9…

 

 

 

அன்பிற்கு மட்டுமே

அடிபணியும்

ஆடவள் இவள்..

அதிகாரத்திற்கு

அடங்கி ஒடுங்கும்

அடிமையாய்

மாற்ற முயற்சிக்காதே..

உன் முயற்சி வீணாவதோடு

உன் மீது நான் கொண்ட 

அன்பும் முறிந்திடக் கூடும்..

 

 

அமுதேவ் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும் அவன் அன்னையின் மனதில் சிறு சஞ்சலம்  இருந்துகொண்டே இருந்தது அதற்கு காரணம் மகனின் ஆருயிர் நண்பன் தனுஜ்.

நண்பனுக்கு  வேண்டாத துரோகமிழைக்கின்றோம் என்ற எண்ணத்தில் தனுஜ் அமுதேவ்விடம் உண்மையை உரைத்துவிட்டால்,  இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியும் என்று எண்ணிய பானுஸ்ரீ, சில முக்கியமான விபரங்கள் பேச வேண்டுமெனவும் தன்னை வந்து சந்திக்கும்படியும் தனுஜுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

 

அமுதேவ் குறித்து ஏதேனும் விபரம் வேண்டுமெனில்  மட்டுமே விடுக்கப்படும்  அழைப்பின் காரணம் புரிந்து, நண்பனின் அன்னையை காணச் சென்றான் தனுஜ்.

“வாவா தனு கண்ணா உனக்காக தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். என்ன சாப்பிடுற?, ஜூஸ் குடிக்கிறியா?” என்று  என்றும் தராத வரவேற்பையும் மரியாதையையும் தந்தார் வாசுதேவ்.

“     வீடு மாறி வந்துட்டேனா  என்ன?,  வரவேற்பு பயங்கரமா இருக்கு,  இது நல்லதுக்கு இல்லையே! “ என்றபடி வந்த வழியே திரும்பினான் தனுஜ்.

“என்ன சைலன்ஸர்  ஏன் திரும்பிப் போற?” என்று தனுஜ் செயலில் கடுப்பான வாசுதேவ்  அவனை அவர் மட்டும் அழைக்கும் விதத்தில் அழைத்தார்.

“ இதை எதிர்பார்த்துத் தான் திரும்பிப் போனேன்.” என்றவன் மீண்டும் வீட்டினுள் நுழைந்தபடி.. “திடீர்னு மரியாதை எல்லாம் கொடுக்கவும் ஒரு மாதிரி பக்குன்னு ஆகிடுச்சு.. உயிருக்கு உத்தரவாதமில்லாத இடத்துல இருக்கக்கூடாதுல” என்றான் தனுஜ்.

“ என்னடா சொல்ற?, புரியுற மாதிரி என்னைக்கும் பேசமாட்டியா? ”என்று காரணம் வினவினார் வாசுதேவ்.

“ அது ஒன்னும் இல்ல வழக்கமா   சைலன்சர்னு ரொம்ப மரியாதையா கூப்பிடுவீங்க! இன்னைக்கு என்னமோ கண்ணா அது இதுன்னு மரியாதை குறைச்சலா இருந்ததா.. ஒருவேளை என்னால உங்க பையனோட கல்யாணம் நின்னுடுமோன்னு பயத்துல, வீட்டுக்கு வர வச்சு ஒரேடியா போட்டுத் தள்ள  முடிவு பண்ணிடீங்களோன்னு பயந்துட்டேன்.. “என்று பயத்தில் நடுங்குபவன் போல் பொய்யாக நடித்து காட்டினான் தனுஜ்.

 “ இந்த மீட்டிங் மட்டும் சக்சஸ் ஆகல அதுவும் நடக்கும்.. “ என்று கை முட்டியை மடக்கியபடி எச்சரிக்கை கொடுத்தார் வாசுதேவ்.

 

“  நண்பனோட அப்பா அம்மா தான கூப்பிடுறாங்கன்னு நம்பி,  போலீஸ் கம்ப்ளைன்ட் கூட கொடுக்காம வந்துட்டேனே!, “ என்று தனுஜ் அலுத்துக் கொள்ள.. “அடேய் நீ அடங்கவே மாட்டியா டா”என்று அலுத்துக்கொண்டார் வாசுதேவ்.

இருவரும் வயது வித்தியாசம் பாராமல் வாயாடி கொண்டிருந்த நேரம் “வாப்பா.. தனுஜ் எப்போ வந்த?”என்று வினவியபடி அங்கு வந்து சேர்ந்தார் பானுஸ்ரீ.

“நான் வந்து அரை மணி நேரம் ஆச்சு.. அப்பா தான் வீட்டுக்குள்ளேயே விடாம பேசிப் பேசியே பிளேடு போடுறாரு.. “ என்றான் தனுஜ்.

“நான்  பிளேடுன்னு  இன்னொரு பிளேடு சொல்லிக் கேட்கும் போது  பரமானந்தமா இருக்கு” என்று அப்போதும் விடாமல் தனுஜ் காலை வாரினார் வாசுதேவ்.

“ அவன் தான் சின்னப் பையன்  வார்த்தைக்கு வார்த்தை கிண்டல் பண்ணிட்டு இருக்கான்னா..  நீங்களும் அவனுக்கு சரி சமமா பேசிட்டு இருக்கீங்க?, “ என்று கணவனை அடக்கினார் பானுஸ்ரீ.

“நானும் சின்னப் பையன் தான.. பானு” என்று வாசுதேவ் கூறிட.. “ ஆமா சின்னப் பையன் தான், தலைமுடி மட்டும் நரைச்சுடுச்சு “ என்று கிண்டல் செய்தான் தனுஜ்.

“ இப்போ இந்த மாதிரி  சால்ட் அண்ட் பெப்பர்  ஹேர் ஸ்டைல் தான்  ட்ரென்ட், இது கூட தெரியாம  நீயெல்லாம் என்ன யூத்தோ!” என்று வாசுதேவ் பதில் தர, “ நீங்க ரெண்டு பேரும் இப்படியே சண்டை போட்டுட்டு இருங்க, நான் கிளம்புறேன்” என்று அங்கிருந்து நகர முயன்றார் பானுஸ்ரீ.

“முக்கியமான விஷயம் பேசணும்னு என்னை வரச் சொல்லிட்டு நீங்க  கிளம்புனா என்ன அர்த்தம் அம்மா?” என்றான் தனுஜ்.

“ பேசணும்னு தான் வரச் சொன்னேன், நீங்க இரண்டு பேரும் என்னைப் பேச விட்டாத் தான.. “ என்று அலுத்துக்கொண்டார் பானுஸ்ரீ.

“ இனி நீ பேசி முடிக்கிற வரைக்கும்  வாயைத்  திறக்க மாட்டேன், இது இந்த சைலன்சர் மேல சத்தியம்” என்று உறுதியளித்தார் வாசுதேவ்.

“  நீங்க பேசுன்னு சொல்லுற வரைக்கும் நானும் பேசமாட்டேன், இது யூத் அப்பா மேல சத்தியம்” என்றான் தனுஜ்.

“ உங்களத் திருத்தவே முடியாது” என்று தலையில் தட்டிக்  கொண்டு,  “நீ உட்காரு தனுஜ். உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. “ என்று  அமரும்படி சைகை செய்துவிட்டு   அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தார் பானுஸ்ரீ.

பேச வேண்டும் என்று அழைத்துவிட்டு தயக்கத்துடன் அமர்ந்திருந்த பானுஸ்ரீயின் தயக்கத்தை கவனித்து, ‘ இவங்க அமைதியா இருக்கிறதை பார்த்தா விஷயம் பெருசா இருக்குமா?’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டான் தனுஜ்.

 “ நேத்து நாங்க  உன்கிட்ட நடந்துக்கிட்ட முறைக்கு முதல்ல மன்னிப்பு கேட்டுக்குறேன், சாரி கண்ணா. வீட்ல எல்லாரும் இந்த கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்படுறோம். அது எங்க உன்னால நின்னுடுமோன்னு  பயத்துல தான் அப்படி  நடந்துகிட்டோம். “ என்று நேற்று நடந்துகொண்ட முறைக்கு காரணம் கூறி மன்னிப்பும் வேண்டினார் பானுஸ்ரீ.

“ நீ முடிச்சிட்டியா இனி நான் பேசலாமா?” என்று மனைவியிடம் சம்மதம் கேட்டுவிட்டு, “நானும் உன்னை நேத்து  வழக்கத்தை விட  ரொம்ப கலாய்ச்சுட்டேன்   சாரி சைலன்சர். “ என்று அதுவரை கொண்டிருந்த விளையாட்டு  தனத்தை விடுத்து உண்மையான வருத்தத்துடன் மன்னிப்பு வேண்டினார் வாசுதேவ்.

இப்போது நான் பேசலாமா என்பது போல் கைகளால் செய்கை செய்துக் காட்டியவன், எதிரில் இருந்தவர்கள் சிரித்தபடி சம்மதமாய் தலையசைக்கவும், “  இது என்ன மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க!, நீங்க என்னை எப்படி பார்க்குறீங்கன்னு  தெரியல, ஆனா நான் உங்கள என் அப்பா அம்மாவாத் தான் பார்க்கிறேன், அதனால   என்னை திட்டுறதுக்கும் கலாய்க்குறதுக்கும் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு  “ என்றான் தனுஜ்.

“நாங்களும் உன்னை எங்க பையன் மாதிரி தான் பார்க்கிறோம் தனு கண்ணா, அதனால தான்  பெத்தப்  பையன் கிட்ட கூட காட்டத்   தயங்குற உரிமையையும் நெருக்கத்தையும் உன்கிட்டக் காட்டுறோம்” என்று பானுஸ்ரீ கூறிட.. ஆமாம் என்பது போல் தலையை அசைத்து மனைவியின் வார்த்தையை ஆமோதித்தார் வாசுதேவ்.

“நீ தேவ்வுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட், உன்கிட்ட மட்டும்தான் அவன் எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணுவான், அதனால தேவ் விஷல்யா விஷயம் எங்களுக்கு முன்னாடியே உனக்கு தெரிஞ்சிருக்கும், புதுசா  நாங்கச் சொல்லி  தெரியவேண்டியது இல்ல.  விஷல்யா பொண்ணுப் பார்க்க தேவ்வைக் கூட்டிட்டு  வரச்   சொல்லும் போது எங்களுக்கும் முதல்ல பையனை கஷ்டப்படுத்துறோமோன்னு சங்கடமாத் தான்  இருந்தது.  ஆனா  தேவ்வைக்  கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க  இதை விட்டா வேற வழி தெரியல     “  என்றார் பானுஸ்ரீ.

“ அதுக்காக பொய் சொல்லி கல்யாணம் பண்ணுறது சரியா அம்மா, கல்யாணம் முடிஞ்சதும் உண்மை தெரிஞ்சா என்ன செய்வீங்க?,  ஏற்கனவே ஷாலு கோவத்துல சொன்ன ஒரு வார்த்தை தான் இப்ப வரைக்கும் அவங்க காதலுக்கு தடையா இருந்திருக்கு, இனி இந்தப் பொய்யும் சேர்ந்திடும் ” என்றான் தனுஜ்.

“ எங்களுக்கு வேற வழி தெரியலன்னு சொன்னேனே!, சரி இதை விடு இந்தக் கல்யாணம்  நல்லபடியா நடக்க பொய்யைத் தவிர   வேற ஏதாவது நல்ல  யோசனை  இருந்தா அதை நீயே  சொல்லு” என்றார் பானுஸ்ரீ.

சிலநொடி யோசித்தவன், “ அப்படி ஒரு வழியைத் தான் நானும் தேடிட்டு இருந்தேன்,  உங்கக்கிட்ட சொல்லுறதுக்கு என்ன அம்மா. இரண்டு மூணு நாளுக்கு முன்னாடி   எவனோ ஒருத்தன் போன்ல உங்கக் கேர்ள் பிரெண்ட்க்கு ஆக்சிடென்ட்ன்னு சொல்லவும், என் ஷாலுவுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறியடிச்சு ஹாஸ்பிடல் வாசல்ல போய் நின்னான்.  அப்புறம் தான் தெரிஞ்சது அது  ராங் கால்ன்னு. வேணாம்னு விட்டுப் பிரிஞ்ச பிறகும் இந்தளவுக்கு பாசம் வைச்சிருக்க… இன்னும் எதுக்குடா இந்த  வேண்டாத ஈகோ,  விஷல்யா பேசின வார்த்தைய மறந்துட்டு மறுபடியும் அவக்கூடப்  போய் பேசுன்னு,  உங்கப் பையன் காலுல விழாத குறையாக் கெஞ்சிப் பார்த்துட்டேன்,  கொஞ்சம் கூட அசைஞ்சு கொடுக்கல. கல்யாணம் பண்ணாம இப்படியே  இருந்திடுவேன்னு சொன்னானே  தவிர,  ஷாலுவை மறந்துட்டு வேறக் கல்யாணம்  பண்ணிக்குவேன்னு வெறும் வாய் வார்த்தைக்கு கூட சொல்லல. அந்த அளவுக்கு காதலும் அதே அளவுக்கு பிடிவாதமும் இருக்கிறவனை எப்படி சமாதனப்படுத்தி, இரண்டு பேரையும் சேர்த்து வைக்கிறதுன்னு தெரியாமத் தான்  தவிச்சுட்டு இருந்தேன். நான் ஆசைப்பட்ட மாதிரி இரண்டு பேரும் இப்போ ஒன்னு சேர்ந்துட்டாங்க,  சீக்கிரமே கல்யாணமும் பண்ணிக்கப் போறாங்க, இருந்தாலும் நீங்க சொன்ன பொய்யை நினைச்சா நெருடலாவும் அதே சமயம் பயமாவும் இருக்கு. இன்னும் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு இருந்தா இப்போ சொன்னப் பொய்யை விட நல்ல  வழி  கிடைச்சிருக்கும்.  “ என்றான் தனுஜ்.

அலைபேசியில் அழைத்து பொய்யான தகவல் கூறியது யார் என்று அறிந்த இருவரும்.. ஒருவரை ஒருவர் பார்த்து மெதுவாய் சிரித்துக்கொண்டு.. “ உனக்கேத் தெரியாத வழியை எங்களத் தேடச் சொல்லுற அப்படித் தானே?” என்றவர்,  “அந்த ராங் கால் பண்ணுனது ஷாலு தான்” என்று நடந்ததை சுருக்கமாக கூறி முடித்து, “புது வழியைத் தேட அவகாசமோ  அதுக்கான பொறுமையோ எனக்கு இல்ல தனு.  என் பையன்  அவனோட பிடிவாதத்தைப் விட்டுட்டு அம்மான்னு என்னைத் தேடி வருவான்னு  கிட்டத்தட்ட இருபது வருஷமா நானும் பொறுமையா காத்திட்டு இருக்கேன். இன்னும் எத்தனை வருஷத்துக்கு செய்யாத தப்புக்கு என் பிள்ளைய பிரிஞ்சு தண்டனைய அனுபவிக்கணும்!. இதுக்கு மேலப் பொறுமையா இருக்க என்னால முடியாது. தேவ் உணராத  அவனோட தப்பை அவனுக்கு புரியவைச்சு,  என் தரப்பு நியாயத்தை  அவனுக்குத் தெரியப்படுத்த விஷல்யா தான் சரியான ஆள். ” என்றார் பானுஸ்ரீ.

“  விஷல்யா தேவ்வோட தப்பை புரியவைக்கப் போறாளா!, அவங்க இரண்டு பேரும்  தனியா என்னப்  பேசிக்கிட்டாங்கன்னு  தெரிஞ்சா நீங்க இப்படிப் பேச மாட்டீங்க அம்மா!,  விஷல்யாவைத் தான் பொண்ணுப் பார்க்கப் போறோம்னு  உண்மைய  சொல்லாம, நீங்க தேவ்வைக்   கூட்டிட்டு வந்த வரைக்கும்  எல்லாம் உங்கத் திட்டப்படி தான் நடந்தது,  அதுக்கு பிறகு நடந்தது எதுவும் உங்கத் திட்டத்துக்கு உதவாது.  விஷல்யா தன்னோட  தப்புக்கு மன்னிப்பு கேட்டு, இனி தேவ் விருப்பப்படி அவனுக்கு பிடிச்ச மாதிரி  நடக்க சம்மதிச்ச பிறகு தான் தேவ் இந்தக் கல்யாணத்துக்கே சம்மதிச்சான், விஷல்யா என் நண்பனுக்காக அவன் காதலுக்காக  அவளையே மாத்திக்கிட்டா, இதுல அவ தேவ் மனசை மாத்தப் போறாளா?  “ என்றான் தனுஜ்.

“ அதுவும் எங்கள் பொய்களில் ஒன்றே!” என்று சிரித்தபடி கூறினார் வாசுதேவ்.

“ என்ன சொல்லுறீங்க?,” என்று அதிர்ச்சியுடன் வினவினான் தனுஜ்.

“ விஷல்யா என்னைக்கும் அவளை மாத்திக்க மாட்டா. உண்மைய சொல்லனும்னா அவளுக்கு அவளை மாத்திக்கவும் விருப்பம் இல்லை காதலை விட்டுக் குடுக்கவும் விருப்பம் இல்ல, அதனால தான் தேவ்வுக்காக  தன்னை மாத்திக்கிட்டதா பொய் சொல்லி அவனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறா” என்றார் பானுஸ்ரீ.

“ ஓ.. அப்போ எப்படி எல்லாம் உன் நண்பனை ஏமாத்தி இருக்கோம்னு சொல்லிப் பெருமைப்படத் தான் என்னை இங்க  வர வைச்சிருக்கீங்க?“  என்று  கோபத்துடன் தனுஜ் வினவிட…

“ இல்ல, கல்யாணம் முடியுறவரைக்கும் தேவ்வுக்கு இந்த உண்மை தெரியக் கூடாது, அதுக்கு உன் உதவி வேணும்.  “ என்றார் பானுஸ்ரீ.

“ என் நண்பனை ஏமாத்துறதுக்கு என்னையே கூட்டு சேர்க்கிறீங்களா?” என்று கோபம் விடுத்து கிண்டலுடன் வினவினான் தனுஜ்.

“  நீ உண்மைய சொல்லுறதால உன் நண்பன் கல்யாணத்தை நிறுத்திட்டு கடைசிவரைக்கும் தனியாவே  இருப்பான், உண்மைய மறைக்க உதவி பண்ணுறதால அவனுக்கு அவனோட காதல் கிடைக்கும்.  இது  தப்பு தான்.  ஆனா இந்தத் தப்பால யாரும் பாதிக்கப்படப் போறது இல்ல. அடுத்தவங்க உணர்வுகளை காயாப்படுத்துற உண்மையை விட,  உறவைக் காப்பாத்திக்க சொல்லுற பொய்  எவ்வளோ மேல். எங்கள உன் அப்பா அம்மா மாதிரின்னு சொன்னயே, எங்களுக்காக  இதைச் செய்யமாட்டியா?, சரி எங்களுக்காக   வேணாம் உன் நண்பன் தேவ்வுக்காக இதை செய்.  ” என்று கனிவான குரலில்  வேண்டுகோள் விடுத்தார் பானுஸ்ரீ.

“தாராளமா செய்யலாம். நீங்க இவ்வளவு சொன்னதுக்கு பிறகு, முடியாதுன்னு சொல்ல முடியல, சொல்ல நினைச்சாலும்   நீங்க விட மாட்டீங்க!..,  ஆனா என்ன உண்மை தெரிஞ்சா தேவ் உங்களை ஒன்னும் செய்ய மாட்டான், என்னைத் தான் வெள்ளாவி போட்டு வெளுத்துடுவான். அத நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு”என்று தயக்கத்துடன் சம்மதம் சொன்னான் தனுஜ்.

தன் மகனின் திருமணத்தில் இருந்த ஒரு தடையும் விலகி விட்டதாக எண்ணிய தம்பதியர் இருவரும் தங்களுக்குள் மகிழ்ந்து கொள்ள.. “ஹெல்ப் பண்றேன்னு சொல்லவும் ரெண்டு பேர் முகத்திலயும் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுது.. ஒருத்தனை மாட்டி விட்டு அடி வாங்க வைக்கிறதுல உங்களுக்கு அம்புட்டு சந்தோசம். ஆனா நீங்க நினைக்கிற மாதிரி உங்க பையனை சமாளிக்கிறது அவ்வளவு ஈஸியான காரியமில்லை. கல்யாணம் முடியுற வரைக்கும்  உண்மை வெளிய வராம பார்த்துக்கிறது என்னோட கடமை, அதுக்கப்புறம் என்ன நடந்தாலும் அதுக்கு நான் பொறுப்பு இல்ல, அதனால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சுடுங்க. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்” என்று கண்டிப்புடன் கூறிவிட்டு அங்கிருந்து விடை பெற்றான் தனுஜ்.

“ என்ன பானு சைலன்சர் இப்படி சொல்லிட்டுப் போறான். “என்று குழப்பமும் தவிப்புமாய் வினவினார் வாசுதேவ்.

“தனு உண்மைய சொல்லமாட்டேன்னு சொன்னதே எனக்கு பெரிய நிம்மதியா இருக்கு. இருந்தாலும் அவன் சொன்னது சரிதான், நம்ம மருமக அந்த அளவுக்கு பொறுமைசாலி இல்ல, அதனால ரொம்ப நாளைக்கு  உண்மையை மறைச்சு வைக்க முடியாது. தனு சொல்லுற மாதிரி சீக்கிரமே கல்யாணத்தை முடிக்கணும்” என்றார் பானுஸ்ரீ.

ஏற்கனவே திட்டமிட்ட தேதிக்கு முன்பே திருமணத் தேதி குறிக்கப்பட்டது.

பல மாதங்கள்  பிரிந்திருந்த காதல் மீண்டும் கை சேர்ந்த மகிழ்வில் இருந்த அமுதேவ் தினமும்  விஷல்யாவை சந்திக்க  விரும்பினான்.

திருமணம் நல்லவிதமாக நடந்து முடியும் வரை தனிமையில்  சந்திப்பதை தவிர்க்க விரும்பிய விஷல்யா,  சிலமுறை பல காரணங்கள் கூறி தப்பிக்க.. ஓரிருமுறை கூறப்பட்ட காரணங்கள் பலனில்லாமல் போக தவிர்க்க முடியாமல் அமுதேவ்வை சந்தித்தாள். அப்போதும் தான் சொன்ன பொய்யை மறைக்க அவனுக்கு பிடித்தது போலவே புடவை அணிந்து சென்றாள்.

“ உன்னைப் புடவையில பார்க்கும் போது எவ்வளோ அழகா இருக்க தெரியுமா? இப்போ தான் பொண்ணு மாதிரி அடக்க ஒடுக்கமா இருக்க!, எனக்காக நீ உன்னை மாத்திகிட்டத நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு ஷாலு.” என்று அவள் கை விரல் பற்றி அதில் மெதுவாய் இதழ் ஒற்றிப் பிரித்தவன், அவன் உரைத்த வார்த்தையில் உண்டான கோபத்தைக் கட்டுப்படுத்த தலைக் கவிழிந்து இருந்தவள் நிலையை வெட்கம் என்றெண்ணி…

“ என் இதழ்

உன் விரல்

தீண்டும் போது

என்னுள் 

விரகம்  விரவுகிறது..

உன்னுள் 

வெட்கம் வேர்விடுகிறது.. ” 

என்று  குனிந்திருந்தவள் தலையை நிமிர்த்தி கவிதை வரியில் தன் உள்ளம் உணர்ந்ததையும், அந்த நேரத்தில்    தன்னவள் உணரவேண்டிய உணர்வையும் உரைத்தான் அமுதேவ்.

அமுதேவ் கவிதை வரிகளில்   ஈர்க்கப்பட்டவள், இன்னும் சற்று நேரம் அவனுடன் பொழுதை கழிக்கலாம் என்று எண்ணும் நேரம், “கோபத்துல பேசிட்டு போன,  நீயே ஒருநாள் உன் தப்பை புரிஞ்சுட்டு என்னைத் தேடி வருவன்னு எனக்கு தெரியும் ஷாலு. அதனாலதான் உன்னை தவிர வேற யாரையும் மனசாலக் கூட நினைச்சு பாக்காம உனக்காக காத்துட்டு இருந்தேன். பிரிவு தான் உறவுகளுக்குள்ள இருக்கிற அன்போட ஆழத்தை தீர்மானிக்கிது,   என்னை பிரிஞ்ச பிறகு தான.. உனக்கு என்னோட அருமை புரிய ஆரம்பிச்சிருக்கு.  என் அருமை புரியவும் தானே இத்தன வருஷம் உனக்குள்ள இருந்த முட்டாள் தனத்தை தூக்கி போட்டுட்டு எனக்காக உன்னை நீயே மாத்திக்கிட்ட..  இது தான் உண்மையான காதல் ஷாலு.   ” என்றான் அமுதேவ்.

” நமக்கு பிடிச்சவங்களுக்காக நம்மளையே மாத்திக்கிறது தான் உண்மையான காதல்னா.. உனக்காக என்னை மாத்திக்கிட்ட என் காதல் உண்மைனும், எனக்காக உன்னை கொஞ்சம் கூட மாத்திக்காத உன் காதல் பொய்யுனும்  சொல்ல வரியா அம்மு?” என்று  அப்பாவி போல கண்களை சிமிட்டி வினவினாள் விஷல்யா.

”  சேச்சே, நான் அப்படி சொல்ல வரல. பொதுவா பொண்ணுங்க தான் அவங்க விருப்பத்தை மாத்திக்கிட்டு அடுத்தவர்களுக்காக வாழுறவங்க அந்த அர்த்தத்துல சொல்ல வந்தேன். கல்யாணத்துக்கு பிறகு ஒரு ஆணோட லைஃப் ஸ்டைல் மாறுதோ இல்லையோ பொண்ணோட லைஃப் ஸ்டைல் டோட்டலா சேஞ்ச் ஆயிடும். தன் புருசனுக்கு பிடிச்சது,  பிள்ளைகளுக்கு பிடிச்சது குடும்பத்துல இருக்கிற மத்தவங்களுக்கு  பிடிச்சது இப்படி  அடுத்தவங்க விருப்பத்துல  சந்தோஷப்படுறது தான் பொண்ணோட குணம், அது தான் நம்ம பாரம்பரியம், பழக்கவழக்கம், காலம் காலமா நடந்துட்டு வர்றதும் இதுதான்.. “என்றான் அமுதேவ்.

” அடுத்தவங்க விருப்பத்துக்காக வாழுற பொண்ணுக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பம் இருக்குன்னு யாரும் பாக்குறது இல்ல, அவ எந்தக் குடும்பத்துக்காக உழைக்கிறாளோ,  அந்த குடும்பத்து ஆட்கள் கூட அதை பத்தி யோசிக்கிறது இல்லை, அப்படித்தான அம்மு.  ” என்று இம்முறையும் அப்பாவி போல் முகத்தை வைத்து விபரம் கேட்பதுபோல் வினையமாய் வினவினாள் விஷல்யா. 

” குடும்பம் தான் பொண்ணுங்களுக்கு உலகம், தன் குடும்பத்தை பத்தி யோசிக்கிறத  விட பொண்ணுங்களுக்கு வேற என்ன விருப்பம் இருந்திடப் போகுது. ” என்று சரியான பதில் கூற முடியாமல் தட்டிக் கழித்தான் அமுதேவ்.

” அப்போ ஆண்களுக்கு   இன்னொரு உலகம் இருக்கு அப்படித்தான அம்மு.. “என்று விஷல்யா வினவ..

”  ஃஅப்கோஸ், ஃபேமிலி லைஃப் ஒரு வேர்ல்டு. அதைத் தாண்டி   ஃப்ரெண்ட்ஷிப்,கெரியர், ட்ரீம், பிசினஸ் இப்படி இன்னொரு உலகம் இருக்கு.. ஃபேமிலி லைஃப்ப எந்தளவுக்கு ஸ்மூத்தா ஹாண்டில் பண்ணறோமோ,  அதே அளவுக்கு இன்னொரு லைஃப்லயும் சக்ஸஸ்புள்ளா ரன் பண்றதுதான்  ஆண்களுக்கு கெத்து” என்றான் அமுதேவ்.

” ஓ..ஏன் அம்மு  நீ சொன்ன இரண்டு உலகத்துலயும் ஆண்களால மட்டும் தான் ஜெயிக்க  முடியுமா?, பொண்ணுங்க  ஜெயிக்க முடியாதா?, இல்ல ஜெயிக்க கூடாதா?.” என்று அதே அப்பாவி தோரணையில் விஷல்யா வினவிட.. ” குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் சரியா இருக்கும்,  இதுல மத்ததுக்கு எங்க நேரம் இருக்கும்?, ” என்று அசட்டையாக பதில் தந்தான் அமுதேவ். 

  “அப்போ ஆஃப்டர் மேரேஜ் பொண்ணுகளுக்கு குடும்ப சிந்தனையைத் தவிர வேறு எதுவும் இருக்க கூடாது. அதுவரைக்கும் அவங்களுக்குன்னு இருந்த பிரண்ட்ஸ், பிஸ்னஸ் ,  ட்ரீம், கெரியர் எல்லாத்தையும் மூட்டை கட்டிவைச்சுட்டு தான் கல்யாணத்துக்கு ரெடியாகணும் அப்படித்தானே அம்மு” என்று அப்பாவித்தனத்தை விடுத்து என்னவென்று கணிக்க முடியாத குரலில் வினவினாள் விஷல்யா. 

”  இருக்கலாம் ஆனா ஒரு லிமிட் ல இருக்கணும், ஃப்ரெண்ட்ஷிப் பிஸ்னஸ் கேரியர் இப்படி எதைப் பத்தி யோசிச்சாலும் அதுக்கு முன்னாடி குடும்பத்தை பத்தி யோசிக்கணும். ஃபேமிலி மெம்பர்ஸ்க்கு  தான் பஸ்ட் பிரீபெரென்ஸ் கொடுக்கணும். மத்ததெல்லாம் இரண்டாம் பட்சம் தான். ” என்றான் அமுதேவ். 

” இரண்டாம் பட்சம்..   நம்ம வாழ்க்கையில இனி வரப்போற இன்பம் துன்பம் எல்லாத்தையும் சரி சமமா பகிர்ந்துக்க சம்மதிச்சு வர  உறவோட உணர்வை கொஞ்சம் கூட மதிக்காம.. அவங்களுக்குன்னு இருக்கிற தனிப்பட்ட விருப்பு வெறுப்பை இரண்டாம் பட்சம்னு அலட்சியப்படுத்துறது தான் சமஉரிமை.  அப்படித்தானே” என்றவள் குரலில் அதுவரை கொண்டிருந்த நிதானம் விடுத்து  வெறுப்பு எட்டிப்பார்த்தது. 

இதுவரை சாது போல் பேசிக் கொண்டிருந்தவள் குரலில் வித்தியாசத்தை உணர்ந்த அமுதேவ்.. ” இப்போ எதுக்கு இத பத்தி கேக்குற?, நம்ம கல்யாணத்துக்கு பிறகும் உன்னோட பிஸ்னஸ்ஸ கன்டினியூ பண்ற ஐடியால இருக்கியா?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி  வினவினான்.

” சேச்சே.. நீ இவ்வளவு தெளிவா சொன்னதுக்கு பிறகும்.. பிஸ்னஸ் பத்தி எப்படி யோசிப்பேன் அம்மு, எனக்கு நீ தான் முக்கியம்.” என்றாள் விஷல்யா. 

” உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் எப்படி இருந்தா புடிக்கும்னு தெரிஞ்சிக்கிட்டா ஃப்யூச்சருக்கு யூஸ் ஆகும்ல, அதனால தான் கேட்டேன்” என்று  தன் உண்மை தெரிந்து விடக் கூடாது என்று மழுப்பலாய்   காரணம் கூறினாள் விஷல்யா. 

முன்பெல்லாம் இது போல் பேச ஆரம்பித்தாலே பெண்ணியம் பேசி வார்த்தைக்கு வார்த்தை வாதாடுபவள், இன்று தானே முன்வந்து தன் விருப்பத்தை கேட்கவும்,  பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று பெண்களுக்கு இலக்கணம் என்று அவன் வரையறுத்து வைத்தவைகளையும், திருமணத்திற்கு பிறகு விஷல்யா நடந்து கொள்ள வேண்டிய முறையையும் விவரிக்கத் துவங்கினான்.

அமுதேவ் பட்டியலிட்டவைகளை மென் முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தவள்,   இதற்கு மேல் தாங்காது என்பதுபோல் பொறுமை இழந்தாள்.  மேலும் தனது நடிப்பை நீடிக்க  முடியாது என்ற தீர்மானத்துடன்.. ” ஓகே அம்மு நான் கிளம்புறேன்,  வீட்ல அம்மா  தேடுவாங்க… உங்கள தான் பார்க்க வந்தேன்னு தெரிஞ்சா திட்டுவாங்க.. ” என்று அவசரமாய் அங்கிருந்து கிளம்பிட..

” அதுக்குள்ள என்ன அவசரம் ஷாலு, “என்று அவளை பிடித்து வைக்க நினைக்கும் போது அவன் அலைபேசி சிணுங்கி அதன் வழி பேசும் தனுஜ் அவசர அவசியமான வேலை என்று எதையேனும் அறிவுறுத்தி, நீட்டிக்க விரும்பிய சந்திப்பிற்கு உடனே முற்றுப்புள்ளி வைப்பான். 

விஷல்யா குறித்த உண்மை வெளிவராமல்  இருக்க இருவரின் சந்திப்பை தடுப்பதற்கு  தனுஜ் வெகுவாக போராடினான் என்றே சொல்லலாம்.

பள்ளிப் பருவத்தில் துவங்கிய நட்பு கல்லூரி காலத்திலும் தொடர்ந்திட…   படிப்பு முடிந்ததும் இருவரும் சம அளவு முதலீட்டில் ஒன்றாக இணைந்து  தேவதனு..  எனும் பெயரில்  கட்டுமானத் தொழிலை   துவங்கினர். நிறுவனம் துவங்கி சில வருடங்கள் கடந்து இருந்தாலும் இப்போதுதான் முதல்முறையாக அரசாங்கத்தின் கட்டிட ஒப்பந்தம் கைக்கு கிடைத்துள்ளது,  அதை நல்லபடியாக முடித்துக் கொடுத்தால் இதேபோல் இன்னும் நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கும் என்பது நண்பர்கள் இருவரின் ஒருமித்த கருத்தாகும். 

அலுவல் வேலை முடிந்ததும் அமுதேவ் விஷல்யாவை காணச்  செல்ல அவசரம் காட்டும் நேரம் எல்லாம் வேண்டுமென்றே  அதிகப்படியான வேலையை அவனுக்கென்று ஒதுக்கி வைத்து அதை செய்து முடித்தால் மட்டுமே அங்கிருந்து நகர வேண்டும் என்று கட்டளையும் பிறப்பித்து விடுவான் தனுஜ்.

பொதுவாக தனுஜ் இதுபோல் அதிகப்படி பணியை ஒப்படைத்தால், ‘ உன் வேலைய என் தலையில கட்டப் பாக்குறியா?’ என்று நண்பனை உண்டு இல்லை என்று ஒரு வழியாக்கி விட்டு இருக்கும் வேலையை எல்லாம் அவன் தலையில் கட்டிவிட்டு அகன்று விடுவான் அமுதேவ். ஆனால் இம்முறை அவர்கள் கையில் எடுத்திருக்கும்   கட்டிட ஒப்பந்தம் இருவரின் வெகு காலக் கனவு திட்டம் என்றே சொல்லலாம்.   அதற்கானப் பணியை அலட்சியமாகத் தட்டிக் கழிக்க இருவராலும் முடியாது ஆகையால் நண்பன் கொடுத்த அனைத்து வேலைகளையும் நேரம் கடந்தாலும்  முடித்தப் பிறகே அங்கிருந்து நகர்வான்  அமுதேவ்.

விஷல்யா  வுடனான சந்திப்பை தடுப்பதற்காகவே தனுஜ் இதுபோல் அதிகப்படி வேலைகளை தன் தலையில் கட்டுகிறான் என்பதை உணர்ந்த அமுதேவ். அடுத்து வந்த நாட்களில் தனது அலுவல் பணி முடிந்து  கிளம்புவதை கூட நண்பனிடம் அறிவிக்காமலேயே அலுவலகம் விட்டு அகன்று விடுவான்.

சென்னையின் மிக நெரிசலான பகுதிகளில் ஒன்றான தியாகராய நகரில்  அமுதேவ்விற்காக காத்திருந்த விஷல்யா.. ஆட்டு மந்தை போல் முண்டியடித்துக்கொண்டு செல்லும் மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நேரம், பெண்கள் தரையை பார்த்து தான் நடக்க வேண்டும்  என்று அமுதேவ் உரைத்த பெண்களின் இலக்கண வார்த்தை நினைவில் வந்தது.  அதன்பின் அவள் மனதில் ஒரு விபரீத யோசனையும் உதித்தது. 

தனுஜ் கொடுக்கும் அதிகப்படியான வேலையில் இருந்து தப்பித்து தன்னவளைக் காண ஆவலுடன் ஓடிவந்த அமுதேவ். தலை நிமிராமல்  தரைப்பார்த்து நின்றிருந்த.. விஷல்யா அருகில் வந்து..” வந்து  ரொம்ப நேரமாச்சா..  வர வர இந்த தனுஜ்  இம்சை தாங்க முடியல.. இருக்கிற வேலையெல்லாம் கொண்டு வந்து என் தலையில் கட்டிடுறான், அவன்கிட்ட இருந்து தப்பிச்சு வரதுக்கே போதும் போதும்ன்னு ஆகிடுது ” என்று தாமதமாக வந்ததற்கு அவள் கேட்கும் முன்பே  காரணம் கூறிவிட்டு தன்னவள்  விரல் கோர்த்து வீதியில் நடக்கத் துவங்கினான்.

சில தூரம் கடக்கும் முன் எதிரில் வந்த பலரின் மீது மோதி  சங்கடத்துடன் மன்னிப்புக் கேட்டபடி உடன் வந்த விஷல்யாவை விசித்திரமாக பார்த்தவன், ” என்னாச்சு உனக்கு?, ஏன் இப்படி எதிர்ல வரவங்க மேல இத்தனை தடவை இடிச்சுட்டு வர” என்று கோபமாய் வினவினான் அமுதேவ்.

” நீங்க தானங்க  சொன்னீங்க.. பொண்ணுங்க தரையை பார்த்து தான் நடக்கனும்னு.. அதான் குனிஞ்ச தல நிமிராம தரையை பார்த்து நடக்கிறேன்.. ” என்றாள் விஷல்யா.

” ஏன் இப்படி வித்யாசமா பேசுற?” என்று புரியாத குழப்பத்துடன் அமுதேவ் வினவிட.. “நீங்க  தானங்க சொன்னீங்க , கட்டின புருஷன்  பேர் சொல்லிக் கூப்பிடாம,    மரியாதையா   பேசுறது தான் பொண்ணுக்கு அழகுன்னு !” என்றாள் விஷல்யா.

தனக்காகத் தன் விருப்பத்தை நிறைவேற்றத் தான்  இப்படி நடந்து கொள்கிறாள் என்று தெரிந்ததும் அமுதேவ்  கால்கள் தரையில் நிற்கவில்லை.. ” ஐ லவ்  இட் சோ மச்… கீப் இட் அப்” என்று உற்சாகக் குரலில் கூறினான் அமுதேவ்.

‘ கீப் இட் அப் பா.. இரு இன்னைக்கு மொத்தமா உன்னை வைச்சு செய்யுறேன்’ என்று மனதில் உறுதி கொண்டவள்.. எதிரில் வந்தவர்கள் மீது வேண்டுமென்றே முட்டிக் கொண்டு விழுந்து தடுமாறிக் கொண்டும் இருந்தாள்.

‘கண்ணு தெரியாதா பார்த்து போ’ என்று இடி பட்டவர்கள் எரிச்சலுடன் புகைந்து கொண்டே கடந்து செல்ல..  ஒரு நிலைக்கு மேல் பொறுமை இழந்த அமுதேவ். ” ஷாலு, இதெல்லாம் நீ எனக்காகத் தான் செய்யுற.. எனக்கு ரொம்ப சந்தோஷமா  இருக்கு, இருந்தாலும் இது இந்த இடத்துக்கு செட்டாகாது.  நார்மலா நடக்கிற மனுஷங்களே  தடுமாறி விழுகிற கூட்டநெரிசலான  இடம் இது தயவுசெய்து நிமிர்ந்து எதிர்ல  வரவங்களை   பார்த்து இடிக்காம நடந்து வா.. ” என்றான்.

” அச்சச்சோ அது தப்புங்க, பொண்ணுங்க  புருஷன் பேச்சை மீறக்கூடாது.   தரையை பார்த்து தான் நடக்கணும்..  இதெல்லாம் நீங்க சொல்லி கொடுத்ததுங்க,  இதை நான் சரியா பாலோ பண்ணலேன்னா, உங்க பேச்சை மீறிட்டேன்னு சொல்லி  கல்யாணத்தை நிறுத்திடுவீங்க..  யாருக்காகவும் எதுக்காகவும் உங்களை விட்டுக் கொடுக்க என்னால முடியாதுங்க. நீங்க என்ன சொன்னாலும் சரிங்க நான் இப்படித்தான் நடந்து வருவேனுங்க” என்று பிடிவாதத்துடன் தரை பார்த்தபடியே நடந்து வந்து மேலும் ஒரு சிலர் மீது மோதிக்கொண்டாள் விஷல்யா.

ஓரிரு முறை எடுத்துச் சொல்லிப் பார்த்தும் அவள் தன் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை என்பதை எரிச்சலுடன் ஏற்றுக்கொண்ட அமுதேவ்.. அவளுக்கும் சேர்த்து முன் வழி பார்த்து நடக்கத் துவங்கினான்.

எதிரில் வருபவர் மீது மோதிக் கொள்ளாமல் அவளை வழிநடத்தி செல்வதற்கே போதும் போதும் என்றானது. இதற்கு மேல் வழிநடத்த  தன்னால் ஆகாது என்று சலிப்படைந்த அமுதேவ்,  ஒரு பெரிய பல்பொருள் அங்காடிக்குள்  விஷல்யாவை இழுத்துச் சென்றான். 

” உனக்கு வேணுங்கிறத பர்சேஸ் பண்ணிக்கோ ஷாலு… ” என்று பெருந்தன்மையாக அனுமதி வழங்கிவிட்டு.. ஒரு ஓரமாய் சென்று நின்று கொள்ள..  விஷல்யா தான் தேர்வு செய்த ஒவ்வொன்றையும் எடுத்து வந்து அமுதேவ்விடம்  காட்டி அவன் விருப்பத்தை வினவினாள். 

முதல் சில பொருட்களுக்கு தன் விருப்பத்தை அமைதியாகவே தெரிவித்தவன்.. கடையின் சிப்பந்திகள் தங்களை விசித்திரமாக பார்ப்பதை உணர்ந்து.. ” ஷாலு உனக்கு என்ன வேணுமோ அதை எடுத்துக்கச் சொன்னேன், இப்படி ஒவ்வொண்ணுக்கும் என் முன்னாடி வந்து நிக்காத” என்று எரிச்சல் பட்டான் அமுதேவ்.

” என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. நீங்கத்  தானங்க , கல்யாணமான பொண்ணுகளுக்கு தனி விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாதுன்னு சொன்னீங்க,  அதுமட்டும் இல்ல புருசனுக்கு பிடிச்சதுதான் பொண்டாட்டிக்கும் பிடிக்கணும் அதுதான் நல்ல குடும்பப் பெண்ணுக்கு அழகுன்னும்  சொன்னீங்க. என்னைக்கு உங்களை காதலிக்க  ஆரம்பிச்சேனோ அன்னைக்கு இருந்து  உங்களை என் புருஷனா நினைச்சு மனசுக்குள்ள பூஜை பண்ணிட்டு  இருக்கேங்க, அதனால  உங்களுக்கு என்ன பிடிக்குதோ அதுதான் எனக்கும் பிடிக்கும். நீங்க பார்த்து சரினு சொல்றத தான் நான் வாங்குவேன்.. ” என்று பிடிவாதக் குரலில் அறிவித்தாள் விஷல்யா.

” பொண்டாட்டினா அப்படி இருக்கணும்,  எது  வாங்குறதா  இருந்தாலும் புருஷன் கிட்ட கேட்டு தான்  வாங்குவங்களாம். குடுத்து வச்ச மகராசன்.  எனக்குன்னு   ஒன்னு வாய்ச்சிருக்கே  !, கிரெடிட் கார்டு தேயுற  அளவுக்கு ஷாப்பிங் பண்ணிட்டு இன்னும் பத்தலனு பத்து  கடை ஏறி இறங்க விடுது.    ” என்று மனைவியின் கொள்ளையடிக்கும் பொருட்கள்  கொள்முதலில் பாதிப்படைந்த கணவர் ஒருவர்  மனதுக்குள் சொல்வதாய் எண்ணிக்கொண்டு சத்தமாய் புலம்பி விட.. ” அந்த ஆள்  மாதிரி உனக்கும்  ஆணாதிக்கத்  தனமா மாறணும்னு ஆசை இருந்தா,  அந்த நினைப்பை இங்கேயே புதைச்சுட்டு வந்திடு.. அதுதான் உனக்கு நல்லது.” என்று புலம்பல் நாயகனின் மனைவி எச்சரித்துவிட்டு முன் நடக்க…  சத்தமின்றி அவரைப் பின்தொடர்ந்து சென்றார்  அப்பெண்ணின்  கணவர்.

கடையின் சிப்பந்திகள் முதற்கொண்டு அங்கிருந்த அனைவரும் அமுதேவ்வை அரியவகை மனிதனை பார்ப்பது போல்..   விசித்திரமாகவும் .. இப்படி ஒரு ஆணாதிக்க மனிதனிடம் வந்து மாட்டிக் கொண்டாயே என்பது போல் விஷல்யாவை இரக்கமாகவும் பார்த்தனர்.

அதற்கு மேல் அங்கு நின்று அவமானப்பட மனமில்லாமல் வாங்கிய பொருட்களுக்கு பணம் கட்டிவிட்டு விஷல்யாவை அங்கிருந்து அரக்கப் பரக்க இழுத்துச் சென்றான் அமுதேவ். 

அடுத்து நிகழ்ந்த இரு சந்திப்பும் இது போன்றதொரு மன சங்கடத்தை ஏற்படுத்த விஷல்யாவை தனியே சந்திக்கச் செல்வதை தவிர்த்தான் அமுதேவ்.

 ” என்ன டா நண்பா இன்னைக்கு நீ  உன் ஆளைப் பார்க்க போகலையா.. ?” என்று தனுஜ் ஆர்வத்துடன் வினவிட…

” அதான் கல்யாண தேதி நெருங்கி  வந்துடுச்சுல.. இதுக்கு மேலத் தனியா பார்த்துக்கிறது நல்லா இருக்காதுன்னு விஷல்யா அம்மா பீல் பண்ணுறங்க.. அதான்.. ” என்று அமுதேவ் தடுமாறிட…  

” என்னடா குரல் ஒருமாதிரி இருக்கு, உன் ஆளை பார்க்க முடியலன்னு ரொம்ப பீலிங்கா இருக்கா”  என்று  கிண்டலுடன் தனுஜ் விலகி சென்றுவிட…

‘ பீலிங் இல்ல ஃபியரிங் நண்பா.. ‘ என்று வெளியில் சொல்ல முடியாத உணர்வை உள்ளுக்குள் புலம்பி தீர்த்தான் அமுதேவ். 

தன் விருப்பத்தை 

அடுத்தவர் மீது திணிக்கும் 

உறவுகள்…

துவக்கத்தில் 

தித்திப்பாய் இருந்தாலும்…

நாட்கள் செல்லச் செல்ல

திணிக்கப்பட்ட விருப்பத்தில் 

வெறுப்பு உண்டாகி

உறவில் விரிசல் ஏற்படக் கூடும்..

எதையும் நிர்பந்திக்காத

உறவு மட்டுமே காலத்திற்கும் 

நிலைத்து நிற்கும்..