஒரு வேலையும் ஓடாது. “ என்று தனது கையிலிருந்த அலைபேசியில் ஒருவித பதட்டத்துடன் எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தாள் விஷல்யா.
“கொஞ்ச நேரம் கூட உன்னால என் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல. இதுவே ஃபார்மல் ஹவுஸ் வைஃப்பா இருந்திருந்தா அதுக்குள்ள கிளம்பனுமான்னு எனக்கு பதிலா நீ தான் புலம்பி இருப்ப, இதுக்கு தான் சொல்றேன் உன் ஆபீஸ் வேலை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டு எனக்காக மட்டும் இருன்னு, இங்க இருந்து போனதும் முதல்ல உன் ஆபீசை மூடனும் அப்பதான் நீ நார்மலா பிகேவ் பண்ணுவ!. ” என்று நாசுக்காக தனது விருப்பத்தை வலியுறுத்தினான் அமுதேவ்.
எதைப் பற்றிப் பேசத் துவங்கினாலும் இறுதியில் இதைத்தான் சொல்வான் என்று ஏற்கனவே அறிந்திருந்த விஷல்யா, தன் கணவனின் வார்த்தையில் கவனம் செலுத்தாமல் கையிலிருந்த அலைபேசியில் தனது முழு கவனத்தையும் செலுத்தியிருந்தாள்.
“என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன், எனக்கு பதில் சொல்லாம, நீ மொபைல பார்த்துட்டு இருக்க, அப்படி அந்த மொபைல்ல என்ன தான் இருக்கு..” என்று மனைவியின் கையிலிருந்த அலைபேசியை அவள் அனுமதியின்றி பிடுங்கினான் அமுதேவ்.
“ என்ன அம்மு.. எதுக்கு இப்போ இப்படி சைல்ட்ஷ்ஷா பிஹேவ் பண்ணுற?” என்று அவன் கையில் இருந்த அலைபேசியை கைப்பற்ற முயன்றாள் விஷல்யா.
“ நான் சைல்ட்ஷ்ஷா பிஹேவ் பண்ணுறேனா..!, அப்படியே இருந்துட்டு போகட்டும். உன்னை விட்டா வேற யார் கிட்ட என்னால இப்படி விளையாட முடியும். நான் குழந்தைத் தனமா நடந்துக்கும் போது, நீ எனக்கு அம்மாவா மாறிடு. சாப்பாடு ஊட்டி விடு, மடியில படுக்க வைச்சு தூங்க வை, என்னை விட்டா வேற யாருக்கு நீ இந்த வேலை எல்லாம் செய்யப் போற.. நம்மக் குழந்தைகளுக்கு செய்வ அது வேற விஷயம். “ என்று கண்ணடித்து கிண்டல் செய்து… போர்க் களத்தில் போராடும் எதிரி போல தன்னருகில் நெருங்கி நின்று அலைபேசியை கைப்பற்ற முயன்றவளை இடைப்பற்றி தன்னோடு இறுக்கிக்கொண்டான் அமுதேவ்.
“ குழந்தையா! விளையாடாத அம்மு ஒர்க் சம்பந்தமா மெயில் வந்திருக்கான்னு செக் பண்ணனும். மொபைலை குடு “ என்று தன்னவன் இறுகிய பிடியிலிருந்து விடுபட முயன்றாள் விஷல்யா.
“நான் முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசிட்டு இருக்கேன் நீ என்னடானா இந்த மொபைலை பிடுங்கிறதுலையே குறியா இருக்க!, என்னை விட உனக்கு மொபைல் தான் முக்கியமா?,” என்று சிறு எரிச்சலுடன்… அலைபேசியை கொடுக்க மறுத்து.. அறையின் உள்ளேயே அங்கும் இங்கும் சிறு ஓட்டம் பிடித்து ஆட்டம் காட்டினான் அமுதேவ்.
அவன் செய்கையில் உண்டான எரிச்சலுடன்.. “ ஆமா எனக்கு உன்னை விட மொபைல் தான் முக்கியம்.. சும்மா குரங்கு மாதிரி அங்கயும் இங்கயும் குதிச்சுட்டு திரியாம மொபைல திருப்பிக் கொடு அம்மு. “ என்று கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன் கத்தினாள் விஷல்யா.
“ குட் வெரி குட், இப்பவாது உன் மனசுல இருக்குற உண்மை வெளிய வந்ததே! உனக்கு என்னை விட இது தான் ரொம்ப முக்கியம் அப்படித்தானே!… இந்தா வச்சுக்கோ உன்னோட மொபைல், இதையே கட்டிட்டு அழு. “ என்று கையில் இருந்த அலைபேசியை கோபமாய் கட்டிலில் எறிந்துவிட்டு. தனது வெறுப்பை வெளிக்காட்டும் விதமாய் அறையின் கதவை ஓங்கி அறைந்து சாற்றிவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றான் அமுதேவ்.
“ இவன் ஒருத்தன்.. சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டுட்டு, “ என்று கணவனின் செய்கை குறித்து சலித்துக்கொண்டபடி, அவன் வீசி எறிந்த அலைபேசியை எடுத்து மீண்டும் ஆராயத் துவங்கியவள், தான் எதிர்பார்த்த செய்தி கிட்டிய மகிழ்வுடன் கோபமாய் வெளியேறிச் சென்றவனைத் தேடிச் சென்றாள் விஷல்யா.
இங்கு வந்ததிலிருந்து இருவருக்கும் வெகு பரிட்சயமான மற்றும் ரசனைக்குரிய இடமான கடல் அழகை ரசித்தபடி உணவருந்தக் கூடிய உணவகத்திற்கு தான் தன் கணவன் சென்றிருப்பான் என்று சரியாக யூகித்தவள் அவனைத் தேடி அந்த இடத்திற்கே வந்து சேர்ந்தாள்.
“ இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு, இங்க வந்து இப்படி மூஞ்சிய தூக்கி வச்சிட்டு உட்கார்ந்திருக்க… “ என்று விசாரித்தபடி அவனுக்கு முன் இருந்த காலியான இருக்கையில் வந்து அமர்ந்தாள் விஷல்யா.
“ இதுக்கு மேல என்ன சொல்லணும்.. “ என்று கையைக் கட்டிக்கொண்டு கடலை வெறித்தபடி பதில் தந்தான் அமுதேவ்.
“ ஏதோ அந்த நேரத்துல கோபமா பேசிட்டேன், அதுக்காக இப்படியா விட்டுட்டு வருவ…” என்று விஷல்யா வினவிக் கொண்டிருக்க… உணவக ஊழியர் ஒருவர், சிலபல பதார்த்தங்களை கொண்டுவந்து மேஜையில் அடுக்கிவிட்டு சென்றார்.
தான் விரும்பி உண்ணும் உணவு வகைகளையே அமுதேவ் வரவழைத்திருக்க.. “ சோ, உன்னைத் தேடி நான் வருவேன்னு உனக்கு தெரிஞ்சிருக்கு, அதனாலதான் எனக்கு பிடிச்ச ஐட்டமா ஆர்டர் பண்ணி இருக்க அப்படித்தானே!” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி எள்ளலுடன் வினவினாள் விஷல்யா.
“உனக்காக தான் ஆர்டர் பண்ணுனேன்னு.. யாரு சொன்னது. இதெல்லாம் நான் சாப்பிடுறதுக்கு, எதையாவது தொட்ட… எனக்கு கெட்டக் கோபம் வந்துடும்.. “ என்று உணவில் கை வைக்கச் சென்றவள் கரத்தை தட்டிவிட்டு, தன்னை கோபப்படுத்தியவளை வெறுப்பேற்றும் விதமாக பார்க்க வைத்து உணவை உட்கொள்ள தொடங்கினான் அமுதேவ்.
“ என்னைப் பார்த்தா உனக்கு பாவமா இல்லையா அம்மு… பயங்கர பசி டா.. கொஞ்சம் மட்டும் எடுத்துக்குறேன்” என்று கண்களால் கெஞ்சியபடியே.. உணவில் கைவைக்க.. அவள் கரத்தில் ஓங்கி அடித்து.. “ என்னை விட உனக்கு உன் போன் தான் முக்கியம்னு சொன்ன இப்போ மட்டும் எதுக்கு இந்தக் கொஞ்சு கொஞ்சுற…. இப்போ சொல்லு உனக்கு நான் முக்கியமா இல்ல உன்னோட மொபைல் முக்கியமா?” என்று தட்டை அவன் பக்கம் நகர்த்திக் கொண்டு வினவினான் அமுதேவ்.
அடிபட்ட கரத்தை தடவியபடி “ரெண்டுமே இல்ல எனக்கு சாப்பாடு தான் முக்கியம்.. ” என்று அவசரமாய் அவன் நகர்த்தி வைத்த உணவுத் தட்டை தன்புறம் இழுத்து உண்ணத் துவங்கினாள் விஷல்யா.
“ வாலு ஷாலு…” என்று அதுவரை கொண்டிருந்த கோபம் மறந்து தன்னவள் செய்கையை ரசித்து சிரித்தவன். “ பசியோட இருப்பேன்னு தெரியும்.. ஆனா இந்தளவுக்கு பசியா இருப்பன்னு நினைக்கல, “ என்று மனைவி உண்ணும் வேகத்தைப் பார்த்து நகைத்தபடி கூறியவன், தங்களுக்குள் சண்டை மூண்ட காரணத்தை நினைவில் கொண்டுவந்து. “ சாப்பிட கூப்பிட்டு போகலாம்னு தான் பேச்சை ஆரம்பிச்சேன், அதுக்குள்ள நீ என்னென்னவோ பேசி என் மூடயே ஸ்பாயில் பண்ணிட்ட!, என்னை விட உன் மொபைல் தான் முக்கியம்னு சொல்லவும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?, ஆமா நான் எப்பவும் போல சகஜமா தானே உன்கிட்ட வம்புக்கு இழுத்தேன். நீ எதுக்கு தேவையில்லாம அப்படிக் கோபப்பட்ட?. ” என்று நிகழ்ந்த சம்பவத்திற்கு விளக்கம் கேட்கும் விதமாய் வினவினான் அமுதேவ்.
“ கோபப்பட்டதுக்கு சாரி அம்மு உன்னை கோபப்படுத்தும்னு அப்படி பேசல.. ஒரு இம்பார்டன்ட் மெயில் வரவேண்டி இருந்தது, அதை தான் செக் பண்ணிட்டு இருந்தேன் அந்த நேரம் நீ மொபைல பிடுங்கவும் சட்டுனு கோபம் வந்துடுச்சு. நான் எந்த மூட்ல இருக்கேன்னு தெரியாம நீ விளையாடவும் இன்னும் டென்ஷன் அதிகமாகிடுச்சு, எப்படியாவது உன் கையில இருந்து மொபைலை வாங்கினாப் போதும்னு தான் அப்படி சொன்னேன்.. “ என்று தனது செயலுக்கு காரணம் கூறி மன்னிப்பு வேண்டினாள் விஷல்யா.
“ இம்பார்டன்ட் மெயில்லா?, என்னை விட இம்பார்டன்ட்டா! அப்படி அந்த மெயில்ல என்ன இருந்தது? ” என்று உள்ளுக்குள் இருந்த ஆர்வத்தை மறைத்து சிறு அலட்சியத்துடன் வினவினான் அமுதேவ்.
“ அதுவா… சொல்லுறேன் அதைச் சொல்லத் தான உன்னைத் தேடி வந்தேன், அதுக்கு முன்னாடி என் வயித்தை கவனிச்சுக்கிறேன்” என்று உணவில் கவனம் செலுத்தியவளை விசித்தரமாய் பார்த்தவன், “ என்னாச்சு?” என்று கணிக்க முடியாத குரலில் வினவினான் அமுதேவ்.
“ என்ன என்னாச்சு?” என் ஒன்றும் விளங்காதது போல் வினவினாள் விஷல்யா.
“ அதைத்தான் நான் உன்கிட்ட கேக்குறேன், நீ இப்படி சாப்பாட்டுக்கு பறக்கிற ஆள் இல்லையே.. இன்னைக்கு என்னவோ இனிமே சாப்பாட்டையே கண்ணுல பாக்க முடியாதுங்கிற மாதிரி பசி பசின்னு பொலம்புற என்னாச்சு உனக்கு?” என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி.
‘ ஆபீஸ்ஸை இழுத்து மூடிட்டு வீட்டில இருக்க சொல்லுற.. உன்கிட்ட பெரிய ஆஃபர் கிடைச்சிருக்கிற விஷயத்தை சொன்னா என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவன்னு நினைக்கும் போதே பக்குனு இருக்கு!, ஆர்க்யூ பண்ண ஆரம்பிச்சாச்சுன்னா சாப்பாட்டை கண்ணுல பார்க்க முடியாதுல!, அதனாலதான் இப்பவே ஒரு வெட்டு வெட்டிக்கிறேன். அது மட்டும் இல்ல உன்கிட்ட ஆர்க்யூ பண்ண எனக்கும் எனர்ஜி வேணுமே!’ என்று தனக்குள்ளேயே பெரிதாய் புலம்பிக் கொண்டவள்.. கணவனின் கேள்விக்கு பதில் சொல்லாமலேயே கருமமே கண்ணாக உணவை உண்டு முடித்தாள்.
தன் கேள்விக்கு பதில் வரவில்லை என்றாலும் தன்னவள் அவசரத்தில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்துகொண்ட அமுதேவ், “ எனக்கு என்னமோ உன்னை பாத்தா நார்மலா இருக்கிற மாதிரி தெரியல, ஏதோ பெரிய பிரச்சனையை பத்தி டிஸ்கஸ் பண்ண ரெடியாகுற மாதிரி இருக்கு. “ என்றான்.
‘ மைண்ட் ரீடிங் மாதிரி இவனுக்கு ஃபேஸ் ரீடிங் தெரியுமா என்ன?, கரெக்டா கண்டுபிடிச்சுட்டான்’ என்று விஷல்யா தனக்குள் எண்ணிக்கொள்ள… “ எப்படி கரெக்டா கண்டுபிடிச்சேன்னு யோசிக்கிறியா?” என்றான் அமுதேவ்.
ஆமாம் என்பது போல் தன்னை மறந்து தலையசைத்தவள், இல்லை என்பது போல் வேகமாய் மறுத்து தலையசைத்து… “ அதுவந்து அம்மு… நான் என்ன பேசனும்னு நினைச்சேன்னா” என்று தயக்கத்துடன் இழுக்க..
மனைவியின் முகத்தில் வழக்கத்துக்கு மாறான தடுமாற்றத்தைப் படித்தவன்.. “இப்போ எதுவும் பேச வேணாம். எதுவா இருந்தாலும் ரூம்க்கு போய் பேசிக்கலாம். “ என்று தடுத்தான் அமுதேவ்.
“ நீ சொன்னா சரிதான்.. நீயும் சாப்பிட்டு முடி, ரூம்க்கு போய் பேசிக்கலாம்” என்று அப்போதைக்கு நிம்மதியை உணர்ந்து பெருமூச்சை வெளியேற்றினாள் விஷல்யா.
ஆராயும் பார்வையுடன் மனைவியை பார்த்தபடி இரவு உணவை முடித்தவன்.. அதற்கான பணத்தை செலுத்திவிட்டு விஷல்யாவுடன் அறைக்கு வந்து சேர்ந்ததும், “ இப்போ சொல்லு என்னப் பிரச்சனை?” என்று அதுவரை ஒத்திவைத்திருந்த கேள்வியை எழுப்பினான் அமுதேவ்.
“பிரச்சனை இல்ல அம்மு, அதுவந்து… “ என்று எப்படித் துவங்குவதென்று தெரியாமலும் சொன்னால் இவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்று புரியாமலும் தயங்கி நின்றவள், அமுதேவ் முகத்தில் தோன்றி மறையும் கலவரத்தை கவனித்து, “ நீ இந்த அளவுக்கு டென்ஷனாக வேண்டிய அவசியம் இல்லை அம்மு. குட் நியூஸ் தான் சொல்லப் போறேன்,” என்றாள் விஷல்யா.
“ நீ தயங்குறதைப் பார்த்த அது குட் நியூஸ்ஸா இருக்கும்னு தோணலையே!” என்றான் அமுதேவ்.
“ உனக்கு எப்படியோ எனக்கு இது குட் நியூஸ் தான் .. “ என்று விஷல்யா வெடுக்கென்று பதில் தர.. “ முதல்ல விஷயம் என்னன்னு சொல்லு அது குட் நியூஸா இல்லையான்னு நான் சொல்றேன்.. “ என்று அவள் பாணியிலேயே பதில் தந்தான் அமுதேவ்.
“ ஒரு பெரிய கன்ஸ்டிரக்ஷன் கம்பனி அவங்களோட புது ப்ராஜெக்ட் இன்டீரியர் டிசைனிங் ஒர்க்க என் கம்பெனிக்கு கொடுத்திருக்காங்க. சென்னைக்கு போனதும் பார்மாலிட்டிக்காக ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ணிட்டு ப்ராஜெக்ட் வொர்க் ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான் “ என்று அமுதேவ் மனநிலை குறித்து அதுவரை கொண்டிருந்த கவலை மறந்து உற்சாகத்துடன் தனக்கு வந்த தகவலை அறிவித்தாள் விஷல்யா.
“ சோ இதுதான் நீ சொல்ல வந்த குட் நியூஸ் அப்படித்தானே!” என்று எதையும் வெளிக்காட்டாத குரலில் வினவினான்.
“ என்ன இவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட!, அது எவ்வளவு பெரிய கம்பெனி தெரியுமா?, இது என்னோட ட்ரீம் ப்ராஜெக்ட்டா இருக்கப் போகுதுன்னு நினைக்கிறேன், இது மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா இதே மாதிரி நிறைய ப்ராஜெக்ட் கிடைக்கும்..” என்று கண்களில் கனவுகளை தேக்கிக் கொண்டு மகிழ்வுடன் கூறினாள் விஷல்யா.
“ ஹே லிசன்.. நம்ம ஃபீல்டுல யாரையும் நம்ப முடியாது. யாரு எந்த நேரம் எப்படி மாறுவாங்கன்னு தெரியாது. அதுவும் நீ சொல்ற மாதிரி பெரிய கம்பெனியா இருந்தா கேட்கவே வேணாம்.. இதுவரைக்கும் உன் கூட பிரெண்டா இருந்தவங்க கூட பொறாமையில எனிமியா மாறிடுவாங்க. உன் கூடவே இருக்கிற மாதிரி இருக்கும்.. ஆனா பின்னாடி உனக்கு எதிரா வேலை பார்த்துட்டு இருப்பாங்க. உனக்கு ப்ராஜெக்ட் கொடுக்கிற கம்பெனிக்காரன் மட்டும் சும்மா இருப்பானா?, ஒரு ப்ராஜக்டை கையில் கொடுத்துட்டு உன்னை கொத்தடிமை மாதிரி வேலை வாங்குவான். இந்த மாதிரி சுவிட்ச்வேஷனை ஹேண்டில் பண்றது உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அதனால ட்ரீம் ப்ராஜெக்ட் அது இதுன்னு கண்டதையும் கனவு கண்டு கற்பனைக்கோட்டை கட்டாம, உன்னால எது முடியுமோ அதுல மட்டும் கவனத்தை செலுத்து, இப்போதைக்கு கையில இருக்கிற வேலையை முடிச்சுக் கொடுத்துட்டு நிம்மதியா வீட்ல இருக்கிற வழியை பாரு“ என்று எச்சரித்தபடியே ஆலோசனை வழங்கினான் அமுதேவ்.
“ எதுக்கு இப்போ இப்படி பயம் காட்டுற!, நான் ஒன்னும் உலகம் தெரியாத சின்னப் பொண்ணு இல்ல. நீ என் லைஃப்ல வரதுக்கு முன்னாடி இருந்தே நான் இந்த ஜாப் பண்ணிட்டு இருக்கேன். யார் கிட்ட எப்படி நடந்துக்கணும், யாருக்கு எந்த மாதிரி பதிலடி கொடுக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். யூ டோன்ட் வொரி “ என்றாள் விஷல்யா.
அதுவரை கடைபிடித்த நிதானத்தை கைவிட்டு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி.. “ உனக்கு பொறுமையா சொன்னா புரியாதா?. எல்லாரையும் உன்னை மாதிரியே யோசிக்காத!, இந்த உலகம் நீ நினைக்கிற மாதிரி இல்ல. தப்பு பண்றதுக்கு தயங்கிட்டும், துரோகம் பண்றதுக்கு நடுங்கிட்டும் இருந்த காலம் என்னைக்கோ மலையேறிப் போச்சு. முகத்துக்கு நேரா சிரிச்சிட்டு முதுகுல குத்துற ஆட்கள் தான் இங்க அதிகம். உன்னால இந்த மாதிரி டபுள் கேம் விளையாடுற மனுஷங்களோட சர்வே பண்ண முடியாது. உன் நல்லதுக்கு தான் சொல்றேன் உனக்கு இந்த ப்ராஜெக்ட் வேணாம்.. “ என்றான் அமுதேவ்.
இதுதான் தனக்கான பதிலாக இருக்கும் என்று ஏற்கனவே அறிந்திருந்த விஷல்யா… “ நீ வேணான்னு தான் சொல்லுவன்னு எனக்கு தெரியும், ஆனா அதுக்கு இப்படி ஒரு காரணத்தை சொல்லுவன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல. இவ்ளோதான் உன் காரணமா இல்லை இதுக்கு மேல வேற ஏதாவது இருக்கா?” என்று நிதானமாகவே வினவினாள்.
“ இவ்வளவுதான்னு சொல்ல முடியாது. இன்னும் சில விஷயத்தை யோசிச்சு தான் வேணாம்னு சொல்றேன். அது என்ன காரணம்னு உனக்கே நல்லா தெரியும்” என்றான் அமுதேவ்.
“ என்ன பெரிய பொல்லாத காரணம் , பொண்ணுங்க வீட்டுக்குள்ளேயே இருந்து வீட்டு வேலையை மட்டும் செய்யணும், கனவையெல்லாம் தொலைச்சிட்டு கணவனே கதின்னு ஆம்பளைங்க காலடியில கிடக்கணும், இதுதான நீ யோசிச்ச சில விஷயம் ” என்று எரிச்சலுடன் வினவினாள் விஷல்யா.
“ நீ என்னோட காதலியா மனைவியா என் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவா இருந்தா மட்டும் போதும், என் காலடியில கிடக்கணும்னு அவசியம் இல்ல. நான் அதை உன்கிட்ட எதிர்பார்க்கவும் இல்ல. “ என்று எதிரில் இருந்தவளின் எரிச்சலுக்கு பயந்தோ என்னவோ அமைதியாகவே பதில் தந்தான் அமுதேவ்.
“ ஓ… இதை உன்னோட பெருந்தன்மைனு நினைச்சு நான் பெருமைப் படனும் அப்படித்தானே!” என்று அதுவரை அடக்கி வைத்திருந்த கோபத்தை வெளிப்படுத்தும் விதமாய் ஒற்றை புருவம் உயர்த்தி கொதிப்புடன் வினவினாள் விஷல்யா.
“ நீ என்ன நினைச்சாலும் சரி, ஐ அம் நாட் ஃவொரி ஃஅபவுட் தட். எப்பவும் நீ நினைச்சது மட்டும்தான் நடக்கனும்னு பிடிவாதம் பிடிக்காம என் பேச்சைக் கேளு. இந்த ப்ராஜெக்ட் உனக்கு வேணாம் “ என்று நிதானமாக அதே நேரத்தில் தீர்மானமாக கூறினான் அமுதேவ்.
“ வாட் ரப்பிஷ். என்ன ப்ராஜெக்ட், எந்த கம்பெனிக்கூட வொர்க் பண்ண போறேன்னு இப்படி எதுவுமே தெரியாம வேணாம்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்றாள் விஷல்யா.
“ ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிற ஷாலு, எந்தக் கம்பெனியா இருந்தா என்ன?, பெரிய பிராஜக்ட்னு சொல்லுற எப்படியும் வொர்க் முடிய ரொம்ப நாளாகும், மாசக் கணக்கா உன் வேலையை மட்டுமே கவனிச்சுட்டு இருந்தா வீட்டை யாரு பார்த்துக்கிறது. அது மட்டும் இல்ல நமக்கு இப்ப தான் கல்யாணம் ஆகிருக்கு. அடுத்து குழந்தைகளை பத்தி யோசிக்கணும். நீ உன் வேலையிலேயே பிசியா இருந்தா நாம அடுத்த ஸ்டெப்க்கு எப்போ மூவ் ஆகுறது. “ என்றான் அமுதேவ்.
“ நானும் அதையே தான் சொல்றேன், இப்பதான கல்யாணமாயிருக்கு அதுக்குள்ள குழந்தைக்கு என்ன அவசரம்?, நான் என் பிசினஸ்ல ஏதாவது சாதிக்கணும். அதுக்கப்புறம் தான் என்னால குழந்தைகளைப் பத்தி யோசிக்க முடியும்.” என்று பதில் தந்தாள் விஷல்யா.
வெகு காலமாய் தனக்குள் உழன்று கொண்டிருக்கும் கேள்விக்கு விடை தேடும் விதமாய் எதிரில் இருந்தவள் முகத்தை கூர்ந்து கவனித்தபடி, “சப்போஸ் ப்ராஜெக்ட் வொர்க் போயிட்டு இருக்கும் போதே இடையிலேயே நீ கன்சீவ் ஆகிட்டா என்ன செய்வ?” என்றான்.
சிறிதும் சஞ்சலம் இல்லாமல் தன்னிடம் கேள்வி எழுப்பிவன் விழி நோக்கி, “ ஃஅபாட் பண்ணிடுவேன். எனக்கு ஃபர்ஸ்ட் என் கெரியர் தான் முக்கியம். “ என்று அலட்சியமாக பதில் தந்தாள் விஷல்யா.
கோபமும் வெறுப்பும் முகத்தில் போட்டி போட்டுக்கொண்டு பிரதிபலிக்க..” என்னது அபாட் பண்ணிடுவியா?, எவ்வளவு தைரியம் இருந்தா இதை என்கிட்டயே சொல்லுவ? உன்னை எல்லாம் பொண்ணுன்னு சொல்லவே வெட்கமா இருக்குடி.. ” என்று உள்ளத்தின் வெறுப்பை மறைக்காமல் குரலில் வெளிப்படுத்தினான் அமுதேவ்.
“ சும்மா பொண்ணு பொண்ணுன்னு சொல்லி அடக்கிவைக்க நினைக்காத!, பொண்ணா இருந்தாலும் எங்களுக்கும் கனவும் லட்சியமும் இருக்கு. குடும்பம் குழந்தை குட்டின்னு என் கனவை அழிச்சிக்க என்னால முடியாது. “ என்று பதிலுக்கு எரிந்து விழுந்தாள் விஷல்யா.
“ உன்னை விட்டு விலகி தானே இருந்தேன். கட்டுனா என்னை தான் கட்டுவேன்னு பொய் சொல்லி ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு, இப்போ ஏன் இப்படி சாவடிக்கிற.. “ என்றவன் அறையின் மூலையில் கிடந்த நாற்காலியில் சோர்வுடன் அமர்ந்தான் அமுதேவ்.
அவன் அருகில் சென்று நின்றவள்…“ ஆமா பொய் சொல்லி தான் கல்யாணம் பண்ண நினைச்சேன். பிகாஸ் ஐ லவ் யூ சோ மச். நீ இல்லாத லைஃப் என்னால யோசிச்சு பார்க்க முடியல. என்ன நடந்தாலும் சரி உன்னை விட்டுடக் கூடாதுன்னு தோணுச்சு அதுக்காக தான் தேடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்காக நீ கேட்டதும் குழந்தை பெத்து குடுக்க முடியாது. ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ அம்மு. நார்மல் ஹவுஸ் வைஃப்பா வீட்டுக்குள் அடைஞ்சு கிடக்க எனக்கு பிடிக்கல. நான் என் கெரியர்ல ஏதாவது சாதிக்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்கப்புறம் குழந்தையை பத்தி யோசிப்போம்“ என்று பொறுமையாகவே தன்னிலை விளக்கம் கொடுத்தாள் விஷல்யா.
“உனக்கு உன் கெரியர் தான் முக்கியம்னா என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட….” என்று கோபத்துடன் துவங்கியவன் சற்று நிதானித்து, “ வாழ்க்கையில கடைசி வரைக்கும் எதையும் உருப்படியா சாதிக்கலன்னா.. குழந்தையே வேணாம்னு இப்படியே இருந்துடுவியா?. அப்போ என் கதி?, குடும்பம் குழந்தை குட்டின்னு சந்தோசமா வாழனும் ஆசைப்பட்ட என் கனவு என்ன ஆகும்? ” என்று வெறுமையான குரலில் வினவினான் அமுதேவ்.
அமுதேவ் குரலில் இருந்த வெறுமை உறுத்த.. “ சீக்கிரமா பிசினஸ்ல அச்சீவ் பண்ணனும்னு எனக்கு விஷ் பண்ணுறத விட்டுட்டு எதுக்கு இப்படி நெகட்டிவா பேசுற. உன் அப்பா உன் அம்மாவுக்கு எவ்வ ளவு சப்போட்டா இருக்காரு, அதே மாதிரி நீயும் எனக்கு சப்போர்ட்டா இருந்தா… ஃபேமிலி லைஃப் அண்ட் பிஸினஸ் லைஃப் ரெண்டையும் ஈக்குவல்லா ஹாண்டில் பண்ண என்னால முடியும். இந்த ப்ராஜெக்ட் முடியவும் நாம கண்டிப்பா குழந்தையை பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம். “ என்றாள் விஷல்யா.
“ நான் என் அப்பா மாதிரி இல்ல.. அண்ட் ஒன் மோர் திங். என் அம்மா அவங்க பிசினஸ் லைஃப்ல எவ்வளவோ சாதிச்சு இருக்கலாம், பட் ஃபேமிலி லைஃப்ல சீ இஸ் ஜீரோ.. பெத்தப் பையனோட அன்பை பத்திரமா பாதுகாத்துக்க தெரியாத ஃபெயிலியர் ஃவுமன்“ என்று வெறுப்பு மிகுந்த குரலில் கூறியவன்.. தன் தலையிலேயே ஓங்கி தட்டிக் கொண்டு.. ‘ நீயும் என் அம்மா மாதிரியே அடமென்ட் கேரக்டர்னு தெரிஞ்சதும் உன்னை விட்டு விலகி இருந்தா இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்காது. அவசரப்பட்டு முட்டாள்தனம் பண்ணிட்டு இப்ப அவஸ்தைப் பட்டுடு இருக்கேன். ‘ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் அமுதேவ்.
தனக்குள்ளே பேசிக் கொண்டாலும் அருகில் இருந்தவள் காதிலும் தெளிவாய் அமுதேவ் வார்த்தைகள் விழுந்திட.. “ என்ன சொன்ன?, இப்ப என்ன சொன்ன, முட்டாள்தனமா!, நம்ம கல்யாணத்தை தான் முட்டாள்தனம்னு சொல்லுறியா நீ?. உன் அம்மா சாயல் இருந்ததால தான் என்னை காதலிக்க ஆரம்பிச்சேன்னு சொன்ன.. அதை மறந்திட்டு இப்ப என்னென்னவோ உளறிட்டு இருக்க!, உனக்கு என்ன தான் பிரச்சனை?” என்று கணவனுக்கு கொஞ்சமும் சளைக்காத விதத்தில் கோபத்தை காட்டினாள் விஷல்யா.
“ என்ன பிரச்சனையா?, நீ என் அம்மா மாதிரியே யோசிக்கிறது பிரச்சனை. குழந்தை வேணாம்னு சொல்லுறது பிரச்சனை… மொத்தத்துல நீ தான் என்னோட பெரிய பிரச்சனை ” என்றான் அமுதேவ்.
“ உனக்கு குழந்தை பெத்து குடுக்க தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டயா?. இப்போதைக்கு குழந்தை வேணான்னு சொன்னதும் காதலும் காணாம போயிடுச்சு!, கல்யாண வாழ்க்கை கசந்துடுச்சு அப்படித்தானே! ” என்றாள் விஷல்யா.
சுவற்றின் கடிகாரத்தை வெறித்தபடி அமைதியாய் அமுதேவ் அமர்ந்திருக்க.. “ எதுக்கு அமைதியாகிட்ட, எனக்கு பதில் சொல்லு அம்மு. குழந்தை பெத்துக் கொடுக்கிறது மட்டும்தான் பொண்ணுகளோட வேலையா..?, “ என்று அமைதியாக அதே நேரத்தில் அழுத்தத்துடனும் வினவினாள் விஷல்யா.
மனைவியின் கேள்விக்கு பதில் கூறாமல் அமைதியாய் அமர்ந்திருந்தவன் மனதில் அவனது பாட்டியின் வார்த்தைகள் பலமாய் எதிரொலிக்க துவங்கியது.
‘ உன்னை கருவிலேயே கொல்லப் பார்த்தவ.. நான் மட்டும் கண்டுபிடிச்சு தடுக்காம இருந்திருந்தா நீயும் உனக்கு முன்னாடி உருவான ரெண்டு குழந்தைங்க மாதிரி இந்நேரம் கருவிலேயே கருகிப் போயிருப்ப. உன் அம்மாவுக்கு பாசத்தை விட பணம் காசு தான் முக்கியம். அவளை மாதிரி ஒருத்தியை மட்டும் வீட்டுக்கு கொண்டு வந்துடாத.. அவளால குடும்பம் பிரியுறது மட்டும் இல்லாம உனக்கு வாரிசே இல்லாம போயிடும். ‘ என்றோ உரைத்த வார்த்தை மீண்டும் மனதில் வந்துபோக..
சட்டென்று ஏதோ நினைவு வந்தவனாக, “ அம்மா வந்து உன்கிட்ட பேசவும் தான் இந்த கல்யாணத்தை பத்தி கன்சிடர் பண்ணேன்னு சொன்னேல. சோ நீ என்ன பண்ணனும் பண்ணக்கூடாதுன்னு அவங்க நான் உனக்கு சொல்லிக் கொடுக்கிறாங்க ரைட். சொந்தப் பையனோட வாழ்க்கையையே சுயநலத்துக்காக நாசம் பண்ற ராட்சசி அவங்க, இது புரியாம நீயும் அவங்க பேச்சைக் கேட்டு பிடிவாதம் புடிச்சிட்டு இருக்க. நம்மளோட உண்மையான காதலை அவங்க அவங்களுக்கு சாதகமா யூஸ் பண்ணிட்டு இருக்காங்க, உன்னை வைச்சு என்னை பழிவாங்க நினைக்கிறாங்க, இனியாவது கண்மூடித்தனமா கண்டவங்களையும் நம்பாம கட்டின புருஷன் என் பேச்சை கேளு” என்றான் அமுதேவ்.
“இப்ப நாம பேசிட்டு இருக்கிற டாபிக் வேற, இதுல தேவையில்லாம அத்தைய இழுக்காத.. பாவம் அவங்களே உன்னை பிரிஞ்சு இருக்கிறத நினைச்சு பீல் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க பாசத்தை புரிஞ்சுக்காம வாய்க்கு வந்ததை உளராத! ” என்று விஷல்யா எச்சரிக்கை விடுக்க.. “ அவங்க காட்டுறது பாசம் இல்ல வேஷம். ஆமா என்ன நீ எப்பவும் அவங்களுக்கே சப்போர்ட் பண்ற!.. என்னை விட அவங்க தான் உனக்கு முக்கியமா போய்ட்டாங்களா?“ என்றான் அமுதேவ்.
“ ஆமா எனக்கு அத்தை தான் முக்கியம். அவங்க இல்லைன்னா நீ திரும்ப என் லைஃப்க்குள்ள வந்திருக்க மாட்ட.. நானும் உன்னை மிஸ் பண்ணி இருப்பேன்.” என்றாள் விஷல்யா.
“ சோ கடைசியா நீயே… என் அம்மா பிளான் படி தான் இதெல்லாம் நடக்குதுன்னு ஒத்துக்கிற..!” என்றான் அமுதேவ்.
“ என்ன சும்மா பிளான் பிளான்னு பிணத்திட்டு இருக்க, அப்படி இந்த ப்ராஜெக்ட்க்கும் அத்தைக்கும் என்ன சம்மந்தம் இருக்கும்னு நினைக்கிற?.” என்று எரிச்சலுடன் வினவினாள் விஷல்யா.
“ நான் இந்த ப்ராஜக்ட்க்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்ல வரல. இந்த ப்ராஜெக்டை விட்டுக்கொடுக்க மாட்டேன்னு நீ பிடிவாதம் பிடிக்கிறதுக்கும். கெரியர் தான் முக்கியம் குழந்தை வேணாம்னு சொல்றதுக்கும் அவங்க உனக்கு கொடுத்த அட்வைஸ் தான் காரணமா இருக்கும்னு சொல்றேன் “ என்றான் அமுதேவ்.
“நீ புரிஞ்சு பேசுறியா?, இல்ல புரியாம பேசுறியா?, ப்ராஜெக்ட் சம்பந்தப்பட்ட மெயில் இப்போதான் வந்தது. அதை ஃபர்ஸ்ட் உன்கிட்ட தான் சொல்லிருக்கேன். அப்படி இருக்கும் போது அத்தை எப்படி நீ சொன்ன மாதிரி அட்வைஸ் பண்ணிருக்க முடியும். உனக்கு ஒருத்தவங்கள பிடிக்கலைன்னா உடனே எல்லா பழியையும் தூக்கி அவங்க மேல போட்டுடுவியா?.. “ என்றாள் விஷல்யா.
“ நான் ஒன்னும் பழி போடல. நடந்துட்டு இருக்கிற உண்மையை தான் சொல்லுறேன்.” என்று அமுதேவிடமிருந்து பதில் வர… “ உண்மையென்னனு புரிச்சுக்காம உளரிட்டு இருக்கிற நீ சரியான முட்டாள் இது தான் இப்போதைக்கு உண்மை” என்று வெடுக்கென்று பதில் தந்தாள் விஷல்யா.
“ என் பாட்டி பேச்சை மீறி அவங்களோட எச்சரிக்கையை அலட்சியப்படுத்திட்டு உன்னை கல்யாணம் பண்ணுனேன் பாரு நான் முட்டாள் தான். நீ அந்த ஈவில் லேடி பேச்சை கேட்டே ஆடு, கடைசில உன்னையும் அவங்கள மாதிரியே தனி மரமா நிக்க வைக்கப் போறாங்க ” என்று வெறுப்புடன் பேசினான் அமுதேவ்.
“ போதும் நிறுத்து நானும் பொறுமையா பேசிட்டு இருக்கேன் நீ என்னடான்னா என்னென்னவோ பேசிட்டே போற… எட்டு வயசு பையன் மனசுல பெத்த அம்மாவ பத்தியே தப்பான விஷயத்தை விதைச்ச உன் பாட்டிதான் உண்மையிலேயே டெவில் லேடி. அவங்க போதனையைக் கேட்டு சுய புத்தியை இழந்து பெத்த அம்மாவையே ஒதுக்கி வச்சிருக்க… இதுவரைக்கும் செஞ்சது பத்தாதுனு என் கனவையும் கலைக்க நினைக்கிற உன்கிட்ட இதுக்கு மேல ஆர்க்கிவ் பண்ணிட்டு இருந்தா எனக்குத் தான் பைத்தியம் பிடிக்கும்.. ” என்று சினந்தபடி சீறினாள் விஷல்யா.
“ உனக்கு என் பாட்டியை பத்தி ஒன்னும் தெரியாது. தெரியாதவங்களை பத்தி பேசுறது தப்பு “ என்று அமுதேவ் ஒரு விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய.. நீட்டிய விரலை தன் விரல் கொண்டு பற்றி மடக்கியவள்… “ அதே தான் உனக்கும். என் அத்தையை பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது அவங்களப் பத்தி தப்பா பேச உனக்கும் ரைட்ஸ் இல்லை.. “ என்று தடாலடியாக பதில் தந்தாள் விஷல்யா.
“ நீ சொல்ற உன் அத்தை என்னோட அம்மா. உன்னைவிட அவங்கள பத்தி எனக்கு தான் நல்லாத் தெரியும். சும்மா பாலிச பேசுறது வைச்சு நல்லவங்கன்னு நம்பாத.. தேன்ல விஷத்தை கலந்து கொடுக்கக்கூடிய வினையமான வில்லி அவங்க..“ என்றான் அமுதேவ்.
“சாத்தான் வேதம் ஒதுற மாதிரி என்னென்னவோ சொல்லி உன் மனச கெடுத்து வச்சிருக்காங்க உன் பாட்டி. அவங்க தான் உண்மையான வில்லி” என்று பதிலடி தந்தாள் விஷல்யா.
“ உனக்கு நடந்த உண்மை என்னன்னு தெரியாது, தெரிஞ்சா இப்படிப் பேசமாட்ட.. “ என்று அமுதேவ் மனைவியை அடக்க முயல..
“ எனக்கு எல்லாம் தெரியும் ..” என்று விஷல்யா அலட்சியமாக பதில் தர.. “ என்ன தெரியும் உனக்கு?, ஒரு மண்ணும் தெரியாது. சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஓவரா துள்ளாத!“ என்றான் அமுதேவ்.
” என்னது நான் துள்ளுறேனா!, உங்க அம்மா என்னை ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போதே, அவங்க லைஃப்ல நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. சோ கொதிக்கிற எண்ணையில தண்ணி பட்ட மாதிரி கண்ணு மண்ணு தெரியாம வெடிக்காம கொஞ்சம் அடக்கி வாசி.. “ என்றாள் விஷல்யா.
“ அவங்க அவங்களுக்கு சாதகமா கதை சொல்லிருப்பாங்க. நீயும் அவங்க சொன்ன பொய்யை உண்மைனு நம்பி, அவங்களுக்காக பாவம் பார்த்து என்னைப் பாடாப்படுத்தி பழி வாங்கிட்டு இருக்க… “ என்றான் அமுதேவ்.
“ எதை பொய்னு சொல்லுற.. உன் அம்மா உன் மேல வச்சிருக்குற பாசத்தையா?, இல்ல உன்னை பிரிஞ்சு அவங்க அனுபவிக்கிற வேதனையா? இதுல எதை பொய்னு சொல்ற?.” என்றாள் விஷல்யா.
“ எல்லாமே பொய் தான்.. உண்மை என்னன்னா என் அம்மா ஒரு சைக்கோ, இப்போ உன்னை வைச்சு என்னை பழி வாங்குற மாதிரி. அவங்க நினைச்சதை சாதிக்க எந்த லெவலுக்கு வேணாலும் இறங்கி வேலை செய்வாங்க,” என்று பயன்படுத்தும் வார்த்தையின் வீரியம் புரியாமல் பேசினான் அமுதேவ்.
“ வார்த்தையை அடக்கிப் பேசு அம்மு. நீ பேசிட்டு இருக்கிறது உன் அம்மாவைப் பத்தி.” என்று கணவனின் கட்டுப்பாடற்ற வார்த்தைக்கு கடிவாளமிட முயன்றாள் விஷல்யா.
“ அவங்க செஞ்ச வேலைக்கு, இந்த அளவுக்கு மரியாதை குடுத்து பேசுறதே பெரிய விஷயம். ” என்று அமுதேவ் மேலும் கோபத்தைக் காட்டிட..
“அப்படி உன் அம்மா என்ன செஞ்சாங்க, நீ ஏன் அவங்கள இந்த அளவுக்கு வெறுக்கிற? “ என்றாள் விஷல்யா.
“ என்ன செஞ்சாங்களா?, அவங்கள தவிர வேறு யாரை பத்தியும் யோசிக்கத் தெரியாத பக்கா சுயநலவாதி என் அம்மா. அதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் தான் என் அப்பாவுக்கும் அவங்களுக்கும் நடந்த மேரேஜ். எந்தப் பெண்ணாவது காதலிச்சவனை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இழுத்துட்டு வந்து, அவன் மொத்த குடும்பத்தையும் அவமானப்படுத்திட்டு கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணுவாளா.. என் அம்மா அதைத்தான் செஞ்சாங்க. வேணான்னு விட்டுவிலகி வந்ததுக்கு அப்புறமும் விடாம துரத்தி வந்து என் அப்பாவை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. சொந்தமா பிசினஸ் செய்றேன்னு என் பாட்டியை விட்டு என் அப்பாவை தனியா பிரிச்சு கூட்டிட்டு போயிட்டாங்க. இதுக்கு மேல வேற என்ன செய்யணும்?“ என்றான் அமுதேவ்.
‘ போலீஸ் ஸ்டேஷன் போய் கல்யாணம் பண்றது தப்பா!, ஒருவேளை இவனுக்கு நாம எழுதின லெட்டர் கிடைக்கலையோ!, கல்யாண நேரத்துல அந்த லெட்டர் மட்டும் கையில கிடைச்சிருந்தா கல்யாணத்தையே நிறுத்தி இருப்பானோ!’ என்று திருமணத்திற்கு முதல்நாள் அமுதேவ்வை சம்மதிக்க வைக்க மிரட்டல் கடிதம் கொடுத்து வந்தது குறித்து தனக்குள் எண்ணிக் கொண்டிருந்தாள் விஷல்யா.
“ என்ன யோசிக்கிற?, என் அம்மா உன்கிட்ட சொன்ன கதைக்கும் இதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லனு யோசிக்கிறயா?” என்று விஷல்யாவின் மௌனத்தை தவறாக புரிந்து கொண்டு காரணம் வினவினான் அமுதேவ்.
“ இல்ல.. உன் அம்மாவும் இதையே தான் சொன்னாங்க. ஆமா பிசினஸ்ல சாதிக்கணும்னு நினைக்கிறது தப்பா என்ன?, அத்தையோட பிசினஸ் ஐடியாவுக்கு உன் பாட்டி சம்மதிக்கல அதனால வீட்டைவிட்டு வந்துட்டாங்க.. அதை விட்டு பிரிய முடியாதுன்னு மாமாவும் அவங்க கூடயே வந்துட்டாங்க, எனக்கு ஒன்னும் இது தப்பா தெரியலையே!. அப்புறம் நானும் உன்னை ஏமாத்தி தான் கல்யாணம் பண்ண முயற்சி பண்ணுனேன். நம்ம கல்யாணத்தை அக்செப்ட் பண்ண முடிஞ்ச உன்னால, ஏன் உன் அம்மாவோட தைரியத்தை அஃப்ரிசேட் பண்ண முடியல. என் விஷயத்துல பாசிட்டிவா யோசிக்க முடிஞ்ச உன்னால ஏன் உன் அம்மா விஷயத்துல அப்படி யோசிக்க முடியல. எதுக்கு இப்படி நெகட்டிவா ரியாக்ட் பண்ற..? ” என்று அமுதேவின் அர்த்தமற்ற கோபத்திற்கு காரணம் வினவினாள் விஷல்யா.
“ பிசினஸ்ல சாதிக்கணும்னு நினைக்கிறது தப்பு இல்ல அதுக்காக தன்னோட ஃபேமிலி லைஃப்ப சிதைச்சுக்கிறது தப்பு தானே! ” என்றான் அமுதேவ்.
“ புரியல” என்று ஒற்றை வரியில் விஷல்யா விளக்கம் கேட்க.. “ தன்னோட பிசினஸ் கேரியருக்கு டிஸ்டர்பா இருக்கக்கூடாதுன்னு அவங்க வயித்தில உருவான கருவை எல்லாம் மனசாட்சியே இல்லாம அழிச்சாங்க,” என்று கட்டுப்படுத்த முடியாத கடுமையுடன் தன் தாயின் தவறாக தான் கருதும் காரணத்தை கூறினான் அமுதேவ்.
“ என்ன சொல்ற?, எந்த அம்மாவாவுது தன் பிள்ளையை தானே கொல்ல நினைப்பாங்களா?…” என்று விஷல்யா பேசி முடிப்பதற்குள் இடையில் நுழைந்த அமுதேவ். “ கள்ளக்காதலுக்காக பெத்தப் பிள்ளையைக் கொன்னுட்டு போன அம்மாக்களைப் பத்தி நீ நியூஸ் பேப்பர்ல படிக்கிறதே இல்லையா?” என்றான்.
“ ஹே.. ச்சே.. அதுவும் இதுவும் ஒண்ணா?” என்று விஷல்யா அருவருப்பான குரலில் வினவிட..… “ அம்மாவே பிள்ளையை கொல்லுவாங்களான்னு நீ கேட்டதுக்கு தான் இதை சொன்னேன். கள்ளக்காதல் மாதிரி இதுவும் ஒரு போதை தான். இரண்டுமே சுயநலம் பிடிச்ச மிருகங்களோட வெறிச் செயல் தான்” என்றான் அமுதேவ்.
“ உனக்கு அடுத்து உருவான குழந்தை கருவிலேயே அழிஞ்சு போனதை நினைச்சு தான் நீ இப்படி பேசுறன்னு நினைக்கிறேன். உண்மையிலேயே உன் அம்மாவும் அந்த விஷயத்துக்காக ரொம்பவே ஃபீல் பண்ணுறாங்க. இது அவங்களே எதிர்பார்க்காம நடந்த விஷயம் இதுக்காக நீ அவங்களை குறை சொல்லுறது சரியல்ல. “ என்றாள் விஷல்யா.
“ எனக்கு அடுத்து உருவான குழந்தையை மட்டும் இல்ல. எனக்கு முன்னாடி உருவான இரண்டு கருவையும் அப்படித்தான் அழிச்சிருக்காங்க. என்னையும் அழிக்க நினைச்சாங்க. என் பாட்டி மட்டும் கண்டுபிடிச்சு தடுக்காம இருந்திருந்தா என் அம்மா இரக்கமே இல்லாம அழிச்ச கருவோட சேர்ந்து நானும் கருவிலேயே கருகிப் போயிருப்பேன் ” என்றான் அமுதேவ்.
“ இதை யார் சொன்னது?” என்று விஷல்யா வினவ.. “ என் பாட்டி தான் சொன்னாங்க!” என்று பதில் தந்தான் அமுதேவ்.
“ அவங்க ஏன் உன்கிட்ட பொய் சொல்லிருக்க கூடாது!” என்று விஷல்யா நிறுத்த… “ அவங்க ஏன் பொய் சொல்லணும்?” என்றான் அமுதேவ்.
“ உன்னையும் உன் அம்மாவையும் பிரிக்க.. “ என்று விஷல்யா துவங்க… “ அதுக்கு அவசியமே இல்லை. என் அப்பாவோட பிரிவுலயே என் பாட்டி உடைஞ்சு போயிட்டாங்க.. பெத்த பிள்ளையை பிரியுறது எவ்ளோ கஷ்டம்னு அனுபவிச்சு தெரிஞ்சிக்கிட்டவங்க அதே கஷ்டத்தை எப்படி அடுத்தவங்களுக்கு கொடுப்பாங்க” என்று தன்னை வளர்த்த பாட்டிக்காக பரிந்து பேசினான் அமுதேவ்.
“ உன் அம்மா என்னை வைச்சு, உன்னை பழிவாங்க நினைக்கிறாங்கன்னு சொல்லுறியே..!. அவங்க எதுக்கு உன்னை பழிவாங்க நினைக்கணும்?” என்று குழப்பத்தை தெளிவுபடுத்திக் கொள்ளும் ஆர்வத்துடன் வினவினாள் விஷல்யா.
“ என் பாட்டிக்காக அவங்கள வெறுத்து ஒதுக்கி வைச்சிருக்கேன்ல அதுக்காக.. நமக்கு பிடிச்சவங்களை பிரியுறது எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு எனக்கு காட்டுறதுக்காக உன்னை என்கிட்ட இருந்து பிரிக்கப் பாக்குறாங்க.” என்றான் அமுதேவ்.
“ நீ பேசறது உனக்கே அபத்தமா தெரியல. அத்தை உனக்கு சப்போர்ட் பண்ணி பேசாம இருந்திருந்தா திரும்ப உன்னை தேடி வந்திருக்கவே மாட்டேன். நம்ம கல்யாணம் நடக்க காரணமே உன் அம்மாதான் அப்படி இருக்கும்போது அவங்க எதுக்கு நம்மள பிரிக்க நினைக்கணும். சப்போஸ் நீ சொல்ற மாதிரி உன்னை கஷ்டப்படுத்தி பார்க்கணும்னு நினைச்சிருந்தா. நம்மள சேர்த்து வைச்சிருக்கவே மாட்டாங்க!” என்று கணவனின் புரிதலில் இருக்கும் தவறை தெளிவுப்படுத்த முயன்றாள் விஷல்யா.
“நம்மகிட்ட ஒரு பொருள் இல்லாம இருக்கிறதுக்கும் கொஞ்ச நாள் இருந்துட்டு இல்லாமல் போறதுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு. அதோட வலி இன்னும் அதிகமா இருக்கும். அந்த வலியை எனக்கு கொடுக்கணும்னு நினைச்சு தான், நம்மள சேர்த்து வைக்கிற மாதிரி வைச்சுட்டு பிரிக்க நினைக்கிறாங்க“ என்றான் அமுதேவ்.
“ நாம அனுபவிச்ச வலிய அடுத்தவங்களுக்கு கொடுக்க மனசு வராதுன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீதான் சொன்ன.. அப்படி இருக்கும்போது அவங்க அனுபவிச்ச வலியை உனக்கு எப்படி திருப்பக் கொடுக்கணும்னு நினைப்பாங்க அம்மு. “ என்று விஷல்யா நியாயமான கேள்வி எழுப்பிட… “ நான் சொன்னது நல்லவங்களுக்கு மட்டும் தான் பொருந்தும். கெட்ட எண்ணம் இருக்கிறவங்களுக்கு அவங்க அனுபவிச்சதை விட இரண்டு மடங்கு வலியை திருப்பிக் கொடுக்கணும்னு தான் வெறி வரும். தன் சந்தோசத்துக்காக அடுத்தவங்களை கஷ்டப்படுத்தி பாக்குற சைக்கோ என் அம்மா.. அதனால அவங்களுக்கு இந்த நியாய தர்மம் எல்லாம் கொஞ்சம் கூட பொருந்தாது, தெரியவும் தெரியாது.” என்றான் அமுதேவ்.
“ நீ பேசுறத பாத்தா நியாய தர்மம் உனக்கு தான் தெரியலன்னு தெளிவாத் தெரியுது.. “ என்றவள், அமுதேவ் கோபமாய் முறைக்க… “ எதுக்கு இப்போ முறைக்கிற?, உன் பாட்டின்னு வரும்போது வேற மாதிரியும், அதே உன் அம்மான்னு வரும் போது வேற மாதிரியும் பேசுற.. உனக்கு பிடிச்சவங்களுக்கு ஒரு நியாயம் பிடிகாதவங்களுக்கு ஒரு நியாயம்னு பேசுற உன்கிட்ட எப்படி நியாய தர்மத்தை எதிர்பார்க்க முடியும்” என்றாள் விஷல்யா.
“ அப்போ நான் பாரபட்சம் பார்கிறேன்னு சொல்றியா?” என்று வினவியவன் குரலில் கோபம் மிகுந்திருந்தது.
“ இல்லையா பின்ன?, நிதானமா யோசிச்சு பாரு உனக்கே உண்மை புரியும். அத்தை உன் மேல ரொம்ப பாசம் வைச்சிருக்காங்க. நீ திரும்ப அவங்க கூட பேச மாட்டாயான்னு ஏங்கிக்கிட்டு இருக்காங்க. அப்படி இருக்கும்போது அவங்க எப்படி உன்னை காயப்படுத்துவாங்க. நியாயப்படி பார்த்தா உன் பாட்டிக்குத்தான் அத்தையை பழிவாங்க காரணம் இருந்திருக்கு. அதாவது மாமா வீட்டைவிட்டு போனதுக்கு அத்தை தான் காரணம்னு நினைச்சவங்க, அதுக்கு பழி வாங்குறதா நினைச்சு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி உன் அம்மாவை விட்டு உன்னை பிரிச்சுருக்காங்க. “ என்றாள் விஷல்யா.
“ என் பாட்டி நல்லவங்க, அவங்க சொல்றது என்னைக்கும் சரியாதான் இருக்கும். ” என்று விஷல்யா புரியவைக்க முயற்சிக்கும் உண்மையை புரிந்து கொள்ள மனமில்லாமல் பேசினான் அமுதேவ்.
“ பொண்ணுங்க வீட்டு வேலையையும் குடும்பத்து ஆட்களையும் கவனிச்சுட்டு வீட்டுக்குள்ளேயே முடிங்கிக் கிடக்கணும், அது தான் பொண்ணுங்களுக்கு அழகுன்னு சொல்லிக்கொடுத்த உன் பாட்டிக்கு இந்த மாதிரி வாழ்க்கைத் தத்துவத்தை எல்லாம் சொல்லிக் கொடுக்க மட்டும் தான் தெரியும் போல.. அதை ஃபாலோப் பண்ணத் தெரியாதுனு நினைக்கிறேன். ஏன்னா பொண்ணுங்களுக்கு இலக்கணமா வாழ்ந்துக் காட்டுறேன்னு வீட்டுக்குள்ளேயே இருந்திருந்தா உன் அப்பாவை எப்படி வளர்த்திருக்க முடியும்!,” என்றாள் விஷல்யா.
“ என்ன சொல்ற?” என்று மனைவியின் வார்த்தையில் பொதிந்திருக்கும் அர்த்தம் புரியாமல் விளக்கம் கேட்டான் அமுதேவ்.
“ மாமா சின்ன வயசா இருக்கும்போதே உன் தாத்தா இறந்துட்டாங்கல… கைக் குழந்தையை தனியா வளர்க்கிற அளவுக்கு சொல்லிக்கிற மாதிரி பெருசா சொத்தும் சேர்த்து வைச்சுட்டு போகல.. வெளி வேலைக்குப் போகாம சொந்தமா தொழில் பண்ணாம உன் அப்பாவை எப்படி வளர்த்தாங்க. சொந்தபந்தம் உதவி பண்ணுனாங்களோ!, ஆமா நாம இப்ப இருக்கற வீடு, இன்னும் கொஞ்சம் சொத்துபத்து எல்லாம் உன் பாட்டி உன் பேர்ல எழுதி வைச்சுட்டு போயிருக்காங்கல. என்ன தான் சொந்த பந்தம் உதவி பண்ணி இருந்தாலும் சொத்து சேர்க்கிற அளவுக்கா உதவி பண்ணிருபாங்க.. நம்புற மாதிரி இல்லையே!” என்று வேண்டுமென்றே சீண்டுவது போல பேசினாள் விஷல்யா.
அவள் சீண்டல் வேலை செய்திட… “ என் அப்பாவை வளர்க்க வேண்டிய கட்டாயம் அதுனால அவங்கக் கையில இருந்த கொஞ்சப் பணத்தை வட்டிக்கு கொடுத்து சம்பாதிக்க ஆரம்பிச்சாங்க. சீட்டுப் பணம் பிடிச்சு அதுல கொஞ்சம் வருமானம் பார்த்ததா சொன்னங்க.” என்றவன் குரல் அதுவரை இருந்த தோரனையை விட கீழிறங்கி இருந்தது.
“ அடுத்தவங்க வறுமையை பயன்படுத்தி வட்டிக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கிறது தப்பு இல்ல. தன்னோட சொந்த திறமையில தொழில் தொடங்கினா அது தப்பு.. என்னடா உங்க லாஜிக் ஒன்னும் புரிய மாட்டேங்குது. ஆக்சுவலி உன் பிரச்சினை என்ன தெரியுமா?… உன்னால அத்தையை விட்டு பிரிஞ்சு இருக்க முடியல.. அவங்க கூடயே இருக்கணும்னு ஆசைப்பட்ட அது நடக்கல, அந்தக் கோபத்துல உன் பாட்டி அம்மாவை பத்தி சொன்னது எல்லாம் உண்மைனு நம்பி ஒட்டுமொத்தமா அவங்களை வெறுக்க ஆரம்பிச்சிட்ட.. “ என்றாள் விஷல்யா.
“ சரி நீ சொல்ற லாஜிக் படி.. என் பாட்டி பேச்சைக் கேட்டு என் அம்மாவை வெறுக்குறேன்னே வைச்சுக்கோ. என் பாட்டி எதுக்கு அவங்களைப் பத்தி தேவை இல்லாம தப்பா சொல்லணும். பிள்ளைய பிரிச்சதுக்காகனு மட்டும் சொல்லாத .. அப்பா ஒன்னும் சின்ன குழந்தை இல்லை கட்டாயப்படுத்தி பிரிச்சுட்டு போறதுக்கு, அந்த உண்மை என் பாட்டிக்கும் தெரியும். சோ இதுக்காக எல்லாம் வெறுத்து ஒதுக்கியிருக்க வாய்ப்பு இல்லை.” என்றான் அமுதேவ்.
“ மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட இருக்கிற குறைய கண்டுக்க மாட்டோம். பிடிக்காதவங்ககிட்ட இருக்கிற நிறை ஏத்துக்க மாட்டோம், அது உங்க விஷயத்துல சரியா இருக்கு. “ என்று இதழ் சுளித்து ஏளனமாய் சிரித்தவள்.
“ இதை நான் உன் பாட்டி கேரக்டரை ஜட்ஜ் பண்ணனும்னு சொல்லல.. நான் கேட்டு தெரிஞ்சுகிட்ட வரைக்கும் உன் பாட்டி டாமினேட் கேரக்டர். எல்லாரும் அவங்க பேச்சை கேட்டு தான் நடக்கணும்னு நினைக்கிறவங்க. உன் அப்பாவையும் அப்படித்தான் வளர்த்திருக்கிறாங்க. அதனாலதான் அவர் காதலிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்க விடாம தடுத்திருக்காங்க. அதையும் மீறி அத்தை மாமாவை கல்யாணம் பண்ணிகிட்டதை அவங்களால ஏத்துக்க முடியல. அதை அவங்களுக்கு ஏற்பட்ட அவமானமா நினைச்சிருக்காங்க, இதுதான் அவங்க மனசுல வெறுப்பு உண்டாக முதல் காரணம். என் அம்மா அடிக்கடி ஒரு வார்த்தை சொல்லுவாங்க, பொதுவா அம்மாவுக்கு அடங்கி வளர்ந்த பசங்க பெரும்பாலும் பொண்டாட்டிக்கும் அடங்கிப் போயிடுவாங்களாம். சோ உன் பாட்டியோட வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருந்த மாமா அத்தையோட வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க ஆரம்பிக்கவும் அவங்க வெறுப்பு அதிகமாக ஆரம்பிச்சு இருக்கும். அப்புறம் என்ன அடுத்தடுத்து அத்தை என்ன செஞ்சாலும் அதை தப்பா எடுத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க. “ என்று விஷல்யா வரிசையாய் அடுக்கிக்கொண்டே போக…
“ இதெல்லாம் சரி ஆனா அந்த ஃஅபாசன் விஷயம்?, நெருப்பு இல்லாம புகையாது.. அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க போய் தானே என் பாட்டி அதப்பத்தி சொல்லி இருக்காங்க. .. இதுவும் பாட்டியோட வெறுப்புனால சொல்லப்பட்ட பொய்னு சொல்லாத.. நான் நம்ப மாட்டேன்.“ என்றான் அமுதேவ்.
“ உன் அம்மாவுக்கு ஃஅபாஷன் ஆன விஷயம் பொய்யா இருக்கும்னு நான் சொல்லலையே. நடந்த உண்மை என்னன்னு ரெண்டுபக்கமும் விசாரிச்சு தெரிஞ்சுக்கோங்கன்னு தான் சொல்லுறேன். ஒரு தரப்பு நியாயத்தை மட்டும் கேட்டு ஒரு முடிவுக்கு வரது என்னைக்கும் சரியான முடிவா இருக்காது அம்மு. உன் பாட்டி உன் அம்மாவைப் பத்தி சொன்னத வைச்சு ஜட்ஜ் பண்ணாத.. எட்டு வருஷமா உன்னை வளர்த்த அம்மா உன் கிட்ட காட்டின பாசத்தையும் அவங்களோட அன்பையும் நினைச்சு பாரு, உன் அம்மாவால உனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்ய முடியுமா முடியாதான்னு உனக்குள்ள கேள்வி கேட்டு அதுக்கான பதிலை கண்டுபிடி. உன் அம்மாவை விட்டு பிரிஞ்சப்போ நீ சின்ன குழந்தை உன்னால அந்த அளவுக்கு டீப்பா திங் பண்ணிருக்க முடியாது. ஆனா இப்போ நீ குழந்தை இல்ல. இரண்டு பக்கத்து நியாயத்தையும் நிதானமா யோசி.. என்ன யோசிச்சும் பதில் கிடைக்கலையா உன் அம்மா கிட்ட, இல்ல அப்பாகிட்ட இதுக்கான விளக்கத்தை கேட்டுட்டு அதுக்கப்புறம் ஒரு முடிவுக்கு வா” என்றாள் விஷல்யா.
பதிலேதும் கூறாமல் எதையோ தனக்குள் எண்ணிக் கொண்டிருந்த கணவனின் கரத்தை இதமாய் பற்றி … “ இப்போ நாம பேச ஆரம்பிச்ச டாபிக் வேற, ஆனா நீ தேவையில்லாம அத்தைய பத்தி தப்பா பேசவும் என்னால தாங்கிக்க முடியல அதனால தான் இத்தனை நாளா என் மனசுக்குள்ள இருந்த எல்லா விஷயத்தையும் ஒட்டுமொத்தமா கேட்டு முடிச்சிட்டேன். நீயே பொறுமையா யோசிச்சு பாரு உனக்கு சரியான விளக்கம் கிடைக்கும். நீ என்ன முடிவு எடுத்தாலும் உனக்கு சப்போட்டா நான் இருப்பேன்” என்றாள் விஷல்யா.
“ உனக்காக என் அம்மா விஷயத்தை பத்தி மறுபடியும் யோசிக்கிறேன். எனக்காக நீ இந்த ப்ராஜெக்ட்டை விட்டுடுவியா?” என்றான் அமுதேவ்.
பற்றியிருந்த கரத்தை மேலும் இறுகப்பற்றி… “ நீ எனக்காக யோசிக்க வேணாம் உன் அம்மாவுக்காக யோசி. “ என்றவள்.. அமுதேவ் தோள்களில் உரிமையுடன் சாய்ந்து கொண்டு.. “பிசினஸ்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சா.. எங்க நான் விட்டு போயிடுவேனோங்கிற பயத்துல தான் நீ இப்படி எல்லாம் பேசுறன்னு எனக்கு புரியுது அம்மு. இனி என்ன நடந்தாலும் சரி உன்னை விட்டு பிரிய கூடாதுங்கிற முடிவு எடுத்ததுக்கு அப்புறம் தான் நான் நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். அதனால நான் உன்னை விட்டு பிரிஞ்சு போயிடுவேனோங்கிற பயம் உனக்கு கொஞ்சம் கூட வேணாம். யாருக்காகவும் எதுக்காகவும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன். “ என்று உறுதி அளித்திட.. தன் தோள்களில் சாய்ந்திருந்தவள் தலை முடியை இதமாய் வருடி… “ இதைக் கேட்கும் போது ரொம்பவே நிம்மதியா இருக்கு ஷாலு. இருந்தாலும் எனக்காக உன்னோட ப்ராஜெக்ட் முடிவை ரீ கன்சிடர் பண்ணலாமே!” என்றான் அமுதேவ்.
“ நான் உனக்கு சொந்தமானவ தான், நீ இல்லாத வாழ்க்கை எனக்கு இல்லை தான், அதுக்காக என் உரிமையை பறிக்காத அம்மு… என் அம்மு அடுத்தவங்க உணர்வுக்கு மதிப்பு தரத் தெரிஞ்சவன்னு நம்புறேன். என் உணர்வுகளை காயப்படுத்தாத… “ என்று கொஞ்சலுடன் கெஞ்சினாள் விஷல்யா.
“ நாளைக்கு ஊருக்கு கிளம்பணும் சோ. நீ லக்கேஜ் பேக் பண்ணு.. நான் கொஞ்ச நேரம் வெளிய நடந்துட்டு வரேன்… “ என்று அவள் கெஞ்சலுக்கு பதில் தராமல் அங்கிருந்து அகன்றான் அமுதேவ்.
தனக்கு சரியான பதில் கூறவில்லை என்றாலும், அவன் மனம் தனக்காக மாறும் என்று நம்பிக்கை கொண்டவள், தன் உடமைகளை அடுக்கிட.. அவள் அலைபேசி மெதுவாய் சிணுங்கியது.. அழைப்பது யார் என்று கவனித்தவள்.. “ உங்களுக்கு நூறு ஆயுசு அத்தை. நானே உங்களைக் கூப்பிட்டு பேசனும்னு நினைச்சேன்” என்றாள் விஷல்யா.
“ என்னமா குரல் வழக்கத்தை விட குதூகலமா இருக்கு. நாளைக்கு கிளம்பப் போறதை நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருப்பன்னு நினைச்சேன். நீ என்னடான்னா இவ்ளோ சந்தோசமா பேசுற?” என்று தன் மருமகள் மகிழ்வின் காரணம் வினவினார் பானுஸ்ரீ.
“ இன்னைக்கு உங்களுக்கு ரெண்டு ஹேப்பி நியூஸ் இருக்கு. அது என்னன்னு தெரிஞ்சா என்னை விட நீங்க தான் அதிகமா சந்தோஷப்படுவீங்க. “என்று தனக்கு கிடைத்திருக்கும் தொழில் வாய்ப்பினையும், அமுதேவிற்கும் தனக்கும் நடந்த விவாதத்தையும் சுருக்கமாய் கூறி முடித்தவள். “ உங்கப் பையன் உங்களைப் பத்தி யோசிக்கிறேன்னு சொல்லிருக்காரு. கண்டிப்பா நல்ல ரிசல்ட் கிடைக்கும்” என்றாள் விஷல்யா.
“ உண்மைய தான் சொல்லுறியா ஷாலு. என் பையன் என்னைப் பத்திப் பேசுறத பொறுமையா கேட்டுட்டு இருந்தானா!” என்று வியப்புடன் வினவியவர்..” நீ சொல்லுறபடி எல்லாம் நடந்தா ரொம்ப சந்தோஷம் தான்.” என்றார்.
“ அது உங்கப் பையன் யோசிக்கிற விதத்துல இருக்கு அத்தை. அந்த அபாஷன் விஷயம் தான் ரொம்பவே குழப்பத்தைக் குடுக்குது. அதுக்கு மட்டும் சரியான விளக்கம் கிடைச்சிட்டா போதும். எல்லாம் நாம ஆசைப்பட்ட படி சரியா நடக்கும்” என்றாள் விஷல்யா.
ஒருநொடி எதிர் திசையில் பெரும் அமைதி நிலவியது.. பின் ஒரு முடிவிற்கு வந்தவர் போல் தொண்டையை செருமிக் கொண்டு… “ அது நான் மறக்கணும்னு நினைக்கிற விஷயம் அதனாலதான் உன் கிட்ட கூட அதை பத்தி சொல்லாம இருந்தேன்.. “ என்று அமுதேவ் பாட்டி தன் மீது சுமத்திய குற்றத்தின் பின்னனியை விளக்கி முடித்தவர். “ இதப்பத்தி என் பையன் கிட்ட பேச வேண்டாம். அவனைப் பொருத்த வரைக்கும் அவன் பாட்டி நல்லவங்க. அது அப்படியே இருந்துட்டுப் போகட்டும். உண்மை என்னனு தெரிஞ்சா அதை அவன் தாங்கமாட்டான். “ என்று தான் தெரிந்துகொண்ட உண்மையை தன் கணவனுக்கு தெரியப்படுத்த மாட்டேன் என்று விஷல்யா உறுத்தியளித்த பின்பே அழைப்பை துண்டித்தார் பானுஸ்ரீ.
நீ இல்லை என்றால் எனக்கு வாழ்க்கை இல்லை என்று கூறும் உறவு கிடைப்பது எத்தகைய வரம்.. அத்தகைய வரத்தை பெற்ற உவகையால்… மனம் நெகிழ்ந்து போனாலும்… தன் அன்னை குறித்த விவாதம் அந்த உவகையை வெகு நேரம் நீடிக்க விடாமல் இம்சை செய்யத் துவங்க.. அன்னையின் நினைவில் மூழ்கினான் அமுதேவ்.
எட்டு வயது வரை தன் அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தவன்… அறியாத வயதில் நிகழ்ந்த பல ஞாபகங்களை சேகரித்து வைக்க முடியாத காரணத்தினாலோ என்னவோ அவனால் மறக்க முடியாத நினைவுகளை மட்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கத் துவங்கினான்.
முதல் முறை மிதிவண்டி பழகும் போது கீழே தடுமாறி விழுந்து.. கை கால்களில் உண்டான காயத்துடன் தன் அன்னையின் அரவணைப்பு தேடி ஓடி வந்தான் அமுதேவ்.
அதற்கு நேர் எதிர் மனநிலையில் மகனை எதிர்கொண்ட பானு ஸ்ரீ ‘ என்ன விழுந்துட்டியா?, பரவாயில்ல கை கால் கழுவிட்டு மருந்து போட்டுக்கோ.. காயம் சீக்கிரமே ஆறிடும் அடுத்த தடவை இன்னும் கவனமா ஓட்டணும்..’ என்று அறிவுரை வழங்கி விட்டு தனது வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.
அணைத்து ஆறுதல் கூறாவிடினும் காயத்திற்கு மருந்தேனும் இடுவார் என்று எண்ணிய அமுதேவ் மனம் காயத்தை விட ரணமாய் வலித்தது.
அன்றைய நினைவில் உண்டான கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக தரையில் ஓங்கி மிதித்து… “ ச்சே.. பாசமா பாசம். சின்னப் பையன் கீழ விழுந்து காயம் பட்டு வந்திருக்கானேன்னு கொஞ்சம் கூட கவலைப்படாதவங்களுக்கு பாசம் ஒரு கேடு.. எல்லாம் வேஷம். பாசம் இருக்கிற மாதிரி பாலிஷா பேசி ஷாலு மனசை கெடுத்து வைச்சிருக்காங்க.. அவங்களைப் பத்தின உண்மை தெரியவும் ஷாலுவே அவங்களை வெறுத்து ஒதுக்கிடுவா. அதுக்கப்புறம் அவளோட முடிவையும் மாத்திக்குவா.. அதுக்கு முன்னாடி அவங்க வேஷம் கலையனும் அதுக்கு நான் தான் ஏதாவது செய்யணும்’ என்று தன் அன்னையின் பாசத்தை வேஷம் என்று எண்ணியவன் அந்த வேஷத்தைக் கலைத்து வேண்டிய திட்டத்தையும் தனக்குள் தீட்டத் தொடங்கினான்.
அமுதாய் உன் அன்பு
என்னை நிறைக்க…
அமுதில் கலந்த விஷமாய்..
என்னை நிலை குலையச் செய்கிறது..
உன் பிடிவாதக் குணம்..