அத்தியாயம் 16

தற்கொலை முயற்சி என்றதும் மருத்துவமையிலிருந்து போலீஸாருக்கு புகார் கொடுக்கப்பட்டிருக்க, நிர்மலாவுக்கு விக்னேஷ் இழைத்த குற்றங்கள் அக்கம், பக்கத்தாரின் மூலம் தெரிய வந்திருந்தது.

நிர்மலா தற்கொலை செய்துகொள்ள முயன்ற பொழுது விக்னேஷ் வீட்டிலையே இல்லை. அவளை விக்னேஷ் கொலை செய்ய முயலவில்லை இது தற்கொலை முயற்சி என்று உறுதியானத்தில் அவனை கைது செய்ய முடியாது. அவன் மீது வீட்டார் புகார் அளித்தால் தான் மேற்கொண்டு போலீசார் கைது செய்து நிர்மலாவுக்கு இழைத்த குற்றங்களுக்காக தண்டனை பெற்றுக்கொடுக்கலாம்.

ஆனால் பெற்ற மகனை சிறையில் அடைக்க அமுதாவின் மனம் இடம் கொடுக்கவில்லை. மகனை மன்னிக்க பழனியும் தயாராக இல்லை. இதனால் இவர்களுக்கிடையே வாக்குவாதம் மருத்துவமனையில் உக்கிரமாகிக் கொண்டிருந்தது.

“என்ன நீ… நிர்மலா எப்போ சாவா… லாவண்யாவ இவனுக்கு கட்டி வைக்கலாம் என்று கங்கணம் கட்டிக்கிட்டு அலையிரியா?” மூர்க்கமாக முறைத்தான் பழனி.

“அந்த அளவுக்கு கல் மனசு எனக்கில்லங்க. நிர்மலாவ என் பொண்ணு போல வளர்த்தேன். அவளை போய் இந்த நிலமைக்கு ஆளாக்கிட்டான். இவன என் வயித்துல சுமந்திருக்கேன்னு நினச்சா எனக்கு அசிங்கமா இருக்கு. அதுக்காக அவன் கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியாது.

அவனுக்கு நம்ம வீட்டுல எந்த இடமும் இல்ல. வீட்டு வாசலுக்கு கூட வரக் கூடாது. எங்கயாச்சும் போய் அவன் வாழட்டும். நம்ம கண் முன்னாடி வராம இருந்தா போதும்” கண்ணீரோடு அமுதா. 

அழுதவாறே நின்றிருந்த லாவண்யா எதுவுமே பேசவில்லை. பேசும் நிலையிலும் அவள் இல்லை. தன்னுடைய சந்தோசமே இந்த திருமணம் தான் என்றிருந்த அக்காவுக்கு இப்படியொரு அவல நிலையா? தான் அவனுக்கு கிடைக்கவில்லை என்றதும், அவனை நேசித்த அக்காவை இவ்வளவு கொடுமை செய்ய அவனால் எப்படி முடிந்தது? விக்னேஷை மன்னிக்க லாவண்யா தயாராகவே இல்லை. போலீசார் அழைத்து சென்ற விசாரணைக்கு பின் வந்தவனை மருத்துவமனை என்றும் பாராமல் கன்னம் கன்னமாக அறைந்தாள் லாவண்யா.

சிலையாக நின்றிருந்த விக்னேஷ் எதுவுமே பேசவில்லை.

அறுவை சிகிக்சை மூலம் நிர்மலாவின் குழந்தையை மருத்துவர்கள் கவனமாக காப்பாற்றி இருந்தனர். எரிகாயங்களின் தாக்கத்தினால் குழந்தைக்கு என்னென்ன பிரச்சினைகள் இருக்குமென்று இனிமேல்தான் பார்க்க வேண்டும் என்று குழந்தையை குழந்தைகளுக்கே உண்டான தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதித்திருந்தனர்.

அறுவை சிகிச்சையை தாங்கும் சக்தி கூட நிர்மலாவுக்கு இல்லை. குழந்தையை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையால் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருக்க, நிர்மலா அறுவை சிகிச்சைக்கு பின் உயிர் நீத்திருந்தாள்.

நிர்மலாவின் இறுதிச் சடங்கு கூட அவசர அவசரமாக, அமைதியான முறையில் நடந்தேறியிருந்தது.

விக்னேஷோடு வீட்டார் மட்டுமல்ல, ஊரார் கூட பேச பிடிக்காமல் முகம் திருப்ப, நிர்மலாவின் இறுதிக் காரியங்களை முடித்தவன் ஊரிலையே இருக்க பிடிக்காமல் சென்று விட்டான்.

எங்கே சென்றான் என்று அவனை பற்றி கவலை கொள்ளும் நிலையில் வீட்டாரும் இல்லை. பிறந்த குழந்தையை எண்ணியே அவர்களின் கவலை இருந்தது.

“பத்தி எரிஞ்சவங்க விழுந்ததுல வயித்துலதான் அடிபட்டிருக்கு. அதுல நல்ல விஷயம் குழந்தைக்கு எந்த எரிகாயங்களும் இல்ல. ஆனா அடிபட்டத்துல தலைல பாதிப்பு இருக்கும் என்று நினைக்கிறோம். குழந்தை வளர வளர்த்தான் என்ன குறைபாடுகள் வரும் என்று பார்க்கணும். அதற்கு பிறகுதான் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க முடியும். குழந்தையை கவனமா பார்த்துக்கோங்க” என்றார் மருத்துவர்.

“அப்போ அன்னக்கி போன விக்னேஷ் அதுக்கு பிறகு வீட்டுக்கு வரவே இல்லையா? தொடர்புகொள்ளவும் இல்லையா?” “என்ன மனிதன் இவன்? பெற்ற குழந்தையை பற்றி கொஞ்சம் கூடவா கவலை இருக்காது” என்ற  எண்ணத்தில் சர்வேஷிடம் கேட்டான் செல்வா.

“அதான் இல்ல. அடிக்கடி வீட்டுக்கு வந்து லாவண்யாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கான்”  நிர்மலாவின் இறப்புக்கு பின்தான் லாவண்யா மாறிப் போனாள் என்று கூற ஆரம்பித்தான் சர்வேஷ்.

“என் அக்காவ அந்த பாடு படுத்தினது என்ன கல்யாணம் பண்ணிக்கத் தானே. இந்த ஜென்மத்துல நான் உன்ன கல்யாணம் பண்ண மாட்டேன் அத்தான். இங்க இருந்து போ…” லாவண்யா அழுதவாறே கத்த

“எங்கடா வந்த? உன்னைத்தான் வீட்டுக்கு வரக் கூடாது என்று சொல்லி இருக்கேனே, போ இங்க இருந்து” அமுதா விக்னேஷை பிடித்து தள்ளி விட்டாள்.

நிர்மலா இறந்து எட்டு மாதங்கள் கடந்து வீட்டுக்கு வந்திருந்தான் விக்னேஷ். இதுநாள் வரையில் எங்கிருந்தான் என்று அவன் சொல்லவுமில்லை. அறிந்துகொள்ளும் எண்ணமும் வீட்டாருக்கு இல்லை. நிர்மலாவின் இறப்பிலிருந்து யாரும் இன்னும் மீண்டு வந்திருக்கவில்லை.

“எத்தனை நாள்தான் என்ன ஒதுக்கி வைப்பீங்க? என்னமோ நான் தான் அவள கொன்னது போல ஆளாளுக்கு பேசுறீங்க. அவ சூசைட் பண்ணிகிட்டத்துக்கு நான் பொறுப்பாக முடியாது. அதான் அவ இல்லையே லாவண்யாவ எனக்கு கட்டி வைங்க. என் பையன பார்த்துக்க அம்மா வேணாம்?” சுயநலத்தின் மொத்தமாகி நின்றிருந்தான் விக்னேஷ்.

குழந்தைக்காக, ஆம் குழந்தைக்காக ஒருவேளை லாவண்யா விக்னேஷை திருமணம் செய்ய சம்மதித்திருப்பாள். அவன் தனது அக்காவுக்கு செய்த கொடுமைகளை கண் கூடாக பார்த்திராததால் மன்னித்து அவன் தன் மீது வைத்திருக்கும் காதலை புரிந்துகொள்ளக் கூட முயற்சி செய்திருப்பாள்.

விக்னேஷ் தான் நிர்மலாவுக்கு செய்த கொடுமைகளை உணரவே இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் நிர்மலாதான். தான் மிருகமாக நடந்து கொண்டத்துக்கும் காரணம் நிர்மலா மட்டும்தான். தான் நினைத்த வாழ்க்கை, தான் லாவண்யாவோடு வாழ ஆசைப்பட்ட வாழ்க்கை தனக்கு அமைந்தால் தான் முன்பு போல் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும், நல்லவனாகவும் இருப்பதாக அவன் கூற்று.

ஆனால் லாவன்யாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வயிற்றில் பிள்ளையை சுமந்திருக்கின்றாள் என்று அறிந்தும் ஈவு, இரக்கமின்றி அக்காவை அடித்தவனோடு தான் சந்தோசமாக எப்படி வாழ்வது? அவனால் இன்று அக்கா உயிரோடு இல்லை. குழந்தைக்கு என்னென்ன பிரச்சினை வரும் என்றே தெரியவில்லை.

கொலையே செய்திருந்தாலும் தான் செய்த தவறை உயர்ந்தவனை மன்னிக்கலாம். குற்றங்களை தான் இழைத்து விட்டு பழியை மற்றவர்களின் மீது போடுபவனை ஒருகாலமும் மன்னிக்க முடியாது.

“அத்த அத்தானுக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று நீங்க நினைச்சீங்கனா. அக்கா எடுத்த முடிவைத்தான் நானும் எடுப்பேன்” அமுதாவை மிரட்டினாள் லாவண்யா.

“கேட்டல்ல. கிளம்பு” மகன் திருந்தி வந்தால், செய்ததை நினைத்து வருந்தி மன்னிப்புக் கோரினால் அமுதா லாவண்யாவிடம் பேசலாம். அவன் பேசும் தோரணையே சரியில்லை என்றதும் விக்னேஷை துரத்தியடித்தாள்.

ஆனால் விக்னேஷ் விடுவதாக இல்லை. குழந்தையை பார்க்கும் சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்ல ஆரம்பித்தான்.

அவன் குழந்தையை பார்க்க அவன் வருவதை இவர்களால் தடுக்க முடியவில்லை.

பழனி சரோஜா செல்லும் தேயிலை தோட்டத்தில் தான் வேலை பார்க்கின்றான். வீட்டு சூழ்நிலையால் அமுதாவும் வேலைக்கு செல்ல, லாவண்யா வீட்டை கவனித்துக் கொண்டும், குழந்தையை கவனித்துக் கொண்டும் வீட்டில் இருப்பாள்.

ஒருநாள் குழந்தையை தூங்க வைத்து விட்டு பின்னாடி இருந்த கிணற்றில் நீர் இறைத்து குளித்து விட்டு இவள் வீட்டுக்கு வர, அவள் பின்னாலையே வந்த விக்னேஷ் லாவண்யா அறைக்குள் நுழைந்ததும் அறைக்கதவை தாழ்பாள் இட்டிருந்தான்.

பெற்றோர்கள் வேலைக்கு போவது விக்னேஷுக்கு நன்றாகவே தெரியும். வீட்டில் லாவண்யாவையும் குழந்தையும் தவிர பகல் நேரம் யாரும் இருக்க மாட்டார்கள். ஏன் அக்கம் பக்கத்தில் கூட யாரும் இருக்க மாட்டார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவளை அடைந்தால், வேறு வழியில்லாமல் அவளை தனக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்ற விபரீத முடிவுக்கு வந்து சொந்த வீட்டுக்குள்ளையே திருடன் போல் புகுந்து லாவண்யா வரும் வரையில் பதுங்கியிருந்தவன் லாவண்யாவை அடைய எண்ணினான்.

“அத்தான் என்ன பண்ணுற? முதல்ல கதவ திற” லாவண்யாவுக்கு உள்ளுக்குள் அச்சமாக இருந்தாலும் அதை முகத்தில் காட்டாது திமிராகவே கூறினாள்.

குழந்தையோ தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. குழந்தையை அறையில் விட்டு தான் மட்டும் தப்பியோட முடியாது. குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடுவதும் முடியாத காரியம். குளிக்க கட்டிய துணியோடு ஓடுவது அதைவிட சிரமம். அறைகதவை பூட்டிவிட்டு கதவருகே நிற்பவனை வெளியே அனுப்பி விட்டால் போதும் என்று நினைத்தாள் லாவண்யா. 

அவள் என்ன நினைக்கிறாள் என்று விக்னேஷுக்கு புரிந்ததும் சத்தமாக சிரித்தான்.

“என் கிட்ட இருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கிறியா? உன்ன விட மாட்டேண்டி” என்று அவள் அணிந்திருந்த ஆடையில் கைவைக்க போக அவனை தள்ளி விட்டாள் லாவண்யா.

விக்னேஷுக்கு கோபம் அதிகமானதே ஒழிய குறையவில்லை.

“உன்ன…” என்று அவன் லாவண்யாவை நெருங்க கட்டிலின் மீதிருந்த டார்ச்லைட் லாவண்யாவின் கண்ணில் பட்டது. தாவி அதை எடுத்தவள் டார்ச்லட்டலையே விக்னேஷின் தலையில் பலமாக அடித்தாள்.

இரத்தம் போல பொலவென கொட்டியது.

அதை பார்த்தும் அவள் நிற்கவில்லை. “என் கிட்டயே தப்பா நடந்துக்க பார்பியா? என் அக்காவை என்னெல்லாம் பண்ணி இருப்ப” என்று மீண்டும் அடித்தாள். வலி தாங்க முடியாமல் அவனே கதவை திறந்து கொண்டு வெளியே ஓடியிருந்தான்.

லாவண்யாவுக்கு உடம்பு முழுவதும் ஆட்டம் கண்டது. விக்னேஷ் வெளியேறியதும் சமையலறை கதவை பூட்டியவள் அங்கேயே அமர்ந்து கதறி அழுதாள்.

குழந்தை விழித்து அழ ஆரம்பிக்கும் பொழுதுதான் சுயநினைவுக்கே வந்தாள்.

குழந்தையை சமாதானப்படுத்தி, புட்டிபால் ஊட்டியபின்தான் துணியே மாற்றினாள்.

அமுதாவும், பழனியும் வேலைக்கு சென்று வீட்டுக்கு வந்த பின் வீட்டில் நடந்த சம்பவத்தை எவ்வாறு சொல்வது என்று லாவண்யா நடுங்கியவாறு அமர்ந்திருந்தாள்.

ஆனால் அவன் இரத்த காயத்தோடு ஆட்டோவில் சென்றதை சிறிசேன முதலாளியின் கடையில் இருந்தவர்கள் பார்த்திருக்க, வீட்டுக்கு வரும் பொழுதே அமுதாவுக்கு, பழனிக்கும் விஷயம் தெரிந்திருந்தது.

“லாவண்யா விக்னேஷ் வீட்டுக்கு வந்தானா?” கோபமாக கேட்டவாறுதான் உள்ளே வந்தான் பழனி.

லாவண்யா தன்னை பாதுகாத்துக் கொள்ளத்தான் விக்னேஷை அடித்தாள். ஆனால் அவள் அடித்தது அவர்களது ஒரே மகனை. அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால்? என்ன செய்வது? அவளிடம் எந்த பதிலும் வரவில்லை. 

“அவன் உன் கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தானா?” என்று அமுதா கேட்டதும் தான் தாமதம் லாவண்யா அவளை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“உனக்கு ஒன்னும் ஆகலல” அமுதா ஒரு பெண்ணாக பதறினாள்.

“அவன…” கோபத்தின் உச்சிக்கே சென்ற பழனி விக்னேஷின் பேரில் போலீசில் புகார் அளிக்க, தலையில் காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கட்டிருந்த விக்னேஷ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டான்.

“அப்போ அவன் இப்போ ஜெயிலதான் இருக்கானா?” விக்னேஷ் என்ற பெயரை சொல்லக் கூட விரும்பாமல் கேட்டான் செல்வா.

“அவன் எப்பயோ வெளிய வந்துட்டான். வந்தவன் எங்க போனான்னே தெரியல”

    

“ஓஹ்… அதான் இவ யார் வராங்க, போறாங்க என்று சீசீடிவி கணக்கா சின்ன சத்தம் கேட்டாலும் பதறியடிச்சிகிட்டு வெளிய வந்து பார்த்து பாம்பா சீருறாளா?” வார்த்தைகளில் நக்கல் இருந்தாலும் செல்வாவின் குரலில் நக்கல் இல்லை.

மனதளவில் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தால் அவள் நடவடிக்கை இவ்வாறு மாறியிருக்கும்? விக்னேஷ் தான் பிரச்சினை செய்ய வந்து விட்டானோ என்றுதான் கோபத்தோடு வந்து பார்க்கின்றாள். ஆண்களையே வெறுப்பதினால்தான் யாரை பார்த்தாலும் எரிந்து விழுகிறாள். லாவண்யா எதோ ஒரு காரணத்துக்காகத்தான் அப்படி நடந்து கொண்டாள் என்று அறிந்திருந்த செல்வாவுக்கு இப்பொழுது அவளது நிலை நன்றாகவே புரிந்தது.

“ஆமா… சரோஜா அம்மா, கதிர் அண்ணா னு சொல்லிக்கிட்டு இருந்தவன், திடிரென்று சரோஜா அத்த எங்குற, கதிர் அண்ணாவ மச்சான் எங்குற? என்ன விஷயம்?” சர்வேஷுக்கு புரிந்தாலும் செல்வாவின் வாயை கிளறினான்.

 “லாவண்யா புள்ளகி சரோஜா அம்மான்னா, கதிர் அண்ணன். அவ அம்மா எனக்கு எப்படி அம்மாவாக முடியும்? அவ அண்ணன் எனக்கு எப்படி அண்ணனாக முடியும்? உறவு முறைல சிக்கல் வராது?” காதைக்குடைந்தவாறே சர்வேஷின் வசைமழையை கேட்க ஆயத்தமானான் செல்வா.

ஆனால் சர்வேஷ் சத்தமாக சிரித்து விட்டு “நீ பொழச்சிக்குவ. அப்போ லாவண்யாவ கல்யாணம் பண்ணிக்கிறதா முடிவு பண்ணிட்டியா?”  

“miracle will happen anytime.  நம்ம தலைல என்ன இருக்கோ அதுதானே நடக்கும். காரணமில்லாம நானும் உங்க கூட இந்த ஊருக்கு வந்திருக்க மாட்டேனே. என்னதான் நடக்குது என்று பார்க்கலாம்” விதி தன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்னதான் நடக்கிறது என்று பார்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான் செல்வா.

“நீ சரியான கல்லூரிமங்கண்டா. கழண்டுக்கவே பாக்குற” செல்வாவை அடிக்க கையோங்கினான் சர்வேஷ்.

“தம்பிசார் நாளன்னைக்கு நாம ட்ரிப்பு போறோம். போயிட்டு வரும் போது, உங்காளு அந்த சுரங்கணி புள்ள ஊருக்கு போய் இருப்பாங்க. என்ன அடிக்கிறத விட்டுட்டு முதல்ல உங்க பஞ்சாயத்துக்கு செம்பு தூக்குங்க” என்று சிரித்தான்.

“ம்ம்… ஏதாச்சும் பண்ணலாம். முதல்ல சாப்பிட்டு தூங்கலாம். எங்க என் அண்ணன் வந்துட்டான்னா?”

“ஒரே ரொமான்ஸ் சீனா ஓடிக்கிட்டு இருக்கு. என் கண்ணு கூசும் என்று நான் அந்த பக்கமே போறதில்ல” என்றான் செல்வா.

கதிர்வேலும் பத்மினியும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதற்காக கதிர்வேல் பத்மினியை நிரந்தரமாக ஏமாற்றிக் கொண்டு குடும்பம் நடாத்த முடியுமா? கணவன் மனைவி என்ற உறவுக்குள் உண்மையில்லை என்றால் கடைசி வரைக்கும் அந்த உறவு ஒட்டாது. நம்பிக்கையும் இருக்காது.

கதிர் என்ன செய்கிறான் என்று எப்படி அறிந்துகொள்வது? அதைவேறு பார்க்க வேண்டுமே என்று சிந்திக்கலானான் சர்வேஷ்.

அடுத்த நாள் காலையிலையே சர்வேஷுக்கு சிறிசேன முதலாளியிடமிருந்து அழைப்பு வந்தது. ஊருக்கு போக இருக்கு சுரங்கணியை சமன் தேவாலயத்துக்கு அழைத்து செல்ல வேண்டுமாம்.

“இதோ வந்துடுறேன் முதலாளி” சவாரிக்கான அழைப்புதான். இவனை நம்பி பேத்தியை அனுப்ப அவர் நினைத்தால் சுரங்கணியை பார்த்து பேச செல்லும் ஆவலில் இவன் கிளம்பினான்.

இலங்கையின் காவல் கடவுள்களில் ஒருவராகக் கருதப்படும் சமன் தேவியோ வாசமிருக்கும் கோவில் தான் மகா சமன் தேவாலயம் அல்லது பெரிய சமன் கோயில் (சுமண சமன் தேவாலயம் என்றும் அழைக்கப்படுகிறது) இதனாலயே இரத்தினபுரியை சுமண சமன் தெவி அடவிய என்றும் அழைக்கின்றனர்.

இந்த கோவில் திருவிழா மிக சிறப்பாக ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். பதிமூன்று நாட்களாக நடைபெறும் இந்த பெரஹராவில் {திருவிழா} ஆற்றில் நீர் வெட்டும் விழா மிக சிறப்பு வாய்ந்தது.

ஊருக்கு செல்ல முன் அவளிடம் எப்படியாவது பேசி விட வேண்டும். தான் ட்ரிப்புக்கு போயிட்டு வருவத்துக்குள் இவள் கிளம்பி சென்று விட்டால் பேச முடியாதே. கடையில் வைத்து ஒழுங்காகவும் பேச முடியாது. ட்ரிப்புக்கு போக முன் எப்படி தனியாக சந்தித்து பேசுவது என்றிருந்தவனுக்கு தானாக அமைந்தது கோவில் சவாரி.

சுரங்கணியின் வீட்டு வாசலில் சென்று நின்ற சர்வேஷுக்கு ஆனந்த அதிர்ச்சி. அவள் மட்டும் தான் கோவிலுக்கு செல்கிறாளாம்.

உள்ளுக்குள் குஷியாக இவன் காத்திருக்க பூஜைக்கான தட்டோடு வெளியே வந்த சுரங்கணியின் அன்னை அதை ஆட்டோவில் வைக்கப் போக, சர்வேஷ் சட்டென்று இறங்கி தட்டை வாங்கி ஆட்டோவில் வைத்தான்.

“நன்றி தம்பி. நீங்க செல்வா தம்பியோட சொந்தம் தானே. என் பொண்ணு சொன்னா”

“ஓஹ்… நம்மள பத்தி வீட்டுல பேச்சு வாக்குல பேசிக்கிருக்களாலா? என்ன சொன்னாலோ?” சர்வேஷ் கண்டதையும் யோசிக்க,

“அம்மே…” அவனோடு அன்னையை பேச விடாது அங்கே வந்த சுரங்கணி போயிட்டு வரேன் என்று விடைபெற்று ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.

“பரிஸ்சமென் கிஹில்லா என்ன துவே” என்று அவள் அன்னை சுமனாவதி வழியனுப்பி வைக்க,

“நீங்க பயப்படாதீங்க நான் பத்திரமா கூட்டிட்டு போறேன்” என்ற சர்வேஷ் சிரித்தவாறே ஆட்டோவை கிளப்ப அவனை பின்னால் அமர்ந்தவாறு முறைத்தாள் சுரங்கணி.

“எப்போ ஊருக்கு கிளம்புற? இந்த ஊருலதான் ட்ரைன் இல்லையே. பஸ்லதான் போறியா? இல்ல வண்டி ஏற்பாடு செஞ்சி போவியா? நான் வேணா பஸ் ஸ்டாண்டுக்கு ஆட்டோல கொண்டு போய் விடவா? இல்ல என் ஆட்டோலேயே ஊருல கொண்டு போய் விடவா?” வாரத்துக்கே அஞ்சி லீடர் பெட்ரோல் டோக்கனுக்கு கொடுக்குறதையும் மறந்து அவளோடு பயணிக்க சந்தர்ப்பம் கிடைக்குமா என்று பேசியவனுக்கு தான் அவள் ஊருக்கு செல்லும் நாளில் சுற்றுலா சென்றிருப்பேன் என்று கூட ஞாபகத்தில் வரவில்லை.

“என்ன நான் பாட்டுக்கு பேசிட்டு வரேன், நீ எந்த பதிலும் சொல்லக் காணோம்” என்றவன் அப்பொழுதுதான் அவளை கண்ணாடி வழியாக பார்த்தான்.

அவளோ காதில் ஹெட்டிபொனை மாட்டிக் கொண்டு போனை நொண்டிக் கொண்டிருந்தாள்.

“அடிப்பாவி நான் உன் கூட பேசணும் என்று ஆசையா வந்தா நீ என்ன இக்னோர் பண்ணுறதுலையே குறியா இருக்கியே”

ஆட்டோவை ஒரு ஓரமாக நிறுத்திய சர்வேஷை கேள்வியாக ஏறிட்டாள் சுரங்கணி.

“எதுக்கு ஆட்டோவை நிறுத்தினாய் என்று கூட கேட்க மாட்டியா?” சர்வேஷ் சுரங்கணியிடம் கோபமெல்லாம் படவில்லை. சாதாரணமாகத்தான் கேட்டான்.

அதற்கு பதில் சொல்லாமல் “ஆட்டோல ஏதாவது பிரச்சினையா? சவாரியை ஏத்துறதுக்கு முன்ன செக் பண்ண மாட்டியா? சவாரிய ஏத்துனதுக்கு பிறகுதான் பிரச்சினையை என்று ஆட்டோவை நிறுத்துவியா?” என்று அவனை முறைத்தாள்.

“அப்போ நாம ஒன்னு சேர எதோ ஒரு பிரச்சினை இரு அது என்னனு தெரிஞ்சி கிட்டு அத சால்வ் பண்ண சொல்லி இண்டாரெக்ட்டா சொல்லுற. கல்யாணம் பண்ண பிறகு எந்த பிரச்சினையும் வரக் கூடாது என்று சொல்லுற. அப்படித்தானே” சிரித்தான் சர்வேஷ்.

“நான் என்ன சொன்னா நீ என்ன உளறிக் கிட்டு இருக்க?” சர்வேஷை ஏகத்துக்கும் முறைத்த சுரங்கணி  ஆட்டோவிலிருந்து இறங்கி நின்றாள்.

அவன் பேசியதை காதில் கூட வாங்காமல் இவள் பேச்சை மாற்றியது அவனுக்கு நன்றாகவே புரிந்தது. நீ தடம் மாற நினைத்தால் விடுவேனா? என்று அவள் என்ன சொன்னாலோ அதற்கொரு அர்த்தம் கண்டு பிடித்து பேசினான் சர்வேஷ்.

அப்பொழுதுதான் அவன் அவளை கவனித்தான் கோவிலுக்கு செல்ல ஒரு வெள்ளை கவுன் அணிந்திருந்தாள். வளமை போல் கூந்தலை பின்னல் தான் விட்டிருந்தாள். தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அவள் கவனம் செலுத்துவதில்லை. கையில் ஒரு கடிகாரம், காதணிகளை தவிர எதுவும் அவள் அணிந்திருக்கவுமில்லை. அந்த தோற்றமே அவளை தேவதையாகத்தான் காட்டியது.

  

அவளை பார்த்தவாறே “நான் உன் கிட்ட ஓபனா உன்ன விரும்புறேன்னு சொன்னேன். நீ எனக்கு ஓகே சொல்லவுமில்ல. நோ சொல்லவுமில்ல. ரெண்டுல ஏதாவது ஒரு பதில சொல்லணும் இல்லையா?” என்று சர்வேஷ் பேசும் போதே சுரங்கணி எதோ சொல்ல முனைந்தாள்.

“இரு இரு என்ன அவசரம்? நான் பேசி முடிச்சிடுறேன்” 

நோ சொல்லி விட்டால் இவன் தொல்லை இருக்காது என்று அவள் அதை தான் சொல்ல முனைந்தாள் அது புரிந்ததால் தான் சர்வேஷ் அவளை பேச விடாது தான் கூற வந்ததை கூறி முடிக்கும் வரையில் அமைதியாக இருக்கும்படி கூறினான்.

“நீ ஓகே சொன்னா எந்த பிரச்சினையும் இல்ல. உன் வீட்டுல பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறது என் பொறுப்பு. அந்த நம்பிக்கை கூட இல்லனா எப்படி?

சும்மா லவ் பண்ணோம், வீட்டாளுங்க எதிர்த்ததால் கல்யாணம் பண்ணிக்கிட்டோம், நாளைக்கு பிரச்சினை என்று வரும் போதோ அத சமாளிக்க முடியாம பிரிய வேண்டி வந்தா பிரிஞ்சி போற லவ்வர்ச பார்த்திருக்கேன்.

நான் அப்படி இருக்க விரும்பல. லவ் பண்ணுறது என் தனிப்பட்ட விருப்பம். நமக்குள்ள மதப்பிரச்சினை இருக்கு. அதனால பொறுமையா பேசி அவங்களுக்கு புரிய வச்சி சம்மதம் வாங்கணும். உன் வீட்டாளுங்க என்ன ஏத்துக்கணும், என் வீட்டாளுங்க உன்ன ஏத்துக்கணும். எல்லாரோட சம்மத்தோடதான் நம்ம கல்யாணம் நடக்கணும். என்ன பிரச்சினை வந்தாலும் நாம ஒண்ணா நின்னு சமாளிக்கணும்.

நீ நோ தான் சொல்லுறீனா அதுக்கு தக்க காரணம் சொல்லு. அந்த காரணம் வலீடான காரணமா இருக்கணும்”

சுற்றி வளைத்துத்தான் சர்வேஷ் பேசி இருந்தான். நன்றாக யோசித்துப் பார்த்ததில் சுரங்கணி தன் குடும்பத்தாரை எதிர்த்து திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க மாட்டாள். அதற்கு மதம் தான் பிரச்சினையாக வந்து நிற்கும் என்று எண்ணினான். சுரங்கணி தன்னை முழு மனதாக ஏற்றுக் கொண்டாலும், அவள் வீட்டார் மறுக்க பல காரணங்களை தேடுவார்கள். ஒவ்வொருவராக அவளால் சமாளிக்க முடியுமா? ஆதாலால் பொறுப்பை தான் எடுத்துக் கொள்வதாக பேசி புரியவைக்க முயன்றான்.

அவன் பேசியதை கேட்டு ஒரு நொடி அதிர்ந்து நின்றாள். அவள் எதை சொல்லி வேண்டாம் என்று சொல்லலாம் என்று நினைத்தாளோ அதையே சர்வேஷ் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினால் இவளும் தான் என்ன சொல்லி மறுப்பதாம்?

“எனக்கு உன் மேல அப்படி எந்த எண்ணமும் வரல” என்று சொன்னவள் “இன்னக்கி நாம கோவிலுக்கு போறோமா? இல்லையா?” என்று அவனை கேட்டாள்.

அவள் கண்கள் காட்டிய பாவனையிலையே தான் நினைத்ததைதான் அவள் பேச முயன்றாள் என்று சர்வேஷின் இதழோரம் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

“ஓஹ்… என் மேல லவ் வரலன்னு சொல்லுற. வரவே வராது என்று சொல்லலையே” என்றவன் அவள் கையிலிருந்த அலைப்பேசியை பிடுங்கி அதில் தன் அலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு விடுத்து விட்டு அவளிடம் கொடுக்க, அவளோ “என்ன பண்ணுற?” என்று கத்தியிருந்தாள்.

“பயப்படாத. நான் உனக்கு கால் பண்ணவும் மாட்டேன், மெஸேஜ் பண்ணவும் மாட்டேன் உனக்கு என் மேல எப்போ லவ் வருதோ நீயே பண்ணு. இப்போ வண்டில ஏருரியா கோவிலுக்கு போக வேணாம்” என்றவன் ஆட்டோவில் ஏறி அமர, அவனை முறைத்தவாறே சுரங்கணி பின்னாடி அமர்ந்தாள்.